இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 05 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 01-05-2024

Total Views: 12385

அத்தியாயம் - 05

அந்த அறைக்குள் தான் மட்டும் அல்ல வேறு யாரோ இருக்கிறார்கள்... அஞ்சனா உணர்ந்துக் கொண்ட மறுகணம் பட்டென்று எழுந்துக் கொண்டாள்.

'அவளென்னை உணர்கிறாள்' உறுத்துப் பார்த்தவனின் பார்வையில் இப்போது ரௌத்திரம் மறைந்து கனிவோடு காதலும் பிறந்தது. அவளை ரசனையுடன் தீண்டத் தொடங்கினான். 

 'அஞ்சனா! இத்தேடலால் யான் உவகை கொள்கிறேன்தான் ஆனால் கர்வங்கொள்ள இயலாத சூழ்நிலையில் சிக்கியுள்ளேன். அச்சத்தால் உன் நயனங்கள் அகல விரிகையில் எங்கிருந்து நான் கர்வங் கொள்வது. அவ்விழிகளில் யான் என்னை கண்டுகொண்ட மகிழ்ச்சியை உணர வேண்டுமே.. அதில் மையலும் வழிய வேண்டுமே. அதுவல்லவோ நான் வேண்டுவது.. உண்மையில், அத்தினம் வருகையில் இவ்வுலகிலே பேரின்ப நிலையை எட்டியவன் இந்த இயமன் என நான் மார்தட்டி உரைப்பேன். நிச்சயம் அந்நாள் வரும். என்ன குறுக்கே அந்த மானுடனின் காதல் இருக்கிறது. அந்த காதல் சற்றே என்னை விலகி நிற்கச் சொல்கிறது. அதற்காக விட்டுக்கொடுத்துவிடுவேன் எனும் அர்த்தம் கிடையாது. இந்த இயமனுக்கென இதுவரை தனிவிருப்பம் ஆசை இதெல்லாம் இருந்ததே இல்லை.. ஈசன், பாசக்கயிறு, எமகிங்கிரர்கள், சித்திரகுப்தன், பிரம்மசுவடி இவ்வளவுதான் நான். முதன்முறையாக ஈசன் வகுத்த எல்லைகளை மீறியிருக்கிறேன் என்றால் இதெல்லாம் உனக்காக அஞ்சனா. உன்னை பார்த்த மறுகணம் என் உலகமே இயக்கத்தினை நிறுத்தி என்னையும் இயங்கவிடாது செய்துவிட்டது. கவர்ந்து செல்ல வந்த உயிரிடமே உயிரைப் பறிகொடுத்துவிட்டு நிற்கும் விந்தையெல்லாம் உன்னை பார்த்த பின் தான் அறிகிறேன். என்னிடம் நீ கொள்ளும் அச்சம் அவசியமற்றது. இதை யுணர மறுக்காதே.. உணர்வில் கலந்தவளே..!' தனக்குள் நீளமாய் சொல்லிக் கொண்டவனின் இமைகள் இரண்டும் இமைக்காது அவளை மட்டுமே நோக்கின.

அவள் பார்வையோ எல்லா இடத்திலும் சுழன்றது. என்னதான் அவள் தேடினாலும் அவளால் இயமனை கண்டுக் கொள்ள முடியுமா? அதற்கவன் மனம் வைக்க வேண்டுமே.

அதற்குள் உள்ளே நுழைந்த திரு, "அஞ்சு! பக்கத்துவீட்டு ராதிகா இருக்காங்களே அவங்களை தான் எருமை மாடு துரத்தியிருக்கு" என்றான்.

"எருமை மாடா!"

"ஆமாம்மா.. ஒன்னும் ஆகலை அவங்களுக்கு கீழ விழுந்ததுல கால் முட்டி பேர்ந்துருக்கும் போல. அவ்வளவுதான். எல்லாரும் சேர்ந்து வீட்டுக்குள்ள பத்திரமா அனுப்பி வச்சுட்டுத்தான் வந்தோம்"

"நம்ம ஏரியாவுல எங்கேயும் எருமை மாடே இல்லையே. இன்னைக்கு மட்டும் எப்படி?" அஞ்சனா கேட்கவும் அவனும் "அதானே.. ஆனா அஞ்சு நாங்க பார்த்தோம். சரி விடு.. எங்கயாவது வழிதவறி உள்ளே நுழைஞ்சுருக்கும். நீ போய் தூங்கு" என்றான்.

"எனக்கு கனவுல எருமை மாட்டுல எமன் இருக்குற மாதிரி தெரிஞ்சது. இப்போ பக்கத்து வீட்டம்மாவை எருமை துரத்தியிருக்கு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என் உயிரை எடுக்காமல் எமன் விட மாட்டான் போல. அவன் ஏறி வந்த அந்த எருமைதான் அவங்க கண்ணுக்குத் தெரிஞ்சுருக்கணும். அதைப் பார்த்துத்தான் அவங்க பயந்து போயிருக்கணும்" 

பயமுறுத்த வேண்டும் என்பதல்ல என் நோக்கம். உன் மனம் நோக பேசி அழ வைத்த பாவத்திற்கான பரிகாரம் அது. அவளின் பேச்சிற்கு இயமன் பதில் பார்வை பார்த்து வைத்தான்.

"பையித்தியமா நீ.. என்ன பேசுற? நீ கண்டது கனவு. அவ்வளவுதான். அதுக்கு இந்தளவுக்கு நீ எதிர்வினை காட்டணும்னு அவசியமே இல்லை. மனசுல தைரியம் இல்லைன்னா சின்ன விஷயத்துக்கு கூட பயந்து சாக வேண்டியதுதான்"

"அது கனவு இல்லை திரு. நான் நிஜமாவே சாகப்போறேன்"

"ப்ச் லூசுத்தனமா உளராத அஞ்சனா"

"இல்லை மச்சான். எனக்கு கனவுன்னு இதுவரைக்கும் எதுவும் வந்ததே இல்லை. அதுமட்டும் இல்லை கனவுல  ஐயா கூட என்கிட்ட வந்துடுன்னு சொன்னாரு. ஐயாவே கூப்பிடுறாருன்னா நான்  சாகப் போறேன் தானே. ஐயோ அம்மா அம்மாவுக்கு இது தெரிஞ்சால் தாங்க மாட்டாங்களே"

"அப்போ நீ விட்டுட்டு போயிட்டால் என்னோட நிலைமை?" என்ன முயன்றும் அவன் கண்களில் மெல்லியதாய் நீர்படலம் சூழ்ந்துக் கொண்டதை தடுக்க முடியவில்லை.

"உங்களுக்கு ஒரு குறையும் வராது மச்சான். சொல்லப் போனால் நான் இல்லாமல் போனாலே அது உங்களுக்கான நல்லதுதான்"

"நீயில்லைங்கிறதே குறைதானேடி கிறுக்கி. நீயில்லாமல் நான் எப்படி நல்லா இருப்பேன். ஓங்கி ஓர் அறைவிட்டால் நீ இப்படிப் பேச மாட்டல" அவனின் அதீத உரிமையில் அவள் திருதிருத்தாள். 

"என்ன அப்படி பார்க்குற? உனக்கும் எனக்குமான உறவு என்னென்னு மறந்து போச்சா? உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கணும் அப்படிங்கிறது பெரியவங்க எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணது. எல்லாத்தையும் விட சின்ன வயசுல இருந்து நீ மட்டும்தான் என் மனசுல ஆழமா பதிந்து போயிருக்க. உன்னை மீறி அங்க வேற யாரையும் என்னால பதிய வைக்க முடியாது அஞ்சு. நீயில்லைன்னா நானும் இல்லை. இதுதான் உண்மை. தயவுசெய்து செத்துடுவேன் அப்படின்னு உளறி வைக்காத. நான் பாவம். இங்க பாரு, மாமாவுக்கு சாமி கும்பிட்டு முடிச்சதும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம். என்ன சொல்லுற?"

"எனக்கு பயமா இருக்கு. என்னை யாரோ பார்த்துட்டே இருக்குற மாதிரி இருக்கு. இப்போக் கூட நம்ம இரண்டு பேரைத் தவிர இந்த வீட்டுல மூனாவதா ஒரு ஆள் இருக்குறதா எனக்குப் படுது. அந்த ஆள் என்னை உயிரோட விட மாட்டான். அது மட்டும் நிச்சயம்"

"எவன் வந்தாலும் என்னை மீறி எதுவும் நடக்காது" திரு சொல்ல இயமன் சிரித்துக் கொண்டே அவன் பேசுவதில் கவனமானான்.

"அஞ்சும்மா! மாமாவுக்கு இப்படி நடந்த கொஞ்ச நாள்லயே கல்யாணம் நடக்கணுமான்னு யோசனையாத்தான் இருக்கு. ஆனால் இப்போதைக்கு வேற வழி இல்லை. உன்னை இப்படியே விடுறதுக்கு எனக்கு மனசே இல்லைடா. மாமாவை நினைச்சே உன் உடம்பைக் கெடுத்துக்கிட்ட. இது தொடர்ந்தால் நீயும் என்னை விட்டுட்டு போயிடுவயோன்னு எனக்கு பயமா இருக்கு. என்னால அதை தாங்கிக்க முடியாது. அதனாலதான் ஊர் என்ன சொன்னாலும் பரவாயில்லைன்னு  நான் உன்கூடவே இருக்கேன். நீ இப்படி புலம்பிட்டே இருந்தால் இப்பவே தாலி கட்டிட்டு நான் உன்னை நம்ம வீட்டுக்குக் கூட்டிப் போயிடுவேன்"

"கல்யாணம்... நான் இருக்குற நிலைமைக்கு அது ஒன்னுதான் குறைச்சல். நான் உங்ககிட்ட இயல்பா இருக்குறதுக்கு காரணம் நீங்க என் மனசை புரிஞ்சுக்குவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் நீங்க என் பயத்தை மதிக்காமல், என்னோட அழுகையை மதிக்காமல், இவ்வளவு ஏன் ஐயாவைக் கூட நினைக்காமல் இப்படி ஒரு முடிவு எடுப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. ஐயா இருந்தால் நம்ம இரண்டு பேரோட கல்யாணத்தை நடத்தியிருப்பார்தான்‌. நான் இல்லைன்னு சொல்லல. அதுக்கு முன்னாடி அவரோட மகளான என்ட்ட ஒரு வார்த்தைக் கேட்டுருப்பார் திருவைக் கட்டிக்க உனக்கு விருப்பமான்னு? ஆனால், நீங்க? அப்படி ஒப்புக்காக கூட கேக்கவே இல்லை. தகவலா மட்டும் என் கல்யாணத்தைப் பத்திச் சொல்லுறீங்க. என் விருப்பத்தை மதிக்காத உங்க காதலால எப்படி என் வலியைத் தாங்கிக்க முடியும்"

"என் மாமன் மகளுக்கு இவ்வளவு பேசத் தெரியுமா? இன்னைக்குத்தான் தெரியுது. இப்போ என்ன பண்ணனும் சொல். நான் அதுபடியே கேட்டு நடந்துக்கிறேன். அவ்வளவுதானே"

"இந்த துக்கத்தை ஜீரணிக்க எனக்கு அவகாசம் வேண்டும். என் மனசுக்குள்ள இருக்குற மரணபயம் போகணும்"

"அவ்வளவுதான. நான் காத்திருக்கிறேன். ஆனால் என்னையும் அப்பப்போ கொஞ்சம் நீ நினைச்சுப் பார்க்கலாம். செய்வயா" இப்போது இன்னும் அதீத வெம்மையில் அஞ்சனாவின் முதுகுப்புறம் குறுகுறுத்தது.

சடாரென பின்னால் திரும்பியவள், "அங்க யாரோ இருக்காங்க" எனச் சொன்னாள். 

-----------------------------

எமலோகத்தில்,

 "பணிகிறேன் நாரதரே!" நாரதரை கண்டதும் சித்திரகுப்தன் பிரம்மசுவடியை வைத்துவிட்டு வணங்கினான்.

 "சித்திர குப்தா! நலமாக இருக்கிறாயா?"

 "ஈசன் இருக்கையில் என் நலனுக்கு ஏது குறை?"

 "நிதர்சனமான உண்மை. ஆனால் அதே ஈசன் கடமையிலிருந்து தவறுபவர்களை.." உரைத்துவிட்டு கேள்வியாய் நிறுத்த..

 "நாரதரே. கடமையில் இருந்து தவறுபவர்களை பார்த்து மட்டும் கேட்க வேண்டிய கேள்வி இது. என்னை நோக்கி கேட்கப்பட்டதன் அவசியம் என்னவோ? நான் எந்த கடமையில் இருந்து தவறியிருக்கிறேன். தங்களின் பேச்சொன்றும் சரியில்லையே" வெகுண்டு பேசினான் சித்திரகுப்தன்.

 "சித்திரகுப்தா! சினங் கொள்ளாதே. நான் பொதுவாக உரைத்தேன்"

 "இல்லை நாரதரே. தாங்கள் எல்லாம் அறிந்தவர். தங்களின் அருமை பெருமைகளை எல்லாம் யானும் அறிவேன். காரணமில்லாது எதையும் உரைக்க மாட்டீர். இங்கு வந்ததன் காரணம் என்ன? கடமை தவறுவதை சுட்டிக்காட்டுவதன் மர்மம் தான் என்ன?"

 "எமலோகத்தில் ஏதேனும் தவறு நேர்ந்தால் ஈசன் எவருக்குத் தண்டனை வழங்குவார்"

 "எமலோகத்தில் மட்டுமல்ல.. எல்லா லோகத்திலும் முதலில் தவறிழைத்தவர்களுக்கு. பிறகு தவறுக்கு காரணமான பொறுப்பற்றவர்களுக்கு. தவறு நேர்ந்தும் அதை மறைக்க நினைப்பவர்களுக்கு. அதாவது தவறுக்கு உடன் நிற்பவர்களை"

 "ஆக, தவறு என்றறிந்தாலே அவரின் நெற்றிக்கண் திறக்கப்படும். அதை சித்திர குப்தனும் அறிந்திருக்கிறான் அல்லவா?"

 "நிச்சயமாக. அகில லோகமும் அதை அறிகையில் இவ்வடியவனும் அறிவான்"

 "அப்படியிருந்தும் உன் கடமையில் தவறிவிட்டாயே சித்திரகுப்தா"

 "நாரதரே.. இதைக் கூறியவர் தாங்கள் என்பதால் பொறுமையின் பிடியில் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்கிறேன்" சொன்னவனின் வார்த்தைகளில் உஷ்ணமேறியிருந்தது.

 "சாந்தி சித்திர குப்தா.. சாந்தி.. சொல்வதை நிதானமாக கேட்டுப் பின் என்னிடம் அறைகூவல் விடு"

 "கூறும் நாரதரே"

 "இயமன் எங்கே?"

 "பிரபு கடைமையாற்ற பாசக்கயிறுடன் புவியை நோக்கி புறப்பட்டுவிட்டார்"

 "எந்த கடமை என்று கேட்டாயா சித்திரகுப்தா"

 "பிரபுவை எதிர்த்து நான் கேள்வி கேட்பதா? அப்படியொரு நிலையில் எம் பிரபு இல்லை. அவருக்கு காலன் என்ற பெயருண்டு. காரணம் காலம் தவறாமல் கடமையை செய்து முடிப்பவர் எம் பிரபு என்பதால்"

 "அந்த கடமையை காதலென்னும் மாய சர்ப்பம் விழுங்கிவிட்டதால் இப்போது உம் பிரபுவுக்கு கிரகணம் பிடித்துக் கொண்டது என்பதை நீ அறிவாயா?"

 "காதலா? எம் பிரபுவா? அவருக்கு அதற்கேது காலநேரம். கடமையை ஆற்றவே அவருக்கு நேரம் போதவில்லை "

 "இரண்டு தினங்களுக்கு முன் நீ சொல்லுவது சரி. இன்றிருப்பவன் வேறொருவன். கடமையை மறந்தவன். ஈசனின் கோபத்தினை மறந்தவன். காதலின் மோகத்தில் மூழ்கியிருப்பவன்"

 "நாரதரே நிறுத்தும் உம் பிதற்றலை. எங்கு வந்து எவரை பற்றி குற்றம் கூறிக் கொண்டிருக்கிறீர். எம் பிரபுவின் மீது அப்படியென்ன வன்மம். இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசி அவர் பெயருக்குக் களங்கம் சொல்வதை என்னால் அனுமதிக்க இயலாது. தாங்கள் வந்தவழியைப் பார்த்துச் செல்வதே உசிதம்"

"இந்த நாரதர் கலகலக்காரன் தான். என் கலகம் நன்மையில் மட்டுமே முடியும். அப்படி முடிய வேண்டும் என்ற அவாவால் தான் உன்னிடம் இயமனின் நிலையை எடுத்துக் கூறி எச்சரிக்கை செய்ய வந்தேன். இயமனின் அகத்தில் பெண்ணொருத்தி குடியேறியிருக்கிறாள் சித்திரகுப்தா. இது சர்வ நிச்சயமான உண்மை. என்னை நம்புவதும் நம்பாததும் உன் விருப்பம். நம்பாவிட்டால் மெய் பொய்யென்றாகிவிடாது அல்லவா... ஈசன் தவத்தில் இருப்பதால் இங்கு பெரும் பிரளயம் இன்னும் நேரவில்லை. அவர் கண்விழிக்கும் வரை நமக்கான அவகாசம் இருக்கிறது. இயமனிடம் எடுத்துச் சொல்லி அவன் மனதினை மாற்றிவிட்டால் இயமனோடு சேர்ந்து எமலோகமும் தப்பும். இல்லையென்றால் அனைத்தும் சின்னாபின்னமாகிவிடும் சித்திரகுப்தா" அழுத்தமான நாரதரின் குரலில் சித்திரகுப்தன் ஆடிப்போய்விட்டான். நாரதர் சொல்வது உண்மையென்றால் நிச்சயம் பிரளயம் இங்க உண்டாகும். அதை தடுக்க வேண்டியது அவசியம் என்பதை அறிந்து "அந்த பெண் யார் நாரதரே?" இரு தினங்களுக்கு முன் இயமனின் முகத்தில் இருந்த மந்தகாச புன்னகையை கண்முன் இருத்தி சித்திரகுப்தன் கேள்வி கேட்க, நாரதரின் முகத்திலும் விஷமமான புன்னகை வந்து போனது.

காதலாசை யாரை விட்டது..!




Leave a comment


Comments


Related Post