இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலாகி! காற்றாகி! அத்தியாயம் - 4 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK029 Published on 01-05-2024

Total Views: 14390

மறுநாள் வழக்கம் போலவே அலுவலகம் சென்றவன், எவ்வாறு பாட்டி சொன்னக் குடும்பத்தைக் கண்டுபிடிப்பது என்று யோசிப்பதிலேயே நேரத்தை செலவிட்டான். இறுதியில் ஒரு துப்பறிவாளரை அனுகலாமா என்பது வரை யோசித்தான். ஆனால் முடிவை மட்டும் எடுக்காமல் யோசனையை அந்தரத்தில் விட்டான் நிரஞ்சன்.

அப்போது உள்ளே வந்த அவனது தம்பி நிஜந்தன், "ஹலோ மை டியர் அண்ணா என்ன பலமான யோசனை? எந்த கோட்டையைப் பிடிக்க இப்படி ஒரு சிந்தனை சிற்பியா உருவெடுத்து உட்கார்ந்திருக்க?" என்று கேட்டபடியே நிரஞ்சன் மேஜைக்கு எதிரே உள்ள இருக்கையில் தன்னை அமர்த்திக் கொண்டான்.

"ப்ச் பாட்டி அடிக்கடி சொல்ற கவியரசன் குடும்பத்தை பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்"

"ஓஹோ... நல்லவேளை நான் முன்னாடி பொறக்கல... இல்லாட்டி உன் இடத்தில நான் மாட்டிக்க இருந்திருப்பேன்."

"ஹே நல்ல ஐடியா டா... எனக்கு பதிலா நீயே அந்த கல்யாணத்தைப் பண்ணிக்கோ. பாட்டிக்கு தேவை கவியரசன் பொண்ணு நம்ம வீட்டு மருமகளா வரணும் ஆனா யாருக்கு மனைவியா வரணும்னு சொல்லலையே... அதனால் நீ பண்ணிக்கோ டா... பிளீஸ்... டீல் டன்" என்றான் முகத்தில் தாண்டவமாடும் புன்னகையுடன்.

"ஐ... அஸ்கு புஸ்கு... நமக்கும் கல்யாணத்துக்கும் சுத்தமா செட்டாகாது. அண்ணா, எனக்கு ஊர் சுத்த பிடிக்கும் அதுக்காக போற ஊரை எல்லாம் எனக்கு சொந்தம் கொண்டாட முடியாது. அதே மாதிரி தான் பொண்ணுங்களும் எனக்கு.!! எனக்கு பொண்ணுங்களோட ஊர் சுத்த பிடிக்கும் ஆனா அவங்களை எனக்கே எனக்குன்னு சொந்தமா கூடவே வெச்சிக்கப் பிடிக்காது. நானும் சுதந்திர பறவை என்கூட பழகும் பொண்ணுங்களும் சுதந்திர பறவையா சும்மா முரட்டு சிங்கிளா இருக்க விரும்பறவங்களா இருக்கணும். இது என்னோட ஒன் அண்ட் ஒன்லி கண்டிசன். காட் இட்?!" என்று நிஜந்தன் தன் வாழ்வியலை விளக்கவும், நிரஞ்சன் தலையில் அடித்துக் கொண்டான்.

"அதிருக்கட்டும். புராஜக்ட் பிரப்போசல் என்னாச்சு?" தன் உள்ளங்கையை நீட்டி கேட்டான் நிரஞ்சன்.

"ஆமால்ல... இந்த புரோப்போசல் எதுக்கு அண்ணா?"

"நிஜு அப்ப இவ்வளவு நாளும் நான் சொன்னதை காது கொடுத்து கேட்கவே இல்லையா? உன்கிட்ட நம்ம பாண்டிச்சேரி ரிசார்ட்டில் நடத்தும் ஈவெண்ட் பத்தி பிரபோசல் கேட்டேன். இந்த வேலையை உன்கிட்ட கொடுத்ததே மூன்று வாரத்துக்கு முன்னாடி. உன் போஸ்ட் எதுக்கு உனக்கு? பப்ளிக் ரிலேஷன் மேனேஜர் வேலை என்னன்னு தெரியுமா தெரியாதா?"

"அண்ணா.... ஓகே ஓகே மிஸ்டர் பாஸ்... நான் இப்ப ஒரு ஐடியா சொல்றேன். கேட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. ஒரு கேம் ஷோ அதுவும் ஃபயர் ஷோ அண்ட் கோஸ்ட் ஹவுஸ் செட் போட்டுடலாம். அந்த செட்டில் காதல் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி இலவசம்னு கண்டிசன் போடலாம். ஜோடிகளை பிரிச்சு ஆளுக்கொரு செட்டுக்குள்ள அனுப்பிவிட்டு அவங்களுக்கு புதிர் விளையாட்டுகள் கொடுத்து, அதை கண்டுபிடிச்சா தான், பிரிஞ்ச ஜோடி ஒன்னு சேர முடியும். ஆண்களை ஃபயர் ஹவுஸ் அனுப்பி அவங்களை சுத்தி நெருப்பு இருக்கிற மாதிரியும், பொண்ணுங்களை கோஸ்ட் ஹவுஸ் அனுப்பி, புதிர் விளையாட்டுகளை விளையாடி ஜெயிச்சா, பரிசுகளும் அவங்க ஜோடியும் தரதா அறிவிப்பு செஞ்சா எப்படி இருக்கும்?"

நிரஞ்சன் சற்று நேரம் எதுவுமே பேசாமல் தம்பியையே உற்று நோக்கினான்.

"எப்படி என் ஐடியா? சூப்பர்ல!!" என்று தன் சட்டை காலரை தூக்கி விட்டான்.

"உன் மூஞ்சி... தேவையில்லாம வாங்கிக் கட்டிக்காதே... சொல்லிட்டேன். ஒழுங்கா ஒரு நல்ல பிளான் போட்டு ரிப்போர்ட் எடுத்துட்டு வர... இல்லன்னா உன்னை டிஸ்மிஸ் பண்ணிடுவேன். அப்புறம் பொண்ணுங்களோட ஊர் சுத்த சல்லி பைசா கிடைக்காது." என்று எச்சரிக்கை விடுத்தான் நிரஞ்சன்.

அதே நேரம் சுந்தர் உள்ளே வந்து, "சார், நீங்க கமலி மேடத்திற்காக வீடு பார்க்கப் போகனும் சொல்லியிருந்தீங்க... அந்த வீட்டு ஓனர் இப்ப வர முடியுமான்னு கேட்டாரு! நான் என்ன சொல்லட்டும்?" என்று நிரஞ்சனிடம் வினவ, அவனும் தன் மணிக்கட்டில் கட்டியிருந்த டிஜிட்டல் வாட்சை பார்த்து, "இன்னும் பத்து நிமிடத்தில் புறப்படலாம்" என்றான்.

அதற்குள் நிஜந்தன், "என்ன அண்ணா கமலியை கரெக்ட் பண்ண பார்க்கிற போல... ஒருவேளை ஐடியா வேணும்னா சொல்லு... தம்பி நான் இருக்கேன்."

"நோ தேங்க்ஸ்."

"ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்க பார்க்கிற... கமலியும் கிடைப்பா அவளோட அப்பாவோட முதலீடும் கிடைக்கும். வாரேவா... நீ புத்திசாலி அண்ணா" என்று பாராட்டவும்,

நிரஞ்சன், "ஒழுங்கு மரியாதையா ஓடிடு." என்றான்.

அபிராமி IES தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கும் நேரம் என்பதால், அவளை தனியே விடாமல் அவளுக்கு அவ்வப்போது குடிக்கவும் சாப்பிடவும் ஏதேனும் ஒன்றை அவள் வாயில் திணித்துக் கொண்டிருந்தார் கோகிலா.

இதில் எரிச்சலுற்ற அபிராமி, "அம்மா.... பிளீஸ் கொஞ்ச நேரம் என்னை தனியா விடம்மா. நீ என் வயிறை கிரைண்டர் நினைச்சியா இல்ல மாவு மில்லுன்னு நினைச்சியா...?? இல்லனா சேர்த்து வைக்கும் குடோன் நினைச்சியா? எனக்கு இப்ப தூக்கம் வேற வருது... ஆ..." என்றாள் கொட்டாவியுடன்.

"இனிமே உன்கிட்ட வந்தா என்னை என்னன்னு கேளு. பாவம் பாப்பா நேரம் காலம் தெரியாம படிக்கிறியே கொஞ்சம் புஷ்டிக்கா கவனிப்போம் அப்படின்னு நினைச்சா, எகிறிட்டு வரியே"

"நான் வெளியே போய் படிச்சிக்கிறேன். இனி இராத்திரி தான் வீட்டுக்கு வருவேன்." என்றவள் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டாள்.

வழியில் லாவண்யாவின் அழைப்பு வர, எடுத்து காதில் ஒற்றினாள். "ஹாய் சீனியர்! ரொம்ப பிசியா?" என்றாள்.

"இல்லையே. என்ன விஷயம்? ஜனனி எப்படி இருக்கா?"

"அவளுக்கு என்ன! நல்லா ஜாலியா இருக்கா. இப்ப நான் எதுக்கு ஃபோன் பண்ணேன்னா நாங்க ரெண்டு பேரும் வெளியே சாப்பிட போறோம். ஜனனி டிரீட் வைக்கிறா. நீங்களும் வரணும்னு ஆசைபடறா. சோ வரீங்களா?" என்று வினவியதும் அபிராமி யோசித்தாள்.

"அச்சோ லாவி வயித்துல சுத்தமா இடமில்லை. இப்ப போய் சாப்பிட கூப்பிடறீங்களே! இது நியாயமா?"

"அப்ப நீங்க எப்ப ஃப்ரீன்னு சொல்லுங்க"

"எனக்கு இன்னும் நாலு நாளில் பரிட்சை வருது. அது முடிச்சிட்டு நம்ம மீட்டை வெச்சுக்கலாமா?" 

"ஓகே பை சீனியர். ஒரு நிமிஷம்... ஆல் தி பெஸ்ட் சீனியர்" என்றாள் லாவண்யா.

நிரஞ்சன் வீடு பார்க்கும் வேட்டையில் கமலியோடு இறங்கினான். ஒவ்வொரு வீடாக ஏற்கனவே பார்த்து கடைசியில் அன்று கமலிக்கு பிடித்த வீடாக கிடைக்க வேண்டும் என்று மனதுள் எண்ணிவிட்டு, பிடித்தால் அன்றே பேசி முடிக்கவே புறப்பட்டார்கள்.

அன்புநாதன்  தாத்தா அப ராமிக்கு அழைத்தார். "அபுகுட்டி நீ இப்ப உடனே என் கூட ஒரு இடத்துக்கு வரணும். நான் முகவரியை சொல்றேன். நீ நேரடியாக அங்க வந்திரு" என்றவர் முகவரியை சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

அபிராமி தாத்தா கூறிய முகவரிக்கு வண்டியை செலுத்தினாள். அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அங்கே உள்ளே சென்றவள் பார்கிங் லாட்டிற்கு சென்று வண்டியை நிறுத்தினாள். 

மீண்டும் தன் தாத்தா அன்புநாதனை தொடர்புக் கொண்டாள். வில்லா மற்றும் அடுக்குமாடி, மற்றும் மனையும் மொத்தமாக உள்ள பல்முனை வளாகம். "அபுகுட்டி முதல் பிளாக் பன்னிரண்டாவது மாடி வாடா. 

அவளும் பன்னிரண்டாவது மாடி சென்றாள். தாத்தா மின்தூக்கி முன்பு நின்றிருக்க, அவள் வந்ததும் இருவரும் ஒரு காலி வீட்டிற்கு சென்றார்கள்.

"உன் அம்மாவும் நானும் ஏற்கனவே இந்த வீட்டைப் பார்த்துட்டோம். எங்களுக்கு பிடிச்சிருக்கு. உனக்கும் பிடிச்சிருந்தா பேசி முடிச்சிருவோம்.

உன் அப்பாவோட உழைப்பிலும், உன் அம்மாவோட சேமிப்பிலும் உனக்கான நகைகளை சேர்த்து வெச்சா உன் அம்மா. இப்ப என் பங்குக்கு என் பேத்திக்கு ஏதாவது செய்ய ஆசைப்படறேன். அதான் இந்த வீடு."

"இதை வாங்க உங்களுக்கு ஏது தாத்தா பணம்?"

"ஊரில் இருக்கும் நிலத்தை வித்துட்டேன். கூடவே இரயில்வேல வேலை பார்த்தப்ப சில சேமிப்பு பத்திரம் வாங்கி வைத்திருந்தேன். அதை எல்லாம் பணமா மாத்திட்டேன். இப்ப உனக்கான வாழ்க்கை சேமிப்புக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டேன். அதான் இது. இந்த வீடு பிடிச்சிருந்தா பாரு. இல்லன்னா வேற பார்க்கலாம்"

"இப்ப எதுக்கு தாத்தா இதெல்லாம்? பணத்தை உங்களுக்காக சேர்த்து வெச்சுக்கோங்க. இந்த வீட்டை வெச்சிட்டு நான் என்ன பண்ண போறேன்.? சோ வாங்க கிளம்பலாம்" என்று கையைப் பிடித்து அவரை வெளிப்பக்கம் இழுத்தாள்.

"அபுகுட்டி... நான் சொல்றதைக் கேளு. இப்படியே எங்களோடவே இருக்க முடியாது. உன் வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பு தேவை. பாதுகாப்புன்னு நான் சொன்னது மனதளவில் பாதுகாப்பு, ஒரு சுய வருமானம் எல்லாம். தாத்தா தருவதை வேணாம்னு சொல்லக் கூடாது. நான் எனக்கும் உன்னோட அம்மாவுக்கும் தேவையான பணத்தை ஏற்கனவே ஒதுக்கி வெச்சிருக்கேன். உன் அம்மா டியூஷன் எடுத்து கிடைக்கும் பணம் நம் அன்றாட வாழ்க்கைக்கு போதுமானது. கூடவே உன் அப்பாவோட பென்ஷன் பணம் இருக்கு அப்புறமென்ன? தைரியமா எதை பத்தியும் யோசிக்காம வீடு பிடிச்சிருக்கு இல்லையான்னு மட்டும் சொல்லு" என்றார் வாஞ்சையுடன்.

ஆனாலும் அபிராமிக்கு தான் மனசில் ஏதோ அவஸ்தையாக உணர்ந்தாள். தாத்தாவின் பேச்சை மீற முடியாமல் என்ன சொல்லலாம் என்று யோசித்தாள். சற்று நேரம் வீட்டை சுற்றிப் பார்த்தவள், படுக்கையறை ஓட்டி இருந்த பலகணியில் போய் நின்றாள். அங்கிருந்து பார்க்கும் போது பரந்து விரிந்து கிடந்த சிறுவர்கள் விளையாடும் பூங்கா ஒருபுறமும், நடைபயிற்சி மேற்கொள்ள நடைப்பாதையும் அமைக்கப்பட்டிருந்தது.

மீண்டும் உள்ளே வந்தவள், ஒருமுறை முழு வீட்டையும் சுற்றிப் பார்த்துவிட்டு, "எனக்கு வீடு பிடிச்சிருக்கு தாத்தா..." என்றாள்.

வீட்டின் உரிமையாளரிடம் தாத்தா அன்புநாதன் பேசட்டும் என்று தனியே வந்து பலகணியில் நின்றாள்.

கண்களில் கண்ணாடி இருக்க, சூரிய வெளிச்சம் கண்களை கூசாமல் ஒளிர்ந்தது. அவளது மேனியில் படர்ந்த சூரிய கதிர்கள் அவளது மாநிற மேனியை பொன்வனப்பாக காட்டியது. இதழ்களில் மெல்லிய புன்னகையுடன் கைகளை மார்போடு அணைத்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.

அவளின் மோன நிலையைக் கலைப்பதற்காகவே வந்ததுப் போல, குருவி ஒன்று அங்கே வந்து ரீங்காரமிட்டது. அந்த ரீங்காரம் அவளது செவியில் முதல்முறையாக விழுந்தப் போது திடுக்கிட்டாள். ஆனால் குருவியின் உருவத்தைக் கண்டு "ஐ பாஸிட்டிவ் கெஸ்ட் வந்துட்டீங்க... நகர மையத்தில் உங்களை எல்லாம் பார்க்க முடியறதில்லை. சிட்டி அவுட்டர் வந்தா, உங்களை சந்திச்சு பழகலாமா?! ஓகே வாங்க பழகலாம். இப்ப உங்களுக்கு கொடுக்க என்கிட்ட எதுவும் இல்ல. சீக்கிரமே நாங்க இங்க குடி வந்ததும், டெய்லி உங்களுக்கு விருந்தே வைக்கிறேன். நீங்க உங்க கூட்டத்தையே இங்க கூட்டிட்டு வாங்க... ஆனா கொஞ்சமா கூட்டிட்டு வாங்க. என் பட்ஜெட்ல துண்டு விழுந்திரும்" என்றாள்.

"இங்க என்னமா பண்ணிட்டு இருக்க? போலாமா? லாயர் ஒருத்தர் கிட்ட இந்த வீட்டுக்கு லீகல் பார்க்க கொடுக்கணும். கூடவே வில்லங்க பத்திரம் தரையிறக்கம் செஞ்சு பார்க்கணும். வேலை இருக்கு. இன்னும் ரெண்டு வாரத்தில் பதிவு பண்ணிக்கலாம்னு சொல்லிட்டேன்." என்றார் தாத்தா.

"தாத்தா அம்மா வந்து இந்த வீட்டை பார்த்திட்டு என்ன சொன்னாங்க? அவங்க ஏன் கூட வரல?"

"நானும் கோகியும் ஏற்கனவே பார்த்திட்டு தான் உன்கிட்ட சொன்னோம். கோகி கடைக்குப் போயிருக்கா அதான் நானும் நீயும் மட்டும் வந்தோம். இதெல்லாம் சொல்லி உன்னை கூப்பிடும் முன்னாடி, உன் வயிற்றை குடோன் ஆக்கிட்டோம்னு சொல்லி தானே குடுகுடுன்னு வண்டி சாவியை எடுத்துட்டு கிளம்பி போன!? சரி இன்னிக்கு வேணாம்னு முடிவு பண்ணப்ப, இந்த வீட்டு ஓனர் கால் பண்ணி கூப்பிட்டார். சரின்னு தான் உனக்கு ஃபோன் பண்ணி வரவழைச்சேன்." என்று விளக்கவும், 

அவரின் அபுகுட்டி "தாத்தா இப்பவும் இந்த வீடு அவசியமா அப்படிங்கிற கேள்வி எனக்குள்ள இருக்கத்தான் செய்யுது?!" என்றாள் யோசனையாக.

"அவசியமா அவசியம் இல்லையா அப்படிங்கிற கேள்வியே அவசியமில்லாத ஒன்னு. எனக்கு இருக்குற ஒரே பேத்தி நீ. உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன். நான் எப்படி ஒரு பிள்ளையை பெற்று வளர்த்தேனோ அதே மாதிரி என் பிள்ளையும் ஒரு குழந்தை போதும்னு முடிவு பண்ணியிருந்தான். நாங்க சம்பாரிச்ச பணத்தை உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்யறது.? அதிருக்கட்டும் நீ எத்தனை நாள் லீவு எடுத்திருக்க?"

"ஒரு வாரம் தாத்தா. பரிட்சை முடிஞ்ச அடுத்த நாளே நான்  ஆஃபீஸ் போகனும்."

"சொல்ல மறந்துட்டேன் அபுகுட்டி கவின் தம்பி ஃபோன் பண்ணினான். உன் ஃபோன் ரீச் ஆகலன்னு எனக்கு ஃபோன் பண்ணான்."

"ஐயோ மறந்தே போயிட்டேன் தாத்தா. அவனை பார்க்க வரதா சொல்லியிருந்தேன். அவனுக்கு இப்பவே கால் பண்றேன். தாத்தா நீங்க பத்திரமா வீட்டுக்குப் போயிடுவீங்க தானே. இல்லன்னா உங்களை வீட்டுல கொண்டுப் போய் விட்டுட்டு போறேன் வாங்க" என்றாள்.

"அதெல்லாம் வேணாம். நான் ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போறேன். நீ பத்திரமா வண்டியை ஓட்டிட்டு போ. ஜாக்கிரதை" என்றார்.

நேரே கவினை சந்தித்தவள், அவனோடு சற்று நேரம் பேசிவிட்டு, அவனுக்குள் எழுந்த சந்தேகங்களை தீர்த்து வைத்தவள் அங்கிருந்து வீட்டிற்குப் புறப்பட்டாள்.

லீலாவதியின் மன அமைதிக்காக டிடெக்டிவ் ஏஜென்சி வரை அணுகலாம் என்று கூட யோசித்தான் நிரஞ்சன். ஆனால் ஒரு குடும்பத்தை கண்டுபிடிக்க இந்தளவுக்கு முயற்சி செய்ய வேண்டுமா என்றும் எண்ணினான். 

'இவ்வளவு பெரிய ஊரில் அவர்களை எங்கே சென்று தேடுவது?! அவர்கள் இந்த ஊரில் தான் இருக்கிறார்களா அல்லது வேறு எங்கேனும் சென்று விட்டார்களா? அவர்கள் இந்த நாட்டில் தான் இருக்கிறார்கள் என்றும் உறுதியாக சொல்வதற்கு இல்லாத போது எப்படி கண்டுபிடிப்பது? சமுத்திரத்தில் குண்டூசியைப் போட்டுவிட்டு, அதை துழாவி தருவது எவ்வளவு கடினமோ அது போல தானே இதுவும்!. அவர்கள் மாற்றலாகி செல்லுவதற்கு முன், முகவரியை கொடுத்து விட்டு சென்றிருக்கலாம். உறவைத் துண்டித்தவர்கள் அவர்களே நினைத்தால் ஒழிய மீண்டும் கண்ணில் அகப்படுவார்களா?' என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.


Leave a comment


Comments


Related Post