இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -27 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 02-05-2024

Total Views: 28791

அந்த ஹாலின் சுவரில் போலீஸ் உடையில் கம்பீரமாக புகைப்படமாக நின்றிருந்தான் நந்தன்.

என்னமோ மிலிட்ரிக்குப் போய்  வருஷக் கணக்கா சேவை செஞ்ச மாதிரி தான் போஸ் கொடுக்கறது என தினமும் திட்டுவது போல் இன்றும் நந்தனை திட்டினான்.

யுகி மட்டும் அல்ல அந்த குடும்பத்தில் யாருமே நந்தன் போலீஸ் ஆவான் என எதிர்ப்பார்க்கவில்லை. படிப்பு முடிந்ததும் ஒரு வருடம் வெறிக் கொண்டு தொழிலைக் கற்றுக் கொண்டதைப் பார்த்து பெரிய தொழிலதிபராக தான் வருவான் என நினைத்தனர்.

“யுகி எனக்கு இந்த சேலை எப்படி இருக்கு, வள்ளுக்கு பிடிக்கும் தானே?” 

“அவனுக்கு நீ எப்படி இருந்தாலும் பிடிக்கும், சீக்கிரம் கிளம்பு.” என சேலை மடிப்பை சரி செய்துக் கொண்டிருந்த ஷாலினியிடம் சொன்னான்.

“நான் ரெடி அவங்க வந்தாப் போதும்.” என்று தன் சேலையை கால் வரை நீவி விட்டுக் கொண்டாள்.

எத்தனை வருடக் காதல் இன்று நிறைவேறப் போகிறது என்றால் சந்தோஷம் எழாமல் இருக்குமா?

பலப் போராட்டம், பல நாள் உண்ணாவிரதம், மௌன விரதம், உள் இருப்பு போராட்டம் என அனைத்தும் செய்து அல்லவா தன்னவனைக் கைப் பிடிக்கிறாள் இந்த அளவிற்கு உவகை கூட எழாமல் இருந்தால் எப்படி?

இன்று பெண் பார்க்க பெங்களூரில் இருந்து நிலாவின் குடும்பம் வருகிறது. ஏற்கனவே பார்த்த பெண் தான் இதெல்லாம் வேண்டாம் என்றுக் கூட வளவன் சொல்லிப் பார்த்தான். ஆனால் எது செய்தாலும் முறைப்படி செய்ய வேண்டும் என்று  மார்த்தாண்டம் உறுதியாக சொல்லிவிட, அதன்பேரில் ஷாலினியை இன்று பெண்ப் பார்க்க வருகின்றனர்.

இந்த எட்டு வருடத்தில் அனைத்தும் மாறி இருந்தது. மாறாமல் இருந்தது   ஜாதி, இனம், தகுதி கவுரவம் என்று அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது கிருஷ்ணம்மாள் மட்டும் தான்.

“மணி” என மார்த்தாண்டம் அழைக்க, 

“சொல்லுங்க” என்றார் தன்மையாக.

திருமணம் பந்தத்தில் ஒருவர் முகம் பார்த்து மட்டும் வாழ்நாளை கடப்பது சாத்தியமா? என்றால் மணிமேகலையிடம் சாத்தியம். முப்பது வருட திருமண வாழ்க்கையில்  கணவன் மனைவி கலகலவென்று பேசிக் கொள்வதில்லை, கணவன் சொல்வதை சிரமேற்க் கொண்டு செய்யும் மனைவி இத்தனை வருட வாழ்க்கையில் எங்குமே சலிப்பு ஏற்படவில்லை என்பது எவ்வளவு பெரிய விஷயம்.

தற்போதையக் காலங்களில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. சகிப்புத் தன்மை என்பது இல்லாமல்  விவாகரத்து செய்துக் கொள்கின்றனர்

“நந்து பிலைட் எத்தனை மணிக்கு? ஏர்போர்ட்டுக்கு வண்டி அனுப்பனும்ல.” 

“பதினோரு மணிக்கு. அதுக்குள்ள வளவன் வீடு வந்துடுவாங்க, ரயில்வே ஸ்டேஷனுக்கும் வண்டியை அனுப்பனுங்க.”

“ம்ம் அவங்களை அழைச்சிட்டு வர யுகி போறேன்னு சொல்லிட்டான். நான் நந்துக்கு வண்டியை அனுப்பறேன்.”

“ஏங்க ஒரு அரைமணி நேரம் தானே முன்ன பின்ன, வளவன் பேமிலியை பிக் பண்ணிட்டு அப்படியே நந்துவையும் பிக் பண்ணிக்க சொல்லுங்க, இன்னும் எத்தனைக் காருங்க அனுப்பறது?”

“அதுவும் சரி தான், இருந்தாலும் அவங்கக் கூட நந்துவை வர சொன்னா அவன் கம்முனு வர மாட்டானே. பொண்ணு பார்க்க வரவீங்க அப்புறம் பொண்ணே வேண்டாம்னு ஓடிடுவாங்க.” 

“சொல்றது சொல்லிட்டேன் முடிவு உங்க கையில தான்.” என தொடுத்து வைத்த மல்லியை எடுத்துக் கொண்டு ஷாலினியின் அறைக்குப் போனார்.

மணி சொல்வதும் சரி போல தான் தோன்றியது. நந்தனுக்கு அது ஆகாது என்றும் தோன்ற வேறு வழியின்றி தனிக் காரையே அனுப்பி வைத்தார்.

வெகுநாட்களுக்கு பின் தன் சொந்த ஊருக்கு வரும் நிலாவிற்கு  உள்ளுக்குள் சந்தோசம் அலை அலையாக எழுந்தது. யாரைக் கண்டு ஓடி ஒளிந்தாளோ அவனையே தைரியமாக எதிர்க் கொள்ள ஆசை தான். மற்றவரிடம் வரும் தைரியம் நந்தனை கண்டால் வருவதில்லை. காற்றுப் போன பலூன் போல மாறி விடுகிறாள்.

இந்த எட்டு வருடத்தில், எட்டு தடவை மட்டுமே சொந்த ஊருக்கு வந்து சென்றிருக்கிறாள் அதுவும் திருவிழாவிற்காக மட்டுமே.

சொந்தக்கிராமத்தில் சென்று பொங்கல் தீபாவளியைக் கொண்டாட ஆசை இருந்தாலும், வர முடியாத சூழ்நிலை இருந்ததால் ஆசையை மனதுக்குள் அடக்கிக் கொண்டு திருவிழாவிற்கு மட்டும் வந்துச் சென்றனர்.

போன முறையும் சரி, அதற்கு முந்துன முறையும் சரி, நிலா வரும் போது நந்தன் இருக்கவில்லை. மூன்றாம் வருடம் நிலா வரவில்லை என தொடர்ந்து மூன்று வருடங்கள் நிலாவும் நந்தனும் பார்த்துக் கொள்ளவில்லை.

அவனையும் கிருஷ்ணம்மாளையும் தவிர மற்ற அனைவருமே நிலாவின் குடும்பத்துடன் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர். யுகி ஒருப் படி மேலே சென்று நிலாவைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எம்பிஏ மேற்படிப்பை பெங்களூரில் படித்து அங்கயே வேலையிலும் சேர்ந்துக் கொண்டான்.

வீட்டில் மட்டும் அல்ல ஊரே சொல்கிறது, யுகி கண்டிப்பாக ஒரு நாள் நிலாவை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சொல்லப் போகிறான், இல்லையா சொல்லாமல் கொல்லாமல் நிலாவை திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கப் போகிறான் என கிருஷ்ணம்மாளை பார்க்கும் போதெல்லாம் அவர் வயது கிழவிகள் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

ஷாலினியை அங்கு கட்டிக் கொடுக்க முடிவானப் பின்பு யுகி காதலித்தால் என்ன காதலிக்காமல் இருந்தால் என்ன என்ற மனநிலைக்கு வந்து விட்டார்.

அதற்காக சாதாரணமாக வளவன் ஷாலினி காதலை ஒப்புக் கொள்ளவில்லை கிருஷ்ணம்மாள்.

ஷாலினியும் எப்படி எப்படியோ கெஞ்சிப் பார்த்தாள், அழுதுப் பார்த்தாள், கிருஷ்ணம்மாளைக் காட்டிலும் நந்தன் இந்த திருமணத்திற்கு பயங்கர எதிர்ப்பு தெருவித்தான்.

“நந்தா அவ விருப்பப்படறா கட்டி வெச்சிடுவோம்.”

“வெச்சுக்கோங்க நாளப் பின்னால அண்ணனா நான் எதுவும் செய்ய மாட்டேன். என்கிட்ட இருந்து சல்லி பைசா வராது எதையும் எதிர்ப்பார்க்கக் கூடாது அப்படின்னா கட்டி வைங்க யாரு வேண்டாம்னு சொன்னது.”

“கூடப் பொறந்தவன் இல்லாம நாளைக்கு சீரு செனத்திய யாரு செய்வா நந்தா?”

“அப்பா அவன்கிட்ட எதுக்கு கெஞ்சிட்டு இருக்கீங்க? அவளுக்கு அவன் மட்டும் தான் அண்ணணா? ஏன் நான் இல்ல? எதா இருந்தாலும் நான் பார்த்துக்கறேன் நீங்க வளவனைப் பேசி முடிங்கப்பா."

“அதான் சார் சொல்லிட்டாருல்ல அப்புறம் என்ன செய்ங்க.” என நந்தன் விட்டேத்தியாக சொல்ல,

“எனக்கு ரெண்டு அண்ணணுமே வேணும், என்னைய விட உங்களுக்கு வரட்டு கவுருவம், ஜாதி இது தான் முக்கியம்ன்னா நான் இருந்து என்ன பண்ண?” என்றவள் ஓடிச் சென்று கத்தியை எடுத்தி கை அறுத்துக் கொண்டாள். 

“என்ன ஷாலும்மா இப்படி பண்ணிட்ட.? அப்பா மேல நம்பிக்கை இல்லையா?”

மகள் என்றதும் கலங்கிய மார்த்தி தான் மனைவியை ஒரு பொருட்டாகக் கூட மதித்ததே இல்லை. என்றுமே மகள்கள் வீட்டின் இளவரசிகளாக இருப்பது போல் மனைவி என்றுமே  அந்த வீட்டின் மகாராணி ஆகியதில்லை, அதற்கு சிறந்த உதாரணம் மார்த்தாண்டம் தான்.



Leave a comment


Comments 2

  • P Priyarajan
  • 2 months ago

    👌👌👌👌

  • F Fajeeha Fathima
  • 2 months ago

    சூப்பரா இருக்கு அக்கா‌ என்ன இவன் போலீஸ்ன்னு வந்து நிக்கிறான் நிலா நிலமை அய்யோ ஆமா அவ என்ன பண்ணிட்டான்னு ராஜி திட்டுறாங்க


    Related Post