இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 10) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 02-05-2024

Total Views: 19046

உனக்கென்றே உயிர் கொண்டேன் 10

வழக்கம்போல் தமிழுக்கு அன்றைய பொழுது அவனது மொழியின்...

"குட் மார்னிங் சீனியர்" என்ற புலனத்தின் தகவலில் தான் தொடங்கியது.

இளநகையோடு ஆயத்தமாகி கீழே வந்தவன், கிளம்பி அவனுக்காகக் காத்திருந்த பூர்வியின் முன் நின்றான்.

"என்ன இவ்ளோ சீக்கிரம் கிளம்பிட்டீங்க? நாளைக்கு போறதாதானே சொன்னீங்க?" எனக் கேட்டவன், பூர்வியின் அருகில் அமர்ந்தான்.

பூர்வியோ விழிகளில் பூத்த நீரோடு தங்களுக்கு எதிரே அமர்ந்திருந்த அகிலாண்டாத்தை பார்த்தாள்.

"கெழவி ஏதும் சொல்லுச்சோ?" அகிலாண்டத்திற்கு கேட்கும்படியே வினவினான்.

தமிழ் தன்னைத்தான் கேட்கிறான் என்று தெரிந்தபோதும் அகிலாண்டம் முகத்தை நிமிர்த்தவில்லை. தனம் கொடுத்துச்சென்ற சத்து மாவு கஞ்சியினை ரசித்து குடித்துக் கொண்டிருந்தார்.

"உப்பு சப்பு இல்லாத கஞ்சிக்கே இம்புட்டு அலும்பா?" என்ற தமிழ்,

"கிளம்பிட்டிங்க தானே? வாங்க போவோம். கால் மணியில ட்ரெயின் இருக்கே!" என்றான்.

தமிழின் வார்த்தைகள் கேட்டபடி சமையலறையிலிருந்து சேலை தலைப்பில் சில்வர் பாக்ஸின் அடியை துடைத்தபடி வேகமாக அவர்களின் அருகில் வந்த தனம்,

"சாப்பாடு இருக்கு பூர்வி. ட்ரெயினிலே சாப்பிட்டுடு. நேரா ஆபீஸ் போறேன்னு பட்னியா போயிடுவியே! மறந்துடாத" எனக்கூறி அவளின் பையில் தானே பாக்ஸினை வைத்தார்.

"இதுதான் ரொம்ப முக்கியமாம்மா?"பூர்வியின் உதடு அழுகையில் துடித்தது.

"அக்கா என்னாச்சு?" பூர்வி தைரியமான பெண். எதற்கும் சட்டென்று கலங்கி அவன் வயதிற்கு தமிழ் பார்த்ததே இல்லை.

ஆனால் இன்று பட்டென்று தமக்கையின் கண்கள் கொட்டிய நீரில் பதறிவிட்டான்.

"அம்மா நீங்க சொல்லுங்க?"

தனம் அகிலாண்டாத்தை பார்த்தாரே தவிர எதுவும் சொல்லவில்லை.

"எதுவும் பேசிடாதீங்கம்மா. கண்டவங்களும் நாட்டாமை பண்ணட்டும்" என்ற பூர்வி கண்களை துடைத்துக்கொண்டு "போலாம் தமிழ்" என்க...

"யாரை கண்டவங்கன்னு சொன்ன நீ?" என்று வந்தார் தெய்வானை.

"யாரை சொன்னேன்னு தெரிந்ததால் தானே வந்து கேக்குறீங்க? உங்களைத்தான் சொன்னேன்னு திருப்பி சொல்லணுமா நான்?" என்ற பூர்வியின் குரலில் அத்தனை சூடு.

"என்னடி வாய் ரொம்ப நீளுது?" அகிலாண்டம் தன் மகளுக்கு பரிந்து வர...

"அடக்க ஒடுக்கமா இருன்னு சொன்னதுக்கா இந்த ஆட்டம் ஆடுற நீ?" என்று வாய் மேல் கை வைத்தார் தெய்வானை.

"பூர்வியை சொல்றதுக்கு முன்ன உங்களுக்கு அந்த அடக்கம் இருக்கான்னு பாருங்க" என்று நிமிர்ந்து நின்ற தமிழ்...

"உங்க அதட்டல் பேச்சுக்கு தேவராஜின் மனைவி லட்சுமி வேணுன்னா அடங்கிப்போவாங்க. இந்த தமிழோட அக்கா இல்லை. உங்க உருட்டளையெல்லாம் எங்ககிட்ட காட்ட வேண்டாம்" என்றான்.

"தமிழு..." தன் மாமியாரின் முறைப்பில் தனம் மகனை அமைதியக்கா முயன்றார்.

"சும்மா இருங்கம்மா. உங்களும் கொட்டுறது போதாதுன்னு, எங்களையும் குனிய சொல்லி கொட்டுவாங்களா இவங்க?"எனக் கேட்டவன்...

"அடுத்து இங்கு எல்லாம் நான் தான். நான் தேவராஜ் மாதிரி பொறுமையாலாம் போயிட்டு இருக்கமாட்டேன். இப்போவே உங்க வீட்டுக்கு போங்கன்னு துரத்திடுவேன். உங்களை பொறுத்துப்போறது எங்க மாமாக்காக மட்டும்தான்" என்ற தமிழின் கோபம் அகிலாண்டத்தையே மிரள செய்தது.

"நேத்து தான் பொண்ணு பார்த்திட்டு போயிருக்காங்க. அதுக்குள்ள இன்னைக்கு காலையிலே அந்த பையனோட போன் பேசிட்டு நிக்கிறாள். இப்போலாம் தாலி கட்டுற நேரத்தில் கூட கல்யாணம் நின்னுப்போவுது... அதுக்கு நல்லதுக்கு சொன்னதுக்கு எனக்கு இந்தப் பேச்செல்லாம் தேவை தான்" என்று நீட்டி முழக்கி சொல்லிய தெய்வானை,

"இது அவங்க வீடாம்மா" என்றார். சேலை முனையில் வராத கண்ணீரை துடைத்தவராக.

"இல்லைன்னு சொல்வீங்களா நீங்க?" எனக்கேட்ட தமிழ், "உங்க அக்கறையெல்லாம் எங்களுக்குத் தெரியும். உங்க பொண்ணை ஒழுங்கா வளர்த்தா மட்டும் போதும். எங்களுக்கு நல்லது கெட்டது சொல்லித்தர எங்க அப்பா, அம்மா இருக்காங்க" என்றவன், அப்போதே அவர்களின் முன்பு அஸ்வினுக்கு அழைத்தான்.

அஸ்வின் ஏற்றதும்...

"ஹாய் மாமா" என்று அந்த மாமாவில் அதீத அழுத்தம் கொடுத்து விளிக்க... தெய்வானையின் முகம் கடுகடுப்பைக் காட்டியது.

"பூர்வி சைல்ட்ஹூட் போட்டோஸ் கேட்டிங்களே. அனுப்பியிருக்கேன்" என்றவன் மேலும் சில வார்த்தைகள் பேசி, தாய் மகளின் ரத்த அழுத்தத்தை ஏற்றிய பின்னரே வைத்திட்டான்.

"இது சரியில்லை தமிழு. வந்து பார்த்திட்டு தானே போயிருக்காங்க. இன்னும் நிச்சயம் கூட நடக்கல... நாம அவுங்க வீடு போயி கூட பார்க்கல... அதுக்குள்ள இவள் அவன்கிட்ட" என்று அகிலாண்டம் முடிக்கவில்லை...

"ஷ்..." என்று வாயில் விரல் வைத்த தமிழ்,

"அவரு தான் பூர்வி ஹஸ்பெண்ட். இந்த வீட்டு மாப்பிள்ளை. ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசுங்க" என்றான்.

அதிலேயே அகிலாண்டம், தெய்வானை இருவரின் வாயும் மூடிக்கொண்டது.

"உங்களை பேசினாங்க, அடக்கினாங்க சரி. இப்போ பூர்வியை..." வார்த்தையை  பாதியிலேயே நிறுத்தியவன், "இப்பவும் எப்படி நீங்க பொறுமையா இருக்கீங்க?" என்று தனத்திடம் கேட்டான்.

பாவம் தனம் மகனின் இக்கேள்விக்கு என்ன பதில் சொல்லிடுவார். இந்த வீட்டிற்கு வாழ வந்தது முதலே, அகிலாண்டத்தின் குட்டிற்கு குனிந்து பழகிவிட்டார். அடுத்து தன் அண்ணனுக்காக என்று தெய்வானையிடம் அடங்கி போய்விட்டார். பல வருட செயல்களை ஒரே நாளில் மாற்றிட முடியுமா என்ன?

பதில் சொல்லாது மௌனமாகவே நின்றார்.

"ம்ப்ச்..."சலிப்பாக இருபக்கமும் தலையை ஆட்டிய தமிழ்...

"வாங்க" என்று பூர்வியை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

அப்போதுதான் காரட் தோட்டத்திற்கு சென்றிருந்த தேவராஜ் எதிர்ப்பட்டார்.

"என்னம்மா கிளம்பிட்டியா? நான் தோட்டத்துக்கு போகும்போது கூட எதுவும் சொல்லலையே?" என்றார்.

"தேவையில்லாதவங்க இருக்கும் போது... தேவையானவங்க எப்படி இருக்க முடியும்?" என்று தேவராஜின் முகம் கூட பாராது கூறியவன், பூர்வியை பார்த்தபடி வண்டியில் அமர்ந்து அதனை இயக்க, அவளும் தேவராஜிடம் போய் வருகிறேன் என்றுகூட சொல்லாது தம்பியின் பின்னால் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

காலையில் கண் விழித்ததும் மொட்டை மாடிக்கு யோகா செய்ய சென்ற பூர்விக்கு அஸ்வினிடமிருந்து காலை வணக்கம் வந்தது. நேற்று இரவு அவள் இரவு வணக்கம் அனுப்பியதற்கு அவன் காலை பதில் அனுப்பியிருந்தான். உடனே அவனிடம் பேச வேண்டுமென அழைத்தவள்... இயல்பாக பேசிட...

அங்கு வந்த தெய்வானை அவளின் பேச்சினை வைத்து யாரிடம் பேசுகிறாளென்று கண்டு கொண்டவராக, பூர்வி மொபைலை வைப்பதற்காகவே காத்திருந்தவர் போல், அவள் பேசி முடித்து திரும்பிட...

காரணமேயின்றி அஸ்வினுடன் தொடர்பு படுத்தி பலவற்றை பேசிவிட்டார்.

"நேத்து பார்த்தவனிடம் நீ சாதாரணமா பேசுறதை பார்த்தால், வேலைக்கு போன இடத்தில் காதல் ஏதும் அவனை பண்ணிட்டு... உன் தம்பியை வச்சு தரகர் மூலமா வந்த வரன் மாதிரி நாடகம் போடுறியா?" என்றும் கேட்டிட... அவருக்கு எவ்வித பதிலும் சொல்லாது பூர்வி கீழே வந்திட, அதையும் ஒரு காரணமாக வைத்து அகிலாண்டத்தையும் பேச வைத்திட்டார்.

வழக்கம்போல் தனம் அவர்கள் பேசுவதற்கு அமைதியாக நின்றதுதான் பூர்வியை அதிகமாக நோக வைத்திட்டது.

வேகமாக மேலேறி தன்னறைக்கு சென்றவள் ஊட்டி செல்ல கிளம்பி வந்து தமிழுக்காக காத்திருந்தாள்.

இதனை ரயில் நிலையம் வந்ததும் தமிழிடம் சொல்லும்போதே பூர்விக்கு நின்றிருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுத்தது.

"அச்சோ பூர்வி" என்று அவளின் கண்களை துடைத்த தமிழ், "இதுக்கெல்லாம் அழுவாங்களா? ஆமாம் அப்படித்தான்னு போயிட்டு இருக்கணும். இந்த மாதிரி ஆளுங்க பேச்சுக்கெல்லாம் மதிப்பு கொடுக்கக்கூடாது" என்றவன் "இவங்களை என்னதான் பண்றது?" என்றான் ஆயாசமாக.

"இவங்களை ஓடவிட புதுசா யாரும் வந்தாதான் உண்டு" என்றாள் பூர்வி.

"புதுசா... நம்ம வீட்டுக்கு மொழி தான் வருவாள்."

"அப்போ உன் பொண்டாட்டி தான் ஓடவிடணும்."

"அவளோட சேட்டையெல்லாம் என்கிட்ட மட்டுந்தான். எனக்கு பயப்படுற மாதிரியே எல்லாம் பண்ணுவாள்" என்றவன், பூர்வி உன் பொண்டாட்டி என்றதில் தோன்றிய வெட்கத்தை இதழ் கடித்து மறைத்தவனாக பேச்சை மாற்றினான்.

"நாளைக்கு அஸ்வின் மாமா வீட்டுக்கு போறோம்" என்றான்.

அஸ்வின் என்ற பெயர் கேட்டதும் நொடியில் பூர்வியின் முகம் மலர்ந்து ஒளிர்ந்தது.

"பாருடா... உடனே முகத்தில் பல்ப் எரியுது" என்று கிண்டல் செய்த தமிழிடம்,

"நிஜமாவே அவங்க என் போட்டோ கேட்டாங்களா தமிழ்?" என்று கேட்டாள்.

"அத்தையை நோஸ் கட் பண்ணனும் அப்படின்னு கால் பண்ணிட்டேன். என்ன பேசன்னு தெரியல. டக்குனு தோணுனதை பேசி வைத்திட்டேன்" என்று தோள் குலுக்கினான்.

"அப்போ நீ போட்டோ அனுப்பினேன் சொன்னது?" கேள்வியாக ஏறிட்டாள்.

"ஏதும் அனுப்பல."

அந்நொடி தமிழின் அலைப்பேசி தகவல் வந்ததற்கு அடையாளமாக சத்தமிட்டது.

"யாருடா... உன் ஆளா?"

"ம்ஹூம்... உங்க ஆளு" என்ற தமிழ், அலைப்பேசி திரையை பூர்வியிடம் காட்டினான்.

"போட்டோ எங்க தமிழ்?" எனக்கேட்டு அஸ்வின் அனுப்பியிருந்தான். அவனுக்கு தமிழ் திடீரென தான் கேட்டதாக பேசியது புரியவில்லை என்றாலும், அதற்கு ஏதும் காரணமிருக்குமென்று எண்ணி அதைப்பற்றி எதுவும் கேட்காது தனக்கு வேண்டியதை கருத்தாகக் கேட்டிருந்தான்.

தமிழ் சிரிக்க... பூர்வியின் முகம் சிவந்துவிட்டது.

"உங்க ஆளுகிட்டே வாங்கிக்கோங்க மாமா" என்று அனுப்பியவன்,

"என்ன பூர்வி அனுப்புவதானே?" என்று சீண்டினான்.

சரியாக ரயில் வர தமிழிடம் "போய் வருகிறேன்" என்ற பூர்வி வேகமாக ரயில் ஏறி மறைந்தாள்.

ரயில் நகரும் வரை நின்றிருந்த தமிழ் பார்க்கிங் வந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கண்ணாடியில் தன் முகம் பார்த்தான்.

"மொழி தமிழோட பொண்டாட்டியாமே?" என தனக்குத்தானே கேட்டுக்கொண்டவன்,

"அப்படியா மொழி?" என்று அருகில் இல்லாதவளிடமும் கேட்டிருந்தான்.

"என்னடா தனியா பேசிட்டு இருக்க?"
தமிழின் முதுகில் மகேஷ் தட்ட...

அசடு வழிந்தான் தமிழ்.

"புரிஞ்சிடுச்சுடா" என்ற மகேஷிடம் கேலி புன்னகை.

"என்னடா எப்பவும் இங்கவே சுத்திட்டு இருக்க?" தமிழ் நண்பனிடம் வினவினான்.

"நைட் ஷிஃப்ட் மச்சான். இப்போதான் வீட்டுக்கு வரேன்" என்ற மகேஷ் தமிழின் பின்னால் அமர்ந்தவனாக, "என்னை வீட்டில் டிராப் பண்ணிடுடா" என்றான்.

"இங்க இருக்க வீட்டுக்கு நடந்து போக முடியதாடா?" என்று கேட்டாலும் மகேஷை அவனது வீட்டில் விட்டுச் சென்றான் தமிழ்.

தமிழ் நேராக தேயிலை எஸ்டேட் சென்றவன்... அங்கு பணி முடித்து கேரட் தோட்டத்திற்கு சென்றான்.

அன்று கேரட் அறுவடை. மதியம் உணவிற்கு கூட வீட்டிற்கு செல்லாது மேற்பார்வை செய்து கொண்டிருந்தான்.

மதிய உணவிற்கு வரவில்லையே என தனம் பலமுறை அழைத்தும் தமிழ் அழைப்பினை எடுக்கவில்லை.

வேலையில் மும்முரமாக இருந்தான்.

நடுவில் பூர்விக்கு மட்டும் ஒருமுறை அழைத்து, அவள் சென்றுவிட்டாளா எனக் கேட்டு அறிந்துகொண்டான்.

ஒரு பக்கம் கேரட் அறுவடை ஆகிக்கொண்டிருக்க... மற்றொரு பக்கம் அதனை சுத்தம் செய்யும் இயந்திரத்தில் இட்டு சுத்தம் செய்யும் வேலையும், அதனை தொடர்ந்து மூட்டை கட்டி லோடு ஏற்றும் வேலையும் துரித கதியில் நடந்து கொண்டிருந்தது.

"நாளைக்கு காலையில் இந்த ரெண்டு லோடும் சென்னை கோயம்பேடு போயிடணும் சாமிண்ணா" என்றவன், "பஞ்சாப்பில் ஒரு லோடு எக்ஸ்ட்ரா கேட்டாங்க. அனுப்பிடுங்க" என்றான்.

தேவராஜ் உணவு பையோடு வந்துவிட்டார்.

"வாப்பா சாப்பிடலாம்" என்று அவர் அழைக்க... பணியாட்கள் முன்பு எதுவும் சொல்ல முடியாது,

"வச்சிட்டு போங்க... கொஞ்ச நேரம் கழித்து சாப்பிட்டுக்கொள்கிறேன்"என்றான்.

"என்ன கோபம் தமிழு உனக்கு?"

"ஏன் உங்களுக்குத் தெரியாதா?" சற்றும் வார்த்தையில் மென்மையில்லை.

"உங்க லட்சுமி எதுவும் சொல்லலையோ?" அந்த வரியில் அத்தனை நக்கல் அவனிடம்.

"அவளுக்கு பழகிப்போச்சு தமிழு?"

"அதுக்கு... நாங்களும் பழகனுமா?"

பேச்சினூடே இருவரும் தள்ளி வந்திருந்தனர்.

"நான் என்ன செய்யட்டும் தமிழு?"

"இத்தனை வருடமா செய்யாததையா இப்போ செய்யப்போறீங்க? போங்கப்பா. உங்க தங்கச்சி என்ன செய்தாலும் வேடிக்கை மட்டுமே பாருங்க. பொண்டாட்டிக்காகவே பேசிடாதவர் மகளுக்கு என்ன பேசிடப்போறீங்க?" என வார்த்தையில் அவரின் மனதை பதம்பார்த்து வேலையை கவனிக்கச் சென்றுவிட்டான்.

வீட்டில் நடந்தவற்றை தனம் சொல்லி கேட்டவருக்கு தெய்வானையிடம் நன்றாகக் கேட்க வேண்டுமென்று பொடுபொடுவென வந்தது.

ஆனால் கேட்டிட முடியாதே!

"உன்னை நம்பி உன் வீட்டில் இருக்கன்னு பேசுறியாண்ண? உன் சம்பாத்தியத்தில் உட்கார்ந்திருக்கன்னு சொல்லிக்காட்டுறியாண்ண" என்று கேட்டு விடுவார். அதற்கு தேவராஜ் என்ன பதில் சொல்லிடுவார். என்ன தா. சொல்லிவிட முடியும்.

அப்படி ஏதும் சொல்லிவிட்டால் தெய்வானைக்கு முன் அகிலாண்டம் சண்டை போடும் நோக்கில் முன் வந்திடுவாரே!

குடும்பத்தின் அமைதியல்லவா குலைந்து போகும்.

"கட்டிகிட்டவ மேல கை வைக்கக்கூடாதுன்னு பார்க்கிறேன் மச்சான். எனக்காக இந்த பாரத்தை தாங்கிக்கங்க." என்றோ மணி கைகூப்பி கேட்டு கொண்டது இன்றும் அவர் நினைவில் உதித்து பொறுமை காக்க வைத்தது.

தமிழ் தனக்கு விவரம் தெரிந்தது முதல் சொல்லி பார்த்துவிட்டான். தனமோ, தேவராஜ்ஜோ வருந்தும் அளவிற்கு தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்துவதில்லை. வருத்தத்தை கோபமாகத்தான் காட்டிட வேண்டுமென்றில்லை. நிராகரிப்பில் உணர்த்திவிடலாம். தேவராஜ் விலகி நின்றாலும், தெய்வானைக்கு வேண்டியவற்றை செய்துகொண்டுதானே இருக்கிறார். இல்லையென்பவனுக்கே இல்லாததின் வலி தெரியும். அப்படியான இல்லாமையை தெய்வானையை தேவராஜ் உணர வைத்தது இல்லையே. அவருக்கு எப்படி புரியும்.

பலமுறை சொல்லி பார்த்து தோற்றுப்போன தமிழ், இன்று தான் கோபத்தின் மூலம் வெளிப்படுத்தத் துவங்கிவிட்டான்.

பூர்வியிடம் அவரின் அதிகாரம், அதட்டல், நாட்டாமை தனத்தை காட்டியது தமிழுக்கு பொறுமையை கரை உடைத்தது.

வேலை எல்லாம் முடிந்தும் வீட்டிற்கு செல்ல மனமின்றி தோட்டத்திற்கு நடுவில் போடப்பட்டிருந்த பரணையில் ஏறி வான்வெளியை வெறித்தவாறு படுத்துவிட்டான்.

இருள் கவிழத் தொடங்கியிருந்தது.

தேவராஜ் பலமுறை அழைத்திட... அலைப்பேசியை எடுத்து அணைத்து வைக்க நினைத்தவன் அவனது மொழி அழைப்பாள் என்று அதை தவிர்த்தான்.

மெல்ல கண் மூடியவன் உறங்கியிருந்தான்.

தேவராஜ் தோட்டத்திற்கு காவலுக்கு நிற்கும் முத்தையாவுக்கு அழைத்து கேட்டிட...

"தம்பி சுத்தி பார்த்திட்டு இருந்தது. உறங்கிடுச்சுங்களே! அலுப்பா இருந்திருக்கும் போல" என்றிட, "எழுப்பி வீட்டுக்கு அனுப்புங்கள்" என்று சொல்ல முடியது வைத்துவிட்டார்.

மகனின் கோபம் நியாயமானதாக இருக்கும்போது அவனது பிடிவாதத்தை ஏற்றுத்தானே ஆக வேண்டும்.

"தமிழ் வரும்போது சாப்பிட்டுப்போம்" என்று உணவு உண்ண அமர்ந்த தேவராஜ் எழுந்து சென்றுவிட்டார்.

ஆனால் அதைப்பற்றிய அக்கறை கொஞ்சமுமின்றி அகிலாண்டமும், தெய்வானையும் தனத்தினை நன்றாக ஏவி பரிமாற செய்து வயிறு முட்ட உண்டுவிட்டே எழுந்தனர்.

தனம் ஒரு பெருமூச்சோடு கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த கணவரின் அருகில் சென்று அமர்ந்தார்.

பெயருக்குத்தான் தொலைக்காட்சி ஓடியது.

"சேவகம் முடிஞ்சுதா லட்சுமி?"

தனத்திற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"எல்லாம் நீ கொடுத்த இடம் லட்சுமி. உன் மகன் கோபமா இருக்கான்னு தெரிந்தும்... அதுக்கான காரணத்தை திரும்பவும் செஞ்சுட்டு வரியே..." என்றார்.

"உங்க தங்கச்சிங்க. அதுக்கும் மேல எனக்கு அண்ணி. எப்படிங்க விட முடியும்?" என்ற தனத்திற்கே தன் பேச்சு அபத்தமென்று தெரியும். அவரால் தமிழைப்போலவோ,தேவராஜ் போலவோ பட்டென்று எடுத்தெறிந்து பேசிட முடியவில்லை.

"ஒரு எட்டு ரெண்டு பேரும் போய் வருவோமாங்க?"

"இன்னைக்கு மதியம் என்கிட்ட பேசின மாதிரி தமிழு வேறெப்பவும் பேசினதே இல்லை லட்சுமி. நீ உன் சுய மரியாதை விட்டுக்கொடுத்துட்டியேன்னு தான் அவனுக்கு அதிக ஆதங்கம். உன்னை வைத்து பூர்வியை பார்ப்பதாக இன்னைக்கு தெய்வானையின் பேச்சு இருந்திருக்கு. அதான் அவனுக்கு இத்தனை கோபம். வரட்டும். வந்து தானே ஆகணும்" என்ற தேவராஜுக்கு மணியிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது.

வருடங்கள் பல ஓடி தேய்ந்திருந்தாலும் மணியின் மனைவி தெய்வானை தானே! அதை இன்றளவும் அவர் மறுத்திடாது மறந்திடாது இருப்பதற்கு சான்று ஒற்றையில் இருப்பது.

என்னதான் தெய்வானை மீது கணவனாக அவருக்கு கோபமிருந்தாலும், ஒருநாளும் பார்க்க வராது இருந்தது இல்லை.

மகளை பார்க்கும் சாக்கிட்டு வந்தாவது பார்த்திடுவார். தெய்வானையிடம் பேசவில்லை என்றாலும்... அவரின் கண்களில் அவருக்கான தேடல் இருக்கும்.

மனம் வெறுத்துவிட்டார் தான். ஆனால் ஒருபோதும் ஒதுக்கியது இல்லை. இன்றும் தன் மகள், மனைவி தன்னுடன் இல்லாவிட்டாலும் தேவராஜ் மறுக்க மறுக்க அவரின் மூலமாக அனைத்தும் மணி தான் செய்து கொண்டிருக்கிறார். இது தனமே அறிந்திடாதது. இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் தமிழ் கண்டு கொண்டிருந்தான்

அப்போது தமிழ் மணியைத்தான் கடிந்து கொண்டான்.

"இதெல்லாம் நீங்க செய்றீங்கன்னு தெரிந்தால் கூட அவங்க மனசு மாறமாட்டாங்க. அவங்க இப்படி இருக்க நீங்களும் தான் காரணம் மாமா. நீங்கயில்லாமல் அவங்க நல்லாத்தான் இருக்காங்க. அவங்கயில்லமால் நீங்கதான் நல்லாயில்லை. ஆரம்பத்தில் விட்டுட்டு இப்போ என்ன செய்ய? என்னவும் பண்ணுங்க. உங்களோட பொறுமை யாருக்கும் வராது. உங்களோட இந்த அமைதிக்கு விலை என் அம்மாவோட சுயமரியாதை" என்று கொட்டி தீர்த்திருந்தான்.


Leave a comment


Comments


Related Post