இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...34 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 03-05-2024

Total Views: 28073

பூச்செண்டு பியூட்டி பார்லர் 


சுற்றிலும் குட்டி குட்டியாய் பூச்செண்டுகள் வரையப்பட்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த மினுமினுக்கும் புத்தம் புது பதாகையுடன் நெருக்கமான நபர்களால் கலகலப்பாக காட்சியளித்தது அந்த கட்டிடம். பார்த்து பார்த்து செதுக்கி வடிவமைத்து தன் மனைவியின் திறமைக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டான் தரணீதரன். திருமண வரவேற்பு முடிந்து வந்த கையோடு பரபரப்பாய் வேலையில் இறங்கி அடுத்த இருபதே நாட்களில் புதிய அழகு நிலையம் தொடங்கியாயிற்று.


பெயர் வைக்கும் விஷயத்தில் வித்தியாசமான அழகான தனித்துவமான பெயர் வேண்டும் என்று பூச்செண்டு யோசிக்கத் தொடங்க “உன் பெயரைவிட யூனிக்கான அழகான பெயர் வேற இருக்கா என்ன…? உன் பேரே கவிதை மாதிரிடி… அந்த பேரையே வைக்கலாம்… அதுதான் பொருத்தமா இருக்கும்…” தன் மனைவியை இழுத்து மடியில் அமர்த்தி ஆசையாய் கொஞ்சியபடி கூறினான் தரணி.


“நெஜமாவா மாமு… என் பேர் அம்புட்டு அழகா…? என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே…” தன் கைகளை அவன் தோளில் மாலையாகப் போட்டு மயிலிறகு கண்கள் சுழல கேட்டவளை மையலாய் பார்த்தவன் “பைத்தியம்… உன் பேரோட அழகு உனக்கு புரியல… ஆனா எனக்கு புரியும்… உன்னை பார்க்கறதுக்கு முன்னாடியே உன் பேரிலேயே எனக்கு ஒரு கிரஷ் இருந்தது தெரியுமா…” அவள் கன்னத்தில் மென்மையாய் முத்தமிட்டு கூறினான். அப்படியா என்பதுபோல் புருவத்தோடு விழிகளையும் உயர்த்தியவளின் இமைக் குடைகளில் இன்னும் இரண்டு அழகான முத்தங்கள்.


“உன் மாமா உன் பெயரை சொல்லி இருக்கான்… நீ பண்ற சேட்டைகளை பத்தியும் சொல்லி இருக்கான்… அப்போ இருந்தே உன் மேல என்னையும் அறியாம ஒரு ஈர்ப்பு… உன்னோட பேரை அடிக்கடி எனக்கு நானே சொல்லிப் பார்த்துக்குவேன் தெரியுமா…”


“ஆனா அப்புறம் ஏன் என் பேரை மாத்தி மாத்தி சொல்லி ஒரு தடவை என் கோபத்தை தூண்டி கொட்டு கூட வாங்கினீங்களே...”


“ம்…அதெல்லாம் வேணும்னு பண்ணினது… சும்மா உன்னை சீண்டி பார்த்தேன்…”


“ஓ… அப்பவே ஐயா என்னை ரூட் விட ஆரம்பிச்சிட்டீங்களா…” அவன் மீசையை செல்லமாய் பிடித்து இழுத்தாள்.


“உண்மையை சொல்லணும்னா அதுதான்டி நிஜம்… நம்மளோட முதல் சந்திப்பே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கானது இல்லையா…” கண்கள் மின்ன கேட்டவன் அந்த நினைவுகளுக்குள் செல்ல தானும் அவனோடு லயித்தவள் அவன் கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொண்டாள்.


“ஆமா மாமு… உங்க முகத்தையே உங்க மடியில உட்கார்ந்துதானே பார்த்தேன்…” அவள் சொல்ல இருவருமே சத்தமாய் சிரித்துக் கொண்டனர்.


“உன் கண்ணைத்தான்டி முதல்ல பார்த்தேன்.‌.. ப்பா… இப்போ நினைச்சாலும் சிலிர்க்குது… மிரண்டு முழிச்ச கண்ணை சுத்தி விரிச்சு வச்ச மாதிரி அடர்த்தியான இந்த இமை முடிகள் அப்படியே என்னை காந்தமா கட்டி இழுத்துச்சு… சத்தியமா அப்பவே நான் விழுந்துட்டேன்டி… அதுதான் நிஜம்… அதுக்கப்புறம் உன்னோட ஒவ்வொரு அசைவையும் ரசிக்க ஆரம்பிச்சேன்… இத்தனை வருஷ காலத்துல எத்தனையோ பொண்ணுங்களை கடந்து வந்திருக்கேன்… நெருங்கினதில்ல… விச்சு மட்டும்தான் நெருக்கமான தோழி… மத்தபடி பொண்ணுங்களை நின்னு நிதானமா ரசிச்சதில்ல… அப்படி எந்த பொண்ணும் பெருசா என்னை அட்ராக்ட் பண்ணினதில்ல… உன் விஷயத்துல எல்லாமே உல்டாவா மாறிடுச்சு… என்னை மொத்தமா சரிச்சுட்டடி சதிகாரி…” 


ஆசையாய் பல்லைக் கடித்து அவளை அழுத்தமாய் அணைத்து கழுத்தில் ஆழ்ந்து முத்தமிட்டான்… அவன் கொண்ட காதலின் அச்சாரமாய் அந்த முத்திரை.


“ம்… அப்புறம்…” அவன் தன்னிடம் விழுந்த கதையைக் கேட்க அவளுக்கோ கட்டுக்கடங்காத ஆர்வம்.


“அப்புறம் என்ன… எனக்குள்ள நிறைய சுயபரிசோதனை… ஏத்துக்கவே முடியல…ஆனா நீ என்ன பண்ணினாலும் பிடிச்சது… என்னை நானே திட்டி திட்டி சமாதானப்படுத்தினாலும் மனசு முழுசா உன்னையே துரத்துச்சு… நீயும் முகிலும் சண்டைகளை தாண்டி ரொம்ப இன்டிமேட்டா அண்டர்ஸ்டாண்டிங்கா ரொம்ப அட்டாச்மென்ட்டா இருக்கிறதை பார்த்து அடி வயித்துல எத்தனை பர்னர் முளைச்சது தெரியுமா… அவன்மேல அவ்வளவு பொறாமையா இருக்கும்… அவனுக்கு உன் மேல பாசம் மட்டும்தான்னு எனக்கு நல்லா தெரியும்… இருந்தாலும் நீ அவன்கிட்ட நெருக்கமா ஃப்ரீயா இருக்கிறதை பார்க்கும்போது உன்னை தூக்கி தோள்ல போட்டு ஓடிப் போயிரலாமான்னு கூட தோணுச்சு…” தோள்களை குலுக்கி சிரித்தவனை அடப்பாவி என்பது போல் மீண்டும் கண்களை விரித்து பார்த்தாள் பூச்செண்டு. 


“முழியாங்கண்ணி… நீ மொறச்சாலும் ரசிச்சேன்… சிரிச்சாலும் ரசிச்சேன்… மொத்தத்துல நான் என் கண்ட்ரோல்லயே இல்லடி… என் மாமன்னா எனக்கு உசுருன்னு என்கிட்ட நீ சொன்னப்போ மனசுக்குள்ள ஏதோ முறிஞ்சு விழுந்த மாதிரி அப்படி ஒரு வலி… உனக்கு முகில் மேல காதல் இருக்குன்னு நானும் அவனை மாதிரி தப்பாதான் நினைச்சுட்டேன்… ரொம்ப ஃபீல் பண்ணினேன்டி…” அன்று மனதில் தோன்றிய வலி இன்று கண்களில் பிரதிபலிக்க அவனை கன்னத்தோடு பற்றி இரு கண்களிலும் முத்தமிட்டு சிலிர்க்கச் செய்தாள் பெண்ணவள்.


“அப்புறம் மாமு…” அவன் நெற்றியோடு நெற்றி முட்டிக் கொண்டாள்.


“அப்புறம் என்ன… மடமடன்னு  உங்களுக்கு கல்யாணம் ஏற்பாடாச்சு… நிதர்சனம் புரிஞ்சு மீராவுக்காக இந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு நினைச்சேன்… ஒரு கட்டத்தில எல்லாமே கைமீறி போயி எனக்கே தெரியாம எனக்குள்ள உருவான காதல் மொத்தமா என் கைவிட்டு போகப்போகுதுன்னு மனசெல்லாம் முள்ளு குத்தின மாதிரி வலியோடதான் இருந்தேன். அப்புறம் திரும்பவும் ஒரு ட்விஸ்ட்… உன் மாமனோட திருவிளையாடல் தெரிஞ்சதுக்கு அப்புறம் கல்யாணத்தை நிறுத்தியே ஆகணும்னு முடிவு செஞ்சேன். உன்னை நேரில் மீட் பண்ணி எல்லா விஷயத்தையும் சொல்லி நீயே இந்த கல்யாணத்தை நிறுத்துற மாதிரி பண்ணனும்னு தான் நினைச்சேன்… ஆனா மேட்டர் உன் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு… தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு தயாராகிட்டாங்க… அப்போ தடாலடியா நான் எடுத்த முடிவுதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு…” 


“முகிலோட காதலை மட்டும் இல்ல என்னோட காதலையும் காப்பாத்திக்க சுயநலம் கலந்த பொதுநலம்தான் அது. அவனுக்காக 100 சதவிகிதம் நான் தியாகம் பண்ணல… எனக்கு பிடிச்சவளையும் என் மனைவி ஆக்கிக்க எனக்கு கிடைச்ச சந்தர்ப்பமா உபயோகிச்சுக்கிட்டேன். என்ன பெரிய வேதனைனா உன் மனசுல முகில் இருக்கானேன்னு ஒரு ஆதங்கம் இருந்தது. அதை எப்படி போக்கி அந்த இடத்துல என்னை கொண்டு வரப் போறேன்னு பெரிய சேலஞ்ச் கண் முன்னே இருந்தது. அவன் இன்னொருத்தனோட உடைமைன்னு தெரிஞ்சு நீ மனசை மாத்திப்பேன்னு நம்பிக்கை இருந்தாலும் என்மேல அளவு கடந்த கோபத்தில இருக்கிற நீ என்னை மனப்பூர்வமா ஏத்துப்பியான்னு பெரிய நெருடல் இருந்துட்டேதான் இருந்தது…” அவன் பேசுவதையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பூச்செண்டு.


“உன் மனசு காலியாதான் இருக்கு… அங்கே முகில் இல்லைன்னு தெரிஞ்ச அந்த நொடி என்னோட பொருள் எனக்கு மட்டுமே சொந்தம்னு மனசு சத்தம் போட்டு சொன்ன அந்த தருணம் நான் எப்படி ஃபீல் பண்ணேன் தெரியுமா… அதை வார்த்தையால சொல்ல முடியாது பொக்கே…” நெகிழ்ச்சியுடன் கூறி அவளது தோளில் புதைந்து கொண்டான். அவன் பிடரி முடிக்குள் விரல் கோர்த்து மெல்ல அழுத்தி கொடுத்து குனிந்து அவன் காது மடலில் முத்தமிட்டாள். சிலிர்ப்புடன் அவளை இன்னும் இறுக்கமாய் அணைத்தான்.


“ஆனா நான்தான் உங்களை புரிஞ்சுக்காம ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டேன் மாமு.. உங்களோட பொறுமையை சோதிச்சுப் பார்த்தேனே… ஹப்பா… அன்னைக்கு என்ன ஒரு கோபம்… அப்படியே நடுங்கிப் போயிட்டேன் தெரியுமா…” 


தன் தலையை நிமிர்த்தி அவளை சங்கடமாய் பார்த்தவன் “நானுமே ரொம்ப ஹார்ஷா நடந்துக்கிட்டேன்டி… எனக்கு அவ்ளோ எக்ஸ்ட்ரீமா கோபம் வராது… பொருள் எல்லாம் தூக்கிப் போட்டு உடைக்கிற அளவுக்கு கண்ட்ரோல் இல்லாம நடந்துக்குற ஆள் இல்ல… ஆனா உன் விஷயத்துல மட்டும் எக்ஸ்ட்ரீமாதான்டி இருக்கேன்…” என்றவன் “எல்லா விஷயத்துலயும்…” கிசுகிசுப்பாய் அவள் காதில் கூறியிருந்தான். 


“நீ என்னை புரிஞ்சுக்கலையேன்னு ஆதங்கம்… புரிஞ்சுக்கணும்னு வெறி… உன் காதல் எனக்கு கிடைக்கணும்னு தவிப்பு... அதெல்லாம்தான் அப்படி ஒரு கோபத்தை உருவாக்கிடுச்சு…”


“ஐ லவ் யூ மாமு…” கண்கள் முழுக்க காதலை தேக்கி அவள் கூறி இருக்க அவள் முகம் முழுக்க ஆசை முத்தங்கள் இட்டான்.


“இந்த வார்த்தை உன் வாயில வருமானு எத்தனை ஏங்கிக் கிடந்தேன் தெரியுமாடி… சரி… நீ எப்போதான் என்கிட்ட இம்ப்ரஸ் ஆன… தாலி கட்டிட்டான்… வேற வழி இல்ல… வாழ்ந்துதான் ஆகணும்னு கொஞ்சம் கொஞ்சமா உன்னை நீயே வலுக்கட்டாயமா மாத்திக்கிட்டியா…” கேட்கும்போதே அவனது குரலில் ஒருவித தவிப்பு.


அவன் முகத்தை கையில் தாங்கி “காதல் வலுக்கட்டாயமா வருமா மாமு…” அவன் கண்ணோடு கண் பார்த்தபடி கேட்டாள். இல்லை என்று தலையசைத்தான்.


“உண்மையை சொல்லணும்னா நானுமே நம்முடைய முதல் சந்திப்புல கொஞ்சமா ஜெர்க் ஆயிட்டேன் மாமு… நெருக்கமா ஒரு புது ஆம்பளையோட முகம்… எதிர்பாராத விபத்தா இருந்தாலும் உங்க மடியில உட்கார்ந்துக்கிட்டே உங்க முகத்தை பார்த்த அந்த சில நொடிகள்… அப்போ மிரட்சியா இருந்தாலும் அன்னைக்கு பூரா ரொம்ப குறுகுறுப்பா இருந்தது… ஏதோ வித்தியாசமா மனசுக்குள்ள ஒரு படபடப்பு… அப்போ சரியா அர்த்தம் புரியல… அப்புறம் என்னை அறியாம நானும் உங்களை கள்ளத்தனமா பார்க்க ஆரம்பிச்சேன்… உங்ககிட்ட எல்லா விஷயமும் எனக்கு பிடிக்க ஆரம்பிச்சது. குறிப்பா நிதானமான உங்க பேச்சு… மெச்சூர்டான உங்க நடவடிக்கை… எல்லாமே உங்க மேல இரசனையா திரும்பிச்சு…” அவள் ரசனையாய் கூற நம்ப முடியாத ஆச்சரியத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் தரணி.


“உண்மையாவாடி… இல்ல என்னை சமாதானப்படுத்துறதுக்காக சொல்றியா…” விலகாத ஆச்சரியத்துடன் கேட்டான்.


“ப்ராமிஸ் மாமு… ஆனா எனக்கு அப்போ சரியா அர்த்தம் புரியல… உங்க அழகையும் ரசிச்சேன்… இது ஏதோ வயசுக்கே உண்டான ஈர்ப்புன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன்… அதை தாண்டி என்னால யோசிக்க முடியல… அதுக்குள்ளதான் அம்மாச்சி கதையவே திருப்பிப் போட்டு கால்ல சுடுதண்ணி ஊத்தின மாதிரி கல்யாண ஏற்பாட்டை பண்ண வச்சிருச்சே… அப்புறம் எங்கே இதையெல்லாம் யோசிக்கிறது… ஆனாலும் ஒரு முடிவோடதான் இருந்தேன்… எந்த சூழ்நிலையிலேயும் முனி மாமா கட்டுற தாலியை மட்டும் ஏத்துக்கவே கூடாதுன்னு. என்ன நடந்தாலும் பரவாயில்லை தாலி கட்ட விடாம தடுத்திரணும்னு நினைச்சேன். ஆனா தலைவர்தான் என் தலையெழுத்தையே மாத்திட்டீங்களே…” செல்லமாய் அவன் தலையில் குட்டினாள்.


“உனக்கும் என் மேல இன்ட்ரஸ்ட் இருந்துச்சுல்ல… அப்புறம் ஏன்டி நான் தாலி கட்டினதை ஏத்துக்கல…? அப்படி ஒரு வெறுப்பை உன் முகத்தில பார்த்தேன்… அந்த செகண்ட் செத்தே போயிட்டேன் தெரியுமா…” கொஞ்சமாய் முறுக்கிக் கொண்டான்.


“பின்னே… நீங்க பண்ணினது ரொம்ப சரியா… உங்க மனசுல நான் இருந்தேன்னு எனக்கு எப்படி தெரியும்…? நான் எல்லாருக்கும் ஆப்ஷனா மாறிட்டேன்னு ரொம்ப உடைஞ்சு போயிட்டேன் மாமு… உங்க ஃப்ரண்டை காப்பாத்துறதுக்காக நீங்களும் குடும்ப கவுரவத்தை காப்பாத்துறதுக்காக எங்க வீட்டு ஆளுங்களும் என்னை பொம்மையா நினைச்சுட்டாங்களே என் உணர்வுகளை யாரும் புரிஞ்சுக்கலையேன்னு மனசெல்லாம் வலி… ஆப்ஷனா உங்க மனைவியா வாழ மனசு இடம் கொடுக்கல மாமு… உங்களை பத்தியும் பெருசா எனக்கு எதுவும் தெரியாதே... என்னோட இடத்தில இருந்து யோசிச்சு பார்த்தா என் வேதனை என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்…” அவள் முகத்திலும் அன்றைய வலி தெரிந்தது. 


அவளை பிடரியோடு இழுத்து நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவன் “சாரிடி…” என்றான் அனைத்திற்குமாக.


“ஆனா ஒன்னு… கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் புருஷன்னு உரிமை வந்ததுக்கு அப்புறம் உங்களுக்கே தெரியாம உங்களை சைட் அடிச்சிட்டுதான் இருந்தேன்…” ஒற்றைக் கண் மூடி சிரிப்புடன் கூறியவளை ஆசை மேலிடப் பார்த்தான் தரணி.


“உங்களுக்கு என்னவெல்லாம் சாப்பிட பிடிக்கும்னு ஒரு தடவை என் அம்மாகிட்ட சொன்னீங்க… அதை எல்லாம் அப்படியே மனசுல வாங்கி வச்சிருந்து இங்கே வந்ததுக்கு அப்புறம் பார்த்து பார்த்து உங்களுக்கு சமையல் பண்ணிக் கொடுத்தேன் தெரியுமா…” புருவம் உயர்த்தி கூறியவளின் மூக்கில் அழுத்தமாய் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளியிட்டான்.


“அப்புறம் அடிக்கடி சண்டை போட்டதாலதான் நம்முடைய காதலை முழுசா நாமளே உணர ஆரம்பிச்சோம்…”


“நாம சண்டையாடி போட்டோம்… சண்டை போடுற மாதிரி ரொமான்ஸ்தானே பண்ணினோம்…” அவன் குறும்புடன் கூற அவள் வெட்கத்துடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.


“என் பேரை அவ்வளவு பிடிச்சிருக்குன்னு சொல்றீங்க… ஆனா பொக்கேன்னுதானே கூப்பிடுறீங்க…” செல்லமாய் மூக்கை சுருக்கினாள் பூச்செண்டு.


“பொக்கேன்னா என்ன…? பூச்செண்டுதானே… என் பொண்டாட்டியை நான் மட்டுமே உரிமையா ஸ்பெஷலா கூப்பிடணும்னுதான் அப்படியே கூப்பிட ஆரம்பிச்சேன்… ஏன்டி உனக்கு பிடிக்கலையா…”


“இப்போதானே விளக்கம் சொல்லி இருக்கீங்க… இனி ரொம்ப பிடிக்கும்…”


இருவரும் மனம் விட்டு நிறைய பேசி இன்னும் காதல் கூடிப் போனதால் அன்றைய கலவியில் இன்னும் கூடுதலாய் புத்துணர்வு பெற்றனர்… ஒருவருக்குள் ஒருவர் முழுதாய் மூழ்கிப் போயினர்… அன்றைய நாள் அழகாய் கழிந்து அடுத்த சில நாட்களில்தான் அழகு நிலையம் திறக்கப்பட்டது… பூச்செண்டின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.


Leave a comment


Comments


Related Post