இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 11) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 03-05-2024

Total Views: 17811

உனக்கென்றே உயிர் கொண்டேன் 11

வேலை முடிந்து பிஜி அறைக்கு வந்த பூர்வியின் மனம் சோர்ந்து இருந்தது. அவளால் தெய்வானையின் பேச்சினை சகித்துக்கொள்ள முடியவில்லை.

அலுவலகத்தில் வேலையின் காரணமாக மறந்திருந்தது அறைக்கு வந்ததும் மனதை கனக்க செய்தது.

உடனே மணிக்கு அழைத்து விட்டாள்.

"மாமா." சொல்லும்போதே அவளின் குரல் உடைந்துவிட்டது.

"பூர்விம்மா... என்னடா?"

அவரின் கனிவான குரலை கேட்டவளுக்கு, தான் சொல்லுவது நிச்சயம் வருத்துமென்று நினைத்து தொண்டையை சரி செய்து...

"சாப்டிங்கலா மாமா?" எனக் கேட்டாள்.

"பூர்வி கண்ணு ஏதோ மறைக்கிறாங்க?" சரியாகக் கண்டு கொண்டார் மணி.

அதற்கு மேல் அவளால் முடியவில்லை.

அனைத்தையும் சொல்லிவிட்டாள். தமிழ் பேசியது உட்பட.

"வரவர ரொம்ப பன்றாங்க மாமா. அவங்க மனசுல வர்ஷினியை தமிழுக்கு கொடுக்கும் எண்ணம் இருக்கு போல" என்றவள், "நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க மாமா. எங்க அப்பாவுக்கு தங்கச்சியா இருக்கும்போதே அம்மாவை மரியாதை இல்லாமல் நடத்துறாங்க. இதில் தமிழுக்கு மாமியார் ஆகிட்டால்? வீட்டோட மொத்த நிம்மதியும் போயிடும். தேவையில்லாமல் வர்ஷினி மனசில் ஆசையை உண்டாக்குறாங்க. தமிழ் எப்பவும் இதுக்கு சம்மதிக்க மாட்டான். வர்ஷினியை மட்டுமாவது உங்களோட கூட்டிட்டு போகலாமே!" என்று நேற்று தான் பார்த்ததை கூறினாள்.

அஸ்வின் பெண் பார்க்க வந்த போது, வந்திருந்தவர்கள் முன்பே தமிழ் தெய்வானையை மதிக்காது பேசியது, அவருள் சிறு பயத்தை உண்டாக்கியிருந்து.

எப்படி இருந்தாலும் தன் அண்ணன், தங்கச்சி மகளைத்தான் தன்னுடைய மகனக்கு கட்டிக்கொடுக்க நினைப்பார். தமிழ் சம்மதிக்காவிட்டாலும், தேவராஜ்ஜை வைத்து கல்யாணத்தை நடத்திடலாமென தெய்வானை நினைத்திருக்க... தமிழ் தன்னை ஒரு ஆளாகக்கூட மதிப்பதில்லை என்பதில் வேறு விதமாகத்தான் தமிழை தன் வழிக்கு கொண்டு வரணும் என நினைத்தார். இறுதியில் அவருக்குத் தோன்றிய வழி இதுதான்.

நேற்று மாலை தமிழின் பெயரை பச்சை குத்திக்க சொல்லி வர்ஷினியின் அத்தனை தர்க்கம் செய்தார்.

"ஒரே வீட்டில இருக்கீங்கன்னு தான் பேரு, அந்தப்பய உன் முகத்தைக்கூட பார்க்கிறது இல்லை. நீயும் காடு மலைன்னு சுத்தி நாளை கழிக்கிற. பூர்விக்கு கல்யாணம் முடிஞ்சிட்டால், உன் பேச்சுத்தான் எடுப்பாங்க. நிச்சயம் தமிழு ஒத்துகிடமாட்டான். அவனை இப்படித்தான் சம்மதிக்க வைக்கணும். அவன் பெயரை பச்சைக் குதிக்கிட்டு அவன் தான் வாழ்க்கைன்னு ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டன்னா மத்ததை என் அண்ணனே பார்த்துக்கிடும்." மகளுக்கு நல்லதென நினைத்து தவறான பாதையில் பயணிக்க சொல்லிக் கொடுக்கிறோம் என்கிற சிறு உறுத்து கூட அவரிடமில்லை.

வர்ஷினி "என்னால் முடியவே முடியாது" என்று அழுது கரைய...

"அப்போ அவனை காதல் பண்றன்னு பின்னாடியாவது சுத்தி தொலை" என்று தலையிலே நங்கென்று கொட்டியிருந்தார்.

தற்செயலாக அவர்களின் அறையை கடக்கும் போது பூர்வியால் கேட்க நேர்ந்தது. அதுவும் தமிழின் பெயர் அடிபடவே பாதி திறந்திருந்த கதவின் வழி எட்டிப்பார்த்திருந்தாள்.

மணியிடம் சொல்லி முடித்த பூர்வி,

"நேத்து தமிழ்... இன்னைக்கு நான். இதுதான் இவங்க வேலையா மாமா. என்னை பேசினாங்கன்னே அவ்வளவு கோபம். இதில் இதுவும் தெரிந்தால், தமிழ் சும்மா விடமாட்டான். குடும்பத்துக்குள்ள சண்டை, மனஸ்தாபம் தான் அதிகரிக்கும். அதான் தமிழுகிட்ட சொல்லல. ஆனால் ரொம்ப நாளைக்கு அவன்கிட்ட என்னால் சொல்லாமல் இருக்க முடியாது" என்றாள்.

"தெய்வானையை வைத்துதான் வர்ஷினியை முடிவு பண்றீங்களா பூர்வி? வர்ஷினி எனக்கும் மகள்" என்றார்.

"நீங்க கேட்கும் அர்த்தம் புரியுது மாமா" என்ற பூர்வி, "தமிழுக்கு வேறொரு பொண்ணு மேல விருப்பமிருக்கும்போது வர்ஷினி மனசில் வேண்டாத ஆசை உருவாக வேண்டாமே" என்று உண்மையையே சொல்லிவிட்டாள்.

எங்கு தெய்வானை போல் மணிக்கும் அப்படியொரு ஆசை இருந்திடுமோ? மணி புரிந்துகொள்வார் என்று சொல்லிவிட்டாள்.

"எனக்கு என் பொண்ணுகிட்ட கிடைக்காத பாசம்... உங்க ரெண்டு பேருகிட்ட இருந்துதான் கிடைக்குது. சொல்லப்போனால் உங்களை என் பசங்களாத்தான் பார்க்கிறேன். அப்படி இருக்கும்போது உங்க ஆசைக்கு எப்பவும் நான் குறுக்க வரமாட்டேன்" என்றவர், "கலாம் ரொம்ப ஆகிடுச்சு. இருந்தாலும் என் பிள்ளைங்களுக்காக இப்போ செய்யுறேன்" என்று வைத்தவர், தேவராஜிற்கு அழைத்து "நாளை முக்கிய விஷயம் பேச வீட்டிற்கு வருகிறேன்" என்றார்.

அப்போது தேவராஜ்ஜும் அன்று வீட்டில் நடந்ததை வருத்தத்தோடு சொல்லியதோடு,

"இப்போவாவது ஒரு முடிவுக்கு வாங்க மாப்பிள்ளை. வேணாம் அப்படின்னா, முழுசா ஒதுக்கியாவது வையுங்க" எனக் கூறினார்.

என்ன தான் தங்கையாக இருந்தாலும், அவரால் தன் குடும்பம்... தன் பிள்ளைகளின் நிம்மதி பறிபோகிறது எனும்போது எப்படி அமைதி காக்க முடியும்.

மணியிடம் பேசி வைத்த பின்னர் தான் நினைவு வந்தவராக மீண்டும் அழைத்து, நாளை அஸ்வின் வீட்டிற்கு செல்லவிருப்பதைக் கூறி அவரையும் முறையாக அழைத்து அழைப்பைத் துண்டித்தார்.

"ரொம்ப நேர்மாவுதுங்க. வேலையே கிடந்தாலும், இவ்வளவு நேரம் செண்டு வரமாட்டாங்க... நீங்க போனை போடுங்க மொத" என்றார் தனம்.

தமிழுக்கு அழைத்தவர் அவன் எடுக்கவில்லை என்றதும், "இன்னும் கோவம் குறையில போலிருக்கே லட்சுமி" என்று வருந்தினார்.

கணவரின் கையிலிருந்த அலைப்பேசியை வாங்கிய தனம், பூர்விக்கு அழைத்திட... அவள் இவர்கள் இப்படித்தானே என்று ஓரளவு தெளிவுக்கு வந்திருந்தால் அழைப்பை ஏற்றிருந்தாள்.

பூர்வியோ தனத்தின் குரல் கேட்டதும் எதுவுமே நடவாததைப்போல் சாதாரணமாகப் பேசிட... தனத்திற்கு கண்கள் கலங்கிவிட்டது.

"அம்மாவை மன்னிச்சிடு தங்கம்" என்றவருக்கு அதைப்பற்றி மேற்கொண்டு என்ன பேசவென்று தெரியவில்லை.

பூர்வி மௌனமாகி விட்டாள்.

'பெற்ற மகளிடம் மன்னிப்பு கேட்பதற்கு உறவு எனும் பெயரில் ஆட்டி வைப்பவர்களை எதிர்த்து நிற்கலாமே!' 

வாய் வரை வந்துவிட்ட வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.

"என்னம்மா இந்நேரம்?"

"காலையில் உன்னை கூட்டிக்கிட்டு போனவன் இன்னும் வரல பூர்வி. கேரட் தோட்டத்துலே படுத்துட்டான்" என்றார் கவலையாக.

"கோபம் குறைந்ததும் வந்திடுவாம்மா."

"குறையாது நினைக்கிறேன்" என்ற தனம், மதியம் தமிழ் தேவராஜ்ஜிடம் பேசியதை சொன்னதோடு, "அப்பா இன்னும் சாப்பிடமால் இருக்கார் பூர்வி" என்றார்.

"நான் பேசுறேன் ம்மா" என்ற பூர்வி தனத்தின் அழைப்பை துண்டித்து தமிழுக்கு அழைத்தாள்.

பரணையின் மீது உறங்கியிருந்த தமிழ், அலைபேசியின் சத்தத்தில் தூக்கம் கலைந்து செவி மடுத்தான்.

"எங்கேயிருக்க தமிழ்?"

"தோட்டத்தில் பூர்வி. சாப்பிட்டியா?"

"ம்ம்ம்... ஆச்சு. நீயேன் இன்னும் வீட்டுக்கு போகாமல்  இருக்க?"

"போகணும்."

"போடா... அப்பா சாப்பிடாமல் இருக்காங்க. அம்மா போன் பண்ணாங்க" என்றாள்.

"பண்றதெல்லாம் பண்ணுவாங்க" என்று நிறுத்தியவன், "ம்ப்ச்... போங்கக்கா! இதை பேசி என்னாகப்போகுது. பார்த்து பார்த்து இப்போலாம் சலிப்பா வருது" என்றான்.

"பீல் பண்ணாத தமிழ். அப்பாவுக்கு தங்கச்சி உறவு, அம்மாவுக்கு அண்ணிங்கிற உறவு. விட்டுட முடியல... பார்த்துக்கலாம் விடு. அதான் வெண்பா வந்து ஓடவிடுவாள் சொன்னியே..." என்று யாரைப்பற்றி பேசினால் தன் தம்பியின் மனம் இயல்பாகும் என்று அறிந்து பேசினாள்.

"டைவர்ட் பண்றீங்க..." மெலிதாக சிரித்தான்.

"டைவர்ட் ஆகிட்டியா நீ?" எனக் கேட்டு,

"பாருடா... அவங்கள சொன்னதும் எல்லாம் மறந்து சிரிப்புக்கூட வருதே" என்று கிண்டல் செய்தாள் பூர்வி.

"அச்சோவ் அக்கா..."

"உன்னை கண்ட்ரோல் பண்ண ஒத்த பெயர் போதும் போலவே" என்று பூர்வி சிரித்திட...

"பூர்வி" என்று இழுத்தான் தமிழ்.

"ஓகே... ஓகே... நான் வெண்பா பற்றி பேசல" என்று சிரிப்போடு கூறிய பூர்வி, "வீட்டுக்கு போடா" என்று வைத்திட்டாள்.

'என்ன பன்றான்னு தெரியலையே! ஒரு  வாரமா தினமும் கால் பண்ணாள். இன்னைக்கு ஒரு மெசேஜ் கூட இல்லை. காலையில் குட்மார்னிங் வந்ததோட சரி' என நினைத்தவன், கூப்பிடலாமா? வேண்டாமா? என்று அலைப்பேசியில் வெண்பாவின் எண்ணை திறந்து வைத்து மனதிற்குள் சடுகுடு ஆடினான்.

"வீட்டிற்கு போய் பேசுவோம்" என்றவன் கீழிறங்குவதற்காக பரண் மீது எழுந்து நின்றிட...

அலைப்பேசி ஒலித்தது.

காணொளி அழைப்பு. அவனவளிடமிருந்து.

தமிழுக்கு சட்டென்று முகத்தில் ஒளி கூடி... இதழ்கள் நீண்டு விரிந்தது.

முழு அழைப்பும் முடியும் தருவாயில் ஏற்றிருந்தான்.

"மேடம் ரொம்ப பிஸி போல?" கேட்டவன் காலினை தொங்க போட்டவனாக பரண் மீது அமர்ந்தான்.

"எதிர்பார்த்தீங்களா?"

அவள் தன்னை கண்டு கொண்டாள்... தன்னை புரிகிறது என்பதில் அத்தனை மகிழ்வு அவனுக்கு.

"நீங்க கால் பண்ணியிருக்கலாமே?"

"தமிழுக்கு மொழி பண்றதில் குட்டி சந்தோஷம்" என்றவன், அவள் தன்னை கூர்ந்து நோக்குவதில் சுதாரித்தவனாக... "இன்னும் தூங்காமலிருக்க. வழக்கமா லேட் நைட் கால் பண்ணுவதுக்கு முன்னாடி கேட்கும் தூங்கிட்டிங்களா மெசேஜ் பண்ணாமலே இன்னைக்கு கால் பண்ணியிருக்க. வாட் இஸ் த மேட்டர் ஜூனியர்?" எனக் கேட்டான்.

"நீங்க எங்க இருக்கீங்க?"

தமிழ் பின் காமிரா வைத்து அவ்விடத்தை சுற்றி காண்பித்தான்.

இரவு விளக்குகள் ஆங்காங்கே ஒளிர்ந்து கொண்டிருந்ததால் அவளுக்கு காட்சிகள் நன்கு தெரிந்தன.

"இந்நேரம் வரை தோட்டத்தில் இருக்கீங்க. வீட்டுக்கு போகலையா?"

"போகணும்." வீடு என்றதும் அவனது ஸ்ருதி குறைந்தது.

"அப்போ இன்னும் சாப்பிடலைய சீனியர்?"

அவனோ உதட்டை மட்டும் இல்லையென்று பிதுக்கினான்.

"ஏன்?"

"ஊட்டிவிட ஆளில்லை."

"அப்போ நான் வரட்டுமா?"

தமிழ் அவள் கேட்டதற்கு எதாவது சொல்ல வேண்டுமேயென சொல்ல, வெண்பா ஏதோ நினைவில் பதில் கொடுத்து அதன் பொருள் உணர்ந்ததும் பட்டென்று ஒற்றை கண்ணை மூடி நாக்கை கடித்துக்கொண்டாள்.

அவளின் அம்முகத்தை ரசித்தவன்...

"வாங்களேன் ஜூனியர்" என்று சொல்லியிருந்தான்.

இருவரும் கல்லூரி விடுதி மெஸ்ஸில் சில நேரங்களில் ஒரே தட்டில் பகிர்ந்து உண்டிருக்கின்றனர். அப்போது தெரியாத ஒன்று இப்போதைய பேச்சில் தெரிய, வெண்பாவிடம் சிறு தடுமாற்றம்.

அதனை உணர்ந்த தமிழ் அவளை சகஜமாக்கும் பொருட்டு,

"எதுக்கு கால் பண்ண?" எனக் கேட்டு சுயம் மீட்டிருந்தான்.

நினைவு வந்து நெற்றியில் தட்டியவளாக,

"உங்ககிட்ட பேசினாலே எல்லாம் மறந்து போகுது சீனியர்" என்றதோடு, "மெஷின் டையணமிக்ஸ் ஷார்ட்டா எக்ஸ்பிலைன் பண்ண முடியுமா?" எனக் கேட்டாள்.

"பாருடா காலேஜ் டாப்பர் என்கிட்ட கேட்கிறாங்க?" கிண்டல் செய்தான்.

"எவ்ளோ படிச்சாலும் புரிய மாட்டேங்குது சீனியர். இன்னைக்கு முழுக்க மல்லுகட்டி பார்த்துட்டேன். நிறைய இடம் மண்டையை தெறிக்க விடுது. இன்டர்னல் நீங்கதானே சொல்லிக்கொடுத்தீங்க. இப்பவும் சொல்லிக் கொடுங்க" என்றாள்.

"ஓகே... ஓகே... ரிலாக்ஸ்" என்ற தமிழ், "எந்தெந்த இடம் டவுட்ஸ்... கேளு!" என்றான்.

நேரத்தை பார்த்தவள், "நீங்க பர்ஸ்ட் வீட்டுக்கு போங்க. சாப்பிட்டு கால் பண்ணுங்க. வெயிட் பன்றேன்" என்றவள் அவன் எப்படியும் மறுப்பான் என்பதால் காலினை வேகமாக கட் செய்திருந்தாள்.

"சொல்லிக்கொடுக்க எனர்ஜி வேணுமே பாஸ்... ப்ளீஸ்... சாப்பிட்டு கால் பண்ணுங்க" என்று உடனடியாக மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

"ஊட்டிவிட வறீங்களா ஜூனியர்?" என்று தட்டச்சு செய்தவன் அனுப்பாது அழித்திருந்தான். அனுப்பினால் பதில் என்ன அனுப்பியிருப்பாள் என்று நினைத்து பின்னந்தலையில் தட்டிக்கொண்டான்.

தமிழ் வீடு வரும்போது நேரம் பதினொன்றை தொட்டு இருந்தது.

அவனுக்காக தேவராஜ் மற்றும் தனம் கூடத்திலேயே காத்திருந்தனர்.

'இவர்களிடம் தன் கோபம் எடுபடாது என்று தெரிந்தும் தான் ஏன் கோபத்தை காட்டிட வேண்டும்' என நினைத்தவன், தன்னை இயல்பாகக் காட்டிகொள்பவனாக...

"என்ன லட்சுமி வாசல் கதவை மூடாமல் உட்கார்ந்திருக்க?" என்றபடி உள் நுழைந்து, "சாப்பிட்டிங்களாப்பா?" எனக் கேட்டான்.

மகனை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்த தேவராஜ்...

"தமிழு" என்று ஆரம்பிக்க...

"ப்பா ப்ளீஸ்... இப்போ வேண்டாம். அவங்களைப்பற்றி பேசினால் நமக்குள்ள வீண் மனவருத்தம் வருது. விட்டுடலாம்" என்றவன் கிச்சன் சென்று கையை கழுவி வந்து உணவு மேசை இருக்கையில் அமர்ந்தான்.

அப்போது வர்ஷினி அங்கு வந்தாள்.

"என்னம்மா நீயின்னும் தூங்கலையா?" என்றபடி தமிழின் அடுத்த இருக்கையில் அமர்ந்தார்.

"அது வந்து மாமா..." தூங்கிக்கொண்டிருந்த தன்னை தமிழ் வந்துவிட்டான். உணவு பரிமாறு என்று எழுப்பி விரட்டிய தெய்வானையை மனதிற்குள் திட்டியவளாக என்ன சொல்வதென்று விழித்து நின்றாள்.

"கே டிராமா பார்த்திட்டு இருந்திருப்பாள் ப்பா. அதான் என்ன சொல்றதுன்னு முழிக்கிறா" என்றான் தமிழு.

'ம்க்கும்... நாசமாப்போச்சு. இந்த தெய்வானைகிட்ட அது ஒண்ணுதான் குறை.' வர்ஷினி மனதில் அலுத்துக்கொண்டாள்.

"அந்த ரெண்டு பேப்பர் படிக்கிறியா? அப்ளை பண்ணியிருந்தால் இப்போ எழுதியிருக்கலாம்" என்ற தமிழை முறைத்தவள், "நான் தண்ணி குடிக்கத்தான் வந்தேன். ஆளை விடுங்க. எப்போ பாரு படி படின்னு" என்று குவலையிலிருந்த நீரை எடுத்து ஒரே மடக்கில் குடித்து முடித்தவள் வேகமாக சென்றுவிட்டாள்.

"சூடு பண்ணி கொண்டு வரேன் தமிழு" என்று தனம் சொல்ல... "அப்பாக்கு வேணுன்னா சூடு பண்ணிக்கொடுங்கம்மா. எனக்கு இதுவே போதும்" என்ற தமிழ், தட்டில் இரண்டு சப்பாத்தி, காய்கறி குருமா, முட்டை பொடிமாஸ் ஆகியவற்றை தானே எடுத்து வைத்துக்கொண்டான்.

அலைப்பேசியை எடுத்து தன் தட்டினை போட்டோ எடுத்தவன், தேவராஜ் பார்த்திருக்கவே வெண்பாவுக்கு அனுப்பி வைத்தான்.

"நான் வைக்கிறனே தமிழு." தனம் இடையிட...

"அப்பாவுக்கு வையுங்கம்மா. குடும்ப அரசியல் உணவு மேசையிலிருந்து தான் ஆரம்பிக்குது. கையிருக்குல... போட்டு சாப்பிடக்கூட முடியாதா?" எனக் கேட்டவன், "ம்ப்ச்... உங்ககிட்ட சொல்றது வீணென்று தெரிந்தும்... விடுங்கம்மா" என்று சாப்பிட ஆரம்பித்தான்.

தேவராஜ்ஜும் மௌனமாக உண்டு எழுந்தார்.

"நாளைக்கு காலையில ஒரு ஒன்பது மணிக்குலாம் பொள்ளாச்சியில இருக்குற மாதிரி கிளம்பிடுவோம் தமிழ்" என்றார்.

"யாரெல்லாம் வறாங்க?" கடைசி வரை உணவை வாயில் வைத்தவன், எழுந்து சென்று கை கழுவி வந்து துண்டில் கையை துடைத்தபடி வினவினான்.

"வர்ஷினி தவிர எல்லாரும். மாப்பிள்ளை இங்க வந்திடுவார்" என்றார்.

"ம்ம்" என்றவன், தனத்தை இருக்கையில் அமர்த்தி, உணவினை எடுத்து வைத்து, "சாப்பிடு லட்சுமி" என்று, அவர் உணவை வாயில் வைத்ததும் மேலேறிச் சென்றுவிட்டான்.

இலகுவான ஆடைக்கு மாறியவன் பால்கனி சென்று கூடை நாற்காலியில் அமர்ந்து புலனம் திறக்க...

"வெறுப்பேத்துறீங்க நீங்க!" என்று அவன் அனுப்பிய உணவு படத்திற்கு பதில் அனுப்பியிருந்தாள் வெண்பா.

சிரித்துக்கொண்டான்.

'எப்படித்தான் சின்ன சின்ன வார்த்தையில் கூட என்னை சிரிக்க வைக்கிறாளோ!' நினைத்த தமிழ், காணொளி அழைப்பு விடுக்க, முதல் ஒலியிலே ஏற்றிருந்தாள்.

"நல்லா நிறைய சாப்டிங்களா?"

தலையசைத்தவன் "அதென்னா நல்லா நிறைய...?" என்க,

"சும்மா" என்று அவள் கண்களை சிமிட்டி தோள் குலுக்கினாள்.

மொத்தமாக உருகிவிட்டான்.

"படுத்துறா ராட்சசி." முணுமுணுத்தான்.

"ஏதும் சொன்னீங்களா?"

"இல்லையே" என்றவன், "டவுட்ஸ் என்னன்னு சொல்லு?" எனக் கேட்டான்.

வெண்பாவும் சொல்லிட, பொறுமையாக விளக்கம் கொடுக்கத் துவங்கினான். அவளும் நடுநடுவே சந்தேகம் கேட்க, அவனும் அலட்டல் இல்லாது சொல்லிக் கொடுத்தான்.

தமிழ் அவளுக்கு புரிகிறதா என்று கேள்வி கேட்டு அவளை பதில் சொல்ல வைத்து என்றிருக்க... திடீரென வெண்பாவிடம் மௌனம்.

அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்னால் அலைப்பேசியை தான் நன்கு தெரியும்படி வைத்து பேப்பரில் எழுதியபடி அவளுக்கு கற்பித்துக் கொண்டிருந்தவன், சட்டென்று அவளிடம் தான் கேட்டதற்கு பதிலின்றி போக விழிகள் உயர்த்தி பார்த்தவன் தன்னவளின் பார்வையில் கட்டுண்டிருந்தான்.

இமைகள் சுருங்காது கண்களில் அப்பட்டமாக காதல் வழிய அவனையே பார்த்திருந்தாள். அவளின் விழிமொழியில் அவனை ரசிக்கும் பாவனை. கண்டுகொண்டவன் தன் நாணப்புன்னகையை இதழோரம் மறைத்தான்.

வெண்பாவின் நிஜம் உறைந்திருந்தது.

முன்னுச்சி கேசம் காற்றில் அலையாய் அசைந்தாட, பேனா பிடித்திருந்த விரலின் அசைவுக்கு ஊர்ந்திடும் அவனது கருவிழிகளில் தன்னை மொத்தம் தொலைத்திருந்தாள்.

'அவள் நிகழ் உலகம் இல்லை' என்பதை உணர்ந்தவன், அவளின் உறை நிலையில் தன் அகம் உறைந்தான்.

"மொழி..."

காதலாய் மெல்லொலியில் கசிந்து ஒலித்த தமிழின் குரலில்...

"யூ ஆர் மெல்டிங் மீ தமிழ்" என்று தன்னைப்போல் உள்ளத்து உணர்வை மொழிந்திருந்தாள் தமிழின் மொழி.

வெளியில் சீனியர், பாஸ் என்று சொல்லியிருந்தாலும், ஒருநாளும் அவனது பெயரை இந்த நான்கு வருடத்தில் அவள் சொல்லியதில்லை. அவன் கேட்டதில்லை.

மனமொழி விழியின் தேடலில் வாய் வழி வெளிவந்திருக்க...

தன்னவளின் மொழியில் கேட்ட தனது தமிழ் என்கிற பெயர் அவனுள் அத்தனை சுகமாய் இறங்கியது. அவள் சொல்லிய வரியின் பொருள் இதயத்தில் சுகராகம் மீட்டியது.







Leave a comment


Comments


Related Post