இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 06 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 03-05-2024

Total Views: 13883

அத்தியாயம் 06

வீட்டினுள் நுழைந்தவனின் கோப முகத்தினை பார்த்த லட்சுமி "டேய் திரு என்னடா இவ்வளவு கோபமா இருக்க. என்னாச்சு உனக்கு?" எனக் கேட்க,

"எனக்கென்ன? ஒன்னும் இல்லை" என்றான் திரு.

"உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது. மதினியை வேற வீட்டுக்கு உடனே கூட்டிட்டுப் போயிட்ட. ஏதாவது  பிரச்சனையா. மருமக நல்லா இருக்காள்ல"

"அவளுக்கென்ன நல்லாத்தான் இருக்கா. அவளால நான்தான் நல்லா இல்லை"

"புரியுற மாதிரி பேசுடா"

"அம்மா! எனக்கு அஞ்சுவைக் கல்யாணம் பண்ணிக்கணும்"

மெல்லமாய் சிரித்துக் கொண்ட லட்சுமி "டேய் உங்க கல்யாணம் நீங்க சின்ன புள்ளையாய் இருக்கும் போதே பேசி முடிவு பண்ணதுதான். இதுக்கு ஏன் கோபமா இருக்க? அண்ணன் மட்டும் இருந்திருந்தால் மேற்கொண்டு ஆக வேண்டியதை உடனே பேசியிருக்கலாம். எங்கே? அதுக்குத்தான் குடுப்பனை இல்லாமல் போயிடுச்சே" அந்த சிரிப்பு மாறி கண்கள் கலங்கத் தொடங்கியது.

"அம்மா! நீங்க வேற மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காதீங்க அம்மா. நடந்தது நடந்து போச்சு. மாமா எப்பவும் நம்ம கூடவே தான் இருப்பாங்க. அதை நினைச்சு வருத்தப் படாதீங்க"  

"சரி நீயேன் கோபமா இருந்த. நீதான் அவகூட இருக்கன்னு சொன்ன. திடீர்னு கிளம்பி வந்துட்ட. என்னாச்சு"

"அம்மா அவ கல்யாணத்துல விருப்பம் இல்லாத மாதிரி பேசுறாம்மா. அவளுக்கு என்னை பிடிக்காதாம்மா"

"அப்படின்னு உன்கிட்ட சொன்னாளா டா" லட்சுமிக்குமே இப்போது பயம் வந்துவிட்டது. 

"அப்படிச் சொல்லல. அவ ரொம்ப பயத்துல இருக்கா. அதை சரி பண்ண கல்யாணம் பண்ணலாம்னு சொன்னால் அவ எனக்கு அவகாசம் வேண்டும்னு கேட்குறா. அதைக் கூட விடுங்க. எப்போப் பார்த்தாலும் நான் செத்துடுவேன் அப்படிங்கிறா. என்னால அவ பேசுறதை எல்லாம் ஏத்துக்க முடியல அம்மா. அவ இல்லைன்னா எனக்குன்னு என்னம்மா இருக்கு"

சிறுவயதில் இருந்தே அவன் மனம் அறிந்த லட்சுமி இதமாக அவனிடம்
 "அவ ரொம்ப பயந்து போயிருக்கா திரு. சிவன் கோவிலுக்குப் போயிட்டு வந்தால் சரியாகிடும். அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு" என்றிட,

"அதுக்குப் பிறகு கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிடுவாளா?" என்றான் அவன்.

"கல்யாணம் கல்யாணம்னு ஏன்டா அவசரப்படுற. மாமா இறந்த உடனே எப்படி நாம கல்யாணம் பண்ணுறது. அது சரி வராது"

"அம்மா துக்க வீட்டுல உடனே ஒரு நல்லது நடத்திப் பார்க்கணும்னு சொல்லுவாங்கள்ல"

"சொல்லுவாங்கதான். இங்க நாம அஞ்சனாவோட நிலைமையை யோசிச்சுப் பார்க்கணும்ல டா‌. வருஷம் திரும்பியிருந்தால் நீ கேட்காமலே நான் மதினிகிட்ட பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருப்பேன். இங்க முப்பது கூட இன்னும் கழியல டா"

"அம்மா எனக்கென்னமோ அவ என்னை விட்டுப் போயிடுவாளோன்னு பயமா இருக்கு. இப்போ அவ எனக்கு இல்லைன்னா எப்பவும் அவ எனக்கு கிடைக்க மாட்டான்னு மனசு படபடன்னு அடிச்சுக்குது"

"திரு! எப்பவும் தெளிவா யோசிப்பயே இப்போ என்ன"

"அஞ்சனா விஷயத்துல என்னால தீர்க்கமா ஒரு முடிவு எடுக்க முடியல அம்மா"

"இப்போ என்ன பண்ணலாம்னு நினைக்குற"

"இப்பவே கல்யாணம் வச்சாலும் எனக்கு விருப்பம் தான் அம்மா. ஆனால் மொதல்ல அவ சரின்னு சொல்லணுமேம்மா. அம்மா கல்யாணத்துக்கு அவசரப்படுத்துறதால என்னைத் தப்பானவனா நினைச்சுப் பார்த்துடாதீங்க. நான் அவளை நல்லபடியா பார்த்துக்கணும்னு தான் உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். அவளை அப்படி பயங்கலந்த முகத்தோட பார்க்கவே முடியல அம்மா. எப்பவும் துறுதுறுன்னு இருப்பா. இப்படி இடிஞ்சு இருக்குறவ அவதானா அப்படின்னு எனக்கே சந்தேகமா இருக்கு. சிவன் கோவில் போயிட்டு வந்தப்பிறகு கல்யாண பேச்சை ஆரம்பிச்சுடுங்க" சொல்லிவிட்டு சென்றுவிட,

இந்த பையன் என்ன இப்படியெல்லாம் பேசிட்டு போறேன். இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என லட்சுமி நினைத்துக் கொண்டு அவனின் சாதகத்தினை தேடி எடுத்தாள்.

அறைக்குள் நுழைந்தவனோ, அஞ்சனாவின் வீட்டில் நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தான். ஏதோ தவறு நேரப் போவதாக அவன் மனதிற்குப் பட்டது. அஞ்சனாவோடு இருக்கும் தருணங்களில் எல்லாம் ஏதோ ஒன்று இடையூறாக வருவதை அவன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். மருத்துவமனையில் மருந்துக் குப்பி விழுந்து உடைந்தது, வீட்டில் பக்கத்து வீட்டு பெண்ணை எருமை துரத்தியது, அடுத்த கொஞ்ச நேரத்தில் பட்டென்று வாசற்கதவு அறைந்து சாத்தியது... இதையெல்லாம் யோசித்தவனுக்கு ஏதோ ஓர் அமானுஷ்யம் தங்களைச் சுற்றி இருக்கிறது என்றுணர்ந்தான். அதனால்தான் அவளும் பயப்படுகிறாள் என நினைத்தவன் அந்த பயத்தினைப் போக்க என்ன செய்வதென தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான். 

-------------------------------

திருக்கடையூர் வந்து சேர்ந்த சித்திர குப்தன் இயமனைத் தேடி அப்படியே சஞ்சாரம் செய்துக் கொண்டிருந்தான். அவன் சிந்தனைக்குள் இவ்வளவு அழுத்தமாக நாரதர் உரைக்கிறார் என்றால் மெய்யாக இருக்குமா? என்ற குழப்பம் அவனது வதனத்தில். பிரபு அப்படிப்பட்டவர் அல்ல என்றாலும் எதற்கும் நாமும் ஒரு முறை நேரில் சென்று கண்டுவிட வேண்டும் என்பதே ஓடியது.

அந்த ஊரின் வீதிகளில் வலம் வந்துக் கொண்டிருந்தவன் நாரதர் சொன்ன அஞ்சனாவின் வீட்டிற்கு முன்னதாக வந்து நிற்க, "இங்கென்ன செய்து கொண்டிருக்கிறாய் சித்திரகுப்தா. இதுவல்லவே உன் பணி" இயமனின் அதிகாரக் குரல் தடுத்து நிறுத்தியது.

திரும்பினால்.. இயமன் அதீத சினத்தோடு நின்றிருந்தான். உடனே நடுக்கத்துடன் "பணிகிறேன் பிரபு" என்றான் அவன் அவசரமாய்.

"பணிவதெல்லாம் இருக்கட்டும். இதென்ன புதிதாய் நீ பூலோகத்திற்கு வருகை தந்திருக்கிறாய். என்ன விடயம்"

"அது பிரபு.. வந்து"

"வந்ததால் தான் கேட்கிறேன் ஏது இவ்வளவு தூரமென்று"

"தங்களை காணவேண்டியே யான் வந்தேன்"

"என்னை காண இங்கு வரவேண்டிய அவசியம் என்ன வந்தது சித்திரகுப்தா"

"பிரபு..." சொல்ல வந்த விடயத்தை சொல்லாமல் தடுமாறி நிற்க "என்னை உளவு பார்க்க வந்தாயா சித்திரகுப்தா?" இயமன் கடுமையான குரலில் கேட்டான்.

"எம் பிரபுவை உளவு பார்க்கும் அளவிற்கு எமக்கு தைரியம் இல்ல பிரபு"

"நீ உரைப்பது உண்மை அல்ல என்பதை நடுங்கும் உமது தேகம் பறைசாற்றுகிறது சித்திர குப்தா. இதெல்லாம் அந்த நாரதனின் லீலை தானே"

"பிரபு" பிடிபட்ட உணர்வுடன் அவன் நிமிர "நினைத்தேன் அந்த கலகக்காரன் தான் உன்னை குழப்பி அனுப்பியிருப்பான் என்று" பற்களைக் கடித்து குதறிய படி அவன் சொல்ல "பிரபு மன்னித்தருளுங்கள் நான் ஒரு நிமிடம் குழம்பிப் போய்விட்டேன். ஆனாலும் நான் தங்களை சந்தேகிக்கவில்லை பிரபு. நாரதரிடம் எம்பிரபு அப்படிப்பட்டவர் அல்ல என்று மறுத்துத்தான் உரைத்தேன். இப்போது இங்கு வந்தது கூட தங்களை சந்தேகித்து அல்ல" சொன்னவனை இடைமறித்து

"நிறுத்து உன் பிதற்றலை. எமலோகத்தினை விட்டு இங்கு வருவதற்கு உமக்கதிகாரம் அல்ல சித்திர குப்தா. மீறி வந்திருக்கிறாய் இதற்கான தண்டனையை எமலோகத்திற்கு வந்து தருகிறேன். இங்கிருந்து புறப்படு" என்றான் இயமன்.

"தாங்கள்?"

"என்னை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சலும் சேர்ந்துக் கொண்டதோ"

"இல்லை பிரபு இல்லை.. இல்லவே இல்லை. மன்னியுங்கள் பிரபு" சொன்னவன் அங்கிருந்து ஓடோடி போனான். 

எமலோகத்திற்குச் செல்லும் வழியெங்கும் சித்திரகுப்தனின் புலம்பல் மட்டுமே கேட்டுக் கொண்டே இருந்தது. 

"அய்யோ இந்த நாரதனின் கூற்றைக் கேட்டு பிரபுவை சந்தேகித்துவிட்டேனே. நான் பாவி. பாசக்கயிறு சகிதம் நின்றிருக்கும் பிரபுவை போய் மையலில் விழுந்துவிட்டார். மனதினை தொலைத்துவிட்டார் என உளறிய நாரதர் மட்டும் என் கையில் கிடைக்கட்டும் எமகிங்கரர்களிடம் அனுப்பி வைத்து..."

"அனுப்பி வைத்து எண்ணெய் கொப்பரையில் போட்டு வறுத்தெடுத்து விடுவாயோ சித்திரகுப்தா" நாரதர் முன் வந்து நிற்க

"நாரதரே தாங்களா.." திருதிருத்தான் அவன் இப்போதும்.

"நானேதான். வரும் வழியெல்லாம் உன் பிதற்றல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காரணம் என்ன?"

"தாங்கள் பொய்யுரைத்துவிட்டீர்கள் நாரதரே"

"சித்திரகுப்தா!"

"முறைக்காதீர் நாரதரே. நீங்கள் சொன்னதை நம்பி நான் திருக்கடையூர் சென்றேன்"

"அவளை சந்தித்தாயா சித்திரகுப்தா"

"ம்ஹூம். பிரபுவைத்தான் சந்தித்தேன். தங்களின் உபயத்தால் பிரபுவிடம் நன்றாக பேச்சு வாங்கிக் கொண்டதுதான் மிச்சம்"

"இயமன் திட்டினானா"

"திட்டு மட்டுமா... எமலோகத்தை விட்டு பூலோகம் வர உனக்கென்ன அதிகாரம் இருக்கிறது.. உன்னை மேலே வந்து கவனித்துக் கொள்கிறேன் என்றும் கூறிவிட்டார். பிரபுவின் சினத்திற்கு தேவையில்லாமல் ஆளாகிவிட்டேனே என அச்சமாக இருக்கிறது"

"தன்னிடம் இருக்கும் தவறினை மறைக்க இயமன் சினத்தினை கேடயமாக பயன்படுத்தியிருக்கிறான். இது புரியாது நீயும் பிதற்றுகிறாயே"

"இல்லை நாரதரே! தாங்கள் இனி எம்மை குழப்ப வேண்டாம். விட்டுவிடுங்கள்"

"சிவன் நெற்றிக்கண் திறந்தால் அனைத்தும் சர்வநாசமாகும். எமலோகத்தினை காக்க வேண்டியதில் இயமனுக்கு அடுத்ததாக உனக்கும் பங்கு உள்ளது சித்திர குப்தா. அப்பணியினையும் நீ சரிவர ஆற்ற வேண்டும். இயமன் மனதில் கள்ளம் இல்லை என்றால் அவன் கோபம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அதுவும் நீ அஞ்சனாவின் இல்லம் அருகே சென்ற மறுநிமிடமே இயமனும் உன் முன்னே தோன்றுகிறான் என்றால்... என்ன அர்த்தம் நன்றாக சிந்தித்துப் பார் சித்திரகுப்தா"

"தாங்கள் என்னை மேலும் மேலும் குழப்பப் பார்க்கிறீர்கள்"

"நிதர்சனத்தினை உணர வைக்க முயலுகிறேன். பிடிவாதமாக புரிந்துக் கொள்ள மறுக்கிறாய் சித்திரகுப்தா. அவள் அவனது உயிர். அவளுக்காக அவன் பெரும் பிழை வேறு இழைத்திருக்கிறான். அதில் பெரும்பங்கு உனக்கும் இருக்கிறது. தற்போதைக்கு என்னால் இவ்வளவுதான் எடுத்துரைக்க இயலும். இனி உன் பாடு உன் பிரபு பாடு"

"நாரதரே பிரபுவின் மனதில் அப்படியோர் எண்ணம் இருக்கிறதென்றால் அதனால் வரும் விளைவுகளையும் அவரறிவார். அப்படியிருக்கையில் அவரிடம் எடுத்துச் சொல்லி மனதினை மாற்ற எவராலும் முடியாது"

"நீ கூறுவதும் சரிதான் சித்திரகுப்தா. இதுபற்றி ஏற்கனவே நான் இயமனோடு உரையாடும் போது எதிர்த்து எவர் வரினும் நான் அவளை அடைந்தே தீருவேன் என்றே சூளுரைத்தான். நிச்சயம் அவன் அதை செய்து முடிப்பான் என்றுதான் தோன்றுகிறது"

"பிரபுவைப் பற்றி எமக்கும் தெரியும் நாரதரே"

"தெரிந்தும் இந்த கலகக்காரனுடன் கூட்டுச் சதி செய்கிறாயா சித்திரகுப்தா. உனது பணிவு விசுவாசம் இதெல்லாம் எங்கு போனது?"

"பிரபு நானில்லை நாரதர் தான். ஆனாலும் நானதை நம்பவில்லை" என்றவனை மறுத்து

"இந்த கலகக்காரன் உரைத்தது அத்தனையும் சத்தியம் தான் சித்திரகுப்தா. தேவையில்லாது உன்னை நீயே குழப்பிக் கொள்ளாதே" என அலுங்காமல் வெடிகுண்டைத் தூக்கி சித்திரகுப்தன் தலையிலே போட்டான் இயமன்.

"பிரபு" நெஞ்சைப் பிடித்தபடி அவன் பார்க்க "அவளது திருநாமம் அஞ்சனா. அவள் பேரழகி.. ம்ஹூம் அந்த பதத்திற்குள் எல்லாம் அவளை அடக்கிவிட இயலாது. அவளழகு பிரபஞ்சத்தின் எல்லை தாண்டியது. அவளை கண்ட நாழிகை முதல் நான் நானாகவே இல்லை" மையலோடு உரைக்க..

"பிரபு! தாங்களா இப்படியெல்லாம் உரைப்பது. என்னால் இதை நம்பவே இயலவில்லை. நாரதர் கூறும் போது கூட எம்பிரபு அப்படி அல்ல என்றல்லவா மறுத்துக் கூறினேன். தாங்கள் என்னவென்றால் இப்படிச் சொல்லுகிறீர்கள். சிவனின் சினமறிந்தும் தாங்கள் இவ்வாறு நடந்துக் கொள்வது சரியில்லை பிரபு. தாங்கள் மரணதேவன். மரணமென்பதற்றவர். அம்மானுட பெண்ணோ சொற்ப காலம் மட்டுமே வாழும் பிராப்தி பெற்றவள். இருவரும் இணைந்து வாழ்வதென்பதெல்லாம் இயலாத காரியம். அது நம் மேலோக விதிகளுக்கு புறம்பானது"

"பாசக்கயிறு வீசுபவனுக்கு பாசம், பந்தம் என்பதில் பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது சித்திரகுப்தா. இதில் தவறிருப்பதாக எனக்குப் படவில்லை. இதில் நான் எல்லாவித விதிகளையும் மீறவே ஆசை கொள்கிறேன்"

"பிரபு எமலோகத்தின் நலன் மொத்தமும் தங்களது கரத்தில்தான் உள்ளது"

"அறிவேன்"

"ஈசன் சினம்"

"அறிவேன்"

"அனைத்தும் அறிந்த தாங்களே இவ்வாறு செய்வதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை பிரபு"

"அனைத்தும் அறிந்த யான் பிரம்மசுவடியில் அவளது கணக்கிருக்கும் பக்கத்தினையே அழித்துவிட்டேனே.. அதை நீ அறிவாயா சித்திரகுப்தா.." இம்முறை ஓர் இடி அவனது தலையில் இறங்கிட "பிரபு" என்றதிர்ந்தே போய்விட்டான் சித்திரகுப்தன்.

காதலாசை யாரை விட்டது...!




Leave a comment


Comments


Related Post