இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 26 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 03-05-2024

Total Views: 19819

அபிநந்தனுக்கு பிடித்த சாப்பாடு அனைத்தும் தனக்கும் பிடிக்கும் என்று சந்தியா சொல்லி இருக்க “அவ்வளவு தானே பண்ணிடுறேன்…” என்று கிச்சன் சென்ற அபிலாஷா பொடி தோசை தக்காளி சட்னி தேங்காய் சட்னி என்று சமைக்க பார்வதி அக்சயா அபிநந்தன் சந்தியா என்று அனைவரையும் சாப்பிட அழைத்தாள் அபிலாஷா.

அனைவருக்கும் ஹாட் பாக்ஸில் இருந்து எடுத்து வைத்த அபிலாஷா அபிநந்தனுக்கு மட்டும் சுட சுட கொண்டு வந்து தட்டில் வைக்க

“ஆஹா அத்தை உங்க மகனுக்கு மட்டும் ஸ்பெஷலா கொண்டு வந்திருக்காங்க உங்க மருமக உங்களை விட ஓவரா கவனிக்கிறாங்களே… டேய் அபி குடுத்து வைச்சவன் டா நீ…” சந்தியா கேலி செய்து கொண்டே தனக்கு பரிமாறப்பட்டதை ஒரு வில்லல் பிய்த்து வாயில் வைத்து

“ம்ம் சூப்பர் ங்க… அப்படியே அத்தை சமைச்ச டேஸ்ட் தான்…” என்று பாராட்ட

“அக்கா அண்ணிக்கு சமையல் சொல்லி கொடுத்ததே அம்மா தான்…” என்று அக்சயா சாப்பிட

அபிநந்தன் தன் தட்டில் வைத்த சூடான தோசையை பிய்த்து வாயில் வைத்தவனுக்கு கண்கள் கலங்கியது. மற்றவர்களுக்கு உளுந்து கலந்த இட்லி மிளகாய் பொடி சேர்த்து செய்த அபிலாஷா இன்று சந்தியா பேசியது அபிநந்தன் அவளோடு சிரித்து பேசியது என்று அனைத்தையும் மனதில் வைத்து பழி வாங்கி இருந்தாள்.

ஆம்… தனி மிளகாய் தூளை எடுத்து தூவியவள் கொஞ்சம் மிளகு பொடியும் சேர்த்து கொள்ள வாயில் வைக்க முடியாத அளவுக்கு காரம் தான்… ஏன் என்று அபிநந்தனுக்கு புரியவே இல்லை..

மற்ற அனைவரும் நல்லா இருக்கு என்று பாராட்டி விடவே தனக்கு மட்டும் தான் இப்படி.. எதற்கோ தன் மீது கோபம் என்ற வரையில் புரிந்து கொண்டவனால் எதனால் என்று சரியாக கணிக்க இயலவில்லை. ‘போனவாரம் தானே ஒரு சண்டையை முடிச்சோம்… இப்போ எதுக்கு’ என்று குழம்பியவனுக்கு அதை யோசிக்க முடியாதபடிக்கு காரம் உச்சந்தலையில் தாக்க புரையேற பதறி போய் தலையை தட்டி தண்ணீரையும் எடுத்து கொடுத்தாள் அபிலாஷா.

ஏதோ கோபத்தில் அப்படி செய்து விட்டாலும் அவன் கண் கலங்குவது கண்டு உள்ளம் கலங்கியது இவளுக்கு… கண்களால் மன்னிப்பு கேட்டபடி “பார்த்து சாப்பிடுங்க நந்தன்” என்றவள் உள்ளே சென்று மீண்டும் ஒரு தோசையில் பொடிக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை தூவி எடுத்து வந்து தட்டில் வைக்க அவளை ஒரு மாதிரியாக பயந்தபடி பார்த்துக் கொண்டே அந்த தோசையை பிய்த்து வாயில் வைத்தான்.

அதன் பின்பே காரம் மட்டுப்பட எல்லோர் முன்பும் எதுவும் பேசாமல் அபிநந்தன் சாப்பிட சந்தியாவிற்கு ஃபோன் வந்தது.

எடுத்து பேசியவள் “ஏதோ எமர்ஜென்சி கேஸ் வந்திருக்காம்… ட்யூட்டி டாக்டர் இல்லனு கால் பண்றாங்க நான் கிளம்பறேன் அத்தை… நான் இனி வீக் எண்ட்ல வரேன்.” என்று கூறிய சந்தியா அபிலாஷா பக்கம் திரும்பி

“ஏங்க நான் வரதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?” என்று கேட்க

“இந்த வாங்க போங்கனு கூப்பிடுறது தான் பிரச்சினை… நீங்க பெயர் சொல்லி நீ வா போ அப்படியே கூப்பிடுங்க…” என்று சொல்ல

“ம்ம்… சரி நான் கிளம்பறேன்…” என்று சந்தியா கிளம்பி இருக்க

“அபி நீயும் உட்கார்ந்து சாப்பிடு மா…” என்று பார்வதி அவளையும் அமர்த்தி சாப்பிட வைத்து விட்டு சாப்பிட்ட பாத்திரங்களை பார்வதி கழுவி கொண்டு இருக்க

“அம்மா நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா?” என்று அபிலாஷா வந்து நிற்க

“இல்ல அபி நான் பார்த்துக்கிறேன்… நீ பால் இருக்கு பாரு காய்ச்சி நீ நந்தா அக்சயா குடிங்க…” என்று சொல்ல அடுப்பில் பாலை சுட வைத்த அபிலாஷா மெதுவாக

“இன்னைக்கு சந்தியாவை பார்த்தது எனக்கு ரொம்ப சர்ப்ரைஸா இருக்கு ம்மா…” என்றிட

“ஆமா அபி உனக்கு மட்டும் இல்ல எனக்கும் தான்… ரொம்ப நல்ல பொண்ணு அபி அவ… பாவம் இந்த வயசுலயே இந்த மாதிரி எல்லாம் கஷ்டப்பட அவ தலையில எழுதி இருக்கு… ம்ஹூம்… இனியாவது அவ நல்லா இருக்கனும்.” என்று பார்வதி பேச

“கண்டிப்பா ம்மா… அவங்க நல்லா இருப்பாங்க. ஆனா எனக்கு சர்ப்ரைஸா இருந்தது நந்தன் தான்…” என்று அபி சொல்ல அவளை பார்வதி புரியாது பார்க்க

“அது வந்து நந்தன் இவ்வளவு ஹேப்பியா இருந்து நான் பார்த்ததே இல்ல… அதுவும் ஒரு பொண்ணோட…” என்று அவள் சொல்ல

“ஐயோ அப்படி எதுவும் இல்லை அபி மா… சொல்லப்போனா நந்தா ரொம்ப குறும்புகாரன் ஆனா சின்ன வயசுல இருந்து அவனுக்கு இருந்த ஒரே ஃப்ரண்ட் சந்தியா தான்… அவனோட பன்னிரண்டு வயசுல அவனோட அப்பா இறந்தப்பறம் குழந்தை பருவத்துக்கான குறும்பு எல்லாமே போச்சு அவனுக்கு… 

ஆனா சந்தியாகிட்ட மட்டும் அதே இயல்போட அப்படியே இருப்பான். நீ எதுவும் நினைச்சுக்காதே அபி…” என்று முடிக்க

“எனக்கு புரிஞ்சது ம்மா… பட் எனக்கு கொஞ்சம் சர்ப்ரைஸா இருந்தது… நந்தன் இப்படி எல்லாம் இருந்ததே இல்லையா.. எங்க மேரேஜ் ரிஷப்ஷன் எதுக்குமே அவர் ஃப்ரண்ட்ஸ் னு யாருமே வரலையே… அதான்” என்று அபிலாஷா சொல்லி விட்டு பால் டம்ளர்களோடு வந்து அக்சயாவிற்கு தந்து விட்டு அவர்கள் அறைக்கு செல்ல அபிநந்தன் உம்மென்று அமர்ந்திருந்தான்.

அதன் பின்பே அவள் சாப்பிடும் போது செய்தது நினைவில் வர நாக்கை கடித்து கொண்டு “சாரி நந்தன்… ரியலி ஐ அம் சாரி” என்று சொல்லி அவன் அருகில் அமர

“என்னாச்சு லாஷா உனக்கு… ஏன் இன்னைக்கு இப்படி நடந்துக்கிட்ட?” என்று கேட்க அவளுக்கு கண்ணீரே வந்து விட்டது.

“சாரி நந்தன்.. எனக்கு இன்னைக்கு நீங்க சந்தியா கூட பேசினது… ஐ மீன் என்கிட்ட கூட இவ்வளவு க்ளோஸா சிரிச்சு பேசுனதே இல்லையே… அதோட சந்தியா பத்தி இதுவரை நீங்க சொன்னதே இல்லை. அப்பறம் உங்களோட காலேஜ் லவ் ஸ்டோரி… அதெல்லாம் கொஞ்சம் கோபத்தை கொடுத்திடுச்சு.. அதாவது கோபம் கூட இல்ல ஒரு பொசசிவ் தான்… சாரி நந்தன்…” தலை குனிந்த படியே அவள் சொல்ல அவள் குரலில் அவளின் செய்கையில் அவளின் அன்பில் அபிநந்தன் கோபம் கொஞ்சம் குறைந்திருக்க லேசாக சிரித்திருந்தான் அபிநந்தன்.

“அப்பாடா… கோபம் போய்டுச்சா உங்களுக்கு?” என்று அவள் விழிகளை விரிக்க

“கோபம்னு இல்ல லாஷா திடீர்னு அவ்வளவு காரமா வாய்ல வைச்சதும் மத்த எல்லாரும் அது நல்லா இருக்குனு பாராட்டுறாங்க… ஒருவேளை என் வாய்லதான் எதுவும் பிரச்சனையோ னு பயந்துட்டேன்.” என்று அபிநந்தன் சொல்ல களுக் கென்று சிரித்தாள் அபிலாஷா.

“ம்ம்… என் பாடு உனக்கு சிரிப்பா இருக்கோ?” என்று செல்லமாக முறைக்க

“நந்து சாரி..‌ ஆனா நீங்க அம்மா சந்தியா அச்சு எல்லாரும் இருக்கும் போதே எதாவது சொல்லிடுவீங்களோனு நினைச்சேன். நீங்க எதுவுமே சொல்லவே இல்லை.” ஆச்சரியமாக கேட்க 

“நீ கிச்சன் போகும் போதே ஒரு மாதிரி நீ முறைச்சு பார்த்த.. அப்போவே எனக்கு டவுட் வந்துச்சு. ஆனாலும் இப்படி ஒரு பனிஷ்மெண்ட் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல…” என்று அபிநந்தன் பெருமூச்சு விட

“அச்சோ சாரி நந்து… இங்க பாருங்க உங்களுக்காக பால் காய்ச்சி எடுத்துட்டு வந்தேன். கொடுக்க மறந்துட்டேன் உங்கிட்ட பேசிட்டே…” என்று எடுத்து தர குடித்த பின் டம்ளரை வாங்கி வைத்தவள்

“என்மேல எதுவும் கோபம் இல்லையே நந்தூ?” என்று அவள் தலை சாய்த்து கேட்க மென்னகை தந்தவன் இங்கே வா என்று கையை நீட்டி தலையை அசைத்து அழைக்க குழந்தை போல தாவி சென்று அடைந்து கொண்டாள் அவன் மார்பில்..

“ஆமா நந்து..‌ நான் ஒன்னு கேட்கனும்…” என்று சொல்ல

“ம்ம் கேளு லாஷா” என்று தலையை கோத

“இல்ல… சந்தியா சொன்னாங்களே உங்களை ஒன் சைட் லவ் பண்ணின பொண்ணு பத்தி..‌ அந்த பொண்ணு இன்னும் உங்க மைண்ட் ல இருக்காளா?” என்று மெல்லிய குரலில் கேட்க

“ஏன்? வேற எதாவது பணிஷ்மெண்ட் பாக்கி இருக்கா?” என்று சந்தேகமாக கேட்க

“ச்சோ நந்தூ… சும்மா தான் கேட்குறேன் சொல்லுங்க…‌” என்று சிணுங்க

“ஆக்சுவலா இன்னைக்கு சந்தியா சொன்ன பிறகு அந்த நிகழ்வுகள் தான் மனசுல வந்து போச்சு அதுவும் ஏதோ நிழல் மாதிரி… ஆனா அந்த பொண்ணோட முகம் இவ்வளவு ஏன் பெயர் கூட நியாபகம் இல்ல…” என்று அபிநந்தன் சொல்ல

“ம்ம்… அப்படியா நந்தூ..” உற்சாகமாக கேட்க

“ஆனா எனக்கு ஒரே ஒரு பொண்ணோட ப்ரப்போசல் இன்னும் என் மனசுல அப்படியே இருக்கு. இப்போ மட்டும் இல்ல என் வாழ்க்கையோட கடைசி நாள் வரைக்கும் அது அழியாம என் மனசுல இருக்கும்.” என்று அவன் சொல்ல கண் சுருக்கி பார்த்தவள்

“அப்படி யாரு?” என்று கேட்டவள் குரலே வேறு மாதிரி மாறி இருக்க தனக்குள் சிரித்துக் கொண்டான் அபிநந்தன்.

“ஆமா… அவளோட ப்ரப்போசல் அப்படி லாஷா…” என்று அவள் மூக்கோடு தன் மூக்கினை உரச அவளோ முதுகு காட்டி திரும்பி படுத்துக் கொள்ள பின்னால் இருந்து இறுக்கி அணைத்து கொண்டு,

“அந்த பொண்ணு அதிகபட்சம் நாலு முறை தான் என்னை பார்த்திருப்பா… என்னோட சேர்த்து என் குடும்பத்தையும் அவ ரசிச்சா… நீங்க மட்டும் வேண்டாம் உங்க குடும்பமும் எனக்கு வேணும்னு கேட்டா… நான் என் கடமைகள் எல்லாத்தையும் சொல்லி என்னால உன் காதலை ஏத்துக்க முடியாதுன்னு சொல்லியும் உங்களுக்கும் சேர்த்து நான் காதலிக்கிறேன்… எவ்வளவு காலம் ஆனாலும் உங்களுக்காக காத்திருப்பேன் னு சொன்னா…” என்று அவன் சொல்ல சொல்ல விழி விரித்து பறப்பதை போல பரவசம் கொண்டாள் அபிலாஷா.


தொடரும்…


Leave a comment


Comments


Related Post