இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலாகி! காற்றாகி! அத்தியாயம் - 5 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK029 Published on 04-05-2024

Total Views: 13498

விஷ்வேஸ்வரன் ஒரு பக்கம் தன் அன்னையிடம், கவியரசன் குடும்பத்தை கண்டுபிடிப்பதற்காக முயற்சி செய்வதாக உரைத்தார். 

தன் சரிபாதியிடம், "முதலில் அம்மாவின் ஆத்ம திருப்திக்காக அக்குடும்பத்தை கண்டுபிடிக்க பார்ப்போம். அப்படியே மீண்டும் சந்தித்தாலும், அவர்கள் பெண் தான் நம் மருமகளாக வருவாள் என்பது நூறு சதவீதம் நிச்சயம் கிடையாது. புரியுதா?" என்றார்.

"எந்த தைரியத்தில் சொல்றீங்க நீங்க. கமலி மாதிரி ஒரு பெண்ணை விட்டுட்டு நிரஞ்சனுக்கு வேற பொண்ணை பார்க்க நினைக்கிறது எனக்கு சரியா படலைங்க. எப்பவும் என் மருமகள் கமலி தான். அதை நிறைவேற்றப் பாருங்க சொல்லிட்டேன்" என்றார் அவரின் மனைவி மாயா.

மகனுக்கு இன்னார் தான் சரியான ஜோடி என்று தாய் நினைக்க, பாட்டி பேரனுக்கு அவனின் பால்ய கால நண்பி தான் மனைவியாக வரவேண்டும் என்று உறுதியாக எண்ண, அதற்கு காரணமாக நன்றி கடனும் தொக்கி நிற்க, இதற்கு சம்பந்தப்பட்ட நிரஞ்சன் அவன் வேறு ஒரு ஜீவனுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்று பல நாட்களாக தேடலில் இருக்கிறான். இதில் யாரை தேர்ந்தெடுப்பான் என்பது புதிர் தான்.

கமலியோடு அவளும் அவள் தந்தையும் தங்குவதற்காக வீடு தேடி அலைந்தான் நிரஞ்சன். கமலியின் தந்தை ரங்கநாத் பாண்டிச்சேரியை சேர்ந்தவர் என்பதால், தற்போது சென்னையிலும் அவர்கள் இருக்க தோதான இடம் பார்க்க ஆசைப்படுவதாக நிரஞ்சனிடம் உரைத்திருந்தார்.

அதன்படி, ஒருநாள் ரங்கநாத் பேச்சு வாக்கில், தன் மகளுடன் சென்று வீடு வாங்க உதவுமாறு கேட்டிருந்தார்.

அவனும், "உனக்கு என்ன மாதிரி வீட்டுல இருக்கணும்?" என்று கேட்க,

"உனக்கு என்ன மாதிரி வீடுப் பிடிக்கும் நிரு?"

"எனக்கு என் வீடு தான் பிடிக்கும்."

"எனக்கும் உன் வீடு ரொம்ப பிடிக்கும்!"

"அது சரி. அதுக்காக என் வீட்டுக்கு வந்து தங்கிக்கோன்னு உன்னை சொல்ல முடியாது. சோ உன்னோட எதிர்பார்ப்பை சொல்லு. அது மாதிரி தேடலாம். இப்ப தான் நிறைய தளம் இருக்கே. அதை பார்த்து உனக்கு பிடிச்ச வீட்டை செலக்ட் பண்ணிட்டு சொல்லு. அப்புறம் நேர்ல போய் பார்க்கலாம்" என்றான்.

"ம்ம்... எனக்கு அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம். நிலம் வாங்கி வீடு கட்டும் ஆசை இல்ல. பழைய மாடல் வீடு வேண்டாம். கேடட் கம்யூனிட்டில வில்லா பார்க்கலாமா?" 

"பார்க்கலாமே. சரி கமலி நீ சூஸ் பண்ணிட்டு சொல்லு. நான் உன் கூட வரேன். உன் அப்பா என்னை நம்பி பொறுப்பை ஒப்படைச்சு இருக்கார். அதை சரியா செய்ய நினைக்கிறேன்" என்றான்.

அன்று அபிராமிக்கு ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (upsc) நடத்தும் பரீட்சைக்கான நாள். காலையில் வெகு சீக்கிரமாகவே தன்னை தயார் செய்துக் கொண்டவள், பலமுறை தேர்வுக்கான நுழைவு சீட்டு முதல் எழுதுகோல், கரிக்கோல் என அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டோமா என்று ஆராய்ந்து பார்த்தாள். ஆனால் ஏனோ பதட்டமாகவே உணர்ந்தாள் அபிராமி.
அன்னையும், பாட்டனாரும் அவளுக்கு வாழ்த்துகள் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

ரயில் நிலையம் சென்றவள், தேர்வு மையத்திற்கு செல்லும் மார்க்கத்தில் நின்று காத்திருந்தாள். ஆனால் மின்சார இரயில் வர இருபது நிமிடம் தாமதமாகிறது என்று நிலையத்தில் அறிவிப்பு வரவும் அதிர்ந்தாள். 'என்னிக்கும் இல்லாத திருநாளா இன்னிக்கு தான் லேட்டா வரணுமா?! ஏன் கடவுளே!? வொய் மீ?' என்று மேல் நோக்கி ஆகாயத்தை பார்த்து மனதினுள் அங்களாய்த்தாள்.

பிறகு குடுகுடுவென பேருந்து நிலையத்திற்கு விரைந்தாள். அங்கே பேருந்துகள் நிரம்பி வழிவதைக் கண்டு அஞ்சினாள். சரி பரவாயில்லை என்று ஆட்டோ புக் செய்ய எண்ணி ஃபோனை எடுத்து பயணச் செயலியில் அவசரமாக தேடி பதிவு செய்தாள். அவளின் நல்ல காலம் சற்றே அவளுக்கு உதவி புரிந்தது. உடனடியாக ஒரு ஆட்டோ ஓட்டுனர் விவரங்கள் பதிவும் ஆகிவிட அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள்.

அடுத்த நிமிடம், ஆட்டோ ஓட்டுனர் அழைத்து எங்கே செல்ல வேண்டும், நேரடி பணமா அல்லது செயலியில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை செய்பவரா என்று விளக்கம் கேட்டு அனைத்துக்கும் பதில் தந்து விட்டுக் காத்திருந்தாள்.

ஒரு ஐந்து நிமிடம் கடந்திருந்தது. மீண்டும் ஆட்டோ ஓட்டுநர் அழைத்தார்.

"ஹலோ சொல்லுங்க அண்ணா. வந்துட்டீங்களா? ஆனா எங்க இருக்கீங்க?" 

"மேடம்... டிராபிக் அதிகமா இருக்கிறதுனால யூ டர்ன் எடுத்து வர லேட்டாகும்."

"ஐயோ குண்டைத் தூக்கிப் போடாதீங்கண்ணா. எனக்கு பரீட்சைக்கு நேரமாகிட்டு இருக்கு." என்று காதிலிருந்து ஃபோனை எடுத்து நேரம் பார்த்துவிட்டு மீண்டும் காதில் ஒற்றினாள். அவள் குரலில் பதட்டம் ஏறுவதை உணர்ந்தோ என்னவோ ஆட்டோ ஓட்டுனர், "நான் என்னமா பண்றது? சரி வெயிட் பண்ணுங்க நான் வரேன்" என்றார்.

'பேசாம லிஃப்ட் கேட்டு போயிடலாமா' என்று யோசித்தாள். பிறகு ஆட்டோ பதிவை கேன்சல் செய்து இருசக்கர வாகனம் எதேனும் அருகில் பதிவு செய்ய உள்ளதா என்று செயலியில் தேடினாள்.

'ஐயோ ராமா சீக்கிரம் பைக்கை கண்ணுல காட்டு.' என்று இறைவனிடம் வேண்டியவள், பைக் டாக்சி ஒன்றை புக் செய்து காத்திருக்கலானாள். 

மீண்டும் கடவுள் அவளை சோதிக்க எண்ணவில்லை போல, விரைவாக பைக் டாக்சி அவளுக்கு கிடைத்து விட, அந்த மகிழ்ச்சியில், சாலை என்றும் பாராமல் சற்றே துள்ளிக் குதித்தாள். 

பைக் டாக்ஸி வரவும், ஏறி அமர்ந்தவாறு ஓட்டுனரிடம் செல்ல வேண்டிய முகவரியை சொல்லிவிட்டு நிம்மதி பெருமூச்சை வெளியிட்டாள்.

அரைமணி நேரம் பயணம் செய்து தேர்வு மையத்திற்கு வந்து சேர்ந்தாள்.

பைக் டாக்ஸி ஒட்டியவனிடம், "தேங்க்ஸ் பாஸ். நல்ல வேளை சரியான டைமுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டீங்க. இந்தாங்க பணம்" என்று திரும்பி நடந்தாள்.

"மேடம் ஸ்டார் ரேட்டிங் கொடுக்க மறந்துடாதீங்க" என்ற பைக் ஓட்டியிடம், "நான் மட்டும் இந்த தேர்வை நல்லபடியா எழுதி முடிச்சுட்டேன்னா, உங்களுக்கு கமெண்ட்ல கூட அஞ்சு ஸ்டார் ரேட்டிங் போடறேன்" என்றுவிட்டு போனாள் அபிராமி.

நடக்கும் போது பின்னால் தோளில் மாட்டியிருந்த பையை கையில் கொண்டு வந்ததும் தான் கவனித்தாள் முதுகுப்பை மூடப்படாமல் இருப்பதை! அது வாயைப் பிளந்து கொண்டு பப்பரப்ப என்றிருக்கவும், தன் நெற்றியில் தட்டினாள். "மறதி மன்னாரு. ஃபோனை எடுத்தியே சிப்பை மூடத் தெரியல? நல்லவேளை பைக்ல வந்தோம். இல்லனா எது காணாம போயிருக்குமோ!" என்று தனக்கு தானே கூறிக் கொண்டாள்.

முதுக்குப்பையை வெளியே வைத்துவிட்டு சரியான நேரத்திற்கு தேர்வு அறைக்குள் சென்றாள். தேர்வு கண்காணிப்பாளர் வரவும், மயான அமைதி நிலவியது. "எல்லாரும் தேர்வுக்கான அட்மிஷன் கார்டு மற்றும் நுழைவு சீட்டை ரெடியா வைங்க" என்று கண்காணிப்பாளர் கூறவும், மீண்டும் அவளின் மறதி மன்னாரு தலை தூக்கியதில் கடுப்பானாள் அபிராமி.

அனுமதி கேட்டு வெளியே சென்றவள் முதுகுப்பையை குடைந்தாள். அவள் உடனடியாக உள்ளே வராமல் இருப்பதை உணர்ந்த கண்காணிப்பாளர், "இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

"சார் அது வந்து... ஹால் டிக்கெட் தேடிட்டு இருக்கேன்" என்றாள் பதட்டத்துடன்.

"வாட்? சரி உங்க ரெஜிஸ்டரேஷன் நம்பர் மூலம் வெப்சைட்டில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செஞ்சு காமிங்க. தேர்வு நாளில்  முதல் தாளில் தோன்றி, இரண்டாவது ஷிப்டில் தங்கள் ஐஏஎஸ் அனுமதி அட்டையைக் காட்டலாம். ஆனால் நீங்க இரண்டாவது ஷிப்டில் ஐஏஎஸ் அட்மிட் கார்டை காட்டுவேன் என்று உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும். இந்த ருலே உங்களை மாதிரியான ஆட்களுக்காக தான் வெச்சிருக்காங்க போல. போங்க. எக்சமினேஷன் கியோஸ்க் கவுண்டரில் இந்த வேலையை முடிச்சிட்டு வாங்க." என்று அனுப்பி வைத்தார்.

அபிராமி கண்கள் கலங்க கையெழுத்திட்டு வந்து அமர்ந்தாள். அவளுக்குள் படிப்படியாக பயமும் பதட்டமும் சூழ்ந்தது. கையில் முதல் தேர்வுக்கான தாளை வாங்கி எழுதத் தொடங்கினாள்.

அன்றைக்கு ரங்கநாத்துடன் முக்கியமான சந்திப்பிற்காக காலையில் கிளம்பினான் நிரஞ்சன். அவனின் பாண்டிச்சேரி ரிசார்ட் வேலைகளில் ரங்கநாத் தான் முக்கியமான பங்குதாரர் அவனுடன் இணைந்து ரங்கநாத் மற்றும் அவரின் நெருக்கமான வேறு சில நபர்களும் பங்குதாரர்களாக ஒன்று சேர்ந்துள்ளார்கள். இப்பணியை மேற்கொள்ள முக்கியமான கட்டமான திட்டமிடல் மற்றும் வடிவமைத்தல் முடிந்து அதனோடு வரையறையும் ரங்கநாத்திற்கு காட்டவே நிரஞ்சன் கிளம்பினான். ரங்கநாத் அவரின் நண்பரோடு இருப்பதாகவும் அங்கே வந்து தன்னை சந்திக்கும்படி உரைத்தார்.

போகும் வழியில் டிராபிக் காரணமாக நின்று நின்று சென்றான். நகரத்தின் போக்குவரத்து நெரிசல் அவன் அறியாதது அல்ல. ஆகவே பொறுமையாகவும், நிதானமாகவும் காரை செலுத்தினான்.

அப்போது தான் அபிராமியை ரோட்டில் சற்றே துள்ளிக் குதிப்பதைக் கண்டான். "இன்னிக்கும் இந்த இம்சையை பார்த்துட்டேனா... நல்லவேளை கார்ல இருக்கேன் இல்லனா ஏதாவது பிரச்சனை பண்ண கரெக்டா வந்திருப்பாள்." என்றான். அவள் முதுகுப்பையிலிருந்து லேமினேட் செய்யப்பட்ட கவர் விழுவதை கவனித்தான். கார் ஒலி கொம்பை அவளின் கவனத்தை பெற இசைத்தான். ஆனால் அதற்குள் ஒரு பைக்கில் ஏறி சென்றதைக் கவனித்த நிரஞ்சன். சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறியதை கண்டு வண்டியை எடுத்து பின்பு உடனே ஓரமாக நிறுத்தினான்.

அபிராமி தவறவிட்ட லேமினேட் செய்யப்பட்ட கவரை கையில் எடுத்துப் பார்த்தவன், அது ஒரு தேர்விற்கான நுழைவு சீட்டு என்பதை உணர்ந்தான்.

உடனே அதை கையிலெடுத்துக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டான். மீட்டிங்கை நல்லபடியாக முடித்துவிட்டு ரங்கநாத் முதலீட்டாளர் என்ற முறையில் சொன்ன சிலவற்றை கவனத்தில் பதித்துக் கொண்டு விஸ்மயா சென்றான்.

அங்கேயும் அவனின் வேலைகளை திறம்பட பார்த்தவன், வணிக வளாகத்தை சுற்றி மேற்பார்வை பார்க்க கிளம்பினான்.

அதே நேரம் அங்கே வந்த அவனின் தங்கை லாவண்யா, "அண்ணா என் கூட ஒரு இடத்துக்கு வாயேன்." என்றாள்.

"எங்கன்னு சொல்லு?"

"அட தங்கச்சி கூப்பிட்டா வர மாட்டியா?" என்று கேட்டுவிட்டு பிறகு, அண்ணன் காரணம் சொல்லாமல் வர மாட்டான் என்று புரிந்ததால், "அண்ணா, எனக்கு ஃபேர்வெல் கொண்டாட்டத்துக்கு ஒரு ட்ரெஸ் செலக்ட் பண்ணி வெச்சிருக்கேன். அதை நீ வந்து வாங்கி தா." என்றாள்.

"அதானே பார்த்தேன்... காரணம் இல்லாம லாவா இங்க வராதேன்னு நினைச்சேன்." என்றான் இளநகையுடன்.

"அண்ணா பிளீஸ்" என்றவள், கண்களின் கவனத்தை அவனின் மேஜை மேல் கிடந்த லேமினேட் கவரிடம் திருப்பினாள்.

அதை எடுத்து பார்த்தவள், "அண்ணா என் ஃப்ரெண்ட் அபிராமியோட ஹால் டிக்கெட் உன்கிட்ட எப்படி வந்தது? அவங்களை உனக்கு ஏற்கனவே தெரியுமா?" வினவினாள்.

"லாவா, இந்த ஃபோட்டோல இருக்கிற பொண்ணு உன்னோட ஃப்ரெண்ட்டா?" 

"ஆமா. இவங்களை நீயும் பார்த்திருப்பியே!; அன்னிக்கு ஜனனியை ஏமாத்த பார்த்தானே; அவனை பிடிக்கவும் இவங்க தான் எங்களுக்கு ஹெல்ப் பண்ணாங்க." என்றாள்.

உனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ் வெச்சுக்க தெரியாதா?"

"ஙே" என்று விழித்தாள். பின்பு, "அண்ணா என் ஃப்ரெண்ட்ஸ் பத்தி எனக்கு நல்லா தெரியும். நான் உன்கிட்ட கேட்ட கேள்விக்கும் நல்ல ஃப்ரெண்ட்டுக்கும் என்ன சம்பந்தம்?"

"அவளுக்கு பசங்களோட வாழ்க்கையை கெடுக்கிறதே பழக்கம். ஏற்கனவே அந்த அரவிந்துக்கு நிச்சயம் ஆகிடுச்சுன்னு தெரியும் தானே? அப்ப அதையும் மீறி எதுக்கு அவனோட பழகனும். இன்னிக்கு கூட அவ ஒரு பையனோட வண்டியில பொறதைப் பார்த்தேன்." என முகத்தை சுழித்தவாறு கூறினான் நிரஞ்சன்.

தன் அண்ணன் பேசும் பாஷை புரியாதது போல விழித்தாள். "அண்ணா ஒரு பொண்ணு பையனோட போனாலே தப்புன்னு ஆகிடுமா? நம்ம உறவுமுறை தெரியாதவங்க கூட, நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே போனால், தப்பா பேச வாய்ப்பு இருக்கு அப்ப நானும் தப்பான பொண்ணா ஆகிடுவேனா?" என்று ஆத்திரத்துடன் கேட்கவும்,

நிரஞ்சன் புத்தியில் உரைத்தது. "சாரி லாவா. நான் அந்த அர்த்தத்துல சொல்லல. உன் ஃப்ரெண்டை எனக்கு ஏற்கனவே தெரியும். ஒரு தடவை என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டு போலீஸ் வரைக்கும் பிரச்சனையை கொண்டுப் போயிட்டா" என்றான்.

"இது என்ன கதை? அப்ப உனக்கு அவங்களை முன்னாடியே தெரியுமா?"

"ம். நானும் என் பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் சேர்ந்து படம் பார்க்க போயிருந்தோம். படம் பார்த்து முடிச்சிட்டு வெளியே வரும் போது, எவ்வளவு கூட்டமா இருக்கும்? என்னவோ மாரத்தான் போட்டியில் முதல் பரிசு வாங்க முந்திகிட்டு போற மாதிரி, மொத்த ஜனமும் கூட்டமா போவாங்களே. அப்படி தான் அன்னிக்கும் நடந்துச்சு. அப்படி நான் கதவை தாண்டி வெளியே வரும் போது, யாரோ ஒரு பொண்ணு, என் சட்டையைப் பிடிச்சு நிறுத்தி, நான் தப்பா அவ மேல கையை வெச்சதா சொல்லி கத்தினா! எனக்கு ஒன்னும் புரியல. கூட்டம் மொத்தமும் என்னையே லுக்கு விட்டாங்க. அந்த பொண்ணு 'ஓ'ன்னு ஒப்பாரி வெக்குது. அப்ப எங்கிருந்து வந்தான்னு தெரியல உன் இத்துப் போன ப்ரெண்ட். பளார்ன்னு ஒரு அறை வேற விட்டாள். என்னை பொம்பளை பொறுக்கி ரேஞ்சுக்கு பேசினா. நானும் கத்த, அவளும் கத்த, அந்த இடமே களேபரம் ஆகிடுச்சு. உடனே திரையரங்கம் மேனேஜர் சொல்லி போலீஸும் வந்துட்டாங்க. அதுக்குள்ள உன் ஃப்ரெண்ட் நான் தான் பிரச்சனைக்கு காரணம் சொல்லிட்டு போயிட்டா. என்னையும், நான் யாரை தப்பா தொட்டேன்னு சொல்லி பிரச்சனை நடந்துச்சோ, அந்த பொண்ணையும் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்கிருந்து எல்லாத்தையும் விளக்கி சொல்லி புரிய வெச்சு  வெளியே வர எனக்கு போதும் போதும்னு ஆகிடுச்சு."

"இப்படி ஒரு பழி உன் மேல ஏன் வந்துச்சு அண்ணா?"

"அது தான் கொடுமையிலும் கொடுமை. அது ஒரு யூடியூப் பிராங்க் ஷோக்காக அந்த பொண்ணு விளையாடி இருக்கு. போலீஸ் அந்த பொண்ணையும் அவளோட டீம்மையும் கண்டபடி திட்டி அனுப்பினாங்க. இப்ப சொல்லு, உன் ஃப்ரெண்ட் தானே இந்த பிரச்சனை பெரிசாக காரணம். அப்புறம் நான் எப்படி கோபப்படாமல் இருப்பேன்?!"

"அதுக்கு ஒரு பொண்ணை என்ன விவரம்னு தெரியாம தப்பா சொல்லிடுவியா?" என்றாள் கோபம் அடங்காமல்.

"அதுக்கு சாரி லாவா. அவ மேல உள்ள ஆத்திரம்... அதில் அப்படி சொல்லிட்டேன்." என்றான்.

லாவண்யா அத்துடன் அந்த பேச்சை விடுத்து, "அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணேன் பிளீஸ். இன்னிக்கு அபி அரசு பரிட்சை எழுதறாங்க. ஹால் டிக்கெட் உன்கிட்ட இருக்கு. எப்படியாவது அவங்க கையில் இதை சேர்த்துடேன்" என்றாள்.

"புரியாம பேசாத லாவா. மணி என்னன்னு பார்த்தியா? இந்நேரம் தேர்வு நேரம் முடிஞ்சிருக்கும்" என்றான் தன் மணிக்கட்டில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தபடி!.

"இரு அண்ணா அவங்களுக்கு ஃபோன் பண்றேன்" என்று தன் ஃபோனை எடுத்து அபிராமிக்கு அழைப்பு விடுத்தாள்.

தொடர்ந்து இரண்டு முறை அழைப்பு விடுத்தும், அவள் எடுக்கவில்லை என்றதும் கவலையைத் தத்தெடுத்துக் கொண்டாள் லாவண்யா.

"ஃபோன் எடுக்கவில்லை அண்ணா. இப்ப என்ன பண்றது?!"

"ரிலாக்ஸ் லாவா. ஹால் டிக்கெட்டை தவறவிட்டது அவளோட தப்பு. அதுக்கு நாம என்ன பண்ண முடியும். மே பீ பரீட்சை எழுத அனுமதி கிடைச்சிருக்கும் அதான் ஃபோன் எடுத்திருக்க மாட்டா. நீ இப்ப ட்ரெஸ் வாங்கணும்னு சொன்னல்ல... வா போகலாம்" என்று தங்கையின் வாடிய முகம் அவனை தாக்க, அவளை சமாதானம் செய்து வெளியே அழைத்துச் சென்றான்.


Leave a comment


Comments


Related Post