இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -02 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 04-05-2024

Total Views: 20603

இதரம் -02


மல்லியின் இதழ்கள் உலர்ந்து போயிருந்தது. அத்தனை பெரிய அறையில் ஒரு மூலையில் சுவற்றில் சாய்ந்தமர்ந்திருந்தாள். கண்கள் கலங்கி கண்ணீர் குளம் கட்டி நின்றது. 


மனதில் ஆயிரம் கேள்விகள் சுழற்றியடித்தது. 


'நான் செஞ்சது தப்பு இல்லய்யா. ஒங்க மவ தப்பு செய்ய மாட்டேன் தெரியும் தானே?' என இறந்து போன தந்தையின் நிழலுருவத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள் மனதினுள்ளேயே. 



'எல்லாமே டாக்டர் சார் நல்லதுக்குத்தான்' என்று உடைந்த மனதைத் தேற்றினாள். எதிரில் இருந்த புகைப்படத்தில் திருமாறன் அழகாய் சிரித்தான்.தானாக மல்லியின் இதழ்கள் மெலிதாய் விரிந்தது. 



அவனை சந்தித்த முதல் நாளை நினைவில் கொண்டு வந்தாள் மல்லி. 


*********


திருமாறன் ஜெஆர்எம் நிறுவன அலுவலகத்தில் மொட்டை மாடியில் நின்றிருந்தான். பத்தாவது மாடி அது... மனம் ஒரு நிலையில் இல்லாது போகவே தனிமை வேண்டி வந்திருந்தான். இருள் மொத்தமாய் கவிழாமல் அப்போது தான் ஆரம்பநிலையில் நின்றது. 



"திரு!" என்ற அழைப்பில் சுயம் வந்தவன் திரும்பாமலேயே நிற்க, அழைத்தவன் அவன் தோளில் தட்டினான்.


"சொல்லுங்கண்ணா...!" வந்தது வர்மன் என்று புரிந்தது அவனுக்கு. 


"வீட்ல இல்லாம இங்க என்ன பண்ற...?" 


"ஏன் அண்ணா நான் இங்கே வரக்கூடாதா...?"பதிலுக்கு திரு கேட்க

"திரு இதென்ன பேச்சு...?அந்தப் பொண்ணு கூட இல்லாமல் நீ இங்க என்ன பண்றனு கேட்டேன்." என்றான் ரகு. 


"கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்னு வந்தேன்" என்று கூறவும் ரகு அவனை ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு," சீக்கிரம் வீட்டுக்குப் போ திரு. என்ன கோபமிருந்தாலும் இப்போதைக்கு ஒதுக்கி வை" என்றான். 



திரு நெற்றி சுருக்கி அவனைப் பார்க்க, ரகுவோ சிரித்தபடி ,"எனக்கு எல்லாரையும் ஜட்ஜ் பண்ணத் தெரியாட்டியும் என் தம்பி எப்படின்னு கவனிக்கத் தெரியும்" என்றான். 


"நைஸ் ப்ரோ" என்று தன் தோளை இலகுவாய் குலுக்கிக் கொண்டவன்," இது நமக்குள்ள "என்றான் சூசகமாக. 


"ப்ரதர்ஸ் பர்ஷனல் வெளியே போகாது." என்று ரகுவும் சூசகமாக பதிலிறுக்க இருவரிடத்திலும் மர்மமான புன்னகை தான். 



"வீட்டுக்குப் போகலாம் திரு." என்றதும் மறுக்காமல் அவனோடு நடந்தான் லிஃப்ட் இருக்குமிடத்திற்கு செல்வதற்காக



நினைவெல்லாம் மல்லி ஆக்கிரமித்திருந்தாள் திருவிற்கு .



இருவரின் நினைவுகளிலும் தங்களது முதல் நாள் சந்திப்பு படம் போல விரிந்தது. 


**********

மழைத்தூறல் அப்போது தான் துவங்கி இருந்தது. சில்லென்று கூதக்காற்று வேறு முகத்தில் படிய கண்ணாடியைக் கழற்றி தன் கைக்குட்டையால் துடைத்து விட்டு மீண்டும் அணிந்து கொண்டான். 


இப்போது பாதை நன்றாகத் தெரிந்தது. 


"சார் சார் நீங்க தான் டாக்டரா?" என ஒரு ஆள் கட்டைக் குரலில் வினவ, சட்டடென்று பக்கவாட்டில் நின்ற அவரைப் பார்த்தான். 



"எஸ் நீங்க?" என்று கேட்க 



"நான் மணியக்காரர் வீட்டுல வேலை செய்றவன் பேரு சின்ராசு. நீங்க வருவீங்க கூட்டிட்டு வரணுமின்னு பெரியய்யா சொல்லி ஃபோட்டோ காட்டுனாங்க. போலாங்களா?" என விபரம் மொத்தத்தையும் கூறி அழைக்க 



"போகலாம்."என்று வந்தவனோடு நடந்தான்  திருமாறன். 



"இப்போ மழை சீசன் கூட இல்லையே இவ்வளவு மழை பேஞ்சிருக்கு?" என கேட்டபடி நடக்க 



"இப்பவெல்லாம் எங்க சார் அந்தந்த நேரத்துக்கு மழை பெய்யுது. வெய்யகாலத்துல மழை பேயுது, மழை வரும் னு நம்புனா வெயிலு கொளுத்துது. போன மார்கழில விடிய கருக்கல்ல மழை கொட்டியெடுத்துடுச்சு சார். அறுவடைக்கு கெடந்த நெல்லெல்லாம் சாஞ்சு போச்சு போங்க" என்றபடி சின்ராசு கீழே நழுவிய பெட்டியை நன்றாக தூக்கி வைத்துக் கொண்டான்.



"நான் தூக்கிட்டு வருவேன்ல" என்று கடிந்து கொண்டவனை பார்த்து சிரித்தவன்," இருக்கட்டும் சார். இது ஒரு வெயிட்டா இன்னும் ரெண்டு தெருவு தள்ளுனா வீடு வந்துடும்."என்றான். 



"என் லக்கேஜை உங்கள தூக்க வச்சுட்டேனே அதான் சங்கடமாக இருக்கு.பட் தேங்க் யூ சோ மச் "என்று சொல்ல



"அட ஏன் சார் கொறைஞ்ச வருமானத்துல நீங்க இங்க வைத்தியம் பாக்க ஒத்துக்கிட்டதா மணியக்காரர் சொன்னாரு அதை விடவா இது பெருசு. இங்கன இருந்து டவுனுக்கு போய் வைத்தியம் பாக்கறதுக்குள்ள உசுரு அந்துபோவுது." என்றான். 



"ஏன் ஹாஸ்பிடல் கட்டி ரெண்டு வருஷம் ஆகிடுச்சுனு சொன்னாங்க அப்புறம் என்ன?" என்று கேட்கவுமே," ஏன் சார் ஆஸ்பத்திரி எல்லாம் கட்டிட்டாங்க தான். ஆனா டாக்டரு வரணுமே ஒரே ஒரு நர்ஸு புள்ளையை வச்சு ஊசிப் போட்டுக்கிட்டோம். அந்தப் புள்ளைக்கும் போன மாசம் கல்யாணம் ஆகிடுச்சு. அதான் மணியக்காரர் மெனக்கெட்டு உங்களை ஏற்பாடு பண்ணி இருக்கார். "



"அரசாங்கத்தில் உதவி கேட்டு இருக்கலாமே?"என்றவனை ஒரு நொடி நின்று பார்த்து விட்டு 

,"அரசாங்கத்தில் இருந்து ரெண்டு டாக்டர் போட்டாங்க. ஆனா அவங்க வர்றது ரெண்டு மணி நேரம் மட்டும் தான் சார். அந்த ரெண்டு மணி நேரம் தான் மனுசங்களுக்கு நோக்காடு வருமா என்ன...? ராத்திரி நேரத்துல பிரசவ வலி கண்டாலோ ஏதாச்சும் பூச்சி பட்டை கடிச்சாக் கூட டவுனுக்கு போக வேண்டி இருக்கு. அதுக்குள்ள உசுரே போயிடுதே... நேரஞ்செண்டு போனதால என் சின்னாத்தா மக உசுரை விட்ருச்சு."என்றான் வருத்தம் தோய்ந்த குரலில். 


திருமாறனுக்கு வருத்தமாய் போனது சின்ராசுவின் பேச்சில். 


"கவலைப்படாதீங்க அதான் நான் வந்துட்டேன் இல்ல" என்று சொல்ல சின்ராசு நிறைவாகப் புன்னகைத்து," சந்தோஷம்ங்க சார்." என்று நடந்தான். 


தன் தாவணி முந்தானையை முறுக்கிச் சுழற்றியபடி பெண்ணொருத்தி கால் தரையில் பாவாமல் நடந்து வந்தாள் துள்ளல் நடையில். 


"ராசண்ணே யாரு ஊருக்குள்ள புதுசா இருக்காக?" என கேட்டபடி திருமாறனை மேலிருந்து கீழாக பார்த்தாள் ஒரு தடவை. 


சிநேகமாய் புன்னகைத்தான் திருமாறன். அதே புன்னகை அவளிடமும் தொற்றிக் கொள்ள, ராசு இடைபுகுந்தான். 



"நம்மூருக்கு வந்துருக்க டாக்டர் சாரு, மல்லி" என்றான் சின்ராசு. 


"ஓஓஓ சரி தான் ண்ணே நான் வரேன். டாக்டர் சார் ஏதாவது கூட்டி மொழுகுற வேலை இருந்தா அண்ணேங்கிட்ட சொல்லிவிடுங்க, வந்து செஞ்சு தாரேன். காசு தரணுமோனு நெனச்சிராதீங்க அதெல்லாம் வேணாம்." என்று படபட பட்டாசாய் பொரிந்து விட்டுச் சென்றாள். 


"யார் இந்த பொண்ணு? சரவெடியா வெடிச்சுட்டுப் போறாங்க" என்றதும் சின்ராசு சிரித்தபடி ,"பேரு தேவமல்லி. எங்க ஊருக்கு செல்லப்பிள்ளை. எந்தங்கச்சி மாதிரி... மாதிரி என்ன தங்கச்சியே தான்." என்றான் சிரிப்புடன் 




"ஊருக்கேவா?!" என வியந்து கேட்டவனைப் பார்த்தபடி ,"ஆமா சார். நல்ல சூட்டிகையானப் புள்ள. யார் என்ன வேலை சொன்னாலும் தட்டாம செய்யும்."என்றான். 


"ம்ம்ம் நைஸ் !"என்று முடிக்கையில் மணியக்காரர் வீடு வந்திருந்தது.


"அடடே வாங்க டாக்டர் தம்பி. பயணமெல்லாம் சௌகரியம் தானுங்களே.?"என்றதும்," நல்லா இருந்தது சார்" என்றான். 


"சரி உள்ள வாங்க..."



"இல்ல சாவி தந்தா..." என இழுத்தவனை கையைப் பிடித்து அழைத்தவர்," அட என்ன அவசரம் வாங்க போவலாம். வீட்டுல நீங்க வர்றீங்கனு விருந்து தயார் ஆகிட்டு இருக்கு. " என்றார்.



தயங்கியவனை விடாது உணவருந்த வைத்தவர்,"என்னடா இம்புட்டு பெரிய வூடு இருக்கு.இங்க தங்க வைக்காம வேற எங்கிட்டோ தங்க சொல்றானேன்னு தப்பா நினைச்சுக்காதீக" என்றார். 


"அச்சோ! அதெல்லாம் இல்லீங்க." என்று திருமாறன் சொல்ல 


"வேற ஒன்னும் இல்ல தம்பி, இங்கின எப்ப பார்த்தாலும் ஒரே கரைச்சலாவே கெடக்கும். புள்ளக்குட்டினு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும் உங்களுக்கு தொந்தரவா போயிடக் கூடாது பாருங்க அதான் அங்க தங்க சொன்னேன். ஆஸ்பத்திரி பக்கமே வீடு" என்றார். 


சரியென விடைபெற்றுக் கொண்டான் அப்போதே. 


மணியக்காரர் கூறிய வீட்டிற்கு சின்ராசுவோடு வந்துவிட்டான் அவன். 

மல்லி அப்போது தான் வீட்டை முழுமையாக சுத்தம் செய்திருந்தாள் போலும். சாம்பிராணி மணம் கமழ்ந்தது. இவர்கள் வருவதற்குள் கழுவியிருந்த வீடு காயவேண்டுமே என்ற எண்ணத்தில் துணி வைத்து துடைத்து காற்றாடியை ஐந்தில் வைத்து விட்டுச் சென்றிருந்தாள். 


அலறலும் இல்லாது , கதறலும் இல்லாது ஹோவென சத்தம் எழுப்பிக் கொண்டு ஓடியது காற்றாடி.


மிதவெப்பமான காற்று தான் வீசியது உள்ளே. வெயிலும் வெப்பமும் என்னவென்று கேட்பவனுக்கு இதுவெல்லாம் புதுமையாக இருந்தது. ஏற்கனவே வெயில் பட்டு பழகாத முகமென்பதால் வியர்த்துக் கன்றி சிவந்திருக்க போதாகுறையென மணியக்காரர் வீட்டில் உண்ட உணவு வேறு காரத்தை காட்டி சிவக்க வைத்திருந்தது. 

மணியக்காரரின் மகளாக இருக்க வேண்டும் அவள் பதின்பருவத்தில் இருந்தவள்,' டாக்டரு என்னா செவப்பா இருக்காரு ஹீரோ மாதிரி' என்று கொல்லைப்புறத்தில் பெருமூச்செறிந்திருந்தாள் அவன் கைகழுவ சென்றபோது. 


'இவன் கேட்டுவிட்டானே?' என்ற நாணத்தில் ஓடியது அந்தப் பருவசிட்டு. மெல்லிய புன்னகை மாறனிடத்தில். 


வீடு வந்து சேர்ந்தவன் வீட்டைப் பார்த்தான். தன் அறையின் அளவு தான் மொத்த வீடும் என்று கணக்கிட்டவன்,அடுத்த நொடியே அந்த நினைவைத் தூக்கி எறிந்தான். பிட்டர் மெமரீஸை பெட்டர் மெமரீஸாக மாற்ற விருப்பமில்லை அவன் மனதிற்கு. 


தன் பெட்டியை வைத்து விட்டு படுக்கையறைக்குள் நுழைய, ஜன்னல் வழியே வந்த காற்று சற்று இதமளித்தது. அப்படியே படுக்கையில் சரிந்தவன் பயணக் களைப்பில் உறங்கியும் போனான். 

மீண்டும் எழுந்தபோது மணி ஏழைத் தொட்டிருந்தது. இருளில் விழிகள் பழகவே நேரமெடுத்தது. 

'இவ்வளவு நேரம் தூங்கியிருக்க திரு...மிராக்கிள் தான்' என்று நினைத்தபடி வெளியே வர, வெளியில் ஒரு குண்டு பல்பு எரிந்தது வெண்மையாக ஒளியை கக்கிக் கொண்டு 

***********

"டாக்டர் சார், ராத்திரிக்கு இட்லி அவிச்சு சட்னி சாம்பார் இருக்கு, மணியக்காரர் தரச் சொன்னாக, இங்கன வைக்கிறேன். சாப்புட்டு வாசல்ல வைங்க எடுத்துக்கிறேன் கழுவ வேணாம்" என்று சொல்லி விட்டு அவன் பதிலை எதிர்பாராமல் சென்று விட்டாள் மல்லி. 


வாசலில் இருந்த உணவுப் பாத்திரத்தை உள்ளே எடுத்துச் சென்றவன், இரவு உணவை முடித்துக் கொண்டான். மீதம் இரண்டு இட்லிகள் இருக்க , பாத்திரத்தை வாசலருகில் வைத்தான் அவன் நகர்ந்த மறுநிமிடம் ஓடி வந்து பாத்திரத்தை எடுத்துக் கொண்டாள். 


மீதமான இட்லியை பார்த்துச் சிரித்தவள்," டாக்டர் சாருக்கு அளவு சாப்பாடு தான் போல !"என்று முணுமுணுத்துக் கொண்டாள். 



இரவுணவை முடித்தவன் இலகுவாய் படுக்க நினைவுகள் இறக்கையின்றி பறந்தது கடந்தகாலத்தை நோக்கி.


"ம்மா ப்ளீஸ் ,ஓவர் ஸ்ட்ரெஸ் இங்க இருக்க மூச்சு முட்டுது எனக்கு. நான் இங்கிருந்தா என்ன ஆவேன்னு தெரியல" என்றிருந்தான் தன் அன்னையிடம்.



"உன் பொறுப்புகளை மறந்து நீ விலகிப் போறது சரியில்லை திருமாறன்" என்றார் அவர். 


"கொஞ்சம் டைம் குடுங்களேன் ஐம் நாட் ஃபீலிங் வெல்" என்று இறைஞ்சுதலாய் சொல்ல, அவனின் சித்தப்பா தான் அனுமதி வாங்கித் தந்தார் அவனுக்கு. 


"மாறன் உனக்கு ஒரு வருஷம் டைம். உனக்கு என்ன தோணுதோ செய்துக்கலாம் பட் ஆஃப்டர் ஒன் இயர் யூ கேன் கம் பேக் ஹியர்"என்றார் அவர். 



"ஸ்யூர் சித்தப்பா!" என உற்சாகமாய் சொல்லி விட்டு வந்திருந்தான் வீட்டை விட்டு. ஒரு வருடம் நான்கு வருடங்களாக கடந்திருந்தது அவன் வீட்டை விட்டு வெளியே வந்து. வெளியே வந்து வேலை பார்த்தாலும் ஏதோ சம்பளத்திற்கு செய்வது போலவேத் தோன்றியது அவனுக்கு. யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் மக்கள் எந்த நேரம் அணுகினாலும் சிகிச்சை செய்பவனாக தானிருக்க வேண்டும் என்று அவன் மனம் நினைக்க அவனுக்காகவே காத்திருந்த பணி போல இவ்வூரில் வேலை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது தன் நண்பனின் மூலம். அதனை உடனே ஏற்றுக் கொண்டவன் மறுநாளே கிளம்பி இக்கிராமத்திற்கு வந்து விட்டான். 


......தொடரும் 






















Leave a comment


Comments 1

  • M Mathi
  • 2 months ago

    NICE


    Related Post