இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-29(1) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 04-05-2024

Total Views: 30035

அத்தியாயம்-29(1)


“ஆர்..” என்று யஷ்வந்த் ஆரம்பிக்கும் முன்,

 “ஆஹாங்.. இப்ப நீ முகத்தை சீரியஸா வச்சுக்கக்கூடாது வை.கே.. கூடாது. சீ உன் லைஃப நான் பிடிச்சு வச்சுருக்கேன்.. அடக்கி வாசி” என்று ரக்ஷன் கூறினான்.

பேசிக்கொண்டே ரக்ஷன் தன் அடியாட்களுக்கு கண் காட்ட, மூன்று தடியர்கள் வந்து அவனை சுற்றி நின்று பிடித்துக் கொண்டனர். அதில் சுருசுருவென கோபம் எழுந்தபோதும் அமைதியாய் கண்கள் சிவக்க யஷ்வந்த் அவனை நோக்க, உள்ளறை ஒன்றிலிருந்து அஞ்சனாவை இழுத்து வந்தான்.

கண்களில் கண்ணீருடன் முகம் சுருக்கி சோர்வாய் அவன் இழுத்த இழுப்பிற்கு இழுபட்டு வந்த மனையாளைக் கண்டவன் இதயம் ஒரு நொடி தன் துடிப்பை நிறுத்திவிட்டு தான் மீண்டும் துடித்திருக்க வேண்டும். 

அவன் முன்னே இழுத்துவந்தவளை ரக்ஷன் விட, பொத்தென தரையில் விழுந்தவள் தன் நெஞ்சைப் பற்றிக் கொண்டு வேக மூச்சுக்களை இழுத்து விட்டாள். தொண்டை வரண்டு போனதில் வரட்டு இருமல் வேறு வந்து அவளது சுவாசத்தை தடை செய்ய,

 “ம்ம்..” என்று எரிச்சலாய் முணங்கியவள் “மாமா..” என ஈனஸ்வரத்தில் குரல் கொடுத்தாள்.

“சனா..” என்று அவனிதழ்கள் அவன் அனுமதியின்றி அவள் பெயரை உச்சரிக்க, மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் அப்படியொரு வலி. அதில் தான் பிடிபட்டிருப்போரிடமிருந்து திமிறி விலக முயற்சித்தவனால் அந்த மூவரை அத்தனை எளிதில் நகர்த்திவிட முடியவில்லை.. இது ஒன்றும் திரைப்படமும் இல்லை,மூவர் பிடித்திருந்தாலும் ஒரே உதறலில் விலக்கிவிட்டு அவளை அடைய அவன் திரைப்பட நாயகனும் இல்லை!

வேகப்பெருமூச்சு விட்டவள் மார்பு வலியில் வருத்தவே, தட்டுத்தடுமாறி எழ முற்பட்டவள் அங்கு வீசியெறியப்பட்டு சுவரோரம் கிடக்கும் தனது கல்லூரி பையை எடுத்தாள். வேகவேகமாக அதில் துழாவி அவள் தனது மாத்திரையை எடுக்க,

 “ப்ச்.. இந்த பக்கம் பேசிட்டு வர்றதுக்குள்ள என்ன வேலை பார்க்குறா பாரு உன் பொண்டாட்டி?” என்றபடி இரண்டே எட்டில் அவளை அடைந்த ரக்ஷன் அவள் கரத்தை இறுகப் பற்றினான்.

தன் மாத்திரையை உள்ளங்கைக்குள் அழுத்திக் கொண்டவள், “வி..விடு” என்றாள். 

தன்னை தற்காத்துக்கொள்ள தன்னால் இயன்ற அளவு அவள் முயற்சி எடுப்பதை கண்டு மகிழ முடியாமல் யஷ்வந்த் தவிப்பாய் திமிர, அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து அவளையும் அவனையும் சேர்த்து துடிக்க வைத்தான்.

தன் கன்னம் பொத்தி வலியை பொறுக்கமாட்டாது அவள் கத்த, 

“ஆர்‌.கே” என்று யஷ்வந்த் கர்ஜித்தான். 

நிச்சயம் ஒரு நொடியேனும் அவன் அந்த கர்ஜனையில் பதறியிருக்க வேண்டும். அந்த ஒரு நொடியை பயன்படுத்தி மாத்திரையை விழுங்கிய பெண், அவனை தன் பலம் கொண்டு தள்ளிவிட்டாள்.

அதை சுதாரிக்காமல் அவன் தடுமாறி விழ,

 “மா..மாமா.. ப..பயமா இருக்கு போயிடலாம்” என்று திக்கித் திணறி பேசினாள்.

கீழே விழுந்த ஆத்திரத்துடன் எழுந்த ரக்ஷன், “என் தங்கச்சி இருக்க வேண்டிய இடத்துல இருக்கும் உன்னை பார்க்க பார்க்க ஆத்திரமா வருது. நீ என்னை தள்ளி விடுறியா?” என்று கத்த, 

யஷ்வந்த் புரியாத பார்வையோடு “உன் தங்கச்சியா?” என்றான்.

ஆவேசமாய் திரும்பிய ரக்ஷன், “ரேஷ்மா.. என் ரேஷ்மாடா.. எனக்குனு இருந்த ஒரே உயிர்..” என்று கத்த, யஷ்வந்திற்கு அவன் கூறுவது ஒன்றும் புரியவில்லை. 

ரேஷ்மா என்று அவனுக்கு ஒரு தங்கை இருந்தாள், சமீபமாக சில வருடங்கள் முன்பு ஒரு விபத்தில் இறந்துவிட்டாள் என்ற வரை மட்டுமே நினைவிருந்ததில் யஷ்வந்த் புரியாது விழிக்க, 

“உன்னை விரும்பினாடா.. உன்னை பைத்தியமா விரும்பினா.. எனக்கு உன்னை பிடிக்காது, நீ தான் எனக்கு பிஸ்னஸ்ல பெரிய எதிரினு தெரிஞ்சும் உன்னை விரும்பினா..” என்று ஆவேசமாய் கத்தினான்.

இப்போதும் யஷ்வந்திற்கு ஒன்றும் புரியவில்லை. 'ரேஷ்மா என்னை லவ் பண்ணாளா?’ என்று புரியாது அவன் விழிக்க,

 “அவ அவ்வளவு ஆசையா அன்னிக்கு காலைல கிளம்பிப் போனாடா.. என்னனு கேட்டப்போ கூட ஈவ்னிங் சொல்றேன் அண்ணானு போனா. ஆனா ஈவ்னிங் அவகிட்டிருந்து கால் தான் வந்தது” என்றவனுக்கு

 ‘அ..அண்ணா.. நான் ரொம்ப ஆசையா காதலிச்சேன் அண்ணா அவரை.. உனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சும், உன் பிஸ்னஸ் எதிரினு தெரிஞ்சும் எனக்காக நீ ஏத்துப்பனு நம்பி அவ்வளவு அவ்வளவு காதலிச்சேன் அவரை.. ஆனா என்னை பிடிக்கலைனு சொல்லிட்டாரே.. என்னை வேணாம்னு சொல்லிட்டாரே அண்ணா' என்று தங்கையவள் கதறியது இன்னும் அவன் காதுகளில் ஒலித்தது.

'யாருடா?’ என்று தவிப்பாய் ரக்ஷன் கேட்க, 

“யஷ்வா, அண்ணா..” என்று கதறலோடு அவள் கூறியது தான் அவளது கடைசி வாக்கியமாக இருக்கும்.. 

அதன் பிறகு விபத்தில் இறந்த தங்கையின் சடலம் தான் ரக்ஷனுக்குக் கிட்டயது. நிஜத்தில் அது விபத்து தான் என்றபோதும் தங்கையவள் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் ரக்ஷன் நம்பினான்.

“ஏ மேட்.. எனக்கு நீ சொல்றது ஒன்னும் புரியலை” என்று ஆத்திரம் பொறுக்காமல் யஷ்வந்த் கத்த, 

“உனக்கு தான்டா தெரியும்.. அவ உன்கிட்ட லவ் ப்ரபோஸ் பண்ணிருக்கா.. உன்னை பார்க்க வந்துட்டு போனப்பிறகு தான் நீ வேண்டாம்னு சொன்ன வேதனைல செத்துட்டா.. அப்போதிருந்து தான் உன்மேல என்னோட எதிரியென்ற உணர்வையும் மீறி வெறியோட எதிர்த்தேன். உன்னை தொழில் ரீதியா கீழ தள்ள நான் செஞ்ச எந்த தகிடிதத்தமும் வேலைக்காகலை.. கடைசியா குடௌன எரிச்சதையும் நீ சாதாரணமா சரிகட்டிட்ட. அப்பறம் தான் உன் பொண்டாட்டிய டார்கெட் பண்ணேன். என் தங்கிச்சியவிட அழகு, அறிவு, பணம், பதவினு எதுலயுமே இவ உசத்தி இல்லையே? அதை ஆள் வச்சு இவகிட்ட பேச வச்சு இவளை பைத்தியம்னு இவளயே உணர வச்சேன்..” என்று வன்மத்துடன் ரக்ஷன் பேசினான்.

உண்மை தான்.. அன்று ரேஷ்மா காதலைக் கூற வந்தாள் தான்.. கூறியும் இருந்தாள்.. ஆனால் நடந்தது வேறாயிற்றே!

அவள் காதலை காகிதமாக அல்லவா எழுதி கொடுத்திருந்தாள். அது அவனுக்கு வரும் பல காதல் கடிதங்களில் பத்தோடு பதினொன்றாய் மறைந்தே போயிருந்தது. யஷ்வந்த் தொழில்துறையில் கொடிகட்டி பறக்கத்துவங்கிய காலமது. அப்போது ஆடை கலைத்துறையில் அவனை அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். அவனுக்கு பெண்கள் மத்தியில் ‘சார்மிங் மேன்' என்று பெயரிடப்பட்டு ரகசிய ரசனைப் பார்வைகளும் இருந்தது. 

அடிக்கடி காதல் என்ற பெயரில் வரும் மொட்டை கடிதாசிகளுடன் ஒன்றாகத்தான் அதையும் நினைத்தான். தனக்கு வந்திருந்த கடிதங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவன் ரேஷ்மாவிடம் கடிதத்தைப் பிரித்து அது காதல் கடிதம் என்று தெரிந்த நொடியே, அது யாருடையது என்றுகூட பார்க்காமல் அதை மூடி வைத்திருந்தான். கல்யாணத்தின் மீதே நாட்டமில்லாதவனுக்கு அந்த கடிதமெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை.

கடிதம் அனுப்பிய சில நாட்கள் கழித்து அவள் அவன் நிறுவனம் வந்திருந்தாள். 

'நான் யஷ்வாக்கு ஒரு ப்ரபோசல் அனுப்பிருந்தேன்..’ என்று அவள் கூற, 

‘யஷ்வாவா?’ என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்ட வினோத் யஷ்வந்திடம் அவள் கூறியதைப் போலவே கூறினான்.

சரியாக இரண்டு நாள் முன்பு தான் ரக்ஷனின் நிறுவனத்திலிருந்து ஒரு டீலிங் குறித்த மின்னஞ்சல் வந்திருந்தது. யஷ்வந்தை தனது தொழில்துறை எதிரியாக நினைத்திருந்தவன் அவனை வீழ்த்துவதற்கான யுக்தியாகத்தான் அதை பயன்படுத்தியிருந்தான்.

அதுகுறித்து ரேஷ்மா வினவுவதாக நினைத்தவன், “எனக்கு அது சுத்தமா பிடிக்கலை வினோத். ஜஸ்ட் ஐம் இக்னோரிங் இட். எனக்கு அந்த ப்ரோபசல்ல சுத்தமா விருப்பமில்லைனு சொல்லிடுங்க” என்று கூறிட அதே பதிலை ரேஷ்மாவிடம் கூறியிருந்தான்.

பல வருட காதலில் முதற்கட்ட அதிர்ச்சி விலகாமல் அவ்விடம் விட்டு சென்றவள் அழுகையும், அலைபேசியில் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்ததும் என கவனம் சிதற சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த லாரியை கவனியாமல் விட்டாள். விளைவு வண்டி தடம் புரண்டு, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரையும் விட்டிருந்தாள்.

ஆனால் உண்மையில் நடந்தவை யாருமே அறிந்திராததால் ரக்ஷனின் பேச்சு யஷ்வந்திற்கு சற்றும் விளங்கவில்லை. 


Leave a comment


Comments


Related Post