இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 07 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 04-05-2024

Total Views: 8189

அத்தியாயம் 07


 "பிரபு! பிரம்மசுவடியின் பொறுப்பு மொத்தமும் எனது. என் பணியில் தாங்கள் குளறுபடி செய்தால் அதன் முழுக்காரணமும் யான் அல்லவா. தாங்கள் இவ்வாறு செய்யலாமா? ஈசன் என்னிடம் கேட்டால் யான் என்ன பதிலுரைப்பேன். தவறுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது பிரபு. தண்டனைகள் மிகக் கடுமையானதாக இருக்கும்"

 "அறிவேன்"

 "பிரபு! முதலில் அவளின் உயிரை எடுக்கச் சொல்லி எமகிங்கரர்களிடம் ஆணையிடுங்கள்"

 "சித்திரகுப்தா. நீ என் ப்ரியத்துக்கு உரியவன் என்பதால் இம்முறை உன்னை மன்னிக்கிறேன். இதுபோல் மறுமுறை பேசினாயானால் என்ன செய்வேன் என்று எமக்குத் தெரியாது"

 "பார்த்தாயா சித்திரகுப்தா அத்துனை தவறையும் இழைத்துவிட்டு இயமன் பேசின்ற பேச்சை. இதற்காகத்தான் நான் அப்போழுதே உன்னிடம் எடுத்துரைத்தேன்" நாரதர் உள்ளே நுழைய

 "நாரதரே! இங்கிருந்து கலகம் செய்யாமல் தாங்கள் சென்றுவிடுங்கள்" இயமன் மூர்க்கமாய் கத்தினான்.


 "எனக்கு இனி இங்கென்ன வேலை. நான் சென்றுவிடுகிறேன்" உடனே அங்கிருந்து மாயமாகிவிட்டான்.

 "பிரபு! தங்களின் விருப்பு வெருப்பெல்லாம் எமலோகத்திற்கு அப்பால் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு அதற்கெல்லாம் இடமில்லை. சினம் தங்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல" சித்திரகுப்தன் துணிச்சலோடு இயமனை எதிர்த்துப் பேசத் தொடங்கினான்.

 "ஓ.. அதையும் பார்த்துவிடலாம் சித்திரகுப்தா"

 "பார்க்கலாம் பிரபு. தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்கையில் அங்கே அவருக்குக் கீழ் பணி செய்யும் எவரேனும் ஒருவர் அதைச் சுட்டிக் காட்டி திருத்த வேண்டும். இல்லையெனில் அதனை எதிர்த்துப் போராட வேண்டும். இந்த இரண்டையும் செய்வதாய் நான் தீர்மானித்துவிட்டேன்"

 "ஆக, என்னை எதிர்த்து நிற்கப் போகிறாயா? சித்திரகுப்தா!"

 "ஆம் பிரபு"

 "தோற்று விடுவாய். என் பலம் தெரியாது மோதுகின்றாய்"

 "அறிவேன் பிரபு.. நான் தங்களிடம் தோற்று விடுவேன்தான். ஆயினும் நான் எதிர்த்து நிற்பேன் பிரபு.. சிவனின் சினத்திற்கு ஆளாவதை விட எம் பிரபு இயமனின் சினத்தோடு சிக்கிக் கொள்வதை நான் பாக்கியமாக கருதுகிறேன்"

 "இறுதியாக என்ன உரைக்க விழைகிறாய்"

 "தாங்கள் அந்த பெண்ணின் உயிரினை கவர்ந்து வர வேண்டும். இல்லையெனில்"

 "இல்லையெனில் என்ன செய்துவிடுவாய்"

 "அப்பணியினை நான் மேற்கொள்ள வேண்டி வரும் பிரபு..."

சித்திர குப்தனின் கழுத்தில் இயமனின் பாசக்கயிறு விழுந்து அவனை இறுக்கியது


 "தேவையில்லாத கூற்றுக்களை இக்கூற்றுவன் ஏற்க மாட்டான் சித்திரகுப்தா. இந்த அந்தகனுக்கும் அவளுக்கும் இடையில் எவரும் வர முடியாது. அவள் உயிர் இயமனின் உயிரோடு கலந்துவிட்டது. அவள் உயிர் பிரிய வேண்டுமென்றால் முன்னதாக எம் உயிர் போக வேண்டும். என் உயிர் எடுக்கும் திராணி உனக்கிருந்தால் முயன்று பார்"

 "பிர...பு" மூச்சு வாங்கியது சித்திரகுப்தனுக்கு. இளக்கம் இயமனிடத்தில் இன்னமும் வரவில்லை. 

 "அப்படியென்ன தவறிழைத்தேன் என ஆளாளுக்கு வரிந்துக் கட்டிக் கொண்டு என் முன் வருகிறீர்கள். பெண்ணின் மீது நேசம் வைப்பது அவ்வளவு பெரிய கொடும்பாவமா.. இந்த நரன்கள் எல்லாம் எவ்வளவோ பாவங்களை பூலோகத்தில் செய்துவிட்டு அவர்கள் பாட்டுக்கு வாழுங்காலம் வரை நிம்மதியாக இருக்கின்றார்கள். உயிர் பிரிந்த பின்னர்தானே எமலோகம் வந்து பாவங்களுக்கான தண்டனையை பெற்றுக் கொள்கிறார்கள். அந்தக் கொடுப்பினை கூட ஆயுள் கவரும் எனக்கில்லையா? அவள் மீது ப்ரியம் வைத்த மறுகணம் முதல் எத்தனை இடையூறுகள். எத்தனை தடைகள். இதில் ஆங்கொரு நரன் வேறு அவளைத்தான் மணம் செய்வேனென கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறான். அவளை நெருங்கியவன் நிற்கையிலெல்லாம் என் மனங்கொள்ளும் வேதனையை யான் மட்டுமே அறிவேன். அவனை இங்கு கொண்டு வந்து எல்லாவித தண்டனையும் தரவேண்டுமென மனம் படபடக்கிறது. ஆயினும் அவளுக்காக மட்டுமே என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அவன் மீது அவளுக்கு அவனளவுக்கு விருப்பம் இல்லை. அதுமட்டுமே தற்போதைக்கு போதுமானதாக எனக்குப் படுகிறது.  அவள் மீதான மையல் வந்திருக்கக் கூடாதுதான். வந்து தொலைத்துவிட்டதே. விட்டு விலகிச் செல்ல முடியாத படி அவளென்னை ஈர்த்துப் பிடித்து வைத்திருக்கிறாள். அவள் அச்சம் நீக்கி அகத்தில் என்னை மட்டுமே ஆழப்புதைத்து வைக்க வேண்டுமென நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனைச் செய்ய விடாது ஒவ்வொரு ஆளாய் குறுக்கே வருகின்றீர்கள். இனியும் அப்படி நடந்துக் கொண்டால் எனது சுயரூபம் வெளிப்படும். மறந்துவிட வேண்டாம். இந்த இயமனை கேள்வி கேட்கும் அதிகாரம் சர்வ வல்லமை பொருந்திய ஈசனுக்கு மட்டுமே உண்டு. ஈசன் தவத்தில் இருந்து எழுந்து வரட்டும். என்னை கேள்வி கேட்கட்டும். இல்லையெனில் என்னை பஸ்பமாக்கட்டும். எதுவாகினும் எனக்குச் சம்மதமே. ஒருவகையில் காதல் அக்கினியில் எரிந்துக் கொண்டிருக்கும் இயமனுக்கு அது ஆகச்சிறந்த விடுதலையும் கூட. அதுவுமில்லாமல் இந்த இயமனுக்கு சிவனின் தண்டனையொன்றும் புதிதல்லவே. ஏற்கனவே மார்கண்டேயனுக்காக என் உயிர் ஈசனால் எடுக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டதை நீயும் அறிவாயே" உரைத்தவன் கயிற்றினை விடுவிக்க சித்திரகுப்தன் கீழே விழுந்து கிடந்தான்.

--------------------------------

திருநாவுக்கரசனின் சாதகம் லட்சுமியால் சோதிடரிடம் காட்டப்பட அதை உற்றுப் பார்த்த அம்மனிதர் "கல்யாண யோகம் கூடியிருக்கான்னு பார்க்கச் சொல்லுறீங்க. ஆனால் இந்ந சாதகக்காரனுக்கு கல்யாணம் பண்ணுறதுக்கான நேரம் இது இல்லை. இரண்டு வருசம் வரைக்கும் கல்யாணம் பேச்சே எடுக்க வேண்டாம். அதுக்கான கிரக அமைப்புகள் இல்லவே இல்லை. மீறி பண்ணனும்னு நினைச்சால் அவரோட உயிருக்கே அது ஆபத்தா முடியும். அதுவும் நீங்க காட்டின இந்த பொண்ணு வேண்டவே வேண்டாம். இந்த பொண்ணோட சாதகமும் உங்க பையனோடதும் சுத்தமா பொருந்தவே இல்லை. சேர்ந்து வாழுற சாதகம் இல்லை. மீறி சேர்த்து வச்சீங்கன்னா அகால மரணம் தான் சம்பவிக்கும். அது யாருக்குன்னு சொல்ல முடியாது.." என்றிட,

 "சின்ன வயசுலயே முடிவு பண்ணது சோசியரே. பையன் அந்த பொண்ணைத்தான் மனசுல நினைச்சுட்டு இருக்கான். எங்க அண்ணன் இறந்து இன்னும் முப்பது கூட ஆகலை. அதுக்குள்ள அவளை கல்யாணம் பண்ணியே ஆகணும்னு சொல்லுறான்" என்றாள் லட்சுமி.

 "மனசு எல்லாத்துக்கும் ஆசைப்படும்தான். ஆனால் மேல இருக்குறவன்ல முடிவு பண்ணனும் யாரை யார் கூட சேர்த்து வைக்குறதுன்னு. மனசை தேத்திக்கோங்க. உங்க பையனோட கல்யாணத்தைத் தள்ளிப் போடுங்க. இந்த பொண்ணோட கல்யாணம் நீங்க யாரும் முடிவு பண்ணாமல் தன்னாலே நடக்கும். திருமணல்மேடு கோவிலுக்குக் கூட்டிட்டுப் போங்க‌. அடுத்து அவன் விட்ட வழி" என்று அந்த மனிதர் முடித்திருக்க செல்லும் போது இருந்ததை விட வரும் போது மனம் இன்னும் பாரமானது லட்சுமிக்கு. 

அவ்வளவு ஆசையோட இருக்குறவன்கிட்ட அவளை உனக்கு கட்டி வைக்கவே கூடாதுன்னு எப்படிச் சொல்லுறது என லட்சுமிக்கு வேதனையாக இருந்தது. அவனிடம் அதை சொல்ல முடியும் என்று தோன்றவில்லை. அதனால் சிவகாமியின் வீட்டிற்கே வந்தாள்.

 "சாதகத்தை வாங்கிட்டுப் போனயே என்ன சொன்னாங்க லட்சுமி"

 "மதினி! நான் என்னென்னு சொல்லுறது. நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது"

 "நீ கலங்கிப் போய் இருக்குறதைப் பார்த்தாலே எனக்கு நெஞ்செல்லாம் அடிச்சுக்குதே லட்சுமி என்னென்னு சொல்லேன்"

 "நம்ம புள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நாம எவ்வளவு ஆசையாய் இருந்தோம். அது நடக்காதுன்னு சொல்லிட்டாங்க மதினி"

 "நடக்காதுன்னா.. கொஞ்ச நாளைக்குத் தள்ளி வைக்கணுமா?"

 "அப்படி சொல்லியிருந்தால் கூட நானும் மனசை தேத்தியிருப்பேனே. அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணவே கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இரண்டு பேரோட சாதகமும் பொருந்தவே இல்லையாம் மதினி. மீறி கல்யாணம் நடந்தால் இரண்டு பேருக்கும் ஆபத்தாம்"

 "ஐயோ இப்போத்தான் உங்க அண்ணனை வாரிக் குடுத்துட்டு நிக்குறோம். இந்த சமயத்துல இதையும் கேட்டு ஆகணும்னு எழுதியிருக்குப் பாரேன். இதை நாம எங்கன்னு போய் முறையிடுறது"

 "அஞ்சுவை திருமணல்மேடு கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லியிருக்காங்க. அதைவிட அவ கல்யாணம் நம்ம யாரோட தலையீடும் இல்லாமல் நடந்துடும்னு வேற சொல்லுறாங்க. எனக்கென்னவோ ரொம்ப ஒரு மாதிரியா இருக்கு. திரு கண்டிப்பா இதை ஏத்துக்கவே மாட்டான். அவன் அஞ்சுதான் எல்லாம்னு எப்பவோ முடிவு பண்ணிட்டான். என்ன செய்யுறதுன்னே புரியல அண்ணி"

 "எனக்கு என்ன செய்யுறதுன்னு நல்லாவே தெரியும் அம்மா. அதுசரி இப்போ உங்களை யார் ஜாதகம் பார்க்கச் சொன்னது. நான் அஞ்சும்மாகிட்டதானே அனுசரணையா இருக்கச் சொன்னேன். அதுக்குள்ள என்ன வேலை பார்த்துட்டு வந்துருக்கீங்க"

 "அது திரு கல்யாணம் பண்ணுறதுக்கு சரியான நேரம் காலம் இதெல்லாம் பார்க்க வேண்டாமா. அதான் போய் காட்டுனேன்"

 "ஒட்டுமொத்தமா வேண்டாம்னு சொல்லிட்டாங்களே இப்போ என்ன பண்ண போறீங்க?"

 "இரண்டு வருஷத்துக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லியிருக்காங்க திரு"

 "ம்மா என்னை பேச வைக்காதீங்க. அஞ்சுவுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்னா நான் எவ்வளவு வருஷம் வேணும்னாலும் காத்திருக்கத் தயார். ஆனால் அவ கூட கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிருக்காரே சோசியர் இப்போ என்ன பண்ணலாம்னு இருக்கீங்க. உங்க மருமகளை வேற ஒருத்தனுக்குக் கட்டி வைக்கப் போறீங்களா"

 "இல்லை திரு.. என்னைக்கா இருந்தாலும் நீதான் என் மருமகன் அதுல எந்த மாற்றமும் இல்லை. இதுல தான் உங்க மாமாவோட ஆசையும் கலந்துருக்கு. அந்த மனுஷன் ஆத்மா நிம்மதியாய் சாந்தி அடையணும்னா உங்க கல்யாணம் நடந்தாகணும். நடக்கும்"

 "மதினி என்ன பேசுறீங்க"

 "நடக்கப் போறதை பத்தி மட்டும் இனி பேசலாம் லட்சுமி. அவருக்கு சாமி கும்பிட்டு முடிஞ்ச உடனே கல்யாணம் பண்ணி வச்சுடலாம்"


 "இல்லை மதினி இரண்டு பேரோட உயிருக்கே ஆபத்துன்னு சொல்லியிருக்காங்க. அவங்க உயிரோட விளையாட எனக்கு இஷ்டமில்லை"

 "அம்மா பேசாமல் இருங்க. அவளைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னா தான் என் உயிருக்கு ஏதாவது ஆகும்"

 "திரு! இது விளையாட்டு விஷயமில்லை. உங்க இரண்டு பேரோட உயிர் சம்பந்தப்பட்டது. அதுல எந்தவித பாதிப்பும் வந்துடக் கூடாது"

 "இல்லை லட்சுமி அப்படி எதுவும் நடக்காது. உங்க அண்ணன் சாமியா இருந்து இனி அவர் புள்ளைங்களைப் பார்த்துக்குவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ  என்ன சொல்லுற"

 "முப்பது முடியட்டும் மதினி. கோவிலுக்கு போயிட்டு வருவோம். அதுக்கப்பறம் மத்த விஷயம் பேசலாம்" அரைமனதாக அவளும் தற்போதைக்கு அந்த பேச்சினை ஒத்தி வைத்தாள்.

 "சரி லட்சுமி" சிவகாமியும் மேற்கொண்டு பேசாமல் அத்தோடு முடித்துக் கொண்டாள்.

"அஞ்சும்மா தூங்குறாளா அத்தை. நான் போய் பார்க்கட்டுமா"

 "இதுல கேட்க என்ன இருக்கு. தாராளமாக நீ போய் பாரு" என்றதும் அவன் வேகமாக அவளறைக்கு ஓடினான். உறக்கத்தில் ஆழ்ந்திருந்த அஞ்சனாவின் முகம் வெகுவாக களைத்துப் போயிருந்தது. தந்தை இறந்ததில் இருந்து சரிவர எதையும் கவனிக்காமல் இருந்ததில் தேகம் மெலிவு கண்டிருந்தது. அவளையேப் பார்த்திருந்தவன் கண்கள் கலங்கியது. 

அந்த கலங்கிய கண்களைப் பார்த்துக் கொண்டிருந்த மரணதேவன் 'இவளுக்கும் உனக்கும் திருமணமா? நடக்காது நடக்காது மானிடா.. இவள் இயமனுக்குச் சொந்தமானவள். இவளை என்னிடம் இருந்து எவராலும் பறித்துச் செல்ல முடியாது. இவளைக் கவர்ந்துச் செல்லத்தானே நான் இவ்விடமே கதியென்று சுற்றிக் கொண்டிருக்கிறேன். நினைத்ததை எல்லாம் செய்து முடிப்பவன் இப்போது நிதானமாக இருப்பதும் இவளுக்காகத்தான். இவள் மனதில் இயமன் நினைவு பதிய வேண்டும். அழுத்தமாய் பதிய வேண்டும். நித்திரையிலுங் கூட பத்திரமாய் அது அழியாத சித்திரமாய் கனவு வரினும் காட்சியாய் தோன்ற வேண்டும். தோன்றும் மானிடா. அன்றவள் சொல்லுவாள் இயமன் என்னவனென்று..." சொல்லியபடி அவளது கேசத்தினை விரலால் கோதிக் கொடுக்க.. அவளது அதரங்கள் சட்டென்று இயமா என முணுமுணுத்தது..

காதலாசை யாரை விட்டது..!




Leave a comment


Comments


Related Post