இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -28 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 04-05-2024

Total Views: 25166


“அப்பா எனக்கு நம்பிக்கையே போயிடுச்சிப்பா. அவன் இல்லாம நான் உயிரோடவே இருக்க மாட்டேன்ப்பா.”என கதறி அழுதாள்.

அவள் அழுகையைக் கூட  யாரோ மூன்றாவது மனிதர் அழுகிறார் என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான் நந்தன்.

ஷாலினியை மருத்துவமனையில்  சேர்த்தப் பொழுது மார்த்தாண்டமே முடிவாக சொல்லிவிட்டார்.

“என்னோட காதலை தான் சேர விடாம பண்ணிட்டீங்க, என் பொண்ணாவது விரும்புறவனை கல்யாணம் பண்ணிக்கிட்டும். எதுக்கு டார்சர் பண்றீங்க? உங்க பையனை சொல்ல தான் உரிமை இருக்கு. என் பொண்ணை சொல்ல உங்களுக்கு எந்த உரிமையுமே இல்லை, அவ இஷ்டப்பட்ட பையன் எந்த ஜாதி மதமா இருந்தாலும் பரவாயில்லைன்னு அவனை தான் கட்டி வைப்பேன்.”  என்று உறுதியாக சொன்னப்பிறகு தான் கிருஷ்ணம்மாள் ஒத்துக்கொண்டார். அப்போதும் கூட நந்தன் “உங்க இஷ்டம்” என்றானே பார்க்கலாம்.

காதலுக்காக காதலர்கள் போராடுவதே தனி அழகு தான். வளவன் வீட்டில் பிரச்சனை இல்லை, ஷாலினி வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை எதிர்த்து அவளது காதலுக்காக போராடி அதில் வெற்றியும் கண்டு  விட்டாள்.

அவள் வென்றதால், இனி வரும் காதலுக்கு அந்த வீட்டில் தடை இருக்காது.

யுகி காருடன் ரயில்நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்தான், பின்ன 10 மணி ரயிலுக்கு இவன் 8 மணிக்கே வந்து நின்றால் வெகுநேரம் தானே காத்திருக்க வேண்டும். '9.30 க்கு போனா போதும்டா’ என்று மார்த்தி சொல்லியும் யுகி கேக்கவில்லை, அவன் பூனை விசயத்தில் இன்னும் சிறுப் பிள்ளைப் போலவே நடந்துக் கொண்டான்.

அந்தா இந்தா என்று ரயிலும் வந்துவிட ஒவ்வொரு பெட்டியாக ஓடி ஓடி அவனது பூனையை தேடினான்.

வளவன் எந்த பெட்டியில் வருகிறோம் என்று கூட முன்பே சொல்லிருந்தான். அப்படி இருந்தும் யுகி ஒவ்வொரு பெட்டியாக ஓடும் போதே அவன் பூனையின் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறான் என்று பார்ப்பவர்களுக்கு சொல்லாமல் சொன்னது.

ரயிலில் இருந்து இறங்கிய வளவன் யுகி ஓடி வருவதைப் பார்த்ததும்,

“எதுக்குடா இவ்வளவு அவசரமா ஓடி வர? ட்ரெயின்ல இருந்து இறங்கி இங்க தானே நிற்கப்போறோம்.”

“உன்னைய பார்க்க எவன் வந்தது ஒத்து.. நான் பூனையைப் பார்க்கணும்.” என்று வளவனை தள்ளிக் கொண்டு நிலாவைப் பார்க்கப் போக,

“டேய் நான் தான்டா உங்க வீட்டு மாப்பிள்ளை.” 

“அது வீட்டுக்கு, எனக்கு அவ தான் ராணி." என்றவன் எட்டி நிலாவின் ஜடையை பிடித்து இழுத்து அவன் அருகில் கொண்டு வந்தவன் அவள் காதில் எதையோ சொன்னான்.

“அப்படியா..?”

“ஆமா”

“அம்மு எதா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்கலாம் டைம் ஆகுது.” என வளவன் அவசரப்படுத்த.

“யுகி..”

“ம்ம்.”

“உன் அண்ணன் வராரா?”

“ஆமா அவனுக்குன்னு தனி கார் போயிருக்கு.”

'மூனு வருஷம் பார்க்காமல் டிமிக்கி கொடுத்துட்டு இருந்தேன், அதுக்கெல்லாம் சேர்த்து வெச்சி செய்வானே. கடவுளே இன்னைக்கும் ஏதாவது வேலைன்னு போக வெச்சிடு, உனக்கு சக்கரைப் பொங்கல் வைக்கிறேன்.' என கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.

“பூனை நீ என்ன வேண்டுதல் வைப்பன்னு நல்லாவே தெரியும். சோ, சேட் அது நடக்க வாய்ப்பே இல்லை. அவன் இல்லாம ஒன்னும் பண்ண மாட்டார் அப்பா."

“பேசிட்டே இருக்காம வண்டியை எடு, பாரு அண்ணன் ஷாலுவைப் பார்க்க பறவா பறக்குறாரு.”

“எப்படி உன்னையப் பார்க்க இவன் பறந்துட்டு வந்தானே அப்படியா?” என வளவன் நிலாவின் காலை வார.

“ம்ம் இருக்கலாம் யுகி எப்போமே அப்படி தான் இருக்கான். நீ புதுசால சுவத்தைப் பார்த்து சிரிக்கிறது கண்ணாடியைப் பார்த்து வெட்கப்படறதுன்னு அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்க.”

“ஓ இது வேற நடக்குதா..?” 

“இதுக்கு மேலையும் நடக்குது, என்னமோ காணாத பொண்ண காதலிக்கிறது மாதிரியும், இப்போ பொண்ணுப் பார்க்கப் போற மாதிரியும் ஒரே வெட்கம் தான் இல்லண்ணா.”

“பாப்பா சும்மா இரு.. இதுக்கு தான் வயசு பொண்ணு வீட்டுல இருக்கும் போது அண்ணனுக்கு கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொல்றது.” என ராஜி நிலாவிற்கு கல்யாணம் செய்யவில்லையே என ஆதங்கத்தை சொல்ல,

“அம்மா நான் விளையாட்டுக்கு பேசிட்டு இருந்தா நீ எதையும் எதையும் முடிச்சிப் போடற?”

“என்ன விளையாட்டுக்குப் பேசற..?”

“அம்மா விடும்மா அவ என்னைய தானே பேசறா..”

“ஆமாண்டா நீயும், யுகியும் கொடுக்கற செல்லத்துல தான் இந்த ஆட்டம் ஆடறா.. இங்க இருந்து போகும் போது  பொட்டி பாம்பாட்டம் அமைதியா இருந்தவ, இப்போ போலீஸையே எதிர்த்துப் பேசற அளவுக்கு வந்துட்டா.”

“அந்த கதை என்ன கதை? எனக்கு தெரியாத புதுக்கதையா இருக்கு?” என்று யுகி நிலாவைப் பார்த்து கேக்க,

“ரொம்ப முக்கியம் அவங்க தான் என்னைய கிண்டல் பண்றாங்கன்னு தெரியுதுல. அப்புறம் எதுக்கு கேக்கற?”

“சரி விடு நீயே சொல்லும் போது சொல்லு ஓகேவா.”

“ம்ம்” என்று அமைதியாகிவிட்டாள். அப்படி தான் பார்ப்பவர்களுக்கு தெரிந்தது. ஆனால் உள்ளுக்குள் ஒரு பிரளையமே உருவாகிக் கொண்டிருந்தது.

பெண் பார்க்கச் செல்லும் வளவனுக்கு கூட அந்த அளவிற்கு உணர்வுகள் எழவில்லை, நிலா தான் உணர்வின் பிடியில் சிக்கித் தவித்தாள். பின்பு இருக்காதா? மூன்று வருடம் கழித்து நந்தனைப் பார்க்கப் போகிறாளே. இந்த எட்டு வருடத்தில் அவனுடன் பேசிய வார்த்தைகளை விரல் விட்டுக் கூட எண்ணி விட முடியாது. இவளைக் கண்டால் அவனே விலகிச் சென்று விடுவான், இந்த மூன்று வருடம் அதற்கும் தேவையில்லாமல் போய்விட்டது.

இனி இங்கு தான் இருக்கப் போகிறாள் என்று தெரிந்தால் பழைய மாதிரி சண்டைக்கு வருவானோ, அடிப்பானோ என்று பயத்தையும் தாண்டி அவனைப் பார்க்கப் போகிறோம் என ஒரு எதிர்பார்ப்பு  எழுந்தது நிலாவிற்குள்.


Leave a comment


Comments


Related Post