இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-30 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 05-05-2024

Total Views: 28872

அத்தியாயம்-30


இருவரும் ஒருவராய் அந்த மெத்திருக்கையில் படுத்திருக்க, 

“ஏ கோழிக்குஞ்சு..” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான்.

 முகம் முழுதும் செவ்வரளியாய் சிவக்க அவன் மார்பில் முகம் புதைத்திருந்தவள் “ம்..ம்ம்..” என்க, 

“இதுக்குத்தான் வீட்டுக்கு போலாம் மாமா வீட்டுக்கு போலாம் மாமானு சொன்னியா?” என்றான்.

அதில் மேலும் நாணம் கொண்டு தன் முகத்தை அவன் ரோமம் படர்ந்த மார்பில் முட்டியவள், “மா..மாமா..” என்று குழைய, 

வாய்விட்டு சிரித்தவன், “மண்டைய உள்ள புதைச்சுடுவ போலயேடி..” என்க, 

“ப்ச்..” என்றாள்.

அவள் கார்குழலுக்குள் கரம் நுழைத்து அவள் முகம் நிமிர்த்தியவன், மற்றைய கரம் கொண்டு அவளிடை பற்றி தன் முகத்திற்கு நேரே அவளைக் கொண்டு வர, சட்டென இழுபட்டதில் பதறி அவன் தோள்களைப் பற்றிக் கொண்டு திருதிருத்தாள்.

இரவு விளக்கில் மினுமினுத்த அந்த திராட்சைப்பழ விழிகளில் மீண்டும் மயங்கியவன், அவள் மூக்குடன் தன் மூக்குரசி நெற்றி முட்டினான். ஒருவர் சுவாசத்தை மற்றவர் சுவாசித்திருக்க, சில நிமிடங்கள் முன்பு நடந்த தித்திப்பு அவர்கள் மனதில் வலம் வந்தது.

கூடத்தில் அமர்ந்திருந்தவள் சில நிமிடங்களில், 

“மாமா.. ரொம்ப டயர்டா இருக்கு.. எனக்கு குளிக்கனும்” என்க, 

“நான் வந்து குளிப்பாட்டி விடணுமாடி கோழிக்குஞ்சு?” என்றான். 

அதில் நாணம் பூசிய கன்னங்களை மறைத்து கோபமுகம் காட்டியவள், “ரூமுக்கு போகனும்னு சொல்ல வரேன்” என்க, 

சிரித்தபடியே “வா..” என்றான்.

அங்கு சில மணிநேரம் முன்பு அர்ஷித்தை இறுக அணைத்துக் கொண்டிருந்த யாழினி விழிகளில் இன்பமாய் விழிநீர் பொழிந்தது‌. 

“செத்துட்டேன் தெரியுமா?” என்று இதோடு பத்தாவது முறையாகக் கூறியவள் நாடி பற்றி நிமிர்த்தி,

 “அதான் உயிர்ப்பிக்க நான் இருக்கேன்ல?” என்று கூறி கண்ணடித்தான் அர்ஷித்.

“நீங்க உயிர் கொடுத்தா மீண்டும் மீண்டும் சாக தயார்” என்று அவள் கூற, 

“இப்ப மட்டும் நல்லா வக்கனையா பேசு. ஆரம்பத்துல அண்ணாக்கு புடிக்காது ஆட்டுகுட்டிக்கு புடிக்காதுனு கதை சுத்து” என்றான்.

“ப்ச்..” என்று கோபமுகத்துடன் அவள் நிமிர,

 “பின்ன என்ன? நீ தான என்னை கல்யாணம் பண்ணிக்கப்போறது?” என்று அர்ஷித் வினவினான்.

 “நான் கல்யாணம் பண்ணிகிட்டாலும் எல்லாரோட சம்மதமும் எனக்கு வேணும்” என்று அழுத்தம் திருத்தமாய் அவள் கூற, 

“அப்ப யாராவது மறுத்தா என்னை வேணாம்னு சொல்லிடுவியா?” என்று கேட்டான்.

“ம்ஹும்..” என்று தலையாட்டியவள், 

“அவங்களை சம்மதிக்க வச்சு கட்டிப்பேன்” என்று கூறி அணைத்துக் கொண்டாள்.

 “என்ன திடீர்னு இன்னிக்கு தைரியம் வந்துடுச்சு?” என்று தானும் அவளை அணைத்துக் கொண்டவன் வினவ,

 “ப்ச்.. என்ன வந்ததுல இருந்து கேள்வியா கேட்குறீங்க? ஏதோ இன்னிக்கு ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு.. என்னால தாங்க முடியலை. யஷ்வா அண்ணாக்கு பயந்தவளே அவர்கிட்ட எனக்கு நீங்க வேண்டும்னு சொல்லி அழுதுட்டேன் தெரியுமா?” என்றாள்.

லேசாய் சிரித்தவன், ‘ஆஹாங்’ என்பது போல் அவளைப் பார்க்க, 

அவன் மார்பில் குத்தியவள், “நிஜமாதான்” என்றாள்.

 “அவுச்.. நம்புறேன்டி..” என்று அர்ஷித் தன் மார்பை தேய்த்துக் கொள்ள, 

“நம்பணும்” என்று விரல் நீட்டி பத்திரம் காட்டியவள், 

“உங்களுக்கு ஏன் என்னை புடிச்சுதுனு கேட்கவே மாட்டேன். ஏன்னா என்கிட்டயும் உங்களை பிடிச்சதுக்கு காரணம் இல்லை. ஆனா உங்களைத் தவிர வேற யாரையும் யோசிச்சுப் பார்க்க முடியாது. ஆமா.. நான் தான் இதெல்லாம் மறுத்தேன், வெறுப்பது போல நடிச்சேன்.. ஆனா எதுவும் உங்களை ஏமாற்ற இல்லை. என்னை நானே ஏமாற்றிக்க. அந்த வேஷம் கொடுத்த வேதனைய வலிக்க வலிக்க உணர்ந்துட்டேன்..” என்றாள்.

அவள் கண்ணோரம் வடிந்த கண்ணீரை தன் கட்டைவிரல் கொண்டு துடைத்தவன்,

 “என்னிக்காவது ஒருநாள் நீ இப்படி வருவனு எனக்கு தெரியும் டார்லிங்..” என்று கூற, 

அவன் கண்களை ஆழ்ந்து நோக்கி “ஐ லவ் யூ..” என்றவள் நுனிவிரல்களில் எம்பி அவனிதழை சிறை செய்தாள்.

இத்தனை நேரம் அவள் பேசியதில் எழாத அதிர்ச்சியை அந்த இதழ் தீண்டலில் பெற்றவன் அவளை இறுக அணைத்துக் கொண்டிட, அவள் தொடக்கம் அவன் தொடர்கதையானது!

அவன் எத்தனை வருட காதல் இன்று கைகூடிவிட்டது! அதே சந்தோஷத்துடன் அவளை கூட்டிக் கொண்டு தனக்கு பிடித்தமான இடங்களை வலம் வந்தவன் நடுவே யஷ்வந்த் வெற்றியை தொடர்புகொண்டது பற்றி தனது பி.ஏ குணா மூலம் தகவல் பெற்றான். பிரச்சினை என்று புரிந்தபோதும் யஷ்வந்த் சமாளித்து விடுவான் என்றே தோன்ற சில நிமிடங்களில் அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பியிருந்தான்.

இரவு உணவை முடித்துக் கொண்டு யாழினி வீட்டிற்கு வர, மனைவிக்கு பழச்சாறு மட்டும் தயாரித்துக் கொண்டவன் யாழினியை நோக்கினான். 

எப்போதும் மனதில் எழும் குற்ற குறுகுறுப்பின்றி நிமிர்வாய் அண்ணனை நோக்கியவள்,

 “தேங்ஸ் (அ)ண்ணா” என்க, மென்மையான புன்னகையுடன் தலையசைத்தான்.

“குட் நைட் (அ)ண்ணா” என்று அவள் கூற,

 “குட் நைட் டா” என்றுவிட்டு தங்களறைக்கு வரவும், குளித்து முடித்து இலகுவான உடைக்கு மாறியிருந்தவள் அவன் கொண்டு வந்து தந்த பழச்சாறை முழுதும் குடித்து முடித்தாள்.

அவள் நலன்களை ஒன்றுக்கு பத்து முறை விசாரித்து விட்டு அவளுடன் அவன் படுக்கையில் விழவும், சில நிமிடங்களில் அவன் மார்பு ரோமங்களில் அவள் விரல் கோலமிட, 

“ஏ.. என்னடி பண்ற?” என்றான்.

“மாமா..” என்று அழைத்தவள் குரலில் இன்னதென்று புரியாத ஒரு தவிப்பு, ஏக்கம்… 

“என்னடி?” என்று கண்கள் மூடியபடியே அவன் கேட்க, 

“என்னை பாருங்களேன்..” என்றாள். 

அவள் புறமாய் திரும்பியவன் “என்ன?” என்க, 

அவன் கண்களைப் பார்த்தவளின் கண்களில் ஒரு அலைப்புறுதல்.

அதைக் கண்டவனுக்குள் தீவிரமும் ஆர்வமும் தோன்றவே, “சனா..” என்று மென்மையாய் அழைக்க, 

“ம..மாமா.. “ என்று தயக்கத்துடன் முன் வந்தவள் செயலை குறும்புடன் வேடிக்கைப் பார்த்தான்.

அவள் அப்படியே தவிப்பாய் இருக்கவும், “என்னடி?” என்று வினவினான். 

“என்..எனக்கு நீங்க வேணும்..” என்று அவள் தவிப்பாய் கூற,

 “நான் தான் கூடவே இருக்கேனே..” என்றான்.

“ம்ஹும்..” என்று மறுப்பாய் தலையசைத்தவள், தன்னிலை விளக்க புரியாமல், முடியாமல் தத்தளித்து, “சொல்லத் தெரியலை மாமா..” என்றாள்.

“ஆஹாங்? சொல்ல தெரியலைனா எனக்கு எப்படி புரியும்?” என்று அவன் கேட்க, 

“கண் மூடுங்க” என்றாள்.

 “கண்ண மூடணுமா?” என்று அவன் சிரிப்பாய் வினவ,

 “ஆமா.. மூடுங்க..” என்றாள்.

 முத்து முறல்கள் பிரகாசிக்க சிரித்தபடி அவன் விழி மூட, அவனிதழை தனதாக்கியிருந்தாள்.

எதிர்ப்பார்த்தது தான்.. ஆனால் இன்பமாய் தித்தித்தது! தன்னை அவள் நாடுகின்றாள்.. தன்னை தேடுகின்றாள்.. தன்னை அடைய வேண்டி தவிக்கின்றாள்.. தன்னுள் மூழ்க துடிக்கின்றாள்.. தன்னவள் தன்னுள் தொலைய ஏங்குவதில் தான் கேள்வனுக்கு எத்தனை கர்வம்!

அவள் அழகாய் துவங்கிய அச்சரத்தை அமுதாய் ஏற்று, தானே தன் முதல் படியை எடுத்து வைத்தான். அச்சம் ஒருபுறம் பயமுறுத்த, “மா..மா” என்பதையே அதற்கு தாரக மந்திரமாக்கி உச்சரித்தாள்.

நாணம் ஒருபுறம் தள்ளாடச் செய்ய, அவன் ரோமங்களை அழுந்த பற்றிக் கொண்டாள். தன்னவளை பூ போல் கையாண்டவன் மெல்ல மெல்ல தங்கள் வாழ்வின் அடுத்த படிக்கான அச்சரங்களை அவளில் பதிக்க, 

“மாமா பயமா இருக்கு” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

ஏனென்று புரியாத பயத்தில் மேனி நடுங்கியபோதும் அதில் இனம் காண இயலாத ஒரு சிலிர்ப்பு.

 “பேபி.. ஜஸ்ட் சில் சனா..” என்று அவள் முகம் தாங்கியவன், “ஏ கோழிக்குஞ்சு.. இங்க பாருடி..” என்றான்.

பயத்துடன் அவன் கண்களை அவள் ஏறிட்ட நொடி, தன்னிதழ் கொண்டு வாக்குறுதி எழுதிக் கொண்டு அவளை காயப்படுத்தாமல் காப்பதாய் உணர்த்தியவன் தன் விரலெனும் தூரிகையால் அவள் மேனியில் வண்ணம் தீட்டினான்.

அழகாய் அவளை கையாண்டவன் “மாமா..” “யஷு மாமா..” “மிஸ்டர் பீஸ்ட்..” என்ற அழைப்புகளைக் கேட்டு சிலிர்க்க, பூவை வருடும் தென்றலாய் உருவெடுத்து காதலோடு அவளுடன் சங்கமித்தான். 

அடடா.. இந்த முரடனுக்கு மென்மையும் வருமோ? என்று வியந்து குளிர்த்த பெண்மை அவனிடம் தன்னை முழுதாய் ஒப்புக் கொடுக்க, காதலாகிய கூடல் அந்த பஞ்சுமெத்தையெனும் மேடையில் அரங்கேறியது.

பூவவளை வாட்டி வதைக்காமல் தன் தேடல்களை முடித்துக் கொண்டு அவள் தேவைகளையும் தீர்த்து வைத்தவன் வலம் வந்த நினைவுகளிலிருந்து மீண்டு, தன் நெற்றியை அவள் நெற்றியிலிருந்து பிரித்தான்.

அவன் நெற்றியில் தன் தலையை சாய்த்திருந்தவள் உறக்கம் தழுவியிருக்க, அவன் தலையை நகர்த்தியதும் விழவிருந்த அவள் தலையை கரங்களில் தாங்கி தன் மார்பில் படுக்க வைத்தவன் மனதிலும் இதழிலும் இதமான நிறைவு குடிபுகுந்திருந்தது.

தனக்கு வாகாய் அவன் மேல் கையிட்டு படுத்துக் கொண்டவளைக் கண்டவனுக்கு அத்தனை நேரம் அவள் கொடுத்த காதல் இன்பங்களை எண்ணி ஆச்சரியமாக இருந்தது.. 

'நம்மளவிட ரொம்ப சின்ன பொண்ணு, படிக்குற பொண்ணுனு இருந்த கட்டுப்பாடெல்லாத்தை ஒரு நிமிஷத்துல சுரண்டி எடுத்துட்டியேடி' என்று முனுமுனுத்துக் கொண்டவன், அவள் நெற்றியில் முத்தமிட, அவனது மீசை தாடி கொடுத்த குறுகுறுப்பில் “ப்ச்..” என்று அசைந்துக் கொடுத்தாள்.

 அதில் அழகாய் சிரித்துக் கொண்டவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள, தூக்கம் அவனுக்கு தொலைதூரம் சென்று அவனை வேடிக்கை பார்த்தது.

அவளில் தொலைந்த தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டவன் அவள் வாசம் உணர்ந்தபடியே விழிமூடி சில மணி நேரங்களுக்குப் பின் கண்ணயர்ந்தான். 

மறுநாள் காலை சூரியவொளி முகத்தில் மோதியதில் போர்வையை நன்கு போர்த்திக் கொண்டு பாவை திரும்பிப் படுக்க, திரைச்சீலைகளை ஒதிக்கியவனோ அவளருகே வந்தமர்ந்த மெல்ல போர்வை நகரத்தி அவள் முகம் பார்த்தான்.

“ப்ச்..” என்ற ஒலியோடு போர்வையை பிடித்துக் கொண்டவள் தூக்கத்தை தொடர முயல, தன் மீசை கொண்டு அவள் காது மடலை உரசியவன், “ஏ கோழிக்குஞ்சு..” என்றான். 

“மாமா.. ப்ளீஸ்.. ஃபைவ் மினிட்ஸ்” என்று அவள் கூற,

“மணி பத்தாகப்போகுதுடி.. காலேஜ் போகலையா?” என்று கூறினான்.

அதில் “பத்தா..” என்று அலறியபடி எழுந்தவள் தன்னோடு போர்வையை அணைவாய் பிடித்துக் கொண்டு கடிகாரத்தைப் பார்க்க, அது மணி எட்டு என்று காட்டியது.

அதில் தன்னவனைத் திரும்பிப் பார்த்தவள் முறைக்க, நாக்கை உள்கன்னத்தில் முட்டி சிரித்தவன், ‘சும்மா’ என்று இதழசைத்தபடி அவளை நெருங்கி அமர்ந்தான்.

“மாமா..” என்று அவள் நகர்ந்து அமர, அதற்கு வழியில்லாமல் பிடித்துக் கொண்டவன், 

“அர்ஜுனுக்கு நீ லீவ்னு சொல்லிட்டேன்” என்றான். 

அவள் உடல் ‘ஹப்பாடா’ என்று எண்ணி தளர்வு கொள்ள, மனம் மாறாய் படபடத்தது.

 “அதுக்கு?” என்று அவள் தடுமாற, 

“அதுக்கு..” என்றபடி அவளை நோக்கிக் குனிந்தான்.

இருவருக்குமாக நூலிழை இடைவெளி இருக்கையில்,

 “மாமா நான் இன்னும் ப்ரஷ் பண்ணலை” என்று படபடப்பாய் அவள் கூற, 

அதில் வாய்விட்டு சிரித்தவன், “போடி கோழிக்குஞ்சு.. அன்-ரொமான்டிக் வைஃப்” என்றபடி அவளை விட்டான்‌.

அவன் கூற்றில் மீண்டும் முறைத்தவள் கண்டு கண்சிமிட்டி சிரித்தவன், “ஹீட்டர் போட்டிருக்கேன்.. குளிச்சுட்டு வந்து ரெஸ்ட் எடு” என்க,

 அவன் தோளில் சாய்ந்து சரியென தலையாட்டியவள் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

அவள் தோள் சுற்றி கரம் போட்டவன் “என்னடி? ம்..முடியலையா?” என்று கேட்க,

 “கொஞ்சம் டயர்ட்” என்றாள் நாணம் தடுக்கத் துடித்தும் வெளி வந்த மெல்லிய குரலில்.

ஒரு மந்தகாச புன்னகை சிந்தியவன், “சரி போ.. குளிச்சுட்டு வந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடு” என்று கூற, 

“ம்ம்..” என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு “குட் மார்னிங் யஷு மாமா..” என்று ஓடினாள்.

குளித்து உடை மாற்றி வந்தவளுடன் கீழே யஷ்வந்த் வர, யாழினியும் அதிகாலையே ஊர் திரும்பி, ஓய்வெடுத்துவிட்டு குளித்து தாயாரன நிலையில் மற்றவர்களும் உணவுண்ண வந்தனர்.

“அஞ்சுமா.. காலேஜ் போகலையா?” என்று யமுனா வினவ, 

திருதிருவென சில நொடி விழித்தவள், “த..தலைவலி அத்தை” என்றாள். 

“அச்சுச்சோ.. என்ன உனக்கு அடிக்கடி தலைவலி வருது? என்ன ஏதுனு பார்த்தியா?” என்று அவர் வினவ, 

“அ..இது..வெயில்லுக்கு வந்த வலிதான் அத்தை.. சாப்டு படுத்தா சரியாயிடும்” என்றாள்.

அவளை ஏற இறங்க ஆராய்ச்சியாய் பார்த்தவர், “சரிடாமா” என்க, 

‘ஹப்பாடி’ என்ற நிலையில் உணவுண்ண அமர்ந்தாள். அந்த உப்பில்லா உணவு அவளை சோர்வடையச் செய்ய, தன்னவனைப் பார்த்து உணவுடன் சேர்த்து அவனையும் கோபமாய் மென்று முழுங்கினாள்.

அமைதியாக உணவு வேளை முடிந்த யாவரும் அவரவர் பணிக்கு திரும்ப, இங்கு யாழினியின் அறையில் ஆச்சரியம் விலகாத மதுமஹதி, “நிஜமாவா யாழிக்கா?” என்றாள்.

“நிஜமாதான்டி” என்று யாழி சிரிக்க, 

“உன்ன நம்பமாட்டேன்” என்றவள் அர்ஷித்திற்கு அழைத்தாள்.

 யாழினி அவள் செயலை புன்னகையுடன் பார்ப்பதையும் ஆச்சரியமாய் பார்த்தவள் அழைப்பு ஏற்கப்பட்டதும் பேச முனைய,

 “நம்பு மதுமா நம்பு.. உங்கக்கா ப்ரபோஸ் பண்ணிட்டா” என்றிருந்தான், அர்ஷித்.

“சீரியஸாவே நம்ப முடியலை மாமா.. எப்படி இது சாத்தியமாச்சு?” என்று அவள் கேட்க, 

“ரொம்ப தான்டி ஓவரா போற” என்று யாழினி கோபம் கொண்டாள். 

அதில் சிரித்துக் கொண்ட அர்ஷித், “அந்த அதிசய வரலாறை பத்தி நீ அவளைதான் கேக்கணும்” என்று அவன் கூற,

 “ம்ம் கேட்குறேன் கேட்குறேன்” என்றவள் 

“மாமா.. நான் ரொம்ப ஹாப்பி.. எனக்கு ட்ரீட் வைங்க” என்றாள்.

“உனக்கில்லாமையா?” என்று அர்ஷித் கூற, 

“ம்க்கும்..” என்று யாழினி குரலை செறுமினாள்.

 “ஓ.. பொஸஸிவ்நெஸ்.. இருக்கட்டும் இருக்கட்டும்” என்ற மது அர்ஷித்திடம் பேசிவிட்டு அழைப்பை வைக்க, நேற்று நடந்த கதையை மொத்தமாய் கூறி முடித்தாள்.

“இது நடக்கும்னு எனக்கு தெரியும்.. என்ன இவ்வளவு சீக்கிரம் எதிர்ப்பார்க்கலை யாழி க்கா.. நிஜமா ரொம்ப ஹாப்பி.. அர்ஷித் மாமா உங்களை ரொம்ப ரொம்ப நல்லா பார்த்துப்பாரு” என்ற மது சற்றே தயங்கி, 

“அ..ஆனா மாமா..” என்று இழுக்க, 

“அவருக்கு என்னை பிடிக்காது. இந்த பேச்சு வந்தா உடனே கொலைகார குடும்பத்திலிருந்து பொண்ணெடுக்குறதானு தான் கேட்பாரு. எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் நம்ப வைக்க முடியாதுனு புரிஞ்சுகிட்டேன் மது. அதுக்காக அவமானம் செய்றவர்கிட்ட போய் நிற்கவும் மாட்டேன். எனக்கான சுயகௌரவத்தை கண்டிப்பா அவர் குடுக்கணும். குடுக்க வைப்பேன்.. அர்ஷித் பொண்டாட்டிக்கு அவ்வளவு சீக்கிரம் மரியாதை இல்லாம போயிடுமா?” என்று கேட்டு கண்ணடித்தாள்.


Leave a comment


Comments


Related Post