இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 22 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 05-05-2024

Total Views: 17121

பாவை : 22

 யாரோ வரும் சத்தம் கேட்டு பட்டென திரும்ப அங்கே யாருமேயில்லை. நிழல் மட்டும் வந்து மறைந்துச் செல்வது போன்று தோன்றியது.

 அக்கா வருவதற்குள் இதனை வைத்துச் செல்ல வேண்டுமென நினைத்தவளோ அப்படியே அதனை தன் கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

 பின் அந்த இடத்தில் வைத்து விட்டு சத்தமில்லாது அறையிலிருந்து வெளியேறி எதிரே இருந்த தன் அறைக்கு வந்தாள். படுக்கையில் அமர்ந்து கைபேசியை நோண்டிக் கொண்டிருந்த நந்தன் அவளைக் கண்டு புன்னகைத்தான்.

 “என்ன சத்தமேயில்லாம வர்றே ?” 

 “ஒன்னுமில்லை உங்களை பயமுறுத்த நினைச்சேன் “ என்று கிண்டலாக கூறிக் கொண்டு கபோர்ட் நோக்கிச் சென்றாள்.

 பின் இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியறலைக்குள் புகுந்தவளோ நேரம் சென்று வந்து படுக்கையில் அமர்ந்தாள்.

 “தூங்கலாம்மா ?”

 “தூங்கலாம் நந்தன் “ என்க, படுக்கையில் சரிந்தவனோ மனைவியையும் சேர்த்து சரிக்க, இருவரின் விழிகளும் சந்தித்துக் கொண்டது.

 “ஐ லவ் யூ அஞ்சு “ கெஞ்சிக் கொண்டே தன்னோடு இறுக்கி அணைக்க,

“லவ் யூ நந்தன் “ அவனின் செயலுக்கு இணைந்துக் கொண்டே தன்னைக் கொடுத்தாள்.

 முன்னுச்சியில் இதழ் பதித்தவனோ அப்படியே தன் கரங்களை மனைவியின் மேனியில் மையலோடு பதிக்கவே, கூச்சத்தில் நெலிந்தவளோ விளக்கினை அமர்த்தக் கூறினாள்.

 மறுநாள் பெண்கள் இருவரும் ஷாப்பிங் செல்ல கிளம்பி வரவே, ஹாலில் அமர்ந்து கவிநயா குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

 “என்னக்கா நீங்க வரலையா ?”

 தன் கணவன் வேண்டாமென கூற அதனால் தான் வரவில்லை என்று கூறவா முடியும் ?

 “இல்லை அஞ்சனா. கொஞ்சம் வேலை இருக்கு “ என்க,

 “சரிக்கா. ஏதாவது வாங்கிட்டு வரவா ?”

 “அதெல்லாம் வேண்டாம் “ என்கவே, இருவரும் கிளம்பிச் சென்றனர்.

 அஞ்சனாவின் இஸ்கூட்டியில் தான் இருவருமே கிளம்பினர். பேசிக் கொண்டே ஒரு மணி நேரப் பயணத்திற்கு பிறகு ஷாப்பிங் மால் வந்து நின்றனர்.

இறங்கிய இருவரும் உள்ளேச் செல்லப் பார்க்க, தன் துப்பட்டா எதிலோ மாட்டிவிட எடுக்க திரும்பிய தீப்தி மகிழனைக் கண்டாள்.

‘சார் ஏன் இங்க இருக்காரு ?’ யோசிக்க, அவனோ சட்டென தன் பார்வைச் செல்லும் திசையை மாற்றிக் கொண்டான்.

“என்னாச்சு தீப்தி ?” 

“ஒன்னுமில்லை அண்ணி “ என்றவளோ எதார்த்தமாக கூட வந்திருக்கலாம் என நினைத்து உள்ளேச் சென்று விட்டாள்.

நாளை விடுமுறை நாள் என்பதால் எப்படியாவது தீப்தி வீட்டிற்குச் சென்றால் தங்கையைப் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தாள் மகிழன்.

ஆனால் அவளின் முகவரியை எப்படி கண்டு பிடிப்பது ? நினைக்கும் போது தான் அவனின் டேபிளில் மீது ஏதோ ஒரு படிவம் இருப்பது தெரிந்தது.

அதில் மாணவர்கள் பெயர்கள் முகவரியோடு இருக்கவே, நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டவனோ தீப்தி பெயரைத் தேடி எடுத்து முகவரியை குறித்துக் கொண்டாள்.

“தீப்தி நல்லா எழுதிருக்கா. சூப்பரா இருக்கு. ரைட்டிங் ஸ்டைல் “ என்ற நினைத்தவனோ சட்டென விழித்துக் கொள்வதுப் போல் முகத்தை அசைத்தான்.

மறுநாள் அந்த முகவரிக்குச் செல்ல கிளம்பி அந்த ஏரியாவிற்கு வர, அவர்களின் எதிரே அஞ்சனா, தீப்தி இருவரும் சென்றனர்.

அஞ்சனா ஹெல்மெட் அணிந்திருக்க, தீப்தி பின்னால் அமர்ந்திருக்க அவளைத் தான் கண்டான். முன் ஓட்டிச் செல்வது உடல்வாகு வைத்துப் பார்க்கும் போது தங்கையாக இருக்குமோ என்ற நினைப்பில் அப்படியே திரும்பி பாலோ செய்ய ஆரம்பித்தான்.

ஒரு வழியாக மாலின் முன் நிறுத்தி ஹெல்மெட்டை கழட்டியப் போது தான் ஐஸ்வர்யா என்று உறுதியானது. அப்படியே பின் தொடர நினைக்கக் தீப்தி கண்டு விட்டாள்.

இனி மறைமுகமாக தான் காண வேண்டுமென நினைத்த மகிழன் அவர்கள் விழிகளில் விழாதுப் பின் தொடர்ந்தான். 

இருவரும் உடை எடுக்கும் பிரிவுக்குத் தான் சென்றிருக்க, “அண்ணி இங்க பாருங்க, இந்த டாப் எனக்கு எப்படி இருக்கும் ?” தீப்தி கேட்க,

“இது கலர் கொஞ்சம் டல்லா தெரியுது. காலேஜ் போக சூட் ஆகாது. வேற பாரு ?” என்கவே, இன்னொன்றை எடுத்துக் காட்டினாள்.

“இது கொஞ்சம் ஓகே தான். எனக்கு இது எப்படி இருக்கு ?” என்று தன் மேனியில் ஒன்றை வைத்துக் காட்ட, அவளுக்கு நேராக இருந்த மகிழன் அப்படியே தன் தங்கையை விழி கூட அசையாதுக் கண்டாள்.

அவளின் செய்கை, பேச்சு, சிரிப்பு, முக அமைப்பு அனைத்துமே தங்கையோடு பொருந்தியிருக்க, இதன் பின் இவள் தன் தங்கை இல்லை என்று கூறினால் நம்ப இவன் என்ன முட்டாளா ?

“அண்ணி நான் போட்டு பார்த்திட்டு வந்துறேன் “ எனக் கூறி தீப்தி சென்று விட, தனியாக இருந்த அஞ்சனாவின் முன்னேச் சென்று நின்றான்.

“ஐஸ்வர்யா “ என்க, உடையின் மீது கவனமாக இருந்தவளோ தன் பெயரை அழைத்துக் கூற நிமிர, முன்னே கைகட்டிக் கொண்டு நின்றான் மகிழன்.

தன் அண்ணனைக் கண்டவளின் விழிகளோ விரிய, திரும்பி தீப்தியை எங்கே என்று தேடியவளோ அங்கிருந்து நகரப் பார்க்க, பின்னாலே வந்தான்.

“ஐஸ்வர்யா நில்லு. எதுக்கு ஓடுற ?” கீல்ஸ் அணிருந்தவளோ வேகமாக நகர முடியாதுப் போக, முன்னே வந்து கரம் நீட்டி தடுத்து நின்றான்.

அமைதியாக தலை குனிந்தவளோ படபடப்போடு நிற்க, “ஏன் இப்படி பண்ணுனே சொல்லு  ?” சீற்றமாய்க் கேட்கவே, அனைவரும் அவர்களைத் தான் கண்டனர்.

“நான் உன் கிட்ட பேசணும்.  முதல்ல நீ வா வீட்டுக்கு போகலாம் “ என்றதும், வேகமாய் நிமிர்ந்தவளோ அண்ணனைக் கண்டு எச்சில் விழுங்கினாள்.

“யார் நீங்க ? எனக்கு நீங்க யாருன்னு தெரியாது. வழியை விடுங்க “

“பொய் சொல்லாதே ஐஸ்வர்யா. நான் செம்ம கோவத்துல இருக்கேன், அடிச்சிருவேன் “ பற்களைக் கடித்து விழிகளின் அனல் கக்க மிரட்டவே, அண்ணனைப் பற்றி தெரிந்தவள் அல்லவா மிரண்டேப் போனாள்.

அவன் கையோங்கிருக்க, அக்கம் பக்கத்தினர், “தம்பி என்னப்பா பண்ணுறே ?” என்று அஞ்சனாவிற்கு  துணையாக நின்றுக் கேட்க,

“இவ என் தங்கச்சி. எங்களுக்கு சின்ன பிரச்சனை அவ்வளோ தான் “ 

“அதுக்காக இப்படியா பப்ளிக் பிளேஸ் வச்சி சண்டை போடுறது “ கூறியவாறு அவரவர் வேலையைப் பார்த்துச் சென்று விட,

“நான் அஞ்சனா. உங்க தங்கச்சி ஐஸ்வர்யா இல்லை “ தலையை குனிந்துக் கொண்டே கூறினாள். 

“அதை என்னை பார்த்துச் சொல்லு “ என்றவனோ அவளின் தாடையில் தன் கரத்தினை அழுத்தப் பற்றி நிமிர்த்தினான்.

“விடுங்க என்ன ?” என்க, அதே நேரம் அங்கே தீப்தி வந்தாள்.

 யாரோ ஒருவன் அண்ணியின் தாடையைப் பற்றியிருக்கவே பின் புறம் மட்டுமே பார்த்தவளோ, “அண்ணி “ பதறிக் கொண்டு வந்தாள்.

 “ஏய், கையை எடு முதல்ல “ அண்ணியைக் கண்டவாறு கூறியவளோ பின் நிமிர்ந்து அவனின் முகம் காண அதிர்ந்துப் போனாள்.

 என்ன தான் தங்கை என்றாலும் இவ்வாறுச் செய்வது தவறென நினைத்தவனோ தீப்தியைக் கண்டதும் சட்டென கரங்களை எடுத்து விட்டான்.

 “சார் நீங்களா ? “

 “தீப்தி வா நம்ம போகலாம் “ என்ற அஞ்சனா அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து விறுவிறுவெனச் செல்ல, பார்த்தவாறே நின்றிருந்தான் மகிழன்.

 அவனுக்கு நூறு சதவீதம் தெரியும். இவள் தன் தங்கை என்று ? பின் ஏன் தங்களிடம் இறந்ததாக பொய் கூறினாள். திருமணம் செய்திருக்கிறாள். ஒரு வேலை அதனால் அவ்வாறு கூறினாளா ? இல்லையே சில மாதங்கள் முன் திருமணம் நடந்தது என்று தானே தீப்தி கூறினாள் ? பின் என்ன காரணமாக இருக்கும். தன்னை நேராகப் பார்த்தப் பின்னும் கூட மறுக்கிறாளா  ஏன் ?

 இந்த கேள்விகள் அனைத்திற்குமான பதிலை அவனே தேடும் முயற்ச்சியில் இறங்கினான்.

 “என்னாச்சு அண்ணி ? மகிழன் சாரை உங்களுக்கு முன்னவே தெரியுமா ? அவர் ஏன் உங்க கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு “ என்று இஸ்கூட்டியில் செல்லும் அஞ்சனாவிடம் கேட்க,

 “வேற யாரையோ நினைச்சி என் கிட்ட பேசுறாரு “

 “அப்போ நம்ம எதுக்கு இப்படி பயந்து வரணும் “

 “பார்க்க சரியா தெரியல. ஏதாவது பண்ணிட்டா அதான் “

 “அப்படியெல்லாம் இல்லை அண்ணி. அந்த சார் ரொம்ப நல்லவரு. பொண்ணுங்க கிட்ட தன்மையா தான் நடத்துப்பாரு “

 “உனக்கு எப்படி தெரியும் ?”

 “எனக்கு அவர் கிளாஸ் எடுக்குறாரு “ என்க, நிலநடுக்கமே வந்தது போல் அதிர்ந்து விட்டாள்.

 ‘இது வேறையா ?’ புலம்பிக் கொண்டவள், “என்னை பத்தி ஏதாவது கேட்டாரா என்ன ?” என்க,

 “ஆமா அண்ணி “ என்றதும், அஞ்சனாவிற்கு புரிந்து விட்டது. தன் அண்ணன் தன்னை யாரெனக் கண்டு பிடித்து விட்டான் என்று. இனி தன்னால் மறைமுகமாக இருக்க முடியாது.

 “எதுவும் பிரச்சனையா அண்ணி ?”

 “அதெல்லாம் ஒன்னுமில்லை. இனி என்னை பத்தி யாராவது கேட்டா சொல்லாதே சரியா ?” 

 “சரிங்க அண்ணி “ என்க, இருவரும் வீடு வந்துச் சேர்ந்தனர். 

 “என்ன சீக்கிரம் வந்துட்டீங்கன்னு யாராவதுக் கேட்டா, ரொம்ப வெய்யிலா இருந்தது வந்துட்டோம்ன்னு சொல்லிரு. அப்பறம் இந்தா இந்த ட்ரெஸ் என்னை விட உனக்கு தான் நல்லாயிருக்கும். நீ வச்சிக்கோ “ என்று தனக்காக வாங்கியதையும் அவளிடம் கொடுத்தாள்.

 வீட்டுக்குள் வரவே, கவிநயாவோ இவர்கள் நினைத்ததுப் போன்றுக் கேட்க அதே காரணத்தை இருவரும் கூறி அறை நோக்கிச் சென்றனர்.

 தன் அறைக்கு வந்தவளோ கைபேசியை எடுத்து வசந்திற்கு அழைத்தாள்.

 “சொல்லு அஞ்சனா ?”

 “நான் ஒரு போட்டோ அனுப்புறேன். இதை பார்க்கும் போது நிதின் லஞ்சம் வாங்குன பணம் மாதிரி இருக்கு. லஞ்ச ஒழிப்பு துறைக்கு இதை அனுப்பணும் “என்க,

 “நீ பண்ணுனேன்னு மட்டும் யாருக்காவது தெரிஞ்சா மாட்டிக்க போறே ? வேண்டாம் விடு அஞ்சனா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. அதை சந்தோஷமா வாழு “

 “முடியாது. நான் நிம்மதியா சந்தோஷமா வாழணும்ன்னா எனக்காக இதை பண்ணுங்க “ உறுதியாக கூறிவிட்டு கைபேசியை வைத்தாள். நாட்களை கடத்த கூடாது என்பது புரிந்தே துரிதமாகச் செயல்பட்டாள்.

 இரவு நேரம் போல் டைனிங் டேபிளில் அஞ்சனா, கவிநயா இருவரும் மட்டுமே அமர்ந்திருந்தனர். கவிநயாவை நினைக்கும் போதே பாவமாக தெரிய, ஏதாவது செய்தாக வேண்டுமென நினைத்தாள்.

 “என்னாச்சு அஞ்சனா, பலமா யோசிக்கிற போல ?“

 “இப்படியே இந்த வீட்டுக்குள்ளே எவ்வளோ நாள் தான் அடைஞ்சி கிடைக்கப் போறீங்க ? நீங்க இங்க அடிமையா இருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அப்படி இருக்கணும் என்ன அவசியம் சொல்லுங்க ? சின்மயிக்காக பார்க்குறேன் சொன்னீங்க எனக்கு புரியுது. அதுக்காக உங்களோட மரியாதை நீங்களே இழக்க வச்சிறீங்க ?”

 “இப்போ என்ன பண்ணலாம்ன்னு சொல்லுற அஞ்சனா ?”

 “நீங்க வெளியே தானே வேலைக்கு போக முடியாது. வீட்டுல இருந்தே வேலை பார்த்தா உங்களுக்கும், பாப்பாவுக்கும் செலவை நீங்களே பார்த்துக்கலாம்ல “

 “அதுக்காக தேவையானது என் கிட்ட இல்லை. நான் கூட இதை முன்னவே யோசிச்சேன். ஆனா எந்த பிரோஜனமுமில்லை “ 

 “ஏன் அப்படி சொல்லுறீங்க ?”

 “ஒரு லேப்டாப், நல்ல மொபைல் கூட இல்லை. என் மொபைல் பார்த்தீல எவ்வளோ பழசுன்னு. இதை வச்சி என்ன பண்ண முடியும் சொல்லு ?”

 “என் கிட்ட ஒரு லேப்டாப் இருக்கு நான் தரேன். நீங்க முதல்ல உங்களோட சர்டிவிகேட் எனக்கு கொஞ்சம் தரீங்களா ?” கேட்க,

 சில நொடி யோசித்தவளுக்கு அஞ்சனா சொல்வது, தன் நல்லதுக்கு தானே நினைத்து சரியென்றாள். பின் அதனை எடுத்துக் கொண்டு வந்துக் கொடுக்க வாங்கியவளோ குட் நைட் கூறிவிட்டு மாடியேறினாள்.

 ஆதவன் விழி திறந்த காலைப் பொழுது எட்டு மணி வாக்கில் அவரவர் பணிக்கு கிளம்பிக் கொண்டிருக்க, இரண்டு கார்கள் வீட்டுக்குள் நுழைந்தது.

 அந்த ஹாரன் சத்தத்திலே அனைவரும் ஹாலுக்கு வர, யூனிபார்ம் அணிந்து கிளம்பிய நிதினும் மாடியிலிருந்தே அதனைக் கண்டு விட்டான்.

 எதற்காக வந்திருக்கிறார்கள் என்பது புரிந்து விடவே, “கவி, ஏய் கவி “ அழைக்க, அவளோ கீழே சமையலறையில் இருந்தாள்.

 கணவனின் குரல் கேட்டு வெளியே வந்தவளோ  மாடியேறப் போக, “அப்படியே நில்லுங்க ?” என்ற குரல் தான் வந்தது. உள்ளே சிலர் வந்து நின்றனர்.

 “யார் சார் நீங்க ?” வாசுதேவன் கேட்க,

 “நாங்க லஞ்ச ஒழிப்பு துறையில இருந்து வந்திருக்கிறோம். இங்கே யாரெல்லாம் அரசாங்க உத்தியோகத்துல இருக்கீங்க ?” என்க, அன்னை, மகன் இருவர் மட்டுமே வீட்டில்.

 “நானும், என் மூத்த மகனும் தான் சார் “

 “அவர் எங்கே ?” கேட்க, மாடியிலிருந்து இறங்கி வந்தான் நிதின்.

 நந்தன், அஞ்சனா இருவரும் ஹாலில் இருக்கவே, “வேற யாரெல்லாம் இந்த வீட்டுல இருக்கீங்க ? எல்லாரும் வெளியே வாங்க ? சார் போய் சர்ச் பண்ணுங்க ?” என வந்த அதிகாரி கூறினார்.

 “என்னாச்சு சார் ?”

 “இந்த வீட்டுல யாரோ லஞ்சம் வாங்கிருக்கிறதா எங்களுக்கு கம்பிளைண்ட் வந்திருக்கு “ 

 “அப்படியெல்லாம் நாங்க பண்ண மாட்டோம். பணத்துக்கு ஆசைப்படுறவங்க நாங்க இல்லை சார் “ என்று வாசுதேவன் கூற, அமைதியாக நிற்கும் தன் கணவனைத் தான் கண்டாள் கவிநயா.

 அஞ்சனாவிற்கு இது அவள் எதிர்பார்த்த தருணம் அல்லவா ! ஆவலோடுக் காத்திருக்க, அரை மணி நேரம் சென்ற பின் மாடியிலிருந்து பணத்தோடு வந்தனர்.

 “சார் இது மாடியில இருக்குற ரூம்ல இருந்தது சார் “ என்று பையைக் காட்ட, அதில் சில இரண்டாயிரம் கட்டுகள் இருந்தது.

 “இது யாரோட பணம் ? எப்படி இந்த பணம் இங்க வந்தது ? இவ்வளோ பணம் வந்ததுக்கு எங்களுக்கு கணக்கு சொல்லுங்க ” என்க, நிதினை தான் கண்டனர்.

 அவனோ அமைதியை உடைத்து, “என் பணம் தான் சார் ?” என்க, மற்றவர்களோ அதிர்ந்தனர்.

 “லஞ்சம் எல்லாம் இல்லை. எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வச்சிருக்க சொன்னாரு “ என்று காரணம் கூறப் பார்க்க,

 “அதெல்லாம் நீங்க ஆபிஸ்ல வந்துச் சொல்லுங்க. வாங்க சார். இவரை விசாரிக்க கூட்டிட்டு வாங்க “ என்றவரோ பணத்தோடு அங்கிருந்து நிதினை அழைத்துக் கொண்டு சென்றனர்.

 ‘இந்த வீட்டில் பணம் இருப்பது மனைவிக்கு மட்டுமே தெரிய, எப்படி இவர்கள் வந்தார்கள் ? இவள் தான் கூறினாலா ? தன்னை பழிவாங்க அவளுக்கு காரணம் இருக்கிறது தானே ?‘ நினைத்தவனோ கவிநயாவைக் கண்டான்.

 “இதுக்கு நீ தானே காரணம். இருக்கட்டும் கவனிச்சிக்கிறேன் “ மிரட்டல் ஒன்றை விடுத்து அவர்களோடுச் செல்லவே நடுக்கத்தோடு நின்றாள் கவிநயா.

தொடரும் ...

தங்களின் கருத்துகளை வழுங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



Leave a comment


Comments


Related Post