இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 12) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 06-05-2024

Total Views: 16417

உனக்கென்றே உயிர் கொண்டேன் 12

தமிழின் மொழி என்கிற விளிப்பில், தன்னைப்போல் தன் உள்ளத்து உணர்வை வெளிப்படுத்தியிருந்தவள், அவனின் மீண்டுமொரு அழைப்பில் சுயம் மீண்டாள்.

தான் என்ன சொன்னோம் என்பது அவளது நினைவில் இல்லை.

தமிழ் அவளை கூர்மையாய் அளவிட,

"தூங்கிட்டேன் போல சீனியர்" என்று கூறினாள்.

"கனவுலையா?" அவன் கேட்ட விதமே அவளை அசடு வழிய வைத்தது.

"சாரி..." முகம் சுருக்கினாள்.

'முகத்தை சுருக்கியே மொத்தத்தையும் சுருட்டிடுவாள்.' செல்லமாக மனதோடு வைதான்.

"தூக்கம் வந்தால் தூங்குடா. மார்னிங் ஏர்லியா எழுந்து கால் பண்ணு" என்றான்.

"இல்லை வேண்டாம் சீனியர். எழமால் விட்டால் கஷ்டமா போயிடும். அப்புறம் எப்படி மார்க் ஸ்கோரில் உங்களை பீட் பண்றது. விருமாண்டி கையால் பேனா வாங்குறது" என்று அவள் சொல்லிய விதத்தில் சத்தமாக சிரித்துவிட்டான்.

"அராத்து..." என்று சொல்லியவன்,

"கவனி" என அவள் சந்தேகம் கேட்க கேட்க விளக்கம் அளித்தான்.

"இதுதான் லாஸ்ட் பாஸ்" என்றவள் "உங்களுக்கு தூக்கம் வருதா? ரொம்ப தொல்லை பன்றனா?" எனக் கேட்டாள்.

தமிழின் முகம் அவள் கேட்டதில் கோபத்தை காண்பிப்பதற்குள்...

"அப்படித்தான் பண்ணுவேன். பழகிக்கோங்க" என்றாள்.

மீண்டும் சிரித்துவிட்டான்.

"காலேஜ் ஹாஸ்டல் கேட் ஏறி குதிச்சு என் ரூம் வந்து இந்த பிராப்ளம் வரமாட்டேங்குது சொல்லிக்கொடுங்கன்னு அர்த்த ராத்திரியில் தொல்லை பண்ண ஆள் தானே நீ?" எனக் கேட்டவன், "எனக்கு அப்போவே பழகிப்போச்சு" என்றான்.

தன்மீது அவள் எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்பதையும் அவன் அன்று தான் அறிந்தான்.

அப்போது வெண்பா இரண்டாம் ஆண்டு. தமிழ் அங்கேயே முதுகலை சோர்ந்திருந்தான். முதலாம் ஆண்டு.

தமிழுக்கு பொறியியல் படிக்க வேண்டுமென்பது ஆசை. அதுவும் மெக்கானிக்கல். படிக்க மட்டுமே! படித்துவிட்டு அதிலேயே இயந்திரம் போன்று வேலை செய்ய இல்லை. இளங்கலை முடித்ததும் இயற்கையோடு இணைந்து தங்களின் எஸ்டேட்டில் வேலை செய்யத்தான் விருப்பம்.

இளங்கலை முடித்ததும் தேவராஜிடம் பேசி தொழில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென நினைத்திருந்தவன்... படிப்பை முடித்த தருவாயில் வெண்பாவை பற்றி யோசித்தான்.

'இப்போதுதான் நட்பாகியுள்ளோம். தான் அருகில் இல்லாது தங்கள் நட்பு தூரம் சென்றுவிட்டால்?' என சிந்தித்தவன் அவளுடன் இருக்க முடிவு செய்தே முதுகலை சேர்ந்தான்.

"நம்ம தொழிலை செய்யத்தான் விருப்பம். யூஜியோடு எஸ்டேட்டை கவனிக்கப்போறன்னு சொன்னாய்? இப்போ பிஜி அப்ளை பண்ணியிருக்கிறாய்?" கேட்ட பூர்வியிடம் தமிழ் மறைக்கவில்லை. அவன் அவளிடம் எதுவும் மறைத்ததில்லை. அதனால் இதையும் மறைக்கத் தோன்றவில்லை. உண்மையையே சொல்லிவிட்டான்.

இளங்கலை சேரும் போது "அந்த க்ரூப் எதுக்கு தமிழ். கேர்ள்ஸ் ஒருத்தர் ரெண்டு பேரு சேருரதே கஷ்டம். காலேஜ் லைஃப் கலர்புல்லா இருக்காது. ட்ரையா இருக்குன்னு புலம்புவ?" என்று மகேஷுடன் சேர்ந்து பூர்வி கிண்டல் செய்தபோது கூட...

"எனக்கொரு அக்கா இருக்காங்கிற நினைப்பே என்னை எந்தவொரு பொண்ணையும் வேறு கண்ணோட்டத்தில் பார்க்க விட்டதில்லை பூர்வி" என்று பதில் சொல்லிய தன் தம்பியா இப்போது ஒரு பெண்ணுக்காக எடுத்திருந்த முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறானென்று ஆச்சரியமாக இருந்தது.

"இப்போ வயது என்னவாகிவிட்டது? ஜஸ்ட் டவெண்ட்டி டூ. இன்னும் ரெண்டு வருஷம் ஜாலியா இருந்துக்கொள்கிறேன்" என்று சப்பைக்கட்டு கட்டிய தம்பியை அன்று பூர்வி கேலி செய்தே ஒரு வழி செய்திருந்தாள்.

தமிழுக்காகவே அந்த கல்லூரி வந்த வெண்பாவுக்கு தமிழ் படிப்பை முடித்துவிட்டான். இனி இக்கல்லூரியில் அவனது வாசமில்லை என்ற எண்ணமே முதல் நாள் கல்லூரியை, தான் இப்போது சீனியராகிவிட்டோம் என்ற எதையும் ரசிக்க விடவில்லை.

தேமே என்று அன்றைய வகுப்புகளை கவனித்த வெண்பா, இரவு மெஸ்ஸில் தமிழை கண்டு அத்தனை உற்சாகம் கொண்டாள். அவள் முகத்தில் தெரிந்த மகிழ்வில் அவன் இதயம் பூ பூத்தது.

பாவம் பூபேஷும் தமிழின் தொல்லையால் முதுகலை சோர்ந்திருந்தான்.

"இதை மிஸ் பண்ணியிருப்பேன் மச்சான்." தன்னை நோக்கி முகம் முழுக்க புன்னகையோடு வரும் வெண்பாவை பார்த்தபடி தமிழ் கூறினான்.

"எதை?" வேண்டா வெறுப்பாக வாயில் அதக்கிய காய்ந்துபோன சப்பாத்தியை மென்றபடி கேட்ட பூபேஷிடம் அத்தனை கடுப்பு. பின்னே வேலைக்கு செல்லவிருக்கிறேன் என்றவனை தடுத்து வம்படியாக அல்லவா கல்லூரியில் சேர்த்திருந்தான்.

"மொழியோட ஹேப்பினெஸ்."

"ம்க்கும்... நீங்க பஜ்ஜி சாப்பிட நான் ஏண்டா எண்ணெய் சட்டிக்குள் வேகணும்?"

பூபேஷை திரும்பி பார்த்த தமிழ் "செம மேட்சிங் மச்சி உன் உவமை" என்று பாராட்டினான். அதில் கடுப்பு அதிகரித்த பூபேஷ்... "சீக்கிரம் லவ்வ சொல்லுடா. நீ லவ் சொல்றதுக்குள்ள நான் சட்னி ஆகிடுவேன் போல" என்று புலம்பியவன், வெண்பா தங்கள் முன் வந்து அமர்ந்ததும் உதட்டை இழுத்து வைத்து சிரித்தான்.

"ஹாய் பூபேஷ் அண்ணா" என்று கை அசைத்தவள், "லாஸ்ட் வீக் கால் பண்ணப்போ சொல்லவே இல்லையே பாஸ்? இன்னைக்கு டிப்பார்ட்மெண்டில் கூட உங்களை பார்க்கலையே" என்று தமிழிடம் வினவினாள்.

"சும்மா உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலான்னு..." தமிழ் சொல்லிட...

'உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எனக்கு ஷாக் கொடுத்திட்டான்' என்று மனதில் முனகினான் பூபேஷ்.

"சாப்பாடு வங்கலையா?" அவள் கையிலிருந்த வெறும் தட்டினை சுட்டி தமிழ் கேட்டிருந்தான்.

"க்யூ பார்த்தீங்களா? வெயிட் பண்ணுவோம்" என்றவள் முன் தன் தட்டினை நகர்த்தி வைத்தான் தமிழ்.

அவள் அவனின் செயலில் விழி விரித்த போதும், அவனது பார்வை மொழி விளங்கி, எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.

"நிறைய இருக்கே! நீங்களும் ஷேர் பண்ணிக்கோங்க" என்றாள். மொழியும் இயல்பாய்.

அன்று தமிழ் உணவினை அதீத ரசிப்பில் உண்டான்.

இருவரும் ஒரே தட்டில் சாப்பிடுவதை பார்த்த பூபேஷ்க்கு ஆச்சரியம் இல்லை. விடுதி வாழ்வில் ஒரே தட்டில் நாலைந்து பேர் உண்பதெல்லாம் சகஜம் தானே! ஆனால் ஏதோவொன்று தமிழிடம் புதிதாக கண்டான். வெண்பாவிற்கு என்று அவன் பல படிகள் மனதால் இறங்கிக்கொண்டிருக்கிறான் என்பது. எப்போதும்... தான், தலைமை என்று மிடுக்காக வலம் வருபவன் வெண்பாவிடம் மட்டும் அனைத்தும் துறந்து தமிழாக மட்டுமே இருக்கிறான் என்று.

அன்று தொடங்கி அவ்வவ்போது இருவரும் பல சமயங்களில் இப்படி ஒன்றாக அமர்ந்து உண்டிருக்கின்றனர்.

அதற்கு பின்னாக இருவரிடையேயும் நெருக்கம் அதிகரித்தது என்றும் சொல்லலாம். முன்பெல்லாம் தமிழிடம் பேசவே தயங்கி நிற்பவள் அது முதல் அவனுடன் கேலி செய்து பேசுமளவிற்கு தன் வால் தனங்களை அவனிடம் காட்டினாள்.

வெண்பா செய்யும் குறும்பினை பூபேஷிடம் சொன்னால், தமிழை நம்பாத பார்வை பார்த்து வைப்பான்.

மீண்டும் அவள் ஏதும் செய்யும் போது,

"ஹேய் அராத்து... நீ இப்படிலாம் சேட்டை பன்றன்னு சொன்னால் பூபேஷ் என்னை நம்பவே மாட்டேங்கிறான்" என்று புலம்புவான் தமிழ்.

அப்படி நம்பாத பூபேஷையும் நம்ப வைக்கத்தான் அன்று அந்த நிகழ்வு நடந்ததோ?

முதுகலை மாணவர்களின் ஆண்கள் விடுதி... கல்லூரி விடுதி வளாகத்தில் சற்று உள்ளே தள்ளி இறுதியாக இருந்தது.

படித்துக்கொண்டிருந்த வெண்பாவுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட யாரிடம் கேட்பதென்று யோசித்தாள். அடுத்த நாள் அவளுக்கு அந்த பிரிவு தேர்வு. காலை முதல் வகுப்பே என்பதால் நிச்சயம் கல்லூரி சென்று யாரிடமும் கேட்க முடியாது.

அவளின் நேரமோ என்னவோ அவள் துறையில் படிக்கும் மூன்று பெண்களில் அவளும் அப்போது நான்காம் ஆண்டிலிருந்த மாலதியும் மட்டுமே விடுதியில் தங்கியிருந்தனர். அவளும் வீட்டில் விசேஷமென்று ஊருக்கு சென்றிருந்தாள். ஒரு பெண் முதுநிலை இரண்டாம் ஆண்டு. அவளிடம் பார்த்தால் சிறு புன்னகை. அளவான பேச்சு. அவ்வளவு தான். அவளின் எண் கூட வெண்பாவிடம் கிடையாது.

யாரிடம் கேட்பதென்று ஒரு நொடி தான் சிந்தித்தாள்... மறுகணம் தமிழுக்கு அழைத்துவிட்டாள். நான்கு முறை அழைப்பு சென்றும் அவன் எடுக்கவில்லை. பூபேஷுக்கும் ஒருமுறை அழைக்க அவனும் எடுக்கவில்லை.

"அதுக்குள்ள தூங்கிட்டாங்களா?" என்றவள் மணியை பார்த்திட, பதினொன்று இருபதை தொட்டிருந்தது.

சற்றும் யோசிக்கவில்லை, அணிந்திருந்த பைஜாமா, டி ஷர்ட்'க்கு மேலாக ஸ்டோல் ஒன்றை போட்டவள் அதனாலேயே தலையை சுற்று முகத்தையும் மூடிக்கொண்டாள்.

முன் வந்து விழுந்த நீண்ட பின்னலை பார்த்தவள்,

"உன்னை மறைக்கணுமா?" என்றபடி கொண்டையிட்டு தலையில் போட்டிருந்த துணிக்குள் மறைக்க முயல, நீண்ட அடர்த்தியான குழல் என்பதால் மறைக்க முடியவில்லை.

"சரி இருந்துட்டு போ... மாட்டுனா சீனியர் பார்த்துப்பார். அதுமில்லாமல் இந்நேரம் வரை யார் முழிச்சிக்கிட்டு இருக்கப்போறங்க" என்று கிளம்பிவிட்டாள்.

இரு விடுதியும் ஒரே பகுதியில் தான் அமைந்திருக்கும். பெண்கள் விடுதி மூன்று மூன்று பெரும் தளங்கள் கொண்ட நான்கு கட்டிடம். ஆண்கள் விடுதி ஐந்து கட்டிடம். அதில் முதுகலை ஆண்களுக்கு இரண்டு தளங்கள் கொண்ட கட்டிடம் மற்ற கட்டிடங்களுக்கு பின்னால் இருந்தது. இரண்டு பகுதியையும் பிரிக்கும் வகையில் ஏழு அடியில் பெரும் மதில் சுவர்.

பெண்கள் பகுதியை கடந்து வந்தவள் அந்த ஏழடி மதில் சுவரை பார்த்து மலைத்து நின்றுவிட்டாள்.

"இதிலெப்படி ஏறுவது" என்று அண்ணாந்து பார்த்தவள், "பக்கத்தில் மரம் கூட ஏதுமில்லையே!" என்க, 'இருந்தா? தாவி ஏறி அந்தப்பக்கம் குதிச்சிடுவியா?' என்று கேலி செய்த மனதை தட்டி அடக்கி, வழி ஏதுமிருக்கிறதா என்று பார்த்தாள்.

மதில் சுவரின் ஓரத்தில் கார்பேஜ் பைகள் வைப்பதற்காக வட்ட வடிவில் இடைவெளி இருந்திட... அதன் வழியாக புகுந்து அந்தப்பக்கம் சென்றுவிட்டாள்.

ஆங்காங்கே மின் விளக்குகள் ஒளிர்ந்தி வெளிச்சமாக இருந்தபோதும், பருத்த மரங்களுக்கு நடுவில் தன்னை மறைத்து ஒளித்து பின்னாலிருக்கும் கட்டிடத்திற்கு வந்துவிட்டாள்.

"செகெண்ட ப்ளோர் போகணுமே. என்னை நல்லபடியா கொண்டு போய் சேர்த்திடு ஆண்டவா!" என்று மேல்நோக்கி கூறியவள், படிகள் எங்கிருக்கிறது என்று ஆராய, தரை தளத்தின் இரு பக்கமும் படிகள் இருந்தன.

"இதிலே ஏறுவோம்" என்று தான் நின்றிருந்த பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று பார்வையை சுழற்ற இடமே அத்தனை அமைதியாக இருந்தது.

"பரவாயில்லையே பசங்க தூங்கிட்டாங்க. கேர்ள்ஸ் ஹாஸ்டல்ல தான் விடிய விடிய டிவி ரூமில் கொட்டம் அடிக்கிறாங்க" என்றவளாக வெண்பா படியில் அடி வைத்திட...

அவ்விடமே அதிரும் வகையில் ஆர்ப்பட்டமாக திடும்பென பெரும் கூச்சல் கேட்டதில் ஜெர்க்காகியவள் அதிர்ந்தவளாக நெஞ்சில் கை வைத்து என்னவென்று பார்க்க, மீண்டும் கொண்டாட்டமாக கைத்தட்டல் கூடிய ஒலியுடன் சத்தம்... அவள் ஏறும் படிகளுக்கு பக்கத்திலிருந்த அறையிலிருந்து வந்தது.

"டிவி ரூம்'ஆ" என்றவள் வேகமாக படிகள் ஏறி தமிழின் அறை எண்ணை தேட, அதுவோ அத்தளத்தின் கடைசியில் இருப்பதாக அவள் நின்றிருந்த பக்கமிருக்கும் அறை எண் சுட்டியது.

"இதுக்கு கீழ அந்தப்பக்கம் போய் ஏறியிருக்கலாம்." மலைப்பாகவும், சலிப்பாகவும் அந்த நீண்ட வராண்டாவை பார்த்தாள்.

"லாஸ்ட் ரூம் சொல்லியிருக்காங்க. யோசிக்காமல் இந்தப்பக்கம் வந்துட்டேன். இப்போ யார் கண்ணுலையும் படாமல் எப்படி போவது. நடுவில் ஒளியக்கூட ஒரு இடமில்லையே" என்று புலம்பியபடி நின்றவள், 'கண்ணை மூடிக்கொண்டு ஓடிவிட வேண்டியது தான்' என்று நினைத்து முடிய மூச்சு வாங்கியபடி தமிழின் அறை முன் நின்று கதவை தட்டினாள்.

முதுகலை மாணவர்களுக்கு ஆளுக்கு தனித்தனி ரூம். ஆனால் ஒவ்வொரு அறையும் இணைக்கும் விதமாக உள்ளே பக்கச்சுவரில் ஒரு கதவு இருக்கும். அக்கதவை திறந்து பக்கத்து அறைக்கு செல்லலாம்.

வெண்பா கதவு தட்டிட திறந்ததோ பூபேஷ்.

கதவை திறந்ததும் முக்காடு போட்டு நின்றிருந்த உருவத்தை கண்டு அரண்ட பூபேஷ்...

"டேய் எவண்டா அது... ராத்திரியில் பயம் காட்டுறது. மூஞ்சி தெரிஞ்சுது பேத்திடுவேன்" என்று முன்னே அடி வைத்திட...

"அச்சோ அண்ணா இது உங்க ரூம்மா? நான் சீனியரோடது நினைத்தேன்."

கேட்ட பெண் குரலில் அதிர்ச்சியடைந்த பூபேஷ்...

'என்னை அண்ணான்னு கூப்பிடுற ஒரே பொண்ணு வெண்பா தான்' என நினைத்து,

"நீ... நீ... வெண்பா இல்லையே?" எனக் கேட்டான்.

"செம ஷார்ப் போங்க நீங்க... நான் வெண்பாவே தான்" என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அறைக்குள் இழுத்து கதவினை மூடியிருந்தான்.

பூபேஷ்க்கு கை கால்கள் எல்லாம் உதறியது.

'எவனாவது பார்த்தால் அவ்வளவு தான்.' என்ன செய்வதென்று தெரியாது நடுங்கிக் கொண்டிருந்தான்.

"சீனியர் இல்லையாண்ணா? கால் பண்ணேன் எடுக்கல. உங்களுக்கும் பண்ணேன்" என்றவள், "ஏன் பயப்படுறீங்க?" என்று ஒன்றும் அறியாதவளாகக் கேட்டிட பூபேஷுக்கு அவளை கொட்டிட கைகள் பரபரத்தது.

"தமிழ் கீழே டிவி ரூமில் புட் பால் மேட்ச் பார்த்திட்டு இருக்கான்" என்ற பூபேஷ், "இங்கே இரும்மா... யார் வந்து கதவு தட்டினாலும் திறக்காதே. நான் வந்து இந்த கதவை தட்டுவேன். ஓபன் பண்ணு. இப்போ இதையும் லாக் பண்ணிக்கோ" என்று இரு அறைக்கும் இணைப்பாக நடுவிலிருந்த கதவினை சுட்டிக்காட்டினான்.

தமிழ் மற்றும் பூபேஷின் அறை மட்டும் தனியாக இறுதியாக இருந்தது. இவ்விரண்டு அறைகளையும் ஒதுக்கியது போல் நடுவில் மாடிப்படிகள் அமைந்திருந்தன.

தமிழ் டிவி பார்க்க சென்றதால், தனதறையை உட்பக்கமாக தாழிட்டுவிட்டு பூபேஷின் அறை வழியாக வெளியேறியிருந்தான்.

வெண்பா வந்து கதவினை தட்டியதும் தமிழ்தான் வந்து விட்டானென்று கதவை திறந்த பூபேஷுக்கு வெண்பா என்றதும் தோன்றிய இதய துடிப்பு இன்னமும் சீராகவில்லை.

"அது உங்க ரூம்மா அண்ணா?" 

"ம்ம்ம்..." தலையாட்டியவன், "தயவுசெய்து நான் இந்த கதவை தட்டும் வரை மெயின் கதவை யார் தட்டினாலும் திறந்திடாத வெண்பா. பசங்க அவ்வளவு நல்லவனுங்க இல்லை" என்று சொல்லி பக்க கதவு வழியாக தன்னுடைய அறைக்கு சென்று வெளியில் வந்தவன் தன்னறை கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு கீழே செல்ல படிகளில் தடதடவென ஓடினான்.

இப்போது பூபேஷின் அறை கதவை திறந்து பக்க கதவு வழியாக தமிழின் அறைக்குள் வந்தால் மட்டுமே தமிழின் அறை கதவை திறக்க முடியும்.

"ரூம் ரொம்ப நீட் அண்ட் க்ளீனா வச்சிருக்காரே!" என்றவளின் பார்வை அறையை சுற்றி வந்தது. அத்தனை நேர்த்தியாகவும், சுத்தமாகவும் வைத்திருந்தான்.

தமிழின் கட்டிலில் அமர்ந்தவள் அதனின் மெத்தையை வருடி... தலையணையை எடுத்து மார்போடு அழுத்திக் கட்டிக்கொண்டாள்.

'வெண்பா இது சரியில்லை.' தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள், தலையணையை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு, படிப்பதற்காக போடப்பட்டிருந்த மேசைக்கு முன்னிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

கீழே மாணவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்காக இருக்கும் அறைக்குள் சென்ற பூபேஷ், தொலைக்காட்சியின் வெளிச்சம் மட்டுமே பரவியிருக்கும் இருட்டில், பலத்த கூச்சல்களுக்கு நடுவில் தமிழை கண்டுபிடித்து அவனருகில் சென்றான்.

"புட் பால் மேட்ச் பார்க்கமாட்டியே நீ?"

அங்கு வந்த பூபேஷை பாராது தொலைகாட்சியில் கண் வைத்தவனாகக் கேட்டான் தமிழ்.

"ரூம்க்கு வாடா!"

"இன்னும் ட்வெண்ட்டி மினிட்ஸ் மச்சான். ட்வெல்வ்க்கு மேட்ச் முடிஞ்சிடும்" என்ற தமிழ், திரையில் விழுந்த கோலில் எழுந்து நின்று கை தட்டிட... அப்படியே அவனை இழுத்துக்கொண்டு வெளியேறினான் பூபேஷ்.

"என்னடா தமிழ் கிளம்பிட்ட... மேட்ச் முடியலையே?" ஒருவன் கேட்டிட, "அவனுக்குத் தூக்கம் வருது" என்று பதில் சொல்லியிருந்தான் பூபேஷ்.

"அதை ஏண்டா நீ சொல்ற?" அதைக்கேட்க அவர்கள் இருவருமே அங்கில்லை.

"டேய் மெல்லடா... எதுக்கு இப்படி இழுத்துகிட்டு போற நீ?" தமிழ் கோபமாக வினவினான். இருந்தபோதும் அவனது இழுப்புக்குச் சென்றான்.

பூபேஷ் வாய் திறக்கவே இல்லை.

தங்களது அறைக்கு முன் வந்த பின்பே தமிழின் கையை விட்டான்.

"என்னடா அதிசயமா ரூம் லாக் பண்ணியிருக்க?"

கேட்ட தமிழை பூட்டினை திறந்த பூபேஷ் நிமிர்ந்து பார்த்தானே தவிர எதுவும் சொல்லாது, கதவை திறந்து அறைக்குள் நுழைந்து உள் பக்கமாக தாழிட்டான்.

"என்னடா... எதாவது சொல்லு. இப்போ என்னாச்சு?" பூபேஷின் அமைதி தமிழுக்கு கடுப்பாக வந்தது.

அப்போதும் வாய் திறந்தானில்லை பூபேஷ்.

பக்க கதவின் அருகில் சென்று தட்டினான்.

"என் ரூமில் யாரிருக்கா?" 

தமிழ் கேட்டுக்கொண்டே கதவை திறப்பது யாரென்று பார்த்தவனுக்கு அத்தனை அதிர்வாக இருந்தது.

தன்னுடைய அறையில் நின்றிருக்கும் வெண்பாவை நம்ப முடியாது விழி விரித்து சிலையாகி நின்றான்.
    


Leave a comment


Comments


Related Post