இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலாகி! காற்றாகி! அத்தியாயம் - 6 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK029 Published on 06-05-2024

Total Views: 15924

முதல் தாள் பரீட்சை எழுதிய அபிராமி, எப்படியும் அடுத்த தேர்வுக்கு முன், மதியம் ஹால் டிக்கெட்டை தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விடலாம் என்று நம்பிக்கையுடன் மிக நன்றாகவே முதல் பரீட்சையை எழுதியிருந்தாள். 

தேர்வை முடித்து வெளியே வந்தவளுக்கு தொண்டை வறண்டு தாகம் எடுக்க, அங்கே வைக்கப்பட்டிருந்த தண்ணீரைப் பருகச் சென்றாள். 

அங்கே வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் நீர் பிடிக்கும் முன், தன் அலைபேசியை அக்குளில் சொருகினாள். பிறகு தண்ணிரை அருந்த அன்னாந்து பார்த்தவள் சட்டென கையில் வைத்திருந்த குவளையை தவறவிட்டாள். கூடவே அவளின் அலைபேசியும் கட்டுப்பாட்டை இழந்து அக்குளில் இருந்து நழுவி கீழே விழுந்தது.

அவளின் அருகில் இருந்த ஒரு இளைஞன் கண்கள் இருட்டிக் கொண்டு வந்ததால் அபிராமியின் இடது தோளை இறுக்கமாகப் பிடித்ததும் திடுக்கிட்டு திரும்பி கைகளால் அவனது கையை வேகமாக தட்டிவிட்டாள். 

அதில் அவன் தள்ளாடி விழப் போகவும், பதறிப் போய் மீண்டும் அவளே அவனது கையைப் பிடித்து இருவரையும் ஸ்திரமாக நிறுத்தப் போராடினாள். ஆனாலும் ஒரு ஆடவனின் உடல் பலமும் சில பெண்களின் உடல் பலமும் வேறாக இருப்பதும் இயல்பு தானே. அந்த சில பெண்களின் வரிசையில் அபிராமியின் உடல் பலமும் சேர்ந்துக் கொண்டது அவளின் தவறல்ல. அவளின் சத்தம் கேட்டு அருகில் இருந்த சிலர் அவளுக்கு உதவி செய்ய ஓடி வந்தார்கள். அவர்கள் ஓடி வருவதற்குள், அவளும் அந்த இளைஞன் உடன் சேர்ந்து அப்படியே குப்புற விழுந்தாள்.

அந்த நொடி அவன் மேல் விழுந்து விடக் கூடாது என்று மட்டும் தான் அவளின் மனதில் ஓடியது. சட்டென அவனின் கையை விடுத்து அவனுக்கு அருகில் விழுந்து இடதுக் கையை தரையில் வேகமாக ஊன்றியவள், வலதுக் கையை பின்னால் திருப்பி கொண்டு போன அதே நேரம், தரையில் மோதியதில், அவளின்  வலது புஜத்தில் சுருக்கென்று வலி தோன்றியது.

மயக்கம் தெளிவிக்க, உதவிக்கு வந்த சிலரில், ஓரிருவர் அபியை எழுப்பி விட, மற்றவர்கள் தண்ணியை இளைஞனின் முகத்தில் தெளித்து எழுப்பினார்கள். ஒரு பெண் சட்டென அவன் வாயில் இன்னட்டை தள்ளினாள். இன்னட்டு அவன் வாயில் கரைந்து உள்ளுக்குள் மாச்சீனியாக மாறி, சிறிது நிமிடங்களில் சற்றே அவனுக்கு உடலில் ஆற்றல் பிறந்து கண்கள் தெளிந்தன. 

அபிராமி தன் கைவலியை மறைத்து அவனிடம் நலம் விசாரித்தாள். மற்ற அனைவரும் சில பல உபசார வார்த்தைகளுக்கு பிறகு நகர்ந்து விட, அபி, "நீங்க நல்லா இருக்கீங்க தானே... இல்ல மருத்துவமனை போகலாமே." என்றாள் சக மனிதன் மேல் கொண்ட பரிவு மற்றும் இரக்கத்தில்.

"ஐயோ இல்லைங்க. காலையில இருந்து எதுவும் சரியா சாப்பிடாம, பரீட்சைக்கு வந்ததால் தான் இருக்கும். இப்ப நல்லா தான் இருக்கேன். இந்த தேர்வு எனக்கு ரொம்பவே முக்கியம். எப்படியாவது தேர்ச்சி பெறனும்." என்றான்.

"சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அப்படித்தானே நம்ம மனுஷங்க உடம்பும். இனிமேலாவது கவனமா இருங்க" என்றாள்.

"தேங்க்ஸ்-ங்க" என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

அதுவரை பொருத்திருந்தவள் அவன் சென்றதும், தன்னை சுற்றி நெருக்கத்தில் யாருமில்லை என்று நிச்சயமாக அறிந்ததும், கண்களில் இருந்து உப்பு நீர் பெருகி கரையைக் கடந்து கன்னத்தைத் தொட்டது.

அவளால் கை வலியைப் பொறுக்க முடியவில்லை. தன்னால் இரண்டாம் பரீட்சையை எழுத முடியுமா? என்ற நடுக்கம் அவளுள் எழுந்தது.

'ஒருவேளை எலும்பு முறிவு ஆகிடுச்சோ... எழுத முடியுமா?'

'ஹுகும்... எப்படியாவது எழுதிடனும் அபி. நீ செஞ்சுக் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றியே ஆகனும். எழுதி முடிச்சிட்டு அம்மாவை கூட்டிட்டு மருத்துவமனை போயிடலாம்' என்று தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டாள்.

'ஹலோ மேடம்... எப்படி எழுதுவீங்க? முதல்ல ஹால் டிக்கெட்டை எடுக்கும் வழியைப் பாருங்க. மறதி மன்னாரு... ஒன்னாவது மறக்காம இருக்கியா. தப்பான நேரத்தில் சரியான விஷயத்தை மறந்திடு.' என்று அவளின் மனமே அவளை எள்ளி நகையாடியது.

உடனே பதட்டத்துடன் கை நழுவிய ஃபோனை தேடினாள். தண்ணீர் குவளைக்கு அருகாமையில் ஆதரவின்றி கிடந்தது அவளின் அலைபேசி.

ஓடிச்சென்று எடுத்தவள், உதட்டை பிதுக்கியபடி பரிதாபமாக பார்த்தாள். அவளின் ஃபோன் திரை விரிசல் விழுந்திருந்தது.

ஃபோனை கடவுச்சொல் குறியீட்டை கொடுத்து இயக்கினாள். ஆனால் அதுவோ அவள் செயல் பேச்சைக் கேட்காமல், இவள் ஒன்றை தட்டினால், அது ஒன்றை திறந்தது. இப்போது என்ன செய்வது என்று ஒரு நொடி முழித்தாள். அலைபேசியை அனைத்து மீண்டும் உயிர்ப்பித்தாள்.

அதே நேரம் அவளின் அலைபேசியை உயிர்ப்பிக்க வந்த தேவதையாக, லாவண்யா அழைப்பது பாதியாக, ஃபோன் திரையில் ஒளிர்ந்தது. ஆனால் அவளின் அழைப்பை ஏற்கப் போராடினாள்.

ஆனால் அதற்குள் வந்த அழைப்பு தானாகவே துண்டித்தும் போனது. அடுத்த தேர்வுக்கு நேரமாக, அவளுக்கு சாப்பிடக் கூட மனமில்லை. எப்படியாவது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து விட வேண்டும். யாரிடமாவது அலைபேசி வாங்கி வேலையை பார்க்கலாம். என்றால், அவளுக்கு அதற்கும் அவளின் ஃபோன் எண்ணில் இருக்கும் கடவுச்சொல் வேண்டும். ஆனால் அலைபேசி மக்கர் செய்கிறது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அதே சமயம், ஆபத்பாந்தவியாக லாவண்யாவின் குறுஞ்செய்தி கொஞ்சமாக திரையில் ஒளிர்ந்தது. தெரிந்த வரை வாசித்தவளுக்கு, மனதிலும், முகத்திலும் சந்தோஷம் பிரவாகம் எடுத்தது.

லாவண்யா, "சீனியர், இன்னிக்கு உங்களுக்கு ஒன்றிய அரசு தேர்வு இருக்குன்னு கேள்விப்பட்டேன். ஆனால் ஹால் டிக்கெட் உங்களிடம் இல்லை என்றும் தெரியும். என் அண்ணாவிடம் இருக்கு. அது இல்லாம தேர்வு எழுத முடியுமா? சமாளிச்சுட்டீங்களா?" என்று குறுஞ்செய்தியுள் வினவியிருந்தாள்.

அதனை வாசித்ததும் தான் அவளுள் நம்பிக்கை துளிர்த்தது. உடனே, யாரிடமாவது ஃபோனை வாங்கி, லாவண்யாவின் நம்பருக்கு அழைக்க முற்பட்டாள். அவளுக்கு எதிரே மயங்கி விழுந்த அதே இளைஞன் நடந்து வர, அவளை கண்டதும் சிறு புன்னகையை முகத்தில் படரவிட்டான். 

"எக்ஸ்கியூஸ் மீ... உங்க ஃபோனை கொஞ்சம் தர முடியுமா? நான் ஒரு ஃபோன் கால் பண்ணிட்டு தரேன். என் ஃபோன் கிழே விழுந்து உடைஞ்சிருச்சு." என்றாள்.

"ஓகே. இந்தாங்க" என்று தன் அலைபேசியை அவளிடம் கொடுத்தான்.

உடனே தன் ஃபோனில் லாவண்யாவின் நம்பரை கண்களால் சுருக்கி சுருக்கி கண்டும், ஃபோனை உள்ளங்கையில் தட்டியும், பின்பு ஒரு அனுமானத்தில் அவளாக ஊகித்த எங்களையும் கொண்டு லாவண்யாவிற்கு அழைத்தாள்.

மறுபக்கம் அழைப்பை ஏற்றதும், "ஹலோ" என்று குரல் கொடுத்துக் காத்திருந்தாள் அபிராமி.

"ஹலோ. யாரு?'

"லாவண்யா நான் அபிராமி." என்றதும்,

"என்ன சீனியர் எக்ஸாம் முடிஞ்சிருச்சா. சக்சஸ் தானே?"

"லாவி இப்பவே உன் அண்ணனுக்கு ஃபோன் பண்ணி என் ஹால் டிக்கெட்டை இந்த அட்ரஸ்-க்கு எடுத்துட்டு வர சொல்லு. ரொம்ப அவசரம்." என்றாள்.

"சீனியர். இருங்க நான் அண்ணா கூடத் தான் இருக்கேன். அவர் கிட்டயே கொடுக்கிறேன். நீங்க அட்ரஸ் சொல்லிடுங்க"

"ஹலோ" என்று நிரஞ்சனின் குரல் எதிர்முனையில் கேட்டதும், பழைய சந்திப்புகளை முயன்று ஒதுக்கி தள்ளிவிட்டு, அவன் பெயர் எல்லாம் கூறாமல், "பிளீஸ் எனக்கு இந்த ஹால் டிக்கெட் ரொம்ப முக்கியம். கொஞ்சம் சீக்கிரம் எடுத்துட்டு வந்து தர முடியுமா? அப்ப தான் நான் என்னோட எக்சாம் எழுத முடியும்"

"நான் ஏன் உனக்கு ஹெல்ப் பண்ணனும்?"

"பிளீஸ்..."

"ம். எனக்கு இன்னும் கோபம் குறையல; ஒருவேளை உனக்கு ஹெல்ப் பண்ணனும்னா நீ என் பெயரை ஒழுங்கா கூப்பிட்டு, மரியாதையா கேளு. அப்ப நான் சமாதானம் ஆகி எனக்கு விருப்பம் இருந்தா ஹெல்ப் பண்றேன்." என்றான் விளையாட்டாக.

அது விளையாட்டு என்று அவளுக்கு புரிவதற்கு அவளின் சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை.

"என்னை பழிவாங்க இது தான் நேரமா நிரஞ்சன்.?"

"எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் சரியா அமையறதில்லை. எனக்கு அமையுது நான் யூஸ் பண்ணிக்கிறேன். ஒழுங்கா மிஸ்டர் நிரஞ்சன் விஷ்வேஸ்வர்-ன்னு கூப்பிட்டு ஐம் சாரி சொல்லு. எனக்கு நிறைய டைம் இருக்கு ஆனா உனக்கு நேரம் இருக்க சான்ஸ் இல்ல. சீக்கிரம்.

"ஜகஜ்ஜால மன்மதனே..."

"ஏய்"

"ஓகே ஓகே... மிஸ்டர் நிரஞ்சன் விஷ்வேஸ்வர். பிளீஸ் எனக்கு ஹால் டிக்கெட் இப்ப அவசரம். கொண்டு வந்து தரீங்களா?" என்றாள் குரலில் ஆத்திரமும் பதட்டமும் ஒருசேர!. ஆனால் அவளுக்கு வேறு வழியும் இருக்கவில்லை.

"இதுல சாரியே வரலையே?!" 

"பழிவாங்க இதுவா நேரம் மேன்? நம்ம பிரச்சனையை அப்புறமா பேசி தீர்த்துக் கொள்ளலாம். இப்ப நான் டென்ஷனில் வெடிக்கிற நிலைமையில் இருக்கேன்" என்றாள் கண்ணின் ஓரம் துளிர்த்த சிறு கண்ணீர் துளிகளோடு.

அவளின் கண்ணீர் குரலில் பிரதிபலித்து அவனுக்கு விளங்கியதோ என்னவோ! "பொழைச்சு போ. நான் இப்ப உன்னோட தேர்வு மையத்துக்கு தான் வந்திட்டு இருக்கேன். வெயிட் பண்ணு." என்றான்.

அவள் அழைப்பை அணைப்பதற்கு முன் மீண்டும் நிரஞ்சன் பேசினான்.

"ஹே. டென்ஷன் ஆகாதே. நான் வந்துடறேன்" என்று அவளின் பதட்டத்தை குறைக்கவும் ஓரிரு வார்த்தைகளை இதமானக் குரலில் கூறிவிட்டு ஃபோனை அணைத்தான். 

அபிராமி அறியாதது, அவள் நிரஞ்சனிடம் விஷயத்தைக் கூறியதும், லாவண்யாவை கூடவே கூட்டிக் கொண்டு அவன் அவளது ஹால் டிக்கெட்டை எடுக்க அலுவலகம் விரைந்தான்.

ஹால் டிக்கெட்டை எடுத்துக் கொண்டு வேகமாகப் புறப்பட்டான். பிறகு லாவண்யாவின் ஃபோனை அவளிடம் கொடுத்துவிட்டு, அபிராமியின் எண்ணை தன் ஃபோனில் பதிவு செய்துக் கொண்டு கிளம்பினான். கூடவே அவனது பழைய கசப்புகளை கொஞ்சமாக போக்கிக் கொள்ளவும் முடிவு செய்தே அவ்வாறு பேசினான்.

ஃபோனை திருப்பி அதன் உரிமையாளரிடம் கொடுத்து விட்டு நன்றிக் கூற வாயைத் திறந்தாள் அவள். ஆனால் உடன் நின்றவனோ, "சாரிங்க, என்னால தான் உங்க ஃபோன் உடைஞ்சு போச்சு. ஆனா அதுக்கு உங்களுக்கு தகுந்த பணத்தை ஈடாக கொடுக்க முடியாத நிலையிலும் இப்ப இருக்கேன். ஆனா ஒரு நாள் கண்டிப்பா திருப்பி தருவேன்.."

அதற்கு எதுவும் சொல்லாமல், "உங்க பேர் என்ன? இப்பயாவது ஏதாவது சாப்பிட்டீங்களா?"

"சாப்ட்டேங்க. என் பேரு செல்வேந்திரன். நீங்க?" 

"நான் அபிராமி" என்று இருவரும் பரஸ்பரம் அறிமுகம் செய்துக் கொண்டார்கள்.

"வாங்க நேரம் ஆகுது." என்றவன் இடது கையில் வாங்கிய ஃபோனை வலது கைக்கு மாற்றினான். அப்போது அவன் ஆட்காட்டி விரலில் சிறு புள்ளியாக தெரிந்த பாதி உறைந்தும் உறையாத  இரத்தத்தை கண்டாள் அபிராமி.

"இது?"

உடனே தன் கையை பின்னால் மறைத்து "ஒன்னும் இல்லைங்க. நான் வரேன்" என்று நகர்ந்தான். 

அவன் செல்லும் போது தெரியாமல் விட்டுச் சென்ற சிறிய நீரிழிவு பரிசோதனை இயந்திரம் மற்றும் இரத்த துளிகளை கொண்ட சோதனை கீற்றும் தவறி அவனது ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து விழுந்தது.
அதை எடுத்து பார்த்தவள், அவனின் மயக்கத்திற்கான தன்மை என்னவாக இருக்கும் என்று ஓரளவு யூகித்தாள் அபிராமி.

பிறகு, "ஒரு நிமிஷம்" என்று நிறுத்தினாள். அவன் திரும்பி பார்த்ததும், அவன் கையில் அவனின் இயந்திரத்தை திணித்து விட்டு, "ஒரு உண்மையை மறைக்கணும்னு நினைச்சா, அதை ஒழுங்கா சந்தேகம் வராத அளவுக்கு செய்யணும்." என்றாள்.

செல்வேந்திரன் திடுக்கிட்டு நடுங்கும் குரலில், "பிளீஸ் இதை யாரிடமும் சொல்லிடாதீங்க. அப்புறம் என்னை தகுதியற்றவன்னு நிராகரிச்சிடுவாங்க."

அபிராமி, "என் மூலமா இந்த விஷயம் வெளியே வராது." என்றவள், அவனின் கண்களை நேராக உற்று நோக்கி, "ஆனா இந்த தேர்வில் நீங்க தேர்ச்சிப் பெற்று, நேர்காணலை முடித்தாலும், கடைசியாக ஒரு டெஸ்ட் இருக்கே... மருத்துவ பரிசோதனை...! அதை என்ன பண்றதா உத்தேசம்?!" என்று கேட்டுவிட்டு விலகிச் சென்றாள்.

அவனும் அவளுடன் நடக்க, பின் என்ன தோன்றியதோ! "எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம். குறுக்க எது வரவும் விட மாட்டேன்." என்றவன் அவளை எச்சரிக்கையோடு ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவளை தாண்டிச் சென்றான்.

அதன் பிறகு செல்வேந்திரன் அவள் நினைப்பிலேயே இல்லை. அவளின் எண்ணத்தில் தற்போது முழுவதுமாக நிரஞ்சன் கொண்டு வரும் தேர்வுக்கான நுழைவு சான்றிதழ் (ஹால் டிக்கெட்) பற்றி தான் வியாபித்திருந்தது.

நேரம் கடந்து இரண்டாம் தேர்வு தாளுக்கான மணி ஒலித்தது. ஆனால் இன்னமும் நிரஞ்சன் வரவில்லை. அவள் பதட்டத்துடன் தேர்வு அறைக்குள் நுழைந்து நிம்மதியற்ற மனநிலையில் கண்காணிப்பாளர் நுழைவு சீட்டை எக்காரணம் கொண்டும் கேட்டுவிடக் கூடாது என்று மத பேதமின்றி ஊரில் உள்ள அத்தனை கடவுள்களிடமும் மன்றாடி வேண்டுதலை வைத்தாள்.

ஆனால் விதி வலியது. எது நடக்கக் கூடாது என்று வேண்டினாளோ, அது சரியாக நடந்தேறியது. அவளிடம் நுழைவுச்சீட்டு இல்லை என்று தெரிந்ததும், கண்காணிப்பாளர் வெளியே செல்லும்படி உரைக்க, அபிராமி, "சார், எனக்கு தெரிஞ்சவங்க, என்னோட நுழைவுச்சீட்டை எடுத்துகிட்டு வந்திட்டு இருக்காங்க சார். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க சார்" என்றாள். அவளின் வலது கையில் ஏற்படும் வலியும் அவளை சிந்திக்க விடாமல் தடுத்தது. அவள் கொஞ்சம் ஞாபகப்படுத்தி யோசித்து இருந்தால், அடுத்தவர் கைபேசியை வாங்கி அரசு தேர்வாணையத்தின் தளத்தில், கேட்கப்படும் கேள்விகளையும், சரிபார்ப்பு குறியீட்டை உறுதிப்படுத்தவும் செய்திருந்தால், ஒருவேளை அவளுக்கு மின்னணு நுழைவு சீட்டை எடுக்க வாய்ப்பும் கிடைத்திருக்கும். ஆனால் ஒரு ஃபோன் அழைப்பை எடுக்க வேண்டும் என்றாலும், சற்று வெளியே வர வேண்டும்; அந்தளவுக்கு நெட்வொர்க் பலவீனமாக இருந்தது. அவளுக்கு உதவி கேட்கவும் தோணவில்லை. மற்றவர்களுக்கும் நமக்கு ஏன் வம்பு? என்ற மனநிலையும் அவளுக்கு முட்டுக்கட்டையாக வந்து நின்றது.

சற்று யோசித்த கண்காணிப்பாளர், "ஓகே அஞ்சு நிமிஷம் தான் டைம். அதுக்குள்ள வரலைன்னா, நான் உங்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. அவ்வளவுதான்." என்றார் கறாராக.

வெளியே வந்து நிரஞ்சன் வருகிறானா என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாள். ஆனால் குடுத்த கெடுவான ஐந்து நிமிடங்கள் கடந்து முடிந்திருந்தது.

மீண்டும் கண்காணிப்பாளரிடம், "சார் பிளீஸ் சார்... இன்னொரு இரண்டு நிமிஷம் டைம் கொடுங்க சார்"

"உங்களை மாதிரி எல்லாரும் ஏதாவது காரணத்துக்காக ரூல்ஸ் மாத்த சொல்லுவாங்க. அதுக்கு எல்லாம் நான் மாற முடியாது." என்று அவளை வெளியே போகும்படி உறுதியாக முடித்தார்.

எல்லோரது கண்ணும் அவள் மேல் இருக்க, அதற்கு பிறகு அங்கே நிற்க பிடிக்காமல், வேகமாக அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
தேர்வு மையத்தை விட்டு கண்ணீரோடு வெளியே வந்தவள், கால் போன போக்கில் நடந்தாள். 

எவ்வளவு நேரம் நடந்தாளோ, அவள் பார்வைக்கு தென்பட்ட இடத்தில், ஒரு பூங்கா திறந்து இருக்க, அங்கே சென்று அமைதியாக உட்கார்ந்தாள்.

நான்காவது முறையும் அவளுக்கான வாய்ப்பு தொலைந்துப் போய்விட்டது. அவள் எழுத வேண்டிய தேர்வுக்கு இன்னும் இரண்டு முறை மட்டுமே அவளுக்கு வாய்ப்பு இருக்கிறது. 

அதை நினைத்து அவளது கைகள் தானாகவே நடுங்கியது. கண்கள் நிற்காமல் குளம் கட்டியது. குளமும் கரை உடைந்து கண்ணீர் வழிந்தோடி, கன்னம் தாண்டி தாடையை தொட்டு, நெஞ்சை நனைத்தது. 

அவளது அலைபேசி ஒலிக்க, அதை எடுத்துப் பேசக் கூட அவள் உணர்வில் உறைக்கவில்லை. அலைபேசி முழுவதுமாக அடித்து ஓய்ந்தது. மீண்டும் மீண்டும் ஒலிக்க, எடுத்து சலிப்புடன் கைபேசி திரையை பார்த்தவள், அறிமுகம் இல்லாத எண்கள் என்றதும் அதனை மௌனமாக இருக்க, ஒரு பொத்தானை அழுத்தினாள். பையில் வைத்திருந்த தண்ணாடியை (சன் கிளாஸ்) எடுத்து கண்களில் மாட்டினாள். தான் அழுவது ரோட்டில் வெளியாட்கள் யாருக்கும் தெரியக் கூடாது என்று எண்ணினாள்.

பூங்காவை விட்டு வெளியே வந்தவள் தசைகளின் நினைவால், சரியான ரயிலில் ஏறி, வீட்டிற்கு சென்றாள்.


Leave a comment


Comments


Related Post