இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 25 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 06-05-2024

Total Views: 19912

செந்தூரா 25


காலை ஒன்பது மணியை தாண்டி இருக்க வெளியே ரஞ்சிதம் ஆச்சி ஜானகியை அதட்டிக் கொண்டு இருந்தார். ஜானகியும் எதிர்த்துப் பேச அங்கே மாமியார் மருமகள் சண்டை அரங்கேறியது. எப்போதும் நடக்கும் கூத்து என்பதால் முத்துப்பாண்டியும் கதிரேசனும் கண்டுக் கொள்ளாமல் வயல் வேலைக்குச் செல்ல ஆயத்தம் ஆகி கொண்டிருந்தனர். சாரதா தான் தாயையும் அண்ணியையும் சமாதானம் செய்து கொண்டிருந்தார். மூன்று பெண்களின் பேச்சு சத்தத்தில் மெல்ல கண்விழித்து பார்த்தாள் தாரிகா. செந்தூரனின் கைவளைவில் இருந்தவள் மெல்ல நகரப் போக, அவன் அவளை விலக அனுமதிக்காமல் தனக்குள் இழுத்து இறுக்கி அணைத்து கொண்டான். 


“மாமா ஏற்கனவே லேட்டாயிடுச்சு, எல்லாரும் என்ன நினைப்பாங்க, இன்னிக்கு நம்ம வீட்டுக்கு போயிடலாம். இப்போ என்னை விடு” என்று கெஞ்சினாள்.


தன்பக்கம் அவளை இழுத்து இதழில் அழுத்தமான முத்திரையை பதித்து “தேங்க்ஸ் ஹனி” என்று சொல்லி அவளை விடுவித்தவன் திரும்பி படுத்து கொண்டான். சிறிது நேரத்தில் மீண்டும் அவனை எழுப்பினாள். “மாமா எந்திரி மாமா எந்திரி” என்று அவனை உலுக்க, “என்னடி உன் பிரச்சினை?, மனுஷனை கொஞ்சம் நேரம் தூங்க விடுடி” என்று அலுத்துக் கொண்டான்.


“அய்யோ இந்த வீட்டில் அட்டாச் பாத்ரூம் இல்லையே. நான் எப்படி குளிக்காமல் வெளியே போறது?” என்றாள்.


“அந்த காலத்தில் தாத்தா கட்டின வீடு, வந்த இடத்தில் தீடீர்னு உன் மனசு மாறும், இந்த பெரிசுங்க எல்லாம் நம்ம முதலிரவுக்கு ஏற்பாடு செய்வாங்கனு நினைக்கலைடி. கொஞ்சம் பொறுத்துக்கோ நான் வீடு ஆல்ட்ரேஷன் பண்றேன். இப்போதைக்கு வெளியில் போய் குளிச்சிட்டு என்னை அப்புறமா எழுப்புடி” என்றான் தூக்க கலக்கத்தில் புரண்டு படுத்து கொண்டு.


“அப்போ இந்த புடவையை கட்டிவிடு வழவழனு இருக்கு, என்னால் கட்ட முடியல, நேத்தே காயத்ரி தான் கட்டி விட்டா” என்றாள். “ஏய் அதெல்லாம் எனக்கு தெரியாதுடி, நைட் டிரஸ் இருந்தா போட்டுகிட்டு போ” என்றான்.


“என் டிரஸ் எல்லாம் காயத்ரி ரூம்ல இருக்கு. நீ போய் எடுத்துட்டு வா” என்றாள் சிணுங்கலுடன்.


“ஹனி விளையாடுறியா, என் தங்கச்சி கிட்ட போய் என்னனு சொல்லி உன் டிரஸை கேட்க சொல்றே. உன்னை யாரு அதையெல்லாம் அவ ரூம்ல வைக்க சொன்னது?” என்றான் பொய் கோபத்தோடு.


“இப்போ என்ன பண்றது மாமா?” என்று மலங்க விழித்தபடி நின்றிருந்தவளை அவன் ஒரு மார்க்கமாக பார்க்கவும் அங்கிருந்த தலையணையால் அவனை அடித்தாள். அவன் எழுந்து வந்து தன்னுடைய சட்டையை எடுத்து அவளுக்கு மாட்டி விட்டான். “போய் குளிச்சிட்டு சீக்கிரம் தயாராகு, நம்ம வீட்டுக்கு போய் எந்த தொந்தரவும் இல்லாமல் இங்கே விட்டதை அங்கே தொடரலாம்” என்று அவளை பார்த்து கண் சிமிட்டினான்.


வெட்கம் தாளாமல் அவன் மார்பில் சாய்ந்தாள் “இந்த டிரஸோட எப்படி வெளியே போறது? எல்லாம் என்ன நினைப்பாங்க? எனக்கு வெட்கமாக இருக்குது மாமா” என்று சிணுங்கினாள்.


“ஹனி, வேற வழியில்லடி, இந்த ஒருமுறை மட்டும் அட்ஜஸ்ட் செஞ்சுக்கோ” என்று மனைவியை கொஞ்சினான் செந்தூரன்.


மனதை திடப்படுத்தி கொண்டு யார் கண்ணிலும் படாமல் பூனை போல சென்று காயத்ரி அறைக்கு சென்று தன் உடையை எடுத்துக் கொண்டு வேகமாக குளியலறைக்கு சென்று விடலாம் என்று எண்ணி கொண்டு மெல்ல வெளியே வந்தாள்.


செந்தூரனின் உயரத்திற்கும் கட்டுமஸ்தான உடலுக்கு ஏற்ற மாதிரி இருந்த அந்த சட்டை தாரிகாவின் முழங்கால் வரை மிகவும் லூசாக இருந்தது. அந்த உடையில் சோளக்காட்டு பொம்மை போல இருந்தவளை காயத்ரி பார்த்து விட, அடக்கமாட்டாமல் கலகலவென்று சிரித்தாள்.


மும்மரமாக சண்டை போட்டு கொண்டு இருந்த ரஞ்சிதம் ஆச்சி ஜானகி மற்றும் சாரதாவும் காயத்ரியின் சிரிப்பு சத்தத்தில் திரும்பியவர்கள் தாரிகாவை பார்த்ததும் சண்டையை மறந்து வெடி சிரிப்பு சிரித்தனர்.


மற்ற ஆண்களும் புன்னகையோடு அந்த இடத்தை கடக்கவும் தாரிகாவிற்கு வெட்கமும் கூச்சமும் பிடுங்கி தின்றது. யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தன் உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு அவசரமாக ஓடினாள்.


அதன் பிறகு செந்தூரன் எழுந்து வரவும் வீட்டினர் சிரிப்பை அடக்கிக் கொண்டு புன்னகையுடனும் மனதில் பூரிப்புடனும் வலம் வந்தனர். 


செந்தூரனை கவின் அழைத்து இருந்தான்‌. “மச்சி எங்கேடா இருக்க?” என்று கேட்டவனிடம், தன் சொந்த ஊரில் இருப்பதாக செந்தூரன் விளக்கம் அளித்தான். “ஆராத்யா என்னோட இந்தியா வந்திருக்காடா. அவ அப்பா சங்கர பாண்டியனும் சார்லஸ் சாரும் அடுத்த வாரம் கரெக்டா பங்ஷன் டைம்க்கு வந்து விடுவதாக சொன்னாங்க. எங்கே அவளை தங்க வைக்கிறது? நீ எப்போ வருவ?” என்று கேட்டான் கவின்.


“நம்மை நம்பி ஆராத்யாவை இந்தியா அனுப்பி வச்சிருக்காங்க. வெளியே தங்க வைச்சா நல்லா இருக்காது, நீ அவளை என் வீட்டிலேயே கெஸ்ட் ரூமில் தங்கி வை. இங்கே குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்தோடு போகணும்னு ஆச்சி நச்சரிக்குது. நான் முடிச்சிட்டு இரண்டு நாளில் வந்துடறேன். நீ ஆராத்யாவுக்கு தேவையானவற்றை கவனிச்சுக்கோ” என்றான் செந்தூரன்.


கவின் மேலும் சில நிமிடங்கள் தொழில் சம்பந்தமாக பேசிவிட்டு போனை வைத்தான்.


“என்னாச்சு கவின்?, செந்தூரன் எப்போ வருவாராம்?. எனக்கு அவரையும் அவர் மனைவியையும் நேரில் பார்க்கணும்னு ரொம்ப ஆவலா இருக்கு. எஸ்பெஷலி ஐ வான்ட்டு சீ தாரிகா… ரியலி ஐ காண்ட் வெயிட்” என்று பரபரத்தாள் ஆராத்யா.


“பொறுங்க ஆரா, இரண்டு நாளில் அவங்க வந்திடுவாங்க. அதுக்குள்ள நீங்கள் நம்ம ஆபிஸ் தொடங்க இருக்கும் சைட்டை பாருங்க” என்றான் கவின்.


“ஓகே” என்று தோளை குலுக்கியவளுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. செந்தூரனும் கவினும் இந்தியா வந்தபின், ஆராத்யா அவ்வப்போது கவினுக்கு அழைத்து இங்கே நடப்பதை தெரிந்து கொண்டிருந்தாள். தாரிகாவிற்கு வேறொருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கவின் சொன்னதும், தனக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்த செந்தூரமித்ரன் மீதான காதல் மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது.


அந்த பெண் தாரிகா திருமணம் ஆகி போய்விட்டால், பிறகு மித்ரன் தன்னை மறுக்க பெரிதாக காரணம் இருக்காது. எப்படியும் அவனை சமாதானம் செய்து அவனுடன் சேர்ந்து விடலாம் என்று இருந்தாள். 


கவின் கம்பெனி திறப்பு விழாவிற்காக அழைக்க வந்த போதே, செந்தூரனின் திருமணம் குறித்தும் அதில் நடந்த சர்ச்சைகள் குறித்தும் ஆராத்யாவிடம் கூறினான். மித்ரன் தன் அத்தை மகளை கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்வான் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. எப்போதும் பார்வையிலும் பேச்சிலும் கண்ணியத்துடன் இருக்கும் மித்ரனுக்கு இப்படி ஒரு முகமா?  அந்த தாரிகாவிற்கே தெரியாமல் அவளை கடத்தி கொண்டு போய் திருமணம் செய்யும் அளவுக்கு அவள் என்ன அதிலோக சுந்தரியா? உலக அழகி போட்டிக்கு தகுதி பெற்ற இந்த ஆராத்யாவை விட பேரழகாே? என்னையே வேண்டாம் என்று மறுத்தவனின் மனதை கவர்ந்த அந்த தாரிகாவை பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. அப்படி தன்னை விட அவள் எந்த விதத்தில் மேலானவள் என்று தெரிந்துக் கொள்ளும் ஆவலில் கவினுடன் கிளம்பி வந்திருந்தாள் ஆராத்யா.


செந்தூரன் தன் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலான மாசாணி அம்மன் கோயிலுக்கு சென்றிருந்தான். ஆனைமலையும் ஆழியாறும் சங்கமிக்கும் இடத்தில் இருந்த அந்த கோயில் பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருந்தது. செந்தூரன் வேட்டி சட்டையை போட்டுக் கொண்டு அந்த வேட்டியை முட்டிவரை மடித்து விட்டபடி தன் மனைவியை முதுகில் ஏற்றிக் கொண்டு அந்த ஆனைமலையின் அழகை ரசித்தபடி மலை ஏறினான். அங்கே இருந்த மலைக்குன்றின் மேல் அவளை அமரவைத்து அவளின் மடியில் முகம் புதைத்துக் கொண்டான். “தாரா, நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கேன் தெரியுமா? ஐ லவ் யூ சோ மச் டி” என்றான் உணர்ந்து. தன் மடியில் இருந்த அவன் முகத்தை நிமிர்த்தி அவனை தலைமுடியை கோதி விட்டவள், “தெரியும் மாமா, ஐ டூ லவ் யூ சோ மச்” என்று அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.


கீழே இருந்து முத்துப்பாண்டி குரல் கொடுத்தார், “செந்தூரா உன் பொண்டாட்டியை அழைச்சிட்டு வா, பொங்கல் ரெடியாயிடுச்சு, சாமிக்கு படைக்கலாம்” என்று கத்திக் கொண்டிருந்தார். காற்றில் எங்கோ ஒலித்த தாத்தாவின் குரல் கேட்டு மனைவியை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு மெல்ல இறங்கி நடக்க தொடங்கினான். வழியில் தெரிந்த நீர்வீழ்ச்சியையும் அருவியை பார்க்கவும் தாரிகாவிற்கு குதூகலம் ஆகியது. “மாமா கொஞ்ச நேரம் அந்த அருவியில் குளிச்சிட்டு கிளம்புவோம்” என்று அவன் காதில் உதடுகள் உரச கேட்கவும் “சரி வா போகலாம்” என்று அவளை அழைத்து போனான்.


தண்ணீரில் குழந்தை போல குதித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் உடை மொத்தமாக நனைந்து விட, ஈர உடை அவளின் நளினங்களை அப்பட்டமாக அவனுக்கு வெளிச்சம் போட்டு காட்ட மோகம் தலைக்கேற அவள் மீதிருந்த பார்வையை விலக்காமல் அவளை நோக்கி நடந்தான். அவளோ கணவன் தன்னை நோக்கி வருவதை உணராமல் தண்ணீரில் குதித்துக் கொண்டிருந்தாள். அவள் அறியாமல் அவளை தன் கைவளைவில்  கொண்டு வர நினைத்தவாறு மெல்ல அவளை நோக்கி நடந்தவன் அங்கிருந்த பாசிப்படிந்த பாறையின் மேல் கவனமற்று கால்களை வைக்க அங்கே நிற்க முடியாமல் கால் வழுக்கி கீழே விழுந்தான்.


“தாரா” என்றபடி அவன் கீழே விழுந்த சத்தத்தில் திரும்பியவள், கணவன் ரத்தவெள்ளத்தில் விழுந்து கிடப்பதை பார்த்து பதறிப்போனாள். “மாமா” என்று அவள் அலறிய அலறல் சத்தம் அந்த மலைப்பகுதி எங்கும் எதிரொலியாக கேட்டது. மலையடிவாரத்தில் இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த முத்துப்பாண்டி, கதிரேசன், சுபாஷிற்கும் மெலிதாக அந்த சத்தம் கேட்கவும், பதறிக் கொண்டு அவர்கள் இருந்த இடத்திற்கு ஓடினார்கள்.


தாரிகா கணவனை மடியில் கிடத்திக் கொண்டு கதறிக் கொண்டிருந்தாள். ரத்தம் வருவதை தடுக்க தன் ஈர உடையின் ஒரு பக்கத்தை அவன் தலையில் அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தாள். அங்கே சென்று நிலைமையை புரிந்துக் கொண்ட ஆண்கள், உடனடியாக செந்தூரனை தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு சென்றனர்.

 

மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அளித்து தலையில் சிறிது முடிகளை திருத்தி மூன்று தையல்கள் போட்டு முடித்தனர். அரைமணி நேரத்தில் செந்தூரன் எழுந்து அமர்ந்திருந்தான். தாரிகா ஓயாமல் அழுதுக் கொண்டிருந்தாள். அவள் மிகவும் பயந்து போயிருக்கிறாள் என்பதை உணர்ந்தவனாக அவளை தன்னருகே அமர்த்தி தன் நெஞ்சில் அவளை சாய்த்துக் கொண்டான், “ஒண்ணும் இல்ல ஹனி, நான் நல்லா தான் இருக்கேன். கொஞ்சம் கவனக் குறைவா இருந்ததால கால் தடுமாறி விழுந்துட்டேன், அவ்வளவு தான்டா” என்று குழந்தைக்கு சொல்வது போல சமாதானம் செய்துக் கொண்டிருந்தான். அவளோ சிறு குழந்தை போல அவன் நெஞ்சில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தாள்.


“தாரா அழாதே கிளம்புமா, அங்கே எல்லாரும் நம்மள தேடிட்டு சாமி கும்பிடாமல் காத்திட்டு இருப்பாங்க, வாங்க போகலாம்” என்றார் கதிரேசன்.


ஒருவாறு மனைவியை சமாதானம் செய்து தன் தோளில் அவளை சாய்த்துக் கொண்டு மெல்ல எழுந்து நடந்தான் செந்தூரன். சத்யனை தவிர வீட்டின் ஆண்களையும் தாராவையும் காணாமல் அனைவரும் பரிதவிப்புடன் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.


செந்தூரன் தலையில் கட்டுடன் வந்து நிற்கவும் நான்கு பெண்களும் பதறிப் போய் அவனை சூழ்ந்துக் கொண்டனர், “என்னாச்சு செந்தூரா? எப்படி அடிப்பட்டுச்சு? அதனால் தான் லேட்டா?” என்று ஆளாளுக்கு கேள்வி கேட்டனர். 


அதற்குள் முத்துபாண்டி தாத்தா நடந்ததை சொல்லி முடிக்க, “ஐயோ அந்த ஜோசியர் சொன்னது உண்மையாயிடும் போலேயே, அம்மா மாசாணி தாயே, என் பிள்ளையை காப்பாத்தி கொடுத்ததுக்கு நன்றி தாயே” என்று ஜானகி பெருங்குரலெடுத்து கத்தவும் தாரிகாவின் முகம் வெளிறிப் போனது.


அவள் உள்ளத்திலும் இந்த உறுத்தல் இருந்துக் கொண்டு தான் இருந்தது. அதையே ஜானகி சத்தமாக அழுத்தி சொல்லவும், அப்போ என்னால் தான் என் மாமன் உயிருக்கு ஆபத்தா? என்று நினைக்க உடலும் மனமும் சோர்ந்து போனது.


அப்போதும் செந்தூரன் தன் தாயை அதட்டிக் கொண்டிருந்தான். “நான் கவனமில்லாமல் இருந்ததற்கு ஜாதகத்தை எதுக்கு இப்போ இழுக்கிற?” என்று அதட்டினான் செந்தூரன்.


“நீ சும்மா இருடா, உனக்கென்ன தெரியும்? அன்னிக்கு லாரியில் அடிப்பட இருந்த, எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போனக் கதையா வண்டியோட போயிடுச்சு. இன்னைக்கு அந்த தலையிலேயே அடிப்பட்டு இருக்கு. எனக்கென்னவோ பயமா இருக்கு. எதாவது பரிகாரம் செய்யலாமா அத்தை?” என்று மகனை அதட்டிவிட்டு மாமியாரிடம் கேள்வி கேட்டார் ஜானகி.


ரஞ்சிதம் பாட்டியும் கலங்கிய கண்களுடன் யோசனையில் அமர்ந்திருந்தார். தாரிகாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. புடவை முந்தானையை வாயில் அடைத்தவாறு அழுகையை அடக்கி கொண்டிருந்தாள். 


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post