இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 23 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 06-05-2024

Total Views: 18398

அத்தியாயம் : 23

 நிதினைக் கைது செய்து அழைத்துச் செல்ல கவிநயாவை தான் அவளின் மாமியார் எரிக்கும் பார்வையில் கண்டார்.

 “எதுக்குடி அவன் அப்படி சொல்லிட்டுப் போறேன். சொல்லு என்ன பண்ணுனே நீ ?” அனலாய் வார்த்தைகளை வீச,

 “அத்தை நான் எதுவுமே பண்ணலை. நாலைஞ்சு நாளைக்கு முன்னாடி பணத்தை கொண்டு வந்து கொடுத்து வைக்க சொன்னாரு. வைச்சேன் அவ்வளோ தான். இப்போ இவங்க வந்து அதை எடுத்ததுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமில்லை “ 

 “ஆஹா. நம்புற மாதிரியா இருக்கு சொல்லு ? உன்னை தவிர எப்படிடி இந்த விசியம் வெளியே போனது ? உன் வீட்டாளுங்களுக்கு சொல்லிருப்பே, அதுங்க இப்படி பண்ணிருக்கும் “ என்க, இல்லையென்று கண்ணீர் விட்டாள்.

 செய்யாத குற்றத்தை அவளின் மீது சுமத்தினால் என்ன செய்வாள் அப்பாவி பெண் ? அழுகவே மாமியாரோ வசைபாட இடையில் புகுந்தாள் அஞ்சனா.

 “அத்தை நீங்க பண்ணுறது தப்பு. எதுக்கு அக்காவை திட்டுறீங்க ? அவங்க தான் எதுவும் தெரியாதுன்னு சொல்லுறாங்கள. லஞ்சம் வாங்கி தப்பு பண்ணினது உங்க பையன் அது உங்களுக்கு பெரிசா தெரியலை. இவங்க கிட்ட போய் கோவத்தைக் காட்டுறீங்க ?” எதிர்த்து அஞ்சனா கேட்க,

“நீ எப்போ கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வந்தியோ அப்போல இருந்து எதுவுமே சரியில்லைடி. வீட்டுக்கு ஏத்த மருமகளா இருப்பேன்னு பார்த்தா இப்படி எதிர்க்குறவளா வந்திருக்கே ?”

“மனோகரி. சின்ன மருமக சொன்னதுல என்ன தப்பு இருக்கு. அதான் உன் மகன் போயிருக்கான்ல. என்னென்னு அவன் பார்த்துப்பான். உண்மையிலே அவன் தப்பு பண்ணிருந்தா குற்றத்தை அனுபவிக்கட்டும். இல்லையா விடபோறாங்க. நீ முதல்ல உன் வேலைக்கு போ நேரமாச்சு “ என்று வாசுதேவன் அதட்ட,

“இதுக்கு மேல எங்கே வேலைக்கு போக “ஆவேசமாய் முனுங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தார்.

“எல்லாரும் போங்க “ என்க,

“மாமா நான் எதுவுமே பண்ணலை “ என்று தன் மாமனாரிடம் கவிநயா கூறவே,

“விடும்மா. பார்த்துக்கலாம். பாப்பா பயந்து போயிருக்கா கொஞ்சம் கவனி “ என்றதும், சரியென தலையாட்டி தன் மகளை தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்றாள்.

இங்கே தன் அறைக்கு வந்த அஞ்சனா எதுவுமே நடக்காததுப் போல் அலுவலகத்திற்கு நேரமாகி விட்டதால் பரபரப்பாய் கிளம்ப உள்ளே வந்தான் நந்தன்.

“ஆபிஸ்க்குப் போறையா ?”

“ஆமா ஏன் நீங்க வரலையா ?”

“இப்போ நடந்த பிரச்சனைல எங்க போக முடியும். என்னாச்சுன்னு வேற தெரியல. அண்ணனைக் கூட்டிட்டு போயிருக்காங்க. எப்போ வரப் போறானோ ?” கவலையோடு நந்தன் கூறவே,

“அவர் ஒன்னும் சின்னப்பையன் இல்லைங்க. பார்த்து பேசிட்டு வருவாரு “ என்றவாறு சிறிது அலங்காரம் செய்தாள்.

“அஞ்சனா, என் கிட்ட ஏதாவது நீ மறைக்கையா ?” கேட்ட நொடி அப்படியே அவளின் கரங்கள் ஒரு நொடி நின்று பின் வேலையைப் பார்த்தது.

“இல்லையே ? நேரமாச்சு நான் வரேன் “ எனக் கூறி ஹேன்ட்பேக்கை எடுத்துக் கொண்டு சென்று விட, படுக்கையில் அமர்ந்தான் நந்தன்.

 அவனின் நினைவுகளோ இரு நாட்களுக்கு முன் இரவு தான் கண்டதை நினைத்தது. மொட்டை மாடியில் கைபேசியில் கல்லூரி நண்பனிடம் பேசிய நந்தன் கீழே இறங்க, சின்மயியோடு அவர்களின் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டான்.

 அவள் சென்ற சில நிமிடம் ஆகியும் வராதுப் போகவே, ‘அண்ணன் ரூம்ல இவ என்ன பண்ணுறா ?’ நினைத்துக் கொண்டு அறைக்குச் செல்ல, அங்கே அவளோ கையில் பணத்தோடு நின்றதைக் கவனித்தான்.

அவள் திரும்பும் நொடி சட்டென மறைந்தவனோ அப்படியே அறைக்குள் சென்று படுக்கையில் எதுவும் தெரியாததுப் போல் அமர்ந்து விட்டான்.

இப்போது அதனை நினைத்தவனுக்கு புரிந்தது இன்று நடந்ததிற்கு முழுக்காரணம் அஞ்சனா தான் என்று. இந்த வீட்டில் பணம் இருக்கிறது என்பது அண்ணியைத் தவிர அவளுக்கு மட்டும் தானே தெரியும் ? அவள் தானே இதனைச் செய்திருக்க வேண்டும். எதற்காக இவ்வாறுச் செய்தாள் ? தான் கேட்டதிற்கு கூட மறைக்கவில்லை என்று தானே கூறிச் செல்கிறாள். எதற்கு ஏன் இவ்வாறு செய்கிறாள் ?

அன்று வேலைக்குச் செல்லக் கிளம்பிய மகிழன் தங்கையைப் பற்றி தான் யோசித்தான்.

மதிய உணவினைக் கொண்டு வந்துக் கொடுத்த அவனின் அன்னை, “டேய் நாளைக்கு உங்க அப்பாவுக்கு இஸ்கேன் எடுக்கணும். காலேஜ்ல சொல்லிட்டு வந்திரு “ என்க,

“சரிம்மா “

“சீக்கிரமே உங்களோட மனசுல உள்ள காயத்தை போக்க ஒரு மருந்தை நான் கொண்டு வரேன் “

“என்னடா சொல்லுற ? உடல் காயத்தை போக்கிறலாம் ? மனக்காயத்தை எப்படி போக்க முடியும் “

“முடியும்மா “ என்றவனோ தீப்தியிடம் இன்று என்ன நடந்தது என்று கேட்டாக வேண்டுமென நினைத்து கல்லூரிச் சென்றான்.

அங்கே தீப்தியைப் பார்க்க தேட, அவளோ காணவில்லை. சரி வகுப்பு நேரம் பார்த்துக் கொள்ளாமல் என்று இருக்க உள்ளே நுழைந்த நொடி விழிகள் தேடியது அவளை தான்.

“தீப்தி எங்கே ?” சட்டென அவளின் இடத்தைப் பார்த்து எதையும் யோசிக்காதுக் கேட்டு விட,

“அவ இன்னைக்கு வரல சார் “ என்றதுமே, ஏமாற்றம் தான்.

மதிய உணவு நேரம் போல் கைபேசியை துலாவிக் கொண்டிருக்க, அவனுக்கு வந்த செய்தி நிதினைப் பற்றி தான்.

நிதின் இதற்கு முன் யாரென தெரியாது ஆனால் தீப்தியின் குடும்பத்தாரைப் பற்றி அறியும் போது தான் தெரிந்துக் கொண்டான். இந்தச் செய்தி கண்ட பின் ஏதோ நடக்கிறது என்பதை உறுதியாக்கிக் கொண்டான்.

நிதினைப் பற்றிய இந்த விசியம் இணையதளம், செய்தி ஊடங்கள் அனைத்திலும் பதிவிட, அவமானம் தாங்க முடியவில்லை.

இரவினை நெருங்கும் நேரம் தான் நிதின் திரும்ப வீட்டுக்கு வர, அவன் லஞ்சம் வாங்கியதற்காக ஆதராம் அவர்களுக்கு கிடைத்திருக்க, காரணம் கூறியும் அவர்கள் மறுத்தனர்.

இவனிடமும் போதுமான ஆதராம் இல்லை என்பதால் லஞ்சம் வாங்கியதாக வழக்குத் தொடுக்க வேறு வழியின்றி ஒத்துக் கொண்டான்.

வீட்டுக்குள் நுழைந்த மகனைக் கண்ட வாசுதேவன் அப்படியே செவியோடு ஒன்று வைக்க அங்கிருந்த அனைவருமே ஆடிப் போயினர். அப்போது தான் அஞ்சனாவும் வேலை முடிந்து வந்திருந்தாள்.

“அப்பா !” அவமானம் தாங்க முடியாது வந்தவனுக்கு தந்தையின் அடி வேறு காயத்தோடுச் சேர்ந்து சீற்றம் கொள்ள வைக்க,

“நீயெல்லாம் என் மகன் தானா சொல்லு ? இப்படி லஞ்சம் வாங்கி சம்பாரிக்க தான் உனக்கு இந்த வேலையை வாங்கி கொடுத்தேன்னா. அப்படி நமக்கு என்ன குறைன்னு நீ இதை பண்ணிருக்கே ? நம்ம கிட்ட பணமா சொத்தா இல்லை சொல்லுடா சொல்லு. எதுக்கு இப்படி அவமானப்படுத்துனே ?” ஆத்திரத்தில் வாசுதேவன் வெடிக்க, அவர் அடித்தது அதுவே முதல் முறை. இதில் வார்த்தைளை அம்பாக தொடுக்க மனோகரியால் கூட மகனுக்கு துணை நிற்க முடியவில்லை.

“இனி நீ என் பையனும் இல்லை நான் அப்பனுமில்லை. நான் சம்பாரிச்சத்துல ஒரு ரூபாய் கூட உனக்கு கிடையாது. நேர்மையா கெளரவமா வாழ்ந்த நம்ம குடும்ப மானத்தை நீ வாங்கிட்டீல ? என் கண்ணுலே விழிக்காதே “ கத்தி விட்டு வாசுதேவன் செல்ல, மகனின் அருகில் வந்தார் மனோகரி.

“என்னடா என்னாச்சு ? கூட்டிட்டு போனாங்களே என்ன சொன்னாங்க ? ஏன்டா உனக்கு இந்த பொழைப்பு ? “ என்று மென்மையாய் அன்னைக் கேட்க,

“நாளை மறுநாள் கோர்ட்டுக்கு வரச் சொல்லிருக்காங்க. இப்போதைக்கு சஸ்பென்ட் பண்ணிட்டாங்க ?”

“வேலை போயிருமேடா “

“கொடுத்தவனை கண்டுபிடிச்சி அவனை விசாரிச்சா அவனும் உண்மையை ஒத்துக்கிட்டா சிரமம் தான் “ என்றவனோ எரிச்சலோடு மாடியேற, கவிநயாவோ நடுக்கத்தோடு நின்றாள்.

இரவு வெகு நேரமாக அறைக்குச் சென்று தான் ஆக வேண்டும் என்பதால் உறங்கிக் கொண்டிருந்த மகளை தூக்கிக் கொண்டு சென்றாள்.

அறையில் காலடி எடுத்து வைக்க, அங்கே பொருட்கள் அனைத்தும் சிதறிப் போய் கிடைந்தது. படுக்கையில் ஆவேசமோடு நிதின் அமர்ந்திருக்க, நிமிர்ந்து மனைவியைக் கண்டவனோ வேகமாய் எழுந்து வந்தான்.

மகளை வைத்திருப்பது கூட தெரியாது,  வந்த வேகத்தில் தந்தை வேறு தன்னை அடித்த கோவம். இன்றுக் கண்ட அவமானம். அனைத்தும் சேர்ந்து மனைவியின் கன்னத்தில் இறக்கினான்.

அவன் சாதாரணமாகத் தொட்டாலே பூவையவள் விழுந்து விடுவாள். இதில் பலம் கொண்டவன் அடித்தால் கேட்கவா வேண்டும். தடுமாறி அருகில் இருந்த சோபாவிலே விழுந்தாள்.

கன்னங்களோ நொடியில் சிவந்து விட, விழுந்த வேகத்தில் மகளுமே விழித்து அழுக ஆரம்பித்தாள்.

மனைவியின் தலை முடியைப் பற்றி எழ வைத்தவனோ, “சொல்லுடி சொல்லு எத்தனை நாள்லா இப்படி நடக்கணும் நினைச்சிக்கிட்டு இருந்தே ? என்ன தைரியம் இருந்தா இப்படி பண்ணுவே ?” என்று சீற்றமோடு வார்த்தைகளை அள்ளி வீச, தந்தையின் அதிரும் சத்தம் கேட்ட சிறியவளோ அன்னையின் கால்களை கட்டிக் கொண்டாள்.

“நான் எதுவுமே பண்ணலைங்க “

“இதை நம்ப நான் என்ன கேனையா ?”

“ஐயோ ! நான் எந்த தப்பும் பண்ணலை. நம்ம பிள்ளை மேல சத்தியம் என்னை நம்புங்க “ என்று அவனின் காலிலே விழுந்து கெஞ்ச, மழலையின் அழுகுரல் வேறு வீடு முழுவதும் ஒலித்தது.

மகளின் அழுகை செவியை கிழித்தெடுப்பது போல் இருக்கவே, “ஏய் ! சனியனே முதல்ல இங்கேயிருந்து போ “ கத்தியவனோ மகள் என்றும் பாராது தள்ளி விட்டாள்.

சரியாக அந்த நொடி உள்ளே நுழைந்த அஞ்சனா கீழே விழப் போகும் பிள்ளையைப் பிடித்து விட்டாள். அவள் பின்னாலே வந்திருந்தான் நந்தன்.

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க ? சின்ன குழந்தைன்னு கூட பார்க்காம ?”

“புருஷன், பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதை கேட்க நீ யாரு. டேய் நந்தா முதல்ல உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போ “ என்க,

“அஞ்சனா வா “ என்று அண்ணனின் சொல்லுக்கு கட்டுப்பட்டவன் போல் நந்தன் அழைக்க, தன்னவனின் கரங்களை தட்டி விட்டாள்.

“ஒரு பொண்ணை காயப்படுத்துனா பார்த்திட்டு நான் சும்மா இருப்பேன்னு நினைச்சீங்களா ? நீங்க பண்ணுன தப்புக்கு அக்கா கிட்ட ஏன் கத்துறீங்க ?“ என்று அந்த வீட்டில் தந்தைக்கு பின் அவனை எதிர்த்தது அவள் ஒருத்தி மட்டுமே !

“என்ன நடக்குது இங்கே ?” வாசுதேவன் மேலே ஏறி வந்துக் கேட்க, என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்துக் கொண்டார்.

“என் மருமக மேலையோ பேத்தி மேலையோ ஒரு விரல் பட்டாலும் இந்த வீட்டை விட்டு நீ வெளியே போகணும் சொல்லிட்டேன்டா. கவிநயா நீ குழந்தையை கூட்டிட்டு கீழே இருக்குற ரூமுக்கு போம்மா “ என்க, அழுகையோடு அங்கிருந்துச் சென்று விட்டாள்.

“நீங்களும் போங்க “ என்க, அஞ்சனா, நந்தன் இருவரும் எதிரே இருந்த தங்களின் அறைக்குச் சென்றனர். புயலடித்து ஓய்ந்தது போன்று இருந்தது அந்த இடம். 

அறைக்குள் வந்த அஞ்சனாவைக் கண்ட நந்தன் அறையை தாளிட்டு, “எதுக்காக நீ இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்கே அஞ்சனா ?” என்க,

கேட்க வேண்டாம் என்று தான் நினைத்திருந்தான் ? ஆனால் நடப்பவைகள் பார்த்தால் ஏனோ கேட்டு விட மனம் துடிக்க கேட்டான்.

“நான் என்ன பண்ணுனே ? உங்க அண்ணன் பண்ணுனது தப்பு தானே ? நீங்க ஏன் அவர் பேச்சை கேட்குறீங்க ?”

“தப்பாவே இருந்தாலும் அந்த தப்பை வெளிக்கொண்டு வந்து எதுக்காக இப்போ இவ்வளோ பெரிய பிரச்சனையை உருவாக்கி வைச்சே அஞ்சனா. உண்மையை சொல்லு ? உன்னோட நோக்கம் தான் என்ன ? லஞ்ச ஒழிப்பு துறைக்கு கால் பண்ணினது நீ தானே ? சொல்லு அஞ்சனா “ என்று அவளின் தோள்பட்டையைப் பற்றிக் கொண்டு கேட்டான்.

அண்ணன் தணிந்திருக்க தம்பி ஆரம்பித்து விட்டான்.

“நான் எதுவுமே பண்ணலையே ?”

“பொய் சொல்லாதே அன்னைக்கு ராத்திரி நீ அந்த பணத்தை பார்த்ததை நான் பார்த்தேன் “ என்க, இதற்கு மேல் தன்னவனிடம் மறைக்க முடியாது என்பதால் உண்மையை ஒத்துக் கொள்ள முடிவெடுத்தாள்.

“ஆமா. நான் தான் பண்ணுனேன். உங்க அண்ணனை அவர் பார்க்குற வேலையை விட்டு தூக்கணும். அது தான் என்னோட எண்ணம். லஞ்சம் வாங்கினது தப்பு தானே நந்தன் “

“பேசாதே என் கிட்ட. இனி ஒரு வார்த்தை பேசினா நான் மனுசனாவே இருக்க மாட்டேன். இந்த குடும்பத்தை எப்பவும் நீ ஒன்னா வச்சிருப்பேன்னு பார்த்தேன். ஆனா நீ பிரிக்க வந்திருக்கேன்னு இப்போ புரிஞ்சிக்கிட்டேன். நீயெல்லாம் என் பொண்டாட்டின்னு சொல்ல எனக்கு கேவலமா இருக்கு. அது சரி குடும்பத்தோட அன்பு என்னென்னு தெரியாம வளர்ந்தவ தானே ? உனக்கு எங்கே குடும்பம் பத்தி தெரியப் போகுது “ என கோவத்தில் வார்த்தைகளை அவனறியாது அள்ளி வீச, அவளின் நெஞ்சில் வந்து அதுவோ ஈட்டியாக குத்தியது.

“நந்தன். நீங்க இப்படி பேசுவீங்கன்னு நான் நினைச்சி கூட பார்க்கலை “

“என் அண்ணன் பண்ணினது தப்பு தான். எங்க குடும்பத்தோட கௌரவத்தைப் பத்தி நினைச்சியா நீ ? இனி அண்ணி சின்மயி வாழ்க்கை என்னாக ?”

“எதுக்கு இப்படி செல்பிஷ் மாதிரி பேசுறீங்க ? உங்க அண்ணன் நல்லவரே இல்லை. அவருக்கு கிடைச்ச வேலையை பயன்படுத்தி அவர் எவ்வளோ தப்புகள் பண்ணிருக்காரு தெரியுமா ?“ 

“எனக்கு ஒரு விசியத்தை மட்டும் சொல்லு ? என்னை கல்யாணம் பண்ணினது என் அண்ணனை இந்த நிலைமைக்கு கொண்டு வர்றதுக்கு தானா சொல்லு ?” கண்களோ ருத்திரமூர்த்தியாக சிவந்திருக்க கேட்டான்.

“ஆமா. ஆனா நான் உங்களை நேசிச்சி தான் கல்யாணம் பண்ணுனேன். என்னை நீங்க நம்பலையா நந்தன் ?” ஏமாற்ற உணர்வில் கேட்க,

“அப்போ நான் வழியை வந்து காதலிக்க போய் என் காதலை நீ பயன்படுத்துக்கிட்டே.”

“நான் பேசுறதை முழுசா கேளுங்க. நான் ஏன் இப்படி பண்ணுனேன்னா ?”

“பேசாதே நீ ! இனி நீ இந்த வீட்டுல இருக்க கூடாது. என் கண்ணு முன்னாடி நிக்காம எங்கையாவது போயிரு. உனக்கு எப்படிடி என்னை ஏமார்த்த மனசு வந்தது“ கேட்டவாறு இரு கரங்களையும் அவளின் கழுத்தினை நோக்கிக் கொண்டு வந்தானே தவிர அவனால் அவளை காயப்படுத்த கூட முடியவில்லை.

 பைக் கீயை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி விட்டான். நந்தன் கூறிய வார்த்தைகள் மூளைக்கு ஏறுவதற்கு அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது. அப்படியே தரையில் மடிந்தாள். தன்னவனிடம் இப்படியொரு கொடிய வார்த்தைகளை எதிர்பார்க்காத மங்கையவளோ விழிகளில் கண்ணீர் வழிந்தோட மாங்கல்யத்தைப் பற்றினாள். 

கீழே அறையில் இருந்த கவிநயா எந்த மனநிலையில் இருந்தாலோ அதே போல் தான் இங்கே அஞ்சனாவும். 

இனி அவள் எடுக்கப் போகும் முடிவு என்ன ?



Leave a comment


Comments


Related Post