இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 26 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 07-05-2024

Total Views: 17923

செந்தூரா 26


பெண்கள் அனைவரும் செந்தூரனை சுற்றி அமர்ந்துக் கொண்டு கண்ணீர் வடிக்க பொறுமையின்றி தாத்தாவை பார்த்தான் செந்தூரன். “முதல்ல எல்லாரும் உங்க அழுகையை நிறுத்திட்டு வாங்க, பூஜையை முடிப்போம், அந்த ஆத்தாகிட்ட நல்லா வேண்டிப்போம். நல்லதே நடக்கும்” என்று முடித்தார் முத்துப்பாண்டி தாத்தா.


ஆரவாரத்துடன் கேலியும் கிண்டலுமாக கோயிலுக்கு சென்றவர்கள் ஒரு வித அமைதியுடன் பூஜையை முடித்து வீடு திரும்பி இருந்தனர். செந்தூரன் தாரிகாவை நெருங்கினாலே, “என்னால தான மாமா உனக்கு அடிப்பட்டது” என்று அழுது கரைந்தாள். வீட்டினர் அனைவருமே ஒரு இறுக்கத்துடன் நடமாடிக் கொண்டிருக்கவும் சலித்து போனான் செந்தூரன்.


மறுநாள் காலை எழுந்து தயாராகி அனைவரின் முன்னே வந்து நின்றவன், “நானும் தாராவும் கோயம்பத்தூர் கிளம்பறோம். நீங்க இன்னைக்கே கிளம்பி எங்களோட வர்றது என்றாலும் சரி. இல்லை நேரா பங்ஷனுக்கு வர்றது என்றாலும் சரி” என்றான் பொதுபடையாக


உண்மையில் அவர்களை அழைக்கவே அவனுக்கு மனமில்லை. அவன் வேலையில் மூழ்கி இருக்கும் போது வீட்டினர் எதாவது பேசி தாரிகாவின் மனம் நோக செய்வார்கள் என்று அனுமானித்து இருந்தான். அதே சமயம் கம்பெனி திறப்பு விழாவை குடும்பத்தினர் இல்லாமல் செய்யவும் முடியாது. எனவே அவன் முழுமனதுடன் யாரையும் அழைக்கவில்லை.


ஆனால் ஜானகி, “மத்தவங்க எப்படியோ தெரியாது, நான் உன் கூடவே இன்னைக்கே வர்றேன்” என்றார் தீர்க்கமான குரலில். மகனுக்கு என்னவாயிற்றோ என்று வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இங்கே உட்கார்ந்திருக்க முடியாது. அதைவிட அவன் இருக்கும் இடத்தில் அவனை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்று தோன்றியது.


நீண்ட பெருமூச்சொன்றை வெளிவிட்டபடி மற்றவர்களை பார்த்தான். காயத்ரி தன் கணவனோடு ஊருக்கு செல்வதாகவும் விழா அன்று வருவதாகவும் கூறிவிட்டாள். சுபாஷூம் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி விட, ரஞ்சிதம் பாட்டியும் ஜானகியும் மட்டும் அவர்களுடன் செல்வது என்று முடிவானது.


கதிரேசனும் முத்துப்பாண்டியும் வயலில் வேலை இருப்பதாக கூறிவிட்டனர். சாரதா மகளை அழைத்து, “செந்தூரனுக்கு அடிப்பட்ட கவலையில் ஜானகி அத்தை ஒன்றிரண்டு வார்த்தை பேசத் தான் செய்வாங்க. அதை எல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு அவன் கிட்ட சொல்லிட்டு இருக்காதே. அப்புறம் அவன் அம்மாகிட்ட சண்டை போடுவான். எல்லாம் கொஞ்ச நாள்ல சரியா போயிடும். புரிஞ்சதா?” என்று ஒரு அன்னையாக தன் அறிவுரையை மகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.


“அத்தையை நான் தப்பா எடுத்துக்கிட்டா தானே மாமாகிட்ட குறை சொல்லுவேன். எனக்கே ஜோசியர் சொன்னதுபோல நடக்குதேனு தோணும் போது, அவங்களுக்கும் அப்படி தானே தோணும். நான் பார்த்துக்கிறேன்ம்மா, நீ கவலை படாமல் அப்பாவோட போய்ட்டு பங்கஷன் அன்னிக்கு வந்துடு” என்று தெளிவாக பேசிய மகளை அணைத்து உச்சி முகர்ந்தார் சாரதா.


காயத்ரி சத்யன் தம்பதியினரும் சுபாஷூம் சாரதாவும் சென்னைக்கு கிளம்பினர். செந்தூரனுடன் தாரிகாவும் ஜானகியும் ரஞ்சிதம் ஆச்சியும் கோவைக்கு கிளம்பினர். காரில் செல்லும் போதே செந்தூரன் கவினுக்கு அழைத்து அவன் குடும்பத்துடன் வரப்போவதை கூறினான். கவின் அன்னம்மாவிடம் வீட்டு பெரியவர்களுக்கான அறையை தயார் செய்ய சொல்லி விருந்து சமைக்க சொல்லிக் கொண்டிருந்தான்.


விவரம் கேட்ட ஆராத்யாவிடம் செந்தூரன் வரப்போவதை கூறினான் கவின். அடுத்த ஒரு மணிநேரத்தில் கார் அந்த வீட்டின் வளாகத்தினுள் நுழைந்தது. செந்தூரன் காரில் இருந்து இறங்கியதும், “ஹாய் மித்ரன். ஹவ் ஆர் யூ?” என்றபடி அவனை கட்டிக் கொண்டாள் ஆராத்யா.


மரியாதை நிமித்தமாக அதை ஏற்று நாசூக்காக அவளை தூர நிறுத்தியவன், “மீட் மை ஃவைப் தாரிகா” என்று மனைவியை அறிமுகம் செய்து வைத்தான்.


குழப்பத்தில் இருந்த தாரிகாவின் முகம் பொலிவிழந்து இருந்தது, உதட்டை எட்டாத சிரிப்பொன்றை ஆராத்யாவிடம் உதிர்த்து விட்டு, அவளிடம் கைக் கொடுத்தாள் தாரிகா. அவளோ ஆராய்ச்சியாக தாரிகாவை மேலிருந்து கீழாக பார்த்தபடி, அவர்கள் இருவரின் கைகளை பார்த்தாள்.


தாரிகாவும் நல்ல நிறம் தான் என்றாலும் வெளிநாட்டில் பிறந்து வாழ்ந்து வரும் ஆராத்யா அளவிற்கு இல்லை. ஆராத்யாவை விட குள்ளமாகவும் சற்றே பூசினாற் போன்ற உடல் வாகுடனும் இருந்தாள். இவள் என்னை விட அப்படி என்ன உசத்தி? என்று எண்ணியபடி வேண்டுமென்றே தாரிகாவின் ஆங்கில புலமையை தெரிந்துக் கொள்ள தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் பேசினாள் ஆராத்யா.


தாரிகாவிற்கும் ஆங்கிலம் தெரியும் என்றாலும் மேல்நாட்டு பாணியில் வேகமாக பேசும் ஆராத்யாவுக்கு ஈடாக அவளால் பதிலளிக்க முடியவில்லை. பாவமாக கணவனை பார்த்தாள். அதை புரிந்துக் கொண்ட செந்தூரனும் ஆராத்யாவின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பதிலளித்துக் கொண்டே அவளுடன் நடந்தான்.


தாரிகா, ஜானகி மற்றும் ரஞ்சிதம் ஆச்சியை அழைத்துக் கொண்டு வீட்டை சுற்றி காட்டினாள். அரண்மனை போன்ற இவ்வளவு பெரிய வீட்டை மகன் தன் மனைவிக்காக வாங்கியிருக்கிறோனே என்று வாயை பிளந்தார் ஜானகி. வீட்டை வாங்கியவன் பெற்றவர்களை அழைத்து காண்பிக்காமல் மனைவிக்கே முதலிடம் கொடுக்கிறானே. இப்போ கூட வந்தா வாங்க, வராட்டி போங்க என்பது போல தானே கூப்பிட்டான்? என்ற ஜானகியின் மனம் சுணங்கியது.


ஜானகி ஒரு தாயாக, அத்தையாக நல்லவர் தான். அடுத்தடுத்து மகனுக்கு நடக்கும் அசம்பாவித்தால் சற்றே குழப்பத்தில் இருந்தவருக்கு, அந்த வீட்டை பார்த்ததும் தாரிகாவின் மேல் மாமியாராக பொறாமை பட்டார். அவர் மனதில் அடக்கி வைத்திருந்த மூட நம்பிக்கை மேலெழும்பி அவர் மூளையை மழுங்கடிக்க ஆரம்பித்தது.


“எப்படியோ என் மகனுக்கு என்ன ஆனாலும் பராவாயில்லை. அவனுக்கு பின்னாடி உனக்கு பாதுகாப்பா இருக்கும்னு இவ்வளவு பெரிய வீட்டை வாங்கி வச்சிருக்கானா?” என்று நெருப்பை அள்ளி வீசுவது போல வார்த்தைளை தாரிகாவின் மேல் வீசினார் ஜானகி.


“ஐயோ அத்தை, என்ன வார்த்தை சொல்லிட்டீங்க? மாமாக்கு எதாச்சும் ஆச்சுனா அடுத்த நிமிஷம் நானும் இருக்க மாட்டேன். அவருக்கு எதுவும் ஆகாது. இது மாதிரி நெகட்டிவா தயவு செய்து பேசாதீங்க, ப்ளீஸ் அத்தை” என்று கண்ணீர் விட்டாள் தாரிகா.


“நான் பேசலைனா மட்டும் உன் ஜாதகம் அவனை சும்மா விடுமா? இரண்டு முறை உயிர் தப்பி இருக்கான், ஏதோ நான் செஞ்ச புண்ணியம். எத்தனை முறைதான் அந்த கடவுளும் காப்பாத்தி விடுவாரு. எல்லாம் உன்னோட நேரம் தான் என் மகனை ஆட்டி வைக்குது” என்று வார்த்தைகளை கடித்து துப்பினார் ஜானகி.


ரஞ்சிதம் ஆச்சி முன்னால் சென்றிருக்க, இவர்களின் உரையாடலை அவர் கேட்டிருக்கவில்லை. செந்தூரன் கவினுடனும் ஆராத்யாவுடனும் மும்மரமாக தொழிலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான்.


ஜானகி அடிக்குரலில் தாரிகாவிற்கு மட்டும் கேட்குமாறு திட்டிக் கொண்டிருக்க, தாரிகாவோ கண்களில் வழியும் கண்ணீரை அடக்க மாட்டாமல் புடவையால் துடைத்துக் கொண்டிருந்தாள். ஏதேச்சையாக திரும்பி பார்த்த ஆராத்யா அவர்கள் இருவரையும் பார்த்து புருவம் சுருக்கினாள்.


என்ன விஷயம்? எதற்கு அந்த அம்மா செந்தூரன் மனைவியை திட்டிட்டு இருக்காங்க. அவளும் அழுதுட்டே இருக்காளே என்று யோசித்துக் கொண்டே, அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தாள் ஆராத்யா.


செந்தூரன் தன் அறைக்கு சென்று பிரஷ்அப் ஆகி வருவதாக சொல்லி சென்றான். அறைக்குள் இருந்து தாரிகாவை அழைத்தான். அவளும் அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.


மனைவியின் முகம் அழுது வீங்கியிருப்பதை பார்த்து திடுக்கிட்டவன் அவள் கன்னத்தை தன் இரு உள்ளங்கையிலும் ஏந்தி, “என்னாச்சுடா, அம்மா எதாச்சும் சொன்னாங்களா?” என்றான் அழுத்தமான குரலில்.


“இஇல்லை மாமா, நான் அழுதால் அதுக்கு அத்தை தான் காரணமா என்ன? உங்களுக்கு என்னால தான் அடிபட்டுச்சேனு எனக்கு கவலையா இருக்கு மாமா, அதான்” என்று சொல்லிக் கொண்டே அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டு கதறி அழுதாள்.


அவளின் தலையை ஆதரவாக தடவிக் கொண்டே, “பைத்தியமாடி உனக்கு, இந்த காலத்து பொண்ணா நீ? நான் கால் தவறி விழுந்ததுக்கு நீ என்ன செய்வே? நான் உன் அழகில மயங்கி உன்னையே பார்த்துக்கிட்டு வந்து, பாதையில் கவனம் வைக்கல, அதுக்கு நீ என்ன செய்வே?” என்றான் கனிவான குரலில்.


ஆச்சரியமாக நிமிர்ந்து கணவனை பார்த்தாள் தாரிகா. “ஆமாடி, நீ வேற ஈரச் சேலையில சிலையாட்டம் இருந்தே, அப்படியே உன்னை கோழி அமுக்கற மாதிரி அமுக்கலாம்னு வந்தேன், அதுக்குள்ள கீழே விழுந்துட்டேன். அதனால…” என்று நிறுத்தினான்.


“அதனால?” என்று புரியாமல் விழிவிரித்து எதிர்கேள்வி கேட்டவளை, வாரி அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டே, “வசமா என் கிட்ட தானா வந்து சிக்கிட்ட இந்த கோழியை சாப்பிடாமல் விடமாட்டேன்” என்று அவள் கன்னத்தை கடித்தான்.


கணவனின் பேச்சிலும் செயலிலும் முகம் சிவந்து போக அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள் தாரிகா. அவளை தனக்குள் இறுக்கி அணைத்தபடி அவளின் தலையில் தன் நாடியை வைத்தபடி கண்மூடி நின்றிருந்தான் செந்தூரன்.


செந்தூரனை அழைக்கலாம் என்று வந்த ஆராத்யா அவர்கள் இருவரும் இருந்த நிலையை பார்த்து அதிர்ந்து நின்றாள். அவனின் கைவளைவில் தன்னால் இருக்க முடியவில்லையே என்று மனது ஏங்கியது. 


செந்தூரமித்ரன் தன் அழகிற்கும் திறமைக்கும் ஈடான பெண்ணை திருமணம் செய்திருந்தால் கூட பரவாயில்லை. ஆராத்யா ஒதுங்கி போயிருப்பாளோ என்னவோ? அவனுக்கு சற்றும் பொருத்தமில்லாத இந்த பெண்ணையா உருகி உருகி காதலித்தான்? அதுவும் கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்திருக்கிறான். அவனுக்கு சரியான பொருத்தம் இந்த ஆராத்யா தான். அதை அவனும் சீக்கிரமே புரிந்துக் கொள்வான், இல்லையென்றால் புரிந்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்


அவனே அந்த தாரிகாவை விட இந்த ஆராத்யா தான் அழகிலும் அறிவிலும் சிறந்தவள் என்று உணரும் படி செய்ய வேண்டும். அதன் பிறகு அவனே தாரிகாவை ஒதுக்கி ஆராத்யாவை ஏற்றுக் கொள்வான். எப்போதும் அவன் கைவளைவிற்குள் தான் இருக்க வேண்டும் என்று தவறான பாதையில் யோசிக்க தொடங்கி விட்டாள் ஆராத்யா.


அதற்கு தூபம் போடுவது போல ஜானகி செந்தூரன் இல்லாத சமயங்களில் தாரிகாவை எதாவது சொல்லி திட்டிக் கொண்டே இருப்பதை பார்க்கவும் ஜானகிக்கும் தாரிகாவை பிடிக்கவில்லை என்று தெரிந்துக் கொண்டாள் ஆராத்யா.


ஜானகியுடன் தனியாக பேசுவதற்கான வாய்ப்பிற்காக காத்திருக்கலானாள்.


அந்த நாளும் வந்தது. ஒரு நாள் ரஞ்சிதம் ஆச்சிக்கு உடம்புக்கு முடியவில்லை என்று செந்தூரன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான். தாரிகா குளிக்க சென்றிருந்தாள். ஜானகி மட்டும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.


“ஹாய் ஆன்ட்டி, சாப்பிட்டீங்களா?” என்றபடி வந்து அவர் அருகில் அமர்ந்தாள் ஆராத்யா


“ஓ நீ தமிழ் கூட பேசுவியாம்மா? நான் என்னவோ உனக்கு தமிழ் தெரியாதுனு நினைச்சிட்டு தான் இரண்டு நாளா உன் கிட்ட எதுவும் பேசலை, தப்பா எடுத்துக்காதேம்மா. நான் சாப்பிட்டேன், நீ சாப்பிட்டியா?” என்று கேட்டார் ஜானகி.


“சாரி ஆன்ட்டி, நான் உங்க மகனிடம் ஆங்கிலத்தில் பேசியே பழகிட்டதால அப்படியே பேச வருது, எனக்கு தமிழ் நல்லாவே வரும். என் அப்பாவும் தமிழ் நாட்டுக்காரர் தான். நான் உங்க கிட்ட ஒரு விவரம் கேட்கணும், கேட்டால் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே” என்றாள்.


“என்ன கேட்கணும்?” என்று புருவம் சுருக்கியவர், “சரி கேளு, தெரிஞ்சா சொல்ல போறேன் அதுக்கென்ன” என்றார் ஜானகி.


“ஏன் ஆன்ட்டி மிஸஸ்.தாரிகாவை திட்டிட்டே இருக்கீங்க? உங்களுக்கு அவங்களை பிடிக்காதா?” என்று நேரடியாக கேட்டே விட்டாள் ஆராத்யா.


“எனக்கு ஏன் என்னோட தாரிகாவை பிடிக்காமல் போக போகுது. எனக்கு அவளை ரொம்பவே பிடிக்குமே, அவள் எங்க வீட்டு பொண்ணு” என்றார் ஜானகி சற்றும் யோசிக்காமல்.


அப்போதே குளித்து முடித்து வெளியே வந்த தாரிகா அத்தையின் பேச்சில் ஆனந்தமாக அதிர்ந்து நின்றாள்.


“அப்போ ஏன் அவங்களை திட்டிட்டே இருக்கீங்க? அவங்களும் அழுதுட்டே இருக்காங்க?” என்றாள் புரியாதவள் போல கண்களை விரித்து.


“அது.. அது வந்து… எனக்கே தெரியலை. என்னோட நாத்தனார் பொண்ணான அவளை நான் தூக்கி வளர்த்திருக்கேன். அதனால அவளை ரொம்பவே பிடிக்கும். ஆனால் மருமகளா அவளை முழுமனசோட ஏத்துக்க முடியலை. ஏன்னா அவளோட ஜாதகத்தால என் மகன் உயிருக்கு ஆபத்துனு கேள்வி பட்டதிலிருந்து எனக்கு பதட்டமாவே இருக்கு. அதுக்கு தகுந்த மாதிரி ஒண்ணொண்னா நடந்தா நானும் என்ன செய்வேன்” என்று புலம்பினார் ஜானகி.


“அப்படி என்ன நடந்தது ஆன்ட்டி?” என்று கேட்டாள் ஆராத்யா. ஜானகி பொள்ளாச்சியில் நடக்க இருந்த விபத்துக்களை பற்றி விவரித்தார்.


“என்ன சொல்றதுனு தெரியலை ஆன்ட்டி, எனக்கும் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைனாலும் நீங்க சொல்றதை கேட்கும் போது எனக்கே மித்ரனுக்கு எதாவது ஆகிவிடுமோனு கவலையாக இருக்கு” என்று அவள் சொல்லவும். “மித்ரனா?” என்று யோசனையாக கேட்டார் ஜானகி.


“ஆமாம் ஆன்ட்டி, செந்தூரமித்ரன் என்ற பேரை நாங்க மித்ரன்னு சொல்லி தான் கூப்பிடவோம். மித்ரன் சோ சுவீட், அவருக்கு எதுவும் ஆக கூடாது ஆன்ட்டி, ஹி இஸ் மை டீரிம் அன்ட் ஹேண்ட்சம்” என்று பேசிக் கொண்டே போனவளை புருவம் சுருக்கி பார்த்தார் ஜானகி.


தாரிகாவுமே அவளின் பேச்சில் வாயடைத்து நின்றாள். அப்போதே தான் உளறிக் கொட்டியதை உணர்ந்த ஆராத்யா மெல்ல அங்கிருந்த நகரப் போனாள். எழுந்தவளின் கரம் பிடித்து தடுத்த ஜானகி, “நீ என்ன சொன்ன இப்போ? அதை தமிழில் சொல்லு” என்றார் அழுத்தமாக.


“அது அது வந்து ஆன்ட்டி, மித்ரன் எங்க நாட்டில் இருக்கும் போது நான் அவரை காதலிச்சேன், அவரையே கல்யாணம் செய்துக்கணும்னு நினைச்சேன். என் அப்பாவும் மாமாவும் எவ்வளவோ அவரை கன்வின்ஸ் பண்ணாங்க. ஆனால் அவர் என்னை வேணாம்னு சொல்லி மறுத்துட்டார்” என்று தட்டு தடுமாறி சொல்லி முடிக்கவும்…


“அவன் வெளிநாட்டுக்கு படிக்க போகும் போது எவளையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துடுவானோனு நான் பயந்தது உண்டு. ஆனால் அப்படி உன்னை கல்யாணம் செய்துட்டு வந்திருந்தால் நல்லாயிருக்குமேனு இப்போ தோணுது” என்றார் ஜானகி பெருமூச்சுடன்.


தன் காதல் கணவனை வேறொருத்தி விரும்புவதை கேட்டதற்கே தாரிகாவின் இதயத்தில் ஏற்பட்ட வலி உயிர் வரை வலித்தது. ஆராத்யாவின் வார்த்தைகளிலே அதிர்ந்து போயிருந்தவள் அதிலிருந்து வெளிவருவதற்கு முன்னரே, ஐானகியின் பதிலை கேட்டு உள்ளுக்குள் சுக்கு நூறாக உடைந்து போனாள்.


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post