இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 6 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 07-05-2024

Total Views: 13354

இதயம் - 6

சித்தார்த்தின் அழைப்பை பார்த்ததும் வாசு குழப்பத்துடன் அழைப்பை ஏற்றான். "என்னடா ... இந்த நேரத்துல கால் பன்ற ... கீர்த்தி தூங்கிட்டாளா" என்று வாசு கிண்டலுடன் கேட்டான். "டேய் இல்லைடா கீர்த்தியும் நானும் கால் பேசிட்டு இருக்கும் போது அவங்க அப்பா பாத்துட்டாரு டா ... கீர்த்தி போன்ன கட் பன்னிட்டா ... திரும்ப கூப்ட்டா ஸ்விட்ச் ஆப்ன்னு வருது ... எனக்கு ரொம்ப பயமா இருக்குடா ... அவங்க கீர்த்திய அடிச்சிருப்பாங்களா என்னன்னு தெரியல டா ... கொஞ்சம் வரியா அவ வீடு வரைக்கும் போய்ட்டு வரலாம்" என்று சித்தார்த் அழைக்க வாசு "டேய் கொஞ்சம் பொறுமையா டென்ஷன் ஆகாம முதல்ல நில்லு டா ... விஷயம் வீட்ல தெரிஞ்சிருச்சி அவ்வளவு தான ... மிஞ்சி மிஞ்சி போனா போன வாங்கி வைப்பாங்க முதல்ல அட்வைஸ் பன்னுவாங்க கேக்கலன்னாதா அடிப்பாங்க ... நீ பயப்படாத எதா இருந்தாலும் காலையில போய் பேசிக்கலாம்" என்று கூறினான். 

"இல்லைடா அவங்க அப்பா கவுரவத்துக்கு பொறந்த வெறி பிடிச்சவர் டா ... அவரை நம்பி கீர்த்திய காலையில வரைக்கும் விட்டு வைக்க எனக்கு மனசு வரல ... உள்ள போக வேணா வெளில நின்னு எதாவது சத்தம் கேக்குதான்னு மட்டும் பாத்துட்டு வரலாம் ... ப்லீஸ் டா ... எனக்கு மனசே சரியில்லை ... அவளை பத்தி தான் உனக்கு தெரியும் இல்லை ... அவங்க அப்பா அவளை கட்டாயப்படுத்துனா அவ சூசைட் ட்ரை பன்ன கூட தயங்க மாட்டா .. ஏற்கனவே ஒரு முறை நம்ம காப்பாத்தி இருக்கோம் ... ப்லீஸ் டா வாடா" என்று சித்தார்த் வெகுவாக கெஞ்ச வாசுவும் வேறு வழி தெரியாமல் பரத்திடம் மட்டும் உண்மையை கூறி விட்டு சித்தார்த் வீட்டிற்குச் சென்றான். சித்தார்த் வண்டி பின்னால் ஏறிக் கொண்டு "சீக்கிரம் சீக்கிரம் போ" என்று அவசரப்படுத்த வாசுவும் வேகமாக கீர்த்தி வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான். 

கீர்த்தி வீடு நெருங்கியதும் "டேய் இரண்டே ஹாரன் அடி" என்று சித்தார்த் கூற வாசுவும் எண்ணி இரண்டே ஹாரன் அடித்தான். வீட்டிற்குள் கீர்த்தியின் காதல் விஷயம் தெரிந்ததும் கீர்த்தியின் தந்தை கீர்த்தியை பெல்ட்டால் சரமாரியாக அடித்து அவளை மயக்கத்திலே ஆழ்த்தி இருந்தார். கீர்த்தியின் கைகளில் பெல்ட்டினால் அடித்த தடயம் சாட்டை சாட்டையாக படிந்திருக்க வாயில் இரத்தம் கசிய முகமெல்லாம் அவள் தந்தையின் கை விரல் தடங்கள் படிந்து கன்றி போய் தரையில் சுயநினைவில்லாமல் விழுந்து கிடந்தாள். தன் தந்தை மிருகத்தனமாக தன் அக்காவை தாக்கிய பயத்தில் கீர்த்தியின் தம்பி ஓரமாக நடுக்கத்துடன் நின்றிருந்தான். "தூக்கிட்டு போய் ரூம்ல போட்டு அடைச்சி வை" என்று தன் மனைவியிடம் கூறி அவர் சென்று விட இவ்வளவு நேரமும் தன் மகளின் கதறல்களை காதார கேட்டும் அவளை காப்பாற்ற முடியாமல் பெற்ற வயிற்றை அப்பி பிடித்துக் கொண்டு அழுகையை அடைத்துக் கொண்டு நின்றிருந்த கீர்த்தியின் தாய் கதறலுடன் தன் மகளின் தலையை தூக்கி மடியில் வைத்து அவள் கன்னம் தட்டினார். "கீர்த்திம்மா ... கீர்த்திமா" என்று தன் மகளை நினைவு திரும்பச் செய்ய அவர் எடுத்த முயற்சியெல்லாம் அவர் கணவன் கொடுத்த அடியில் கரைந்து தான் போனது. 

எப்படியோ தன் மகளின் நினைவை தண்ணீரை தெளித்து எழுப்பி விட்டார். கீர்த்தி வலியில் முனங்கியவாறே அழுகையுடன்  எழுந்தமர்ந்தாள். "அம்மாடி" என்று கீர்த்தியின் தாய் ஆறுதலாய் கீர்த்தியை அணைக்க "அம்மா வலிக்குதும்மா விடும்மா" என்று முனங்கிய மகளின் வலி நிறைந்த குரலில் பெற்றவளின் மனம் கொழுந்து விட்டு எரிந்தது. "ஐய்யோ என் மகளை காப்பாத்த முடியாத பாவியா இருக்கனே" என்று தலையில் அடித்துக் கொண்டு அழுத அன்னையை பொருட்படுத்தாமல் தள்ளாடியவாறு எழுந்த கீர்த்தி தனதறைக்குள் நுழைந்தாள். அப்பொழுது சரியாக இரண்டு ஹாரன் சத்தம் கேட்கவும் கீர்த்தியின் வலி நிறைந்த கண்களின் சட்டென நம்பிக்கையும் புது தெம்பும் பிறக்க வேகமாக ஓடிச் சென்று ஜன்னல் வழியே கீழே பார்த்தாள். அவள் நினைத்தது போலவே தன் சித்தார்த் தான் வெளியில் நின்றிருந்தான். அவனை கண்டதும் ஓடிச் சென்று அவன் மார்பில் தஞ்சம் புகுந்துக் கொள்ள விரும்பிய நெஞ்சை தன் தந்தையை நினைத்து அடக்கிக் கொண்டு அங்கிருந்தே கண்களில் கண்ணீர் தேங்க சித்தார்த்தை பார்த்து புன்னகைத்தாள்.

முழுதாக ஹாரன் அடித்து ஒரு நிமிடம் கழித்து தன்னை தவிக்க விட்டு முகம் காட்டிய காதலியை பார்த்ததும் மனம் நொறுங்கி போனான் சித்தார்த். அதும் அவளின் வலி நிறைந்த புன்னகையில் உயிரே போய் விட்டது. "மச்சான் அவங்க அப்பா ரொம்ப அடிச்சிருக்காருடா" என்று சித்தார்த் அழுகையுடன் கூற வாசுவும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான். "டேய் பொறுமையா இருடா எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்" என்று வாசு கூற சித்தார்த் "இல்லை நா இப்பவே அந்த ஆள உண்டு இல்லன்னு பன்றன் ... எவ்வளவு தைரியம் இருந்தா கீர்த்திய இந்த அடி அடிச்சிருப்பான்" என்று கோபமாக வீட்டிற்குள் செல்ல போன சித்தார்த்தை வாசு இழுத்து பிடித்தான். "டேய் இருடா கோவப்படாத ... உன் கோவம் பிரச்சனைய பெருசாக்கிட போது" என்று வாசு கூறி "நீ முதல்ல அவ சேப்பான்னு கேளு" என்று கூறினான். சித்தார்த் உடனே தனது கைப்பேசியை எடுத்து காண்பித்து கீர்த்தியை அழைக்கக் கூற கீர்த்தியும் அதை புரிந்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். வேகமாக சென்று கதவை பூட்டியவள் யார்க்கும் தெரியாமல் தன் நேப்கினில் மறைத்து வைத்திருந்த சித்தார்த் கொடுத்த மற்றொரு கைப்பேசியை எடுத்தவள் சித்தார்த்திற்கு அழைத்தாள். சித்தார்த் அழைப்பை ஏற்றதும் "கீர்த்தும்மா ... என்னம்மா ஆச்சி நிறைய அடிச்சிட்டாரா" என்று பதட்டமாக கேட்டான். "சித்து" என்று கீர்த்தி கூறினாளே தவிற பதிலே பேசவில்லை தேம்பி தேம்பி அழுகத் தொடங்கினாள். "ஹேய் கீர்த்து ... அழுவாத டி ... முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு" என்று சித்தார்த் கேட்க "சித்து ... சித்து ... என்னால முடியல ... சித்து ... என்னை கூட்டிட்டு போ ... ரொம்ப வலிக்குது" என்று கீர்த்தி கதற வாசுவும் அதை கேட்டுக் கொண்டு தான் இருந்தான். வாசுவாலே கீர்த்தியின் அழுகை நிறைந்த வலி நிறைந்த வார்த்தைகளை கேட்க முடியவில்லை. அவன் கண்களும் கலங்கி தான் போனது. தோழியின் வலியே வாசுவிற்கு இத்தனை வலிக்கிறதே சித்தார்திற்கு கீர்த்தி தான் உலகமே அவனிற்கு எவ்வளவு வலிக்கும் என்று நினைத்தவன் சித்தார்த்தை அணைத்துக் கொண்டான். சித்தார்த்தும் கீர்த்தியின் பதிலில் அழுதுக் கொண்டு தான் இருந்தான். இப்பொழுது மாற்றி மாற்றி கண்ணீர் விடுவதால் எப்பயனும் இல்லை என்பதை உணர்ந்த வாசு இப்பிரச்சனைக்கு தீர்வை யோசிக்க தொடங்கினான். 

"முதல்ல இரண்டு பேரும் அழுகறத நிறுத்திட்டு கூல் டௌன் ஆகுங்க" என்று கூறிய வாசு கைப்பேசியை வாங்கி "கீர்த்தி ... நீ கவலைப்படாத நாளைக்கு நாங்க வந்து உங்க அப்பா கிட்ட பேசறோம் ... இப்ப போய் தூங்கு ... மருந்து போட்டுக்கோ கீர்த்தி" என்று கூறும் போதே வாசுவின் குரலும் உடைந்து விட்டது. கீர்த்தி சரி என்று அழைப்பை துண்டிக்க வாசு சித்தார்த்தை கடினப்பட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றான். கீர்த்தி உடனே கைப்பேசியை அணைத்து இருந்த இடத்திலே வைத்து விட்டு கதவை திறந்து விட்டு கட்டிலில் சுருண்டு படுத்து விட்டாள். சித்தார்த்தை வாசு சிரமப்பட்டு அங்கிருந்து சமாதானம் செய்து அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சித்தார்த்தை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்த வாசு அவனை உறங்கக் கூற அவனோ சோகமாக கைப்பேசியை வெறித்தவாறே அமர்ந்திருந்தான். "டேய் பட்றா" என்று வாசு சித்தார்த்தை பிடித்து மெத்தையில் தள்ளினான். சித்தார்த்தும் அமைதியாக படுத்து விட்டான். ஆனால் உறக்கம் தான் சிறிதும் அவனிற்கு வரவில்லை நினைவு மனம் மூளை என அனைத்திலும் கீர்த்தியின் வீங்கிய முகம் தான் நிலைத்திருந்தது. 

காலை விடிந்ததும் விழிப்பு தட்ட எழுந்த வாசு சித்தார்த் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டதும் சத்தம் வராமல் எழுந்து வெளியில் சென்றான். இரவு முழுதும் கீர்த்தியை பற்றின சிந்தனையிலே உலன்றவன் எப்படியோ உறங்கி இருக்கிறான் அப்படியே சிறிது நேரம் உறங்கட்டும் என்று நினைத்த வாசு தனது வழக்கமான செயல்களை செய்யச் சென்றான். எட்டு மணி போல் அவனாகவே விழிப்பு வர எழுந்தமர்ந்த சித்தார் நேரத்தை பார்த்து பதறி விட்டான். "டேய் ஏன்டா என்னை எழுப்பல" என்று அவசரமாக எழுந்து அமைதியாக அமர்ந்திருந்த வாசுவிடம் கேட்டவாறே குளியலறைக்குள் ஓடினான். வாசு அமைதியாக கீழே சென்று சித்தார்த்திற்காக காபியை மேலே எடுத்துச் சென்று வைத்தான். சித்தார்த் அவசரமாக முகத்தை அலம்பிக் கொண்டு வெளியில் வர வாசு "பொறுமையா உட்காந்து இதை குடி" என்று அவன் கையில் காபியை திணித்தான். "டேய் நா என்ன பிரச்சனையில இருக்கன் நீ விளையாடிகிட்டு இருக்க" என்று சித்தார்த் கேட்டான். "டேய் குடி டா" என்று வாசு கூற சித்தார்த்தும் அமைதியாக காபியை அருந்தினான். இருவரும் வீட்டில் சொல்லி விட்டு நேராக கீர்த்தியின் வீட்டின் முன் சென்று நின்றனர். 

கீர்த்தி இன்னுமுமே உறக்கத்தில் இருந்து எழவில்லை. இரவு நடந்த கலவரத்திலும் வாங்கிய அடியிலும் அவளால் மெத்தையை விட்டு எழும்பவே முடியவில்லை. கீர்த்தியின் தாய் அவளை எழுப்ப முயன்று தோற்று தான் போனார். வெளியில் நின்றிருந்த வாசுவிடம் "டேய் உள்ள வாடா போலாம்" என்று சித்தார்த் அழைக்க "இருடா வரவேற்பு விழா ஏற்பாடு உள்ள நடக்குது ... நம்மள ஸ்பெஷல்லா வரவேற்க போறாங்க" என்று வாசு வண்டியில் சாய்ந்து சாவகாசமாக அமர்ந்து கூற சித்தார்த் ஒன்றும் புரியாமல் விழித்தான். "டேய் உனக்கென்ன பைத்தியமா டா" என்று கேட்ட சித்தார்த்திடம் "மச்சான் ... ஒன்ல இருந்து டென் வரைக்கும் எண்ணு" என்று கூற "சத்தியமா உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு" என்று கூறிய சித்தார்த் உள்ளே செல்ல போக வாசு அவன் கையை பிடித்து தடுத்து "ஒன்" என்று கூறினான். "டேய் டென்ஷன் பன்னாத டா" என்று சித்தார்த் கூற "டூ" என்று சித்தார்த் கூறினான். "மச்சான் ப்லீஸ் டா கையயாவது விடு" என்று கெஞ்சலுடன் சித்தார்த் கூற "த்ரீ" என்று வாசு வீட்டு வாயிலை பார்த்தவாறே கூறினான். 

சித்தார்த் கடுப்பாகி வாசுவை முறைத்தவாறே நின்றிருக்க வாசுவோ விடாமல் ஒன்பது வரை எண்ணி விட்டு இறுதியாக "பா" என்று பத்து என்று கூறி முடிக்கும் முன்பே கீர்த்தியின் தந்தை அடித்து பிடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தார். வந்த வேகத்தில் வேட்டி தடுக்கி கீழே குப்புற விழுந்தவர் சரியாக சித்தார்த் காலடியில் விழவும் சித்தார்த் அதிர்ந்து துள்ளி குதித்து பின் நகர்ந்தான். வாசு புன்னகையுடன் சித்தார்த்தை பார்க்க அவனோ எப்படி டா என்று தன் நண்பனை பார்த்தான். அதற்குள் கீர்த்தியின் தந்தை மண்ணை தட்டிக் கொண்டு எழுந்து நின்று "மாப்பிள்ளை வாங்க ... ஏன் வெளியேவே நிக்கிறிங்க உள்ள வாங்க" என்று மென்மையாக தேன் சுவைக்க அழைத்தார். சித்தார்த்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைத்ததால் சிலையாக நின்று விட்டான். "வா மச்சான் இப்ப போலாம் உள்ள" என்று வாசு அசையாமல் நின்றிருந்த தன் நண்பனை இழுத்துக் கொண்டு உள்ளேச் சென்றான். 

என்னடா நடக்கிறது என்று விளங்காமல் சித்தார்த் தன் நண்பனுடன் சென்றான். மேலே கீர்த்தியை அவள் தந்தை எழுப்ப முயற்சிக்க அவளோ அசையாமல் கிடந்தாள். "கீர்த்தி எழுந்திரி" என்று அவர் எவ்வளவு குரல் கொடுத்தும் கீர்த்தியிடம் அசைவில்லை. பதட்டத்துடன் தன் மகளுக்கு ஏதோ ஆகி விட்டது என்று தன் கணவனை தேடி ஓடினார். "என்னங்க கீர்த்தி எவ்வளவு எழுப்பனாலும் எழலங்க .... எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று தன் கணவனிடம் பதட்டமாக கூற அவருக்கு முன் சித்தார்த்தும் வாசுவும் கீர்த்தி அறைக்கு ஓடினர். கீர்த்தியின் தாய் அவர்களை அதிர்ச்சியாகவும் தன் கணவனை கொலை பயத்துடனும் பார்க்க அவரோ அவர்கள் பின் கலக்கத்துடன் சென்றார். வேகமாக கீர்த்தியின் தலையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கீர்த்தி அருகில் அமர்ந்த சித்தார்த் "கீர்த்தி ... கீர்த்தி ... என்னை பாரு ... நா உன் சித்து வந்திருக்கன்" என்று கூறி கீர்த்தி கன்னத்தை தட்டினான். இவ்வளவு நேரமும் உயிரே இல்லாதவள் போல் கிடந்த கீர்த்தி சித்தார்த்தின் குரல் கேட்டதும் தன் கருவிழிகளை மூடிய இமைக்களுக்குள் உருட்டினாள். அதை கண்டதும் கீர்த்தியின் தாய் வாய் மேல் கை வைக்க சித்தார்த் "கண்ண திறம்மா" என்று மென்மையாக கீர்த்தியின் கன்னத்தை நீவினான். கீர்த்தியும் மெல்லமாக கண்களை திறந்தாள். "கீர்த்தி" என்று சித்தார்த் உணர்ச்சி வேகத்தில் கீர்த்தியின் காயங்கள் நினைவில்லாமல் அணைத்து விட கீர்த்தி வலியில் முனங்கியவாறே சித்தார்த் கைக்குள் நழுவியவாறு "வலிக்குது சித்து" என்று கூறினாள். கீர்த்தியின் வலி நிறைந்த முனங்கலில் சித்தார்த்தின் இதயம் துண்டு துண்டாக வெட்டப்பட்டது போல் வலித்தது. இதென்ன அதிசயம் இவ்வளவு நேரமும் காது கிழிய காட்டு கத்து கத்திக் கொண்டிருந்த அன்னையின் குரலில் அசைவின்றி கிடந்தவள் அவனின் காதலின் குரலை கேட்டதும் நிமிடத்தில் கண் திறந்து விட்டாளே என்ற ஆச்சர்யத்துடன் கீர்த்தியின் தாய் பார்த்தார். 


Leave a comment


Comments


Related Post