இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 08 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 07-05-2024

Total Views: 9225

அத்தியாயம் - 08

பிரம்மச்சுவடியை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் சித்திரகுப்தன். கழுத்தில் பாசக்கயிறின் தடம் அழுத்தமாக தென்பட்டது. என்னசெய்வதென்ற சிந்தனையொன்றே அவன் மூளையை அரித்துக் கொண்டே இருந்தது. 

எப்பாடுபட்டாவது அப்பெண்ணின் உயிரைக் கவர்ந்துவிட வேண்டும். அதொன்றே அனைத்துச் சிக்கல்களையும் சரிசெய்யும் மார்க்கம்‌. அவள் உயிரை கவர்ந்து வந்துவிட்டு இயமன் அழித்த அவளது கணக்கினையும் நேர் செய்துவிட வேண்டும். இதொன்றே அவன் மூளையில் யோசனையாய் உதிக்க எமகிங்ககரர்களை அழைத்து அவள் உயிரை கவர்ந்து வரும்படி செய்தான். 

வெகுநேரமாக அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த திரு சந்தேகத்தோடு அவளது உடம்பினைத் தொட்டுப் பார்த்தான். அதுவோ குளிர்ச்சியாக இருந்தது.

"அஞ்சும்மா.. எழுந்திரி" அவளது கன்னத்தில் தட்டி அவன் எழுப்பி பார்த்தான். அவள் கண்களைத் திறக்கவே இல்லை.

கைகளைத் தேய்த்துவிட்டு கால்களையும் தேய்த்துப் பார்த்து மீண்டும் கன்னத்தில் பலமாய் தட்டிப் பார்த்தவனுக்கு அவள் எந்தவித எதிர்வினையும் காட்டவே இல்லை.

"நல்லாத்தானே இருந்தால்.. மறுபடியும் என்னத்தை இழுத்து வச்சுருக்கான்னு தெரியல.." தன் தலையிலேயே ஓங்கி அடித்தவன் வேகமாக கீழே சென்றான்.

அவன் சென்ற மறுநிமிடம், இயமன் அவளின் அருகே அமர்ந்தான். அவனுக்குத் தெரியும் தற்போதைய அவளது நிலைக்கு காரணம் அவன்தான் என்று. அவள் தலையை வருடிய அந்நிமிடமே அவள் எமன் என  உணர்ந்து பயத்தில் மயக்கமாகிவிட்டாள். இந்த பயம் இப்போது அவனையும் பயமுறுத்தியது. இவள் மனதில் எப்படி நான் இடம்பிடிப்பது என்பதையும் மீறி அவளது உடல்நிலை தேற வேண்டும் என்பதில் அவன் கவனம் சென்றது. 

அதற்குள் திருகூடவே லட்சுமி சிவகாமி இருவரும் மேலே வந்து அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர்.

அவளுக்கான சிகிச்சை நடந்தும் இன்னும் கண்விழிக்காமல் இருந்தவளை யாரும் தொந்தரவு செய்யாமல் வெளியே இருக்க உள்ளே இயமன் நுழைந்தான். 

'அஞ்சனா! இந்த அச்சம் அவசியமற்றது. இனியும் உன்னை விட்டு தள்ளி நிற்பது என்னால் இயலாத ஒன்று. உன்னுடனே இருக்க வேண்டுமென்றே ஒவ்வொரு அணுவும் துடிக்கின்றது. உன் அத்தை மகன் உன்னை மணம் செய்ய வேண்டுமென்ற ஆவலில் இருக்கின்றான். அதற்கு முன்னர் நீயென் சொந்தமாகிவிட வேண்டும். உன் மீதான இந்த உன்மத்தம் ஒவ்வொரு நொடியும் அதிகரிக்கத்தான் செய்கின்றதே தவிர குறைந்த பாடில்லை' அவளது கையைப் பற்றிக் கொண்டே பேசும் வேளையில் சட்டென்று அவ்விடமே இருள் சூழ்ந்தது.

இயமன் கண்கள் சுருங்கியது.. இதழ்களோ "சித்திரகுப்தா" என முணுமுணுக்க தேகமெங்கும் இறுக்கமாகியது. அவனது நரம்புகள் புடைக்க அருகே இருந்த சாளரத்தின் வழியாக பார்க்க அவனது வாகனம் அங்கிருந்தது. கண்களில் ஏறிய சிவப்புடன் அவன் அதைப் பார்க்க இவன் கண்களின் சிவப்பு அங்கு இடமாறியது.  

சித்திரகுப்தன் சொல்லிற்கிணங்க அங்கே வந்த எமகிங்கிரர்கள் மருத்துவமனைக்குள் நுழைய முற்பட, அவர்களுக்கு முன்னதாக வந்து நின்றது இயமனின் வாகனம். கோபத்தில் அதன் மூக்கின் வழியே பெருமூச்சு வெளிவந்துக் கொண்டே இருந்தது. எமகிங்கரர்கள் இருவரும் அப்படியே நின்றுவிட எருமை அவர்களை நோக்கி அடியெடுத்து வைத்தது. 

"இங்கேதான் பிரபு இருக்கின்றாரா.. அவரே உயிரை கவர்ந்து செல்ல வந்துவிட்டாரா?" என்றவாறு அவர்கள் இருவரும் பேச இயமனே அவர்கள் முன் பிரசன்னமானான். 

"கிங்கிரர்களே இனி என் ஆணை இல்லாது இவளது உயிரை எடுக்க எவரும் வரக்கூடாது. சித்திரகுப்தனிடமும் கூறிவிடுங்கள் தேவையில்லாமல் என் வழியில் குறுக்கே வரவேண்டாமென.. செல்லுங்கள்.." இவ்வாறு சொன்னதும் "உத்தரவு பிரபு" என இரண்டு கிங்கிரர்களும் மேலோகம் சென்றுவிட்டன.

சித்திரகுப்தன் எமலோகத்தில் இருப்பே கொள்ளாது அங்கும் இங்கும் நடந்துக் கொண்டே இருந்தான். 

இந்நேரம் அவளது உயிர் எடுக்கப்பட்டிருக்குமா? இயமன் என்ன செய்ய காத்திருக்கின்றாரே? என்ன செய்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன். அவர் நிரந்தரமாக இந்த  எமலோகத்தினை ஆள வேண்டும் அவ்வளவுதான் எனக்கு வேண்டும் யோசனையுடனே நடந்துக் கொண்டிருந்த சித்திரகுப்தனின் பின்புறத்தில் எதுவோ மோத திரும்பியவன் எருமையினைக் கண்டு அப்படியே நின்று விட்டான். 

"இந்த நடுக்கம் எதற்காக சித்திரகுப்தா. பிரபுவை எதிர்த்த காரணத்துக்காகவா? அல்லது, நீ நினைத்த எதுவும் நடக்கவில்லையே அதற்காகவா?" எருமை உருமியது.

"உமக்குமா புரியவில்லை. நடந்துக் கொண்டிருப்பது விநாசத்திற்கான அறிகுறியென்று"

"இது விநாசமல்ல சித்திரகுப்தா. பிரபுவின் சினத்தினை அதிகரிப்பதில் தான் உண்டு விநாசம்"

"விதிகளை மீறுவதெல்லாம் மாபாவம்"

"விதிகளெல்லாம் மீறுவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் சித்திரகுப்தா. மேலோகத்தில் எத்தனையோ முறை விதிமீறல்கள் ஏற்பட்டிருக்கிறது. அதையெல்லாம் அறிந்தும் பிரபுவின் விஷயத்தில் மட்டும் வேண்டாம் என்று தடை போடுகிறாய் பார்த்தாயா.. இது நியாயமா?"

"பிரபு மரணத்தின் தேவன். அவர் தடம்மாறும் போது பூமியின் சம நிலையில் மாற்றம் வரும்"

"சரி விடு. இறுதியாக சொல்கிறேன் அஞ்சனாவின் உயிர் பிரபுவின் வசம். அவள் உயிர் பிரிய வேண்டும் என்றால் பிரபு இறந்துப் போக வேண்டும். அதற்காகத்தான் ஆசைப்படுகிறாயா? புரிந்துக் கொள் சித்திர குப்தா. இனியும் அவள் புறம் உன் பார்வை விழுந்ததென்றால் உன் உயிர் போய்விடும். பிறகு கணக்கெழுத நம் பிரபு வேறு ஆள் பார்க்க வேண்டியது தான். இப்போதுங் கூட அதீத பொறுமையோடு உன்னிடம் உரையாடுகிறேன். காரணம் நீ பிரபுவின் ப்ரியத்துக்கு உரியவன்‌. பொறுப்பாக எமலோகத்தினைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பணியும் தற்போது உன்னதுதான். பிரபு சிறிது காலம் திருக்கடையூரில் தான் வசிப்பார். அவர் இல்லை என்ற துணிச்சலில் யாருடனாவது கூட்டுச் சதியில் ஈடுபட்டாய் என்றால் அவர் காதல் வெற்றிப் பெற வேண்டுமென சொல்லி முதல் பலியாய் உன்னைத் தான் இடுவேன். புரிந்ததா?" இயமனின் எருமை அவனை மிரட்டிவிட்டு சென்றுவிட்டது.

"ம்க்கும்! எமலோகத்தினை காப்பாற்ற நினைத்தால் எருமையெல்லாம் நம்மை மிரட்ட வந்துவிடுகிறது. பிரபுவை தடுத்து நிறுத்த இனி வேறு மார்க்கம்தான் யோசிக்க வேண்டும். என்ன செய்யலாம்? பேசாமல் சனீஸ்வரனிடம் சென்றால் என்ன? அவர் பிரபுவுக்கு சகோதரர் தானே. அவர் சொன்னால் பிரபு கேட்பார். உடனே அவரிடம் முறையிடலாம்" என சித்திரகுப்தன் சனியைத் தேடி செல்லத் தொடங்க அப்போதே அவனுக்கு சனி பிடிக்கத் தொடங்கியது.

--------------------------

"கண்ணு முழிச்சுட்டயா அஞ்சு. ரொம்ப பயமுறுத்துற வரவர" திரு பேசினான். அவள் எதுவும் பேசவில்லை.  

நிற்காமல் மிருதுவாய் தன் தலைவருடும் புதுமையான ஸ்பரிசத்தினை ஏற்பது போல் அமைதியாய் கிடந்தாள். அந்த விரல்களின் வழி வழியும் ஏதோவொன்றில் உள்ளுள் பயம் தோன்றும் அதேசமயம் பாதுகாப்பாகவும் இருக்கிறதே. இதென்ன புதுவகையான உணர்வாக இருக்கிறது. குழப்பத்தால் அவளது புருவங்கள் இரண்டும் சுருங்கியது.

"தலை எதுவும் வலிக்குதா அஞ்சு" ஆறுதலாய் திரு பேச, பதில் பேசாமல் இமைகளை மூடிக் கொண்டாள்.

"அவ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எந்திருக்கட்டும் திரு. வா வெளிய போகலாம்"

"இல்லை அம்மா! நான் அவளைப் பார்த்துக்கிறேன்"

"அம்மா சொல்லுறேன்ல வெளிய வா திரு.." அதில் வந்தே ஆக வேண்டும் என்ற தோரணை இருக்க பதில் பேசாமல் வெளியே வந்துவிட்டான்.

உள்ளே பேரமைதி. அவள் படுத்திருக்க அவளருகே அவன். அழகியை ரசிக்க இன்னுமாயிரம் கண்கள் வேண்டுமென அவனுக்குத் தோன்றியது. இவளுக்காக இன்னும் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டும்தான். சந்திக்கக் காத்திருக்கிறான் தான். எனினும் அவள் மனதில் அவன் இருக்க வேண்டுமே. அதுதான் முதலில் செய்ய வேண்டிய வேலை என்பதை உணர்ந்து அவளை விட்டு இம்மியும் நகரமுடியாதபடி அவன் நின்றுக் கொண்டான்.

தலைகோதும் தொடுகை நின்றதில் சோர்வாக கண்களைத் திறந்தாள் அஞ்சனா. அவளுக்கு அருகே ஒருவன். சட்டென்று அகம் முழுக்க பயம் அப்பிக் கொண்டாலும் அவள் "யார் நீங்க?" என்று கேள்வி கேட்டாள்.

"யானொரு கந்தர்வன்"

"கந்தர்வனா? அப்படின்னா"

"தேவர்கள், அசுரர்கள் இப்படி எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறாயா? அவ்வாறே கந்தவர்களும்.. அவர்கள் தங்களுக்கென்று தனியாய் ஓர் உலகத்தில் வாழுபவர்கள். தேவர்களுக்குத் தேவையான சோமபானம் தயாரித்து தருபவர்கள். ஆடல் பாடல் என எந்நேரமும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள்"

"நீங்க இங்க ஏன் வந்தீங்க?"

"உம் தந்தை உன்னை பார்த்துக் கொள்ள வேண்டி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதற்காகவே யாம் இவ்விடம் வந்தோம்"

"எங்க ஐயாவைப் பார்த்தீங்களா நீங்க"

"ஆம் சந்தித்தேன். உயிர்பிரிந்த பின் ஆத்மா மேலோகம் வரும். அங்கு வைத்து உம் தந்தையை கண்டேன். அவரே உம்மைப் பற்றிச் சொன்னார்"

"என்ன சொன்னார்"

"அவரது கைக்குள்ளயே வளர்ந்த செல்லமகள் இப்போது அவரையே நினைத்து அவளையே உருக்குலைத்துக் கொண்டிருக்கிறாளாம். அவளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி என்னிடம் கேட்டார்"

"நிஜமாகவே என் ஐயா உங்ககிட்ட சொன்னாரா?"

"ஆம், மெய்தான் அஞ்சனா. நீ வேதனையுற்று இருப்பதில் உன் தந்தைக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. அவர் உன் நலனின் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். உனக்கு உன் தந்தையின் மீது உண்மையிலே பாசமிருந்தால் உன்னைத் தேற்றிக் கொள். உன்னுடன் இருக்க வேண்டுமென்பது அவரின் விருப்பம். இருந்தாலும் அதற்குன் சம்மதம் அவசியம். நீ சொல் அஞ்சனா. நான் உன்னுடன் இருக்கலாமா?"

"இருக்கலாம். நீங்க மேலோகத்துல  இருக்குறவங்க எல்லாரையும் பார்த்துருக்கீங்களா.."

"ம்ம் பார்த்துருக்கேன்"

"எமனை பார்த்துருக்கீங்களா?"

"பார்த்துருக்கேன் அஞ்சனா. எதற்காக எமனை குறித்து விசாரிக்கின்றாய்?"

"அவன்தான் என் ஐயாவோட உயிரை எடுத்தது. அவனை எனக்குச் சுத்தமா பிடிக்கல. அதுவும் இல்லாமல் என் உயிரை எடுக்கவும் சுத்திட்டு இருக்கான். இத்தனை கொடூரமான அவன் மட்டும் எப்படி உயிரோட இருக்கான். எத்தனை எத்தனை உயிரை கணக்கில்லாமல் எடுத்துட்டு சுத்துறான். அவனை நேர்ல பார்த்தால் நானே அவனை சாகடிச்சுடுவேன் போல அந்தளவுக்கு அவன் மேல எனக்கு வெறுப்பு இருக்கு. ஆனால் நான் என்ன செய்ய முடியும் அவனை.. அவன் பேரைக் கேட்டாலே பயம்தானே வருது" அவனைப் பற்றி அவனிடமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறாள். 

"அஞ்சனா. என்னை நிமிர்ந்து பார். நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு சரியாக பதில் சொல்வாயா?"

"கேளுங்கள்"

"உன்னை நம்பி ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறதென்று வைத்துக் கொள். அப்போது நீ என்ன செய்வாய்?"

"என்மேல நம்பிக்கை வச்சுத்தானே அந்த வேலையை என்கிட்ட தர்றாங்க. அதனால நான் உண்மையா அதை செஞ்சு முடிப்பேன். எந்த சூழ்நிலையிலயும் நம்பிக்கைக்கு பங்கம் வர்ற மாதிரி நடந்துக்க மாட்டேன்"

"இயமனுக்கும் உயிர்களை கவர்ந்து வரும் பணி எல்லாம் வல்ல ஈசனால் தரப்பட்டது. அந்த நம்பிக்கைக்கு அவன் பங்கம் வராமல் இருக்கின்றான். அது போக பிறப்பென்று ஒன்று இருந்தால் இறப்பென்பதும் உண்டு. பிறந்தோர் எல்லாம் இங்கேயே தங்கிவிட்டால் பூமியால் பாரம் தாங்க இயலாது அஞ்சனா. புரிந்துக் கொள்ள வேண்டும். மரணம் இயல்பான ஒன்றுதான். ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரம்ம தேவனால் ஓர் உயிர் படைக்கப் படும் போதே இந்நாளில் உயிர் பிரிய வேண்டும் என்பதும் அதன் தலையில் எழுதப்பட்ட ஒன்றுதான். அந்நாள் வரும் போது அந்த உயிரை பிடித்துக் கொண்டு எமலோகம் சேர்ப்பது எமனின் வேலை. அவ்வேலையை அவன் செய்கின்றான். அதில் அவன் பேரில் சினம் கொள்வது தேவையில்லாத ஒன்று அஞ்சனா"

அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்கவே இல்லை. 

"என்னவாயிற்று அஞ்சனா. ஏன் இந்த மௌனம்?"

"புரிஞ்சுக்கிற அளவுக்கு பக்குவம் எனக்கில்லை. ஏன்னா பாசம் கண்ணை மறைக்குது"

"இது உலக நியதி அஞ்சனா. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்"

"ஆனாலும் நான் ஒருதடவை அந்த எமனை பார்க்கத்தான் செய்யணும்"

"ஏன்? அவனை கொன்று போடவா?அவன் உன் கையால் சாவதற்குக் கூட சித்தமாக தான் இருக்கிறான்"

"அதென்ன இப்படிச் சொல்லுறீங்க"

"இப்படியொரு அழகுப்பெண் உயிரைத் தாவென கேட்டால் எவன் தராமல் இருப்பான்‌. அதற்கு நான் மட்டும்.. இல்லை இயமன் மட்டும் விதிவிலக்கா என்ன?"

"அழகா நானா.. ப்ச் இல்லை. நீங்கதான் அழகா இருக்கீங்க. கேள்விப்பட்டிருக்கிறேன். மேலோகத்தில் இருக்குறவங்க எல்லாம் அழகா இருப்பாங்களாமே. ஆனால் நீங்க இன்னும் அழகா இருக்கீங்க எப்படி?"

"நான் அழகா இருக்கேனே.. பொய் கூறாதே அஞ்சனா. என் நிறம் கருப்பு. வெளியே நின்றிருந்த உன் அத்தை மகன்தான் அதீத அழகு. நிறமாகவும் இருக்கிறான். அவனோடு ஒப்பிடுகையில் நான் வெகு சாதாரணம்"

"திரு மச்சான் அழகுதான். ஆனால் எனக்கென்னமோ அவங்களை விட நீங்கதான் அழகா இருக்கீங்க. என்னமோ தெரியல‌. உங்களைப் பார்த்துட்டே இருக்கணும் போல தோணுது"

அதில் உச்சி குளிர்ந்த மனதினை அடக்கிவிட்டு, "உங்களிருவருக்கும் திருமணம் செய்து வைக்கப் போவதாக வெளியே இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்" என்றான்.

"சின்ன வயசுல இருந்தே பேசுனதுதான்"

"உனக்கதில் சம்மதமா?"

"என்னால மறுப்பு சொல்ல முடியாது. அவ்வளவுதான்"

"திருமேல இயல்பான பாசம் மட்டும் உனக்கிருக்கிறது போல.. அதைத்தாண்டின வேறு உணர்வுகள் இல்லை. அப்படியா?"

"அப்படித்தான்னு நினைக்கிறேன் கந்தர்வா.. அதுதான் உங்க பேரா?"

"அந்தகன். அதே என் பெயர்"

"அந்தகன்... அஞ்சனா... இரண்டு பேரோட பேரும் ஒரே எழுத்துல ஆரம்பிக்குது... இதுல கூட நமக்குள்ள ஒற்றுமை இருக்குல்ல"

"இதே போல் ஒற்றுமையாய் மீதமிருக்கும் நாட்கள் எல்லாம் இருக்கலாமா அஞ்சனா?"

"என்ன?"

"என்னை மணம் செய்து கொள்கிறாயா?" கேட்ட மறுநிமிடம் பட்டென்று அலறியடித்துக் கொண்டு அவள் எழுந்து அமர்ந்து கண்களைத் திறக்க, இப்போதும் அவளுக்கு முன்னதாக அவன் நின்றுக் கொண்டிருந்தான்.

"அந்தகா?" அவள் பயத்தோடு வினவ "நான் உன் நயனங்களுக்குத் தென்படுகிறேனா அஞ்சனா!" எனக் கேட்டு சிரித்தான் அவன்..

காதலாசை யாரை விட்டது...!




Leave a comment


Comments


Related Post