இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
எபிலாக் அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 07-05-2024

Total Views: 30446

எபிலாக்

எட்டு வருடங்களுக்குப் பிறகு.. 

தனது ஆறரையடி உயரத்திற்கும் முப்பதுகளின் பாதியில் மேலும் அழகு பெற்று, முறுங்கேறி நிற்கும் உடற்கட்டிற்கும், ட்ரிம் செய்த தாடிக்கும், அழகிய மீசைக்கும் இடையே உள்ள அழுத்தமான உதடுகள் அசராமல் ஆங்கிலத்தை சரளமாய் உச்சரிக்க, அந்த நேர்காணல் கூட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தான், யஷ்வந்த் கிருஷ்ணா.

தன் கூரிய விழியசைவில் அனைவரையும் சல்லடை போடும் அவன் பார்வைக்கு அஞ்சியோ, கட்டுப்பட்டோ அனைவரும் அவனை விட்டு பார்வையை அகற்றாதிருக்க, “அன்ட் தி மீட்டிங் இஸ் ஓவர்” என்று அவன் கூறிய நொடிதான் யாவரும் மூச்சையே மெல்ல வெளியேற்றினர். அதில் யாழினியும் அடக்கம்.

படிப்படியாய் யுவனா குழுமத்தில் வேலை பார்த்து தற்போது நிறுவனத்தின் சி.ஈ.ஓ பதவிக்கு வந்திருந்தாள், முப்பதுகளின் தொடக்கத்திலிருக்கும் அந்த கம்பீரமான பெண்.

நேர்காணலை முடித்துக் கொண்டு தனது அறைக்கு வந்த யஷ்வந்த் கணினியில் வேலையிடங்களை ஒருமுறை பார்வையிட, அவன் கண்களில் ஒரு மின்னலும் துளியளவு கோபமும் எழுந்தது.

வெள்ளை நிற அரைக்கை வைத்த அலங்காரங்களற்று,  ‘பஃப் கை’ வடிவமைப்புக் கொண்ட ரவிக்கையும், அடர் நீல நிற சாட்டின் புடவையும், காதில் பெரிய வெள்ளை நிற முத்தும், கண்ணாடி கல்லால் ஆன இலையும் கொண்ட வடிவமைப்புடைய தோடும், கழுத்தை ஒட்டிய முத்துமாலையும், சிகையை மொத்தமாக திரட்டி பெரிய கொண்டையும், கைகள் நிறைக்க கலகலவென்று அடர்நீல நிறத்தில் கண்ணாடி வளைகளும் பூட்டியிருந்தாள், அஞ்சனா.

அவளை தலைமுதல் கால் வரை அங்குளம் அங்குளமாய் ரசித்தவன், ‘எப்படி மூச்சு வாங்குது பாரு.. கோழிக்குஞ்சு பேச்சை கேக்குறாளா’ என்று அவன் மனதிற்குள் வசைப்பாட, அதை பாவையும் உணர்ந்தாளோ?

கண்காணிப்புக் காமிராவைப் பார்த்து அழகாய் கண்சிமிட்டு அவள் சிரிக்க, ‘ராட்சசி’ என்று அவளை திட்டிய போதும் அவன் உதடுகள் அழகான புன்னகையை பறை சாற்றியது.

மாலை நேரம் வேலை முடிந்தவுடன் மூச்சிறைக்க நடந்து வந்த அஞ்சனாவின் தோளில் கரம் போட்ட யாழினி, “அஞ்சு.. என்னடா இப்படி மூச்சு வாங்குது? லிஃப்ட்ல வந்தியா படில வந்தியா?” என்று கேட்க, 

“லிஃப்ட்ல தான் அண்ணி.. லிஃப்ட்லருந்து இங்க நடந்ததுக்கு தான் இத்தனை திணறல்” என்று அஞ்சனா கூறினாள்.

இருவருமாக கதவை தட்டிவிட்டு யஷ்வந்தின் தனிப்பட்ட அறைக்குள் நுழைய, தனது கோப்புகள் அணைத்தையும் எடுத்து வைத்தவன், அஞ்சனாவை திரும்பிப் பார்த்து செல்லமாய் முறைத்தான்.

பாவையருகே நெருங்கி அவளை நீள்விருக்கையில் அமர்த்தியவன் தன் கைக்குட்டைக் கொண்டு அவள் முகத்தில் பூத்திருக்கும் வியர்வையை துடைக்க, அதை சன்னமான புன்னகையுடன் வேடிக்கைப் பார்த்த யாழினி, “ஜுனியர்ஸ் ரொம்ப படுத்துறாங்க போலயே” என்று கூறினாள்.

அதில் யாழினியைப் பார்த்து புன்னகைத்த இருவரும் ஐந்து மாத சூள் தாங்கிய அவள் மணிவயிற்றைப் பார்க்க, சரியாக அவள் வயிற்றில் மெல்லிய அசைவு தென்பட்டது.

அதில் மூவரும் புன்னகையாய் விழிகள் விரிக்க, “ஏ.. குட்டீஸ்..” என்று தன் மணிவயிற்றை தடவிக் கொண்டாள் அஞ்சனா.

ஆம்! அஞ்சனா தற்போது ஐந்து மாத கர்ப்பவதி. அதுவும் இரண்டு குழந்தைகள் சுமந்து கொண்டிருக்கின்றாள்!

“ரிலீவ் ஆகிக்கோனு சொன்னா கேட்கவே மாட்டேங்குறா” என்று யஷ்வந்த் கூற, 

“ஃபர்ஸ்ட் பேபிக்கு தான் மாமா ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்பவே அஞ்சு மாசம் வரை வேலை பார்த்தேனே.. இப்ப இந்த குட்டீஸ்கு மார்னிங் சிக்னஸ் கூட இல்லை. அதான் ஒரு ஏழு மாசம் வரை இருக்கேன்னு சொல்றேன்” என்றாள்.

யாழினி தன்னவனிடமிருந்து அழைப்பு வரவும் வெளியே செல்ல, தன் மனையாளின் மணிவயிற்றை வருடியவன், “கஷ்டமாயில்லையாடி?” என்றான்.

“ஹ்ம்.. கஷ்டப்படாம எப்படி மாமா பிள்ளை பெத்துக்க? இதுகூட தெரியலை உங்களுக்கு.. சில்லி பாய்” என்று அஞ்சனா அவன் கன்னம் தட்ட,

“யாரு? நான் சில்லி பாயா?” என்று தன் ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்டான்.

“ஆமா” என்று அவள் கிளுக்கிச் சிரிக்க, அதை ரசனையாய் பார்த்தவன் அவள் நெற்றியோடு தன் நெற்றி முட்டி நின்றான்.

வெளியே கதவு தட்டப்படும் சத்தத்தில் அந்த மோன நிலை விடுத்து இருவரும் எழ, வினோத் “குழந்தைங்க வந்துட்டாங்க சார்” என்று தகவலை தெரிவித்தான்.

சரியென்று இருவரும் கீழே செல்ல, அந்த நிறுவனத்தின் வாசலில் இருந்த சிறிய பூங்காவில் “ஏ தீரா.. நில்லுடா.. அம்மாவால இதுக்கு மேல ஓட முடியாது. அழவைக்காதடா” என்று கத்தியபடி தன் ரெண்டு வயது பாலகன் பின்னே ஓடிக் கொண்டிருந்தாள் மதுமஹதி.

அவள் சுற்றி சுற்றி ஓட, குழந்தை வழைந்து நெழிந்து ஓடி போக்குக் காட்டியதைக் கண்டு, அர்ஷித் வாய்விட்டு சிரிக்க, 

“சிரிக்காதீங்க மாமா.. சத்தியமா அழுதுடுவேன்” என்று சிறுபிள்ளையாய் கூறினாள் அந்த சின்னத்தாய்!

மனையாளுடன் வெளியே வந்த யஷ்வந்த் இந்த கூத்தை கண்டு அழகிய புன்னகையுடன் இரண்டே எட்டில் குழந்தை அருகே சென்று அவனைத் தூக்கியிருந்தான்.

முதலில் தூக்கியது அன்னையென்று எண்ணி திமிறிய குழந்தை யஷ்வந்தைக் கண்டதும் “ம்மா..ம்மா” என்று கிளுக்கிச் சிரிக்க, அதில் தன் முத்து முறல்கள் தெரிய புன்னகைத்தான்.

“நல்லா போடு அண்ணா முதுகுலயே.. சேட்டை சேட்டை அப்படி சேட்டை பண்ணி தினம் என்னை குழந்தை மாதிரி அழ வைக்குறான்” என்று மூக்கு விடைக்க அவள் கூற, 

தன்னவளைப் பார்த்து ஒற்றைக் கண் அடித்த யஷ்வந்த், “எல்லாத்துக்கும் காரணம் உன் அண்ணி தான். ஜீன் எப்படி வேலை செஞ்சுருக்கு பாரு” என்று தங்கையிடம் கூறவும் அஞ்சனா மதுவைப் பார்த்து அரண்டு விழித்தாள்.

அவன் கோர்த்து விட்டதிலும் அஞ்சனா விழிப்பதிலும் வெடி சிரிப்பு சிரித்த அர்ஷிதிடம் வந்த யாழினி, “குழந்தைங்க எங்க அர்ஷித்?” என்று கேட்க, மனையாளை தன் தோள் வளைவில் நிறுத்தி, “வர்றாங்க டார்லிங்” என்றான்.

“அண்ணி.. நீங்க சின்னபுள்ளைல சேட்டைனு அத்தான் சொல்லுவாங்க.. ஆனா இவ்வளவா? என்னால முடியலை” என்று சோர்வான குரலில் கூற, 

“இப்படி சொன்னா எப்படிடா மஹி..” என்றபடி வந்தான், மதுமஹதியின் கணவன் அர்ஜுன்.

ஆம்! மதுமஹதி பொத்தி பொத்தி மனதோடு வளர்த்த காதலை அர்ஜுனிடம் கூறி ஒரு வருடம் அவன் பின்னால் அழைந்து அவன் சம்மதம் வாங்கி திருமணம் செய்து இதோ அழகிய சேட்டையுடன் போராடுகின்றாளே! அதுவும் அஞ்சனாவை அச்சு அசலாய் நகலெடுத்த சிறியவன் அவன்!

“ஏ அஜு..” என்ற இரட்டையனிடம் அஞ்சனா விரைய, அவள் கரம் பற்றி நிறுத்திய அர்ஜுன், “ஏ அஞ்சு.. இங்க தானே வரேன்.. எதுக்கு இந்த அவசரம்?” என்றவன் யஷ்வந்தைப் பார்த்து அழகான சிரிப்போடு,

 “மாம்ஸ் இதுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை‌‌.. உங்க பொண்டாட்டி ஓடினதுக்குலாம் என்னை முறைச்சுடாதீங்க” என்றான்.

அதில் சிரித்தபடி அவன் தோளில் தட்டிய யஷ்வந்த் குழந்தையை நீட்ட, ஒரே தாவாக தன் தந்தையிடம் தாவிய தீரன், “ப்பா.. ப்பா..” என்று அவன் கன்னத்தில் தன் இதழ்களை மோதினான்‌.

“குட்டி பையா” என்று அவன் கன்னத்தில் பதில் முத்தம் கொடுக்கும் கணவனை காதலாய் பார்த்த மது, “என்கிட்ட மட்டும்தான் இவன் போக்கு காட்டுறானா?” என்று கேட்கவும் யாவரும் வாய்விட்டு சிரித்தனர்.

அப்போது சரியாய் இரண்டு மிதிவண்டிகள் ஒன்றையொன்று போட்டியிட்டுக் கொண்டு வேகமாய் வந்து அவர்கள் புறம் சரேலென்று நின்றது.

வண்டி சக்கரத்திலிருத்து லேசான புழுதி கிளம்ப, மிதிவண்டிக்கான தலை கவசத்தை கழட்டி தங்கள் கரங்களை தட்டி சிரித்துக் கொண்டனர் ஏழு வயது சிட்டுக்கள் இருவர்!

“ஆரா.. இவ்வளவு வேகமா சைக்கிள் ஓட்டக்கூடாதுனு சொல்லிருக்கேன் தானே?” என்று யாழினி தங்களது செல்வக்குமாரி ஆரணியைப் பார்த்து கோபமாய் வினவ, 

“கம்மான் மாம்.. இங்க தானே ஓட்டுறோம்? டிராஃபிக்ல அவ்வளவு வேகமா போக மாட்டோம்” என்று மெல்லிய கொஞ்சும் குரலில் கூறி தன் தந்தையை கட்டிக் கொண்டாள்.

மகளின் தலை கோதி முத்தமிட்ட அர்ஷித், “தட்ஸ் ஸ்மார்ட் மை கேர்ள்” என்று கூற, இருவரும் விரல்கள் மடக்கிய கரங்களை குற்றிக் கொண்டு மீண்டும் அணைத்துக் கொண்டனர்.

அசட்டையாய் தனது மிதிவண்டியில் சாய்ந்திருந்த மற்றையவளின் பார்வையில் தான் எத்தனை தீட்சண்யம்? தன் தாயைப் போன்ற புசுபுசு உடல்வாகு, நீண்ட கூந்தல், தந்தையைப் போன்ற திராவிட நிறம், நெடு நெடு உயரம் என்று தோரணாய் நின்றிருந்த தங்கள் செல்வ மகளை கண்களில் எப்போதும்போல் பாசமும் கர்வமும் பொங்க பார்த்தாள் அஞ்சனா.

“டாடி.. எனக்கு பேலே டேன்ஸ் கிளாஸ் போகணும்” என்று அழுத்தமாய் தனது மெல்லிய குரலில் அந்த பெண் கூற, 

“இப்ப ஏற்கனவே பரதம் கிளாஸ் போறியே யஷ்விமா?” என்று தன் செல்வக்குமாரி யஷ்வதியைக் கேட்டாள் அஞ்சனா.

அன்னையின் அருகே வந்து அவள் வயிற்றில் முத்தமிட்டு யஷ்வதி, “மம்மி.. ஆர் தி பேபீஸ் ரெடி டு சீ மீ?” என்று கேட்க, 

மகள் தலையை பரிவாய் கோதிய யஷ்வந்த், “இன்னும் ஃபைவ் மந்த்ஸ் இருக்குடா” என்றான்.

தந்தையை அணைத்துக் கொண்டு, “எனக்கு பேலே போனும் ப்பா. இன்னிக்கு எங்க ஸ்கூலுக்கு வெளியிருந்து நிறையா டான்ஸர்ஸ் வந்திருந்தாங்க” என்று யஷ்வதி கூற, 

“அன்ட் தட் வாஸ் ஆவ்ஸம்.‌ அப்பா.. நானும் யஷ்வியும் பாலே கத்துக்கணும்னு ஆசைப்படுறோம். வீ கேன் மேனேஜ் அவர் அதர் கிளாஸஸ் டூ” என்று தோழியை தொடர்ந்து ஆரணி கூறினாள்.

தந்தைகள் இருவரும் ‘நட்புமில்லை, விரோதமும் இல்லை’ என்று கூறிக் கொண்டே மனதில் பாராட்டிய நட்புணர்வின் மொத்த உருவாய் உதித்திருந்த அந்த இரு பெண்கள் அத்தனை உற்ற தோழிகளாக இருந்தனர்.

அழகான புன்னகையுடன் அஞ்சனா யஷ்வந்தை நோக்க, அவன் கண்கள் மூடித் திறந்து சம்மதம் சொன்னான்.

“உங்களுக்கு பிடிச்சுருக்குல? தென் ஓகே. ஆனா மத்த கிளாஸஸ் போறீங்களே, அதை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கானு பார்த்துக்கோங்க” என்று அஞ்சனா கூற, 

“யஷ்வி கேன் மேனேஜ் எவ்ரிதிங் மம்மா..” என்று அன்னையின் கன்னம் பற்றி யஷ்வதி கூறினாள்.

மகளின் நெற்றியில் முத்தமிட்டவள் மனதில், ‘ஒரு பெண்ணை எப்படி வளர்க்கணும்னு நான் வளர்த்து காட்டுவேன்’ என்று அவள் கூறிய வரிகள் நினைவு வர, அதற்கு முற்றும் முழுதாய் துணை நின்ற தன்னவனைப் பார்த்து நிறைவாய் சிரித்தாள்.

யாவரும் புறப்பட்டு யமுனாவின் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்திற்கு செல்ல, குடும்பமாய் நின்று நிறைவாய், நிம்மதியாய், ஆனந்தமாய் புன்னகைத்தோரை நம் மனமெனும் கருவிகொண்டு புகைப்படும் எடுத்து வாழ்த்தி விடை பெறுவோம்!

-முற்றும்…


Leave a comment


Comments


Related Post