இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 27 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 08-05-2024

Total Views: 18351

செந்தூரா 27



ஜானகியின் வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தையை கேட்டதும் தாங்க மாட்டாமல் தன் அறைக்கு ஓடிச் சென்று கட்டிலில் படுத்து கதறி அழுதாள் தாரிகா.


ஆராத்யாவிற்கு உள்ளுக்குள் ஆனந்தமாக இருந்தது. எப்படியோ இந்த ஜானகி அம்மாவே தன் மகனையும் மருமகளையும் பிரித்து விடுவார் போலிருக்கு. மித்ரன் அவளையே திருமணம் செய்துக் கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்கிறாரே? இதைவிட வேறென்ன வேண்டும். அவர்கள் பிரிந்தபின் முறைப்படி விவாகரத்து பெற்று அவரையே தனக்கும் மித்ரனுக்கும் திருமணம் செய்து வைக்க சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.


ஜானகியை கட்டிக் கொண்டு, “தேங்க்யூ ஆன்ட்டி. நீங்க எனக்கு சப்போர்ட்டா இருப்பீங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றாள் குதுகலமாக.


“புரியலை, நான் என்ன உனக்கு சப்போட்டா இருந்தேன்?” என்றார் ஜானகி புரியாமல்.


“அதுதான் எங்க இரண்டு பேருக்கும் திருமணம் ஆகியிருந்தால் நல்லாயிருந்து இருக்கும்னு சொன்னீங்களே” என்றாள் ஆராத்யா சிரித்துக் கொண்டே.


“ஆமாம் சொன்னேன் தான். ஆனால் அதுதான் நடக்கலையே. தாரிகா இப்போ செந்தூரனின் மனைவி, அதை ஒரு நாளும் மாத்த முடியாது. ஜாதகத்தால எதாவது நடந்துடுமோனு எனக்கு சின்ன பயம், அதோட ஒரு மாமியாரா எனக்கும் என் பிள்ளைக்கும் நடுவில் இருக்காளே என்ற சின்ன பொறாமை. இந்த காரணத்தினால் தான் நான் அவளை திட்டிட்டே இருக்கேனே தவிர, அவளை என் மகன் கிட்ட இருந்து பிரிக்கணும்னு ஒரு நாளும் நான் நினைச்சதே இல்லை. நினைக்கவும் மாட்டேன்.


நீ வேற செந்தூரனை விரும்பினதா என்கிட்டயே சொல்லிட்டே. இதுமாதிரி என் மருமக கிட்ட பேசி வைக்காதே, அவ தாங்க மாட்டா. இனிமேலும் அந்த மாதிரி நினைப்பை மனசில் வச்சிகிட்டு என் மகன் கிட்ட பழகாதே, அது தான் உனக்கு நல்லது” என்று மிரட்டும் தொணியில் பேசிய ஜானகியை பார்த்து வாயடைத்து போனாள் ஆராத்யா.


ஒட்டு கேட்பவர்கள் நல்லதை கேட்பதில்லை என்று சொல்வார்கள், அதற்கு உதாரணமாக ஜானகியின் பேச்சை அறைகுறையாக கேட்டிருந்த தாரிகா மனமுடைந்து தன் அறையில் அழுதுக் கொண்டிருந்தாள். தன் அத்தை பேசியதை முழுதாக கேட்டிருந்தால் இப்படி மனமுடைந்து இருக்க மாட்டாளோ என்னவோ!


செந்தூரன் வீட்டில் நடந்தவற்றை அறியாமல் ரஞ்சிதம் ஆச்சியை வீட்டில் விட்டு ஆராத்யாவை அழைத்தான். “ஆராத்யா வாங்க, கொஞ்ச ஆட்களை வேலைக்கு எடுக்க வேண்டியிருக்கு இன்டர்வியூக்கு வர சொல்லி இருக்கேன். நீங்களும் இன்டர்வியூ எடுக்கலாமே” என்றான்.


அவளும் “ஓ யெஸ், டூ மினிட்ஸ் டைம் கொடுங்க, ரெடியாயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றாள்.


ஜானகி மகனிடம் ஆராத்யாவின் பேச்சைப் பற்றி சொல்லலாமா என்று ஒரு கணம் யோசித்து பின் அதை கைவிட்டார். “அவள் தலைகீழ நின்னாலும் என் மகன் தாராவை தவிர வேறே பெண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான், அதை அவளே புரிஞ்சுப்பா” என்று மனதில் நினைத்துக் கொண்டு ரஞ்சிதம் ஆச்சியை கவனிக்க சென்று விட்டார்.


ஆராத்யா வெண்ணிறத்தில் கால் வரை நீண்டு இருந்த ஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட் அணிந்து இருந்தாள். அழகுநிலையத்தின் உபயத்தால் அவளின் தோள்பட்டை முதல் விரல் வரை வழவழப்பாக பளீர் என்ற தோற்றத்தில் இருந்தது. அவளை திரும்பி பார்த்த செந்தூரன், “ஹேய் ஆரா யூ லுக்கிங் ஜார்ஜியஸ், சோ பியூட்டிபுல் வைட் டிரஸ்ல ஏஞ்சல் போல இருக்க” என்று நட்பாய் பழக ஆரம்பித்து விட்டதால் மனதார பாராட்டினான்.


கணவனின் குரல் கேட்ட தாரிகா, அழுதுக் கொண்டிருந்தால் திட்டுவானே என்று முகம் கழுவி வந்தவளின் காதில் அவன் பாராட்டு தெளிவாக விழுந்தது. அவளுக்கு நன்றாக தெரியும், செந்தூரனின் மனதில் எந்த களங்கமும் இல்லை என்று, ஆனாலும் மனதில் சிறு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது.


மெல்ல நிமிர்ந்து கணவனின் அருகில் நின்றிருந்த ஆராத்யாவை பார்த்தாள். பளிச்சென்று மிகவும் அழகாக இருந்தாள். பெண்களே அடிக்கடி திரும்பி பார்க்க கூடிய பேரழகி தான். செந்தூரனின் அழகான தோற்றத்திற்கும் உயரத்திற்கும் ஆராத்யாவே பொருத்தமாக தெரிந்தாள்.


ஒருவேளை நான் மாமாவுக்கு பொருத்தமாக இல்லையோ? என்று வருந்தினாள். மெளனமாக நின்றிருந்த மனைவியை பார்த்த செந்தூரன், “எக்ஸ்கியூஸ்மீ” என்று ஆராத்யாவிடம் சொல்லிவிட்டு அவசரமாக மனைவியின் அருகில் சென்றவன், அவள் காதருகே குனிந்து, “ஹனி ரூமுக்கு வா” என்று சொல்லி விட்டு நடந்தான்.


தாரிகாவும் அவன் பின்னாடியே மெளனமாக நடந்தாள். உள்ளே அவள் வந்ததும் கதவை மூடிவிட்டு அவள் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்தான். “என்னாச்சுடி ஏன் எப்பவும்  மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே இருக்க? நீ என்ன தான் அழுது சீன் போட்டாலும், இந்த கோழியை இன்னைக்கு நைட் பொரிக்காமல் விடமாட்டேன்” என்று அவள் கழுத்து வளைவில் கடித்தான்.


அந்த நிலையிலும் அவன் பேச்சு சிரிப்பை வரவழைத்தது, மென்மையாக புன்னகைத்தவள், “உனக்கு சிக்கன் புடிக்கும்னு எனக்கும் தெரியும், அதுக்காக என்னையும் அந்த கோழிகூட கம்பேர் செய்வியா நீ” என்று பொய்யாக அவன் மார்பில் குத்தினாள். 


“இப்பவாவது சிரிச்சியே, பொள்ளாச்சி போய் வந்ததிலிருந்து உன் முகமே சரியில்லை. உன் கண்ணும் கன்னமும் பாய் கடையில் இருக்கிற சிக்கன் 65  மாதிரி எவ்வளவு சிவப்பா இருக்கு பாரு” என்றபடி அவள் கன்னத்தை வலிக்க கடித்தான்.


“டேய் செவப்பா? எத்தனை முறை சொல்றது.. என்னை கோழிக்கூட கம்பேர் பண்ணாதேனு” என்று முறைத்தாள். “என் சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான்” என்று அவன் பாடவும் கலகலவென்று சிரித்தாள்.


“ம்… இப்போ எவ்வளவு அழகா இருக்க பாரு. சிரிச்சிட்டே இருடி என் பொண்டாட்டி… சாரி என் வெட கோழி” என்று கண்சிமிட்டிவிட்டு அவள் இதழில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்து விட்டு கிளம்பினான்.


கணவனின் இதழ் தீண்டலிலும் பேச்சிலும் மனம் லேசானது. மனதில் இருந்த குழப்பத்தை எல்லாம் ஒதுக்கி விட்டு ரஞ்சிதம் ஆச்சியை கவனிக்கச் சென்றாள்.


ஜானகியும் பெரிதாக அவளிடம் முகம் கோணவில்லை. சமையல்காரம்மாவுடன் சேர்ந்து பேசிக் கொண்டே ஜானகி சமையலை முடித்தார்.


அன்று மாலை செந்தூரன் கவின் ஆராத்யா மூவரும் ஒன்றாகவே வந்தனர். செந்தூரன் வாஷ் ரூம் போய் வருவதாக சொல்லி செல்லவும், தாரிகா மூவருக்கும் காபி எடுத்துவரச் சென்றாள். கவினுக்கு ஏதோ போன் வரவும், ஆராத்யா சமையலறை இருந்த பக்கமாக சென்று தன் தந்தை சங்கரபாண்டியனுக்கு போனில் அழைத்தாள். தாரிகாவின் காதில் விழவேண்டும் என்று வேண்டுமென்றே சத்தமாக பேச தொடங்கினாள்


“ஹாய் டாடி, நீங்களும் அங்கிளும் எப்போ வர்றீங்க? இரண்டு நாள்ல விசா கிடைச்சுடுமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தவள், “ஆமாம் டாடி, மித்ரன் கூட சைட்டுக்கு போய்ட்டு இப்போ தான் வந்தேன். யாரு அவர் மனைவியா? ஆங் நல்லா தான் இருக்காங்க. ஆனால் மித்ரனோட ஆளுமையான தோற்றத்துக்கு ஏத்த ஜோடி இல்லை, அழகும் படிப்பும் கம்மி தான், என்ன செய்யறது? சின்ன வயசுலயே கமிட் ஆயிட்டதால் அவரால் விட முடியாமல் போச்சு. இல்லைனா என்னை வேண்டாம்னு சொல்லிட முடியுமா என்ன? இன்னிக்கு காலையில கூட என்னோட டிரஸ்ஸை பார்த்துட்டு ஏஞ்சல் மாதிரி இருக்கனு சொன்னார் தெரியுமா? என்ன செய்யறது அந்த பொண்ணா விலகிட்டா, என்னை கட்டாயம் ஏத்துக்குவாரு” என்று ஏதேதோ பேசிக் கொண்டே போக, தாரிகாவினால் கோபத்தை அடக்க முடியவில்லை.


கணவனுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் தொழில் தொடங்க போகிறவள், இன்னும் இரண்டே நாளில் கம்பெனி தொடக்க விழா இருக்கும் இந்த நிலையில் தான் எதாவது கோபமாக சொல்ல போக எதாவது பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்வது? கொஞ்ச நாட்கள் இருக்க போகிறவள் எதாவது பிதற்றிக் கொண்டு இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு தன் கோபத்தை கட்டுப்படுத்தினாள் தாரிகா 


காபியுடன் வெளியே வந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த செந்தூரனுக்கும் கவினுக்கும் காபியை கொடுத்துவிட்டு ஆராத்யாவை அழுத்தமாக பார்த்தபடி காபியை அவளிடம் நீட்டினாள். ஆராத்யா அதை கையில் வாங்கியபடி தாரிகாவை விட்டேற்றியாக பார்த்துக் கொண்டே செந்தூரனின் அருகில் போய் அமர்ந்தாள். அவனிடம் ஏதோ கேட்பது போல ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே தாரிகாவை அலட்சியப்பார்வை பார்த்தாள். நொடிக்கொரு முறை அழகாக வெட்டப்பட்டிருந்த தன் தலை முடியை கோதி விட்டுக் கொண்டு தாரிகாவின் தலைமுடியை ஏளனமாக பார்ப்பதும், கைவிரல்களில் இருந்த நீளமான நகங்களில் நேர்த்தியாக தீட்டப்பட்டிருந்த நகப்பூச்சுக்களை ஆராய்ந்துக் கொண்டே, தாரிகாவின் விரல்களை பார்ப்பதும் என தன் ஒவ்வொரு அழகையும் தனித்தனியாக தாராவின் கண்முன்னே கடைப்பரப்பி, நீ என்னை போல அழகியில்லை என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆராத்யா.


பெரிதாக அறிமுகம் இல்லாத தன்னிடம் இப்படி தன் அழகை பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்கிறாளே என்று தாரிகாவிற்கு ஆயாசமாக இருந்தது. ஆனாலும் செந்தூரனின் அருகில் ஆராத்யாவை பார்க்கும் போது ஒரு வேளை அவனுக்கு ஏற்ற பொருத்தமான பெண் இவள் தானோ? என்று தோன்றாமல் இல்லை.


இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்தால் நான் அழகில்லை என்று என்னையே நம்ப வைத்து விடுவாள் போலயே என்று அங்கிருந்து விலக போனவளை அழைத்தான் செந்தூரன். “தாரா எல்லாருக்கும் சாப்பிட டிபன் இங்கயே ஒரு கப்பில் போட்டு கொடுக்கச் சொல்லு. வேலையிருக்கு” என்றவன் கவினுடனும் ஆராத்யாவுடனும் பேசிக் கொண்டிருந்தான்.


செந்தூரன் சொல்வது சில விஷயங்கள் கவினுக்கு புரியாமல் போக ஆராத்யா அதை புரியும்படி கவினுக்கு விளக்கினாள். “ஆரா, சோ பிரில்லியன்ட், நான் ஒரு முறை சொன்னாலே அப்படியே புரிஞ்சுக்குறே, வெரிகுட்” என்று அவளை பாராட்டியவன், கவினிடம் திரும்பி, “நீயும் தான் என் கூட ஐந்து வருஷமா குப்பை கொட்டிட்டு இருக்க. இன்னும் நான் என்ன சொல்ல வரேன்னு உன்னால புரிஞ்சுக்க முடியலை. மட்டி” என்று திட்டினான்.


“அஞ்சு வருஷமா குப்பையே கொட்டிட்டு இருந்தா, நான் எங்கேடா கோடிங் கத்துக்கிறது?” என்றான் கவின் பாவமாக.


“இந்த மொக்க ஜோக்குக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. முதல்ல நான் சொன்ன கோடிங்கை போட்டு முடி” என்று அதட்டினான் செந்தூரன். கொஞ்ச நேரம் கழித்து இரவு எட்டு மணியை தான்டி விட்டதால் தாரிகா கணவன் சொன்னபடி அவர்கள் மூவருக்கும் உணவு பரிமாறினாள்.


“ஏன் தாரா? நீ எதுக்கு இதெல்லாம் செய்யறே? அன்னம்மா இல்ல?” என்றான் செந்தூரன். “இல்ல மாமா, அவங்க தான் சமைச்சு வச்சிட்டு போய்டுவாங்களே” என்றாள் தாரிகா. “சரி விடுங்க மித்ரன், பாவம் அவங்களால் நமக்கு இந்த உதவி தான் செய்ய முடியும், அதனால் தான் வேலைக்காரிக்கு பதிலாக அவங்களே பரிமாற வந்திருக்காங்க” என்று தாரிகாவை மறைமுகமாக மட்டம் தட்டி பேசினாள் ஆராத்யா.


தாரிகாவிற்கு கோபமாக வந்தது, எதிர்த்து கேள்வி கேட்டால் வேறு அர்த்தம் சொல்வாள் என்று நிச்சயமாக தெரியும் என்பதால் பல்லை கடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.


“நோ ஆரா, யு ஆர் ராங். என் ஃவைப், கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் படிச்சிருக்கா, ஜஸ்ட் படிச்சதும் எங்களுக்கு மேரேஜ் ஆயிட்டதால அவளுக்கு பிராக்டிகல் எக்ஸ்பிரியன்ஸ் இல்ல. நான் ஜஸ்ட் சொன்னால் போதும், அப்படியே புரிஞ்சுட்டு செய்துடுவாள்” என்றான் செந்தூரன் மனைவியை விட்டுக் கொடுக்காமல், அது உண்மையும் கூட.


“ஹனி, நீயும் எங்க கூட வந்து உட்காரு” என்றான் லேப்டாப்பில் பார்வையை வைத்துக் கொண்டே, “என்ன ஹனியா?” என்று ஆராத்யா ஆச்சரியமாக தாரிகாவை திரும்பி பார்க்க, அவளோ எள்ளல் சிரிப்புடன் சோபாவில் அமர்ந்தாள். நேரம் கடந்துக் கொண்டே இருக்க, தாரிகாவிற்கு தூக்கம் வந்தது. மூவரும் தீவிரமாக வேலை செய்துக் கொண்டிருந்தனர். இப்போதைக்கு அவர்கள் எழுவதாக தெரியவில்லை. மெல்ல கொட்டாவி விட்டபடி, “மாமா நான் போய் தூங்கவா, நீங்க வேலை முடிச்சுட்டு வாங்க” என்றாள்.


சட்டென நிமிர்ந்து அவளை அழுத்தமாக பார்த்தவன், “அம்மாவும் பாட்டியும் என்ன செய்யறாங்க? அவங்க கிட்ட பேசிட்டு இரு, நான் இதோ வந்திடறேன்” என்றான்.


“அவங்க எப்பவோ தூங்கிட்டாங்க மாமா, எனக்கும் தூக்கம் வருது” என்றவளை முறைத்தான் செந்தூரன். கவினும் ஆராத்யாவும் அருகில் இருப்பதால் அவளிடம் வெளிப்படையாக பேச முடியவில்லை. “அவங்க போய் தூங்கட்டுமே மித்ரன்” என்றபடி நிமிர்ந்து பார்த்த ஆராத்யா அவர்கள் இருவரின் மெளன பாஷையில் பேச்சற்று போனாள்.


செந்தூரன் தாரிகாவை பார்த்து போகாதே என்று கண்களால் அவளை மிரட்டினான், அவள் எதற்கு என்று புருவம் சுருக்கினாள். அவனோ ஒற்றை கண்ணை அடித்து இதழ் குவித்து ஊதினான். தாரிகா வெட்கத்துடன் இல்லை என்பது போல இடவலமாக தலையசைக்க, அவளை பார்த்து முறைத்தான், அழுத்தமாக அவனின் பார்வையை அவள் மேனியெங்கும் அலையவிட்டு மோக பார்வை பார்த்தான். அவளோ வெட்கத்துடன் கணவனை பார்க்க, சோபாவை காட்டி அமரும்படி கண்களால் கட்டளையிட்டான். அவளோ உதட்டை சுழித்துக் கொண்டு அமர, அவன் அதை பற்களால் கடித்து விடுவது போல வாயை திறந்து பாவனை செய்தான்.


அவர்களின் காதல் பாஷைகளை பார்க்க பார்க்க வயிறு எரிந்தது ஆராத்யாவிற்கு. தான் காதலித்த ஒருவன் மற்றொரு பெண்ணை அவள் எதிரிலேயே சல்லாபிப்பதை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் செந்தூரன் அழகானவன் திறமையானவன், நேர்மையானவன், கட்டுபாடோடு நடந்துக் கொள்பவன் என்று மட்டுமே அவளுக்கு தெரிந்த உண்மை.


ஆனால் அவனுக்குள் இப்படி ஒரு ரொமான்ஸ் இருக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஆராத்யாவாக நெருங்கினாலும் அவளை எட்ட நிறுத்தியே வைப்பான். ஆனால் இன்று தாரிகாவிடம் இப்படியெல்லாம் காதல் செய்கிறானே? அவனை அடைய இன்னும் முயற்சி எடுத்திருக்க வேண்டுமோ? என்று யோசித்துக் கொண்டிருந்தாள் ஆராத்யா.


தாரிகா செந்தூரனின் மனைவி என்பதை அவள் மறந்து விட்டாள் போலும்!


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post