இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 7 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 08-05-2024

Total Views: 12373

இதயம் - 7

கண்விழித்து எழுந்து சித்தார்த்தை பார்த்து புன்னகைத்த கீர்த்தியை உடனே சித்தார்த் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். வாசு ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்ததால் மருத்துவமனை உள்ளே சென்றதுமே கீர்த்தியை அனுமதித்து மருத்துவம் பார்க்கத் தொடங்கி விட்டனர். அவர்களின் பின்னாலே வந்த கீர்த்தியின் குடும்பத்தை சித்தார்த்தும் சரி வாசுவும் சரி சிறிதும் கண்டுக்கொள்ளவே இல்லை. சித்தார்த் வாசுவிடம் "நீ பாத்துக்கோடா ... நா இப்ப வந்தர்ரன்" என்று கூறி வாசு எங்கே என்பதற்கு கூட பதில் கூறாமல் சென்றான் சித்தார்த். 

நேராக தன் வீட்டிற்குச் சென்ற சித்தார்த் தன் தாய் தந்தையிடம் "நா ஏற்கனவே ஒரு பொண்ண லவ் பன்றன்னு சொன்ன இல்லை அந்த பொண்ண ஹாஸ்பிடல்ல வச்சி கல்யாணம் பன்னிக்கலான்னு இருக்கன் நீங்க என்ன சொல்ரிங்க" என்று கீர்த்தியை பற்றின எல்லா விவரத்தையும் கூறி கேட்டான். சித்தார்த்தின் பெற்றோர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு "நாங்க வேணான்னு சொல்லவே மாட்டோமே" என்று கூறி அவர்களும் அவனுடன் கிளம்பினர். சித்தார்த்தின் பெற்றோர் முற்போக்கு சிந்தனை உடையவர்கள். சித்தார்த்திடம் நண்பர்கள் போல் பழகி வருபவர்கள். தங்களின் மகன் விருப்பத்திற்கு மறுப்பேச்சு பேசியதே இல்லை. மூவரும் மருத்துவமனைக்குள் நுழைய கீர்த்திக்கு சிகிச்சை முடிந்து கீர்த்தி ஓர் அளவிற்கு மயக்கம் இன்றி எழுந்து அமர்ந்திருந்தாள். கீர்த்தியின் தந்தை ஏதேனும் ஏடாகூடம் செய்து விட கூடாது என்பதால் வாசு கீர்த்தியை விட்டு நகராமல் நின்றிருந்தான். சித்தார்த்தின் பெற்றோரை பார்த்ததும் கீர்த்தி புன்னகையுடன் எழ முற்பட சித்தார்த்தின் பெற்றோர் அவளை தடுத்தனர். 

"இப்ப எப்படிம்மா இருக்க" என்று பாசமாக சித்தார்த்தின் தாய் கீர்த்தியின் தலை வருடி விட கீர்த்தி "பரவால்லம்மா" என்று புன்னகையுடன் கூறினாள். ஏற்கனவே சித்தார்த்தின் பெற்றோரை சித்தார்த்தின் தோழி என்ற அறிமுகத்தால் ஒரே ஒரு முறை கண்டிருக்கிறாள் கீர்த்தி. மற்ற நேரங்கள் எல்லாம் கீர்த்தி சித்தார்த்தின் வாய்வழியே அவனின் தந்தையை பற்றியும் தாயை பற்றியும் நிறைய கேள்விப்பட்டு இப்படியும் பெற்றோர்களா என்று வியந்திருக்கிறாள். இன்று அவர்களின் பாசமான வார்த்தையில் அவர்களின் உண்மையான பாசத்தை கண்கூட கண்டாள். 

சித்தார்த்தின் பெற்றோர் வரும் முன்பே தங்களின் ட்ரைவர்க்கு அழைத்து மாலையும் தாலியும் வாங்கி வரக் கூறி இருந்ததால் அவரும் சரியாக மாலை மற்றும் தாலியுடன் அறைக்குள் நுழைந்தார். வாசு புன்னகையுடன் "இங்கேயே கல்யாணம் பன்னலான்ற முடிவுக்கு வந்துட்டிங்களா ... ஏன்ப்பா அவன் தான் அவசரப்பட்றான்னா நீங்களுமா ... நல்ல க்ராண்ட்டா கல்யாணம் வச்சிக்கலாம் இல்லை" என்று கேட்டான். "நம்ம ரிஷப்ஷன்ன பெருசா வச்சிக்கலாம் ட்யூட் விடு ... டேக் இட் ஈஸி" என்று சித்தார்த்தின் தந்தை கூற அவனும் சரி என்பதாய் தலையாட்டினான். கீர்த்தியின் தந்தை வேண்டாம் என்று கூற முடியாமல் தவித்துக் கொண்டு நின்றிருப்பதை கண்டு வாசுவிற்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. இருந்தும் சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்தான். கீர்த்தியின் தாய் தன் மகள் புகுந்த வீட்டிலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். 

கீர்த்தியின் தந்தையின் கண் முன்னே அவர் எந்த காதலுக்காக கீர்த்தியை அந்த அடி அடித்தாரோ அதே காதலர்கள் மாலையை மாற்றிக் கொண்டனர். கீர்த்தியின் தந்தை கோபத்தில் கை முஷ்டியை முறுக்கிக் கொண்டு பற்களை கடித்தவாறு நின்றிருந்தார். சித்தார்த் கீர்த்தி கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னுள் சரிபாதியாய் ஏற்றுக் கொண்டான். கீர்த்தி இத்தனை நாள் தன் தந்தையால் பட்ட அடி உதைகளை நினைத்து கலங்கியவாறே இனி சித்தார்த் மூலமாக தாம் ஒரு நிறைவான நிம்மதியான பயமில்லாத பதட்டமில்லாத தயக்கமில்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். "மேரேஜ் ஓவர் ... என் மருமகளை எப்போ வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்" என்று சித்தார்த்தின் தாய் கேட்க "ஈவ்னிங்கே கூட்டிட்டு போலாம்" என்று வாசு கூறினான். "சூப்பர் ... நாங்க போய் அதுக்கான ஏற்பாடு பன்றோம் ... டேய் சித்து ... மருமகளை பத்திரமா கூட்டிட்டு வந்து சேரு" என்று மகனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சித்தார்த்தின் பெற்றோர் கிளம்பி விட்டனர்.

"ஓஓஓஓ மாமனாரே நீங்க இன்னும் இங்க தான் இருக்கிங்களா ... நா மாலைய உங்க பொண்ணு கழுத்துல போட்டதும் கோவத்துல விருட்டுன்னு கிளம்பி இருப்பிங்கன்னு நினைச்சன்" என்று சித்தார்த் கிண்டலடிக்க கீர்த்தி "சித்து சும்மா இரு" என்று கூறி அவன் கையை பிடித்தாள். "நீ சும்மா இருடி .... ஒரு நாளாவது உன்னை பெத்த அப்பன் மாதிரி நடந்திருப்பாரா ... எதுக்கெடுத்தாலும் பொண்ணு இதை செய்யாத பொண்ணு அதை செய்யாத ... தலைய தூக்காத ... யார் கிட்டையும் பேசாத ... யார பாக்கற ... எதுக்காக பாக்கற ... எவன் கூட ஓடி போவன்னு கேட்டு கேட்டு உன்னை இஷ்டத்துக்கு அடிச்சிட்டு எப்படி உன்னை என் பொண்ணுன்னு அவரால சொல்லிக்க முடியுதுன்னு தெரியல ... கொஞ்சமாவது மனசுல உன் மேல பாசம் இருந்திருந்தா ... நீ மயக்கம் போட்டு விழுகற அளவுக்கு அடிப்பாரா ... ஏதோ பொறந்துட்டியேன்னு கடமைக்கு வளத்திருக்காரு ... உனக்கு அவர் வேணா கீர்த்தி ... நம்ம இங்க இருந்து ஈவ்னிங் நம்ம வீட்டுக்கு போறோம் அவ்வளவு தான்" என்று சித்தார்த் கூற கீர்த்தியால் பதில் பேச முடியவில்லை. என்றாவது ஒரு நாள் பாசமாக பேசி இருந்தாலோ அல்ல என்றாவது ஒரு நாள் கனிவாக தலையை தடவி கொடுத்திருந்தாலோ தானே அவள் சித்தார்த்திடம் மறுத்து பேச இயலும். அப்படி தான் எதுவுமே நிகழவில்லையே. 

வாசு சித்தார்த் மற்றும் கீர்த்தியிடம் கூறிக் கொண்டு அலுவலகம் செல்ல வாசலில் அஞ்சனா வாசுவிற்காக காத்திருந்தாள். "காலையில இருந்து எங்க போய்ர்ந்த வாசு ஏன் உன் போன் ரீச் ஆகல" என்று அஞ்சனா கேட்க "சித்தார்த் கீர்த்தி விஷயம் கீர்த்தி வீட்ல தெரிஞ்சி அவங்க அப்பா கீர்த்திய போட்டு பயங்கர அடி ... அதான் அவளை ஹாஸ்பிட்டல்ல சேத்துட்டு வரன்" என்று கூறினான் வாசு. "ஓஓ இப்போ பரவால்லையா" என்று அஞ்சனா கேட்க "ம்ம்ம் பரவால்ல சித்தார்த் கூட அவளுக்கு கல்யாணம் பன்னி ஆச்சி" என்று வாசு கூற அஞ்சனா "பாரு உன் ப்ரண்ட்க்கு நீயே முன்ன நின்னு கல்யாணம் பன்னி கொடுத்துட்டு வந்திருக்க ஆனா நம்ம கல்யாணத்தை மட்டும் தட்டி கழிச்சிட்டே போற" என்று கேட்டாள். "நீ வசதியா இருக்க பொண்ணு அஞ்சு ... உனக்கேத்த மாதிரி நா வீட்ட மாத்தனும் ... உன் ஸ்டேட்டஸ்க்கு தகுந்த மாதிரி நா என் தொழில உயர்த்திக்கனும் ... அதுக்காக தான் வெயிட் பன்ன சொல்ரன் சொன்னா புரிஞ்சிக்கோ" என்று வாசு கூற "நீ ஏன் கஷ்டப்பட்டு உயர்த்தனும் இருக்கறத பாத்துக்கோன்னு தான நானும் அப்பாவும் சொல்ரோம் அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டின்ற" என்று அஞ்சனா கேட்டாள். "நா நானா உயரனுன்னு நினைக்கிறன் அஞ்சு ... உங்க அப்பா உழைப்ப காப்பாத்தனுன்னு நினைக்கல" என்று வாசு கூறினான். "திரும்ப திரும்ப சண்டை போட நா விரும்பல வாசு" என்று கூறிய அஞ்சனா கிளம்பி விட வாசுவும் நகர்ந்தான். 

பரத் முதல் வேலையாக ஹோட்டலுக்குச் சென்றதும் தன் அறைக்குள் சென்றதும் யாழிசையின் கைப்பேசிக்கு அழைத்தான். யாழிசை அழைப்பை ஏற்று "சொல்லு பரத்" என்று கேட்க "அவினாஷ் சார் ஒரு விஷயம் சொன்னாரு மேம் அதை கண்டுபிடிக்க உங்க ஹெல்ப் எனக்கு வேணும்" என்று கேட்டான். "நீங்க பேசறத கூட யாராவது கேட்க சான்ஸ் இருக்கு பரத் டெக்ஸ்ட் மீ" என்று யாழிசை கூற பரத்தும் சரி என்று அழைப்பை துண்டித்தான். 'நம்மள வாச் பன்றாங்கன்னா நம்ம பேசறதையும் ஒட்டு கேக்கனும் இல்லை' என்று நினைத்த பரத் "இவங்க பழைய மேனேஜர் சரியான முட்டாள். பணத்தை எப்படி எடுக்கனுன்னே தெரியாம எடுத்து இப்ப பாரு மாட்டிகிட்டான் ... நம்ம லெட்சர்ரையே மாத்தி வைப்போம்" என்று வாய்விட்டே புலம்பியவன் ஹோட்டல்களுக்கு வருபவர்களின் கையெழுத்திட்ட லெட்சர்ரையே மாற்றி வைத்தான். யாழிசைக்கு அவனின் திட்டத்தை பற்றி குறுஞ்செய்தி அனுப்பிய பரத் "என் கெஸ்ஸிங் கரெக்ட்னா கண்டிப்பா அவன் என்னை அப்ரோச் பன்னுவான்" என்று சேர்த்து அனுப்பினான். "காண்டாக்ட் பன்னலன்னா" என்று யாழிசை கேட்க "பன்னலன்னா நம்ம வேற மாதிரி ட்ரேஸ் பன்னிக்கலாம் ... எங்க அண்ணன் இருக்க பயமேன்" என்று அனுப்பி விட்டு புன்னகைத்தான். 

பரத் யாழிசையிடம் கூறியது போல் பரத்தின் அறையில் இருந்து ஒட்டுக் கேட்ட ஒரு ஹோட்டல் ஊழியன் வேகமாக ஹோட்டலை விட்டு வெளியேறினான். உள்ளே எங்கையும் கைப்பேசியில் பேசக் கூடாது என்பது அவன் முதலாளியின் கட்டளை. எதுவாக இருந்தாலும் ஹோட்டலுக்கு வெளியில் நின்று தான் பேச வேண்டும் இல்லையேல் சிசிடிவியில் மாட்டிக் கொள்வாய் என்று கூறி வைத்திருந்தான். அதற்குத் தகுந்தாற் போல் அவனும் ஹோட்டலுக்குச் சென்று அந்த ஹோட்டலில் முன்னதாக வேலையில் இருந்த மேனேஜர்க்கு அழைத்தான். 

மாலை சித்தார்த்தின் பெற்றோர் கூறியது போல் கீர்த்தியின் குடும்பத்தை ஒரு வார்த்தை கூட கேட்காமல் கீர்த்தியை சித்தார்த் வீட்டிற்கு அழைத்துச் செல்ல காரில் ஏற்றினர். கீர்த்தியின் தந்தை சித்தார்த்திடம் புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்த வாசுவை அனல் பறக்க முறைத்தார். வாசு அதை அறியாமல் புன்னகையுடன் "என்ன மச்சான் கல்யாணம் ஆகிடுச்சி ஹனிமூன் எங்க" என்று தன் நண்பனை கிண்டல் செய்துக் கொண்டிருந்தான். சித்தார்த் சிரிப்புடன் "இந்த நிலமையில ஹனிமூன்னா போடா டேய் .. அவ முதல்ல குணமாகட்டும்" என்று கூறினான். கீர்த்தியின் தந்தை "இன்னும் இங்க எதுக்காக நின்னுட்டு இருக்க கிளம்பலாம் வா" என்று தன் மனைவியையும் மகனையும் முறைத்தவாறு கூறி நகர மாமனார் மாமியாருடன் மும்மரமாக சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்த மகள் சிறிதும் திரும்பி பார்க்காத காயத்தை மனதில் சுமந்தவாறு கண்கள் கலங்க அங்கிருந்து நகர்ந்தார் கீர்த்தியின் தாய். சித்தார்த்தின் வீட்டிற்குள் தன் புதிய வாழ்க்கையை தொடங்க வலது காலை உள்ளே வைத்து மன நிறைவுடனும் நிம்மதியுடனும் நுழைந்தாள் கீர்த்தி. 

"சரிடா அப்படியே நா கிளம்பறன்" என்று வாசு கூறி நகர போக சித்தார்த் "ஹேய் ஹேய் இரு உன் கிட்ட கேக்க வேண்டிய கேள்வி நிறைய இருக்கு" என்று வாசுவை இழுத்து பிடித்து அமர வைத்தான். "என்னடா" என்று வாசு கேட்க "அதே தான் நானும் கேக்றன் என்னடா பன்ன அவரை" என்று சித்தார்த் கேட்டான். "யார" என்று வாசுவோடு சேர்ந்து கீர்த்தி மற்றும் சித்தார்த்தின் பெற்றோரும் குழப்பமாக கேட்டனர். "ஹான் என் மாமனார" என்று சித்தார்த் கூற வாசு புன்னகைத்தான். கீர்த்தியும் குழப்பமாக "ஆமா எங்கப்பா இப்ப வரைக்கும் ஏன் பேசாமலே நின்னாரு ... அவர்க்கு என்ன ஆச்சி" என்று கேட்டாள். "இவன் தான் ஏதோ பன்னி இருக்கான்" என்று சித்தார்த் தன் நண்பனை கை காட்டிக் கூற வாசு "நானா ... நா எதும் பன்னல" என்று பதட்டத்துடன் கூறினான். "டேய் பொய் சொல்லாத ... உண்மைய சொல்லு ... அவரை என்ன பன்ன" என்று கேட்டான். 

"ஆமா வாசு ... எங்கப்பா அவ்வளவு சீக்கிரம் காம்ப்ரமைஸ் ஆகற ஆள் இல்லை ... உண்மைய சொல்லு" என்று கீர்த்தி கேட்டாள். "டேய் பெருசா எதும் இல்லை டா அவர் மௌபைல்ல ஹாக் பன்னிட்டன் அவ்வளவு தான்" என்று வாசு கூற "அதுல என்ன இருக்கு" என்று கீர்த்தி கேட்டாள். "சொன்னா வருத்தப்படக் கூடாது" என்று வாசு கூற கீர்த்தி "அப்படி என்ன பெரிய விஷயம்" என்று கேட்டாள். "அது உங்கப்பா இல்லீகலா சில பிஸ்னஸ் பன்னிகிட்டு இருக்காரு ... அது சம்பந்தப்பட்ட விஷயத்தை நா எடுத்து காட்டி அவரை மிரட்டி தான் இப்படி ஆப் பன்னி வச்சிருக்கன்" என்று வாசு கூற சித்தார்த் "இவ்வளவு தானா ... இத ஏன்டா மறைக்கனுன்ற" என்று பெரியதாய் ஏதோ எதிர்பார்த்து இறுதியில் ஒன்றுமில்லாத விஷயத்தை கூறியதால் ஏமாற்றமாக கேட்டான். வாசுவும் புன்னகையுடன் கிளம்ப வாசல் வரை வந்த சித்தார்த்திடம் "டேய் அவ முன்னாடி ஏன்டா அந்த விஷயத்தை கேட்ட நா எப்படி பொய் சொல்றது" என்று கேட்டான். "என்னடா சொல்ர ... அப்போ உண்மை எது" என்று சித்தார்த் அதிர்ச்சியாக கேட்டான். "அவங்க அப்பாக்கு இன்னொரு பேமிலி இருக்கு ... அதை அவ முன்னால சொல்ல முடியுமா ... அவ தாங்குவாளா ... அதனால தான் பொய் சொன்னன்" என்று வாசு கூறினான். "டேய் அவரா டா ... நிஜமாவா டா" என்று ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் கேட்க "நீயே பாக்கறியா" என்று கைப்பேசியை எடுக்கச் சென்ற வாசுவை தடுத்த சித்தார்த் "இல்லை அதெல்லாம் பாத்தா நா கீர்த்தி கிட்ட சொல்லாம இருக்க மாட்டன் ... நா பாக்கல" என்று கூறி விட்டான். வாசுவும் அதன் பின் அங்கிருந்து கிளம்பி விட்டான்.


Leave a comment


Comments


Related Post