இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...35 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 08-05-2024

Total Views: 25928

நாட்கள் அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்க தரணியும் பூச்செண்டும் கூட தங்கள் பணிகளில் தீவிரமாகி ஓடிக் கொண்டிருந்தனர். முகிலனும் மீராவும் மற்றொருபுறம் தங்கள் பணியில். மீராவிற்கு இது எட்டாம் மாதம் முடிவடையும் தருவாயில் உள்ளது… குழந்தை பிறப்புக்கு பின் வேலையை ராஜினாமா செய்து விடச் சொல்லி முகிலன் வற்புறுத்தினாலும் சிரமப்பட்டு தனக்கென்று தேடிக் கொண்ட அடையாளத்தை அழிப்பதில் மீராவிற்கு உடன்பாடு இல்லை. சில காலம் விடுமுறை எடுத்து பின் வீட்டில் இருந்தே பணியை தொடர்வதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாள்… அவன் முழுதாக உடன்படவில்லை‌‌… யோசிக்க அவகாசம் கேட்டிருக்கிறான்… ஒன்பதாம் மாதம் தொடங்கிய உடனே வளைகாப்பு வைத்துக் கொள்ளலாம் என்று முகிலனின் குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். ஏழாம் மாதமே வளைகாப்பு செய்திருக்க வேண்டியது… முக்கியமான ப்ராஜெக்டில் மீரா சிக்கி இருந்ததால் ஒன்பதாம் மாதம் தொடக்கத்தில் செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைக்கப்பட்டது. சமீப நாட்களாக பூச்செண்டிற்கு அழைத்துப் பேசும் போதெல்லாம் விசேஷம் உண்டா என்ற வார்த்தைதான் குடும்பத்தாரிடம் இருந்து முதலில் வந்து விழுகிறது.


“கல்யாணம் முடிஞ்சா உடனே விசேஷத்தை சொல்லிடணுமா…? இப்போதான் பியூட்டி பார்லரை சக்சஸ்ஃபுல்லா ரன் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்… அடுத்த லெவல் போறதுக்கு இன்னொரு கோர்ஸ் ஜாயின் பண்ணி போயிட்டு இருக்கேன்… விச்சு அக்கா ஃபுல்லா சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க… மாமு முனி இவங்களோட ஃப்ரெண்ட்ஷிப் சர்கிள் எல்லாரும் விரும்பி தேடி வராங்க… என்னை ப்ரூவ் பண்றதுக்கு நல்ல வாய்ப்பு அமைஞ்சு வந்திருக்கு… இந்த நேரத்துல பிரக்னென்ட் ஆனா சிரமம்தானே… வாந்தி குமட்டல் தலைசுத்தல்னு படுத்துட்டா எல்லாம் தலைகீழா மாறிடும்… அதனால கொஞ்ச நாள் போகட்டும்… சும்மா இதே கேள்வியை மாத்தி மாத்தி கேக்காதீங்க… சங்கட்டமா இருக்கு…”


மல்லிகா கேட்ட ஒரு வார்த்தைக்கு நீண்ட விளக்கமாய் பொரிந்து கொண்டிருந்தவளின் பேச்சுக்களை கேட்டபடியே அறைக்குள் நுழைந்தான் தரணி. பேசி முடித்து வைத்தவள் அவனிடம் திரும்பும் முன் குளியலறைக்குள் நுழைந்திருந்தான். அவன் வரும் முன் இரவு உணவினை மேஜையில் எடுத்து வைக்கத் தொடங்கினாள் பூச்செண்டு. முகிலன் வேறு ஒரு ப்ராஜெக்ட்டில் பிஸியாக இருந்ததால் இப்பொழுதெல்லாம் சற்று தாமதமாகத்தான் வருகிறான். அதுபோன்ற சமயங்களில் மீராவை தரணி அழைத்து வந்து விடுவான். இன்று அவளுக்கு மாதாந்திர செக்கப் செல்ல வேண்டி இருந்ததால் அதனை முடித்துவிட்டு இருவரும் வருவதாக கூறி இருந்தனர். குளித்து முடித்து அறையில் இருந்து சோர்வாய் வெளியே வந்து சோபாவில் அமர்ந்தான் தரணி.


அவன் அருகில் சென்று அமர்ந்தவள் “என்ன மாமு… ஒரு மாதிரியா இருக்கீங்க… ஆபீஸ்ல இன்னைக்கு வேலை அதிகமா…?” அக்கறையாய் கேட்டவள் அவன் தலையை மெல்ல வருடினாள்.


“அது எப்பவும் இருக்கிறதுதானே… ப்ராஜெக்ட் ஃபினிஷிங் ஸ்டேஜ்ல எல்லாருக்குமே ஸ்ட்ரெஸ் அதிகமாத்தான் இருக்கும்…” தன் நெற்றியை நீவியபடியே பதில் அளித்தான்.


“சரி… வந்து சாப்பிடுங்க… பசியா இருப்பீங்க…”


“இல்லடி… எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு டம்ளர் காபி போட்டு கொடு… தலைவலியா இருக்கு…” இரு விரல்களால் நெற்றிப் பொட்டில் அழுந்த தேய்த்தபடி கூற “இப்ப காபி சாப்பிட்டா அப்புறம் டிபன் சாப்பிட முடியாது… சாப்பிட்டாலே தலைவலி சரியா போயிடும்… நான் உங்களுக்கு தைலம் போட்டு விடுறேன்… எந்திரிச்சு வாங்க…” அவன் கைப்பற்றி அழுத்தம் கொடுக்க கரிசனமான அவள் வார்த்தைகளை நிராகரிக்க முடியவில்லை. எழுந்து சென்று அமர்ந்தவன் அமைதியாய் உணவை எடுத்துக் கொண்டான்.


அவன் உண்டு முடித்து அறைக்குள் நுழைய தானும் உண்டு முடித்து முகிலன் மீராவிற்கு தேவையானவற்றை எடுத்து தனியே மூடி வைத்து டேபிளை ஒதுங்க வைத்து அறைக்குள் செல்ல தரணி பால்கனியில் உள்ள ஷோபாவில் அமர்ந்திருப்பது தெரிந்தது. தைல பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டு அவன் அருகே சென்று அமர்ந்தாள்.


“சாப்பிட்டியா…?” சோர்வு தாங்கிய கண்களுடன் கேட்டான்.


“ம்ம்…” என்றபடியே தைலம் தேய்ப்பதற்காக பாட்டில் மூடியை திறக்க அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான். மென்மையாய் அவன் நெற்றியில் தைலம் தேய்த்து நெற்றிப்பொட்டின் இரு ஓரங்களிலும் மெல்ல அழுத்தம் கொடுத்து புருவத்திற்கு கீழே மெல்ல நீவினாள். சுகமாக கண்களை மூடி படுத்திருந்தான் தரணி.


“கொஞ்ச நேரம் இப்படி காத்தோட்டமா படுத்திருந்தாலே தலைவலி குறைஞ்சிடும் மாமு… தைலமும் போட்டாச்சு… பத்து நிமிஷத்துல சரியாயிடும்…” காற்றில் சிலுசிலுத்து அவன் முன் நெற்றியை ஆக்கிரமித்து தைலத்தின் பிசுபிசுப்போடு ஒட்டிக்கொண்ட முடிக் கற்றைகளை கோதி விலக்கி உச்சி முடிக்குள் விரல் கோர்த்து மசாஜ் செய்வதுபோல் அழுத்திவிட்டாள்.


“பொக்கே…” கண்களை மூடியபடியே அழைத்தான்.


“சொல்லுங்க மாமு…” தன் வேலையை தொடர்ந்தபடியே பதில் அளித்தாள்.


“நான் வரும்போது உன் அம்மாகிட்ட ரொம்ப கோபமா போன்ல பேசிட்டு இருந்தியே…”


“ஆமா மாமு… எப்ப பாரு விசேஷமா…? தலைக்கு குளிச்சியா…? நாள் தள்ளி போயிருக்கா…? எடுத்த எடுப்புல இதையேதான் அம்மா அத்தை அம்மாச்சி மூனும் மாத்தி மாத்தி கேக்குதுக… கல்யாணம் முடிஞ்சா உடனே புள்ள பெத்துக்கணுமா… தலைமுறை மாறினாலும் இந்த பேச்சு வழக்கு மட்டும் மாறுறதே இல்ல… எப்ப பார்த்தாலும் கடுப்படிச்சுக்கிட்டு…” எரிச்சலாய் சொன்னவளை கண்களை திறந்து கூர்ந்து பார்த்தான்.


“குழந்தை பெத்துக்கிறதுல உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லையாடி…’ புருவம் சுருக்கி கேட்டவனை பார்த்து மென்மையாய் புன்னகைத்தாள்.


“அப்படியெல்லாம் இல்ல மாமு… அததுக்கு கால நேரம் இருக்குல்ல… இப்போதான் பார்லர் கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆயிட்டு இருக்கு… இப்போ என்னோட கான்சென்ட்ரேஷன் ஃபுல்லா அதுலதான் இருக்கு.. ஓரளவுக்கு நல்லா ஸ்டாண்ட் பண்ணிட்டு குழந்தை விஷயத்தை யோசிக்கலாமே… நம்ம ரெண்டு பேருக்கும் வயசு ஆயிடலையே மாமு…”


“சரிதான்டி… புரியுது… அதே நேரம் பெரியவங்க ஆசையும் எதிர்பார்ப்பும் தப்புன்னு சொல்ல முடியாதே… மீராவுக்கு இன்னும் மூணு மாசத்துல குழந்தை பிறந்திடும்… இன்னும் சொல்லப்போனா அவங்களுக்கு முன்ன நமக்குதான் கல்யாணம் ஆச்சு…”


“ஆனா முனி முந்திரிக்கொட்டை மாதிரி கல்யாணத்துக்கு முன்னாலேயே சோலிய முடிச்சிருச்சே…” வேகமாய் அவனை இடைமறித்து பதில் கூறினாள்.


“அது நம்ம குடும்பத்துக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்தானே… மத்த சொந்தக்காரங்க ஊர்க்காரங்க எல்லாரும் உனக்கு இன்னும் விசேஷம் இல்லையான்னு அவங்ககிட்ட கேட்கத்தானே செய்வாங்க… அதனால அவங்களும் கேட்கிறாங்க‌… அதுக்கு கோபப்படணும்னு அவசியம் இல்லையே… பக்குவமா சொல்லலாமே…”


“பட்டிக்காட்டு ஜென்மங்களுக்கு பக்குவமா சொல்லி புரிய வைக்க முடியாது மாமு…”


“அவங்க தான் பட்டிக்காட்டு ஜென்மங்க… கேட்கிறாங்கன்னு சொல்ற… இன்னைக்கு என் அம்மாகூட என்கிட்ட கேட்டாங்கடி…”


“என்ன கேட்டாங்க…?”


“பிளான் பண்ணி தள்ளி போட்டிருக்கீங்களான்னு கேட்டாங்க…”


“நீங்க என்ன பதில் சொன்னீங்க…?”


‘நாம அந்த மாதிரி எதுவும் பண்ணலையே… எல்லாம் நடக்கும்போது நடக்கும்னு சொன்னேன்…” அவள் பதில் ஏதும் சொல்லாமல் தொலைவை வெறிக்க தொடங்கினாள்.


“என்னடி…? என்ன யோசனை…?”


“குழந்தை விஷயத்துல ஏன் எல்லாரும் இவ்வளவு தீவிரம் காட்டுறாங்க…? கல்யாணம் முடிஞ்சு 9 மாசம்தானே ஆகுது.. நாம ரெண்டு பேரும் நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கவே எத்தனை நாள் எடுத்துக்கிட்டோம்… எதையாவது மாத்தி மாத்தி கேட்டு ஏன்தான் இம்சை பண்றாங்களோ…” முகத்தை சுளித்து கோபமாய் சொன்னவளை கண்கள் இடுங்க பார்த்தவன் “குழந்தை பெத்துக்கிறது உனக்கு இம்சையா தோனுதாடி…” என்றான் சற்றே குரலை உயர்த்தி.


“மாத்தி மாத்தி கேள்வி கேட்டு குடையறதுதான் இம்சையா இருக்க… ஆமா… நீங்க என்ன இப்படி கேட்கிறீங்க… உங்களுக்கும் உடனே பிள்ளை பெத்துக்கணும்னு ஆசையா இருக்கா…?” புருவத்தை உயர்த்தியபடி கேட்க “ஏன் இருக்கக்கூடாதா…?” தானும் எதிர் கேள்வி கேட்டபடியே அவள் மடியில் இருந்து எழுந்து அமர்ந்தான்.


“என்ன மாமு… நீங்களும் ஏன் இப்படி பின்தங்கி இருக்கீங்க…? எல்லாம் உடனுக்குடனே நடந்துட்டா வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போக வேண்டாமா…?” அவளும் சற்று சீற்றமாய் பேசினாள்.


“அடுத்த கட்டம்னு நீ எதைடி சொல்ற…?”


“நீங்க தானே என்னோட திறமையை புரிஞ்சுக்கிட்டு எனக்கு பார்லர் ஆரம்பிச்சு உட்கார வச்சீங்க…”


“அதுக்கும் இதுக்கும் என்னடி இருக்கு…?”


“என்னை பேச விடுங்க மாமு… இப்போ நான் ஈவினிங் பார்லர் வேலையை முடிச்சிட்டு அடுத்த கோர்ஸ் போயிட்டு இருக்கேன்… இன்னும் மூணு மாசத்துக்கு என் கவனம் முழுக்க அதுலதான் இருக்கும்… கஸ்டமர்ஸ் நிறைய பேரை கிரியேட் பண்ண ஆரம்பிச்சுட்டோம்… இந்த நேரத்துல நம்ம கவனம் முழுக்க நம்ம தொழில்லதானே இருக்கணும்… இந்த நேரத்துல நான் கன்சீவ் ஆனா மொத்தமா எல்லாமே கெட்டுப் போயிடும்… இன்னும் ஆறு ஏழு மாசத்துக்கு இதைப் பத்தி யோசிக்க வேணாம் மாமு… புரிஞ்சுக்கங்க…”


“இடையில இயற்கையாவே நீ கன்சீவ் ஆயிட்டா வேணாம்னு சொல்லிடுவியா…?” கேள்வியாய் அவளை பார்த்தபடியே கேட்டான்.


“ஐயோ நீங்களும் இப்படி குதர்க்கமாவே பேசினா நான் என்ன சொல்லட்டும்…?” சலிப்பாய் முகம் சுளித்தாள்.


“நான் கேட்கிறது நியாயமான கேள்விதானே… இயல்பாவே நீ இன்னும் கன்சீவ் ஆகல… சப்போஸ் உன் பிளான் மாறுற மாதிரி இடையில நீ ப்ரெக்னன்ட் ஆயிட்டா அது உனக்கு சந்தோஷமா…? இல்லையா…?” அழுத்தமாய் கேட்டு அவளை ஆழமாய் பார்த்தான்.


“நான் சொன்ன காலம் வரைக்கும் இனிமே நாம பாதுகாப்பாவே இருப்போம்… தக்க பாதுகாப்பு நடவடிக்கையோட நமக்குள்ள எல்லாம் நடக்கட்டும்…” சற்று இரங்கிய குரலில் சொன்னவளை ஊடுருவிப் பார்த்தபடி சில கணங்கள் அமைதியாய் அமர்ந்திருந்தான் தரணி.


“இயற்கையா கடவுள் நமக்கான வாரிசை கொடுக்க தயாரா இருந்தாலும் அதுக்கு தடை போட்டு வைக்க சொல்ற… அப்படித்தானே…” சங்கடமான சிரிப்புடன் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் “நான் சொல்றதோட அர்த்தம் உங்களுக்கு புரியலையா மாமு…” சலிப்பாய் கேட்டாள்.


“ஓ… நல்லாவே புரியுதே… உன்னை பொறுத்தவரைக்கும் இப்போதைக்கு குழந்தை உனக்கு ஒரு தேவையில்லாத ஆணி…” அவன் குரலில் கடுமை கூடி இருந்தது.


“நான்தான் காரணத்தை விளக்கமா சொன்னேனே… புரிஞ்சுக்காம பேசினா என்ன அர்த்தம்…?” அவளும் கோபமாய் சீறினாள்.


“இந்த பேச்சை இதோட விடு பூச்செண்டு…’ வேகமாய் கை உயர்த்தி மறித்தது போல் கூறியவன் எழுந்து கொண்டான். பூச்செண்டு என்ற அந்த அழைப்பே ஒரு ஒட்டாத்தன்மையை அவளுக்கு உணர்த்தியது… செல்லமாய் பொக்கே என்றுதானே அவளை அழைப்பான்.


“உன் ஆசைக்கு நான் குறுக்கே நிக்கல… இன்னும் சொல்லப்போனா உன் திறமைக்கு பக்கபலமா இருக்கணும்னுதான் எப்பவும் நினைச்சிருக்கேன்… இப்பவும் உனக்கு எல்லா வகையிலும் சப்போர்ட்டா இருக்கேன்… இனியும் இருப்பேன்… ஆனா லைஃப்ல நாம ஒரு உயர்ந்த லட்சியத்தை அடையறதுக்கு குழந்தை ஒரு தடையா இருக்கும்னு நீ நினைக்கிறதைத்தான் என்னால ஏத்துக்க முடியல… குழந்தை ஒரு வரம்… எல்லாருக்குமே கிடைக்கிறது இல்ல… எத்தனையோ வசதி வாய்ப்புகள் இருந்தும் குழந்தைப்பேறு இல்லாம வெறுமையான வாழ்க்கையை எத்தனை பேர் வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு தெரியுமா… குழந்தை வேணும்னு முயற்சியில இதுநாள் வரைக்கும் நாம இணைஞ்சது இல்ல… இயற்கையான காதலான இணக்கம்தான் இப்போ வரைக்கும் நமக்குள்ள இருக்கு… ஆனா இனிமே பாதுகாப்போடு பக்கத்துல வாங்கன்னு சொல்றது என் மனசுக்கு ரொம்ப நெருடலா இருக்குடி… நம்ம குழந்தையை நாமே வேணாம்னு விலக்கி வைக்கிறதுக்கு சமம்தானே அது… அதுல எனக்கு உடன்பாடு கிடையாது… அதுக்கு பேசாம உன்னை தொடாம விலகி இருந்துக்கிறேனே…”


“மாமு… என்ன பேசுறீங்க…? யாருமே செய்யாத விஷயத்தை நீங்க ஒன்னும் பண்ணல…”


“இரண்டு குழந்தை பெத்துக்கிட்டவங்க அல்லது ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேணும்னு நினைக்கிறவங்க இந்த வேலையை செய்வாங்க… ஆனா நீ ஆரம்பமே வேணாம்னு அழிக்க சொல்ற…” வருத்தத்துடன் பேசியவனின் முகம் சுணங்கி இருந்தது.


“பெரிய வார்த்தை எல்லாம் நீங்கதான் பேசுறீங்க… தள்ளி வைக்கலாம்னு சொன்னது அவ்வளவு பெரிய குற்றமா… நாலையும் யோசிச்சுதான் அப்படி சொன்னேன்… அதெல்லாம் எனக்கு முக்கியம் இல்ல குழந்தைதான் வேணும்னு நீங்க நினைச்சா தடை போட நான் தயாரா இல்ல… நமக்குள்ள எதுக்கு தேவையில்லாத பிரச்சினை… கிடைக்கணும்னு விதி இருந்தா கிடைச்சிட்டுப் போகுது…” ஒட்டாத்தன்மையுடன் பேசியவளை ஆதங்கமாய் பார்த்தான்.


“விதியேன்னு குழந்தை பெத்துக்கிறேன்னு சொல்ல வர்றியா…? கசப்பாய் புன்னகைத்தவன் “அப்படி ஃபோர்ஸ் பண்ணி உன்னை குழந்தை பெத்துக்க நான் தூண்டவே மாட்டேன்… காதலோடுதானே நம்ம வாழ்க்கை ஆரம்பமாச்சு… உருவாகிற கருவும்கூட அதே காதலோடு மனசும் மனசும் இணைஞ்சு உயிரும் உயிரும் சேர்ந்து உடலும் உடலும் சங்கமித்து மனப்பூர்வமா தங்கியிருக்கணும்… வேண்டா வெறுப்புல என் குழந்தை உன் வயித்துல உருவாகுறதை நானே அனுமதிக்க மாட்டேன்… நீதான் ஒரு குறிப்பிட்ட காலம் வரையறுத்து வச்சிருக்கியே… அதுவரைக்கும் உன்னை தொடாம விலகி இருந்துக்கிறைன்… நிச்சயமா இதை நான் வருத்தத்துல சொல்லல… உன்னோட லட்சியத்துக்கு இடைஞ்சலா நம்ம குழந்தை ஒரு காரணமாகிடக் கூடாதுன்னுதான் சொல்றேன்.. நீ சொல்ற மாதிரி பாதுகாப்போடு உன்கிட்ட நெருங்கும் போதெல்லாம் என் குழந்தைக்கு தடை போடுறேன்னு மனசு நெருஞ்சி முள்ளா குத்தும்… அதுக்கு உன்னை விலகி இருக்கிறது பெட்டர்… இது நான் கோபத்துல எடுத்த முடிவுன்னு நினைச்சுடாதே… உன்னை மாதிரி நாலையும் யோசிச்சுதான் சொல்றேன்…”


பேசி முடித்தவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் விறுவிறுவென அறைக்குள் நுழைந்து விளக்கை அணைத்து மெத்தையில் படுத்துக் கொண்டான். சில நிமிடங்கள் அதே இடத்தில் அமைதியாய் நின்றவள் ஒரு பெருமூச்சுடன் தானும் உள்ளே நுழைந்து படுக்கையில் விழுந்து அவனது முதுகையே வெறித்தபடி நெடுநேரம் படுத்திருந்தான்.






Leave a comment


Comments


Related Post