இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 09 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 08-05-2024

Total Views: 9643

அத்தியாயம் - 09

"இல்லை. இதுவும் கனவுதான்" கண்களை நன்றாகத் தேய்த்தவள் மீண்டும் பார்க்க மீண்டும் அவனே தெரிந்தான். கனவில் வந்தவனே நேரில் நிற்கிறான் என்றதும் பயம் பிடித்துக் கொண்டது அவளுக்கு.

பயத்தில் கட்டிலின் ஓரத்திற்குச் சென்றவள் "யார் நீ?" என நடுங்கியபடி கேட்க, "அந்தகன்" என்றான் அவன்.

அதே பெயர்...

"நீ... நீ" வார்த்தைகள் தந்தியடிக்க..

'அந்தகன் என்னும் நாமம் காலனுக்கு உரித்தானது' எனச் சொல்ல வந்தவன் அதைச் சொல்லாது "ஆம் அந்தகன்.. அதே என் பெயர். அந்தகன்.. அஞ்சனா.. இருவரது பெயரின் முதலெழுத்து ஒன்றாய் இருக்கிறது இல்லையா அஞ்சனா. அந்தளவுக்கு நமக்குள் ஒற்றுமை இருக்கிறது போல" என்று முடித்திருந்தான்.

"மறுபடியும் நான் கனவு காணுறேன்" அவன் கூறிய வார்த்தைகளை கேட்டு அப்படிச் சொல்ல,

"இல்லை அஞ்சனா. இது கனவில்லை" என்றான்.

"யார் நீ? எதுக்கு இங்க வந்துருக்க. எனக்குத் தெரியும் நீ அந்த எமனோட கூட்டாளிதானே. என் உயிரை எடுத்துட்டுப் போகப் போற?" அவளது பயம் அவளை அவ்வாறு பேச வைத்தது.

"உன் உயிரை பாதுகாக்க வந்திருக்கின்றேன் அஞ்சனா என்னை நம்பு.."

"இல்லை. நீ பொய் சொல்லுற?"

"அதற்கான அவசியம் எனக்கு வந்ததில்லை அஞ்சனா. உன் உயிர் விஷயத்தில் நான் சொல்லுவது சத்தியமான உண்மை"

"என்னை காப்பாத்த வேண்டிய அவசியம் உனக்கென்ன வந்தது. ஏதோ தப்பா இருக்கு. நான் உன்னை பார்க்க விரும்பலை பேச விரும்பல. நீ போ" கண்களை இறுக மூடிக் கொண்டு காதுகளையும் பொத்திக் கொண்டாள்.

அவளது சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளைக் கண்டவனுக்கோ சிரிப்பாக இருந்தது. அவளுடனான இந்த உரையாடல்கள் அவனை நீட்டிக்கச் சொல்லி இம்சை செய்தது. 

"உன்னை நீங்கி நான் எங்கே செல்வது?"

அவள் காதுகளை இன்னும் மூடிக் கொண்டாள்.

"நான் பேசுவதை கேட்க மாட்டாயா அஞ்சனா. கேட்க வைக்கிறேன் பார்.." இதழ்களைக் குவித்து ஊதினான். அவனது மூச்சுக் காற்று அவள் முகத்தில் மோதியது. அதிலிருந்து வெம்மை அவள் தேகம் உரசியதில் சிலிர்த்தாள். பருவத்திற்கே உரிய சிலிர்ப்பு யாக்கை முழுதும் பரவி திரிந்தது. இறுக மூடிய இமை இளமையின் வேகத்தில் படபடவென அடித்துக் கொண்டது. 

"நான் பேசுவதை கேட்க மாட்டாயா? அஞ்சனா!" இப்போதவன் குரலில் ஏக்கம் ததும்பியது. 

கேட்பேன் மையமாக தலையை ஆட்டி வைத்தாள்.

"என் கண்களை நன்றாக பார் அஞ்சனா. அதில் மெய் என்னவென்று தெரியும். நான் ஏன் இங்கே இருக்கின்றேன் என்று புரியும். உன் மீதான மையல் என்னை என்னென்ன செய்கிறதென்றும் தெரிந்து கொள்வாய்" அவன் சொன்னதும் விழிகளை ஊன்றிப் பார்த்தாள்.

ப்பா அதென்ன கண்களா.. இல்லை இல்லவே இல்லை.. காந்தமோ? இருக்கும் இருக்கும். அக்காந்தம் அவளின் மனசை சட்டெனெ ஈர்த்துக் கெண்டதைப் போலொரு பிரமை‌. இமைதட்டி தன்னைச் சரிபடுத்துக் கொண்டாள். மீண்டும் மீண்டும் அக்கண்கள் அவளது அகத்தினை பாடாய் படுத்தியது. மறுபடியும் பார்க்க வேண்டுமென மனம் சொன்னது. பார்க்க துணிவில்லை என அவளது கண்கள் தரை பார்த்தது.

"அஞ்சனா.." அவ்வளவு மிருதுவாய் அவளின் பெயரைச் சொன்னான் அந்தகன். அதில் மனதில் உள்ள பாரமெல்லாம் காணாமல் போய்விட்டதாய் ஒரு மாயம் அவளுள்.

அழைத்தான் மறுபடியும்.

"அஞ்சனா..."

"வேண்டாம்"

"என்ன வேண்டாம்?"

"வேண்டாம்னு சொன்னா வேண்டாம்"

"வேண்டாம் என்று எதைக் குறிக்கிறாயென நானும் கேட்கிறேன். அதற்கு விடை சொல்"

"யார் நீ? என்னை ஏன் இப்படி.. ப்ச் எனக்கு வேண்டாம். நீ இங்க இருக்காத போ"

"நான் உனக்காகத்தானே இங்கே வந்தேன். போகச் சொன்னால் எங்கு செல்வது அஞ்சனா"

"ஐயோ இப்படி பேசாதன்னு சொல்லுறேன்ல எனக்கு என்னவோ மாதிரி இருக்கு"

"எனக்கதே உணர்வு உன்னை என்று கண்டனே அன்றிலிருந்தே இருக்கிறதே. நானும் என்ன செய்ய?"

"அந்தகா"

"ஹ்ஹா... மீண்டுமொரு முறை அழைப்பாயா அஞ்சனா.. உன் அழைப்பில் என் ஆவி குளிர்ந்து போனது"

அவளது நிலைமை இப்போது படுமோசம். தறிக்குள் அடங்கியிருந்த உணர்வுகள் திருவைக் கண்டால் கூட வெளிவராது. ஆனால் இவனைப் பார்த்ததில் வெளிவரத் துடித்துக் கொண்டிருந்தது. அதன் பரிணாமம் கண்டு அவளே வெலவெலத்துப் போனாள். அவளுக்குள் ஏற்படும் பேராட்டம் இயமனுக்குள் பேருவகையை கிளப்பியிருந்தது.

அதனாலேயே அதீத உரிமையை கையில் எடுத்துக் கொண்டு அவளருகே நெருங்கி வந்தான். அவன் மூச்சுக்காற்றுக்கே  தொலைந்து போனவள் அவன் நெருங்க நெருங்க சின்னா பின்னம் ஆகிக் கொண்டிருப்பதை அறிந்தும் அறியாதவனாய் எட்டு வைத்து கிட்டே வந்தவனின் நெருக்கத்தில் முழுதாய் தொலைந்தவள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். இது கனவு! கனவு! கனவுதான்.. மூளை முரண்டு பிடிக்கத் தொடங்க மனமும் ஆம் கனவு என முயன்று நம்ப ஆரம்பித்திருக்க, அந்தகன் அவளது தலையினை வெகு ப்ரியத்துடன் வருடத் தொடங்கினான்‌‌.

மூளை இயக்கத்தினை நிறுத்திக் கொள்ள மூடிய இமைகள் திறந்துக் கொண்டது. தனக்கு வெகு அண்மையில் நின்றிருந்தவனின் அகல முகம் அவளுள் ஆழமாய் இறங்கியது. இயமனுக்கே உரிய அந்த கருப்பு நிறம். அதிலும் அழகனாய் மிளிர்ந்தவனை கண்கள் ஆச்சர்யமாக அளவெடுத்துக் கொண்டிருந்தது. அவள் கண்களில், முகத்தில் வந்து போய்க் கொண்டிருந்த உணர்வுகளை எல்லாம் அவதானித்துக் கொண்டிருந்தவன் மையலுடன் "நானென்ன அவ்வளவு அழகா? அஞ்சனா!" எனக்கேட்டான்.

"பேரழகு"

"இவ்வொற்றை வார்த்தையில் சாபல்யம் பெற்றதைப் போல் உணர்கிறேன்"

"நீ ஏதோ வசீயம் வைக்குறவன்னு நினைக்கிறேன். அதனாலதான் நான் என்னென்னவோ உளறிட்டு இருக்கேன். முதல்ல இங்க இருந்து போ" தலையை உதறி அவள் பேசினாள். 

"வசீயம் வைப்பதில் தேர்ந்தவள் நீ அஞ்சனா. யான் அதில் கிறங்கித்தான் கடமை மறந்து சுற்றிக் கொண்டிருக்கிறேன்"

"அந்தகா! எனக்கு தலை ரொம்ப வலிக்குது"

அவளைச் சட்டென தன் மார்பில் தாங்கிக் கொண்டு அவள் தலையினை மென்மையாய் வருடிவிட்டான்.

அந்த வருடலில் கண் மூடியவள் அவளது கரத்தினை பிடித்துக் கொண்டு "நீ யார்னு தெரியல. நீ திடீர்னு கண்ணு முன்னாடி வர்றதுல ரொம்ப குழப்பமா இருக்கு. எனக்கு ஏதோ பையித்தியம் பிடிச்சுருச்சு போல. இதெல்லாம் என்னோட கற்பனையா இருக்குமோ.. இப்படி நிறைய எனக்குள்ள தோணுது. ஆனாலும் நீ இப்படி பாசமா தலையை வருடுறது எனக்கு பிடிச்சுருக்கு. இதுல என்னை மறந்து போறேன். அந்த உண்மையை உன்கிட்ட சொல்லணும்னு எனக்குத் தோணுச்சு. அதனால சொல்லிட்டேன்‌. என் ஐயா போனதுக்கு அப்பறம் எனக்குன்னு வாழ்க்கைல எதுவும் இல்லைன்னு நினைச்சுட்டு இருந்தேன். திரு கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டாலும் கூட பெருசா எந்த தடுமாற்றமும் இல்லை. ஆனால் நீ கேட்கும் போது நான் தடுமாறுறேன். உன் பார்வை அப்படியே உள்ளே கத்தி மாதிரி குத்தி என்னை கொல்லுது. இதுக்கு பேர்லாம் என்னென்னு தெரியல. இதுவரைக்கும் எமனை நினைச்சு பயந்தேன்.  இப்போ இந்த உணர்வை நினைச்சு பயப்படுறேன். நான் நினைக்குறேன் இரண்டுமே உயிரை எடுக்குறதால இரண்டுமே ஒன்னுதான்னு"

"இதெல்லாம் எனக்கும் தோன்றியது தான் அஞ்சனா. இதன் பெயர் நானறிவேன்.. காதல்.. இதில் சிக்குண்டவர் சுகமும் வேதனையும் ஒரே சேர அனுபவிப்பார்"

"காதல்.. அந்தகா.. அது வேண்டாம். நான் கூடிய சீக்கிரமே செத்து.." அவள் முடிக்கவில்லை அதற்குள் அவளை நிமிர்த்தி 

"இன்னுமொரு முறை இவ்வார்த்தையை நீ கூறினால் உன்னை நானே கொன்று புதைத்துவிடுவேன். உன் உயிர் என் சொந்தம். அது ஒருபோதும் உன்னை விட்டுப் பிரியாது. புரிந்ததா" கோபமாய் அவளை உலுக்கிச் சொன்னவனின் மார்பில் தலையை இன்னும் அழுத்தமாக புதைத்துக் கொண்டாள். அவள் தன் மார்பில் சாய்ந்திருக்கிறாள் நினைக்க நினைக்க இயமனுக்கு நெஞ்சம் தித்தித்தது. காதலின் அடுத்தக்கட்டத்திற்குள் அவன் நுழைந்திருக்க சித்திரகுப்தன் பிரபுவின் காதலை ஒழித்தே தீருவேனென நினைத்து சனியின் இருப்பிடத்திற்குள் நுழைந்திருந்தான்.

வெளியே,

"அம்மா அவளைப் பார்த்துட்டு வர்றேன்" திரு அம்மாவுடன் மல்லுக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

"தேவையில்லை திரு"

"அம்மா! இதென்ன பிடிவாதம்"

"பிடிவாதம் பிடிக்குறது நீதான் திரு. நான்தான் ஜாதகம் சரியில்லை அமைதியாய் விலகிடுன்னு சொல்லுறேன்ல. கேட்காமல் மறுபடியும் அவளை இந்த நிலைமையில கொண்டு வந்து நிறுத்திட்டேலே"

"அம்மா அவளுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை. அதனாலதான் மறுபடியும் இப்படி இருக்கா. அதான் சொல்லுறேன் கல்யாணம் பண்ணிட்டு அவளை நான் நல்லாப் பார்த்துக்கிறேன்"

"உங்க இரண்டு பேரையும் வாரிக் கொடுக்குற மாதிரியான ஒரு கல்யாணம் தேவையே இல்லை "

"அம்மா எனக்கு மனசுன்னு ஒன்னு இருக்கு. அதுல மாத்தி மாத்தி என்னால எதையும் எழுதிக்க முடியாது. அஞ்சனாதான் உன் பொண்டாட்டின்னு நீங்கதான் சொன்னீங்க. இப்போ நீங்களே வேண்டாம்னு சொல்லுறீங்க. உங்களால மனசை மாத்திக்க முடியும் என்னால முடியாது. அவளை நான் கல்யாணம் பண்ணியே தீருவேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை"

"திரு நான் சொல்லுறதை கேளு. இரண்டு பேரோட உயிரும் போயிடும்"

"போகட்டும்.. அவளோட புருஷனா நானும் என் பொண்டாட்டியா அவளும் மாறுன பிறகு இந்த உயிர் போகட்டும்" இறுக்கமாக அவன் பதிலளிக்க இப்படிப் பேசுபவனிடம் என்ன பேசுவதென்று லட்சுமி அமைதியாகிவிட அவன் அவள் அறைக்குள் நுழைந்தான்.

அப்போதுதான் அவள்..

"ஐயாவோட இழப்புக்கு அப்பறமா நான் நிம்மதியாய் இருந்ததே இல்லை. இன்னைக்கு அப்படி இருக்கேன்னா அதுக்கு காரணம் நீதான். உன்னால மறுபடியும் புதுசா பொறந்தது மாதிரி இருக்கு. கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேலே. நான் அப்போவே பயப்படாமல் உண்மையை சொல்லியிருக்கணும் சம்மதம்னு.. இந்த பயம் நீ என் கையைப் பிடிச்சதுக்கு அப்பறமாத்தான் போகணும்னு இருந்துருக்கும் போல.. என்னை விட்டு என் ஐயா மாதிரி நீ பாதியிலேயே போயிட மாட்டியே. எப்பவும் என்கூடவே இருப்பல.." அஞ்சனா பேசியபடியே அந்தகனின் மடியிலேயே துயில் கொண்டுவிட அவை அனைத்தும் திருவின் காதில் விழுந்து தொலைத்ததில் அவன் சிறகே இல்லாது குதிக்க ஆரம்பித்தான். பாவம் அவனுக்குத்தான் இயமன் இருப்பது கண்ணுக்குத் தெரியாதே..

அன்று அவகாசம் கேட்டவள் இன்று சம்மதம் எனச் சொல்லிவிட்டாள். இது போதுமே என நினைத்தவன் வந்த வழியே வேகமாக வெளியே சென்றான்.

"என்னடா போன உடனே வந்துட்ட"

அம்மாகிட்ட சொல்ல வேண்டாம். அம்மா அப்பறம் அஞ்சனாவோட மனசை மாத்துனாலும் மாத்திடுவாங்க. சோசியம் இதெல்லாம் சுத்தப் பொய். மனசுல இருக்குற என் காதல் சோசியக்காரன் சொன்னதை பொய்னு கண்டிப்பா நிரூபிக்கும். அப்போ அம்மா புரிஞ்சுக்குவாங்க. அதுவரைக்கும் எதுவும் அவங்களுக்கு தெரிய வேண்டாம் என நினைத்தவன் "அவ நல்லா அசந்து தூங்குறா அம்மா அதான் வந்துட்டேன். நீங்க இங்க இருந்து அவளைப் பார்த்துக்கோங்க. நான் வீட்டுக்குப் போயிட்டு பணமும் உங்களுக்குத் தேவையான சாப்பாடும் கொண்டு வரேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

திரு மனதில் அஞ்சனா மட்டுமே இருக்க அஞ்சனாவோ அவள் மனதில் அந்தகனின் பெயரை அழுந்தப் பதித்துக் கொண்டாள். அந்த அந்தகனே இயமன் என அவளுக்குத் தெரிய வந்தால்...

காதலாசை யாரை விட்டது...?




Leave a comment


Comments


Related Post