இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -04 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 08-05-2024

Total Views: 20405

இதரம் -04

மல்லியைத் தவிர அனைவரும் நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தனர். 


"சொல்லு திரு ,என்ன பேசணும்?"கேட்டது ஜீவரெத்தினம் தான். 


"அதுக்கு முன்னாடி நான் பேசலாமா?" என்று வந்து நின்றார் ஜெயராஜ்.


அனைவரும் கேள்வியாகப் பார்க்க,திருவோ," ஹாஸ்பிடல்ல சார்ஜ் எடுத்துக்கலாம்'னு இருக்கேன் நல்ல நாள் பாருங்க பாட்டி "என்றதும் ஜெயராஜின் உடல்மொழி இறுக்கத்தைக் காட்டியது. 


ஜெகதீஸ்வரி முகத்தில் மலர்ச்சி தெரிய, இளமாறனும் மகனை ஆச்சரியத்துடன் பார்த்தார். ரகுவிற்கும் துர்காவிற்கும் இதில் மகிழ்ச்சி தான். அர்ணவ் யாருக்கு வந்த விருந்தோ என்றமர்ந்திருந்தான். 


"நீ எப்படி சார்ஜ் எடுத்துக்க முடியும் திரு. அங்கே ஏற்கனவே வைஷாலி பொறுப்பில் இருக்கா தெரியுமா தெரியாதா, அது மட்டுமில்லாமல் ஹாஸ்பிடலை நான் அவங்க ஃபேமிலிக்கு கைமாத்தி விடப் போறேன்"என்றார் வேகமாய் 


வைஷாலி திருமாறனுக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த பெண் அவளும் ஒரு மருத்துவர் தான். சாந்தகுமார் விஜயாவின் இரண்டாவது மகள். சாந்தகுமார் வேறு யாரும் அல்ல வைஷ்ணவியின் ஒன்று விட்ட அண்ணன் தான். சிங்கப்பூரில் வசித்தவர்கள் வைஷ்ணவியின் பெற்றவர்களின் அறுபதாம் கல்யாணத்திற்கு வந்தனர். அங்கே திருமாறனைக் கண்டவர்களுக்கு மிகவும் பிடித்துப் போக ஜெயராஜிடம் கூறியிருக்க அவரது ஆலோசனையின் பெயரில் மகளையும் மருத்துவருக்கு படிக்க வைத்து ஜெகதீஸ்வரியின் கவனத்தை ஈர்த்தனர். திருமாறன் வெளியே கிளம்பும் முன்பே வைஷாலி தான் அவனுக்குப் பார்த்திருக்கும் பெண் என்று அறிவுறுத்தியே அனுப்பி வைத்தனர். திருமாறன் வைஷாலி திருமணத்திற்கு அதிகம் மெனக்கெட்டவர் ஜெயராஜ் தான். 


"வாட் யார் ஹாஸ்பிடலை யாருக்கு தர்றது?" என்று திரு சீற 


"வேற என்ன செய்ய முடியும்...?,ஏற்கனவே வைஷாலி தான் அங்கே பொறுப்பில் இருந்தா. உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆகியிருந்தா கூட அவங்க அமைதியா இருந்திருப்பாங்க. அதுக்குள்ள தான் உன் ஆசைநாயகி..." எனும்போதே," சித்தப்பா!" என்றான் கர்ஜனையாக 


"வாட் கோபம் வருதா...? நீ பண்ண வேலைக்கு என் மகனா இருந்திருந்தால் கழுத்தை நெரித்து கொன்றுப்பேன். ஏன்னா எனக்கு கௌரவம் முக்கியம்" என்று இளமாறனையும் ஏளனப் பார்வை பார்த்தார். 


"ஜெய் தேவையில்லாதது வேண்டாம், அது நடந்து முடிந்த விஷயம்" என்று ஜீவரெத்தினம் எச்சரிக்க



"எங்கே முடிஞ்சதுமா?, சொல்லுங்க எங்க முடிஞ்சது,அந்தப் பொண்ணா இருந்ததால அமைதியா தன் குடும்பத்துடன் கிளம்பிட்டா இதுவே வேற யாருமா இருந்திருந்தால் உங்க பேரன் இந்நேரம் ஜெயில்ல இருந்திருப்பான்."என்றார் ஆத்திரமாக


"ஸோ,இதனால நீங்க என்ன சொல்ல வர்றீங்க?" என்று அவரின் முன் வந்து திரு நிற்க


"ம்மா.... அந்தப் பொண்ணு பார்க்கிற ஹாஸ்பிடலை அவளுக்குத் தரணும்'னு சொல்றேன்" நேரடியாக திருவிடம் பேசாமல் ஜீவரெத்தினத்தம்மாளிடம் கூறினார் ஜெயராஜ். 



"இந்த மேரேஜ் நடக்கலைன்ற வருத்தம் இருக்கு தான். பட் அதுக்காக நான் எந்த பெனால்டியும் யாருக்கும் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அந்த ஹாஸ்பிடல் எனக்காக கட்டப்பட்டது. என் ப்ராப்பர்ட்டீயை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்." என்று அழுத்தமாய் அவன் உரைக்க, ஜெயராஜின் முகம் இறுகியது. 



"தரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்.? மேரேஜுக்கு முன்னவே பேசின ஒரு விஷயம் தானே...?" நானும் மருத்துவமனையை வாங்காமல் விடமாட்டேன் என்பது போல பேசினார் ஜெயராஜ். 


இப்போது ஜெகதீஸ்வரி சட்டென," அதென்ன தம்பி அந்த ஹாஸ்பிடலை வைஷாலிக்குத் தர இவ்வளவு மெனக்கெடுறீங்க?" என்று குத்தலாக கேட்டுவிட 


"அக்கா அவர் வைஷாலி ஏமாந்து போனதால ஜஸ்ட் ஒரு ஆதரவா இருக்கட்டுமேன்னு கேட்கிறார்" இப்போது கணவனுக்காக பரிந்து கொண்டு வந்தார் வைஷ்ணவி. 


துர்காவுமே," மாம் திரு பண்ணது பிக்கஸ்ட் மிஸ்டேக். நாம பிரதி உபகாரம் பண்ணித்தான் ஆகணும்." என்றாள் தன் பங்கிற்கு . 


ரகு அனைவரையும் பார்த்தான். 


"எனக்கு இதில் விருப்பம் இல்லை. ஹாஸ்பிடல் கட்டும் போதே அது திருவிற்குன்னு சொல்லி தான் கட்டினோம். ஸோ அவன் இஷ்டப்படாம வைஷாலிக்கு தர வேண்டாம்" என்று சொல்ல


"ம்மா. இந்த மேரேஜ் நடக்காததில் அந்தப் பொண்ணு ரொம்ப டிஸ்ஸப்பாயிண்ட் ஆகி இருக்கா. சாந்தகுமார் மேரேஜ் நின்னதை கூட பெருசா எடுத்துக்காம அவர் கேட்ட ஒரே விஷயம் என் பொண்ணு வேதனையில் இருக்கா அவளுடைய ஒரே ஆறுதல் ஹாஸ்பிடல் வந்து போறது தான் அதை மட்டும் வேண்டாம்னு சொல்லிடாதீங்கன்னு கேட்டுக்கிட்டார். இப்போ திரு போய் சார்ஜ் எடுத்தா அந்தப் பொண்ணோட மனநிலையை யோசிங்க. ஏமாத்தினது திரு. நாம தான் விட்டுக்கொடுக்கணும்" என்று ஜெயராஜ் பிடிவாதமாக கூற


"நான் நாளைக்கு ஹாஸ்பிடல் போறேன்." என்றான் திருவும் பிடிவாதமாக. 



பேச்சுக்கள் நீண்டுகொண்டே சென்றதே தவிர ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. 


மருத்துவமனையை வைஷாலியின் பெயரில் மாற்றியே ஆகவேண்டும் என்று ஜெயராஜ் அத்தனை பிடிவாதமாக நிற்க, திருவோ தன்னிலையில் இருந்து துளியளவும் மாறவில்லை. 



"ஸோ நீ ப்ளானோட தான் அந்த வில்லேஜ் கேர்ளை வரவச்சிருக்க. நீ வந்து இதுபோல சண்டை போடு, இந்தக் கல்யாணம் நின்னு உனக்கும் எனக்கும் நடக்கும்னு இல்லாட்டி எங்கேஜ்மென்ட் ஆனபின்னாடி எவளோ ஒருத்தி கூட கூத்தடிச்சிருப்பியா.?"என்று வார்த்தைகளை விட்டார் ஜெயராஜ். 


"ஸ்டாப் இட் சித்தப்பா !"என்று சத்தமாய் கத்திவிட்டான் திருமாறன்.


"ஜெயா நீ அதிகமா பேசுற" இளமாறன் கோபத்துடன் கண்டிக்க


"நான் அதிகமா பேசினேனா இல்லை உன் மகன் அதிகமா செஞ்சுட்டானா அண்ணா. உன் மகனுக்காக ப்ரபோசல் கொண்டு வந்து அசிங்கப்பட்டு நிற்கறது நான்தான். ஆனா நான் பேசக்கூடாது இல்லையா?" என்று பதிலுக்கு அவரும் எகிற 



ஜீவரெத்தினம் வேகமாய் எழுந்தார். 



"ஜெயராஜ்,இங்க யார் மேல தப்பு சரி இது பேச நேரமில்லை எல்லாம் முடிஞ்சிடுச்சு. திருவோட மனைவியா வேற பொண்ணு வந்தாச்சு நிதர்சனத்தை எல்லோரும் ஏத்துக்கத் தான் வேணும். அதே போல திருவோட ப்ராப்பர்ட்டீஸ் மேல யாரும் உரிமை கொண்டாடவும் முடியாது, அது கூடவும் கூடாது. நாளைக்கு திரு ஹாஸ்பிடல்ல சார்ஜ் எடுத்துப்பான். இது யாருக்கு பிடித்தம் இருக்கு இல்லைன்றது எனக்கு தேவையில்லாத விஷயம். அன்ட் ஜெயராஜ் நாளையிலிருந்து வைஷாலி ஹாஸ்பிடல் வரத் தேவையில்லை" என்று அழுத்தமாய் உரைக்க ,மற்ற அனைவரும் கப்சிப் என்று நின்றனர். 


திருமாறன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. தன்னறை சென்றுவிட்டான். 



"ஸோ, என் ரெப்யூடேஷன் பத்தி யாருக்கும் கவலை இல்லை. உங்க பேரன் தப்பே பண்ணி இருந்தாலும் அவனுக்குரியது கிடைக்கும் இல்லையாம்மா? அவன் செய்த தவறை யாருமே சுட்டிக்காட்ட மாட்டீங்க"என்று ஜெயராஜ் மீண்டும் ஆரம்பிக்க


"சரி அந்த சூழ்நிலையில் வேற என்ன செய்ய ஜெயராஜ்? நீ சொல்லு. நடந்து முடிஞ்சதை மாற்ற முடியுமா?" என்று ஜீவரெத்தினம் அவரிடமே திரும்ப



"மாத்த முடியாது தான் மா ஆனா திருத்தலாம்" என்றார் சூசகமாக. 


"திருத்த நான் விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை திருவோட மனைவி தேவமல்லி அவ்வளவு தான்." என்று எழுந்து செல்ல ஜெகதீஸ்வரி யோசனையானார். 



அவரின் யோசனைபடர்ந்த முகம் ஜெயராஜின் நம்பிக்கையை ஊக்கியது. 



********


மல்லி வழக்கமாய் உறங்கும் இடத்தில் அமர்ந்திருந்தாள். 


அமர்ந்திருந்தவளை சட்டை செய்யாமல் அறையை இருளாக்கிவிட்டு படுத்துவிட்டான் திருமாறன். ஆனால் உறங்கவில்லை. மனதில் அத்தனை சஞ்சலங்கள். 


இருவரின் நினைவுகளும் அழகாய் பயணித்தது கடந்தகாலத்திற்கு. 



***********


ஆறுமணிக்கெல்லாம் எழுந்து விட்டிருந்தான் திருமாறன். 


கதவைத் திறந்ததுமே சில்லென்ற காற்று அவன் முகத்தில் மோத சோம்பலாய் நெட்டி முறித்து சுற்றிமுற்றி பார்த்தான். 



"குட் மார்னிங் டாக்டர் சார்!" என்று கிங்கிணியாய் ஒரு குரல் கேட்க, திருமாறன் யாரென்று பார்த்ததும் முகம் மலர்ந்தான். அங்கே நின்றது பத்துவயது சிறுவன் ஒருவன். ஒரு கையில் ஆவிபறக்க தேநீர் டம்ளரும், மற்றொரு கையில் தினசரியுமாய் 


"குட்மார்னிங் சார்!, யார் நீங்க?" என்றதும் திருவின்,' சார் 'என்ற அழைப்பில் மகிழ்ந்த சிறுவன்,"பக்கத்து வீட்டுல இருக்கேன் சார். மல்லியக்கா இதை உங்க கிட்ட தர சொல்லுச்சு. தெனத்துக்கும் பேப்பரும்,டீயும் தரச் சொல்லி மணியக்கார் தாத்தா சொன்னாகளாமாம்?" என்றான் அவன். 



"தேங்க் யூ சார், உங்க பேர் சொன்னா வசதியா இருக்கும்" என்று சிரிக்க 


"என் பேரு சக்திவேலு சார். எங்கப்பா பேரு பூதப்பாண்டி அம்மா பேரு வெண்ணிலா." என்றவன்," பள்ளியோடத்துக்கு நேரமாச்சு சார்" என்று ஓடினான் தேநீரையும் பேப்பரையும் கொடுத்துவிட்டு 


சிரித்துக் கொண்டே தேநீரை அருந்தியவன், மீண்டும் சுற்றம் பார்க்க தேவமல்லி தண்ணீர் குடத்தை தூக்கிக் கொண்டு வந்தாள். 



"சார் உங்களுக்கு தண்ணி குடிக்க எங்க வைக்கட்டும்.?"


"இங்க வச்சிடும்மா நான் எடுத்துக்கிறேன்." என்றான் மாறன். 


"காலையில இட்லி எத்தனை மணிக்கு கொண்டாரட்டும்'னு சொல்லுங்க சார். சாப்பாடு நேரம் சொல்லிட்டீங்கன்னா சரியான நேரத்துக்கு கொண்டாருவேன்" என்றாள் மல்லி. 

"இல்ல இங்க ஏதாவது ஹோட்டல் இருந்தா பார்த்துக்கிறேன் மா நீங்க சிரமப்பட வேண்டாம்" என்று மாறன் மறுக்க 


"இதுல செரமம் இல்லிங்க சார் எங்கூருக்கு வைத்தியம் பார்க்க வந்திருக்கீங்க" என்றவள்," இந்த ஊரில் ஓட்டலு கிடையாது சார் மொக்குல உள்ள டீக்கடையில் காலையிலையும் இட்லி தோசை போடுவாங்க அவ்வளவு தான். மணியக்கார் சொல்லி இருக்காங்க உங்களுக்கு சாப்பாடு தரச் சொல்லி. அதான் கேட்டேன். இங்க வேலை பாக்குற டீச்சருக ரெண்டு பேருக்கு நான் தான் சமைச்சு தர்றேன் சார்"என்றாள் விளக்கமாக 




"ஓகே !"என்றவன்," காலையில் ஒன்பது மணி மதியம் ஒரு மணி நைட் எட்டு மணிக்கு தந்தா போதும்மா" என்றான். 

"சரிங்கசார். உப்புக்காரம் ஒரு வாக்கா போடுறேன். உங்களுக்கு தோது பார்த்து சொல்லுங்க அடுத்தாப்ள தரும்போது நெதானமா போடுறேன்" என்ற மல்லி போய்விட்டாள். 

சமையல் பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் குறை சொல்லும்படி இல்லை. நன்றாகவே சமைத்துக் கொடுத்தாள் மல்லி. 


இயல்பாய் போனது அவனுக்கு அந்த கிராமத்து வாழ்க்கை. 


'எந்த நேரத்திலும் சிகிச்சைக்காக வரலாம்'என்று ஊர் மக்களிடம் கூறியிருக்க அப்போதே நற்பெயரை எடுத்துக் கொண்டான் மாறன். 


"மல்லி மேடம் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?" என்று கேட்கும் அளவிற்கு வளர்ந்திருந்தது அவர்களது பேச்சுவார்த்தை. 


இருவருக்கும் இடையே ஒரு சிறுபுன்னகை இயல்பாய் பேச்சு அவ்வளவு தான்.



அழகாய் இயல்பாய் போனது இருவரின் வாழ்வும். 


"சார் இட்லி, தோசை, இடியாப்பம்,தேங்காப்பால் வச்சிருக்கேன் சூடா இருக்கையிலேயே சாப்பிட்டுடுங்க." என்று பரபரப்புடன் சொல்லிவிட்டுச் சென்றவளை இதழில் குறுநகை பூக்கப் பார்த்தவன்," என்ன இவ்வளவு அவசரம் மல்லி மேடம்?, அதுவும் இவ்வளவு வெரைட்டீஸ்? "என்று வினவ 



"ஊர்ல இருந்து அக்காங்க வந்திருக்காங்க சார். நம்மூர் திருவிழா இல்ல அதான். வேலை கெடக்கு" என்று பரபரப்பு குறையாமலேயே பேசியவள், வேக எட்டில் நடக்க ,சரியென தலையாட்டி காய்ச்சல் என வந்தவரை கவனித்தான். 


"பாத்து போ புள்ள."என்று ஊசி போட வந்தவர் சொல்லி விட்டு," அக்காளுக வந்தா மல்லிய கைல புடிக்க முடியாது தம்பி. வேலை கொறவு இல்லாம கெடக்கும் அதுக்கு."என்றார். 



"ம்ம்ம்!" என்ற மாறன்," இந்த மாத்திரை காலையில் ஒன்னு நைட் ஒன்னு போடுங்க நாளைக்கு மறுபடியும் வந்து ஒரு ஊசி போட்டுக்கங்க" என்றான். 


"சரிங்க தம்பி." என்று எழுந்து கொண்டவர்," நோன்பிக்கு கறிகாய் திங்க முடியாது போல. போட்டு இந்த வாட்டு வாட்டுது" என புலம்பி கொண்டே நடந்தார். 


மீண்டும் இஞ்சி தட்டி போட்ட தேநீரை கொடுக்க வந்தவள்," ஏன் டாக்டர் சார் கவுச்சி ச்சே... கோழி கறி ஆட்டுக்கறி சாப்புடுவீங்க தானே?" என்று சந்தேகத்துடன் கேட்க

"எனக்காக எதுவும் ஸ்பெஷல் வேண்டாம்மா!" என்றான் மறுப்பாக 


"சார், ஊரே நாளைக்கு கறிக்கொழம்புல தான் கண்ணு முழிக்கும். நீங்க வேற சாப்புடுவீங்க தானே. அதாவது அசைவம் அதை மட்டும் சொல்லுங்க" என்றாள். 


அவளிடம் எப்படி சொல்லுவான் இது போல குழம்பு வகைகள் உண்பதில்லை என்று. 

"உன் இஷ்டம்" என்று கூறி விட்டான். 



மறுநாள் அவள் கொண்டு வைத்த வகைகளைக் கண்டு அசந்தே போனான் திருமாறன். 



....தொடரும். 











Leave a comment


Comments


Related Post