இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 28 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 09-05-2024

Total Views: 20004

செந்தூரா 28



ஆராத்யா அவர்களை கவனிப்பதை உணராமல் செந்தூரன் மனைவியிடம் கண்களால் காதல் கதை பேசிக் கொண்டு இருந்தான். அழுத்தமாக மனைவியின் மேல் பார்வையை படரவிட்டவனின் சிந்தையும் இப்போது அவன் வசம் இல்லை. கவின் ஏதோ சந்தேகம் கேட்க பலமுறை “மித்ரன்” என்று அழைத்தும் பதிலளிக்காமல் இருந்த நண்பனை நிமிர்ந்து பார்த்தான்.


செந்தூரனின் விரல்கள் லேப்டாப்பில் இருந்தாலும் அவன் பார்வை தாரிகாவை துளைத்தெடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் ஆராத்யாவிடம் திரும்பி, “ஆரா, நண்பன் பரவச நிலைக்கு போயிட்டான். இனி வேலைக்காவாது. நீ போய் தூங்கு, நானும் கிளம்பறேன். நாளைக்கு பார்த்து கொள்ளலாம்” என்று சொல்லி விட்டு தன் லேப்டாப்பை ஆஃப் செய்து எடுத்துக் கொண்டு கிளம்பினான்.


ஆராத்யாவிற்கோ பற்றிக் கொண்டு வந்தது, அவன் அருகில் இத்தனை அழகாக இருக்கும் என்னை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்கிறான். ஆனால் இந்த தாரிகா தான் உலகத்தில் இருக்கிற ஒரே பெண் போல அல்லவா நடந்து கொள்கிறான்? உள்ளூர பொருமியபடி தன் மாடியிலிருந்த தன் அறைக்கு சென்றாள். அவர்கள் இருவரும் சென்றது கூட உணராமல் செந்தூரன் தாரிகாவையே விழி நகர்த்தாமல் பார்த்து கொண்டு இருந்தான்.



கவின் செந்தூரனுக்கு‌ ஃபோன் செய்தான். மனைவியை பார்த்துக் கொண்டே அதை ஏற்று காதில் வைத்து, “ஹலோ யாரு?” என்றான்.


“என்ன யாரா? மச்சி நான்‌ கவின் டா” என்றான் அவன் அதிர்ந்து போய்.


அப்போதுதான் திரும்பி பார்த்தவன் தன் அருகில் யாரும் இல்லாததை பார்த்து, “டேய் நீ எப்ப டா போனே? ஆராத்யாவையும் காணோம்? போகும் போது சொல்லிட்டு போக மாட்டீங்களா?” என்று நண்பனை கடிந்தான்.


“சொல்லுவடா சொல்லுவ? எத்தனை முறை உன்னை கூப்பிடறது? நீ தான் இந்த உலகத்திலேயே இல்லையே? நாங்க கிளம்பி வந்தது கூட தெரியாம உன் பொண்டாட்டிக் கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க. வெனிஸ்ல என் கூட இருந்த சாமியாரா நீனு? எனக்கே டவுட்டா இருக்குடா. முதல்ல தங்கச்சியை கூட்டிட்டு ஹனிமூன் போய்ட்டு வா, அடிக்கடி ஜென் மோடுக்கு போயிட்டா அப்புறம் பிசினஸை பார்க்க முடியாது” என்றான் கவின்.


அவஸ்தையாக நெற்றியில் அழுத்தி, “சாரிடா ஏதோ நினைப்புல உங்களை கவனிக்கலை. நானும் ஹனிமூனுக்கெல்லாம் பிளான் செஞ்சி தான் வச்சிருந்தேன். எங்க என் பொண்டாட்டி இப்போ தான் மனசு இறங்கி வந்திருக்காள். அதுக்குள்ள கம்பெனி தொடங்கற நாளும் வந்துடுச்சு. சீக்கிரமே இங்கே எல்லாம் செட் செஞ்சு உன் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு ஹனிமூன் போறது தான் அடுத்த வேலை” என்றான் மனைவியை அழுத்தமாக பார்த்தபடி.


“சரிடா நாளைக்கு பார்க்கலாம்” என்று போனை வைத்தான் கவின்.


தாரிகா கணவனை முறைத்துக் கொண்டிருந்தாள், என்ன என்பது போல புருவம் உயர்த்தினான் அவன். “அதுக்கு தான் நான் ரூமுக்கு போறேன்னு சொன்னேன். வேலையை கவனிக்காமல் என்னையே பார்த்திட்டு இருக்க, கவின் அண்ணா என்ன நினைப்பாரு?” என்றாள் கோபத்துடன்.


“அவன் என்ன நினைக்க போறான்? நீ என்னை சரியா கவனிக்காததால நான் காய்ஞ்சு போயிருக்கேன்னு நினைப்பான். நீபாட்டுக்கு ரூமுக்கு போய் நான் வர்றதுக்குள்ள தூங்கிட்டா என்ன பண்றது, அதுக்கு தான் இங்கேயே இருக்க சொன்னேன்” என்றபடி அவளருகில் வந்தவன் அப்படியே அவளை தூக்கிக் கொண்டு அவர்களின் அறைநோக்கி சென்றான்.


மாடியிலிருந்து ஹாலை பார்த்துக் கொண்டிருந்த ஆராத்யாவிற்கு பொறாமைத் தீ உடலெங்கும் பொங்கியது. முதலில் செந்தூரன் தன் காதல் கதையை சொல்லும் போது பெருந்தன்மையாக அவனை வாழ்த்தி அனுப்பி விட்டாள் தான். அதற்கு பிறகு அவன் காதலித்து மணந்த பெண்ணை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலே இருந்தது.


இங்கே வந்த பிறகு செந்தூரனின் அருகாமையிலும் அவனின் ஆளுமையான தோரணையிலும் தன்னை தொலைக்க தொடங்கி விட்டாள். வசிகரமான தோற்றமும், திண்ணிய மார்பும் சற்றும் அவளை சட்டை செய்யாத அவனின் கட்டுபாடும் அவளின் மனதை பித்தம் கொள்ள வைத்துவிட்டது. அவன் அவள் காதலை மறுத்த போது விலகியிருக்க கூடாது, மேலும் அவன் மீது நெருக்கத்தை காட்டி அவனை அடைந்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றியது. தான் விரும்பிய, தான் தவற விட்ட பொம்மை வேறொருவர் கையில் இருக்கும் போது தான், அதன் மீது சில குழந்தைகளுக்கு ஏக்கம் வரும், சில பேருக்கு வெறித்தனமான ஆசை வரும். இரண்டாம் நிலையில் தான் இருந்தாள் ஆராத்யா.


தாரிகாவின் இடத்தில் தான் இருக்க வேண்டும். அவளை அள்ளி அணைத்துக் கொள்வது போல தன்னை அவன் அணைக்க வேண்டும். அதற்கு தாரிகா அவன் வாழ்க்கையில் இருக்க கூடாது. அவனாக அவளை பிரிய மாட்டான். எதாவது செய்து தாரிகாவை தான் அவனை விட்டு பிரியும் படி செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? என்று யோசிக்க தொடங்கிவிட்டாள் ஆராத்யா.


சங்கரபாண்டியனுக்கு போன் செய்தாள், “டாடி….”என்று அழுதாள். “ஆரா என்னாச்சுடா? ஏன் இந்த நேரத்தில் போன் செய்துட்டு அழறே?” என்று பதறினார்.


பதில் சொல்லாமல் அழுதுக் கொண்டிருந்தவளை சங்கரபாண்டியன் பல முறை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தார். “உனக்கென்னடா பிரச்சனை? எதுவானாலும் சொல்லு, நான் உனக்காக செய்து முடிக்கிறேன்” என்றவரிடம், “டாடி எனக்கு மித்ரன் வேணும்” என்றாள்.


ஒரு கணம் மெளனம் மட்டுமே நிலவ, “என்ன டாடி? எனக்காக எதுவேனாலும் செய்வேனு சொன்னே. இப்போ சத்தத்தையே காணோம்?” என்றாள் சிணுங்கலுடன்.


“ஆரா மித்ரனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுடா, மாலையில் நீ போன் செய்து அந்த பெண் தாரிகாவை மட்டம் தட்டி பேசும்போதே நான் சொல்லணும்னு நினைச்சேன். கல்யாணம் ஆனவன் உனக்கெதுக்குடா? இரண்டாந்தாரமா போக போறீயா? அவனோட தாட்ஸ் அன்ட் கல்சர் வேறடா… நீ வளர்ந்த விதம் வேற. கொஞ்ச நாள் நீ அவனை பார்க்காமல் இருந்தாலே போதும் நீ அவனை மறந்துடுவ. இங்கே இருக்கிற வரைக்கும் அவன் நினைப்பு இல்லாமல் தானே இருந்தே. இப்போ அவன் பக்கத்தில இருக்கிறதால் உனக்கு இப்படியெல்லாம் தோணுது. இது ஜஸ்ட் இன்பாக்சுவேசன். காதல் எல்லாம் இல்லைடா. ஆனால் மித்ரனோட காதல் அப்படி இல்ல. அவனோட உறுதியை நேரில் பார்த்ததால சொல்றேன். நீ பேசாமல் இங்கே வந்துடு, உன்னையே நீ ரொம்ப காம்ளிகேட் பண்ணிக்கிறேனு தோணுது” என்றார் சங்கரபாண்டியன் மகளுக்கு புரிய வைத்துவிடும் எண்ணத்தில்.


“டாடி…யூ ஆர் சீட், எனக்காக எதுவானாலும் செய்றேனு சொல்லிட்டு, இப்போ நான் ஸ்டாண்டர்டா இல்லைனு சொல்றியா? அவனை பார்க்காமல் இருந்தால் நான் அவனை மறந்துடுவேனா? ஐ நெவர் பர்கெட் ஹிம். ஐ லவ் ஹிம் சோ மச். நீயே என்னை இப்படி பேசிட்டே இல்ல? ஐ ஹேட் யூ டாடி” என்று ஆங்காரமாக கத்திவிட்டு போனை தூக்கியெறிந்தாள்.


அவள் எறிந்த வேகத்தில் போன் சுக்கல் சுக்கலாக உடைந்து சிதறி விழுந்தது. சங்கரபாண்டியன் பலமுறை அவளுக்கு அழைத்து பார்க்க அதுவோ போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. எப்போதும் அவரின் மகளுக்கு என்ன தேவையோ, அவள் மனதில் நினைக்கும் போதே அதை நிறைவேற்றி தருபவர். ஆனால் மித்ரனை இரண்டாம் முறையாக கேட்டு இருக்கிறாள். அவரால் தான் அவளின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. எப்போதும் எதையும் கேட்டு அடம்பிடிக்கும் ரகம் இல்லை அவள். மகளின் கோபமும், ஐ ஹேட் யூ டாடி என்ற வார்த்தையும் அவர் மனதை கலங்க செய்தது. 


மகளை உடனடியாக பார்த்து அவளை சமாதானம் செய்ய வேண்டும். அவள் சமாதானம் ஆகவில்லை என்றால் அவள் கேட்டதை நிறைவேற்றி தருவதை தவிர வேறு வழியில்லை என்று நினைத்தவர் ஒரு முடிவுக்கு வந்தார். நாளை மறுநாள் இந்தியா போக இருந்த டிரிப்பை நாளையே மாற்ற வேண்டும் என்று டிராவல் ஏஜென்சிக்கு போன் செய்தார். விமான டிக்கெட் கன்பர்ம் ஆனதும் சார்லஸ்க்கும் பயண தேதி மாற்றத்தை தெரிவித்தார். 


மித்ரன் எண்ணுக்கு அழைத்து ஆராத்யாவிடம் பேசலாம் என்று எண்ணியவராக அவனுக்கு அழைத்தார். ஆனால் அவன் தன் அலைபேசியை சைலண்டில் போட்டிருந்தான். அப்போது தான் இந்தியாவில் இரவு வெகுநேரமாகி இருக்கும் என்பதை உணர்ந்து பெருமூச்சுடன் கிளம்புவதற்கு ஆயத்தமானார்.


ஆராத்யாவிற்கு நிச்சயம் தெரியும். தந்தை பதறிக்கொண்டு நாளையே இந்தியா வந்தாலும் வந்து விடுவார். வந்த பிறகு என்ன செய்வது என்று முடிவெடுக்க வேண்டும் என்று எண்ணியவளாக அந்த அறையில் உறங்காமல் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி இருந்தாள்.


இதையெல்லாம் உணராமல் செந்தூரன் தாரிகாவை இறுக்கி அணைத்துக் கொண்டு,  “இந்த மண்டைக்குள்ள என்னடி ஓடிட்டு இருக்கு? கொஞ்ச நாளா உன் முகமே சரியில்லை, என்ன பிரச்சனைனு சொல்லு, அம்மா எதாச்சும் சொன்னாங்களா?” என்றான்.


“ஒரு பிரச்சனையும் இல்லை, அத்தையும் எதுவும் சொல்லலை” என்றாள் தாரிகா, “அப்போ ஏன்டி இப்படி இருக்க?” என்று கேட்டவனிடம், “தெரியல மாமா, ஏதோ மனசுக்கு தப்பா தோணுது, என்ன நடக்க போகுதோனு பயமா இருக்கு” என்றாள் தாரிகா தவிப்புடன்.


“பைத்தியம், நான் இருக்கும் போது எதுவும் நடக்க விடமாட்டேன், நீ தைரியமா இருடி, உன் முகம் டல்லா இருந்தால் என்னால வேலையில் கவனம் செலுத்த முடியலடி” என்றான் அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டு.


கணவன் வருத்தமாக பேசவும் மனது தாங்காமல் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள். “நான் சந்தோஷமா தான் இருக்கேன் மாமா, நீ கவலைபடாதே” என்றவள் அவளாக எம்பி அவன் உதடுகளில் தன் இதழ்களை பொருத்தினாள்.


தொடங்கியது அவளின் இதழ்களாக இருந்தாலும் தொடர்ந்தது அவனின் இதழ்கள் தான். அவளை அப்படியே மஞ்சத்தில் சரித்தவன், அவள் மீது படர்ந்தான். அவள் முகம் முழுவதும் குட்டி குட்டி முத்தங்களை கொடுத்து அவளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவனின் கைகள் தன் சாகங்களை அவள் மீது காட்ட தொடங்கி விட்டிருந்தது. கணவனின் கைகளும் இதழ்களும் செய்யும் மாயத்தில் அவளும் அவனுக்கு இசைந்து கொடுத்தாள். “ஹனி ஹனி” என்று அவள் காதில் மீசை உரோமம் உரசும்படி கூறிக் கொண்டே அவளுக்குள் தேனெடுக்கும் வண்டாய் மாறிபோனான். 


மனதாலும் உடலாலும் ஈருடல் ஓருயிராய் சங்கமித்து மோட்ச வழி தேடிக் கொண்டிருந்தவர்களை பிரித்தே ஆக வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பவளின் எண்ணம் நிறைவேறுமா? 


மறுநாள் செந்தூரன் காலை உணவு முடித்துக் கொண்டு ஆபிசிற்கு கிளம்பிக் கொண்டிருந்தான். “தாரா, நாளைக்கு நடக்க போகும் திறப்புவிழாவிற்கு எல்லாரையும் உன் சார்பா அழைச்சிடு. நான் ஏற்கனவே அத்தை மாமாக்கு சொல்லிட்டேன். அப்பா தாத்தா, காயத்ரி எல்லாரும் இன்னிக்கு நைட்டே வந்திடுவாங்கனு நினைக்கிறேன்” என்றான் செந்தூரன்.


அவள் சரி என்று தலையாட்டவும், “அம்மா நீங்களும் தாராவும் போய் நாளைக்கு என்னென்ன தேவையோ வாங்கி வைச்சிடுங்க, அப்படியே ஆச்சிக்கும் உங்களுக்கும் நல்ல பட்டுபுடவை எடுத்துக்கோங்க. நான் தாரா அக்கவுணட்டுக்கு பணம் போட்டு விடறேன். பங்ஷன் முடிஞ்சதும் நானே அழைச்சிட்டு போய் உங்களுக்கு தேவையானதை வாங்கி தரேன். இப்போதைக்கு தாரா கூட போங்க. நான் வரலைனு எதுவும் தப்பா எடுக்க வேணாம்” என்றான்


“என்ன செந்தூரா, நீ சொல்லணுமா? நான் ஏன் தப்பா எடுத்துக்க போறேன், உனக்கு எவ்வளவு வேலையிருக்குனு நேரில் பார்த்திட்டு தானே இருக்கேன். நீ கிளம்பு நான் தாராவோட போறேன்” என்றார் ஜானகி.


அம்மாவை கனிவுடன் பார்த்தவன் மனைவியிடம் கண்களால் விடை பெற்றுக் கொண்டு கிளம்பவும் ஆராத்யா மாடியிலிருந்து கீழே வரவும் சரியாக இருந்தது. ஜானகியும் தாராவும் அவளை பார்த்து முகம் சுளித்தனர். ஏனெனில் அத்தனை குட்டையாக உடை அணிந்திருந்தாள். இறுக்கமாக இருந்த அந்த  சிங்கிள் பீஸ் உடை அவளின் நெஞ்சத்தில் தொடங்கி தொடை வரை மட்டுமே இருந்தது.


செந்தூரன் அவளை ஒரு கணம் மட்டுமே புருவம் சுருக்கி பார்த்தான். பிறகு அவள் வளர்ந்த கலாச்சாரத்தில் இந்த உடையெல்லாம் மிக சாதாரணம் என்று பெரிதாக சட்டை செய்யாமல் வெளியே காரை நோக்கி நடந்தான். ஆராத்யாவும் அவனுடன் நடந்தபடி தாரிகாவை ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.


இவள் என்ன பைத்தியம் போல நடந்துக் கொள்கிறாள்? இதுவரை என்னிடம் பெரிதாக பேசியது கூட இல்லை. ஆனால் பார்க்கும் போதெல்லாம் ஏதோ எதிரியை பார்ப்பது போல பார்க்கிறாள், அடிக்கடி மட்டம் தட்டுவது போல நடந்துக் கொள்கிறாளே என்று நினைத்தாள் தாரிகா.


ஏதோ மாமாவை ஒன் சைடா லவ் பண்ணி, காதலில் தோத்து போயிருக்காளேனு பார்த்தால் ரொம்ப சீண்டுறாளே என்று யோசனையுடன் ஆராத்யாவை பார்த்தாள். ஆராத்யா வேண்டுமென்றே செந்தூரனை இடித்துக் கொண்டு நடந்து போய் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் காரில் சென்றதும் தாரிகாவும் ஜானகியும் மற்றொரு காரில் ஷாப்பிங் சென்றனர்.


செந்தூரனும் கவினும் மறுநாள் நடக்க இருக்கும் தொடக்க விழாவிற்காக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தனர். ஆராத்யா அவற்றை எல்லாம் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். மாலை நேரம் நெருங்கும் வேளை சங்கரபாண்டியன் செந்தூரனுக்கு அழைத்து தானும் சார்லஸ்ம் இந்தியா வந்து விட்டதாக கூறினார்.


உடனே அவர்களை அழைத்துவர செந்தூரன் ஆராத்யாவை அழைத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு சென்றான். அவர்கள் இருவரும் ஒன்றாக வருவதை பார்த்த சங்கரபாண்டியனுக்கு, இருவரின் ஜோடி பொருத்தமும் நன்றாக இருப்பதாகத்தான் தோன்றியது. ஆணான அவருக்கே செந்தூரனை மிகவும் பிடித்திருக்கும் போது அவரின் மகளுக்கு பிடிக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்று எண்ணிக் கொண்டு மகளின் முகத்தை ஆராய்ந்தார்.


தந்தை கவனிக்கிறார் என்று அறிந்து வேண்டுமென்றே முகத்தில் கடுமையை வரவழைத்திருந்தாள் ஆராத்யா. மகளின் அருகில் வந்தவர் அவளை வாஞ்சையுடன் அணைத்து அவள் காதில், “மித்ரன் இஸ் யுவர்ஸ், ஐ வில் டு எனிதிங் பார் யூ” என்றார் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.


இப்போது தான் ஆராத்யாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல பளிச்சிட்டது. ஆனால் அது செந்தூரனிடம் பீஸ் போக போகும் பல்ப் என்பதை தெரியாமல் தந்தையும் மகளும் மனதிற்குள் திட்டமிட தொடங்கி விட்டனர்.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post