இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 13) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 09-05-2024

Total Views: 20845

உனக்கென்றே உயிர் கொண்டேன் 13

"இது... இது அவள் இல்லை தானே?" என்று தனக்கு முன்பு நின்றிடும் அவனது மொழியை பார்த்துக்கொண்டே வினவிய தமிழ், நொடியில் இரு அறைகளின் கதவையும் எட்டிபார்த்திருந்தான். தாழிடப்பட்டிருக்கிறதா என்று.

"ஹாய் சீனியர்..." பல் வரிசை தெரிய சிரிப்போடு கையசைத்தவளை ஏற்கும் மனநிலையில் தமிழ் இல்லை.

என்ன தான் இருபலார் படிக்கும் கல்லூரியாக இருந்தாலும், ஆண்கள் தங்களுக்கான விடுதியில் வேறு மாதிரியல்லவா! யாரெப்படி என்று கணிக்க முடியாதல்லவா!

"ஹேய் இடியட்... ஆர் யூ மேட்?" என்று அவளின் முகத்திற்கு நேரே கையை நீட்டி கேட்டவன், "ஓ மை காட்" என்று நெற்றியிலே தேய்த்துக் கொண்டான்.

"இப்போ நான் வந்ததில் என்ன சீனியர் பிரச்சினை உங்களுக்கு?" வெண்பா எகிறிக்கொண்டு கேட்டாள்.

"அறிவிருக்காடி?"

தமிழ் இப்படி கேட்பானென்று அதுவும் டி இட்டு... அவள் எதிர்பார்க்கவில்லை.

"இதுக்கும் அறிவுக்கும் என்ன சம்மந்தம் பாஸ்?"

தமிழின் குரலுக்கு இணையான சத்தத்தோடு அவளின் குரலும் உயர்ந்து வந்தது.

"ஹேய்... கத்தாத! எவனும் வந்திடப்போறான்" என்று இடையில் கையை குற்றி தலையை உயர்த்தி ஆயாசமாக காற்றினை இதழ் குவித்து ஊதியவன், அவளை ஆராய்ந்தான்.

"நீ சொல்லும்போது நான் நம்பலடா. பயங்கர சேட்டை பிடிச்ச பொண்ணு தான். காலேஜில் எம்புட்டு அமைதியா இருக்க வெண்பாவா இது?" என்று அவளின் சத்தத்தில் வாய் பிளந்தான் பூபேஷ்.

"எல்லாம் என்கிட்ட மட்டும் தான்" என்ற தமிழ், "எப்படி வந்த நீ?" என வெண்பாவிடம் முறைத்தபடி வினவினான்.

"எல்லார் மாதிரிதான். காலால் நடந்து வந்தேன்." அவள் சொல்லிய பாவனையில் பூபேஷ் சிரித்து விட்டான்.

"நீங்களும் சிரிச்சிடுங்க பாஸ்... ப்ளீஸ்." வெண்பா முகம் சுருக்கி கேட்டதில்... கோபத்தை விட்டு,

"நீ முதலில் கிளம்பு" என்றான்.

"நான் எதுக்கு வந்தன்னே நீங்க கேட்கல?"

"எதுவாயிருந்தாலும் நாளைக்கு கிளாசில் பேசிக்கலாம். இப்போ போ!"

"முடியாது." சட்டமாக அவனது கட்டிலில் சென்று சம்மணமிட்டு அமர்ந்துகொண்டாள்.

தமிழ் பூபேஷை பார்க்க...

"பொறுமையா என்னன்னு பேசி அனுப்பி வைடா" என்ற பூபேஷ் தன்னுடைய கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டான்.

இவ்வளவு நேரமும் இரு அறைக்கும் மத்தியிலிருக்கும் கதவுக்கு அருகில் நின்று தான் பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த கதவினை சாற்றாது, தன்னறைக்குள் வந்த தமிழ், வெண்பாவின் முன் இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தான்.

"திட்டபோறீங்களா?" 

"அப்படியே மண்டையிலே கொட்டனும் போல வருது" என்று கையை கொட்டுவதுபோல் கொண்டு சென்றவன், கீழே இறக்கி... "எந்த தைரியத்தில் இந்த நேரத்தில், நைட் ட்ரெஸ்ஸோட ஒரு பையன் ரூமுக்கு... அதுவும் இத்தனை பில்டிங்ஸ் தாண்டி வந்த நீ?"

"உங்க மேலிருந்த தைரியத்தில் தான்" என்றவள் "இது நைட் ட்ரெஸ் இல்லை. கம்ஃபோர்டபில் வியர்" என்றாள்.

"இது ரொம்ப முக்கியம்" என்ற தமிழ் "யாராவது பார்த்திருந்தால்?" எனக் கேட்டான்.

"நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை பாஸ்." அலட்டிக்கொள்ளாமல் சாதாரணமாகக் கூறினாள்.

அவளது ஒவ்வொரு பேச்சிலும் அவள் தன்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்பதை அவளே அறியாது அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள்.

"கொஞ்சம் கூட பயமில்லையா?"

"ம்ஹூம்... எதாவதுன்னா உங்களை கோர்த்துவிட்டு எஸ்கேப் ஆகிடலாம். உங்களை கேட்க யாருக்கு தைரியமிருக்கு?" அவள் சிரியாது சொல்லிட, அவன் சிரித்துவிட்டான்.

"நல்ல விவரம் தான்."

இருவர் பேசியது பூபேஷுக்கும் கேட்கவே செய்தது.

"வாலு..." பூபேஷ் சிரித்துக்கொண்டான்.

"சரி வா போகலாம்." தமிழ் அவளை எழுப்பிட முயல...

"எனக்கு ஒரு டவுட் கிளியர் பண்ணுங்க போலாம்" என்றாள்.

"ப்ளீஸ் புரிஞ்சிக்கோடா. மேட்ச் முடிஞ்சதும் பசங்க கத்தி கலாட்டா செய்து... அவனவன் ரூம் போயி செட்டில் ஆவதற்குள் ரொம்ப லேட் ஆகிடும்." சிறு குழந்தைக்கு சொல்வது போல் எடுத்துக் கூறினான்.

வெண்பா மறுப்பாக தலையசைத்தாள்.

"ரொம்ப பண்ற நீ?"

"என்ன பண்ணாங்க? ஹான்... நீங்க டவுட் க்ளியர் பண்ணுங்க. நான் போயிட்டே இருப்பேன். நீங்க தான் இப்போ டைம் வேஸ்ட் பண்ணி, டிலே பண்றீங்க!"

"எதே... நானா? சரிதான்!"

வெண்பா எளிதில் செல்ல மாட்டாளென்று அறிந்து தமிழ் தான் இறங்கி வரும்படி ஆனது.

'காலேஜில் எம்புட்டு கெத்து இவனுக்கு... ஒரு சின்னப்பொண்ணுகிட்ட கெஞ்சிட்டு இருக்கான்.' பூபேஷ் மனதின் முணுமுணுப்பு. புன்னகையோடு.

மணியை பார்த்தான் கிட்டத்தட்ட பணிரெண்டை நெருங்கிக்கொண்டிருந்து. ஐந்து நிமிடத்தில் மேட்ச் முடிந்து பசங்க வெளியில் வருவார்கள். இப்போது கிளம்பினாலும் நடுவில் மாட்டிக்கொள்ளும் அபாயம். அதனால் இறங்கி வந்தான்.

"என்ன டவுட்?" முறைப்போடு கேட்டான்.

வெண்பா தான் கொண்டு வந்திருந்த சிறு பையிலிருந்து புத்தகத்தை எடுத்து சந்தேகம் என்னவென்று சொல்ல...

"உண்மையாவே இதை கேட்கத்தான் வந்தியா?" என சந்தேகமாகக் கேட்டான்.

"அப்கோர்ஸ் சீனியர்" என்றவள், "டைமில்ல சொல்லிக் கொடுங்க" என்றாள்.

"நம்ப முடியலையே!" என்ற போதும், மேசையின் மீதிருந்த பேப்பர், பேனாவை எடுத்து, அவள் கேட்டதை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான்.

அப்போதும் "கால் செய்திருக்கலாம்" என்றான்.

"மொபைல் எடுத்து பாருங்க." 

அவள் சொல்லியதில் அலைப்பேசியை அறையிலேயே வைத்துவிட்டு சென்றிருந்தது தெரிந்தது.

"சாரி" என்றவன், சொல்லிக் கொடுப்பதை தொடர்ந்திட அவளின் கவனம் அவன் எழுதிக் கொண்டிருந்ததில் இல்லை. அவன் முகத்தில் நிலைத்து விட்டது.

தமிழ் உணர்ந்தாலும் கண்டுகொள்ளவில்லை. அவளை பத்திரமாக மதிலுக்கு அந்தப்பக்கம் அனுப்பிட வேண்டும். அது மட்டுமே அவனது கண்ணாக இப்போதிருந்தது.

சரியாக மணி பனிரெண்டு என்பதை மேட்ச் முடிந்ததற்கு அடையாளமாக மாணவர்கள் கத்திய கூச்சல் காட்டிக்கொடுக்க,

அந்நொடி வெண்பா தன் பையிலிருந்து சிறிய பிளாஸ்டிக் பாக்ஸ் ஒன்றை எடுத்து திறந்து தமிழின் முன் நீட்டியபடி...

"ஹேப்பி பர்த்டே சீனியர்" என சொல்லியிருந்தாள். முகத்தில் சந்தோஷத்தின் ஆர்பரிப்பு.

தமிழுக்கு வாழ்த்து சொல்ல வந்த பூபேஷ் இதனை பார்த்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டான்.

மனதிற்குள் அத்தனை மகிழ்வு. இதனை தமிழ் வெண்பாவிடம் எதிர்பார்க்கவே இல்லை. இதயத்தில் சில்லென்று பூ பூத்தது.

இருப்பினும் தன்னுடைய உவகையை அவளுக்கு காட்டிடாது...

"இதுக்குத்தான் இத்தனை கலாட்டாவா?" எனக் கேட்டான்.

அவள் கண் சிமிட்டி தோள்களை குலுக்கினாள்.

"இதென்னது?"

வெண்பா நீட்டியிருந்த டிபன் பாக்ஸை பார்த்து கேட்டான்.

அதில் மூன்று அடுக்கில் பிரெட் துண்டுகள், நடுநடுவே ஜாம் தடவி அடுக்கப்பட்டு, அதன் மேல் சாக்கோ பை பேஸ்ட்ரிஸ் இரண்டு வைக்கப்பட்டிருந்தது.

"மதியம் கேன்டினில் வாங்குனது இதுக்குத்தானா?"

அகண்ட விழிகளோடு ஆமென்று தலையசைத்தாள்.

"கேக் வாங்க முடியாதுல... அதான் நானே தின்க் பண்ணி ரெடி பண்ணிட்டேன்" என்றாள்.

சிறியதோ பெரியதோ அவனுக்காக அவள் எடுத்துக்கொண்ட மெனக்கெடல் அதீத இதமளித்தது அவனுள்.

மெல்லியதாக புன்னகைத்தான்.

அவள் விரும்பும் அவனுடைய இதழோர குட்டி புன்னகை.

"நல்லாயிருக்கு." ஒரு பக்கம் தலை சரித்து ரசனையாகக் கூறினாள்.

"என்னது?"

"சொல்ல முடியாது" என்றவள் "கட் பண்ணுங்க சாப்பிடலாம். உள்ள நிறைய ஜாம் வச்சிருக்கேன். பாட்டில் காலி. நாளைக்கு ஒரு ஜாம் பாட்டில் வாங்கிக் கொடுத்திடுங்க. வாட்டர்மெலன் பிளேவர்" என்றவளின், உரிமை, நெருக்கம் யாவும் தமிழுக்கு அத்தனை பிடித்தது.

இவையெல்லாம் நட்பு என்ற அடிப்படையில் அவள் செய்வதாக எண்ணியவனுக்கு அது மட்டுமே சிறு வருத்தம்.

"எப்படி கட் பண்ண?" 

"ரூமில் ஒரு கத்தி வச்சிருக்க மாட்டீங்களா? மெஸ்ஸில் கொடுக்கிற பழமெல்லாம் எப்படி கட் பண்ணி சாப்பிடுறீங்க?" என்று கேட்டுக்கொண்டே அறையை ஆராய்ந்தவள் அங்கிருந்த செல்பில் தெரிந்த கத்தியை எடுத்து தமிழின் கையில் கொடுத்தாள்.

தன்னுடைய பையிலிருந்து சிறு மெழுகுவர்த்தி ஒன்றை தோண்டி துழாவி எடுத்து அதன் மீது வைத்துவிட்டு, "மேட்ச் பாக்ஸ் இல்லையா சீனியர்?" எனக் கேட்டாள்.

தமிழ் இல்லையென்க,

"நிஜமா?" எனக் கேட்டிருந்தாள்.

"ம்ம்ம்..." என்றவள் தன்னுடைய பையிலிருந்தே லைட்டர் எடுத்து பற்ற வைத்தாள்.

"உனக்கெதுக்கு லைட்டர்?" கூர்மையான விழிகளோடு வினவினான்.

"என் பக்கத்து ரூம் பொண்ணு லேப் பர்பஸ்க்காக வைத்திருந்தாள். சுட்டுட்டேன்" என்றாள்.

"பூபேஷ் அண்ணா... அண்ணா..." என்று அவள் கத்திட, "ஹேய்" என்று அவளின் வாயினை கை கொண்டு பொத்தினான்.

அதற்குள் பூபேஷ் அலறி அடித்துக்கொண்டு அவர்களிடம் வந்திருந்தான்.

"நடுவில் ஒரு சுவர் மட்டுந்தான். மெல்லமா கூப்பிட்டாலே கேட்கும். இப்படி கத்தி எங்களை மாட்டிவிட்டு போயிடாதம்மா" என்று பூபேஷ் கையெடுத்துக் கும்பிட்டான்.

தமிழ் அவளின் வாயினை மூடியிருந்ததால்...

"ம்ம்ம்... ம்ம்ம்ம்..." என்ற ஒலியுடன் தலையை வேகமாக உருட்டினாள்.

"டேய் கையை எடுடா." பூபேஷ் தான் தமிழின் கையை தட்டிவிட்டான்.

"ஓகே... ஓகே... கட் பண்ணுங்க பாஸ்." 

"ரொம்ப பெரியா கேக் தான் போ..." பூபேஷ் கிண்டல் செய்திட, தமிழ் அவனின் விலாவிலே குத்தினான்.

"நீங்க சாப்பிட்டு மட்டும் பாருங்க. கேக்கெல்லாம் இதுக்கு முன்னாடி தோத்துப்போயிடும்" என்று தன்னுடைய முன்நெற்றியில் வழிந்த முடி கற்றையை கீழ் உதட்டினால் மேல்நோக்கி ஊதினாள்.

"சாப்பிடுன்னா சாப்பிடப்போறேன். இதுக்கெதுக்குமா நீ ஸ்டண்ட்லாம் பண்ற?" என்ற பூபேஷ், "கட் பண்ணுடா" என்றான்.

மெழுகுவர்த்தியை ஊதி, பேஸ்ட்ரியோடு சேர்த்து பிரெட்டை வெட்டிய தமிழ், முதல் துண்டை வெண்பாவுக்கு ஊட்டி, அடுத்து பூபேஷுக்கு ஊட்டினான். 

பூபேஷ் சுவை நன்றாக இருக்கிறது என்று சொல்ல, அடுத்து இருவரும் தமிழுக்கு வாழ்த்தோடு ஊட்டிவிட்டனர்.

மூவரும் சேர்ந்து பல சுயமிகளும் எடுத்துக்கொண்டனர்.

ஒன்றுமேயில்லை. எவ்வித ஆர்ப்பாட்டமும் கொண்டாட்டமும் இன்றிய மிக எளிதாக அமைந்த பிறந்தநாள் தருணம் மிகவும் ஸ்பெஷலாகிப்போனது தமிழுக்கு. அவனது மொழியால்.

திடீரென தமிழின் கதவு தட்டப்பட...

மூவருமே அதிர்ந்தனர்.

"பசங்க விஷ் பண்ண வந்திருப்பாங்க" என்ற தமிழ், "நீ கூட்டிட்டு உன் ரூமுக்கு போடா" என்றான்.

பூபேஷும், வெண்பாவும் வேகமாக பூபேஷின் அறைக்குள் புகுந்து அவர்கள் பக்கம், பக்க கதவை தாழிட்டுக்கொண்டனர்.

அதற்குள் வெண்பாவின் பையினை எடுத்து அவனது கல்லூரி பைக்கு அடியில் வைத்தவன், பாக்ஸை மூடி மேசை இழுவையில் வைத்ததோடு, லைட்டர், கத்தி, கேண்டில் ஆகியவற்றை செல்பின் மூலையில் கிடத்தினான். கட்டிலில் அவளது ஸ்டோல் கிடக்க, தன் துணிகளுக்கு நடுவில் ஒளித்தான். வேகமாகச் சென்று கதவை திறக்க தாழ்ப்பாளை நீக்கிய பின்னர் தான் கவனித்தான் கதவிற்கு அருகில் வெண்பாவின் காலணி இருப்பதை, பட்டென்று கதவினை கையால் அடைத்தவன், கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட்டு முழுதாக திறந்து அறையின் வாயிலில் யாரும் உள்ளே செல்ல முடியாது மறித்தபடி நின்றுகொண்டான்.

ஒரு படையே அங்கு நின்றிருந்தது.

பூபேஷ் அறையில் நின்றிருந்த வெண்பா,

"இப்போ மாட்டினால் எப்படியிருக்கும்?" என்று ஆர்வமாகக் கேட்டிட...

"மூணு பேருக்கும் சங்கு தான்" என்று அவன் கழுத்தை வெட்டுவதுபோல் சைகை செய்தான்.

அதில் வெண்பா சத்தமின்றி சிரித்திட...

அவர்கள் எப்போது செல்வார்கள் என்றிருந்தது பூபேஷுக்கு.

அனைவரும் வாழ்த்து சொல்லிய கையோடு ட்ரீட் கேட்டிட... அவர்களை சிரித்து சமாளித்து அனுப்புவதற்குள் தமிழுக்கு போதும் போதும் என்றானது.

இறுதியாக சென்ற ஒருவன்,

"எங்கே உன் ஆருயிரை உடன் காணும்?" என்று கேட்டு அறைக்குள் எட்டிப்பார்க்க...

"பூபேஷ் தூங்கிட்டான்" என்றான் தமிழ்.

"எங்களை ரூம்குள்ளே விடல?" அவன் சந்தேகமாகக் கேட்டிட... என்ன சொல்வதென்று தெரியாது முழித்த தமிழை அலைப்பேசி வாயிலாக காப்பாத்தியிருந்தாள் பூர்வி.

"வீட்டிலிருந்து போன்" என்ற தமிழ், அவன் சென்ற பின்னரே கதவினை சாற்றி தாழிட்டான்.

"தேன்க்ஸ் பூர்வி. மார்னிங் கால் பன்றேன்." பூர்வி வாழ்த்து சொல்லியதும் வைத்திருந்தான்.

"அவங்கலாம் போயாச்சு."

தமிழ் சொல்லியதும் பெரும் மூச்சோடு கதவினை திறந்தான் பூபேஷ்.

"சரி நீ கிளம்பு போகலாம்" என்று தமிழ் சொல்லிட,

"என் டவுட்?" என்றாள் வெண்பா.

"உண்மையாவே உன்னை கொட்டப்போறேன் பாரு" என்ற தமிழ், தான் எழுதிய பேப்பரை எடுத்து அவளின் கையில் கொடுத்து "விளக்கமா எழுதியிருக்கேன். புரியலன்னா கால் பண்ணு" என்றான்.

அவளது பையினை எடுத்து கையில் கொடுத்தான்.

"அந்த எண்ட் வரை போயிட்டு வா மச்சான். யாரும் பசங்க இருக்காங்களா பார்த்திட்டு வா" என்று பூபேஷை அனுப்பி வைத்தான்.

வெண்பா தன் பையினை குடைய,

"இன்னும் என்ன வச்சிருக்க" எனக் கேட்டுக்கொண்டே கட்டிலுக்கு கீழே குனிந்து அவளின் காலணியை எடுத்துக் கொடுத்தவன், அவளின் பேண்ட்டில் முட்டி பகுதியில் சிறு துளி ரத்தக்கறை இருப்பதை கண்டு பதறியவனாக...

"ஹேய் பிளட்" என்றான்.

"காம்பவுண்ட் சுவரில் கார்பேஜ் ஹோலில் நுழைந்து வரும்போது அப்ரசியன் (abrasion சிராய்ப்பு) ஆகிருச்சு நினைக்கிறேன்" என்றாள்.

துணியில் ரத்தத்தின் ஈரம் படர்ந்திருப்பதால் காயம் பெரியதோ என நினைத்தவனுக்கு அதனை பார்க்க வேண்டும் போலிருந்தது.

"எரியுதா?"

"லைட்டா" என்றவள், "ரூமுக்கு போய் மருந்து போட்டுப்பேன்" என்றாள்.

"நான் பார்க்கட்டுமா?" மனம் கேளாது அவள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டுமென கேட்டுவிட்டான்.

தமிழ் அவ்வாறு கேட்டதும், அவள் தடுமாறவோ தயங்கவோ இல்லை. அவனது முகத்தில் தெரிந்த கலக்கம்... அதனை போக்க வேண்டுமென நினைத்தாள்.

இருக்கையில் அமர்ந்தவள், பேண்ட்டினை சற்று மேலுயர்த்தி காட்டினாள். முட்டிக்கு கீழாகவே சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது.

"ரெண்டு இன்ச் தான் சீனியர். வலிக்கக்கூட இல்லை. ஓகே தானே நீங்க" என்று கேட்டபடி துணியை கீழிறக்கினாள்.

வெண்பா காட்டுவாளென்று தமிழ் நினைக்கவில்லை. மறுப்பாள் அல்லது முறைப்பாளென்றே எண்ணினான்.

ஆனால் தான் கேட்டதும் தன்னை தவறாக நினையாது அவள் செய்தது அவள் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் ஆழத்தை தமிழுக்கு உணர்த்தியது. அதில் அவனுக்கு சற்று கர்வமாகவே இருந்தது.

"என்கிட்டவே ஆயின்மெண்ட் இருக்கு."

தமிழ் சொல்லியதற்கு வெண்பா பதில் சொல்வதற்கு முன்பு, பூபேஷ் வந்திருந்தான்.

"கீழவும் பார்த்திட்டு வந்துட்டேன் மச்சான். எல்லா ரூம் லைட்டும் ஆஃப். இப்போ போனால் சேஃப்" என்றான் பூபேஷ்.

"வா" என்று தமிழ் கை நீட்டி அழைக்க...

அவன் நீட்டிய கையில் வாட்ச் ஒன்றை கட்டினாள் வெண்பா.

"ஒன்ஸ் அகெய்ன் ஹேப்பி" என்று ஆரம்பித்தவள், நெற்றியில் தட்டிக்கொண்டவளாக, "நம்ம தமிழ்மொழியில் சொல்லலைன்னா எப்படி?" எனக்கேட்டு "பிறந்தநாள் வாழ்த்துகள் சீனியர்" என்றாள்.

அவள் சொல்லிய தமிழ்மொழி அதீத அழுத்தத்தோடு ஒலித்ததோ? அப்படித்தான் தோன்றியது தமிழுக்கு.

வாட்சினை பார்த்த தமிழ், "நல்லாயிருக்கு" என்றான்.

"இதில் ஒரு ஸ்பெஷல் இருக்கு. என்னன்னு கண்டுபிடிங்க?" வெண்பா தான் கட்டிவிட்ட வாட்சினைக் குறித்துக் கூறினாள்.

"டேய் முதலில் அவளை விட்டுட்டு வாடா" என்றான் பூபேஷ்.

நேரம் செல்ல செல்ல அவனுள் ஒருவித பயம். ஒரு மணியளவில் வார்டன் ரவுண்ட்ஸ் வருவார்.

"நீங்க இருங்க. நான் போயிடுவேன்" என்று வெண்பா மறுக்க மறுக்க தானே அழைத்துச் சென்றான் தமிழ்.

"என் பர்த்டே எப்படித் தெரியும்? பூபேஷ் சொன்னானா?"

"இல்லையே?"

"அப்புறம்?"

"நேரம் வரும் சொல்றேன்" என்றாள்.

அவள் இப்போது சொல்லப்போவதில்லை என அதற்குமேல் அவனும் கேட்டுக்கொள்ளவில்லை.

மதில் சுவர் அருகில் வந்ததும்,

"இனி இந்த மாதிரி எப்பவும் பண்ணக்கூடாது மொழி" என்றான். அதீத அடர்த்தியாய்.

ஒற்றை கண்ணடித்தவள் சுவற்றின் ஓட்டை வழியாக நுழைந்து அந்த பக்கம் சென்றிருந்தாள்.

"ரூமுக்கு போயிட்டு கால் பண்ணு." அவன் சொல்லிட, தலையசைத்து ஓடி மறைந்தாள்.

தனதறைக்குள் வந்த தமிழுக்கு அதுவரை வெளியில் காட்டிக்கொள்ளாது மறைத்திருந்த பயம் எங்கோ ஓடியது.

"அராத்து..." சன்னமாக சிரித்துக் கொண்டான்.

தமிழின் கையை தூக்கி பார்த்த தமிழ், "அப்படியென்ன இதில் ஸ்பெஷல்?" என்று வாட்சினை ஆராய்ந்தான்.

"இதென்னடா நெம்பர்ஸ்க்கு பதிலா ஏதோ முறுக்கு சுட்டு வச்சிருக்காங்க?" எனக்கேட்டான் பூபேஷ்.

"அதுதான் ஸ்பெஷல்" என்ற தமிழ், "தமிழ்மொழியில் எண்கள்" என்றான்.

கைக்கடிகாரத்தில் ஒன்று முதல் பனிரெண்டு வரையிலான எண்கள், அதற்குரிய தமிழ் எழுத்துக்களால் நிரப்பப்பட்டு இருந்தது.

"இதனால் அவள் சொல்லவருவது என்னவோ?" 

"தமிழும் மொழியும் ஒன்னு. நீ போடா பன்னு" என்ற தமிழ் நீண்ட சிரிப்போடு படுத்துவிட்டான்.

இப்போதும் அந்தநாள் தமிழ் மற்றும் வெண்பா மனதில் பசுமையாய் நீங்காது நிறைந்திருந்தது.

இன்றும் அவள் கொடுத்த வாட்சினை அவன் கட்டியிருந்தான்.

ஒருமுறை வாட்சினை வருடிய தமிழ்,

அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் கவனம் வைத்தான். தமிழ் முடித்து நிமிர்ந்து அலைப்பேசியின் திரை நோக்க வெண்பா உறங்கியிருந்தாள்.

திரை முழுக்க வெண்பாவின் விழிகள் மூடிய முகம் மட்டும் ஸூம் செய்தவாறு அழகோவியமாக நிறைந்திருந்தது.

ஒரு கை விரல்களால் அவளின் முகம் சுற்றி... விரல்களை ஒன்றாக இணைத்து குவித்தபடி தன் உதட்டிற்கு அருகில் கொண்டு சென்றவன்...

"ம்ஹூம்" என்று விலக்கிக்கொண்டான். சிறு வெட்கச் சிரிப்போடு.

அலைப்பேசியை கையில் எடுத்து மார்போடு அழுத்தி விலக்கி, அழைப்பை துண்டிக்க முயன்றவன், என்ன நினைத்தானோ, நேரத்தை பார்த்தான். மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது.

"இன்னும் இரண்டு மணி நேரத்தில் விழித்திடுவாள்" என்று எண்ணியவன், அலைப்பேசியில் தன் முகம் மட்டும் தெரியுமாறு வைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான்.

தன்னவளின் முகம் ரசித்திருந்தவனாக தன்னையறியாது உறங்கிப்போனான்.










    


Leave a comment


Comments


Related Post