இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 10 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 09-05-2024

Total Views: 9694

அத்தியாயம் - 10

நவக்கிரகங்களில் ஒருவனான சனீஸ்வரனின் பெயரைக் கேட்டாலே ஒருவித பயம்தான் எல்லோருக்கும்‌‌. சூரியதேவனின் மகன்கள்தான் இந்த சனீஸ்வரனும்,இயமனும். இயமன் மரணதேவனாக பொறுப்பேற்றிருக்க,  சனியோ அவரவர் செய்த பாவங்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டுமெனவே ஈசுவரனை வேண்டி வரம் இருந்து இந்த நிலைக்கு வந்திருந்தான். அதுவும் தந்தைக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென்ற காரணத்துக்காகவே உடம்பை வருத்தி சிவனின் மீது கவனம் செலுத்தி அவன் ஈசுவரன் பட்டமே தாங்குமளவிற்கு வந்திருக்கின்றான்.
அவனைத் தேடித்தான் இப்போது சித்திரகுப்தன் வந்திருந்தான்.

"அடடே வா சித்திரகுப்தா.. என் சகோதரன் நலமாக இருக்கின்றானா? ஏது இவ்வளவு தூரம்? எமலோகத்தில் ஏதாவது சிக்கலா?" 

"ஆம் சனீஸ்வரா"

"என்ன சிக்கல்.. தமையன் இருப்பானே. அவனாலேயே அதைத் தீர்க்க இயலவில்லையா.." ஐயத்துடன் வினவ,

"அது சனீஸ்வரா, சிக்கல் உண்டானதே பிரபுவால் தான்" சித்திரகுப்தன் தடுமாறியபடி பதில் சொன்னான்.

"இயமனால் சிக்கலா.. விளையாடதே சித்திரகுப்தா"

"தங்களைப் போன்று தான் முதலில் நானும் நினைத்தேன் ஆனால் பிரபு வினயமாக அனைத்தையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார்"

"நீ உன் பிரபுவின் ப்ரியத்துக்கு உரியவனாகிற்றே. நீயே சிக்கலை எளிதாக தீர்த்துவிடலாமே"

"முடியவில்லை பிரபு. பிரபு இம்முறை தீர்மானத்தோடு இருக்கின்றார்"

"இயமன் முடிவு அதென்றால் அதை மாற்ற இயலாதுதான்"

"இல்லை சனீஸ்வரா தாங்கள் அவ்வாறு கூறக் கூடாது. தாங்கள்தான் இந்த சிக்கலை தீர்த்து வைக்க வேண்டும். தாங்கள் எடுத்துச் சொன்னால் பிரபு கேட்பார்"

"சிக்கல் என்னவென்று சொல் சித்திரகுப்தா. பிறகு பார்க்கலாம். நான் சொன்னால் தமையன் கேட்கிறானா இல்லையா என்று"

"பிரபு பூலோகத்தில் வாழும் ஒரு பெண்ணை விரும்புகிறார்"

"தமையனா? நம்ப முடியவில்லையே. அவனுக்கு ஏது இதற்கு நேரம்"

"இப்போது கடமையை மறந்துவிட்டார் அவர்"

"ஓ.. அந்த பெண்ணை விரும்புவதால் உனக்கென்ன பிரச்சனை சித்திரகுப்தா"

"அதில் அவர் கடமையை மறந்துவிட்டார். மேலும் அதிகாரத்தினை தவறான வழியிலும் பயன்படுத்தியிருக்கிறார்"

"தெளிவாகத்தான் சொல்லேன் சித்திரகுப்தா"

"அப்பெண்ணின் ஆயுட்காலம் எப்போதோ முடிந்துவிட்டது சனீஸ்வரா‌. ஆனால் பிரபு தனது அதிகாரத்தினை பயன்படுத்தி அவளது கணக்கினை பிரம்மச்சுவடியிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்"

"இது தவறென்று அவனுக்குத் தெரியாதா? அவனிடம் ஈசன் மாபெரும் பொறுப்பினை ஒப்படைத்திருந்தார். ஆனால் அவன் இப்படியா பொறுப்பில்லாமல் இருக்கிறான். புத்தி கித்தி பேதலித்துவிட்டதா! பெண் மேல் மனம் திரும்பினால் என்ன நடக்கும் என்று அவன் கண்முன் ஆயிரம் உதாரணங்கள் இருக்க அதையெல்லாம் கண்டும் மனதினை அலைபாய விடுவது சரியே இல்லை. மரணத்தின் தேவனாய் இருந்துக் கொண்டு இப்படிச் செய்கிறானா அவன். அவனை உண்டு இல்லையென்றாக்குகிறேன். அந்தளவுக்கு காதல் அவன் கண்ணை மறைத்துவிட்டதா?" சனீஸ்வரன் சினத்தில் சிம்மாசனத்தில் இருந்து எழுந்தே விட்டான்.

"ஈசன் வேறு தவத்தில் இருப்பதால் இன்னும் பிரச்சினை பெரிதாகவில்லை. அதற்குள் சரிபண்ணி விடலாம் என்று பார்த்தால் பிரபு முடியாதென அடம் பிடிக்கிறார்"

"இப்போதவன் எங்கிருக்கின்றான்" கடுங்கோபம் பேச்சில் தெறித்தது.

"திருக்கடையூர். அதே அவளது ஊர்"

"ஓ.. திருக்கடையூர்.. அந்த ஊரென தெரிந்தும் அவன் மனம் மாறவில்லை என்றால் அவளது பிம்பம் மட்டுமே அங்கிருக்கிறதென்று புரிகின்றது. சரி சித்திரகுப்தா.. நான் அந்த மூடனிடம் சென்று பேசுகிறேன்"

"சனீஸ்வரா!  இருவருமே நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்கள். இருவருமே ஈசனின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் பெற்றவர்கள். இடையில் பிரபு மனம் தடம்மாறியதென்னவோ உண்மைதான். ஆனால், தாங்கள் சொன்னால் அவர் நிதர்சனம் புரிந்து மனதினை மாற்றிக் கொள்வார். அவள் உயிர் பிரிய வேண்டும். அப்போதுதான் பிரம்மசுவடியில் கணக்கு நேராகும்"

"புரிகிறது சித்திரகுப்தா. நீயாவது உன் பிரபு போலல்லாமல் பொறுப்பாக இருக்கிறாய் நல்லது. சென்று வா.. நான் திருக்கடையூர் செல்கிறேன்"

"மகிழ்ச்சி சனீஸ்வரா" என நிம்மதியுடன் அவன் செல்ல மர்மப் புன்னகையுடன் பார்த்தவன் அங்கிருந்து புறப்பட்டான்.

------------------

அடித்துப் போட்டது போல் உறங்கியவள் விழித்தெழும் போது இருட்டியிருந்தது. எழுந்ததுமே தேடியது அந்தகனைத்தான். எனினும் அவன் பார்வைக்குப் புலப்படவில்லை.

"அந்தகா! எங்கிருக்கிறாய்" ஏமாற்றம் தொண்டையை கவ்வ அவள் பார்வையை சுழற்றினாள். எங்கும் அவன் தென்படவே இல்லை.

அறைக்கதவு திறக்கும் சத்தத்தில் அவள் ஆர்வமாய் பார்க்க அங்கே வந்தது திரு. சப்பென்று ஆனது அவளுக்கு. 

அவள் கண்களில் முதலில் தென்பட்ட ஆர்வம் அவனை வெகுவாக அசைக்க ஆசையோடு "அஞ்சும்மா" என ஓடி வந்தான்.

"இப்போ பரவாயில்லையா அஞ்சு"

"ம்ம்"

"உன் உடம்புக்கு ஒன்னுமே இல்லைன்னு வைத்தியர் சொல்லிட்டார். நாளைக்கு வீட்டுக்குப் போயிடலாம்"

"ம்ம் சரி.."

"இந்த சரிக்காகத்தான் நானும் ரொம்ப நாளா காத்துட்டு இருந்தேன்" அவன் கல்யாணத்துக்கு சரி சொன்னதை மனதில் வைத்து பேச,

"என்ன?" புரியாமல் விழித்தாள்.

"ஒன்னும் இல்லை. நீ சாப்பிடுறயா?"

"எனக்கு வேண்டாம்" எழுந்துக் கொண்டாள்.

"என்ன அஞ்சும்மா?"

"உள்ளயே இருக்குறது ஒருமாதிரியா இருக்கு. நான் வெளிய கொஞ்ச நேரம் நடந்துட்டு வர்றேன்"

"நானும் வர்றேன் அஞ்சு"

"இல்லை வேண்டாம். எனக்குத் தனியா இருக்கணும் போல இருக்கு"

"சரி போயிட்டு வா" என அவன் ஒதுங்கிக் கொள்ள, கனவு தான் போல.. கனவுலயா அவ்வளவு பேசுனோம்.‌ அவன் வருடல் பொய்யில்லையே.. அய்யோ பையித்தியம் பிடிச்சுடும் போல இருக்கே..  நீ இல்லாதது ஒரு மாதிரியா இருக்கு. இப்படி புலம்ப விடுறதுக்குத்தான் நீ வந்தயா. கந்தர்வன்னு வேற சொன்ன.. அப்படின்னா மாயம் மந்திரம் இதெல்லாம் உனக்குத் தெரியும். நீ சும்மா என் மனசை குழப்பி வேடிக்கைப் பார்த்தயா.. அடேய் அந்தகா எங்கேயடா இருக்க.. போ போன்னு சொன்னேன்னு போயிட்டயா.." அவள் தலையை அழுந்தப் பிடித்துக் கொண்டு நடக்க மருத்துவமனைக்கு எதிரே இருந்த கடையில் இருந்து பி.பி. ஶ்ரீ நிவாஸ் குரலில்

நீ போகும் இடமெல்லாம்
நானும் வருவேன் போ போ போ
நீ போகும் இடமெல்லாம்
நானும் வருவேன் போ போ போ
போ போ போ…….ஓஒ…..ஓஒ என ஒலிக்க ஆரம்பித்தது.

பாடலில் சற்று நேரம் குழப்பத்தினை தவிர்த்திருந்தவளின் பின்பக்கம் "என்னைத் தேடுகிறாயா? நானுன் நினைவில் இருக்கின்றேனா?" அந்தகனின் குரல் கேட்டவுடன் முகம் விகசிக்க "அந்தகா" எனத் திரும்பினாள்.

"அஞ்சனா!"

"எங்க போயிட்ட என்னை விட்டுட்டு"

"எங்கேயும் போகவில்லை. நான் எப்போதும் உன்னுடன் தான் இருப்பேன்.. "

"நான் தேடுறப்போ காணோமே" மீண்டும் பச்சைப்பிள்ளையாய் ஆனாள் அவள். 

"உன் அழகு மச்சான் வந்தான். அதுதான் சற்று நேரம் வெளியே உலவலாம் என வந்தேன்"

"அவன் கண்ணுக்கு நீ தெரிய மாட்டயா என்ன?"

"தெரிய மாட்டேன்"

"பிறகெதுக்கு நீ வெளிய வந்த அங்கேயே இருக்கலாம்ல"

"எனக்கு மனம் உண்டு வயிறும் உண்டு"

"வயிறா? என்ன சொல்லுற அந்தகா"

"உன் அழகு மச்சான் காதல் பார்வையோடு உன்னை எதிர் கொள்ளும் தருணங்களில் எல்லாம் என் அடிவயிறு பற்றி எரிகிறது. அந்த எரிச்சலில் அவனை அப்படியே தூக்கி கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டுவிடலாம் என்ற எண்ணம் தான் தோன்றுகிறது"

"இது எமலோகத்தில கொடுக்குற தண்டனை தானே. அப்போ நீ யாரு? எமனா" பச்சைப் பிள்ளை உஷாராகிவிட,

"அஞ்சனா! கந்தவர்னுக்கு மேலோகத்தில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் தெரியும் அல்லவா. ஆகையால் அவ்வாறு உரைத்தேன்.  அதற்கேன் என்னை இயமன் என்று விளிக்கின்றாய்"

"எமன் மேல எனக்கு அளவுகடந்த வெறுப்பு.."

"வெறுப்பு... ஓஹ்.. ஒருவேளை நான் இயமனா இருந்தால் என்ன செய்வாய்"

"உனக்கும் மரணத்திற்கு ஒப்பான வலின்னா என்னென்னு காட்டுவேன்" சொல்லியவள் விறுவிறுவென நடந்து அவனைவிட்டு தூரமாய் சென்றுவிட்டாள். இந்த தூரம் அவனை திடுக்கிட வைத்தது. எமன் பேச்சை எடுத்ததற்கே இவ்வளவு தூரம் சென்றுவிட்டாள் என்றால் தான் இயமன் என்று சொன்னால் என்ன செய்வாள்.. ம்ஹூம் எப்போதும் அவளுக்கந்த உண்மை தெரியக் கூடாது என முடிவு செய்தவன் வேகமாய் அவளை நோக்கி வந்தான். 

கருவிழிகளில் இருந்து உருண்டு திரண்டு கண்ணீர் துளிகள் வெளிவந்துக் கொண்டிருக்க துடைக்கும் எண்ணம் சிறிதும் இல்லாமல் அவள் ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்தாள்.

"அஞ்சனா.. ப்ச் எதற்கிந்த அழுகை"

"எனக்கு எங்க ஐயாவை பார்க்கணும் போல இருக்கு"

"இறந்தவரை பார்ப்பது என்பது இயலாத காரியம்"

மௌனமாக இருந்தாள்.

இயமன் என்னென்னவோ பேசினான். அவளை சகஜ நிலைக்கு கொண்டுவரவே இயலவில்லை. அவளது கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்துக் கொண்டே இருக்க அதை நிறுத்தும் வழி அவனுக்குத் தெரியவே இல்லை. 

கோபமாகவும் பேசினான் தன்மையாகவும் பேசிப் பார்த்தான். எதற்கும் அவள் மசியவே இல்லை. 

அவளது முகத்தினை பற்றியவன் அவள் எல்லாவற்றையும் மறந்து போகும்படி கண்களோடு கண்களை கலக்கவிட்டான். அவன் கண்களை கண்டதும் சகலமும் மறந்து போய்விட, கண்ணீர் நின்று போனது.

அவளது கை அவன் இடுப்பை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள இயமன் சிலிர்த்தது அவளாலும் உணர முடிந்தது. இப்படியான உணர்வுகள் எதுவும் இருவருக்கும் அறிமுகம் இல்லை. ஆதலாலேயே அதன் கணத்தினை இருவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

காதல் இத்தனை இனிமையானாதா என அவனும் இப்படித்தான் இருக்குமா? என அவளும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் படித்துக் கொண்டிருந்தனர்.

இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளி குறைய ஆரம்பிக்க இதழ்கள் நெருங்கி தொட்டிருந்தது. அழுத்தமாய் படிந்த இதழ்கள் பலவித பூகம்பங்களை இருவரது தேகத்திலும் கிளப்பியிருந்தது. மெதுவாய் அவனது இதழ்கள் கன்னத்திலும் தடம் பதிக்க அங்கே கண்ணீரின் பிசுபிசுப்பு அவனது இதழ்களில் ஓட்டிக் கொண்டு இன்னும் அதீத உணர்வின் பிடியில் அவனை ஆட்டிப் படைத்தது. உயிரை பறிக்கும் வித்தை மட்டுமே அறிந்தவன் உயிரை குடிக்கும் விந்தையை அறிந்தான். இதற்கு மேல் சென்றால் விபரீதம் ஆகும் என்னும் நிலையில் சற்று தூரத்தில் இருந்து எருமைமாடு கத்தியதில் "அய்யோ எமன்" என்று பதறி அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு உள்ளே ஓடியிருந்தாள்.

ஆக்ரமித்திருந்த தாபமெல்லாம் அலைக்கழிக்க தொடங்கியது. தேகத்தினை சமன் செய்ய இயமன் செய்த முயற்சி எல்லாம் வீணென ஆனது. பரவச ஊற்றொன்று கிளம்பி அவனை எடையில்லாதவனாய் மாற்றியிருந்தது. 

இப்போது மீண்டும் எருமையின் அலறல்.

"இவனை..." என திரும்பியவன் சத்தம் வந்த திக்கினைப் பார்க்க அவனது வாகனம்தான் நின்றிருந்தது.

"அடேய்.. உனக்கென்னடா நான் பாவம் செய்தேன். எதற்கடா நல்ல நேரத்தில் கத்தித் தொலைந்தாய். பார்... உன்னால் அவள் பயத்தில் ஓடியே விட்டாள்"

"பிரபு! மன்னியுங்கள்"

"இருக்கும் கோபத்திற்கு உன்னை ஏதாவது செய்வதற்குள் ஓடிவிடு இங்கிருந்து"

"பிரபு! நான் வேண்டுமென்று இடையூறு செய்யவில்லை. செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்"

"என்ன கூறுகிறாய்?"

"தாங்கள் சற்று பின்னால் பாருங்கள்"

திரும்பியவன் அங்கிருந்த தனது தமயனைப் பார்த்து "அடடே சனி.. நீயெங்கேயடா இங்கே?" என்றான் ஆச்சர்யத்தோடு.

"அதைத்தான் கேட்கிறேன் தமையனே. தாங்கள் இங்கே என்ன செய்கின்றீர்கள்? "

"இவ்வளவு தூரம் பிரயாணப்பட்டு வந்திருப்பவனுக்கு நான் எதற்காக இங்கிருக்கின்றேன் என்று தெரியாதா என்ன?"

"அறிவேன் தமையனே.." இப்போது சனியின் முகத்தில் சிரிப்பு மறைந்தது.

"மாபெரும் பிழை செய்திருக்கின்றீர் தமையனே. இது மன்னிக்க முடியாத குற்றம். தவறுக்கான தண்டனை நிச்சயம் உண்டு"

"ஏற்றுக் கொள்கிறேன் எத்தகைய தண்டனையாயினும். ஆனால், இவளை விட்டு விலகவேண்டும் என்பதைத் தவிர"

"யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர் என்று நினைவில் வைத்துப் பேசுங்கள் தமையனே"

"அதை நீயும் நினைவில் நிறுத்திக் கொள் சனி"

"நான் தந்தை தவறிழைத்ததையே ஏற்றுக் கொள்ள இயலாது சிவனிடம் வரம் வாங்கி அவருக்கான தண்டனை அளித்தவன்"

"அந்த ஆணவத்தில் என்னிடம் மோதுகின்றாயா சனி. நினைவில் நிறுத்து நான் மரணதேவன்"

"நான் சனீஸ்வரன்.. ஈஸ்வரப் பட்டம் வாங்கியவன். தமையன் தவறான வழியில் செல்கையில் தடுக்க வேண்டும் என்று வந்திருக்கிறேன்"

"தடுக்குமளவுக்கு உன் தமையன் தவறிழைக்கவில்லை. எல்லாம் எமக்குத் தெரியும். நீ வழிவிட்டு ஒதுங்கி நில் சனி"

"என்னையே உதாசீனப்படுத்துகிறாயா இயமா. இனி தமையன் தம்பி என்ற ரீதியில் பேச்சு வார்த்தை நடத்தப் போவதில்லை. தவறு செய்பவனை பிடித்து தண்டனை தரும் சனீஸ்வரனாய் கேட்கிறேன். இறுதியான உன் முடிவென்ன?" எரிமலையாய் சினத்தினைக் கக்கிக் கொண்டு சனி பேச இயமன் முகம் மாறாமல் அவன் முன் நின்றான்.. அவனது பதில் என்னவாக இருக்கும்?...


காதலாசை யாரை விட்டது..?



Leave a comment


Comments


Related Post