இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -31 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 09-05-2024

Total Views: 26204

பார்க்கும் அனைவருக்கும் நந்தன் என்றாலே பயம். ஏன் இவ்வளவு பேசும் கிருஷ்ணம்மாள் கூட நந்தனைப் பார்த்து பயப்படுவார்.

தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் தான் தன் படிப்பை இளங்கலை பொறியியலுடன் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான், பல சூழ்நிலை அவனை தொழிலில் ஈடுபட செய்யவில்லை.

இப்போது விஜய நந்தன் அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் என்ற பெரிய பதவியில் இருக்கிறான். தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை எந்த அளவிற்கு இருந்ததோ, அதைவிட பல மடங்கு ஆசை இந்த காவல் பதவியின் மீது உருவாகி இருந்ததோ, இல்லை அவனே உருவாக்கிக் கொண்டானோ,  என்னவோ ஆனால் காவல்பணியில் உயிராக இருந்தான்.

ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை ஆசைப்பட்டதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் நந்தன் தான்.

நந்தன் போலீஸ் என்று தெரியும் இந்த அளவிற்கு பெரிய போலீசாக இருப்பான் என்று நிலா எதிர்பார்க்கவே இல்லை, ஏதாவது கான்டஸ்டிபிள் அல்லது ஏட்டு  இதுபோன்ற சாதாரண போலீசாக இருப்பான் என்று தான் நினைத்தாள். யுகியிடம் கூட நந்தனைப் பற்றி எதுவும் விசாரித்ததில்லை அப்படி விசாரித்தால் மீண்டும் அவர்களுக்குள் சண்டை வந்துவிடுமோ என்ற பயம்.

நந்தனை காவல் உதவி ஆய்வாளராக யோசித்துக் கூட பார்க்கவில்லை,  ஏற்கனவே நந்தனைக் கண்டு  நடுங்குவாள் இதில் பெரிய ஆபிசர் என்றால் சொல்லவா வேண்டும். அவனிடம் தனியாக மாட்டவே கூடாது என்று கடவுளிடம் ஆயிரம் வேண்டுதல் வைத்தாள்.

"கருமாரி அம்மா தாயே, ஆஞ்சநேயா, ஐயப்பா எல்லோரும் சேர்ந்து இவன்கிட்ட இருந்து என்னைய காப்பாத்துங்க. தனியா சிக்காம காப்பாத்திட்டீங்கன்னா போதும் ஒவ்வொருத்தருக்கும் நூறு தேங்காய் உடைச்சி யுகி உங்க கோவிலுக்கெல்லாம் நடந்தே வந்து மொட்டை அடிப்பான்.” என்று வேண்டுதல் வைக்க, அருகில் நின்ற யுகியோ அவளது கையை கிள்ளி,

“என்னைய எதுக்கு பூனை கோர்த்து விடற..? மொட்டை அடிச்சா நான் நல்லா இருக்க மாட்டேன்டி.”

“டி சொன்ன பல்லை உடைப்பேன்.”

“நீ பேச்சை மாத்தாத..”

“எனக்காக உயிரையே கொடுப்பேன்னு டைலாக் விடுவ, உசுரக் கொடுக்கறவன் --- கொடுக்க மாட்டியா?”

“அதுக்குன்னு மூனு சாமிக்கு நேந்துகிட்டதுலாம் டூ மச்.. மீ பாவம்” என்றவன் உள்ளுக்குள் அவன் தனியாக வேண்டுதல் வைத்தான்,

'கடவுளே இவ அவன் கையில் ஒருதடவை மட்டும் சிக்கிடட்டும் அப்புறம் என்னைய விட்டுருவா, இல்லனா அங்கப் போய் அதைப் பண்ணு இதைப் பண்ணுனு உயிரை எடுத்துடுவா.' என்று வேண்ட..

அந்த இடமே நிசப்தமாக இருக்கும் போது இவர்கள் பேச்சு மட்டும் தனியாக தெரிந்தது.

அதில் நந்தனின் பார்வை யுகியை தீண்ட.

“பூனை அவன் பார்க்கறான் அமைதியா இரு.” என்று சொன்னதும் தன் கையைக் கொண்டு யுகியின் வாயையும் மூடி அவள் வாயையும் மூடிக் கொண்டாள்.

ஏற்கனவே வளவனால் பயங்கர கோவத்தில் இருந்தவன், இவர்கள் செயல் மேலும் கோவத்தை உண்டாக்க, கண்கள் ரத்தமென சிவந்திருப்பதை யாரும் பார்க்கக் கூடாது என கருப்பு கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டான்.

கண்கள் காட்டிக் கொடுக்க தயாராக இருந்தாலும், அவன் முகம் எதையும் உள்வாங்கிக் கொண்டு வெளிக்காட்டாத ஆழ்கடலைப் போல் அமைதியாக இருந்தது.

“நந்தா பழசை எல்லாம் மறந்துட்டு நம்ப பொண்ணை அங்க கொடுக்கறோம் அந்த எண்ணத்தோட பேசுப்பா.” என்றார்  மார்த்தாண்டம் தன்மையாக.

அவர் தன்மையெல்லாம் அவனிடம் எடுபடுமா என்ன?.

“ம்ம்” என்றான் அழுத்தமாக.

வளவன் அவனை ஒருப் பொருட்டாக கூட நினைக்கவில்லை.

“மாமா பொண்ணுப் பார்க்க தான் வந்தோம். ஷாலுவைப் பார்த்துட்டோம் எப்போ கல்யாணம் வெச்சிக்கலாம்ன்னு சொன்னா  மேற்கொண்டு பேசலாம்.” என்று மார்த்தியுடன் தான் நேரடியாக பேசினான். நந்தன் பக்கம் அவன் பார்வைக் கூடப் போகவில்லை.

அமைதியாக இருந்தால் தலையில் மிளகாய் அறைத்து விடுவார்கள் என்பதை தானே அனுபவப் பாடம் கற்றுக் கொடுத்தது. பேச வேண்டிய இடத்திலும், பேச வேண்டிய நேரத்திலும் சரியாக பேச வேண்டும்  என்பதில் தெளிவாக இருந்தான்.

வளவன் சொன்னதும் மார்த்தாண்டம் நந்தனைப் பார்க்க, அவனோ தன்னை சமன் செய்துக் கொண்டு மீண்டும்   கருப்பு கண்ணாடியை கழட்டி மடித்து சட்டை பொத்தான் போடும் இடத்தில் தொங்க விட்டவன்,

“ம்ம் நெஸ்ட் முகூர்த்தத்துல வெச்சுக்கோங்க” என்றான்.

“என்னடா கடவுள் இறங்கி வந்து வரம் கொடுத்து விட்டார்." என்று அனைவரும் அதிசயமாக பார்த்தனர்.

புயலுக்கு பின்பும் அமைதி தான் முன்பும் அமைதி தான். இங்கும் முன்பு அமைதியாக இருந்ததால் புயல் அடிக்கும் நேரத்தை எதிர்நோக்கினர்.

“பட் நான் இருக்க மாட்டேன்” என்று எழுந்துக் கொண்டான்.

“நந்து நீ இல்லாம எப்படி...?” என்று தயக்கமாக தான் மார்த்தாண்டம் கேட்டார். 

ஒரு பிள்ளையை விட்டுவிட்டு இன்னொரு பிள்ளைக்கு திருமணம் செய்ய எந்த பெற்றோர் தான் சம்மதிப்பார்கள்.

அதுவும் மார்த்திக்கு நந்தன் என்றாலே தனிப் பிரியம் தான் அவன் கேட்டு இல்லை என்றதில்லை, அவன் வார்த்தைக்கு மறு வார்த்தை இருந்ததில்லை. 

“கல்யாணம் பண்ண பொண்ணு மாப்பிள்ளை போதாதா?” என்று திமிராகவே கேட்டான்.

“டேய் யுகி, உன் அண்ணாவுக்கு உடம்புல கொழுப்பு இல்லடா, கொழுப்புல தான் உடம்பே இருக்கு. என்னன்னு உங்க அம்மா பெத்தாங்களோ எவ்வளவு திமிரா பேசறார் பாரேன்.”

“பூனை அவனுக்கு பாம்பு காது கேட்டான் வெச்சிக்கோ செதைச்சிடுவான் சொல்லிட்டேன். வாயை மூடிக்கோ.”

“இவன் ஒருத்தன்” என நிலா திரும்ப நந்தனின் காது இவர்கள் பேச்சைக் கேட்டுவிட்டது என்று சொல்லாமல் சொல்லியது அவன் காது மடல் துடித்த விதம்.

சிறு வயதில் இருந்து நந்தனை  அறிபவளுக்கு தெரியாதா? அவன் எதற்கு? எப்படி? எதிர்வினை புரிவான் என்று.

“ஐயோ!! போச்சா அவன் பார்வை அங்க இருந்தாலும், நான் பேசறதை எல்லாத்தையும் கேட்டுட்டான் போலையே, வெச்சி செய்யப் போறான். கடவுளே” என்று ஆரம்பிக்கும் போதே, அவளது வாயை பொத்திய யுகி,

“போதும் இன்னைக்கு கோட்டா முடிஞ்சிது, ஒரே நாள்ல எத்தனை வேண்டுதல் தான் வைப்ப, அந்த சாமியே டையார்ட் ஆகிடும். கொஞ்சம் நேரம் சும்மா இரு தாயே” என்றவன் அவளை இழுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்று விட்டான்.


Leave a comment


Comments


Related Post