இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...36 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 09-05-2024

Total Views: 26263

திருமண வரவேற்பின்போது இரண்டு ஜோடிகளும் தவசிபுரம் வந்ததோடு சரி… எட்டு மாதங்கள் கழித்து இப்பொழுதுதான் மீண்டும் வருகின்றனர்… மீராவின் உடல் நலனை முன்னிட்டு நீண்ட தூரப் பிரயாணம் தவிர்க்கப்பட்டது. அத்தோடு அவர்களுக்கு வேலைப் பளுவும் சேர்ந்து கொண்டது. பெரியவர்கள் அவ்வப்போது சென்று நான்கைந்து நாட்கள் தங்கி வந்தனர். பூச்செண்டின் சமையல் கைவண்ணத்தில் மீராவும் இன்னும் கொஞ்சம் சதை கூடி கர்ப்பவதிக்கே உரித்தான பளபளப்புடன் வளைய வந்தாள். மீரா பூச்செண்டு இருவருக்கும் இயல்பாகவே தோன்றியிருந்த நல்ல இணக்கம் ஒற்றுமையாக ஒரே வீட்டில் வாழ்வதில் குளறுபடி இல்லாமல் இருந்தது. தன் மாமனின்மேல் மிகுந்த பாசம் வைத்திருப்பவள் அவன் மனைவியின் மீதும் அதே பாசத்தையும் உரிமையையும் காட்டினாள். மீராவிற்காக அவள் விரும்பியவற்றை எல்லாம் ருசியாக சமைத்துக் கொடுத்தாள்.


பெற்றவர்கள் உடன் பிறந்தவர்கள் இன்றி தனித்து வாழ்ந்த மீரா தன் காதல் கணவன் கொடுத்த அன்னியோன்யமான குடும்பமே இனி தன் உலகம் என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாள். உடன்பிறந்த தமையனாய் தரணி அவளை தாங்க இருப்பதால் தன் வாழ்வு முகிலனால் மட்டுமே மறுமலர்ச்சி அடைந்தது என்பது அவளது எண்ணம். வளைகாப்பிற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே நால்வரும் காரில் கிளம்பி இருந்தனர். நிறைமாத வயிற்றுடன் தொலைதூரப் பயணம் சிரமம் என்றாலும் தரணிதான் லாவகமாக கார் ஓட்டுபவன் ஆயிற்றே… ஆங்காங்கே நிறுத்தி அவளை சாப்பிட வைத்து சிறிது ஓய்வு எடுத்து சில நேரம் வீங்கிய கால் விரல்களை முகிலன் மடியில் வைத்து பிடித்துவிட்டும் சில நேரம் அவன் மடியில் படுத்து உறங்கியும் அதிராமல் ஒருவராக ஊர் வந்து சேர்ந்தனர் நால்வரும்.


தரணி சொன்னது போன்றே பூச்செண்டை விட்டு விலகி இருக்கத் தொடங்கினான். இரவு நேரங்களில் அவளை நாடுவதே இல்லை… உணவை முடித்துக் கொண்டு இறுக்கி கண்களை மூடி படுத்துவிடுவான். முதல் இரண்டு மூன்று நாட்கள் பூச்செண்டும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தன்னிடம் நெருங்காமல் அவன் இருந்து விடுவானா என்ன என்று அசட்டையாகத்தான் இருந்தாள். இதே ஒதுக்கம் தொடர அவளுக்குள் வருத்தம் எழ ஆரம்பித்தது. இயல்பாக அவளோடு எந்நேரமும் மேற்கொள்ளும் சில்மிஷங்களும் சீண்டல்களும் விளையாட்டுத்தனங்களும் கூட இல்லாமல் போனதால் அவளது மனம் மிகவும் பாரமாகி போனது.


கோபமாகவோ பாராமுகமாகவோ இருப்பதில்லைதான். ஆனால் இந்த ஒதுக்கம்…? தேவைக்கு மட்டும் அண்டை வீட்டார் போல் பேசிச் செல்ல கணவன் மனைவி என்ற உறவு எதற்கு…? கோபம்தான் வந்தது… கடந்த சில மாதங்களில் ஆழிப்பேரலையாய் தன் அன்பாலும் காதலாலும் அவளை மொத்தமாய் தனக்குள் சுருட்டிப் போட்டவன் தற்போது வறண்ட நிலமாய் மாற்றிப் போட்டால் வலிக்காமல் போகுமா…? 


‘நான் என்ன தவறாக கேட்டுவிட்டேன்… படித்து வேலையில் இருக்கும் தம்பதிகள் இதுபோன்று தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வது இயல்பான ஒன்றுதானே… இதில் என்ன இவருக்கு இத்தனை வருத்தம்…? குழந்தை உருவாவதை தள்ளி வைக்கலாம் என்றால் கணவன் மனைவி உறவே மொத்தமாய் முடங்க வேண்டுமா…? என்னைவிட்டு மொத்தமாய் ஒதுங்கி இருக்க வேண்டுமா…? தண்டனை எனக்கா…? அவருக்கா…?’


அவனது ஒதுக்கமும் ஒட்டாத்தன்மையும் அவளை வெகுவாக வாட்டின. இரவு நேரங்களில் இறுக்கி அணைத்து அவள் வாசம் பிடித்தபடியே படுத்தால்தான் உறக்கமே வரும் என்பவன் முற்றும் துறந்த முனிவன்போல் இரு கைகளையும் இறுக கட்டி அவளுக்கு முதுகு காட்டியே உறங்குகிறான். பெண் சுகம் பழகிய ஆண்கள் கட்டுப்பாட்டுடன் தொடர்ந்து இருந்துவிட முடியுமா என்ன…? அதிலும் ஆசை மனைவி அருகில் இருக்கும்போது இரவு நேரம் இம்சை கொடுக்கத்தானே செய்யும். அதிகபட்சம் மூன்று நாட்கள்… தன்னைப்போல் என்னை தழுவி கொண்டாடுவார் என்ற பூச்செண்டின் எண்ணங்கள் அனைத்தும் பொய்த்துப் போகும் வகையில் தொடர்ந்த நாட்களில் எல்லாம் தீவிர துறவியாய் மாறிய கணவனை ஆச்சரியமாகத்தான் பார்த்தாள்.


‘ஏதோ ஆதங்கத்துல ஒரு பேச்சுக்கு சொல்றாருன்னு பார்த்தா இந்த மனுஷன் கல்லு மாதிரியே மாறிட்டாரே… ரொம்பத்தான் வீம்பு… இவருக்கே இவ்வளவு கட்டுப்பாடு இருக்கும்போது நான் மட்டும் என்ன…? அவரா ஆசையா கிட்ட வராம நானா கிட்ட போகமாட்டேன்… இவர் மௌனமா இருந்து என்னை பிளாக்மெயில் பண்ண பார்க்கிறார்… நானும் விட்டே பிடிக்கிறேன்…’ தானும் தனது எண்ணத்தில் இருந்து இறங்கி வராமல் இருந்தாள் பூச்செண்டு. நாளும் பொழுதும் ஓடி இதோ மீரா வளைகாப்பிற்கு ஊருக்கும் வந்தாயிற்று.


மறுநாள் காலை முத்துராமனும் அனுசுயாவும் அங்கு வந்து சேர்ந்தனர். அரண்மனை போல் பரந்து விரிந்து கிடக்கும் வீட்டில் வைத்தே வளைகாப்பு செய்ய முடிவு செய்யப்பட்டதால் மறுநாள் விசேஷத்திற்கு ஆளாளுக்கு பறந்து கொண்டு வேலை செய்தபடி இருந்தனர். பாட்டிக்குத்தான் சொல்ல முடியாத மகிழ்ச்சி… தன் ஆசை பேரனுக்கு விரைவில் குழந்தை கிடைக்கப் போகிறது. கொள்ளுப் பேரனோ… கொள்ளுப் பேத்தியோ… தங்கள் குடும்பத்தின் அடுத்த வாரிசு… புளகாங்கிதமாய் சுற்றிக் கொண்டிருந்தார். கூட்டத்தை பெரிதாக கூட்ட வேண்டாம் கண் திருஷ்டி பட்டது போல் ஆகிவிடும் என்று முகிலன் வலியுறுத்தி இருந்தாலும் முக்கிய சொந்தங்கள் உள்ளூர் மக்கள் என்று யாரையும் விட முடியாததால் சபை நிரம்பிய கூட்டமாகத்தான் இருக்கும். அடுத்த நாளும் விடிந்து அமோகமாக விழா ஆரம்பமானது. மீராவை அமர வைத்து மூத்த பெண்மணிகள் வளையல் போடத் தொடங்கினர்.


“அடியே பூச்செண்டு… அங்கிட்டும் இங்கிட்டும் சுத்தாமா முகிலன் பொண்டாட்டி பக்கத்துல வந்து ஒக்காந்து பெரியவுககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க… ஒனக்கும் வெரசா குழந்தை கிடைக்கட்டும்…” பாட்டிக்கு நாத்தனார் முறையான மற்றொரு பாட்டி சபையில் நின்றபடி சத்தமிட்டு அழைக்க பூச்செண்டின் கண்கள் படக்கென ஓடிச் சென்று நின்றது என்னவோ தரணியின் முகத்தில்தான். அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


“என்ன பாண்டிச்சேரிக்கார மாப்பிள்ள… ஒங்களுக்கு பொறவு கல்யாணம் கட்டிக்கிட்ட எங்க ஊரு பய சிங்கம்னு காட்டிட்டியான்... பாத்திகளா… மதுரக்காரய்ங்க எல்லாத்துலயும் வேகமும் வீரமும்தேன்… வாட்டசாட்டமா இருக்கீக… எந்நேரமும் வேலை வேலைன்டு ஓடுவீகளோ… வெவகாரத்துல ஒன்னும் வேகம் இல்ல போல இருக்கே… இனியாச்சும் உங்க சோக்காலிகிட்ட வித்தையை கத்துக்கிடுங்க…” சங்கோஜமே இன்றி சத்தமிட்டு கூறி சிரித்தார் அந்த வயது மூத்த பெண்மணி. 


“பெரிய படிப்பு படிச்சு டவுன்லயே இருக்கிறவரு… தள்ளி கிள்ளி போட்டு வச்சிருக்கிறாரோ என்னவோ…” தொடுப்பாய் இன்னொரு குரல்.


“பெத்தவுக பெரியவுகதேன் எடுத்துச் சொல்லணும்…”


“என்னமோ நாலு எழுத்து படிச்சுப்புட்டா ஒலக ஞானமே தெரியும்டு நினைச்சுக்கிறாக…”


வாய் குறைத்து பழக்கமற்ற சபை நாகரீகம் தெரியாத பூச்செண்டின் சொந்தங்களில் சிலர் சத்தமாகவே பேசிச் சிரிக்க தரணி அதன்பின் அந்த இடத்திலேயே இல்லை. ப பூச்செண்டுதான் உள்ளுக்குள் குமைந்து போனாள்.


“உங்க வாயெல்லாம் இழுத்து வச்சு அறுக்கப் போறேன் கெழவிகளா… வந்த எடத்துல வம்பிழுக்காம பொழுதே விடியாதுல்ல ஒங்களுக்கு… நீங்க எல்லாம் முன்ன நின்னு நட்டு வச்சது போதும்… கொட்டிக்கிட்டு மொதல்ல இடத்தை காலி பண்ணுங்க…” கோபத்தில் அவள் எகிற சலசலவென ஆளாளுக்கு சத்தம் எழுப்ப முகிலன் வந்து அனைவரையும் சத்தமிட்டு அமர்த்தினான்.


“என்னா முகிலு… விசேஷத்துக்கு கூப்பிட்டு மூக்கை அறுக்கிறா உன் அத்த மக… இதுதேன் பெரிய வீட்டுக்காரவுக வகுசியோ… சோத்துக்கு செத்தா நாங்க எல்லாரும் இங்கன வந்து ஒக்காந்து இருக்கோம். உண்டானதை பேசினா இவளுக்கு இம்புட்டு கோவம் வருது… இவ அம்மாதேன் இன்னும் என் புள்ள உண்டாகாம கெடக்கிறா… இவளுக்கு எப்ப இதெல்லாம் செஞ்சு அழகு பாக்குறதுண்டு நேத்து மூக்கால அழுது மூனு வா தண்ணி குடிச்சா… என்னமோ இவ ரொம்பத்தேன் சிலிப்பிக்கிறா…”


அந்த கிழவியும் விடாமல் வரிந்து கட்டிக்கொண்டு வர பின் மாணிக்கவேலும் மணிவாசகமும் இடைபுகுந்து ஒருவாராக அனைவரையும் சமாளித்து சமாதானப்படுத்தி பந்தி நடக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர். அனுசுயாவும் முத்துராமனும் முகம் கூம்பிப் போய் ஓரமாய் அமர்ந்திருப்பதை கண்டு இன்னும் அதிகமாய் வலி கொண்டாள் பூச்செண்டு.


“தரணி எங்கே…?” கண்களை சுழற்றி தேடியபடி கேட்டான் முகிலன்.


“இந்த சனியம்புடிச்ச பொம்பள பேசின உடனே கிளம்பி போயிட்டாரு… போன் அடிச்சு பாரு மாமா… என் மாமு மனசு ரொம்ப சங்கடப்பட்டு இருக்கும்… ஏற்கனவே அவர் சங்கடத்தில்தேன் இருக்காரு…” கையை பிசைந்தபடி அவள் புலம்ப “என்ன சங்கடம்…?” புருவம் சுருக்கி கேள்வியாய் பார்த்தான் முகிலன்.


அவசரத்தில் தான் ஏதோ உளறிவிட்டதை உணர்ந்து “அ..அது உ..உங்க ஆபீஸ்ல ஏ..ஏதோ ரொம்ப வேலையாமே…” தடுமாற்றமாய் சமாளிக்க அதுவும் உண்மைதான் என்பதால் “ப்ச்… ஆமா… புது ப்ராஜெக்ட்ல சீனியர்ஸ்னு சொல்லி எங்களைத்தான் நெட்டையை எடுக்கிறானுங்க…” அவனும் சலித்தபடியே தரணிக்கு அழைத்தான்.


“எங்கடா போன…?”


“சும்மாதான்டா… அதான் ஃபங்க்ஷன் முடிஞ்சதே… வீட்டுக்குள்ள கூட்டமா கசகசன்னு இருக்குது… அதான் என் மாமனாரோட தோட்டத்துக்கு வந்துட்டேன்…” இயல்பாக இருப்பது போன்றே சமாளித்தான் தரணி.


“சரி… அங்கேயே இரு… கொஞ்ச நேரத்துல நானும் வந்துடுறேன்…”


“நீ அங்கே இருந்து வேலையை பாருடா… நான் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்…”


சரி என்று போனை வைத்தவன் “அவன் நார்மலாதான் இருக்கான்... நீ ஒன்னும் சங்கடப்படாத… போய் வேலையை பாரு…” அவள் முதுகைப் பிடித்து திருப்பிவிட “மாமா… அத்தையும் மாமாவும்கூட முகம் சுணங்கி போய்தான் இருக்காங்க… அவுங்கள…” அவள் சொல்லி முடிக்கும் முன் “அங்கே பார்… நம்ம வீட்டு ஆளுங்க அப்படி இருக்க விட்ருவாங்களா…” என்று அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் மொத்த குடும்பமும் அவர்களை சுற்றி அமர்ந்து இதமான வார்த்தைகளால் அவர்களை சகஜமாக்கிக் கொண்டிருந்தனர். மெல்ல கூட்டத்திலிருந்து நழுவி வெளியே வந்து தன் ஸ்கூட்டியை எடுத்தாள் பூச்செண்டு.


“என் மாமுவை பத்தி எனக்கு தெரியாதா… மனசு ரொம்ப வெதும்பிப் போய்தேன் உட்கார்ந்திருப்பார்… என்னால என் மாமுவுக்கு இத்தனை பேச்சு… கட்டையில போற கெழவி… என் மாமுவை சங்கடப்படுத்திட்டியே… ஊருக்கு போறதுக்குள்ள உன் வாயில கொள்ளிக்கட்டையால கோடு இழுக்கல நான் தரணி பொண்டாட்டி கெடையாது…” வாய் கொடுத்த கிழவியை கண்டபடி வசைபாடிக்கொண்டே தன் கணவனை காண பறந்து ஓடினாள் பூச்செண்டு.


மோட்டார் பம்புசெட்டின் வழியே தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்க மிகப்பெரிய சிமெண்ட் தொட்டியில் விழுந்து வாய்க்காலில் வழியாக பாய்ந்தோடி கொண்டிருந்த நீரை வெறித்துப் பார்த்தபடியே அந்த தொட்டியின் அகன்ற மேற்புறத்தில் அமர்ந்திருந்தான் தரணி.


“மாமு…” குரல் கேட்டு வேகமாய் திரும்பினான்.


அவன் அருகில் குதித்து அமர்ந்து கொண்டவளிடம் “நீ எதுக்கு இங்கே வந்த…? மீராகூட இருக்க வேண்டியதுதானே… வேலையெல்லாம் அப்படியே போட்டுட்டு ஓடி வரணுமா…? நான்தான் வந்துடறேன்னு சொன்னேனே…” உணர்ச்சியற்ற குரலில் எங்கோ பார்த்தபடி கூறியவனை தாடையைப் பற்றி தன்புறம் திருப்பினாள் பூச்செண்டு.


“உங்களை ரொம்ப சங்கடப்படுத்திட்டாங்களா மாமு…” குரல் தழுதழுக்க கேட்டவளை எதுவும் கூறாது அமைதியாய் பார்த்தான்.


“பாடையில போற அந்த கெழவிய நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு தான் வந்தேன்… எங்க விசேஷம் நடந்தாலும் கூத்தை கெளப்பி விடுறதுதான் அந்த பொம்பளையோட வேலையே… நீங்க வெசனப்படாதீங்க மாமு… நீங்க இப்படி இருந்தா எனக்கு ரொம்ப சங்கட்டமா இருக்கு… அடுத்தவங்க கிட்ட நம்மள நாம நிரூபிக்கணும்னு அவசியம் கிடையாது… ரொம்ப வருத்தப்படுறீங்களா…”


ஒற்றை கையால் அவன் கன்னத்தை வருடியபடியே கேட்டவளை ஆழ்ந்து சில நொடிகள் பார்த்தவன் “எதுக்காக இந்த சமாதானம்…? என் மனசு சங்கடப்படும்னா…? இல்ல இதை காரணம் காட்டி உன்னை நான் ஃபோர்ஸ் பண்ண ஆரம்பிச்சுடுவேன்னா…?” அழுத்தமாய் கேட்டான்.


“ஏன் மாமு இப்படி எல்லாம் பேசுறீங்க…? நீங்கதான் என்னை விட்டு ரொம்ப விலகிப் போயிட்டீங்களே… நான் சொன்னதுல உள்ள நியாயங்களை நீங்களும்தான் புரிஞ்சுக்கல… ரொம்ப விளையாட்டா பேசுறதா நினைச்சு அந்த கெழவி பேசின வார்த்தைகள் என்னை எவ்வளவு வேதனைப்படுத்துச்சு தெரியுமா… நீங்க என்னை விட்டு விலகி நிக்கிறது என்னை வெறுத்து ஒதுக்கி வச்சிருக்கிற மாதிரி தோணுது மாமு.” மூக்கு விடைக்க கூறியவளின் குரல் கமறியது. இறுகி இருந்த அவன் முகம் சட்டென இளகியது.


“அப்படி எல்லாம் எதுவும் இல்லடி… ஏன் அப்படி யோசிக்கிற…?” அவள் கரத்தை அழுத்தமாய் பற்றி தன் தொடையில் வைத்துக் கொண்டு மென்மையாய் கூறினான்.


“இதோ இந்த மாதிரி சின்ன சின்ன தீண்டல் சில்மிஷம் உங்க விளையாட்டுத்தனம் இப்படி எதுவுமே எனக்கு கிடைக்கிறதில்ல… ஒரே ரூம்ல ஒரே பெட்ல ரொம்ப அந்நியமா விலகி இருக்கோம்… உங்களுக்கு தெரியலையா…? நீங்க இவ்வளவு பிடிவாதமா இருப்பீங்கன்னு நான் நினைக்கல மாமு…” கணவனின் தோளில் உரிமையாய் சாய்ந்து அவன் விரல்களை கோர்த்துக் கொண்டாள்.


“பிடிவாதம் எல்லாம் ஒன்னும் இல்லடி… சின்ன சின்ன நெருக்கமும் பெரிய பெரிய ஆசைகளை கொடுக்கும். அது ரெண்டு பேருக்குமே அவஸ்தைதான். அதனாலதான் ஒதுங்கி இருக்கேன்…” அவள் தலையில் கன்னம் சாய்த்தபடியே கூற வேகமாய் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் “இன்னும் எவ்வளவு நாளைக்கு அவஸ்தையோடவே நாம ரெண்டு பேரும் இருக்கிறது…? உங்களை கட்டிப்பிடிச்சு படுக்காம எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது… நான் விலகி இருக்கணும்னு சொல்லவே இல்ல… நீங்கதான் வீம்பா தள்ளி இருக்கீங்க…” கோபத்தோடு சிணுங்கினாள்.


“நீதான் தடுப்பு நடவடிக்கையோட பக்கத்துல வர சொல்றியே… அதுல எனக்கு சுத்தமா உடன்பாடு கிடையாதுடி… அது என்னால முடியவும் முடியாது… நம்ம தாம்பத்தியமே கசந்து போயிடும் பூச்செண்டு…”


“பாத்தீங்களா… இப்ப கூட செல்லமா பொக்கேன்னு கூப்பிட மாட்டேங்கறீங்க… உங்க மனசு என்கிட்ட ஒட்ட மாட்டேங்குது மாமு…” ஆதங்கமாய் கூறி கண்களை அழுந்த மூடித் திறந்து இழுத்து பெருமூச்சு விட்டவள் “உங்களுக்கு குழந்தை பெத்துக்கிறதுல விருப்பம் இருக்கும்போது இனி நான் தள்ளிப் போட விரும்பல… உங்க விருப்பப்படியே எல்லாம் நடக்கட்டும்… நீங்க என்கூட பழையபடி அதே பிரியத்தோட இருந்தா போதும்…” கண்கள் கலங்க கூறியவளை சில நொடிகள் துளைத்துப் பார்த்தவன் சங்கடமாய் சிரித்தான்.


“இப்போகூட உங்க ஆசை உங்க விருப்பம்னுதான் சொல்ற. நம்ம ஆசை நம்ம விருப்பம்னு உன்னோட ஆழ்மனசுல இருந்து ஆசை வராம நம்ம குழந்தை உருவாகுறதுல எனக்கு விருப்பமே இல்லடி… புரிஞ்சுக்கோ… கட்டாயத்தில குழந்தை உருவானா அது காலம்பூரா எனக்கு உறுத்தல்டி…” இடமும் வலமுமாய் தலையை ஆட்டினான் தரணி.


அவன் கன்னத்தை கையில் தாங்கியவள் “நான் மனப்பூர்வமாதான் சொல்றேன் மாமு… கண்டவங்களும் உங்களை தேவையில்லாம பேசுறதை என்னால தாங்கிக்கவே முடியாது… நீங்க சொன்னதுதான்… தெய்வம் நமக்கு இயற்கையா கொடுக்கிறதை நாமளே தடை போட்டு நிறுத்த வேண்டாம்… நமக்கு எப்போ இயல்பா கிடைச்சாலும் எனக்கு சந்தோஷம்தான்…” என்று கூற


அவள் கண்களோடு கண்கள் கலந்தவன் “எனக்காக உன் எண்ணத்தை…” என்று ஆரம்பிக்கும்போதே “இல்லயில்ல… நல்லா யோசிச்சுதான் நானும் சொல்றேன்… நமக்குள்ள எந்த தடுப்பும் வேணாம்… உங்க மனசை கஷ்டப்படுத்தி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க மாமு…” அழுகை பொங்க கூறியவளை இழுத்து அணைத்து முகம் முழுக்க முத்தமிட்டான்.






Leave a comment


Comments


Related Post