இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -05 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 10-05-2024

Total Views: 18534

இதரம் -05


மல்லி கொண்டு வந்திருந்த உணவுகளையே கண்கொட்டாமல் பார்த்திருந்தான் மாறன். 


"டாக்டர் சார் பார்த்தா எல்லாம் வயிறு நெரம்பாது. சாப்பிடுங்க" என்று சத்தமாய் சொல்லவும் 


அவனோ திகைப்பாய்," ஏன் மா இதென்ன எல்லாம் ரெட் கலர்ல இருக்கு? இதை சாப்பிட்டா என் ஸ்டமக் என்னாகறது?" என கேட்டே விட்டான். 

"கறிக்கொழம்பு காரமா இருந்தா தான் நல்லா இருக்கும் சார்." என்று அவனுக்கு விளக்க 


"மல்லி மேடம் நான் ரசம் ,தயிர் வச்சு அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். இது வேண்டாம்மா. பார்க்கும்போதே பர்ன் ஆகுது" என்றான் இன்னும் பயம் விலகாமல். 


"சரிதான் இப்படி இருந்தா எப்படி...?"என்றவள்," காரம் கொறைவா மூளை வறுவல் இருக்கு. கறியை சுக்கா மாதிரி போட்டு தரேன்." என்று அத்தனை வேலையிலும் அவனுக்கென மெனக்கெட்டு செய்து கொடுத்தாள். 



'நான் இதெல்லாம் சாப்பிட்டது இல்லை' என்று சொல்ல வந்தவன், அப்படியே வார்த்தைகளை உணவோடு சேர்த்து விழுங்கினான். தன்னை பெற்றவர் கூட இப்படி பார்த்து பார்த்து சமைத்திருப்பாரா என்று தெரியவில்லை அவனுக்கு.
உணவு மேசையில் இருக்கும் வேலைக்காரர்கள் பரிமாறுவார்கள் அவ்வளவே அவனறிந்தது. 


முன்பு வேலை செய்த இடத்தில் கூட ஹோட்டல் சாப்பாடு தான். இவனுக்கென வேலை செய்து கொடுக்க சமைத்துக் கொடுக்க பிரத்யேகமாக ஆள் அனுப்பி வைக்க வீட்டினர் தயார் என்றாலும் மாறன் அதை ஒப்புக் கொள்ளவில்லை. 


வந்திருப்பது சேவை செய்வதற்காக இதில் தனக்கொரு பணியாளா என்று மறுத்து விட்டான். 


இங்கு வந்த ஆறு மாதங்களில் உடல் எடை கூடியிருப்பதாகவே உணர்ந்தான் மாறன். 


"இப்படியே போனா நான் குண்டாகிடுவேன் மல்லி." என்று சிரிப்பவனை லஜ்ஜை செய்யாமல் தன் கடன் பணி செய்து கிடப்பதே என்று தன் வேலையை செய்திடுவாள். 


"என்ன மல்லி வாகை சூடவா படத்துல இனியா சமைச்சு குடுத்து வாத்தியார கரெக்ட் பண்ண மாதிரி, நீ டாக்டரை  சமைச்சுப் போட்டு கரெக்ட் பண்றியா?" என்று கிண்டலாய் சகவயதுக்காரி கேட்க,மல்லியின் உள்ளத்தில் திடுக்கிடல் தான். 


"அப்படி சொல்லாத ரூபினி.சார் எவ்வளவு பெரிய பணக்காரரு, என் கூட போய் சேர்த்து பேசுற ?"பதறிப் போனவளாய் பதில் பேசினாள். 



"சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் புள்ள ,ஒன்னைத் தெரியாதா எங்களுக்கு?" என்று அந்தப் பெண் சொல்லிவிட்டுச் சென்றதும் மாறன் காதில் விழுந்தது. 


அந்த நிகழ்விற்கு பிறகும் மல்லி எப்போதும் போல இயல்பாகத் தானிருந்தாள். 


'எப்போதிலிருந்து தன் மீது விருப்பம் அவளுக்கு?!' என புரியவே இல்லை மாறனுக்கு. 


மெல்ல கண்விழித்துப் பார்க்க, மல்லி நல்லுறக்கத்தில் இருந்தாள். 


கலைந்தும் கலையாத ஓவியமாய் மல்லி இருக்க ,மாறனின் விழிகள் அகல மறுத்தது அவளிடத்திலிருந்து. 


'என்னை ஏன் டி மேரேஜ் பண்ண...?'இத்துடன் எத்தனை முறை தான் இந்தக் கேள்வியை மானசீகமாக அவளிடத்திலிருந்து கேட்டிருப்பானோ தெரியவில்லை. 


மல்லி அரைத்தூக்கத்தில் இருந்து அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தாள். 


"டாக்டர் சார் !"என்று பதறியவள்," ஏதாச்சும் வேணுங்களா?" என்று கேட்க


"ம்ம்ம்..." 


"என்ன வேணும் சார்?" என்று அவசரமாய் எழுந்து நின்று தன்னை சரிசெய்ய 


"நிம்மதி வேணும்" என்றான் முறைப்பாக. 


சுவர்கடிகாரம் மணி நான்கு என சப்தமிட்டது. 

"கூடிய சீக்கிரம் கிடைச்சுடும் சார் "என்றபடி போர்வையை மடித்து வைத்தாள். 


"கிடைக்கும் கிடைக்கும்" என்று அலுப்பது போல சொல்லி கழிவறைக்குள் புகுந்தான். 


ஒரே அறையில் தான் இருவருக்கும் உறக்கம். ஆனால் இருவேறு மெத்தைகளில். வார்த்தைகளில் கடுமையை காட்டுபவன் அவளின் வாழ்வில் காட்டவில்லை. திருமண இரவன்றே அமரும் மென்மெத்தையை அவளுக்கு உறங்குவதற்காக கொடுத்திருந்தான். கோபம் தான் ஆனால் அத்தனை கோபத்திலும் அவள் தன்னை உணவிட்டு காத்ததில் நன்றியோடு அதை திருப்பி கொடுத்திருந்தான். 



இந்த நான்கைந்து நாட்களில் அவனின் அறை பழகியிருந்தது மல்லிக்கு. 


'திருமணமானது மல்லியின் அக்காக்களுக்கு தெரியுமா?' என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. 


அவர்களிடமிருந்து ஒரு அழைப்பு கூட வரவில்லை. இதற்கு முன்பும் வராது தான் ஆனால் இப்போதோ நிலை வேறாகிற்றே. மணியக்காரர் தகவல் தெரிவிப்பது தான் சொல்லியிருந்தார். வெண்ணிலாவும் அப்படியே தான். பெயருக்காவது வந்து விசாரித்திருக்கலாமே என்று தோன்றாமல் இல்லை அவளுக்கு. இரண்டாவது அக்கா வரமாட்டாள் ஆனால் மூத்தவளும் இளையவளும் வந்திருக்கலாமே என நினைத்தாள். அந்த அளவிற்கா என் மீது பாசம் விட்டுப் போய்விட்டது என மனதில் குமுறத்தான் முடிந்தது மல்லியால். 



தன் வீட்டின் நினைவுகளோடு போர்வையை மடித்துக் கொண்டிருக்க, வெடுக்கென்று பிடுங்கினான் மாறன். 



அவன் செயலில் திடுக்கிட்டவளோ," சார் !"என்று திகைக்க 


"நான் மறுபடியும் தூங்கணும்" என்று முறைத்தபடி படுத்துவிட்டான். 


அவளுக்குமே நான்கு மணிக்கு எழுந்து என்ன செய்வது என்று புரியவில்லை. தன் வீடென்றால் ஆடு மாட்டை கவனிக்க, சமைக்க என வேலை வரிசை கட்டும். இங்கு எல்லாவற்றையும் பார்க்க வேலையாட்கள் இருக்கின்றனர். 

மல்லியும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வர, மாறன் அவளை அழைத்தான். 




"தேவா...!"என்று அழைக்கவும் மனதில் மெல்லிய திடுக்கிடல் அவளுக்கு. 


எத்தனையோ மாதங்களுக்குப் பிறகான அழைப்பு. அவனின் பிரத்யேக அழைப்பு. மனம் ஒரு நொடியில் நிறைந்தது அவளுக்கு. 


"டாக்டர்...!" என்று தன் வியப்பை எவ்வளவு முயன்று மறைத்தும் வெளிக்காட்டிவிட்டாள்.




"இங்க வா...!" என்று மென்மையாக அழைக்கவும் அவனருகில் சென்று நின்றாள். 



"நீ நினைச்சது நடந்திடுச்சு தானே?" என்று பீடிகையாக பேச


"புரியல.. டாக்டர்" என்றாள் கண்கள் சுருக்கி


"எப்படியோ வசதியான குடும்பத்தில் கல்யாணம் பண்ணி சொகுசா வாழ நினைச்ச உன் ஆசைதான் நிறைவேறிடுச்சே... இப்பவாவது சொல்லலாமே ஏன் என்னை ஏமாத்தினன்னு?" என்று எதிர்பார்ப்புடன் கேட்க


மல்லி மெலிதாய் புன்னகைத்தாள். 



"உங்களுக்கேத் தெரிய வரும் டாக்டர் சார்." 


"நான் உன் கிட்டே இருந்து கேட்க நினைக்கிறேன்." என்று அழுத்தமாக சொல்ல,அவள் பேசவரும் முன்பே அவர்களின் அறைக்கதவு தட்டப்பட்டது.


 
...... தொடரும். 









 


Leave a comment


Comments


Related Post