இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--15 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 10-05-2024

Total Views: 28460

இதயம் 15

     “சாணக்கியன்“ என்ற குரலில் நின்றவன் சத்தம் வந்த திசையைப் பார்க்க அங்கே மினி நின்றிருந்தாள். பெயர் சொல்லி அழைக்கும் அளவு வந்தாகிவிட்டதா. உரிமை எல்லாம் நன்றாகத் தூள் பறக்கிறது போல உள்ளுக்குள் கடுகடுத்தவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகரப்பார்க்க, “ஒருநிமிஷம்“ என்று நிறுத்தினாள் மினி.

     நெற்பயிர்களுக்கு நடுவில் தன்னால் முளைத்த களைச்செடி போல் தானாக முளைத்த எரிச்சலோடு அவன் திரும்பிப் பார்க்க, “இன்னைக்கு நான் நல்லா விளையாடினேனாம் நேஷனல் லெவல் ப்ளேயர் சொன்னார்“ என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினாள் அவள்.

     “உன்கிட்ட திறமை இருக்கு தான். எதிராளியோட பலவீனத்தை ரொம்பவும் சுலபமா கணிக்கிற. அது எல்லோராலும் முடியாது. உன்னால் முடிந்தால் பிரியாவுக்கு அந்த வித்தையைக் கற்றுக்கொடு. எதிர்காலத்தில் அவளுக்குப் பயன்படும்“ என்றுவிட்டு அவன் கிளம்பப் பார்க்க, “எனக்கும் சதுரங்கம் கத்துக் கொடுக்கிறீங்களா?“ ஒருவித ஆர்வத்தில் அவளே அறியாமல் கேட்ட வார்த்தைகள் தான் அவை. 

     “என்ன திடீர்னு“ அழுத்தமாய் அவன் பார்த்த பார்வையில் கள்ளம் கொண்ட மனம் சின்னதாய் தடுமாற, “நான் முறையா கோச்சிங் போய் ஆட்ட நுணுக்கங்களைக் கத்துக்கிட்டு தொடர்ச்சியா விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்துக்கிட்டா என்னால் கூட கிராண்ட் மாஸ்டர் ஆக முடியும் என்று அந்த நேஷனல் லெவல் ப்ளேயர் சொன்னார்“ என்று ஒட்டு மொத்தப் பழியையும் தூக்கி அந்த மனிதரின் மேல் போட்டாள் அவள்.

     “அது உண்மை தான். நீ விளையாடுவதை வைத்துப் பார்த்தா உனக்கு அடிப்படை சதுரங்கம் சொல்லிக்கொடுத்த நபரே நல்ல கோச்சா தான் இருந்திருக்கணும். அதனால் அவர்கிட்ட தொடர்ச்சியா கத்துக்கோ“ முடியாது என்பதை முகத்தில் அடித்தது போல் சொன்னவனை என்ன செய்தால் தகும் என்று தோன்றவும் உரிமையாய் கோபம் வந்து உட்கார்ந்து கொண்டது அவளிடத்தில்.

     “ஏன் எனக்கு நீங்க சொல்லிக்கொடுக்க மாட்டீங்களா? அப்படி சொல்லிக்கொடுத்தால் உங்க தலையில் இருக்கும் கிரீடம் இறங்கிடுமா?“ உரிமையாய் கேட்பவளை கோபமாகப் பார்த்தான் சாணக்கியன்.

     “ஒருத்தரை குருவா ஏத்துக்கிறதுக்கான முக்கியமான அம்சம் என்ன தெரியுமா? அவரை குருவா மட்டுமே பார்க்கணும். அது உன்னால் முடியாது. அதனால் தான் சொல்றேன் இது எதுவும் சரிவராதுன்னு“ என்றவன் தன் பேச்சால் திகைத்து நிற்கும் மினி, தெளிந்து அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன்னால் தன் காரில் ஏறி இருந்தான்.

     “இப்படித் தான் சம்பந்தப்பட்ட நபருக்கே தெரியும் அளவு பச்சையா சைட் அடிப்பியா மினி“ என தன்னைத் தானே திட்டிக்கொண்டவள் தன் குடும்பத்தினரிடம் வந்து சேர்ந்தாள்.

     அடுத்த சில நாட்களில் இளவரசன், மணிமேகலை இருவரும் சொந்த ஊர் திரும்பிவிட மினியின் நாட்கள் வழக்கம் போல் கல்லூரி, அக்காபிள்ளைகள், அத்தானுடன் சதுரங்க விளையாட்டு என உப்பு சப்பு இல்லாமல் நகர்ந்தது. சொந்தங்கள் அனைத்தையும் விட்டு தேன்மொழியின் வீட்டில் அவள் இருந்த இருபது நாட்களில் கூட இப்படி தனிமையை உணர்ந்தது இல்லை. ஆனால் இங்கே இத்தனை நபர்கள் இருந்தும் சாணக்கியன் என்ற ஒருவன் கண் பார்க்கும் தொலைவில் இல்லை என்றதும் ஒருமாதிரி இம்சையாய் இருந்தது அவளுக்கு.

     பிரியாவை சென்னையில் இருக்கும் செஸ் க்ளப் அனைத்திலும் சேர்த்துவிட்ட சாணக்கியன் சிரமம் என்ற பெயருக்கு கூட இடம் கொடுக்காமல் போட்டி நடக்கும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்றான். இடைப்பட்ட காலங்களில் அவன் காயம் முழுக்க சரியாகி இருந்ததால் யாருடைய உதவிக்கும் அவசியம் இல்லாது போனது.

     சாணக்கியனை தினமும் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற மினியின் ஆசைக்கு அவளுடைய கல்லூரி நிர்வாகமே ஒரு வழி அமைத்துக் கொடுத்தது. இறந்துவிட்ட சேர்மனுக்குப் பதிலாக பொறுப்பேற்ற அவரின் பிள்ளைகளுக்கு பெரிய பொறியியல் கல்லூரியை நிர்வகிக்கும் அளவு திறமைப் பற்றாக்குறை இருக்க, கலை, பொறியியல், மருத்துவம் இன்னும் பல கல்வி நிறுவனங்களை நடத்தும் ஒரு குழுமத்திற்கு வந்தவரை இலாபம் என்று கல்லூரியை விற்றுவிட்டனர். அப்படி புதிதாக வந்த சேர்மன் தான் வைத்திலிங்கம். 

     சாணக்கியன் விளையாட ஆரம்பித்த காலத்தில் அவனைப் பெரிதாக ஈர்த்த முன்னாள் சதுரங்க ஆட்டக்காரர். அவரும் இவனைப் போலவே சதுரங்கம் என்றால் உயிரையே கொடுப்பவர். 

     தன்னுடைய கல்லூரி அனைத்திலும் படிக்கும் பிள்ளைகள் விளையாட்டிலும் கொஞ்சம் கவனம் செலுத்தட்டும் என்பதற்காக பல வசதிகள் செய்து கொடுத்திருந்தார். திறமையுள்ள மாணவ மாணவியர்களுக்கு அதற்கு ஏற்ப பயிற்சியாளர்களை நிர்வகித்து அவர்களை மேலும் மேலும் மெருகேற்றும் பணியை செய்து கொண்டிருந்தார். 

     படிப்பு அளவுக்கு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கல்லூரி என்பதால் பள்ளி மாணவர்களிடையே கனவுக் கல்லூரியாக இருந்தது அவருடைய மற்ற கல்லூரிகள். இறகுப்பந்து, வாலிபால், கால்பந்து, கபடி, கோ கோ, கிரிக்கெட் எனப் பல விளையாட்டுகளில் மாநில அளவிலான அணிகளுக்கு பல மாணவர்களை அனுப்பி வைத்த அவரால் தன் சொந்த விருப்பமான சதுரங்கத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதற்குக் காரணம் அவர் மகன். ஏனோ அவருக்கு சதுரங்கத்தைக் கண்டாலே ஆகாது. 

      இப்போது புதிதாக வாங்கியிருக்கும் கல்லூரியின் உரிமம் மகளுக்காக என்பதால் மகன் அதில் தலையிடாமல் எதையும் செய்து கொள்ளுங்கள் என்றுவிட்டார். அதில் ஏகபோக சந்தோஷம் வைத்திலிங்கத்திற்கு. உடனடியாக தன் கல்லூரிக்கு சதுரங்க மாஸ்டர் ஒருவரைப் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்தவருக்கு நினைவு வந்தது சாணக்கியன் தான். அவனைத் தொடர்பு கொண்டு பேச, பிரியாவை நினைத்து ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினான். 

     ஆனால், போட்டிகளில் பங்கேற்பதற்காக வெளியே செல்லும் நாள்கள் தவிர மற்ற நாட்களில் பகல் நேரம் முழுக்க படிப்பு, சொந்த வேலைகள் என்று தான் இருக்கிறாள். மாலையும் அதிகாலை சிறிது நேரமும் தான் தன்னிடம் பயிற்சிக்காக வருகிறாள் என்பதைக் கணக்கிட்டவனுக்கு, அந்த இடைப்பட்ட நேரத்தில் இதை ஏன் செய்யக்கூடாது என்று தோன்றியது. முடிந்தவரை பிஸியாக இருப்பது நல்லது தானே என்று தோன்றியது.

     கல்லூரியில் படிக்கும் நபர்களுக்கான அடிப்படை பயிற்சி, அதில் யாராவது திறமையானவர்கள் கிடைத்தால் நல்லது தானே என்று நினைத்தவன் அதற்குப் பிறகு வெகுவாக யோசிக்கவில்லை. ஒப்புக்கொண்டு அடுத்த நாளே கல்லூரிக்கு வர அவனை அறிமுகப்படுத்தும் விதமாக செமினார் ஹால் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு துறையில் இருந்தும் மாணவமாணவிகளை வரவழைத்து சதுரங்கம் கற்றுக்கொள்ள விருப்பம் இருப்பவர்கள் பெயர் கொடுக்குமாறு சொன்னார் வைத்திலிங்கம்.

     விளையாட்டின் மீதான ஆர்வத்தில் பெயர் கொடுத்தவர்கள் பாதி என்றால் அவன் அழகைப் பார்த்து அவனோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக பெயர் கொடுத்த மாணவிகள் பலர். அதில் மினியும் ஒருத்தி. அவனைத் தினமும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவளுடைய ஆவலுக்கு சரியான தீனி கிடைத்தது.

     முதல் நாள் என்பதால் விளையாட்டின் அடிப்படை விதிகளைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தவன் கண்ணில் மினி பட்டுவிட, இது இவ காலேஜா என்று சின்னத் திடுக்கிடல் வந்தது உண்மை. அவனும் கல்லூரிக் காலத்தை கடந்து வந்தவன் தானே. 

     மாணவ மாணவியர் மத்தியில் தான் கண்டிப்பாக பேசுபொருளாக இருப்போம் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படி தன்னைப் பற்றி அவர்கள் பேசும் போது இந்த மினி எதுவும் உளராமல் இருக்கவேண்டுமே என்று அவன் பயம் கொள்ள அவன் பயம் எந்தளவு உண்மை என்பது அடுத்த நாளே தெரிந்தது.

     “நேத்து தான் உங்களைப் பத்தி தெரிந்தது. உலகக் கோப்பை வரை போன நீங்க அடுத்து எதுக்காக சார் விளையாடல. ஒரு தோல்வி, ஒரே ஒரு தோல்வி உங்களை ஒட்டு மொத்தமா முடக்கிப் போட்டுடுச்சு. 

     எங்ககிட்ட மட்டும் தோல்வியைக் கண்டு துவளக்கூடாதுன்னு பெருசா பாடம் எல்லாம் எடுக்கிறீங்க. அந்தப் பாடம் எங்களுக்கு மட்டும் தானா? சொல்லிக்கொடுக்கும் உங்களுக்கு இல்லையா?“ என்று கேள்வி கேட்டான் ஒருவன். 

     மினியின் ஏற்பாடு தான் அது. கேள்வி கேட்டவன் மினியின் நெருங்கிய நண்பன். விருப்பமே இல்லாமல் அவளுக்காக பல்லி போல் ஒட்டிக்கொண்டு உடன்வந்தவன் அவன். அவனை உசுப்பேற்றிவிட்டு காரியம் சாதிக்கப் பார்த்தாள் மினி.

     “நம்மைப் பற்றி நம்மைத் தவிர யாருக்கு நல்லாத் தெரியும் சொல்லுங்க. நமக்கு என்ன வரும் என்ன வராது என்பதில் தெளிவு இருக்க வேண்டியது அவசியம். இனி என்னால் விளையாட முடியாதுன்னு உறுதியான பிறகு தான் நான் என்னோட ஆட்டத்தை நிறுத்தினேன். என் முடிவு நான் சம்பந்ததப்பட்டது. அதுக்கு யாருக்கும் நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதைத் தெரிஞ்சுக்கிட்டா மட்டும் தான் நீங்க என்கிட்ட விளையாட்டைக்  கத்துப்பன்னு சொன்னா இழப்பு உங்களுக்குத் தானே தவிர எனக்கு இல்ல“ என்றுவிட்டு சாணக்கியன் சென்றுவிட, தன்னை ஏற்றிவிட்ட மினியைத் திட்டிவிட்டுச் சென்றான் அவளின் நண்பன்.

     நாள்கள் தன்னைப் போல் நகர மினி சாணக்கியனைப் பார்ப்பது கொஞ்சம் கொஞ்சமாக பேசுபொருளாகியது. இத்தனை நாள்களில் அவளோடு படிப்பவர்களையும் சரி சீனியர் மாணவர்களையும் சரி அவள் நிமிர்ந்தும் பார்த்தது இல்லை. அப்படிப்பட்டவள் சாணக்கியனை பச்சையாக சைட் அடிப்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவு அவர்கள் முட்டாள்கள் இல்லையே. 

     ஒருநாள் மாலை நேரம் கல்லூரி முடிந்து கிளம்பும் போது காரணமே இல்லாமல் மினிக்கு திடீரென உள்ளம் படபடப்பாய் இருந்தது. சாணக்கியன் முகம் அகக்கண்ணில் வந்து வந்து  போக அவனை நோக்கி செல்லச் சொல்லி கால்கள் உந்தியது.

     இரண்டு உள்ளங்கள் அன்பு என்னும் கண்ணுக்குத் தெரியாத கயிற்றால் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கும் பட்சத்தில், அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் அதை மற்றவர்களால் உணர முடியும். 

     இவர்கள் விஷயத்தில் மினிக்கு மட்டும் தான் சாணக்கியனின் மீது அன்பும், அக்கறையும், ஈடுபாடும் இருந்தது. ஆனால் அவனுக்கும் சேர்த்து அவள் ஒருத்தியே அன்பு பாராட்டும் விதமாய் எந்நேரமும் அவனைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்ததால் இவளிடமும் அந்த ஆத்மார்த்த உணர்வு உண்டானதோ என்னவோ.

     சாணக்கியனுக்கு என்னவோ என்கிற பதற்றத்துடன் அவன்  ஆஸ்தான இடமான விளையாட்டுக் கருத்தரங்கிற்கு இவள் சென்ற நேரம் வாசல் கதவிற்கு முதுகைக் காட்டிய வண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தான் அவன்.

     நல்லவேளை என்ற நினைப்புடன் பெருமூச்சுவிட்டவள் அருகே சென்று பார்த்த போது, பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றின் புகைப்படத்தை அவன் பார்த்துக்கொண்டிருப்பது புரிந்தது. 

     சாணக்கியன் என்கிற அழைப்புடன் அவன் தோள் தொட அனிச்சை செயலாகத் திரும்பியவனைப் பார்த்து அதிர்வுடன் வாயில் கை வைத்தாள் மினி. மூக்கில் இருந்து வடிந்த இரத்தம் சட்டையில் ஆங்காங்கே கறையாக இருக்க, கண், கன்னம், கழுத்து எல்லாம் வீங்கி பார்க்கவே ஒரு மாதிரி பயமாக இருந்தான்.

     “சாணக்கியன் என்னாச்சு உங்களுக்கு“ என்ற கேவலுடன் அவனைப் போட்டு உலுக்கினாள் மினி. “நிலாவுக்கு குழந்தை பிறந்திருக்கு. ஆண் குழந்தை அப்படியே என்னை மாதிரியே இருக்கான்“ என்றவன் கண்கள் சொருகி தன் அருகே நின்றிருந்த அவள் மீதே மயங்கி விழுந்தான்.

     “சாணக்கியன் கண்ணைத் திறந்து என்னைப் பாருங்க, நான் பேசுறது கேட்கிது தானே. எனக்குப் பயமா இருக்கு, எழுந்திடுங்க ப்ளீஸ்“ நடுங்கிய கரங்களுடன் அவன் கன்னங்களைத் தட்டிக் கொண்டிருந்தாள்.

     அவன் அசையாமல் கிடந்ததைப் பார்க்கையில் அவளுக்கு மட்டும் உலகம் நின்றுவிட்டது போல் தோன்றியது. இதற்கு முன்னால் என்ன நடந்தது இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. நினைவிலும், நிஜத்திலும் அவன் ஒருவன் மட்டுமே நிறைந்திருந்தான். என்ன ஒன்று இரண்டிலுமே அவள் விருப்பத்திற்கு அசைந்து கொடுக்காமல் சிலையைப் போல் இருந்தான் என்பது தான் அங்கே பிரச்சனை. 

     தன்மேல் மயக்கத்தில் கிடப்பவன் மொத்தமாக இல்லாமல் போய்விட்டால் தனக்கென்று எதுவுமே மிச்சம் இருக்கப் போவது இல்லை என்கிற பிரம்மையால் அவனை இன்னும் இன்னும் தனக்குள் புதைத்துக் கொண்டிருந்தாள் மினி.

     சரியாக அந்த நேரத்தில் அங்கே பிரசன்னமாகி இருந்தான் ஜீவன். அன்று மினியின் ஸ்கூட்டி பழுதாகி இருந்ததால் அவளை அழைத்துச் செல்ல வந்திருந்த ஜீவன், கல்லூரி முடிந்து நெடுநேரமாகியும் அவள் வெளியே வராததால் அவளைத் தேடி வந்திருந்தான்.

     அவர்கள் இருவரும் இருந்த நிலையை வைத்தே சூழ்நிலையை உணர்ந்த ஜீவன் நெருங்கி வந்து மினியின் தோள் தொட்டு அவளை சாணக்கியனிடம் இருந்து பிரித்து, மயக்கத்தில் இருந்த நண்பனைத் தன் வசம் ஏற்றான். 

     அவனை அருகாமையில் பார்த்து நெடுநாட்கள் ஆகி இருந்ததால் தன்னை மறந்து சில நொடிகள் அவனை வைத்த கண் எடுக்காமல் பார்த்தவனை, “அத்தான் இவரை உடனடியா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்“ என்று சொல்லி கவனம் கலைத்தாள் மினி.

     அந்த அரைமயக்க நிலையில் கூட ஜீவனின் வாசனைத்திரவியத்தை உணர்ந்தவன் போல் தன்னால் விடுபட முயன்றான் சாணக்கியன். “நான் அவ்வளவு தீண்டத்தகாதவன் ஆயிட்டேனா டா“ மனதால் மரித்தவன், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் வாகனத்தில் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தான்.

     சாணக்கியனைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டார் ஒரு மருத்துவர். அவரிடம் தான் அவன் ரெகுலராக மருத்துவம் பார்த்து வந்தான்.

     “மறுபடியும் டென்ஷன் ஆகி மயங்கி விழுந்துட்டாரா? இவரை என்ன தான் பண்றது“ சலித்தபடி அறைக்குள் வந்தவர் அவனைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தார்.

     “இவனை உங்களுக்குத் தெரியுமா?“ என ஜீவனும், “இவருக்கு அடிக்கடி இப்படி ஆகுமா?“ என மினியும் யாருக்கு என்ன தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருந்ததோ அதைக் கேட்டனர்.

     “இவருக்கு தனிப்பட்ட முறையில் ஏதோ பிரச்சனை. கவுன்சிலிங் போகச் சொன்னா போக மாட்டேங்கிறார். இவ்வளவு தான் காற்றுப் பிடிக்கும் என்று ஒவ்வொரு பலூனுக்கும் ஒரு கொள்ளளவு இருக்கும். அதைத் தாண்டி நாம காற்று அடைச்சிக்கிட்டே இருந்தா என்ன ஆகும், வெடிச்சிடும் தானே.

     மனுஷங்களோட மனசும் அப்படித்தான். ஒரு அளவு தான் கவலைகளையும், கோபங்களையும் தாங்கும். அளவை மீறினா எதுவும் ஆபத்து தான். இவர் மனசைத் திறந்து அவருக்குள்ள இருக்கும் கவலைகளையும், கோபங்களையும் பேசிட்டாலே அழுத்தம் எல்லாம் பாதியாக் குறைஞ்சிடும். அதைச் செய்ய மாட்டேங்கிறார். 

     அதன் விளைவு டென்ஷன் ஆகும் போதெல்லாம் மூளைக்கு செல்லும் நரம்புகளில் இரத்த அழுத்தம் அதிகமாகுது. அது தொடர்ந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் மூளை உடலை மயக்கமடைய கட்டளையிட்டு ஆபத்தின் அறிகுறியைக் காட்ட மூக்கின் வழியா இரத்தத்தை அனுப்புது. உடல் நமக்குக் காட்டும் அறிகுறியைப் புரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிட்டாலே பாதி பிரச்சனை சரியாகிடும். ஆனா நாம அதைப் பண்ண மாட்டோம். சலித்துக்கொண்டே சாணக்கியனுக்கான ஊசி மருந்தை அவன் உடலில் ஏற்றிவிட்டு நகர்ந்தார். 

     சாணக்கியன் உள்ளே நன்றாக உறங்கிக்கொண்டிருக்க, வெளியே வந்தனர் மினி ஜீவன் இருவரும். “மினி நான் வரும் போது நடந்துக்கிட்டு இருந்த சம்பவத்துக்கு எப்படி விளக்கம் சொல்லப் போற“ மென்மையாக ஆரம்பித்தான். அவனுக்கு மினியின் மனதைத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. 

     அவன் நினைப்பது மட்டும் உண்மையாக இருந்தால் என்ற நினைப்பிற்கே கடல் அளவு சந்தோஷம் ஊற்றாய் பெருகி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஓடியது. சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இதற்காகத் தான் நிறையவே போராட வேண்டியது இருக்கும் என்பதும் புரியத் தான் செய்தது. ஆனாலும் பின்வாங்க நினைக்கவில்லை ஜீவன். என்ன செய்தாயினும் சாணக்கியனுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிற வெறி வந்தது. அந்த வெறி அவன் ஆசை நிறைவேறும் வரை அடங்கப்போவதில்லை என்பது அவன் மட்டுமே அறிந்த இரகசியம்.

     சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு அத்தான். அவரோடவே இருக்கணும், அவரைச் சந்தோஷமாப் பார்த்துக்கணும் என்று எப்பவுமே தோணும். இந்த உணர்வுகளுக்கு எல்லாம் இதுவரை பெயர் வைக்காமலே இருந்தேன். ஆனா இப்ப வைச்சா என்னன்னு தோணுது“ மனதை மறைக்காமல் சொல்லிவிட்டாள்.

     சாணக்கியனின் மீதான மினியின் பார்வைகளை செஸ் க்ளப்பில் இருந்தே கவனித்துக்கொண்டு தான் இருந்தான் ஜீவன். அது வயதுப்பெண் எதிர்பாலினத்தின் மீதுகொண்டிருக்கும் இனக்கவர்ச்சியாக இருக்கும் என்று கடந்திருந்தான். இப்போது அவள் தன் உணர்வுகளுக்குக் காதல் என்று பெயர் வைக்க, எந்தளவு மகிழ்ச்சி இருந்ததோ அதே அளவு பயமும் வந்தது ஜீவனுக்கு. இன்னொரு முறை தன் நண்பன் ஏமாறக் கூடாது அதற்கு மினியை ஒருமுறை சோதித்துப் பார்ப்பது நலம் என்னும் நினைப்பில் பேச ஆரம்பித்தான்.

     “இதெல்லாம் சரிவராது மினி. அவனைப் பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது“ மென்மையாக அவன் ஆரம்பிக்க, “எனக்கு அவரைப் பற்றி எல்லாமே தெரியும். அரசன் அங்கிள் அளவுக்குத் தெரியுமான்னு தெரியாது. ஆனால் கண்டிப்பா உங்களை விட அவரை எனக்கு நல்லாத் தெரியும்“ வேகமாகச் சொன்னாள்.

     அதில் கோபம் வந்தது சாணக்கியனின் முன்னாள் நண்பனுக்கு. ஒருகாலம் வரை சாணக்கியனின் நிழலுக்கு உயிர் வந்தது போல் எப்போதும் அவனுடனே இருந்தவன் ஜீவன். ஒரே ஒரு சம்பவம் நகமும் சதையும் போல் இருந்த இருவரையும் இன்று பெருங்கடலின் இரண்டு கரைகளாக நிற்க வைத்து அழகு பார்த்தது.

      பழைய நினைவில் நெஞ்சுக்குழியில் மேலெழும்பும் அமிலத்தைப் போல் உடல் முழுவதும் எரிய, “அவனோட கடந்த காலம் தெரிஞ்சா இப்படி காதல், கத்திரிக்காய் என்று எல்லாம் பேச மாட்டேன்னு நினைக்கிறேன்“ ஜீவன் தன் பேச்சை முடிப்பதற்குள், “அவர் வேணுமான்னு நான் தயங்குவதற்குக்  காரணமா என் வயசு, அப்பா, அண்ணன், நீங்க, அக்கான்னு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், அவர் கட்டாயம் வேணும் என்பதற்கு என்கிட்ட இருக்கும் ஒரே காரணம் அவரோட கடந்த காலம் மட்டும் தான். அவர் எனக்கு வேண்டும் என்பதை விட நான் அவருக்கு வேணும்“ தெள்ளத்தெளிவாகப் பேசினாள் பெண். 


Leave a comment


Comments


Related Post