இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...37 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 11-05-2024

Total Views: 27137

உறக்கத்தில் புரண்டு படுத்தவனின் கை தன்னிச்சையாய் தன்னவளை வளைக்க நீள படுக்கை காலியாக இருந்ததில் கண்களை மூடியபடியே கையால் துழாவினான் தரணி. மெல்ல உறக்கம் கலைய கண்களை சுருக்கியபடி விழித்தவன் தலை தூக்கிப் பார்த்தான்… குளியல் அறையில் தண்ணீர் விழும் சத்தம்… எட்டி கைப்பேசியை எடுத்து நேரம் பார்த்தான்… அதிகாலை 3:20 என்று காட்டியது.


‘பொக்கே ஏன் இந்நேரத்துக்கே குளிக்கிறா…?’ குழப்பமாய் எழுந்து அமர்ந்தான். ‘ஒருவேளை பீரியட்ஸா இருக்குமோ…?’ நினைக்கும்போதே மனதிற்குள் ஒருவித ஏமாற்றம். அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே குளித்து முடித்து கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் பூச்செண்டு. முட்டிவரை டாப் மட்டுமே அணிந்திருந்தவள் “மாமு… நீங்க ஏன் தூங்காம எழுந்து உட்கார்ந்து இருக்கீங்க…?” கேட்டபடியே மேஜையில் இருந்த லெகினை எடுத்து அணியத் தொடங்கினாள்.


“இந்நேரத்துக்கு குளிச்சு தயாராகி எங்கேடி கிளம்பிட்டு இருக்க…?” பின்னங்கழுத்தை வருடியபடியே கேட்க அவனை கேள்வியாய் திரும்பிப் பார்த்தவள் “நேத்து நைட் உங்ககிட்ட…” சொன்னேனே… மறந்துட்டீங்களா கேட்டபடியே ட்ரெஸ்ஸிங் டேபிளின் விளக்கை போட்டு அமர்ந்து தலை வாரத் தொடங்கினாள்.


“என்னடி சொன்ன…?” குழப்பமாய் நெற்றி கீறினான். 


அடர்ந்த முடியை சிக்கெடுத்தபடியே நக்கலாய் அவனை பார்த்தவள் “தண்ணி போட்டு போதையில இருக்கிறவனுக்கு கூட நினைப்பிருக்கும்… ஆனா உங்களுக்கு ராத்திரி நேரத்துல என்ன சொன்னாலும் மண்டையில ஏறுறது இல்ல…” அவனை செல்லமாய் முறைத்தபடியே கூறினாள்.


“நானுமே ராத்திரியானா ராஜபோதையில தானே இருக்கேன்… அப்போ நீ என்ன சொன்னாலும் மூளைல பதியாது…” ஒற்றைக் கண்சிமிட்டி சிரித்தான்.


“இன்னைக்கு எனக்கு ஒரு மேரேஜ் ஃபங்சனுக்கு மேக்கப் புக் ஆகி இருக்கு… நிச்சயதார்த்தத்துக்கு கூட நான்தானே மேக்கப் பண்ணினேன். காலையில 7:00 மணிக்கு முகூர்த்தம்… இப்பவே கிளம்பி போய் ஸ்டார்ட் பண்ணினாதான் சரியா இருக்கும்…கதை கதையா ராத்திரி சொன்னேன்… ம்..ம்னு பதில் வந்ததே… காதுல வாங்கின லட்சணம் அவ்வளவுதானா…” கூந்தலை அள்ளித் தூக்கி ஒரு கிளிப்பிற்குள் அடக்கியிருந்தாள்.


“அந்த ம்க்கு அர்த்தம் வேறடி…” ஒரு மார்க்கமாய் சொன்னபடியே எழுந்து அவள் அருகில் வந்தான்.


“இனிமே நான் மப்புல இருக்கும்போது எதையும் சொல்லாத… ரூமுக்கு வர்றதுக்கு முன்னாலதான் நிதானத்துல இருப்பேன்… அப்பவே சொல்லிடு…” அவளை பின்னிருந்து அணைத்தபடியே கூறியவன் “அஞ்சு நிமிஷத்துல பிரஷ் பண்ணிட்டு ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்… ரெடியா இரு…” என்றபடியே குளியலறை நோக்கி நகர “நீங்க ஏன் மாமு தூக்கத்தை கெடுத்துட்டு வர்றீங்க…? மண்டபம் பக்கம்தான்… ரீனாக்கா ஆன் தி வே என்னை பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்னாங்க… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க… நான் போய்க்கிறேன்..” மெலிதாக செய்து கொண்ட அலங்காரத்தை ஒருமுறை கண்ணாடியில் பார்த்து சரி செய்தபடியே பதில் அளித்தாள்.


நின்று அவளை அவன் ஆழ்ந்து பார்க்க ”இனி இந்த மாதிரிதான் அடிக்கடி டைமிங் பார்க்காம போக வேண்டியது இருக்கும்… நானே போயிட்டு வந்து பழகிக்கிறேன் மாமு… அதான் வண்டி இருக்கே… உங்க தூக்கத்தை கெடுக்காம போய் படுங்க…” அவன் கையை பிடித்து இழுத்து வந்து படுக்கையில் அமர்த்தினாள்.


“இப்பவே டிபன் பண்ணி வச்சா நீங்க சாப்பிடும்போது ரொம்ப ஆறிப் போயிடும்… நல்லா இருக்காது… அதான் எதுவும் பண்ணல… இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் கேண்டின்ல சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க… சாப்பிடாம இருந்துராதீங்க மாமு… நான் போன் பண்ணி செக் பண்ணுவேன்…” கலைந்திருந்த அவன் தலைமுடியை கோதி சரி செய்தபடியே சொன்னவளை இடுப்போடு அணைத்து நெஞ்சில் சாய்ந்து சில நொடிகள் கண்மூடிக் கொண்டான் தரணி.


“பத்திரமா போயிட்டு வாடி.. முகூர்த்த சமயத்தில இதெல்லாம் தவிர்க்க முடியாது… எனக்கும் தெரியும்… எங்கே போனாலும் எப்போ போனாலும் எனக்கு கால் பண்ணிடு… சரியா…” தலையை நிமிர்த்தி அவள் முகம் பார்த்து சொன்னவனை நெற்றியில் முட்டி சரி என்று சிரித்தவள் விலக இன்னும் இடையை இறுக்கமாய் பற்றியவன் “எப்பவும் உன் மாமுவுக்கு கொடுக்கிற மாமூலை கொடுத்துட்டு போடி… நான் கிளம்பும்போது எப்பவும் நீ கொடுப்ப… இன்னைக்கு எனக்கு முன்ன நீ கிளம்புறியே… குடு…” சிறு குழந்தை போல் உதட்டை குவித்து மூக்கை சுழித்து பார்த்தவனை நோக்கி குனிந்தவள் அவன் இரு கன்னங்களில் முத்தமிட்டு இதழிலும் அழுத்தமாய் முத்தமிட்டு தனது மேக்கப் கிட்டை கையில் எடுக்க அவள் கைப்பேசி அழைத்தது.


“ரீனா அக்கா வந்துட்டாங்க… நான் வரேன் மாமு…” என்றபடியே போனை எடுத்து காதில் வைத்து பேசியபடியே வெளியேறினாள். தரணியின் உறக்கம் முற்றிலும் கலைந்திருக்க எழுந்து வெளியே வந்து காரிடாரில் நின்றபடி பார்க்க ரீனாவின் காரில் ஏறி புறப்பட்டிருந்தாள் பூச்செண்டு. மெல்லிய புன்னகையுடன் வீட்டிற்குள் நுழைந்தவன் உறக்கம் பிடிக்காததால் டிவியை ஆன் செய்து அமர்ந்து கொண்டான்.


மீராவின் வளைகாப்பு முடிந்து தரணியும் பூச்செண்டு மட்டுமே ஊர் திரும்பி இருந்தனர். மீராவிற்கு மதுரையில் வைத்தே பிரசவம் பார்ப்பது என்பது ஏற்கனவே முடிவான ஒன்றுதான். செண்பகம் மல்லிகா பாட்டி என்று அவளை பார்த்துக்கொள்ள ஆள் மாற்றி ஆள் இருக்கிறார்கள். வேலையை ராஜினாமா செய்யாமல் மருத்துவ விடுப்பு மட்டுமே எடுத்துக் கொண்டாள் மீரா. அவள் தனது வேலையை எந்தளவு நேசிக்கிறாள் என்பது முகிலனுக்கும் தெரியும். அத்துடன் அவர்களது வேலையை வீட்டிலிருந்து செய்ய முடியும் என்பதால் அவள் எண்ணத்திற்கு ஒத்துக் கொண்டான் முகிலன். அவனும் இனி குழந்தை பிறக்கும்வரை வீட்டில் இருந்தே வேலை செய்யும் முடிவோடுதான் சென்றிருந்தான். அவன் அருகாமை அவளுக்கு அவசியம்… அதனால் அவனும் பெங்களூர் திரும்பி வர சில மாதங்கள் ஆகலாம்…  தரணியும் பூச்செண்டும் மட்டுமே இப்போது தனியே இருக்கின்றனர்.


விளையாட்டும் சில்மிஷமும் காதலும் கலவியும் என்று மகிழ்ச்சியாக இவர்களது நாட்களும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. பூச்செண்டும் தனது திறமையால் நிறைய வாடிக்கையாளர்களை ஏற்படுத்தி தனது வேலையை முன்னேற்றிக் கொண்டிருக்கிறாள். உதவிக்கு ஒரு பெண்ணையும் நியமித்திருக்கிறாள். அவளது பார்லரை ஒட்டியுள்ள பொட்டிக் ஷாப்பின் உரிமையாளர்தான் ரீனா. அவள் கணவன் அசோக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் உள்ளான். ஓரளவு நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் முடிந்து தற்போது ஒரு வயதில் ஒரு குழந்தை. பூச்செண்டிற்கும் ரீனாவிற்கும் இடையே நல்ல நட்பு உருவானது. அவள் பொட்டிக் ஷாப் வைத்திருப்பதால் அவளது வாடிக்கையாளர்களை அப்படியே பூச்சண்டிற்கு அறிமுகம் செய்து வைத்து அவள் மூலம் பூச்செண்டின் தொழிலிலும் நல்ல முன்னேற்றம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகவும் நல்ல தோழமையுடனும் இருக்கின்றனர். 


பிறந்தது வளர்ந்தது வாழ்க்கைப்பட்டது அனைத்தும் பெங்களூரு என்பதால் ரீனா இயல்பாகவே முற்போக்கு சிந்தனை உள்ள நவநாகரீகப் பெண். அவளிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறாள் பூச்செண்டு. இன்று ஓட அவளது நெருக்கமான உறவுப் பெண்ணின் அலங்காரத்திற்குத்தான் அதிகாலையில் கிளம்பி சென்றிருக்கிறாள். ரீனாவுடன் பூச்செண்டு அதீத நெருக்கம் காட்டுவதில் தரணிக்கு ஏனோ பெரிதும் உடன்பாடு இல்லை. ரீனாவிடம் ஏதோ தவறு இருப்பதாக அவனது உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. 


“உனக்கும் அவளுக்கும் எப்படிடீ செட் ஆகுது… அவளை பார்த்தாலே ஓவர் ஆட்டிட்டியூட் காட்டுற பொண்ணு மாதிரி தெரியுது…” யோசனையாய் தன் மனைவியிடம் கூறி இருக்கிறான்.


“உங்க பார்வைக்குத்தான் அப்படி தெரியுது. அவங்க பார்க்கத்தான் ரொம்ப ஸ்டைலிஷா தெரியுறாங்க… ஆனா ரொம்ப நல்ல டைப் தெரியுமா… எனக்கு எவ்வளவு சப்போர்ட் பண்றாங்க தெரியுமா…?” வேகமாக வக்காலத்து வாங்குவாள் பூச்செண்டு. 


“என்னவோ கொஞ்சம் பார்த்து கவனமா பழகுடி… உனக்குன்னு தனித்துவமான க்வாலிட்டிஸ் இருக்கு… யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் அதையெல்லாம் நீ மாத்திரக்கூடாது… எல்லாத்துக்கும் நான் உனக்கு சப்போர்ட் பண்ண இருக்கேன்… அந்த பொண்ணுகிட்ட கொஞ்சம் கவனமா பழகு.. என் மனசுக்கு தோணிச்சு சொல்றேன்…” தன் மனதில் தோன்றியதை கூறி இருந்தான்.


“அதெல்லாம் உங்க பொண்டாட்டி தெளிவாதான் இருப்பா... யூ டோன்ட் ஒரி மாமு…” அழுத்தமாய் அவன் நெற்றியில் முத்தமிட்டு மடியில் ஏறி அமர்ந்து வேறு கதைகள் பேசத் தொடங்கினாள்.


அடுத்தடுத்த நாட்களும் ஓடி மீராவிற்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்ததாக செய்தி வர உடனடியாக மீண்டும் தவசிபுரம் நோக்கி பயணித்தனர் இருவரும். கொள்ளுப் பேரனை கையில் ஏந்தி கொஞ்சித் தீர்த்த பாட்டிக்கு இன்னும் பத்து வயது குறைந்தது போல் இளமை திரும்பி இருந்தது. மல்லிகா செண்பகம் இருவரின் கவனிப்பிலும் தாய்மையின் பூரிப்பிலும் இன்னும் மெருகேறி இருந்தாள் மீரா. முத்துராமனும் அனுசுயாவும் குழந்தையை பார்க்க வந்தனர்.


“சீக்கிரம் ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து கையில கொடுத்துரு மருமகளே… தரணியைத்தான் ஹாஸ்டல் லைஃப்ல எங்களோட வேலைக்காக தள்ளியே வெச்சிருக்கிற மாதிரி ஆயிடுச்சு… இப்பக்கூட நீங்க ஒரு திசையில நாங்க ஒரு திசையிலதான் இருக்கோம்… அடுத்த மாசம் மாமா ரிட்டையர் ஆயிடுவார்… நீ மட்டும் பிள்ளையை பெத்துக்கொடு… நானும் விஆர்எஸ் வாங்கிடுவேன்… எங்க பேரக் குழந்தையை ஆசை தீர வளர்த்து எங்க ஏக்கத்தை எல்லாம் போக்கிக்கிறோம்…” குட்டிக் குழந்தையை பூக்குவியலாய் மடியில் போட்டபடி தன் மருமகளிடம் கண்கள் மின்ன ஆசையாய் கூறினார் அனுசுயா.


“நிச்சயமா அத்த…” தானும் கூறியவள் தன் முனி மாமாவின் குழந்தையை ஆசை தீர கொஞ்சினாள்.


“எல்லாரும் முகில்தானே கூப்பிடுறாங்க… நீ மட்டும் ஏன்டி என் புருஷனை முனின்னு கூப்பிடுற…? அவர்தான் இப்ப எல்லாம் உன்னை நரிச்சின்னக்கான்னு கூப்பிடுறதே இல்லையே… பட்டப்பெயர் வச்சு கூப்பிட்டு நாளைக்கு என் பையனும் அப்படியே கூப்பிட போறான்டி உன்னால…” செல்லமாய் பூச்செண்டிடம் சண்டையிட்டாள் மீரா.


“அவ ஒருத்தியாச்சும் வச்ச பேரை சொல்லி கூப்பிடுறாளே… அந்த மட்டுக்கும் எங்களுக்கெல்லாம் சந்தோசம்தேன்…” என்று இடை புகுந்தார் பாட்டி.


“அப்பத்தா… உன்னை கோலா உருண்டை செய்யச் சொன்னேன்ல… இப்பவே வயிறு பசிக்க ஆரம்பிச்சிடுச்சு… போய் சீக்கிரம் வேலையை முடிக்கப் பாரு…” தன் பாட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்துவதிலேயே குறியானான் முகிலன்.


“அட இருடா வெவஸ்த கெட்ட பயலே…” தன் கையை உதறிக் கொண்டவரிடம் “முனி அவருடைய பட்டப் பேருதானே பாட்டி… நீங்க வேற ஏதோ சொல்றீங்களே…” குழப்பமாய் கேள்வியை எடுத்துவிட்டாள் மீரா.


“ம்க்கும்… அவனுக்கு நம்ம கொலசாமி முனீஸ்வரன் பேரத்தேன் மொதல்ல வெச்சேன்… வெவரம் தெரிய ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பேரை மாத்தச் சொல்லி ஒரே கலாட்டா… அப்புறம்தேன் கார்முகிலன்டு வெச்சது… ஆரம்பத்துல நாங்க எல்லாருமே முனின்டுதான் கூப்பிடுவோம்… கொன்டுபுடுவேன் கொரவளைய மென்டுபுடுவேன்டு எல்லாரையும் மெரட்டி முகிலுன்டு கூப்பிட வச்சியான் இந்த பொசகட்ட பய… இவ ஒருத்திய மட்டும் அவனாலயும் அடக்க முடியல… இவே பட்டப்பேய் வச்சியான்டு இவனை முனின்டு கூப்பிட ஆரம்பிச்சிட்டா…” சுருங்க கதையை கூறி முடித்தவர் “ஏன்டா… கட்டின பொண்டாட்டிகிட்ட வச்ச பேரை கூட சொல்லாம மறைப்பியாக்கும்… உன் பையனுக்கும் முனீஸ்வரன்டு நம்ம கொலசாமி பேரைத்தான் முதல்ல வைக்கணும்… அதுக்கப்புறம் நீ என்ன வேணா வெச்சுட்டு போ…” என்ற பாட்டியை பத்த வச்சுட்டுயே பரட்ட என்ற ரீதியில் கொலைவெறியுடன் பார்த்தான் முகிலன்.


“முனி மாமான்னு நான் கூப்பிடுறதை நீங்க எப்படி பட்டப்பேர்னு நினைச்சீங்க அக்கா…” மீராவின் கையில் இருந்த குழந்தையை தன் கைக்கு மாற்றிக் கொண்டே கேட்டாள் பூச்செண்டு.


“முகிலனை ஷார்ட்டா முனின்னு கூப்பிடுறதால்ல உன் மாமா கதை சொல்லி வச்சிருந்தார்..” முகிலனை பார்த்து நக்கலாய் சிரித்தபடி மீரா கூற “முனீஸ்வரா… தோட்டத்துக்கு போகலாம் வர்றியா…” சற்றுத் தள்ளி நின்று சத்தமாய் அழைத்த தரணியை “டேய்ய்…” என்று திரும்பி முகிலன் முறைக்க “வாடா முனி… கிணத்துல போய் குளிச்சிட்டு வரலாம்…” தோள்கள் குலுங்க சிரித்தபடியே அவன் அழைக்க “உன்னை கிணத்துல தள்ளி கொல்றேன் பாரு…” என்று முகிலன் துரத்த அவன் ஓட குடும்பமே சிரிப்பில் ஆழ்ந்து போனது.


“சின்ன முனி என்ன பண்றான்…?” என்று வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டு திரிந்தாலும் தன் நண்பனின் குழந்தையை எந்நேரமும் கையில் அள்ளி எடுத்து குழந்தையின் கையை வருடுவது காலை வருடுவது நெற்றியை வருடுவதமாக அந்த மென்பஞ்சு ஸ்பரிசத்தில் பெரிதும் உவரி கொண்டான் தரணி. குழந்தை, அந்த ஸ்பரிசம், அழகு, சிரிப்பு, அழுகை, செல்லப் புலம்பல் என்று அனைத்தும் அவனை பெரிதும் ஈர்த்தன. ஊருக்கு கிளம்பி வந்தபின்னும் வீடியோ கால் மூலம் குழந்தையை காட்டச் சொல்வான்.


இப்பொழுதெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆசை அதிகரித்துப் போனது. ஒவ்வொரு முறை தன் மனைவியை நாடும்போதும் மனப்பூர்வமான ஒன்றலில் தனது உயிர்நீர் அவள் கருவில் தங்கிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துப் போனது. அவளோ மாதம் தவறாமல் 28 ஆம் நாள் தலைக்கு குளித்துவிட ஏமாற்றம் இதயத்தில் அறையும். தன்னைப் போன்றே அவளுக்கும் ஆழ்மனதில் ஆத்மார்த்தமாய் ஆசை எழ வேண்டுமே… ஒருக்கால் தன்னைப்போல் அவளுக்கு எண்ணம் இல்லையோ… அதனால்தான் தாமதமாகிறதோ என்ற குழப்பம் எழும். ஆனால் அவள்தான் ஆசையாய் தன்னை அள்ளிக் கொடுத்து அவன் ஆராதிப்பதை மனம் ஒன்றி ஏற்றுக் கொள்கிறாளே. பின் இன்னும் ஏன் தாமதம்…? ஒருவேளை என்னிடமோ அவளிடமோ ஏதேனும் குறை இருந்தால்…?


“பொக்கே… இன்னைக்கு ஈவினிங் டாக்டர் ஹரணிகிட்ட அப்பாயிண்ட்மெண்ட் போட்டிருக்கேன்… நம்ம ரெண்டு பேருக்கும் செக்கப் இருக்கு… ரெடியா இரு…” காலை அலுவலகத்திற்கு கிளம்பும்போது கூற அதிர்ந்து அவனை ஏறிட்டாள் பூச்செண்டு.




Leave a comment


Comments


Related Post