இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 30 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 11-05-2024

Total Views: 17656

செந்தூரா 30



ஆராத்யாவிற்கு கோபத்தாலும் அவமானத்தாலும்  முகம் ரத்தமென சிவந்திருந்தது. இரண்டு நாளில் நீ என்னை வீட்டை விட்டு அனுப்பறியா இல்லை நான் உன்னை வீட்டை விட்டு அனுப்பறனானு பார்க்கலாம் என்று மனதிற்குள் சூளுரைத்து கொண்டு விழா நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு சென்றாள்.


முகவாட்டத்துடன் வந்து நிற்கும் மகளை கேள்வியாக பார்த்தார் சங்கரபாண்டியன். தந்தையை பார்த்ததும் ஆராத்யாவின் கண்கள் கலங்கிவிட பதறிப்போனார். மகளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு தனியே சென்று என்னவென்று விசாரித்தார். அவள் தாரிகா தன்னை மிரட்டியதையும் கை நீட்டி அடித்ததையும் கூற அவர் ஆத்திரத்துடன் “அவ்வளவு திமிரா அவளுக்கு, இரு வரேன்” என்று நகர போனவரை கைப்பிடித்து தடுத்தாள்.


“டாடி நீங்க அவளை என்ன பண்ணாலும் மித்ரன் நம்மை சும்மா விடமாட்டார். வீணா அவர் வெறுப்பை சம்பாதிக்க வேணாம்” என்றாள் எச்சரிக்கையாக.


“அப்போ அவளை சும்மா விட சொல்றியா?” என்று கர்ஜித்தார் 


“இல்லை, நான் சொல்ற மாதிரி செய்யுங்க” என்று அவர் காதில் சில விசயங்களை சொன்னாள். அவர் அதிர்ச்சியுடன் மகளை பார்த்தார். “இது ரிஸ்க்னு தெரியும் டாடி. ஆனால் கரெக்டா செய்துட்டா போதும், மித்ரன் எனக்கு தான்” என்றாள். அவரும் ஆமோதிப்பாய் தலையை அசைத்தார்.


சில மணிநேரத்தில் விழா முடிவு பெற அனைவரும் ஒரு பெரிய சாப்பாட்டு மேஜையை சுற்றி அமர்ந்து பேசி சிரித்து கொண்டே சாப்பிட்டார்கள். செந்தூரன் மனைவியிடம் திரும்பி, “ஹனி ஆல் ஓகே தானே? என் பிளான் உனக்கு பிடிச்சிருந்ததா?” என்று கேட்டான்.


“உன்னை நினைச்சு பெருமையாக இருக்கு மாமா” என்று அவன் கையை பிடித்து அழுத்தினாள். அவனோ அவள் கன்னத்தை பற்றி இழுத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.


உடன் உணவு அருந்தி கொண்டிருந்த அனைவரும் “ஹக்கும் உக்கும்” என்று விதவிதமாக தொண்டையை செருமி கனைத்தனர். ஆராத்யா கீழ்கண்ணால் அவர்களை வெறுப்புடன் பார்த்து விட்டு தன் தந்தையை பார்த்தாள். அவர் விழியசைவால் அவளை அமைதியாக இருக்கும்படி சொன்னார்.


தாரிகா சாப்பிட்டு கொண்டே ஆராத்யாவை பார்த்தாள். அவள் தலையை குனிந்தபடி உணவருந்தி கொண்டு இருந்தாள். இன்று கன்னத்தில் அறைந்ததை முன்பே செய்திருந்தால் அமைதியாக இருந்திருப்பாள் போலும். இனியாவது புத்தி வந்தால் சரி என்று அவளும் தன் சாப்பாட்டில் கவனம் செலுத்தினாள்.


அனைவரும் மனதிருப்தியுடன் வீடு வந்து சேர்ந்தனர். மறுநாள் அனைவரையும் மகாபலிபுரம் அழைத்துச் சென்றான் செந்தூரன். சார்லஸ் அவனிடம் பல்லவ மன்னர்களின் கலைத்திறனை ரசித்து பாராட்டி பேசிக்கொண்டு இருந்தார்.


தாரிகாவும் காயத்ரியும் கடற்கரையின் அலைகளில் துள்ளி குதித்து விளையாடி கொண்டு இருந்தனர். அவனுக்கும் அவர்களுடன் கலந்து விளையாட ஆசை தான். ஆனால் சார்லஸ்க்கு மதிப்பு கொடுத்து அவர் பேச்சை கேட்டு கொண்டு இருந்தான். ஆனாலும் அவன் பார்வை மனைவியையே வட்டமடித்தது. அதை உணர்ந்து கொண்டவர், “ஹாய் யங் மேன் எப்பவும் உன் மனைவியையே பார்த்ததுண்டு இருந்தால் எப்படி மேன்? அவங்களை அவ்வளவு பிடிக்குமா?” என்று கேட்டார்.


“ஆமா அவள் என் உயிர் காதலி, ஷி இஸ் மை லைஃப், ஐ லவ் ஹர் சோ மச்….” என்று மேலும் பேசிக்கொண்டே இருந்தவனை ஆச்சரியமாக பார்த்து, “நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே மித்ரன்?” என்று கேட்டார்.


“சொல்லுங்க மிஸ்டர் சார்லஸ்” என்று அவரை ஊக்கினான்.


“நீ எங்க ஆராத்யாவை வேண்டாம்னு மறுத்தபோது நான் கூட உன் தாரிகா எங்க ஆராவை விட பெட்டரா இருப்பாளோனு நினைச்சேன். ஆனால் ஆராத்யாவை கம்பேர் பண்ணும் போது தாரிகா கொஞ்சம் அழகு குறைவு தான். ஆனால் நீ அந்த பெண்ணை தான் உருகி உருகி லவ் பண்றே. அதுவும் திருமணம் ஆன பின்னாடி உன் காதல் இன்னும் அதிகமாகியிருக்கிறது போல தோணுது, இது எப்படி?” என்று கேட்டார் சார்லஸ்.


அழகான புன்னகை ஒன்றை உதிர்த்தவன், “லைலா மஜ்னு தெரியுமா சார்லஸ்? லைலாவோட அழகை மஜ்னுவோட விழிகள் மூலமாக பார்த்தால்தான் தெரியும்னு சொல்வாங்க கேள்வி பட்டு இருக்கீங்களா? அது போல என் தாரிகா என் கண்களுக்கு பேரழகியாக தெரியுறா. என்னோட கண்களுக்கும் இதயத்திற்க்கும் நெருக்கமானவ. அவளை என் அத்தை பொண்ணு என்பதற்காக மட்டுமே விரும்பலை. அவளை கிட்ட இருந்து அணு அணுவா ரசித்து இருக்கேன். எனக்காகவே பிறந்து அவள் வளர்றதாக தான் எனக்கு தோணும். அவள் வளர்ந்து என்னோடு சேர்றதுக்காக ஆறு வயதிலிருந்து 22 வருஷமா காத்திட்டு இருந்தேன். இவ்வளவு காத்திருந்து கிடைச்ச என் காதல் மனைவி மேல் எனக்கு காதல் கூடிட்டே தான் போகுமே தவிர குறையாது. திருமணத்துக்கு பின்னாடி தான் அவளும் எனக்காக உருகி தவிச்சிருக்காள் என்றும் என்னை எந்த அளவுக்கு காதலிச்சு இருக்காள் என்றும் எனக்கு புரிஞ்சுது. என்னோட காதலுக்கும் காத்திருப்புக்கும் கொஞ்சமும் குறையாதது அவளோட காதல். 


அதுமட்டுமில்லாமல் யார் யாரை விட அழகுனு ஆராய்ச்சி பண்ணி காதல் செய்ய நான் ஒன்றும் அழகி போட்டிக்கு ஆள் எடுக்கலை. என் தாரா தான் என்னை பொருத்தவரை உலக அழகி. உங்கள் ஆராத்யாவிற்கு செய்யற மேக்கப்பை என் தாராவுக்கும் செய்தால் அவள் ஆராத்யாவை விட அழகாக இருப்பாள். ஆனால் எனக்கு இயற்கையான அழகில் பாந்தமாக இருக்கும் என் தாராவின் இப்போதைய அழகே போதும்” என்று முடித்தான்.


“வாவ்! வாவ்! வாட் எ லவ்!” என்று சார்லஸ் கைத்தட்டி ஆரவாரித்தார். “இந்தியர்களோட கலைகள் மட்டுமில்ல காதலும் தனித்துமானதுனு நிருபிச்சிட்டிங்க மித்ரன், உங்கள் மனைவி ரொம்ப கொடுத்து வைச்சவங்க” என்று சிலாகித்து பேசினார்.


அன்று இரவே சார்லஸ் தன் நாட்டிற்கு கிளம்பினார். சங்கரபாண்டியன் தன்னுடைய பரம்பரை சொத்தை விற்க வேண்டும் என்பதால் இரண்டு நாட்கள் கழித்து ஆராத்யாவுடன் வருவதாக கூறிவிட்டார்.


ஜானகியும் ரஞ்சிதம் ஆச்சியும் கூட பொள்ளாச்சிக்கு கிளம்பி விட்டனர். சாரதாவும் சுபாஷ்ம் இரண்டு நாட்களுக்கு தாராவை தங்கள் வீட்டிற்கு அழைத்து போவதாக கேட்டதற்கு அனுப்ப முடியாது என்று மறுத்து விட்டான்.


“டேய் அவள் எங்களுக்கு ஒரே பொண்ணுடா எங்களுக்கும் அவளோட இருக்க வேண்டும் என்று ஆசை இருக்காதா?” என்றார் சாரதா செந்தூரனை முறைத்துக் கொண்டு.


“அவ கூட இருக்கணும்னா இங்கேயே இன்னும் இரண்டு நாள் வேணா இருந்துட்டு போங்க. அவளை அனுப்பி வைக்க எல்லாம் முடியாது. என் வேலை எல்லாம் முடிஞ்சதும் நானே அவளை கூட்டிட்டு வந்து இரண்டு நாள் இருந்துட்டு போறேன்” என்றான் தீர்மானமாக


“எனக்கு வேலை இருக்கு செந்தூரா நாங்கள் கிளம்பறோம். நீயே தாராவை அழைச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டு போ” என்றார் சுபாஷ்.


அதன் பிறகு காயத்ரி குடும்பத்துடன் அவர்கள் இருவரும் கிளம்பி விட்டனர்.


இறுதியாக சங்கரபாண்டியன் மற்றும் ஆராத்யா மட்டும் மாடியில் இருந்த அறையில் இருந்தனர். செந்தூரன் கவினை அழைத்து கொண்டு தன் வேலையை பார்க்க கிளம்பி சென்றான்.


செந்தூரனும் கவினும் விவசாய ஆட்களை பார்க்க அங்கே சுற்றியிருந்த கிராமங்களுக்கு சென்றனர். அவர்களை சந்தித்து ஆக்ரோ டெக்னாலஜி கம்பெனியுடன் அவர்களின் விவரங்களை பதிந்து கொள்ளுமாறு கூறினார்கள். இதன் மூலம் அவர்களின் விளைச்சல் பொருட்களை நேரடியையாக ஆன்லைனில் விற்கலாம், வாங்கலாம். மேலும் அவர்கள் நிலத்தில் பணிபுரிய ஆட்கள் வேண்டுமென்றாலும், அவர்களுக்கு வேலை வேண்டும் என்றாலும் அவர்களின் நிறுவனத்தின் மூலமாகவே செயலியின் மூலமுமாகவோ ஏற்பாடு செய்துக் கொள்ளலாம்.


புதிதாக விவசாயம் தொடங்கும் ஆர்வத்தில் இருப்பவர்களுக்கு விவசாயத்துறை வல்லுநர்களால் பயிற்சியும், தரமான விதைகளும் வழங்கப்படும் என்று அனைவருக்கும் புரியும் வகையில் அனைவருக்கும் விளக்கி கொண்டிருந்தான் செந்தூரன். அதற்காக அவன் உருவாக்கி இருந்த செயலிக்கும் செந்தூரன் என்றே பெயர் வைத்திருந்தான்.


அனைவருக்கும் அவன் திட்டம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதால் ஊர் ஊராக கவினும் செந்தூரனும் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.


அப்படி ஒரு கிராமத்திற்கு ஒற்றையடி பாதை வழியாக அவர்கள் கார் சென்ற எதிரே ஒரு பெரிய லாரி வேகமாக வந்துக் கொண்டு இருந்தது. சட்டென காரை செந்தூரனால் திருப்ப முடியவில்லை. முடிந்தவரை ஓரமாக நிறுத்தினான். ஆனாலும் எதிர் திசையில் வந்த அந்த லாரி செல்வதற்கு போதுமான இடம் அங்கே இல்லை என்பதால் சற்று பொறுக்குமாறு கையசைத்தான்.


முதலில் அந்த லாரி வேகம் குறைந்தது போல இருக்கவே, கவினிடம் திரும்பி, கவின் நீ இறங்கி எனக்கு பின்னாடி வழி சொல்லு, நான் ரிவர்ஸ் எடுக்கிறேன் என்றான். கவினும் சம்மதமாக கீழே இறங்கி காருக்கு பின்னால் சென்று நின்றான். செந்தூரன் பின்னால் கவினை திரும்பி பார்த்தபடி காரை செலுத்திக் கொண்டிருந்த சமயம் அந்த லாரி அதி வேகமாக செந்தூரனின் காரை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.


செந்தூரன் லாரி எதிர்திசையில் காத்திருப்பதாக நினைத்து திரும்பி காரை ரிவர்ஸ் எடுத்துக்கொண்டு இருக்கும் போதே லாரி வேகமாக அவன் காரை பக்கவாட்டாக இடித்துவிட்டு வேகமாக சென்றுவிட, காரும் அதேவேகத்துடன் ஒருபக்கமாக உருண்டு விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இது எல்லாம் நடந்து முடிந்திருக்க கவினுக்கு இதயமே நின்றுவிடும் போல ஆனது.


தன்னை சுதாரித்துக் கொண்டு உருண்டுகொண்டிருந்த காரை நோக்கி ஓடினான். தலைகுப்புற சாய்ந்திருந்த அந்த காரில் செந்தூரமித்ரன் இரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்திருந்தான். ஐயோ என்று தலையில் இருகைகளையும் வைத்து கால்கள் தள்ளாடி கீழே விழுந்தான். கீழே விழுந்தவன் பக்கவாட்டாக நண்பனை திரும்பி பார்த்தான். செந்தூரனின் நெஞ்சுக்கூடு அவன் சுவாசத்தை உறுதிப்படுத்தவும் புயல் என எழுந்து 108 க்கு போன் செய்து அழைத்தான். உடனே கதிரேசனுக்கும் சுபாஷூக்கும் தகவல் சொல்லிவிட்டு, தாரிகாவிடம் நேரிடையாக சொல்ல தயங்கி, சங்கரபாண்டியனுக்கு அழைத்து விவரத்தை சொன்னான்.


“சார், தங்கச்சி ரொம்ப பயந்துடும். எதாவது சொல்லி மருத்துவமனைக்கு அழைச்சிட்டு வாங்க. மித்ரனின் அப்பா வீடு இங்கே இருந்து பக்கம் தான், அவர்கள் அதுக்குள்ள வந்திடுவாங்க” என்றான்.


“என்னப்பா சொல்றே மித்ரனோட உயிருக்கு ஏதும் பாதிப்பில்லையே?” என்று பதறினார் சங்கரபாண்டியன். “தெரியலை அங்கிள், ஆம்புலன்ஸ் வந்துடுச்சு, நீங்க ஆஸ்பிட்டல் வாங்க. அங்கே பேசிக்கலாம்” என்று பரபரப்புடன் பேசிவிட்டு போனை அணைத்திருந்தான்.


கதிரேசன் விஷயம் கேள்விப்பட்டு அதிர்ச்சியுடன் வீட்டில் இருப்பவர்களுக்கு சொல்ல ஜானகி தலையில் அடித்துக் கொண்டு அழுதார். நால்வரும் அவசர அவசரமாக கவின் சொல்லியிருந்த ஆஸ்பிட்டலுக்கு விரைந்தனர்.


அங்கே செந்தூரன் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். ஜானகியையும் ரஞ்சிதம் ஆச்சியையும் கதறி அழுதுக் கொண்டிருக்க, கதிரேசன் வாயில் துண்டை வைத்து தன் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தார். முத்துப்பாண்டி இடிந்து போய் அமர்ந்திருந்தார். வீட்டின் ஒரே ஆண்வாரிசு இப்படி அடிப்பட்டு ஐசியூவில் இருந்தால் அவர்களால் தாங்கி கொள்ள முடியுமா என்ன?


யாரை யார் தேற்றுவது என்று ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுது கரைந்துக் கொண்டிருந்தனர். கவினுமே அழுது கொண்டிருந்தான்.


யாரோ கதவு தட்டும் ஓசை கேட்கவும் தாரிகா, “யாரது?” என்று குரல் கொடுத்தாள். “நான் தான்ம்மா சங்கரபாண்டியன்” என்று அவர் பதில் கொடுக்கவும், அவள் அறை வரைக்கும் வந்து எதற்காக அழைக்கிறார் என்ற கேள்வியுடன் வெளியே வந்தவள், “சொல்லுங்க அங்கிள்” என்றாள்.


“கொஞ்சம் என்கூட மருத்துவமனை வரைக்கும் வாம்மா” என்றார். அவள் கேள்வியுடன் ஆராத்யாவை பார்க்க அவள் அழுதுக் கொண்டிருந்தாள். “யாருக்கு என்ன ஆச்சு அங்கிள்? எதுக்கு ஆரா அழுவுறாங்க?” என்றாள் குழப்பத்துடன் பார்த்து.


“நீ வாம்மா, நான் சொல்றேன்” என்று அழைக்கவும், “இருங்க நான் மாமாக்கு கூப்பிடுறேன், அவரை அழைச்சிட்டு போங்க. இந்த ஊரு எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை” என்றாள். “பரவாயில்லைம்மா, நீ எங்க கூட வந்தால் மட்டும் போதும்” என்றார். “ஆராத்யாவிற்கு தான் ஏதோ உடம்பு சரியில்லையோ” என்று யோசனையுடன் அவளை பார்த்தபடி, “சரி வாங்க போகலாம்” என்று அவருடன் நடந்தாள்.


சங்கரபாண்டியனே அங்கிருந்த காரை எடுத்து டிரைவர் சீட்டில் அமரவும் ஆராத்யா அவர் அருகே முன்சீட்டில் அமர்ந்து கொண்டாள். தாரிகா பின் சீட்டில் அமர்ந்து கொண்டு வந்தாள். மருத்துவமனை வரும் வரை இருவருமே அவளிடம் எதுவுமே சொல்லவில்லை. உள்ளே நுழைந்தவுடன் தாரிகாவை முன்னால் நடக்கச் சொன்னார் சங்கரபாண்டியன்.


கேள்வியாக அவரை பார்த்தபடி முன்னால் அடியெடுத்து வைத்தவளின் பார்வை அதிர்ச்சியில் விரிந்தது. கதிரேசன் ஜானகி, தாத்தா பாட்டி என அனைவரும் இங்கே இருக்கிறார்கள், அதுவும் அழுதுக் கொண்டிருக்கிறார்கள் என்றாள் யாருக்கு என்ன ஆயிற்று? வயிற்றில் பயப்பந்து வேகமாக உருண்டோடி வந்து தொண்டையில் சிக்கிக் கொண்டது போல இருந்தது.


மெல்ல ஜானகியின் அருகில் வந்தவள் அவர் தோளில் கைவைத்து, “அத்தை ஏன் எல்லாரும் இங்கே இருக்கீங்க? யாருக்கு என்னாச்சு?” என்று கேட்டவளை திரும்பி பார்த்த ஜானகி கண்களில் வழிந்துக் கொண்டிருக்கும் கண்ணீரையும் மீறி அவளை சுட்டெரிப்பது போல பார்த்தார்.


“ என்ன ஆச்சு அத்தை?” என்றாள் பதற்றத்தை கட்டுப்படுத்திக் கொண்டு. ஏதோ விபரீதம் என்று மூளையில் சுளீரென்று உறைக்க உடம்பு நடுங்கியது.


“என்ன ஆச்சு? என்ன ஆச்சுன்னா கேட்கிறே? என் மகன் உயிரை குடிக்க வந்த எமனே? நீ என்னைக்கு அவனுக்கு பொண்டாட்டியா வந்தயோ அன்னைக்கே அவன் உயிருக்கு உத்திரவாதம் இல்லைனு ஆயிடுச்சு. இப்போ உனக்கு சந்தோசம் தானே? இரண்டு தரம் அவனுக்கு ஆபத்தை கோடு போட்டு காண்பிச்சிடுச்சி அந்த தெய்வம். அப்பவே சுதாரிச்சு இருக்கணும். மூணாவது முறையா வந்திருக்கும் இந்த ஆபத்துல இருந்து என் மகன் மீண்டு வருவானான்னு தெரியலையே? அய்யோ கடவுளே” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.


“அத்தை” என்று அலறிவிட்டாள். “மாமாக்கு என்ன ஆச்சு” என்று அதிர்ச்சியில் அந்த மருத்துவமனையே அலறும்படி கத்தினாள். “அவனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு போதுமா? திருப்தியா? இன்னும் என்ன? நீ மட்டும் அவன் வாழ்க்கையில் இல்லாமல் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா? அந்த ஜோசியக்காரன் சொன்ன மாதிரியே இல்ல நடக்குது? என் பேச்சை யாரு கேட்டா இந்த வீட்டில்” என்று ஒப்பாரி வைத்தார்.


மற்றவர்கள் பார்வையாளராக பார்த்தார்களே தவிர ஜானகியை அடக்கவில்லை. அவர்களுக்குமே இப்போது ஜோசியர் சொன்னது உண்மை தானோ என்ற எண்ணம் தோன்றிவிட்டது.


தாரிகா அப்படியே தொப்பென்று மயங்கி சரிந்தாள். கவின் பதறிக்கொண்டு வந்து அவள் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பி அமர வைத்தான். அப்படியே ரஞ்சிதம் ஆச்சி மீது சாய்ந்து கதறி அழுதாள் தாரிகா. “மாமாக்கு ஒண்ணும் ஆகாது தானே ஆச்சி? அவருக்கு எதுவும் ஆகாது. நான் இருக்கிற வரைக்கும் அவருக்கு எதுவும் ஆகாமல் பார்த்துப்பேன்” என்று தனக்கு தானே தேற்றிக் கொள்வதுபோல சொல்லிக் கொண்டு அழுதாள்.


“நீ இருக்கிறவரைக்கும் அவனுக்கு ஒண்ணும் ஆகாதா? நீ இருக்கிறதால தான்டி அவன் உயிருக்கு பிரச்சனையே. நீ முதல்ல இங்கிருந்து போய் தொலை. கொஞ்சம் நஞ்சம் ஊசலாடிக்கிட்டு இருக்கிற உயிர்கூட நீ இங்கே இருந்தால் போயிடும். உன் ஜாதகம் அப்படி” என்று வார்த்தைகளை நெருப்பாய் கொட்டினார் ஜானகி.


அதிர்ந்து போனாள் தாரிகா. நான் இருக்கிற வரைக்கும் மாமாவோட உயிருக்கு ஆபத்தா? என்னால் தான், என் ஜாதகத்தால் தான், அவருக்கு இந்த நிலையா? உறைந்து போனாள். உள்ளுக்குள் மடிந்து போனாள். கதிரேசன் இப்போது மனைவியை அதட்டினார். “ஜானகி கொஞ்சம் வாயை அடக்கி பேசு, நாக்குல நரம்பில்லனு எதுவேனாலும் பேசுவியா? ஏதோ பிள்ளைக்கு அடிப்பட்டு இருக்கிற ஆதங்கத்துல பேசறேன்னு பார்த்தா பேசிட்டே போறே” என்றார் கோபமாக.


“வாய்யா வா… உனக்கு உன் தொங்கச்சியும் அவ பெத்த ரத்தினமும் தானே முக்கியம், என் மகன் செத்தா கூட பரவாயில்லை. நான் அவளை ஒண்ணும் சொல்லக்கூடாது அப்படித்தானே” என்று அவர்மேல் பாய்ந்தார்.


கதிரேசன் மேலும் ஏதோ பேசப்போக முத்துப்பாண்டி அவரை தடுத்தார், “மகனுக்கு அடிபட்ட ஆதங்கத்தில் குழப்பத்தில பேசறா, அவளை விடு, நீ வா நாம போய் டாக்டரை பார்த்திட்டு வருவோம்” என்றார். அதுவும் சரியென்று தோன்ற இருவரும் மருத்துவரை பார்க்கச் செல்லவும் கவினும் அவர்களுடன் சென்றான்.


தாரிகா கணவனுக்கு என்ன ஆயிற்றோ என்று பதறிப்போய் ஜசியூவில் தெரிந்த கண்ணாடி வழியே அவனை எட்டிப்பார்த்தாள். மூச்சு சீராக வந்து கொண்டு இருந்தாலும் பல இடங்களில் கட்டுப் போட்டு, மூக்கில் சுவாசக் குழாய் பொறுத்தப்பட்டு இருந்தது. “என்ன பார்க்கிற, இருக்கிறானா போய்ட்டானானு பார்க்கறியா? நீ வந்துட்ட இல்லை இனி அவன் பிழைக்கிறது கஷ்டம் தான்” என்றார் ஜானகி கோபமாக.


அங்கேயே தொய்ந்து அமர்ந்த தாரிகாவின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post