இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--16 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 12-05-2024

Total Views: 26508

இதயம் 16

     சாணக்கியனைப் பார்க்கும் முன்னமே, அவன் தனது விருப்பமான விளையாட்டுக்குக் கொடுக்கும் மதிப்பை அவன் இல்லத்தின் மூலமாகத் தெரிந்து கொண்ட மினிக்கு அப்போதே அவன் மீது ஒரு சின்ன ஈர்ப்பு. நிஜத்தில் அவளை அதிகம் ஈர்த்தது அவன் தோற்றமோ குணமோ அல்ல, தனக்குப் பிடித்த ஒன்றிற்காக என்னவெல்லாம் செய்கிறான் என்ற நினைப்பு மட்டும் தான். 

     பிரியா மூலமாக அவனைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவன் விளையாட்டை நேரில் பார்த்த நேரத்தில் அவளுக்குள் இருந்த ஈர்ப்பு சற்றே அதிகமாகி இரண்டாம் கட்டத்திற்குச் சென்றது என்று சொல்லலாம். அந்த உணர்விற்கென்று சரியான பெயர் கிடையாது. அது ஒரு மாயாஜாலமான உணர்வு. 

     தான் ஒருவள் இருப்பது கூட எதிராளிக்குத் தெரியாது என்று தெரிந்தும், நான் என்னளவில் என் அன்பைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருப்பேன். பதிலுக்கு எனக்கு எதுவும் தேவையில்லை என்று சொல்லும் ரகம். சூரியனின் மீதான சூரியகாந்தியின் ஈடுபாட்டைப் போன்றது. 

     எல்லோருக்கும் இந்த உணர்வு வாழ்வில் ஒருமுறையாவது, யாராவது ஒருவர் மீது கட்டாயம் வந்திருக்கும். பக்கத்து வீட்டுப் பையன், சினிமா ஹீரோ, பாடகர், விளையாட்டு வீரர்கள், கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் என யார் மீது வேண்டுமானாலும் இந்த உணர்வு வரலாம். 

     ஆனால் இந்த உணர்வு எத்தனை நாட்கள் நீடிக்கிறது என்பது தான் அங்கே விஷயம். இது முழுக்க முழுக்க அந்தந்த நபர்களைப் பொறுத்தது. சிலருக்கு சில நாட்கள் மட்டும் இருக்கும் இந்த உணர்வு, சிலருக்கு சில மாதங்கள் தொடரும், சிலருக்கு வருடக்கணக்கில் கூட நீடிப்பது உண்டு.

     இந்த உணர்வின் அடுத்த படி தான் காதலின் ஆரம்ப கட்டமான பிதற்றல் நிலை. இந்த நிலையில் மனிதன் தன் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்திருப்பான். கொலைப்பசியில் இருக்கும் நேரம் பிடித்தமான உணவு கண்முன் இருந்தாலும், உண்ணத் தோன்றாத பைத்தியக்கார நிலை இது. 

     நாளும் பொழுதும் மனம் விரும்பும் நபரின் நினைவாகவே இருக்கும். சுற்றிலும் ஆட்கள் இருந்தாலும் தனிமையின் கற்பனையில் விரும்பிய நபருடன் விருப்பப்படி இருக்க ஆசை கொள்வார்கள்.  விரும்பும் நபரின் மனமகிழ்வு தான் இந்த உலகத்தில் தனக்கு இருக்கும் ஒரே கடமை, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் பொல்லாத நிலை. 

     இந்த நிலையில் இருப்பவர்கள் கண் இருந்தும் பார்வையில்லாத குருடர்களைப் போன்றவர்கள். இவர்களை மிக எளிதாக ஏமாற்றிவிடலாம். ஆண்கள் என்றால் பொருளாதார ரீதியாக, பெண்கள் என்றால் கலாச்சார ரீதியாக அமையும் அந்த இழப்பு.

     பொதுவில் இந்த மூன்று நிலைகளைத் தனியே கடந்து வருவதற்கு முன்பாக பலருடைய காதல் காணாமல் போய்விடும். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் தாண்டியும் ஒரு உறவு நீடித்து இருக்கிறது, விரும்பிய நபரிடம் தன் நிலையை எடுத்துச் சொல்லி அவரோடு இணைய மனம் விரும்புபிறது என்றால் அது தான் காதல். 

     ஆரம்பத்தில் இருப்பது போன்று எந்த உறவும் இறுதி வரை இருக்கப்போவது கிடையாது. பழகும் ஆரம்ப கட்டத்தில் ஒருவரைப் பற்றி இன்னொருவருக்கு எதுவுமே தெரிந்திருக்காது. அவற்றைத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். துணையின் பிடித்தம், பிடித்தமின்மை என எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பின்னர் புதிதாகத் தெரிந்துகொள்வதற்கு எதுவும் இல்லை என்கிற பட்சத்தில் முன்பிருந்த ஆர்வம் சற்றே குறையும். அதற்காக அங்கே காதல் குறைந்துவிட்டது என்பது அர்த்தமில்லை.

     அலைபேசி அழைப்புகள் குறையலாம், சந்திப்புகள் குறையலாம், கொஞ்சல்கள் குறைந்து எதிர்பார்ப்புகள் அதிகமாகலாம், கோபம் எட்டிப்பார்க்கலாம் இவற்றால் எல்லாம் காதல் குறைந்து அலட்சியம் ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டது என்று அர்த்தமாகிவிடாது. செயலைப் பார்க்காமல் அந்த செயலின் பின்னால் இருக்கும் அர்த்தத்தை உணர்ந்தால் எல்லாம் சரியாகிவிடும். இது தான் காதலின் அடிப்படை பாடம். ஆனால் இந்தப் பாடத்தை சரியான விதத்தில் கற்றக்கொள்பவர்கள் மிகமிக குறைவு தான்.

     காதல் தான் உச்சகட்ட நிலையா என்றால் நிச்சயம் இல்லை. அதையும் தாண்டிய விஷயம் ஒன்று உண்டு. தனக்குப் பிடித்த நபரைத் தன்னால் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது என்கிற நிலையில், அந்த நபரை அழிக்கவோ பழிவாங்கவோ மனம் கொள்ளாமல் எட்டி நின்று மொத்தமாக ஒதுங்குவது.

     காதலுக்காக விட்டுக்கொடுப்பதும், சில சமயங்களில் காதலை விட்டுக்கொடுப்பதும் இந்த வகையில் வரும். இதில் மினி இப்போது எந்த இடத்தில் இருக்கிறாள், எதிர்காலத்தில் அவள் கதி என்ன ஆகக் காத்திருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது.

     “மினி உன்னோட வயசும், புதுசா முளைச்ச ஆசையும் இப்ப வேறு எந்தச் சிந்தனையும் இல்லாமல் உன்னைக் கட்டிப்போட்டு இருக்கலாம். ஆனால் நாளை பின்னே சாணக்கியனோட கடந்தகாலம் உனக்கு முள்ளாய் குத்த வாய்ப்பிருக்கு. எந்தப் பெண்ணுமே தனக்கு வரப்போறவன் தனக்கு மட்டுமே சொந்தமானவனா இருக்கணும் என்று நினைப்பான். ஆனா சாணக்கியன் ஏற்கனவே இன்னொருத்திக்கு சொந்தமானவனா இருந்தவன்“ ஜீவன் தன் வார்த்தைகளை முடிப்பதற்குள், “அவர் வாழ்க்கைக்குள்ள நான் வரும் முன்ன வேற ஒருத்தங்க வந்து போகணும் என்று இருந்திருக்கு. அதுக்கு யார் என்ன செய்ய முடியும்“ சாதாரணமாகச் சொன்னவளை விசித்திரமாகப் பார்த்தான் ஜீவன்.

     “ஒருவேளை அவனுக்கு நடந்தது உனக்கு நடந்திருந்தால் அவன் உன்னை ஏறெடுத்தும் பார்த்து இருக்க மாட்டான் தெரியுமா?“ என்க, என்ன பிதற்றல் இது என்னும் ரீதியாகத் தான் தன் அத்தானைப் பார்த்தாள் மினி.

     “கை விரல்கள் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை. அப்படி இருக்க ஒரு விஷயத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பாங்க, யோசிப்பாங்கன்னு எப்படி எதிர்பார்க்க முடியும். ஒவ்வொருத்தருக்கும் அவங்க பிறந்து வளர்ந்த இடம், படித்த படிப்பு, கொண்டிருக்கும் கொள்கைகள் ஆகியவற்றைப் பொறுத்து வேறு வேறு மனநிலை இருக்கும். அதுக்காக ஒருத்தங்க கெட்டவங்க இன்னொருத்தவங்க நல்லவங்கன்னு ஆகாது அத்தான். 

     என்னோட கொள்கைகள் என்னோட, அவரோட கொள்கைகள் அவரோட. நான் நினைக்கிறது  மாதிரி தான் அவரும் நினைக்கணும் என்று எதிர்பார்ப்பது எல்லாம் பைத்தியக்காரத்தனம். அதை விட பைத்தியக்காரத்தனம் என்ன தெரியுமா? நான் நம்புகிறேன் என்பதால் என்னுடைய கொள்கைகள் மட்டுமே சரி என்னும் முட்டாள்தனமான பிடிவாதம். அதுக்கு நான் ஆள் இல்லை“ ஆணி அடித்தது போல் நச்சென்று வந்து குதித்தது அவள் வார்த்தைகள் யாவும்.

     “பொண்ணுங்க இந்த விஷயத்தில் சென்சிட்டிவ்வா இருப்பாங்களே“ ஜீவனுக்கு இன்னமுமே புரியவில்லை தான். “நான் அவர் கூடவே இருக்கும் போது என்னைத் தாண்டி இன்னொருத்தி கிட்ட போனா தான் தப்பு. எப்பவோ நடந்த விஷயத்தை எதுக்காக போட்டு குழப்பிக்கணும்“ என்றாள்.

     “சரி எல்லாம் போகட்டும், அந்தப் பொண்ணை அவ்வளவு தூரம் நேசிச்சவன் உன்னை ஏத்துப்பானா? அப்படியே ஏத்துக்கிட்டாலும் அந்த முதல் காதல் அளவு உனக்கான காதலை அவனால் கொடுக்க முடியும் என்று எப்படி நம்புற“  ஜீவன் அவளை விடுவதாக இல்லை.

      “விட்டுப் போவதற்காக யாரும் காதலிப்பதில்லை அத்தான். அப்படி இருந்தும் சில காதல்கள் பிரியுது தான். அதில் இருந்து வெளியே வருவது கஷ்டம் தான். ஆனால் வந்து தானே ஆகணும். காதலிச்ச அந்தப் பொண்ணு இவரை மறந்து இன்னொருத்தர் கூட குழந்தை குடும்பம் என்று வாழும் போது இவரால் அது சாத்தியமாகாதா என்ன? 

     நான் புரிஞ்சுக்கிட்ட வரை அவருக்கு கடந்த காலக் காதலால் ஏற்பட்ட வடு தான் இருக்கே தவிர காதல் காணாமல் போய் ரொம்ப நாளாச்சுன்னு தோணுது“ யூகமாய் சொன்னாள் மினி.

     “எல்லாம் சரி தான் மினி. நீ அவன் பக்கம் இருந்து அவனுக்குத் தேவையானதை பார்த்து பார்த்து செய்வ தான். ஆனால் அவனால் உன்னை நீ எதிர்பார்க்கும் படி பார்த்துக்கொள்வது கஷ்டம்“ என்க, “எனக்கு அவர்கிட்ட இருக்கும் எதிர்பார்ப்பது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை அத்தான். நடந்த எல்லாத்தையும் குப்பை மாதிரி தூக்கிப் போட்டுட்டு மத்தவங்களை மாதிரி அவரும் சந்தோஷமா, நிம்மதியா வாழனும் அவ்வளவு தான். அவருக்கு செய்து பார்க்க எனக்குள்ள நிறைய ஆசைகள் இருக்கே தவிர, எனக்கு அவர்கிட்ட இருந்து வாங்கிக்கணும் என்று எந்த எதிர்பார்ப்பும் இப்பவரை இல்லை“ என்றவனை விசித்திரமாகப் பார்த்தான் ஜீவன்.

     “உன் வயசுக்கு ஏத்த மாதிரியே நீ இல்லை மினி. ஏதோ ஞானி மாதிரிப் பேசுற“ என்க, சின்னதாய் புன்னகைத்தவள், “காதல் என்றால் கொடுப்பது தானே தவிர எதிர்பார்ப்பது இல்லைன்னு எங்கேயோ படிச்சிருக்கேன். அது சரி தான் போல“ சிலாகித்தாள் சிறுபெண்.

     ஜீவனுக்கு மனதில் இருந்த பாரம் இறங்கிய உணர்வு. நண்பன் சாணக்கியனுக்கு மினியைத் தவிர வேறு யாரும் சரியான துணையாக இருக்க முடியாது என்னும் நம்பிக்கை இப்போது வந்தது. எப்பாடு பட்டாவது இவளை அவனோடு சேர்த்து வைக்க வேண்டும்.

      எதிர்பார்ப்பில்லாமல் கொடுத்துக்கொண்டே இருப்பது தான் காதல் என்பது உண்மையாக இருந்தாலும், யாராக இருப்பினும் அன்பைப் பெற்றுக்கொண்டு மட்டுமே இருப்பது என்பது இயலாத காரியம். அன்பு ஒருவழிப்பாதை அல்ல, இருவழிப்பாதை.

      சரியான துணை மீது நாம் கொட்டும் அன்பு அதை விட அதிக அளவில் திரும்பி நமக்குக் கிடைக்கும். சாணக்கியன் மினியைப் புரிந்து கொண்டான் என்றால் மினியின் மனதுக்கும் சாணக்கியன் மனதுக்கும் அவர்கள் நீண்ட நெடுங்காலம் சந்தோஷமாக வாழ்வார்கள் என்கிற நம்பிக்கை வந்தது அவனுக்கு. யார் எதிர்த்தாலும் இந்த விஷயத்தில் தான் மினியின் பக்கம் தான் நிற்க வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வந்திருந்தான் இந்த இடத்தில். 

     “உன் வயதில் இவ்வளவு தூரம் பக்குவத்தை யாரிடமும் எதிர்பார்க்க முடியாது மினி. நீ உறுதியா இருந்தால் போதும், மற்றவங்களை நான் சமாளிக்கிறேன். சாணக்கியன் மனதில் இடம்பிடிக்கும் வழியைப் பார்“ என்றுவிட்டு நகரப் பார்த்தவன் கையைப் பிடித்தவள், “உங்களுக்கு அவரைப் பற்றியும் அவரோட கடந்தகாலத்தைப் பற்றியும் எப்படித்தெரியும்“ என்ற மச்சினியைப் பார்த்து கசப்பாக புன்னகைத்தவன், “எங்களுக்குள் அழகான நட்பு ஒன்று இருந்தது. சில பல காரணங்களால் அது முற்றுப்பெற்ற கோலமாக மாறி காலம் என்னும் தண்ணீரால் அழிக்கப்பட்டுவிட்டது“ என்று தன்னோடு நினைத்துக்கொண்டவன் வெளியே கேள்விப்பட்டு இருக்கேன் என்று சமாளித்தான்.

     “இரவு எட்டு மணி வரை உன் அக்காவை என்னால் சமாளிக்க முடியும். அதற்குப் பின் முடியாது. அதனால் மருத்துவமனையின் முன்னால் எட்டு மணிக்கு காத்திருக்கிறேன் நீ வந்துவிடு“ என்றுவிட்டு அவன் முன்னே செல்ல, மினி சாணக்கியன் அருகே வந்தாள். 

     இது நாள் வரை வேண்டுமா வேண்டாமா என்ற தெளிவான முடிவுக்கு வர முடியாமல் இருந்தவளது மனம் இப்போது அவள் கண் முன் அநாதரவான குழந்தை போல் உறங்கிக் கொண்டிருக்கும் அவன் தனக்குக் கட்டாயம் வேண்டும் என்று உணர்த்திவிட உரிமையாய் அவன் அருகே அமர்ந்தாள். அவனிடத்தில் உரிமையை அவன் கொடுக்காமல் இவளே எடுத்துக்கொண்டாள். காதலின் முக்கியமான அம்சமே உரிமைஉணர்வு தானே.

     சற்று நேரத்தில் அடித்துப் பிடித்து உள்ளே வந்தார் அரசன். உறங்கும் மகனின் அருகே அமர்ந்திருந்த மினியைப் பார்த்ததும் தன்னால் பெருமூச்சு வந்தது அவரிடத்தில். 

     “வாங்க மாமா“ தெளிவாக அழைத்தாள் அவள். சாணக்கியனை காதலனாக மனம் ஏற்றுக்கொண்டதும் அவன் சார்ந்தவர்களையும் அவள் மனம் உரிமையோடு பார்க்க ஆரம்பித்தது.

     “என்ன சொன்ன மாமாவா?“ தன் காதில் தான் ஏதும் பிரச்சனையோ என்று அவர் தடுமாற, “உங்களுக்கு காது எல்லாம் நல்லா தான் கேட்கிது மாமா. கண்ணில் பொங்கி நிற்கும் கண்ணீரால் கண்ணு தான் சரியாத் தெரியலன்னு நினைக்கிறேன்“ சிரித்துக்கொண்டே சொன்னாள்.

     “நீ என்ன பேசுறன்னு தெரிந்து தான் பேசுறியா?“ அரசன் ஆர்வமாய் கேட்க, “நல்லாத் தெரியும்“ என்று புன்னகைத்தாள். நேரே அவள் அருகே வந்த அரசன் அவள் கைகளைப் பிடித்து தன் கண்ணில் வைத்துக்கொண்டு, “ரொம்ப நன்றிம்மா“ ஆத்மார்த்தமாய் சொன்னார்.

     “அங்கிள் நீங்க நினைக்கிற அளவு நான் ஒன்னும் பெரிய தியாகி எல்லாம் இல்லை. அவரோட சந்தோஷத்தில் தான் என்னோட நிம்மதி இருக்குன்னு புரிஞ்சுக்கிட்ட அப்புறம் தான் நான் இப்படியொரு தீர்க்கமான முடிவுக்கு வந்தேன். இனி தான் என்னோட போராட்டமே இருக்கு“ தாய், தந்தையோடு சேர்த்து சாணக்கியனிடமும் தான் போராட வேண்டியது இருக்கும் என்பதை உணர்ந்து இப்படிச் சொன்னாள். 

     “எந்த நேரத்தில் எந்தக் கடவுள் ஆசிர்வாதத்தில் பிறந்தானோ அவனோட சந்தோஷத்துக்கு தடையா அவனே இருக்கான்“ மகனை நினைத்து வருத்தத்தில் சொன்னார் அரசன்.

     “நிலா இவரை விட்டுப்போன இடத்திலே இவரோட உலகம் நின்னு போச்சு. அங்க இருந்து அவரை நடப்புக்கு இழுத்திட்டு வருவது கொஞ்சம் சிரமம் தான், ஆனா சாத்தியம் இல்லாதது இல்லை. என்ன ஒன்னு நாம எழுபத்தைந்து சதவிகிதம் முயற்சி பண்ணாலும் மீதம் இருக்கும் இருபத்தைந்து சதவிகிதத்துக்கு அவர் தான் முயற்சி பண்ணனும்“ என்க, அரசனுக்கும் இதில் இருக்கும் பிரச்சனைகள் யாவும் புரிந்தது.

     “இரண்டாவது காதல் தப்பில்லை, இரண்டு காதல் தான் தப்பு இதை அவர் புரிஞ்சுக்கிட்டாப் போதும்“ என்ற மினி உறங்கும் சாணக்கியனைக் கவனிக்க, பள்ளியில் வைத்து பாரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவனை அழைத்துக்கொண்டு அதே மருத்துவமனைக்கு வந்திருந்தாள் வதனி.


Leave a comment


Comments


Related Post