இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 31 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 12-05-2024

Total Views: 19048

செந்தூரா 31


ஆராத்யா ஜானகியிடம் வந்து அமர்ந்தாள், “அத்தை அழாதீங்க” என்றவளை நிமிர்ந்து பார்த்தார் ஜானகி. “வந்து… அப்படி கூப்பிடலாம் இல்ல?” என்று அவள் தயங்கவும், “அதுக்கென்ன நல்லா கூப்பிடு, நீ என் அண்ணன் மகள் தானே” என்றார்.


“மித்ரனை எப்படியும் காப்பாத்திடலாம், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, பார்த்துக்கலாம். தேவைப்பட்டா வெளிநாட்டில் கூட டீரிட்மென்ட் பார்க்கலாம் கவலைப்படாதீங்க” என்றாள் ஆறுதலாக.


“அவ இங்கே இருக்கிற வரைக்கும் அவன் குணமாக மாட்டான் ஆராம்மா. அவளை முதலில் இங்கிருந்து போக சொல்லு. அவ இங்கே இருந்து போனாலே போதும், அவன் குணமாயிடுவான்” என்று பைத்தியம் போல அரற்றினார் ஜானகி.


தாரிகா ரஞ்சிதம் ஆச்சியை பார்த்து, “நீயாவது எனக்காக பேசேன்” என்பது போல பார்க்க, அவரோ, “தாரா, நீ இங்கே இருந்தால் அவள் உன்னை எதாவது சொல்லிட்டே இருப்பாள். எது நடந்தாலும் அதுக்கு உன் மேல தான் பழிபோடுவா, நீ பேசாமல் வீட்டில் போயி இருடா கண்ணு” என்றார் ரஞ்சிதம் ஆச்சி அழுதுக்கொண்டே.


“நீயுமா ஆச்சி அப்படி நினைக்கிற?” என்று வலி மிகுந்த குரலில் கேட்டவளை பார்க்க முடியாமல் தலையை குனிந்துக் கொண்டார் ரஞ்சிதம். “சொல்லு ஆச்சி, என்னால தான் மாமா உயிருக்கு ஆபத்துனு நினைக்கிறீங்களா?” என்று அவரை உலுக்கினாள்.


“எனக்கு சொல்ல தெரியலைடா, முதல்ல என் பேரன் கண் முழிக்கட்டும். நீ வீட்டுக்கு போய் இருடா” என்றார் கெஞ்சுதலாக. அத்தையை போல வெளிப்படையாக திட்டவில்லை என்றாலும் ஆச்சி சொல்லியதின் சாராம்சமும் அதுதானே. அவள் இருந்தால் அவளின் உயிருக்கு உயிரான கணவன் உயிருக்கே ஆபத்தாமே!” கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.


தன் மாமனுக்கு அடிப்பட்டதை நினைத்து அழுவாளா? இல்லை தன் துரதிஷ்டம் தான் இதற்கு காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவளையே கூறு போட்டுக் கொண்டிருக்கும் போது, அதையே அத்தையும் ஆச்சியும் சொன்னால் அவளும் தான் என்ன செய்வாள்? கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து நடந்தாள். அவள் போவதை யாருமே கவனிக்க வில்லை. சங்கரபாண்டியன் பார்த்தாலும் பார்க்காதது போல ஜானகியிடம் வந்து, “கவலைப்படாதே ஜானகி, என் மகள் அதிர்ஷ்டமானவ, அவள் பிறந்து தான் நான் வெளிநாட்டில் பிசினஸில் கொடிக் கட்டி பறந்தேன். பெரிய பணக்காரனும் ஆயிட்டேன். என் மகள் உன் கூடவே இருப்பாள், அவளோட அதிர்ஷ்டம் நம்ம மித்ரனை கட்டாயம் காப்பாத்தும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


அவர் பேச்சு தாரிகாவின் காதில் தெளிவாக விழுந்திருக்க மெல்ல திரும்பி, ஆராத்யாவை பார்த்தாள். “ஒரு வேளை மாமாவுக்கு இவள் தான் ஏற்றவளோ? அவனுக்கு ஏற்ற உயரம், நிறம், படிப்பு, திறமை, ஆங்கிலத்தில் புலமை, தொழில் அனுபவம் முக்கியமாக ஜாதக பொருத்தம் நன்றாகத்தான் இருக்கும். இந்த ஆராத்யாவையே அவன் திருமணம் செய்திருக்கலாமோ? அவளும் தானே அவனை விரும்பியிருக்கிறாள்?


செந்தூரன் ஆராத்யாவை திருமணம் செய்திருந்தால், இவளின் காதல் தான் மறித்திருக்குமே தவிர, அவன் மாமன் உயிருக்கு எந்த ஆபத்தும் இருந்திருக்காதே. குறைந்தபட்சம் அவன் உயிருடன் இருக்கிறான் என்றாவது சந்தோஷப்பட்டுக் கொள்ளலாமே” என்ற யோசித்தபடி வெளியே வந்தவள் எதிரே வந்த ஆட்டோவை கைக்காட்டி அமர்ந்தது தான் தெரியும், எப்போது எப்படி வீடு வந்து சேர்ந்திருந்தாள் என தெரியாது.


அறைக்கு சென்று கட்டிலில் விழுந்து கதறி அழுதாள். அங்கே கணவனுக்கு அடிப்பட்டு இருக்கிறது. அருகில் இருந்து மனைவியாக அவனுக்கு சேவை செய்ய முடியவில்லை. அவனின் நலத்தை உறுதி செய்துக் கொள்ளவும் முடியவில்லை, தன் நிலையை எண்ணி தேற்றுவார் இன்றி கதறி அழுதுக் கொண்டிருந்தாள்


சுபாஷூம் சாரதாவும் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தனர். ஜானகி முகத்தை திருப்பிக் கொள்ள, கதிரேசனிடம் விசாரித்தார்கள். “டீரிட்மென்ட் போயிட்டு இருக்கு, கண்விழிச்சால் தான் எதுவும் சொல்ல முடியும்னு சொல்லிட்டாங்க” என்றார் கதிரேசன் கலங்கிய கண்களுடன்.


சற்று நேரம் பொறுத்து மகளை தேடியவர், “அண்ணா, தாரா எங்கே? அவளுக்கு விஷயம் தெரியாதா?” என்று கேட்டார் சாரதா.


“இங்கே தாம்மா இருந்தாள், நாங்க டாக்டரை பார்த்திட்டு இப்போ தான் வந்தோம், ஜானகி… தாரா எங்கே?” என்றவருக்கு ஜானகி பதில் எதுவும் சொல்லாமல் விறைப்பாக அமர்ந்திருந்தார்.


சாராதாவும் சுபாஷூம் மகளை அந்த மருத்துவமனை முழுவதும் தேடினார்கள், கவினுக்கும் விஷயம் தெரியாததால் ஆராத்யாவிடம் வந்து, “தாரா எங்கே போனாங்கனு பார்த்தியா ஆராத்யா?” என்று கேட்டான்.


“ஜானகி அத்தை, தாரிகாவோட ஜாதகத்தால தான் இந்த மாதிரி மித்ரனுக்கு அடிப்பட்டதுனு சொல்லி திட்டிட்டு இருந்தாங்க இல்ல, அவங்க இருந்தால் மித்ரனுக்கு குணமாகாதுனு திட்டவும் இங்கிருந்து கிளம்பிட்டாங்க” என்றாள் ஆராத்யா.


தலையில் கைவைத்துக் கொண்டான் கவின், “என்ன ஆரா, பார்த்திட்டு சும்மாவா இருந்தே, தாரிகாவை தடுத்து நிறுத்தக்கூடாதா? அவங்க எதாச்சும் செய்துக்கிட்டால் என்ன செய்யறது? ச்சே” என்று அலுத்துக் கொண்டவன் தாரிகாவின் எண்ணிற்கு அழைத்தான்.


உடனடியாக அந்த அழைப்பை ஏற்றவள், “அண்ணா, அவருக்கு எப்படி இருக்கு? இப்போ பராவாயில்லையா? கண் முழிச்சிட்டாரா?” என்றாள் பதட்டத்தோடு.


அப்போதுதான் கவினுக்கு உயிரே வந்தது, “இன்னும் இல்லமா, அவன் கண்விழிச்சால் தான் எதுவும் சொல்ல முடியும்னு டாக்டர் சொல்லிட்டாங்க, காலையில் கண்விழிச்சிடுவான். காலையில் நீ வந்து பாரு, அவன் எழுந்துட்டா எந்த பிரச்சனையும் இல்லை உனக்கு” என்றான் கவின்.


விரக்தியோடு சிரித்தவள், “அவரை கிட்ட இருந்து நல்லா பார்த்துக்கோங்க அண்ணா” என்றாள். “சரிம்மா, உங்க அப்பா அம்மா கூட வந்திருக்காங்க, பேசறீயா அவங்க கூட?” என்றான்.


“வேண்டாம் அண்ணா, அவங்களாவது என் சார்பா மாமா கூட அங்கேயே இருக்கட்டும், மாமா கண்விழிக்கிற வரைக்கும் அங்கேயே இருக்க சொல்லுங்க” என்று சொல்லி விட்டு போனை வைத்துவிட்டாள்.


கவின் தாரிகா அவனிடம் பேசியதை கூறவும், சாரதாவும், “சொல்லனுமா   என்ன? என் மருமகன் குணம் ஆகற வரைக்கும் நான் இங்கே தான் இருப்பேன்” என்றார் அழுதுக் கொண்டே.


காயத்ரி கர்ப்பமாக இருப்பதால் அவளுக்கு இப்போதைக்கு எந்த அதிர்ச்சியான செய்தியும் சொல்ல வேண்டாம், செந்தூரன் கண்விழிக்கட்டும் என்று இருந்து விட்டார்கள். அனைவரும் மருத்துவர் சொல்லப் போகும் வார்த்தைக்காக அவர் வரும்போதும் போகும்போதும் அவரையே ஆர்வமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.


இரவு வேதனையில் கரைந்தது. விடியலாவது நிம்மதியை அளிக்குமா?


அனைவரின் வேண்டுதலையும் ஏற்று கடவுள் கண் திறந்து விட்டார், அப்படியே செந்தூரனையும் கண் விழிக்கச் செய்திருந்தார்.


மருத்துவர் அவர்களை அழைத்து, “பேஷன்ட் கண்விழிச்சிட்டார், இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை, கால்ல கொஞ்சம் பிராக்சர் ஆகியிருக்கு, இரண்டு நாள்ல டிஸ்சார்ஜ் செய்து கூட்டிட்டு போகலாம், ஸ்ட்ரெயின் பண்ணாமல் பாத்துக்கோங்க. தலையில் இருக்கிறது எல்லாம் சின்ன காயம் தான், சேப்டி பெல்ட் போட்டதால எந்த பிரச்சனையும் இல்லை” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.


இப்போது தான் போன உயிர் வந்தது போல இருந்தது. அனைவரும் மருத்துவரின் அனுமதியோடு செந்தூரனை பார்க்க அவன் இருந்த அறைக்கு சென்றனர். ஜானகி அவன் அருகில் சென்று மென்மையாக அவன் தலையை வருடி, “செந்தூரா” என்று அழைத்தார்.


மெல்ல கண்திறந்து பார்த்தவன், முதலில் கவினை பார்த்தான். “ஆர் யூ ஓகே கவின், உனக்கு எதுவும் ஆகலையே” என்ற நண்பனின் அருகில் வந்து அவன் கையை பிடித்துக் கொண்டு கதறிவிட்டான் கவின். இந்த நிலையிலும் நண்பனின் நலத்தை நாடுகிறானே.


பிறகு ஒவ்வொருவரையாக மெதுவாக பார்த்தவன், புருவம் சுருங்கியது. “தாரா எங்கே?” என்றான். 


என்ன சொல்வது என்று தெரியாமல் ஜானகி இப்போது திருதிருக்க, “எங்களுக்கு சமைச்சு எடுத்துவர வீட்டுக்கு போயிருக்காள்” என்றார் சாரதா சமயோசிதமாக.


“உடனே அவளுக்கு போன் செய்து நான் கண்விழிச்சிட்டதாக சொல்லிடுங்க, அவள் ரொம்ப பயந்து போய் இருப்பாள்” என்றான் செந்தூரன். அதுவும் சரி என்று தோன்ற கவின் தாரிகாவின் எண்ணிற்கு அழைத்தான், அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.


பலமுறை முயன்றுக் கொண்டிருந்தான், “என்னடா?” என்று கேட்ட செந்தூரனிடம், “சார்ஜ் இல்ல போல இருக்கு, போன் ரீச் ஆகலை, நான் நேர்லயே போய் விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வந்திடுறேன்” என்று கிளம்பினான் கவின்.


வீட்டை அடைந்தவன், “தங்கச்சிம்மா” என்று சந்தோஷமாக கூவிக்கொண்டே உள்ளே சென்றான். எந்த பதிலும் இல்லை. செந்தூரனின் அறை, பூஜை அறை என ஒவ்வொரு அறையாக சென்று அவளை தேடி தேடி தோற்றான். மீண்டும் தாரிகாவிற்கு போன் செய்து பார்த்தான். அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. பதட்டத்துடன் வாயிற் காவலாளியிடம் ஓடிவந்தான். “தாரிகா எங்கே?” என்றான் மூச்சிறைப்பை அடக்கிக்கொண்டே.


“அவங்க அதிகாலை 3 மணிக்கே கிளம்பிட்டாங்க சார், கேட்டதுக்கு மருத்துவமனைக்கு போறதா சொன்னாங்களே” என்றான்


உடனே கவின் மருத்துவமனையில் இருந்த சுபாஷிற்கு அழைத்தான். “அங்கிள், தாரிகா அங்கே வந்துட்டாங்களா?” என்றான்.


“இல்லையே கவின், நீதானே அழைச்சிட்டு வர்றதா போனே? இப்போ எங்களை கேட்கிறே? ஏன் என்னாச்சு?” என்றார் பதட்டத்தை அடக்கிக் கொண்டே.


“தாரிகாவை இங்கே காணலை அங்கிள்” என்றான் கவின் நெற்றியில் தேய்த்துக் கொண்டே



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post