இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 11 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 12-05-2024

Total Views: 16273

அத்தியாயம் - 11

"இறுதியான முடிவென்ன?" என்று சனி வினவியதும், "இன்னும் எத்தனை பேர் என்னுடன் வலுக்கட்டாயமாக யுத்தத்திற்கு வருவதாக உத்தேசம். விதிகளை வகுத்து குடுத்தவன் ஈசன்‌. விதிகளை ஏற்று பணி செய்தவன் நான்‌. கேள்வி கேட்க ஈசன் மட்டும் தானே வர வேண்டும். எதற்காக என் விஷயத்தில் எல்லாரும் வரிசைகட்டி வருகிறீர்கள். நான் என்றாவது உன்னிடம் இது செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்லியிருக்கின்றேனா. ஏனடா சனி உனக்கிந்த வேலை. யாரையும் பிடிக்கும் வேலை இல்லை என்றதும் என்னை பிடிக்க வந்துவிட்டாயா? பேசாமல் உன்னிடம் என்னைப் பற்றி புகார் அளித்த சித்திரகுப்தன் மீது உன் பார்வையை திருப்பலாமே" என்று காட்டமாக சொன்னான்.

"அதை சொல்லவும் வேண்டுமா தமையா‌‌.. செய்துவிடுகிறேன்‌. நான் திருக்கடையூர் வந்ததே உன்னவளைப் பார்க்கலாம் என்றுதான்"

"பார்த்ததற்குத்தான் அவளை பத்தடி தூரம் ஓட வைத்துவிட்டாயே டா"

"சனியின் பார்வை என்றால் அப்படித்தானே இருக்கும். வேண்டுமென்றால் மீண்டுமொருமுறை பார்க்கட்டுமா"

"வேண்டவே வேண்டாமடா.. நீ கிளம்பு"

"இந்த இச்சையால் எதிர்கொள்ளப் போகும் விளைவுகள் அதிகம் தமையனே. பிரம்மச்சுவடியில் கணக்கினை வேறு அழித்திருக்கிறாய். ஈசன் நெற்றிக்கண் திறக்கும் வேளை வரும். என்ன செய்யப் போகின்றாய்?"

"அவள் உயிர் கவர்ந்து வர வேண்டுமென்றுதான் பாசக்கயிறுடன் அங்கிருந்து புறப்பட்டு இங்கு வந்தேன். அவளையும் பார்த்தேன். பார்த்த மறு விநாடி பாசக்கயிறு வீச மனம் வரவில்லை. அவள் மீது பாசம் வந்து தொலைத்துவிட்டது. அதற்குள் நானே தொலைந்து போய்விட்டேன்‌. அவளது ஆயுளை கவர நேரம் கடந்துவிட்டதை அறிந்துதான் பிரம்மச்சுவடியில் இருந்து அவளது கணக்கினை அழித்தேன். எனது வெறுமையான பக்கங்களுக்கு எல்லாம் தற்போதவள் வர்ணம் பூசிக் கொண்டிருக்கிறாள் சனி. அவளுடன் நடத்திய நீண்ட உரையாடல் என்னை புதிதாய் பிறக்க வைத்திருக்கிறது. அவளிடம் மட்டுமே நான் காலன் என்பதை தாண்டி ஓர் ஆண்மகன் என்று உணர்கிறேன். அவளை மணம் செய்ய வேண்டும் சனி‌‌. எமலோகம் நிறையும் அளவிற்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். எமகிங்கிரர்களுடன் எம்மக்கள் விளையாடி களிக்க வேண்டும். அதை நானும் அவளும் பார்த்து ரசிக்க வேண்டும். இப்படி ஏராளமான கனவுகள் எனக்குள் உண்டு. எனினும் அவளுக்கு நான் இயமன் என தெரியாது. அவளுக்குத் தெரிந்தால் சித்திரகுப்தன் ஆசை மிக எளிதாக நிறைவேறிவிடும் சனி. அவளது வெறுப்பினை என்னால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள இயலாது. இவ்விஷயம் தெரிந்தால் அவளென்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாள். அதன்பின் நான் இருக்க மாட்டேன்"

"எப்பேர்பட்டவன் நீ.. இப்படிப் பித்துப் பிடித்துப் பிதற்றுவதைப் பார்க்கையில் வேடிக்கையாக இருக்கிறது தமையனே.. ஒரு பெண்ணிடம் விழுந்துவிட்டால் இப்படித்தான் மாறிவிட தோன்றுமோ?"

"நீயும் வேண்டுமானால் அதை அனுபவப்பூர்வமாக விழுந்து தெரிந்துக் கொள்ளேன் சனி"

"தேவையே இல்லை.. நம் குடும்பத்திற்கு ஒரு காதல் கிறுக்கன் போதும்.. நான் எதற்கு தேவையில்லாமல். நான் அப்படியே வந்தவழியே கிளம்புகின்றேன். சித்திரகுப்தன் வேறு உன்னை பேசிச் சரி பண்ணச் சொன்னான். அவனிடம் இப்போது நான் என்னவென்று உரைப்பது?"

"உண்மையைச் சொல்"

"சொல்கின்றேன். முதலில் தாம் திருமணத்தினை விரைந்து செய்து கொள்ளுங்கள்‌"

"உனக்கு என் மேல் சினம் வரவில்லையா? சனி"

"கடமையில் இருந்து தவறியதில் எனக்கு சினம் வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் தங்களின் மனம் புரிந்தபின் அந்த சினம் எங்கோ சென்றுவிட்டது. கடமையில் இருப்பவர்கள் எல்லாரும் மனதினை கல்லாகவே வைத்துக் கொள்ள வேண்டுமா? என்ன? அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெருப்புகள் இருக்கலாம் அல்லவா? அதுவும் தேவலோகத்தில் இந்த தேவர்கள் செய்யும் விதிமீறல்கள் எல்லாம் சொல்லி மாளாது. அந்த வகையில் நீ காதலில் தானே விழுந்திருக்கின்றாய். ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விஷயம்தான். எனக்குன் ஆதரவு எப்போதும் உண்டு தமையனே.. வருகிறேன்" என்று சொன்னவன் மேலோகத்திற்குச் சென்றுவிட மறைவில் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த சித்திரகுப்தனுக்கு அடங்கப்பா இது உலகமகா நடிப்புடா சாமி என்று சனியினைப் பார்த்துத் நினைத்துக் கொண்டான். சனியும் உடன்பிறந்தவனுக்கு ஆதரவாக பேசியதில் இனி என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

----------------------------

"எதுக்கு இப்படி பயந்துட்டு ஓடி வர்ற? அஞ்சும்மா!" திருவின் கேள்விக்கு, "அங்க ஓர் எருமை இருந்தது அதுதான்.. பயந்துட்டேன்" என்று பதிலளித்தாள்.

"இந்த பயம் எல்லாம் தேவையே இல்லாதது"

"புரியுது. இனி பயப்பட மாட்டேன்"

 "இப்பவாவது சாப்பிடுறயா?"

 "இல்லை பசிக்கல மச்சான். நீங்க சாப்பிட்டீங்களா?"

 "நாங்க எல்லாரும் சாப்பிட்டோம். உங்க அத்தை நம்ம இரண்டு பேருக்கும் ஜாதகம் பார்த்துட்டு வந்துருங்காங்க தெரியுமா?"

 "ஜாதகம் பார்த்தாங்களா? எதுக்கு?"

 "இதென்ன கேள்வி? எதுக்கு ஜாதகம் பார்ப்பாங்கன்னு உனக்குத் தெரியாதா?"

 "எதுக்கு?"

 "நம்ம கல்யாண விஷயத்துக்காகத்தான்"

 "கல்யாணமா?"

 "என்ன நீ என்ன சொன்னாலும் அதிர்ச்சியாவே பார்க்குற? தெரியாத மாதிரியே பேசுற? நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எப்பவோ முடிவு பண்ணதுதானே. அதுக்காகத்தான் அம்மா போய் ஜாதகம் பார்த்தாங்க"

 "என்ன சொன்னாங்க?" இதைக் கேட்கையிலே "பொருத்தம் சரியாக இருக்கிறதென்று சொன்னால் என்ன செய்வதாக உத்தேசம் அஞ்சனா!" இயமனின் குரல் ஆவேசமாக வந்ததில் அந்த அறையின் மூலையில் பார்த்தான். இயமன் தான் கோபம் கொண்ட முகத்தோடு நின்றிருந்தான்.

அவள் அவனைக் கண்டுக் கொள்ளாமல் திரும்பித் திருவைப் பார்த்தாள்.

 "முப்பது முடிஞ்ச பிறகு திருமணல்மேடு கோவில் போயிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்காங்க"

 "ஓ..." இதுமட்டும்தான் அவளது வாயில் இருந்து வந்தது. ஆனால் அவள் மனம் அத்தையிடம் பேச வேண்டும் என்று குறித்துக் கொண்டது. 

 "அம்மா என்ன சொன்னாங்க?"

 "எங்க அத்தை எனக்குத்தானே சாதகமா பேசுவாங்க. அவங்களுக்கு இதுல இஷ்டம். மாமாவோட ஆத்மாவும் நம்ம கல்யாணத்தால சாந்தி அடையும்னு அத்தை சொன்னாங்க. உண்மைதானே மாமா எப்பவும் நம்மளோட கல்யாணத்தைப் பத்திதானே பேசுவாங்க"

இதற்கு அவள் என்ன பதில் செல்லுவாள். அவளது ஐயாவின் பேச்சை எடுத்ததும் அவள் மனம் அவர் நம்பிக்கைக்கு துரோகம் செய்கிறோமோ என்று நினைக்க ஆரம்பித்தது. அவள் முகத்தில் படிந்த அதீத வேதனையை கண்ட இயமன் அவள் மனம் மாறிவிடும் அபாயம் இருப்பதை அறிந்துக் கொண்டான்.

இப்போது திரு அவனது மாமாவைப் பற்றி மட்டுமே பேசினான். அவர் எவ்வளவு ஆசையாக இந்த கல்யாணத்தினை எதிர்பார்த்தார் என்பதைக் குறித்து விவரித்தான். அவள் மனதில் முழுதாய் குற்றவுணர்வு சூழ்ந்துக் கொண்டது. அவர் இருந்திருந்தால் நிச்சயம் திருவுடனான கல்யாணத்தினைத்தான் எதிர்பார்த்திருப்பார். அது அவளுக்குத் தெரியும். இப்போது திருவை மீறி அந்தகனை நினைத்துவிட்டேனே. இது எவ்வளவு பெரிய தவறு. ஐயாவுக்கு நல்ல பொண்ணா நான் நடந்துக்கலை. ச்சே அவன் கண்ணை பார்த்துருக்கவே கூடாது. அதான் மயங்கிட்டேன் என அவள் மனதிற்குள் நினைக்க அது அத்தனையும் இயமனுக்குத் தெரிந்தது.

திரு பேசிப் பேசி தங்களது திருமணம் நடந்தால் மட்டுமே சங்கரன் ஆத்மா சாந்தி அடையும் என்ற மாயையை உருவாக்கி இருக்க அவளும் பொறுப்பான மகளாக நடக்க முடிவு செய்தாள்.

 'டேய் படுபாவி உன் திருமணம் நடக்கவே கூடாது என்றுதானே உங்களிரண்டு சாதகமும் பொருந்தாது. மீறி திருமணம் நடந்தால் இருவரது உயிருக்கும் ஆபத்து என்று அந்த சோதிடரின் உருவில் வந்து நான் சொல்லி வைத்திருந்தேன். அதையும் மீறி இப்போது நீ என்ன செய்து வைத்திருக்கின்றாய். அவள் தந்தையின் பெயரை மட்டும் சொல்லி மிக எளிதாக திருமணத்திற்கு சம்மதம் சொல்லுமளவிற்கு கொண்டு வந்துவிட்டாயே.. என்னை நெருங்கி வந்தவளை கண நேரத்தில் பிரித்துவிட்டாயே.. உன்னை உண்மையிலே எண்ணெய் கொப்பரையில் போடத்தான் போகின்றேன்.. வயிறு எரிகிறதடா..' இயமனையே புலம்ப வைத்திருந்தான் திரு.

"டேய் திரு. அவ தூங்க வேண்டாமா. பேசிட்டே இருந்தால் அவ தூங்குவது எப்போ" லட்சுமியின் குரலில், "சாப்பிடலைம்மா அவ இன்னும்.. அதான் கொஞ்ச நேரம் பேசிட்டு சாப்பிட சொல்லலாம்னு உக்காந்தேன்" என்றான் அவன்.

 "சரி நான் பார்த்துக்கிறேன். நீ வெளிய இரு"

 "இல்லை இருக்கட்டும் நானும் இருக்கேன்"

"போ திரு‌. அவளை சாப்பிட வச்சுட்டு நானுமே வெளிய வந்துடுவேன். அவ தூங்கணும்ல.." இப்படிச் சொன்னதும் அவன் கிளம்பிவிட்டான்.

சாப்பாடு எடுத்துத் தட்டில் வைத்து அவளிடம் நீட்டிய லட்சுமி "சாப்பிடு அஞ்சு" என்றாள். நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் தலையை பாசமாக தொட்ட லட்சுமி "எனக்குத் தெரியும். திரு உன்கிட்ட இப்போ என்ன பேசுனான்னு.. அது உண்மை இல்லை" என்றதும், "அத்தை. என்ன சொல்லுறீங்க" என நிமிர்ந்தாள்.

 "ஆமா அஞ்சு. சோசியரை பார்த்தது உண்மை. ஆனால் அவர் உங்க கல்யாணம் நடக்கவே கூடாதுன்னு தான் சொன்னார். மீறி நடந்தால் உங்க இரண்டு பேரோட உயிரும் போயிடும்னு சொன்னார். நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுறேன். உங்க அம்மாவும் திருவும் கல்யாணம் நடந்தே ஆகணும்னு சொல்லுறாங்க. அண்ணன் இறந்த தடமே இன்னும் அழியலை. அதுக்குள்ள உங்க இரண்டு பேருக்கும் ஏதாவது ஒன்னுன்னா நாங்க என்ன பண்ணுவோம் சொல்லு. நீதான் அவன்கிட்ட பேசி கல்யாணம் வேண்டாம்னு சொல்லணும் அஞ்சும்மா.. அவன் நான் சொல்லுறதை காது கொடுத்துக் கேக்கவே மாட்டுறான். உன்னை கல்யாணம் பண்ணலைன்னாலும் செத்துடுவேன்னு சொல்லுறான். எனக்கு மட்டும் ஆசை இல்லையா உன்னை மருமகளாக்கிக்கணும்னு.. என்ன செய்ய விதின்னு ஒன்னு இருக்கே! அது நம்ம தலையில இப்படித்தான் எழுதி வச்சுருக்கு.."

"அத்தை கவலப்படாதீங்க. நான் மச்சான் கிட்ட பேசுறேன்"

"அவன் மனசு நீ வேண்டாம்னு சொன்னா உடைஞ்சுடும் அஞ்சு. ஆனாலும் வேற வழி நமக்கு இல்லையே" லட்சுமி சொல்லிவிட்டு அகன்றுவிட அவள் திரும்பி இயமனைப் பார்த்தாள். தலைவன் அச்சமயம் அங்கில்லை.. 
எங்க போயிட்டான்.. "அந்தகா!" என அவள் அழைக்க அவனோ வெளியே எருமையின் மீது சாய்ந்துக் கொண்டு கலக்கத்துடன் இருந்தான்.

 "பிரபு ஏன் இந்த கலக்கம்?"

 "ப்ச்" சலித்துக் கொண்டான்.

 "பிரபு! அங்கே பாருங்கள்"

 "இப்போதென்ன இந்திரன் வந்து நிற்கிறானா.. இந்த சித்திரகுப்தனை" என கோபமாக திரும்பியவன் அங்கே மருத்துவமனையின் சாளரம் வழியே எட்டிப் பார்த்துத் தன்னைத் தேடுபவளைக் கண்டுக் கொண்டும் அசையாமல் படுத்திருந்தான்.

 "பிரபு! தேவி தங்களைத் தேடுகின்றார்"

 "தெரிகிறது"

 "அவர் வதனம் வெகுவாக வாடியிருக்கிறது பிரபு"

 "புரிகிறது"

 "செல்லுங்கள் பிரபு.. தேவி பாவம்"

 "உன் பிரபு தானடா பாவம். இப்போது அவள் தேடுகிறாள் என்று சொன்னாயே சற்றுமுன் அவள் என்னைவிட்டு விலகி செல்லும் முடிவுக்கே வந்தாள். அதை அறிவாயா நீ.."

 "தற்போதைய மனநிலையை பாருங்கள் பிரபு. தங்களுக்கு நான் சொல்லத் தேவையே இல்லை"

 "மனம் வலிக்கிறது"

 "தேவியின் மனமும் அத்தகைய வலியைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் பிரபு"

 "என்னடா இது பிரபுவின் நலனை விட நீ தேவியின் நலனைப் பற்றியே அதிகம் சிந்திக்கின்றாய்"

"அவரது நலனிலே தங்களின் நலன் அடங்கியுள்ளதால்..." எருமை இவ்வாறு சொன்னதும் இயமன் மனம் மாறி அவளைத் தேடி நகர எருமை பிரபுவின் நிலையை எண்ணிச் சிரித்துக் கொண்டது.


காதலாசை யாரை விட்டது...!




Leave a comment


Comments


Related Post