இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 32 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 13-05-2024

Total Views: 18602

செந்தூரா 32



கவின் தாரிகாவை காணவில்லை என்று சொன்னதும் ஒரு கணம் இதயம் நின்று துடித்தது சுபாஷிற்கு. “கவின் நல்லா வீடு முழுக்க தேடினியா? சரி இரு நான் அங்கே வரேன். இங்கே தான் எங்காவது போயிருப்பா” என்று போனை அணைத்து விட்டு வேகமாக கிளம்பினார்.


இருவரும் சேர்ந்து மீண்டும் ஒருமுறை வீடு முழுவதும் தேடினர். பின்னர் காரில் பஸ் நிலையம் ரயில் நிலையம் ஏர்போர்ட் என அனைத்து இடங்களையும் தேடி அலைந்தனர். சுபாஷ் தாரிகாவின் தோழிகளுக்கு எல்லாம் அழைத்து பேசினார். அவளை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. எங்கே கிளம்பி சென்றாள் என்றே தெரியாத போது எந்த இடத்தில் இருப்பாள் என்றும் அவரால் அனுமானிக்க முடியவில்லை.


“என்னாச்சு கவின் நாங்க வர்றதுக்கு முன்னே அந்த ஜானகி எதாச்சும் தாரிகாவை பேசினாங்களா? என்று கேட்டார். கவின் மெளனமாக தலையை குனிந்து இருக்கவும் “உன்னை தான் கேட்கிறேன் கவின்” என்றார் அழுத்தமான குரலில். 


ஆமாம் என்பது போல தலையை ஆட்டினான். “என் பொண்ணு வீட்டை விட்டு போற அளவுக்கு பேசியிருக்காங்க அப்படித்தானே? இத்தனை நாளாய் பேசும் போதே நான் அவங்களை அதட்டி பேசி இருக்கணும் ச்சே” என்று தலையில் அடித்து கொண்டார்.


சாரதா சுபாஷிற்கு போன் செய்தார். “எங்கே போயிட்டீங்க? அந்த கவினும் இன்னும் ஆளைத் காணோம் தாரா ஏன் இன்னும் வரலைனு செந்தூரன் கேட்டுட்டே இருக்கான்‌. அவனுக்கு என்ன பதில் சொல்றதுனே தெரியல” என்றார் அலுப்பாக.


“இதுக்கு பதிலை உன் அண்ணியை சொல்ல சொல்லு” என்றார் கோபமாக. “ஏன் கோபமாக பேசுறீங்க? என்னாச்சு?” என்று கேட்டார் சாரதா குழப்பமாக.


“என்ன? ஆச்சா? வழக்கம் போல உன் அண்ணன் மகன் அடிப்பட்டு விழுந்து கிடந்ததுக்கு என் பொண்ணை கரிச்சு கொட்டி இருக்காங்க உன் அண்ணி. இப்போ அவ வீட்டை விட்டு எங்கோ போயிட்டா. அவள் மட்டும் கிடைக்கலைனா உங்க எல்லாரையும் சும்மா விட மாட்டேன். உன் அண்ணன் மகன் தான்டி அவளை தூக்கிட்டு போய் தாலி கட்டினான். அதுக்கு என் பொண்ணு என்ன செய்வா? எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அங்கே வந்தால் ஏடாகூடமாக போயிரும். என் பொண்ணு கிடைக்கற வரைக்கும் தேடிட்டு இருப்பேன். அதுவரைக்கும் நீ உன் பொறந்த வீட்டிலேயே இரு” என்று சாரதாவுக்கு பேசக்கூட வாய்ப்பளிக்காமல் கோபத்துடன் போனை வைத்தார். 


பிரமை பிடித்தது போல் அதிர்ச்சியில் உறைந்து நின்றார் சாரதா. தங்கையை பார்த்தபடி இருந்த கதிரேசன் அவரின் அதிர்ந்து நிலையை கண்டு அருகில் வந்தார், “என்னாச்சு சாரதா? ஏன் ஏதோ போல இருக்க?” என்று கேட்டவரின் நெஞ்சில் சாய்ந்து கதறினார் “தாரிகா வீட்டை விட்டு எங்கேயோ போயிட்டாளாம் அண்ணா” என்று கூறவும் அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தனர்.


ஜானகி தலையில் கை வைத்து அமர்ந்தே விட்டார். புத்திக்கெட்டு என்னவெல்லாம் பேசிவிட்டோம். மகன் உயிருக்கு ஆபத்து என்றதும் தனக்கு புத்தி பேதலித்து விட்டதே என்று கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. ஆராத்யாவும் சங்கரபாண்டியனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர். கதிரேசன் கோபத்துடன் பாய்ந்து வந்து ஜானகியின் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்தார். “எல்லாம் உன்னால் தான்டி” என்று பல்லை கடித்து கொண்டு அடிக்க கை ஓங்கும் சமயம் நர்ஸ் வந்து அழைத்தார்.


“பேஷன்ட் அவர் மனைவியை கூப்பிட்டார். அவங்க வந்து சாப்பிட கொடுத்தாதான் சாப்பிட்டு மாத்திரை போடுவாராம். அவங்களை சீக்கிரம் வரச் சொல்லுங்க” என்று சொல்லி விட்டு போனார். மனைவியை பார்த்து முறைத்தான் கதிரேசன்.


முத்துப்பாண்டி தாத்தா ரஞ்சிதம் ஆச்சி இருவரும் புலம்பி கொண்டு இருந்தனர். “மருத்துவமனைமயில் இருக்கும் பேரனை பார்க்கிறதா இல்லை காணாமல் போன பேத்தியை கண்டுபிடிக்கிறதா? விஷயம் தெரிந்தால் சும்மா இருப்பானா செந்தூரன்?” என்று சொல்ல ஜானகிக்கு திக்கென்றது.


கதிரேசன் கவினுக்கு போன் செய்து இப்போது என்ன செய்யலாம் என்று அவனிடம் ஆலோசனை கேட்டார். “அங்கிள் இந்த இரண்டு நாளைக்கு அவனுக்கு விஷயம் தெரிய வேண்டாம். டாக்டர் கிட்ட சொல்லி அவனுக்கு டிரிப்ஸ் போட்டு தூக்கத்தில் இருக்கிற மாதிரி வைக்க சொல்லுங்க. அதுக்குள்ள நானும் சுபாஷ் அங்கிளும் எப்படியும் தாராவோட வர்றோம்” என்று சொன்னான்.


“சரி கவின், நான் இங்கே இரண்டு நாளைக்கு அவனை சமாளிச்சுக்கிறேன். இரண்டு பேரும் எப்படியாவது தாராவை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்திடுங்க. சுபாஷ் கிட்ட நான் மன்னிப்பு கேட்டதா சொல்லுப்பா. அவர்கிட்ட பேசவே குற்ற உணர்ச்சியாக இருக்கு” என்றார் கரகரத்த குரலில்‌. சுபாஷூம் அருகில் நின்றபடி கேட்டுக் கொண்டிருந்தார். “சரி அங்கிள்” என்று போனை வைத்தான் கவின்.


கதிரேசன் மருத்துவரை சந்தித்து நிலைமையை விளக்கி சொல்லி அவரிடம் கெஞ்சி சம்மதிக்க வைத்தார். “ஓகே ஆனால் எல்லா நேரமும் மயக்கத்தில் வைக்க முடியாது. மருந்து வீரியத்தில் தூங்கினாலும் அப்பப்போ கண் விழிப்பார். அந்த சமயத்தில் நீங்கள் தான் சமாளிச்சுக்கணும்” என்றார் மருத்துவர். “ஓகே டாக்டர்” என்று சம்மதித்தார்.


அதன்படி செந்தூரன் கண்விழித்துப் போதெல்லாம் “இவ்வளவு நேரம் இங்கே தான்டா இருந்தாள். இப்போ தான் கிளம்பி போனா” என்று சொல்லி சமாளித்தார். மருந்தின் வீரியத்தால் அவனால் நன்றாக யோசிக்கக் கூட முடியவில்லை. ஆனால் என்னை இந்த நிலையில் என் ஹனியால் பார்க்க முடியாது, அதான் வந்திருக்க மாட்டாள் என்று எண்ணிக் கொண்டான்.


இரண்டு நாட்கள் கடந்து டிஸ்சார்ஜ்ம் அறிவிக்கப்பட்டது. கவினுக்கு பதறிக்கொண்டு போன் செய்தார் கதிரேசன். அவன் தாரிகா கிடைக்கவில்லை என்று சொன்னதும் தவித்துப் போனார். எப்படியும் இதை எதிர் கொண்டு தானே ஆக வேண்டும் என்று எண்ணியவராக பெருமூச்சுடன் டிஸ்சார்ஜ்க்கான பில் செட்டில் செய்து விட்டு செந்தூரனை வீட்டிற்கு அழைத்து சென்றார்.


வீட்டிற்கு வந்ததும் மனைவியை காணாததால் கேள்வியாக பார்த்தான். உனக்கு உடம்பு நல்லா ஆகணும்னு கோயில்ல வேண்டியிருப்பாள் போல அதை நிறைவேத்த போயிருக்கா” என்றார் கதிரேசன்.


ஜானகி, சாரதா, ஆச்சி மூவரும் என்ன நடக்குமோ? என்று உள்ளுக்குள் பதறிக் கொண்டு வெளியே எதையும் காட்ட முடியாது தவித்தனர்.


செந்தூரனை அழைத்துச் சென்று அவன் அறையில் படுக்க வைத்தனர். தாரிகாவின் வாசம் அந்த அறையில் நிறைந்திருப்பதாய் எண்ணி மூச்சை இழுத்துவிட்டு ஆழ்ந்த மூச்செடுத்தான். “எங்கேடி போன இரண்டு நாளா உன்னை பார்க்காம தவிச்சு போயிருக்கேன்” என்று உள்ளுக்குள் புலம்பியபடி தன் அலைபேசியை தேடினான். அது இல்லை என்றதும் தந்தைக்கு அழைத்தான்.


“அப்பா என் போன் எங்கே?” என்றவனிடம், “அது உடைஞ்சு போச்சுப்பா” என்றார் கதிரேசன். “சரி கவின் கிட்ட சொல்லி அதே நம்பரை உடனே வாங்க சொல்லுங்க, நிறைய போன் செய்ய வேண்டியிருக்கு. ஆமா எங்கே அவனையும் இரண்டு நாளா பார்க்க முடியலை? இப்போதைக்கு உங்க போன் குடுங்க, நான் தாரா கிட்ட பேசணும்” என்றான்.


கதிரேசன் கவலையுடன் மகனை பார்த்தார். பொறுமையின்றி தந்தையை பார்த்தவன், “என்ன அப்படி முழிக்கிறீங்க, போனை கொடுங்க” என்றான். தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து மெதுவாக தன் போனை எடுத்து அவனிடம் நீட்டினார்.


அவசரமாக அதை வாங்கி தாராவின் எண்ணை அழுத்தினான். அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. பலமுறை முயன்றாலும் இணைப்பு கிடைக்காததால், “கோயிலுக்கு போனா போனை சுவிட்ச் ஆப் பண்ணிடுவா, இவ ஒருத்தி. குத்துகல்லா இருக்கிற இந்த மாமனை சுத்தி வர்றதை விட்டுட்டு, கோயில்ல இருக்கிற சிலையை சுத்த போயிட்டா” என்று கடுப்புடன் புலம்பிவிட்டு, கவினுக்கு போன் செய்தான்.


கதிரேசன் தான் அழைக்கிறார் என்று அவசரமாக போனை எடுத்த கவின், “தாரா வந்துட்டாங்களா அங்கிள்?” என்றான் பரபரப்புடன்.


“இன்னும் வரலேயேடா, நீ எங்கே இருக்க?” என்ற நண்பனின் குரலில் அதிர்ச்சியானான். செந்தூரனுக்கு தெரிந்து விட்டதா? அவனே பேசட்டும் என்று அமைதி காத்தான். “உன்னை தான்டா கேக்கிறேன் எங்கே இருக்க இப்போ? தாரா கோயிலுக்கு போயிருக்காளாம் அவளை கூட்டிட்டு வா, அப்படியே என் பழைய நம்பர்லேயே புது சிம்கார்டு, போன் வாங்கிட்டு வா. வாடிக்கையாளர்ங்க கிட்ட பேசணும்” என்றான் செந்தூரன்.


எந்த கோயிலுக்கு போய் அவளை அழைத்து வருவது? அமைதி காத்தான் கவின். “பதில் சொல்லி தொலைடா? இங்கே தான் எல்லாரும் பேயறைஞ்ச மாதிரி இருக்காங்கனா உனக்கு என்ன ஆச்சு?” என்று பொறுமையின்றி கத்தினான்.


நண்பனின் கோபத்தில் மிரண்டு, “இதோ போன் சிம்கார்டு வாங்கிட்டு வந்திடுறேன்டா” என்றான் எச்சிலை விழுங்கி கொண்டு. “ம்ம்? அப்போ தாராவை யார் கூட்டிட்டு வர்றதாம்? அவளையும் அழைச்சிட்டு வா. நீ போகலைனா இன்னும் லேட் செய்வா. எனக்கு இரண்டு நாளா பார்க்காததே என்னவோ போல இருக்கு” என்றான்.


“சரிடா” என்றான் கவின் தயங்கிக் கொண்டே. செந்தூரன் நீட்டிய அலைபேசியை கைநடுக்கத்துடன் வாங்கி கொண்டார் கதிரேசன். புருவ முடிச்சுடன் அவரை பார்த்துக் கொண்டே படுக்கையில் சாய்ந்தான். கதிரேசன் மெல்ல அறையை விட்டு வெளியே சென்றவர் ஜானகியின் அருகே வந்து அவர் கழுத்தை பிடித்து இறுக்கினார்.


“என் மருமகளுக்கு மட்டும் எதாச்சும் ஆகட்டும், என் மகனுக்கு முன்னாடி உன்னை நானே கொன்னுடுவேன்” என்று சொல்லி மேலும் தன் பிடியை இறுக்கிக் கொண்டே செல்ல சாரதாவும் முத்துப்பாண்டியும் தான் அவரை விலக்க வேண்டியதாய் போய் விட்டது.


ஆராத்யாவும் சங்கரபாண்டியனும் மாடியிலிருந்து நடப்பதை பார்த்துக் கொண்டு தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டனர். “ஆராத்யா நான் அந்த பெண்ணை அவளாகவே வீட்டை விட்டு போகும்படி செய்துட்டேன். இந்த ஜானகியோட மூட நம்பிக்கை தான் நமக்கு துருப்பு சீட்டா உபயோகமாச்சு, லேசா ஒரு சின்ன ஆக்சிடென்ட் தான் செய்ய வச்சேன், அதுக்கே அந்தம்மா சீரியல் வில்லி போல டயலாக் பேசி அந்த தாராவை வீட்டை விட்டு போகும் படி செய்துடுச்சு. நான் கூட இதுக்காக ரொம்ப சிரமப்படுணும்னு நினைச்சேன். ஆனால் நம்ப வேலையை ஈசி ஆக்கிடுச்சு.


கொஞ்ச நாளைக்கு இவங்க டிராமா முடியற வரைக்கும் அமைதியாக இரு. எப்படியும் மித்ரன் இவங்க மேல கோபப்பட்டு எல்லாரையும் வீட்டை விட்டு அனுப்பிடுவான். அப்புறம் உன் வலையில் அவனை விழ வைக்கிறது உன்னோட சாமர்த்தியம். அதுக்கெல்லாம் டாடிக்கிட்ட ஹெல்ப் கேட்கக்கூடாது, சரிதானே” என்றார் சங்கரபாண்டியன் சிரித்துக் கொண்டே.


அவரை கட்டிக்கொண்டு, “தேங்க்யூ டாடி, யூ ஆர் மை ஹீரோ, ஐ லவ்யூ சோ மச் டாடி” என்று ஆசையாக அவர் கன்னத்தில் முத்தமிட்டாள். ஆதுரமாய் அவள் தலையை தடவி, “இது தப்புனு தெரிஞ்சும் உன் சந்தோஷத்துக்காக செய்தேன். உன்னை விட எனக்கு வேறேதுவும் பெரிசு இல்லை” என்றார் பெருமூச்சுடன்.


செந்தூரனுக்கு மருந்தின் வீரியத்தால் தூக்கம் கண்களை சுழற்ற, மெல்ல கண்மூடினான். தூக்கத்தில் தாரிகா அவன் அருகில் இருப்பதாய் தோன்ற, அங்கே இருந்த தலையணையை கட்டிப்பிடித்து கசக்கினான், “ஹனி ஹனி” என்றபடி தலையணையோட உருள, கால்களில் ஏற்பட்ட வலியில் கண்திறந்தான். கையில் மனைவியை காணாது தலையணை இருக்கவும் கோபத்துடன் அதை வீசியெறிந்தான். 


அப்போது நான்காய் மடித்து வைக்கப்பட்டு இருந்த ஒரு வெள்ளை நிற காகிதம் அவன் கண்களில் பட்டது. அசுவாரசியமாய் அதை எடுத்து பிரித்தவனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. முகம் இறுகியது, கைகளின் நரம்புகளும் கழுத்தின் நரம்புகளும் கோபத்தில் புடைத்துக் கொண்டன. 


கோபத்தோடு எழுந்தவன் நடப்பதற்காக தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்டிக்கையும் எடுக்காமல் வலியையும் பொருட்படுத்தாமல் காலை தாங்கி தாங்கி நடந்து வேகமாக ஹாலிற்கு வந்தான்.


ஹாலில் யாரும் இல்லாததைக் கண்டு அவர்களை அழைக்கவும் பிடிக்காமல் அங்கே இருந்த ஒரு பெரிய கண்ணாடியால் ஆன பூச்சாடியை ஓங்கி சுவற்றில் அடித்தான். அங்கே இருந்த நாற்காலிகளை வெறிக்கொண்டு தூக்கி விசிறினான். சத்தம் கேட்டு அனைவரும் பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.


அவன் நின்றிருந்த கோலத்தையும், ஹாலை அலங்கோலமாக்கியிருந்ததையும் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். முத்துப்பாண்டி தான் அவன் அருகே வந்து, “என்னாச்சுடா? ஏன் இப்படி எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டு இருக்க?” என்றார்.


“தாரா எங்கே?” என்றான் நேரடியாக. யாரும் பதில் சொல்லவில்லை, மெளனம்! மெளனம் மட்டுமே! ஒவ்வொருவரையும் அழுத்தமாகவும் நிதானமாகவும் கூர்ந்து பார்த்தான். “தாரா எங்கேனு கேட்டேன்” என்றான் குரலை உயர்த்தி.


கதிரேசன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “அதான் சொன்னேனே தம்பி, கோயிலுக்கு போயிருக்கா, இதோ கவின் கூட்டிட்டு வந்துடுவான்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கவின் அங்கே நுழைந்திருந்தான்.


ஹாலின் அலங்கோலத்தையும் அனைவரின் முகத்தில் தெரிந்த பதட்டத்தையும் யோசனையாக பார்த்தபடி செந்தூரனின் கையில் போனையும் சிம்கார்டையும் நீட்டினான். அவனோ அதை வாங்காமல், “இது தான் ரொம்ப முக்கியமா? இதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட இன்னொரு வேலை சொன்னேனே நினைவிருக்கா?” என்று அவனை பார்த்து உருமினான்.


கவின் தலையை கவிழ்ந்துக் கொள்ள, “எங்கேடா தாரா?” என்று அவன் சட்டையை பிடித்தான் செந்தூரன். “இவங்களை எல்லாம் விடு, நீ இருந்து கூட என் தாராவை போக விட்டுட்டியேடா” என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கினான்.


“மித்ரா…” என்று அதிர்ந்து நண்பனை விளித்தவன், “உஉனக்கு எப்படி தெரியும்?” என்றான் தடுமாறிய குரலில்.

“அப்போ எல்லாரும் சேர்ந்து இந்த இரண்டு மூணூ நாளா என்னை முட்டாள் ஆக்கி இருக்கீங்க” என்று எல்லாரையும் பார்த்து கர்ஜித்தவன்,  தன் கையில் இருந்த அந்த கடிதத்தை கவின் மேல் வீசினான் செந்தூரன்.


கவின் அதை பிரித்து பார்த்தான், “என் செந்தூராவிற்கு உன் தாரா கடைசியாக எழுதிக் கொள்வது… என்னோட ஜாதகம் உன்னை உயிருடன் வைத்திருக்காது என்பதை நன்றாக உணர்ந்து கொண்டேன். என் காதலை விட உன் உயிரே முக்கியம் என்பதால் உன்னை விட்டு பிரிய முடிவெடுத்து விட்டேன். என்னை தேட வேண்டாம். 


எனக்காக நீ வேறு திருமணம் செய்துக் கொண்டு நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும். ஆராத்யா உனக்கு சரியான பொருத்தமாக இருப்பாள் என்று நினைக்கிறேன். நீ உண்மையாக என்னை காதலித்தால் என்னை மறந்து ஆராத்யாவையே திருமணம் செய்துக் கொள்ளவேண்டும். என் ஆசையை நிறைவேற்றுவாய் என்ற நம்பிக்கையோடு மனமே இல்லாமல் வேறு வழியும் தோன்றாமல் உன்னை விட்டு பிரிகிறேன். என்னை மன்னிச்சுடு மாமா” என்று அந்த கடிதத்தில் இருந்த தாரிகாவின் வாசகங்களை சத்தமாக படித்தான் கவின்.


ஆராத்யா வெற்றி களிப்புடன் தந்தையை பார்த்தாள். செந்தூரன் குடும்பத்தார் அனைவரையும் அனல் கக்கும் பார்வை பார்த்தான். அனைவரும் தலையை குனிந்துக் கொள்ள, அழுத்தமான காலடிகளுடன் தன் அன்னையின் அருகில் சென்றான்.


பயத்தோடு பார்த்த ஜானகியின் கண்களுக்கு அவன் அவர் பெற்ற மகனாக தெரியவில்லை. ஆத்திரத்தோடு தன்னை நோக்கி வரும் அரக்கனாக தெரிந்தான். 


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post