இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 14) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 13-05-2024

Total Views: 18431

உனக்கென்றே உயிர் கொண்டேன் 14

தூரத்தில் எங்கோ கதவு தட்டும் ஓசை செவியை நிறைக்க... படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த வெண்பா புரண்டு படுத்தாள்.

கதவினை தட்டும் சத்தத்தோடு அழைக்கும் விளிப்பு தமிழ் என்று ஒலிக்க... அடித்து பிடித்து எழுந்து மெத்தையில் முட்டியிட்டவளாக அமர்ந்தாள்.

அன்னையின் குரலுக்கு "வரேன் லட்சு" என்று கவிழ்ந்து படுத்திருந்த தமிழும் ஒரு பக்கமாக திரும்பி படுத்தான்.

"அச்சோ!" என்று முன்னால் சரிந்து விழுந்த முடிக்கற்றையை பின்னால் வழித்து கொண்டையிட்டவள்,

படுக்கையில் சிறு ஸ்டேண்டில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த அலைப்பேசி தான் இன்னும் காணொளி அழைப்பில் இருப்பதை சுட்டிக்காட்டிட, சுட்டு விரலின் நுனியை கடித்தவளாக...

"இவங்க சொல்லிக் கொடுக்கும்போதே தூங்கிட்டோம் போல" என்றவளாக அழைப்பைத் துண்டிக்க அலைப்பேசியை கையில் எடுத்த சமயம்,

"பொள்ளாச்சி போகணும் தமிழு. சீக்கிரம் எழுந்து கிளம்பு" என்று தனம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் கேட்டு... இணைப்பைத் துண்டித்திடாது, உறக்கத்தில் தெரிந்த தன்னவனின் முகத்தை ரசித்து பார்த்தாள்.

"நான் தூங்கிட்டேன். நீங்க ஏன் கட் பண்ணலையாம்? ஹான்..." என்றவள், இரு விரலை திரையில் தெரிந்த தமிழின் கன்னத்தில் கிள்ளுவதைப் போல் கொண்டு செல்ல, அவனிடம் தெரிந்த அசைவில் பட்டென்று கீழிறக்கியிருந்தாள்.

"ஆண்ட்டி எழுப்பியதுக்கூட தெரியாது தூங்குறாங்க" என்றவளுக்கு அவனை எழுப்பிட மனமே இல்லை.

"நைட் என்னால் தான் தூங்க லேட்டாகிருச்சு" என்று முகம் சுருக்கியவள், "சீனியர்... பாஸ்" என்று ஹஸ்கி குரலில் அழைக்க, அவனிடம் அசைவில்லை.

வெண்பாவும் அழைத்து பார்த்துவிட்டு அவன் முகத்தில் தன் காதலை நிரப்பியவளாக ரசனையில் மூழ்கிட...

"பார்த்தது போதும். எக்ஸாமுக்கு கிளம்பு" என்று திடுமென ஒலித்த அவனின் குரலில் உடல் தூக்கிப்போட அதிர்ந்து சீரானாள்.

"நீங்க தூங்கலையா?" தெறித்து விழுந்த கருவிழிகளோடு கேட்டிருந்தாள்.

"ஒரு பொண்ணு உத்து உத்து பார்க்கும்போது எங்கேயிருந்து தூக்கம் வரும்?" என்றவன் எழுந்து அமர்ந்து கண்களை தேய்த்தபடி அவளின் முகம் பார்த்தான்.

"நான் ஒன்னும் உங்களை உத்து பார்க்கலை. ஆண்ட்டி கூப்பிட்டு போயும் நீங்க எழல, அதான் எப்படி எழுப்பலான்னு பார்த்திட்டு இருந்தேன்" என்றவள் அவனின் பார்வையை தவிர்த்தவளாக மொழிந்தாள்.

தமிழ் சத்தமிட்டு சிரித்தான்.

இருவரும் வாய் வழியாக தங்களின் மனதை பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனாலும் இயல்பாய் அவர்களுக்குள் மெல்ல காதல் பூத்துக் குலுங்கியது. முன்பெல்லாம் பேசியிராத பேச்சுக்கள் கூட, அவர்களிடையே இதமாக அமைந்தது.

"எப்படி பார்வையாலே எழுப்பிடலான்னா?" 

கேட்ட தமிழை முறைத்தவள்,

"பொள்ளாச்சி போறீங்களா?" எனக் கேட்டாள்.

"ம்ம்ம்... ஒரு முக்கியமான வேலை" என்ற தமிழிடம், "அண்ணி வீட்லேர்ந்து இன்னைக்கு வறாங்க. டேட் பிக்ஸ் பண்ணியாச்சு. கன்ஃபார்ம் பண்ணிடுவாங்க நினைக்கிறேன்" என்றாள்.

அவன் ஏற்கனவே அறிந்த விஷயமாயிற்றே... மௌனமாக தலையசைப்பு மட்டும் கொடுத்தான்.

"ஓகே பாஸ்... பைய்" என்று வைத்திட...

"மொழியும் தமிழை விரும்புறாங்க... ரைட்?" என்று மேசை மீதிருந்த புகைப்படத்தை கையிலெடுத்து அதிலிருந்த வெண்பாவின் நிழலுருவிடம் வினவியன். ஒற்றை கண்ணடித்து புன்னகைத்துக் கொண்டான்.

"தமிழ் இன்னுமா கிளம்பல?"

கீழிருந்து தேவராஜ் குரல் கொடுக்க...

வேகமாக ஆயத்தமாகி கீழ் சென்றான். பூர்வியின் புகுந்த இடமாகவிருக்கும் ஊர் என்பதை விட தன்னவள் பிறந்து வளர்ந்த வீட்டை பார்க்க அத்தனை ஆர்வமாகக் கிளம்பியிருந்தான்.

மணி வந்திருந்தார்.

"வாங்க மாமா" என்றவன் அவரின் அருகில் சென்று அமர்ந்தான்.

தனம் தேநீர் கொண்டு வந்து கொடுக்க, அவன் பருகி முடிப்பதற்குள் அனைவரும் கிளம்பி வந்திருந்தனர்.

"தரகர் வரலையாம். வேறொரு வேலை இருக்காம்" என்றபடி வந்த தேவராஜ், "கிளம்புவோமா தமிழு" எனக் கேட்க...

"போகலாம் ப்பா" என்றவன் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

"வர்ஷினி மட்டும் வீட்டில் தனியா இருக்கணும். கூட்டிட்டு போவோமே?" தெய்வானை தேவராஜ்ஜிடம் கேட்டார்.

"ஏன் இதுக்கு முன்ன இருந்ததில்லையாக்கும்?" என்று முன் வந்து வினவிய மணி, "என் வீட்டில் விட்டுட்டு போவோம் மச்சான். அங்க அம்மா இருக்காங்க பார்த்துப்பாங்க" என்றார்.

"அங்க என் பொண்ணை அனுப்பப் முடியாது" என்று தெய்வானை ஆரம்பிக்க...

"நல்ல காரியமா போகும்போது எதுக்கு பிரச்சினை?" என்றார் தனம்.

"யாரு நான் பிரச்சினை செய்யறனா?" என்று தெய்வானை தனத்திடம் எகிறிக்கொண்டு செல்ல...

வெளியில் சென்றிருந்த தமிழ், சத்தம் கேட்டு உள்ளே வந்தான்.

"கல்யாணம் பூர்விக்குதானே! வர்ஷினிக்கு இல்லையே. இவங்க எதுக்கு?" தமிழ் கேட்டதில் அகிலாண்டம் மகளுக்காக சிலிர்த்துக்கொண்டு வந்தார்.

"அவள் உன் அப்பனோட தங்கச்சிடா. உன் தாய் மாமன் பொண்டாட்டி. அவள் இல்லாம இந்த வீட்டில் ஒன்னு நடந்திடுமா?" என்று கோபமாகக் கேட்டார்.

"ஆஹான்..." என்று தெய்வானையின் முன் வந்த தமிழ், "இவங்க தான் என் தாய் மாமா பொண்டாட்டியா?" என்று வியப்பது போல பாவனை செய்தவன், "முன்னபின்ன சொல்லியிருந்தாதானே  தெரிந்திருக்கும்" என்றான்.

தெய்வானைக்கு நடு மண்டையில் நங்கென்று கொட்டு வாங்கிய உணர்வு.

"இருபது வருசமா என் அப்பாவுக்கு தங்கச்சியாவே பார்த்து பழகிட்டேன். அதனால உங்களை என் தாய் மாமா பொண்டாட்டியா உங்களை ஏத்துக்க முடியல. நாளைக்கு பூர்வி கல்யாணத்துக்கு தாய் மாமா பொண்டாட்டியா இல்லாமல் அத்தையா தனி சீர் செய்யுங்க. அப்போதான் இத்தனை வருச உங்களோட தனித்துவம், அகங்காரம், திமிர் இதற்கெல்லாம் அர்த்தமிருக்கும்" என்றான்.

"என்னடா விட்டால் ஓவரா பேசிக்கிட்டே போற... எனக்கென்ன வீடு வாசல் இல்லையா? சொத்தில்லையா?" என்ற தெய்வானை "என் அண்ணன்கிட்ட கேட்டால் மொத்தத்தையும் எனக்கே கொடுத்திடும்" என்றார்.

மணிக்கு சீய் என்றிருந்தது.

தெய்வானை பேசிய முதல் வரியில் இத்தனை வருடங்கள் சேர்ந்து வாழவில்லை என்றாலும், இன்னமும் தன் மீது கணவன் என்கிற உரிமை இருக்கிறதே என கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ந்து மீள்வதற்குள் நீ நினைப்பது தவறென்று காட்டியிருந்தார்.

"உங்க அண்ணனா?" என்று இழுத்தவன், "என் அப்பாவை சொல்றீங்களா?" எனக்கேட்டு, "அவருக்கு இப்போ எதாவது வேணுன்னா நான் தலையசைக்கணும்" என்றான். அய்யனாராக நிமிர்ந்து நின்று.

"இது மொத்தமும் என் அப்பா உழைத்தது. இப்போ நான். இதில் நீங்க உரிமை கொண்டாடுவீங்களோ?" எனக் கேட்டவன், "இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் உண்மையான உரிமை தானாகக் கிடைத்திருக்கும்" என்றான்.

"என்னயிருந்தாலும் அவள் உன் அத்தை தமிழு." தமிழ் பேசியத்திலிருந்த நியாயத்தில் அகிலாண்டத்தால் மகளுக்கு துணை நிற்க முடியவில்லை.

"அந்த நினைப்பு இருக்கத்தான் இன்னமும் இங்க இருக்காங்க" என்ற தமிழ், "இருக்கும் மிட்ச வாழ்க்கையையாவது கௌரமா அவங்க குடும்பமுன்னு வாழ சொல்லுங்க. உங்க மகள் தானே அவங்க? தாத்தா சாகும்வரை அவரைவிட்டு ஒருநாள் வெளியூருன்னு தங்கியிருப்பீங்களா நீங்க?" எனக் கேட்க, அகிலாண்டம் அவமானமாக உணர்ந்தார்.

திருமணத்திற்கு பிறகான ஒரு பெண்ணின் கௌரவம், கணவனுடன் இருப்பதில் தான் என்பதில் அக்கால முதியவருக்கே தெரியவில்லை எனும்போது, தெய்வானையை என்ன சொல்ல?

"மாமா ஏதோவொரு வகையில் கெட்டவராக இருந்திருந்தால், நானே அவரு வேணான்னு காலத்துக்கும் வச்சி பார்த்துப்பேன். ஆனால்," என்று நிறுத்திய தமிழ், "நல்லதுலாம் தப்பாத்தானே தெரியும்?" என்றான்.

"பூர்வி கல்யாண நிகழ்வுகளில் தேவராஜ்ஜின் தங்கையாக இல்லாமல், மணியின் மனைவியாக எல்லாம் செய்ய முடியுமென்றால் அனைத்திலும் கலந்து கொள்ளுங்கள். இல்லையா எதுவும் வேண்டாம்" என்றான். அழுத்தமாக.

தமிழ் பேசட்டுமென்று தேவராஜ், மணி, தனம் யாரும் குறுக்கே நுழையாது அமைதியாகவே நின்றனர்.

தமிழுக்கும் இத்தனை தூரம் பேச வேண்டுமென்றில்லை. நேற்று பூர்வியிடம் அவர் நடந்து கொண்ட முறை இனியும் தொடரும் என்பதாலேயே தமிழ் தெய்வானையை அடக்கிட இத்தனை தூரம் பேசினான்.

தேவராஜ்ஜூக்கும் இத்தனை வருட பொறுமை போய்விட்டிருந்தது.

தன்னுடைய மகனின் பேச்சிலாவது தெய்வானை மனம் மாறி மணியுடன் சென்றிடமாட்டாரா என்று அமைதியாக இருந்தார்.

மணிக்கு மட்டுமே... இத்தனை வருடம் அசையாதவளா இன்று அசைந்து விடப்போகிறாள் என்று சலிப்பாக இருந்தது.

மணிக்கு தன் காத்திருப்பு என்றோ சலிப்படைந்து இருந்தது.

"உனக்காவது உன் அப்பா மேல பாசம்ன்னு ஒன்னு இருக்கா?" என்று வர்ஷினியிடம் கேட்ட தமிழ், "நீ அப்பான்னு போயிருந்தால் அவங்களும் புருஷன்னு வந்திருப்பாங்களோ என்னவோ?" என்றான்.

"அம்மா என்னை போகவிட்டதில்லை." வர்ஷினி பதறி கூறினாள்.

"படிச்ச பொண்ணுதானே நீ? சுயமா யோசிக்கத் தெரியாது. எங்க இருந்தால் மதிப்பு, மரியாதைன்னு புரியாது?" எனக் கேட்டவன், "இவங்களை மட்டும் எப்பவும் நம்பிடாத" என்றான். தெய்வானையை சுட்டி.

தெய்வானை தமிழை முறைத்துக்கொண்டு நின்றார்.

அவருக்கு தற்போதைய தமிழின் பேச்சிற்கு கோபம் கொள்வதைவிட மனதில் எண்ணியிருக்கும் காரியம் பெரியதாக தெரிந்தது. அதனால் ஓரளவிற்கு மேல் தமிழிடம் அடங்கி போவதைப்போல் அமைதியாக தன்னைக் காட்டிக்கொண்டார்.

"இதெல்லாம் எப்பவும் திருந்தாது தமிழு. நேரமாகுது. கிளம்புவோம்" என்ற மணிக்கு, நேற்றிரவு பூர்வி மற்றும் தேவராஜ் சொல்லிய பின்பு தெய்வானையிடம் காலம் சென்று இன்று பொறுமையாக பேசி பார்க்க நினைத்திருந்தார்.

'அந்த எண்ணம் நிச்சயம் நடைபெறாது' என்று தமிழ் இவ்வளவு பேசியும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாது நின்றிருக்கும் தெய்வானையின் தோற்றம் உணர்த்தியது.

"வீட்டை பூட்டிக்கிட்டு உள்ளவே இரு" என்று வர்ஷினியிடம் அதட்டலாக சொல்லிவிட்டு, "வாம்மா போவோம். கொஞ்ச காலத்துக்கு அமைதியாதான் இருக்கணும்" என்றார் தெய்வானை. உள்ளர்த்தம் வைத்தவராக.

"என்னவோ உன் வாழ்க்கையில நானும் தப்பு பண்ணிட்டேன் போல. தமிழு சொல்லும்போது பதறிப்போச்சு. என்னயிருந்தாலும் பொண்ணு புருஷனோடு இருக்கிறதுதான் நிறைவு" என்ற அகிலாண்டம், தெய்வானையின் பார்வையில் மேற்கொண்டு எதுவும் சொல்லாது வெளியில் சென்று காரில் ஏறிக்கொண்டார்.

ஆறு பேருக்கு மேலாகவே நல்ல தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையில் அதிக வசதியுடன் கூடிய கார் என்பதால் இடம் பற்றாக்குறை இன்றி அமர்ந்துகொண்டனர்.

ஒரு மணி நேரம் பத்து நிமிடங்களில் பொள்ளாச்சி வந்து சேர்ந்தனர்.

பொள்ளாச்சியின் எல்லைப்பகுதியில் தமிழ் வண்டியை நிறுத்திட...

"தரகர் வீட்டி அட்ரஸ் கொடுக்கலையா தமிழ்?" என வினவினார் தேவராஜ்.

"இல்லைப்பா" என்ற தமிழ் அஸ்வினுக்கு அழைத்து,

"ஊருக்குள்ள வந்துட்டோம் மாமா. வீட்டு லொக்கேஷன் ஷேர் பண்ணுங்க" என்றான்.

தமிழின் உரிமையான பேச்சு... அதுவும் ஒரு வாரத்திற்குள் எனும் போது அகிலாண்டம், தெய்வானைக்கு ஆச்சரியமாக இருந்தது.

தன் அக்காவின் கணவன் என்பதால் மட்டுமின்றி, தன்னவளின் அண்ணன் என்பதாலும் ஏற்பட்ட உரிமையென்று உணர்ந்த தேவராஜ், மகனின் காதல் பக்கம் அறிந்து சன்னமாக புன்னகைத்துக் கொண்டார்.

பெற்றவர்களிடம் காதலை மறைத்திட முயலும் பிள்ளைகளுக்கு மத்தியில், அவனின் காதலை தன்னையே அறிய வைத்து... தான் தெரிந்துகொண்டோம் என்பது முதல் காதல் பக்கங்கள் யாவையும் வெளிப்படையாக செய்து, தனக்கு தன்னவள் எத்தனை முக்கியமென்று உணர்த்திக் கொண்டிருக்கும் மகனின் செயலில் தேவராஜ்ஜூக்கு அவனின் காதல் தீவிரம் புரிந்தது.

பொள்ளாச்சி தென்னந்தோப்பிற்கு பெயர் போனது. இயற்கை எழில் கொஞ்சும் இடம். எங்கும் பச்சை போர்த்திய நிலமாக கண்களுக்கு விருந்தளிக்கும்.

அஸ்வின் அனுப்பிய இடத்திற்கு வர, அவர்களை வரவேற்றது உயர்ந்து நின்ற மதில் சுவரும், பெரும் இரும்பு கேட்டும் தான்.

அஸ்வின் கேட்டிற்கு அருகே தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தான்.

"ஹாய் மாமா!" முகம் முழுக்க புன்னகையோடு கார் கதவினை இறக்கிவிட்டு மொழிந்த தமிழை பார்த்து மலர்ந்து புன்னகைத்த அஸ்வின், அனைவருக்கும் வரவேற்கும் விதமாக சிறு தலையசைப்பைக் கொடுத்தான்.

"டூ மினிட்ஸ் உள்ள போகணும் தமிழ்" என்ற அஸ்வின் முன் செல்ல, தமிழ் பின் தொடர்ந்தான்.

மிகப்பெரும் பரந்த பரப்பு. வானை முட்டிக்கொண்டு நிற்கும் தென்னை மரங்கள். தோப்பிற்கு நடுவில் மாடி வீடு. வாய்க்கால் வரப்பு, பலவகை கனி மரங்கள் என நிறைந்து அவ்விடம் அத்தனை ரம்மியமாக காட்சியளித்து.

"இந்த இடமே மனசுக்கு நிறைவா தெரியுது" என்று தேவராஜ் சொல்ல...

'பல ஏக்கர் தேறும்போல. நல்ல புலியங்கொம்பா... இணையாத்தான் புடிச்சிருக்காங்க' என்று மனதில் நினைத்தார் தெய்வானை.

"நல்ல பெரிய இடந்தான் போல.' சொல்லிய அகிலாண்டத்திடம் தன் மூத்த பேத்தி வாழுமிடம் தங்களுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்கிற பெருமை.

"எல்லாத்தையும் பணத்தை வைத்து மட்டுமே பார்க்கக்கூடாது பாட்டி." தமிழ் சொல்லியது என்னவோ அகிலாண்டத்திடம் தான். ஆனால் தெய்வானையின் முகம் கருத்து சிறுத்தது.

"பணம் மட்டுமே பிரதானமா பார்க்கும் சிலருக்கு அதெல்லாம் புரியாது தமிழு" என்றார் மணி. தெய்வானையை முறைத்தபடி.

"விடுங்கண்ணா. இப்போ இதெதுக்கு?" என்று தனம் தான் மணியை அமைதிப்படுத்தினார்.

சண்முகம் வீட்டு வாயிலில் காத்து நின்றார்.

அனைவரும் வண்டியிலிருந்து இறங்கிட...

இரு கரம் குவித்து வரவேற்றார் சண்முகம்.

"அண்ணா." அஸ்வின் வீட்டுக்கு பக்கவாட்டாக குரல் கொடுக்க...

"ஆச்சுங்க தம்பி" என்றார் அப்பண்ணையில் வேலை செய்யும் சுருளி.

"இந்த தோப்பு முழுக்க உங்களுதா?" வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு தெய்வானைக் கேட்டிருந்தார்.

சண்முகம் சிரித்துக்கொண்டே ஆமென்றார்.

"வீடும் இந்தபக்க இடமும் தான் என் உழைப்பு. இதை சுத்தி இருக்க தோப்பு, தொரவுன்னு அம்புட்டும் அஸ்வின் தொழிலில் கால் ஊன்றிய பிறகு அவன் வாங்கியது. அதுக்கு பின்னர் கட்டியது தான் பண்ணையை சுற்றி மதில் சுவரு" என்ற சண்முகம் அனைவரையும் அமர வைத்தார்.

வீட்டிற்குள் நுழைந்ததும் தமிழின் விழிகள் தன்னைப்போல் பக்கவாட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அவனின் மொழியின் புகைப்படத்தை தழுவி உறைந்தது.

பள்ளி வயதில் எடுத்தது போலும். இரட்டை பின்னலில் சைக்களில் அமர்ந்து ஒரு கால் தரையில் ஊன்றி நின்றபடி, ஒற்றை கையால் சைக்கிளை பிடித்துக்கொண்டு மற்ற கையால் தர்பூசணி கீற்றை கடித்துக் கொண்டிருந்தாள்.

'தர்பூசணியை விடமாட்டாள்' என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட தமிழ், 'இந்த தர்பூசணி அளவுக்கு மொழிக்கு தமிழை பிடிக்குமா?' என தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

'போட்டி, பொறாமை கொள்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா? அது ஒரு பழம்' என்று கேலி செய்தது அவனின் மனம்.

உள்ளுக்குள்ளே அசடு வழிந்த தமிழ் அஸ்வினின் அருகில் அமர்ந்தான்.

சுருளி இளநீரை வெட்டிக் கொண்டு வந்திருக்க... அங்கு சமையல் வேலைக்கு இருக்கும் அவரின் மனைவியிடம் கொடுத்து, இளநீரில் கருப்பட்டி, எலுமிச்சை சாறு கலந்து கொண்டுவந்து அனைவருக்கும் கொடுத்தார் செவ்வந்தி.

"இவங்க சுருளி, செவ்வந்தி. கணவன் மனைவி. எங்களுக்கு உதவியா இருக்காங்க" என்ற சண்முகம், வாய்க்காலுக்கு அந்தப்பக்கம் இருக்க வீட்டில் இருக்காங்க" என்றார்.

இந்த வயதிலும் தன்மையுடன் நடந்துகொள்ளும் சண்முகத்தின் பணிவும், பெரியவர் இருக்கும்போது தான் தம்பட்டம் அடிக்கக்கூடாதென்று அவரின் முகம் பார்த்து பொறுமையாக இருக்கும் அஸ்வினின் குணமும் தேவராஜ்ஜூக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதுவுமில்லாது சுருளி, செவ்வந்தியை வீட்டு வேலையாட்கள் என்று சொல்லாமல் தங்களுக்கு இணையாக வைத்து அறிமுகம் செய்தில்... தன் மகளுக்கு இங்கு நல்லா மரியாதை இருக்குமென்று நினைத்தார்.

அடுத்த கணம் தேவராஜ் சற்றும் யோசிக்கவில்லை.

தமிழ், மணி, தனம் மூவரையும் ஒரு சேர பார்த்தவர்,

"எங்களுக்கு முழு சம்மதம் மாமா. மேற்கொண்டு ஆக வேண்டியதை பேசுவோம். எங்களுக்கு நிச்சயம் தனியா செய்யும் பழக்கமில்லை. பார்த்து வைத்த தேதியில் கல்யாணம் வச்சிக்க உங்களுக்கு தோதுப்படுமா சொல்லுங்க. மொத நாள் பொண்ணழைப்பு முடிந்து தாம்பூலம் மாத்திக்கலாம்" என்றார் தேவராஜ்.

சண்முகம் அஸ்வினை பார்க்க...

"எங்களுக்கு ஓகே" என்றவன், "என் தங்கச்சிக்கு கல்யாணத்துக்கு முன்னாடி பூர்வியை பார்க்கணும் ஆசை. எக்ஸாம் நேரங்கிறதால் அவளால் இதிலெல்லாம் கலந்துகொள்ள முடியல. எங்கேஜ்மெண்ட் வைத்திருந்தால் அன்னைக்கு பார்த்திருக்கட்டும் நினைத்திருப்பேன். இப்போ" என்று நிறுத்தியவன், "நாளையோட எக்ஸாம் முடியுது. இந்த வாரத்தில் ஒருநாள் அவள் பூர்வியை சந்திக்க நீங்க அனுமதி கொடுக்கணும்" என்றுக் கேட்டிருந்தான்.

"அதுக்கென்ன மாப்பிள்ளை. ஒருநாள் மாமாவோட அனுப்பி வையுங்க" என்றார் தேவராஜ்.

"அடுத்து பேச வேண்டியதை பேசுவோம்" என்ற அகிலாண்டாத்தை தொடர்ந்து, "என்ன எதிர்பார்க்கிறீங்க?" எனக் கேட்டார் தெய்வானை.

"எங்களை கேட்டால் எம் பேத்தி மட்டும் போதும் சொல்லுவேன். அதனால் உங்க பொண்ணுக்கு பெத்தவங்க என்ன செய்யணும் நினைக்கிறீங்களோ அதை செய்யுங்க. நடுவில் இது வேணும் அது வேணும் கேட்க எங்களுக்கு உரிமை இல்லை" என்றார் சண்முகம்.

தெய்வானையை இருமுறை தான் பெரியவர் பார்த்திருக்கிறார். அவரின் வயதும் அனுபவமும் தெய்வானை எப்படியென்று பார்த்ததும் கணித்திருந்தது. அதனாலே அவருக்கு ஏற்ற வகையில் பதில் வழங்கினார்.

தெய்வானையின் முகம் போன போக்கை கண்டு தமிழுக்கு சிரிப்பு வர... "டேய்... நீ வேற ஏண்டா? ஏற்கனவே அவங்க தாத்தா கொடுத்த நோஸ்கட்டில் காண்டாகிட்டாங்க" என்று தமிழுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்த அஸ்வின், "தோட்டத்தை சுற்றிக்காட்டிட்டு வரேன் தாத்தா" என்று சொல்லி தமிழை இழுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றான்.





Leave a comment


Comments


Related Post