இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--17 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 13-05-2024

Total Views: 24800

இதயம் 17

     மருந்தகம் செல்வதற்காக மகன் இருந்த அறையை விட்டு வெளியே வந்த அரசன் வதனியைக் கவனித்ததும் மீண்டும் அறைக்குள் வந்தார். “மினி உங்க அக்கா வந்திருக்காங்க போல இருக்கு“ தன் வருங்கால மருமகளுக்காக சிரமப்பட்டு வதனிக்கு மரியாதை கொடுத்தார் அவர்.

     “அக்கா பையன் பாரிக்கு காலையில் இருந்து உடம்பு சரியில்லாமல் இருந்தது. அவனைத் தான் கூட்டிக்கிட்டு வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். நான் போய் பார்த்துட்டு வரேன்“ என்றவள் நகரப்பார்க்க அவளின் கரம் பற்றித் தடுத்தார் அரசன்.

     “என்ன அங்கிள்“ என்றவளிடம், “கொஞ்சநாள், குறைந்தபட்சம் என் பையன் உன் வழிக்கு வரும் வரை இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்“ அழுத்தமாய் சொன்னார் அரசன். ஏன் என்று கேட்க நினைத்தவள் அரசனின் முகத்தைப் பார்த்தே ஏதோ சரியில்லை என்பதால் அப்போதைக்கு அமைதியானாள்.

     ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சாணக்கியனின் ஒருபக்கம் மினி அமர்ந்திருக்க இன்னொரு பக்கம் அமரப் போனவர் என்ன நினைத்தாரோ தனியே வெளியே வந்தார்.  தன்னை நோக்கி வந்தவரைக் கவனித்த வதனி கண்டும் காணாமல்  கிளம்பிப் போக முற்பட, “எப்படிம்மா இருக்க, பையன் எப்படி இருக்கான்“ வீம்புக்கு அவரே முன்சென்று பேசினார்.

     “நல்லா இருக்கேன் அங்கிள்“ என்றவள் நகரப்பார்க்க, “இனிமேல் என் பையனும் நல்லா இருப்பான் மா. அவனை அவனுக்காக நேசிக்கிற ஒரு துணையை நான் கண்டுபிடிப்பேன்னு உன்கிட்ட சொன்னேனே நினைவு இருக்கா அதை நிறைவேற்றிட்டேன். என் பையனும் இனி உன்னை மாதிரி சந்தோஷமா இருப்பான்“ என்றார்.

     வேண்டுமென்றே தன்னிடம் வம்பு இழுக்கப் பார்க்கிறார் என்று நினைத்த வதனி, “அவர் கஷ்டப்படணும் என்று நான் எப்போதும் நினைத்தது இல்லை. அந்த வகையில் அவருக்கு அவரைப் புரிஞ்சுக்கிற துணை கிடைச்சதில் எனக்கும் சந்தோஷம் தான்“ என்றவளின் கை தானாக மகனின் தலையை வருடிக்கொடுத்தது.

      தான் சொல்ல நினைத்த தகவலைச் சொல்லிவிட்டவரின் கண்கள் வதனியின் மகனின் மீது விழுந்தது. தன்னுடைய கால் முட்டி வரையே இருந்த சிறுவனின் முன்னே சிரமத்துடன் குனிந்தவர், அவன் கரம் பிடித்து தன் அருகே வர வைத்தார்.

      அவன் தலையை வருடிக்கொடுத்து, “உனக்குக் கொடுக்க இப்ப என்கிட்ட எதுவும் இல்லையே“ என்ற நினைப்புடன் தன்னைத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தவரின் கையில் பாக்கெட்டில் இருந்த பேனா தட்டுப்பட அதை அவனிடம் கொடுத்தார்.

     “பாரி வேண்டாம்“ பின்னால் இருந்து வதனி குரல் கொடுக்க, “அது அவனுக்கானது தான், அவன்கிட்டேயே இருக்கட்டும். இத்தனை வருஷத்துக்கு அப்புறம் உன்னை என்னால் ஓரளவு மன்னிக்க முடியுது, நல்லா இரு“ என்றுவிட்டு கிளம்பினார் அரசன்.

     அறைக்குள் மெதுமெதுவாக கண்விழித்த சாணக்கியன், தன் அருகே அமர்ந்து போன் பார்த்துக்கொண்டிருந்த மினியைக் கவனித்துவிட்டு சுற்றி முற்றிப் பார்த்தான். அங்கே அவளைத் தவிர யாரும் இல்லை எனவும் என்னவோ போல் இருந்தது. உடல் நன்றாக இருக்கும் காலகட்டத்தில் யாரும் வேண்டாம் என்று வீராப்பாக அலைவதும், உடல்நலம் சரியில்லாமல் படுத்துக் கிடக்கும் போது உலக மக்கள் அனைவரும் தனக்கே வேண்டும் என்று நினைப்பதும் சராசரி மனிதஇயல்பு தானே. சாணக்கியன் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன. 

     தன்னைச் சுற்றியிருந்த தனிமை மனதை வருத்தினாலும், இவள் தகவல் கொடுக்க மறந்திருப்பாள். அப்படிக் கொடுத்திருந்தால் அப்பாவோ இல்லை எழிலோ கண்டிப்பாக வந்திருப்பார்கள் என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டவன், “அப்பாவுக்கு சொல்லலையா?“ என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.

     அவன் சத்தத்தில் நடப்புக்கு வந்த மினி, என் முகத்தைப் பார்த்து பேச மாட்டீங்களோ என தனக்குள்ளே நினைத்தவளாக, “போன் பண்ணி சொன்ன உடனே அடிச்சுப் பிடிச்சு வருவதற்கு அவங்க என்ன உங்க பொண்டாட்டியா? சொல்லி இருக்கேன் வந்துகிட்டு இருக்காங்க“ விட்டேத்தியாகச் சொன்னாள்.

     “உன் பக்கத்தில் மயங்கி விழுந்த பாவத்துக்கு என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்துட்டு, என் அப்பாவுக்கும் தகவல்  சொல்லிட்ட தானே. அப்புறம் எதுக்காக இன்னும் இங்க இருக்க.  உன்னையெல்லாம் வீட்டில் தேட மாட்டாங்களா?“ சீலிங்கைப் பார்த்தபடி கேட்டான். 

     “என்னைத் தேடி வந்த என் அத்தான் தான் உங்களை இங்க கொண்டு வந்து சேர்த்தது. எட்டு மணிக்கு வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு போய் இருக்கார்“ என்றாள். அதன் பிறகு சாணக்கியன் பெரிதாக எதுவும் பேசவில்லை. ஆனால் மினி பேசினாள். 

     “எப்ப பார்த்தாலும் தனியாவே இருக்கீங்களே உங்களுக்குப் போர் அடிக்கலையா?“ என்று பேச்சுவார்த்தைக்கு பிள்ளையார் சுழி போட்டாள். “தனிமை நான் தவம் இருந்து வாங்கிக்கிட்ட வரம் இல்லை, நான் ரொம்ப நம்பினவங்க எனக்குக் கொடுத்த சாபம். வரத்தில் இருந்து கூட தப்பிக்கலாம், சாபத்தில் இருந்து தப்பிக்க முடியாது“ இதைச் சொல்லும் போது அவன் கண்கள் கலங்கியதோ அதை அவன் மட்டுமே அறிவான்.

     “சோ உங்களுக்கும் தனிமை பிடிக்கல ரைட். அப்புறம் எதுக்காக அதைப் பிடிச்சுத் தொங்கணும். மத்தவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனால், உங்க வாழ்க்கையில் நடந்த விஷயங்களுக்கு நீங்க மட்டுமே பொறுப்பாக முடியாது. அப்படி இருக்க எதுக்காக நீங்க மட்டும் எதுக்காக தனியாக் கிடந்து கஷ்டப்படணும்“ சற்றே பயந்து பயந்து தான் இதைக் கேட்டாள். 

     சாணக்கியன் ஏதோ நல்ல மனநிலையில் இருந்தான் போல, “முதல் கோணலே முற்றும் கோணலா மாறின அப்புறம் இன்னும் ஒருத்தரை அதே அளவு நம்புவது எல்லாம் சாத்தியம் இல்லாதது“ என்றான் அவள் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து.

     “இரண்டாவது வாழ்க்கை ஒன்னும் சிம்ம சொப்பனம் எல்லாம் கிடையாது. எனக்குத் தெரிந்த ஒருத்தங்களுக்கு முதல் வாழ்க்கை நல்லா அமையல. அதுக்காக அவங்க ஒன்னும் இடிஞ்சு போகல. தனக்கு ஏத்த மாதிரி இன்னொரு நல்ல துணையைத் தேர்ந்தெடுத்து குழந்தை, குடும்பம் என்று சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க“ ஆர்வமாகச் சொன்னாள்.

     சாணக்கியன் அவளைக் கண்டுகொள்ளாமல் விட்டத்தைப் பார்த்தவண்ணம் படுத்திருக்க, ரைட்டு வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறிடுச்சு என்று தனக்குள் நினைத்துக்கொண்டவள், “நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் இல்ல கேட்கணும்“ தடுமாற்றத்துடன் சொன்னாள்.

     “நீ கேட்கப் போறது என்னன்னு எனக்குத் தெரியாது. ஆனா அது எதுவா இருந்தாலும் என்னால் அதை நிறைவேற்ற முடியாது“ வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசினான் சாணக்கியன்.

     “என்ன ஏதுன்னு கேட்காம இத்தனை வேகமா பதில் சொன்னா எப்படி“ சின்னதாய் சிணுங்கினாள் அவள். அவள் காட்டும் உரிமையிலும், சிணுங்கலிலும் கோபம் வந்தது. “பொண்ணுங்க கிட்ட முன்ஜாக்கிரதையா இருக்கணும் என்பதை சொந்த அனுபவத்தின் மூலம் எல்லோருக்கும் சொல்லிட்டு போயிட்டார் தசரத மகாராஜா“ நக்கலாகச் சொன்னான்.

     “சாணக்கியன் நான்“ மினி ஏதோ சொல்ல வர அப்போது உள்ளே வந்தார் அரசன். “அப்பா“ என்றபடி ஆனந்தமாக எழுந்தான் அவரின் மகன். அவனுடைய அதீத ஆனந்தத்திற்குக் காரணம் முன்னமே தெரியும் என்பதால் அமைதியாக அவன் அருகே வந்து அமர்ந்தார் மனிதர். 

     “நிலாவுக்கு குழந்தை பிறந்து இருக்கு பா. ஆண் குழந்தை“ பூரிப்புடன் சொன்னான். “உன்னை அரைஉயிராய் ஆக்கி, குப்பை மாதிரி தூக்கிப் போட்டுட்டு போனவ அவ. அவளைத் திரும்பத் திரும்ப கோபுரத்தில் உட்கார வைக்கிறியே டா“ ஆதங்கமாக வந்தது அவர் வார்த்தைகள்.

     “மினி நீ உன் வீட்டுக்குக் கிளம்பு“ சாணக்கியனின் தொணி கட்டளையாக வந்தது. தன் முன்பு அரசன் நிலாவை விட்டுக்கொடுத்துப் பேசுவதை அவன் விரும்பவில்லை என்பது புரிய, அரசனிடம் தலையாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் மினி.

     தன் அத்தானுக்கு அழைத்தபடி மினி மருத்துவமனையை விட்டு வெளியேற அதை எதேச்சையாய் கவனித்த வதனி, தான் பார்த்தது தன் தங்கை தானா இல்லை வேறு யாருமா என்ற குழப்பத்துடன் கொஞ்ச தூரம் நடந்து வர அவளுக்கு சாணக்கியனின் கணீர் குரல் கேட்டது. அதைக் கேட்டதும் தன்னிச்சையாய் உடல் தூக்கிப்போட அங்கிருந்து செல்லப் பார்த்தாள்.

     “நிலாவைப் பத்தி தப்பா பேசாதீங்க அப்பா. யாரோ பண்ண தப்புக்கு அவ என்ன பண்ணுவா. நானும் நீங்களும் தான் இப்படி இருக்கோம். அவளாவது நல்லா இருக்கட்டும். குட்டிப்பையன் அவ்வளவு கியூட், அப்படியே என்னைப் போலவே இருக்கான்“ என்று சிலாகித்து அவன் பேசப்பேச வெளியே நின்றிருந்த வதனி சொல்ல முடியாத உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கினாள்.

     தோழிக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்று அவள் வேண்டாத நாளே கிடையாது. அதற்கு எல்லாம் சேர்த்து கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார். எங்கிருந்தாலும் அவள் நன்றாக இருக்கட்டும் என்கிற நினைப்பில் மகனைக் கூட்டிக்கொண்டு நகர்ந்தாள் அவள்.

     மகனுக்கான சிகிச்சையை முடித்துக்கொண்டு கார் பார்க்கிங் வந்தவள் காரில் ஏறி அமர்ந்த பின்னால் தான் சாணக்கியனும் அரசனும் கூட சிகிச்சை முடிந்து வந்து கொண்டிருப்பதைக் கவனித்தாள். 

     அரசன் சொன்ன அவரின் வருங்கால மருமகள்நினைவு வர அவர்களோடு பெண் யாரேனும் இருக்கிறாளா என்று தேடினாள். அப்படி யாரும் தெரியவில்லை. “வதனி என்ன பண்ணிக்கிட்டு இருக்க, அந்த மனுஷன் என்ன பண்ணா, யாரைக் கட்டிக்கிட்டா உனக்கு என்ன?“ என தன்னைத் தானே திட்டிக்கொண்டு கவனத்தை வாகனத்தில் திருப்பினாள். அன்றைய இரவில் கணவன் ஜீவனிடம் அரசனைச் சந்தித்ததையும், சாணக்கியனுக்கு விரைவில் திருமணம் என்பதையும் சொல்ல, ஜீவன் எதைப்பற்றியும் மூச்சு கூட விடவில்லை. நண்பனின் நலுனுக்காக என்று தன் நல்வாழ்வில் பள்ளம் தோண்டிக்கொண்டிருக்கிறான் என்பதை அந்த நேரம் அவன் அறிந்திருக்கவில்லை தான்.

     அடுத்த நாள் காலையில் இருந்து மினியின் காதல் பயணம் தொடங்கியது. சாணக்கியனின் கவனம் தன் மேல் திரும்ப வேண்டும் என்பதற்காக ஏதோதோ செய்து பார்த்தாள். மற்ற மாணவிகளைக் கூட ஏதோ உயிருள்ள உயிரினமாகக் கருதியவன் இவளை ஏதோ கல்லையும், மண்ணையும் பார்ப்பது போல் பார்த்து வைத்தான்.

     அவனை வசீகரிப்பதற்காக சதுரங்கத்தின் கடினமான வியூகங்களை ஜீவனிடம் இருந்து கற்றுக்கொண்டு அதை அவனிடம் நடைமுறைப்படுத்தினாள். சாணக்கியனிடம் விளையாட்டைக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் அனைவரும் அவளைப் பாராட்டினாலும் சாணக்கியனின் வாயில் இருந்து நல்ல வார்த்தை ஒன்றும் வரவில்லை. 

     அவனுடைய ஒற்றைப் பார்வைக்காக தவம் இருந்தவளுக்கு சோதனை மீது சோதனையாக வைத்துக்கொண்டிருந்தான் அவளுடைய காதலுக்குச் சொந்தக்காரன். என்றாவது ஒருநாள் தன் தவம் பூர்த்தியடையும் என்கிற நம்பிக்கையில் தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல விடாமல்  தொடர்ந்து கொண்டிருந்தாள் பெண். கல்லைக் கூட கரைத்து விடலாம் போல. கல்மனம் கொண்ட அவனைக் கரைப்பது அத்தனை கடினமாக இருந்தது அவளுக்கு.

     உறக்கத்தில் இருப்பவனை எழுப்பலாம் ஆனால் உறங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது என்பார்கள். அதே போல் தான் சாணக்கியனும். எதுவும் புரியாதவர்களுக்குப் புரிய வைக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு புரியாதது போல் காட்டிக்கொண்டிருக்கும் அவன் கல்மனதைக் கனிய வைக்கும் வழி தெரியாமல் அல்லாடிக்கொண்டிருந்தாள் மினி.

     நேரடியாக காதலைச் சொல்லவும் பயமாக இருந்தது. வெறும் இரசனைப் பார்வைக்கே குரு, மாணவி என்று கதை பேசியவன் அவன். காதல் என்று சொல்லிவிட்டால் அதையே காரணமாகக் காட்டி தன்னைச் சதுரங்க வகுப்பிற்கு வரவிடாமல் செய்துவிடுவான். அவனிடம் கருணை எதிர்பார்க்க முடியாது என்பது நன்றாகத் தெரிந்து தான் இருந்தது அவளுக்கு. 

     பின்வாங்கவும் காதல் கொண்ட மனம் விடவில்லை. என்ன செய்வது என்ற யோசனையிலே நான்கு மாதங்களைக் கடத்தி விட்டாள் அவள். இடைப்பட்ட இந்த நாட்களில் மாவட்ட அளவில் நடக்கும் சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொண்ட பிரியா தன் திறமையான ஆட்டத்தால், அடுத்த சில மாதங்களில் நடக்கும் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியின் போது தமிழ்நாட்டைச் சார்ந்து விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டாள். அவளோடு இன்னும் சில வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட, பிரியாவின் விளையாட்டுத் திறனுக்கான நிஜமான சோதனைக்காலம் ஆரம்பம் ஆனது. 

     அவளுக்கு குருவான சாணக்கியனின் ஆதரவும், பக்கபலமும் சற்றே அதிகமாகத் தேவைப்பட்டது. அதனால் கல்லூரி வருவதைக் குறைத்துக்கொண்டான். எழிலை வைத்து சென்னை அளவில் பல பொறியியல்  கல்லூரிகளுக்கு இடையே நடத்தப்படும் சின்ன அளவிலான சதுரங்கப் போட்டிக்காக மினியின் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தான்.

     மினி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவள் பெயரையும் போட்டியில் அவள் நண்பன் கொடுத்திருக்க வேறு வழியில்லாமல் கலந்து கொண்ட மினி, நண்பன் எதிர்பார்த்த படியே கலந்துகொண்ட அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றாள். 

     மினியைப் பார்க்கையில் பல வருடத்திற்கு முன்னால் சாணக்கியனைப் பார்ப்பது போலவே இருந்தது கல்லூரி முதல்வர் வைத்திலிங்கத்திற்கு. தன் கல்லூரிக்கு பெயர் சேர்த்துக்கொடுப்பது மினி தான் என்பதை உறுதிப்படுத்தியவர் சாணக்கியனிடம் மினியின் தனிப்பட்ட கோச்சிங்கிற்கு கேட்க அவர் மீது இருந்த மரியாதையின் காரணமாக மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டான் அவன். சாணக்கியனோடு நேரம் செலவிட அதிக நேரம் மினிக்கு கிடைக்கிறது என்பதில் அரசன் ஜீவன் இருவருக்குமே அதீத சந்தோஷம். 

     நாட்கள் தன்போக்கில் செல்ல சாணக்கியனின் மனது மட்டும் கரைவேனா என்று அடம்பிடித்தது. பிரபஞ்சத்தில் மாற்றம் ஒன்று தானே மாறாதது. சாணக்கியின் மனதிலும் மாற்றம் வந்தது. அவன் மனதும் மினியின் பக்கம் சாயும் தருணமும் வந்தது. கூடவே மினி வதனியின் தங்கை, ஜீவனின்  மீது அளப்பரிய மரியாதை கொண்டவள் என்ற தகவலும் தெரிய வரும் தருணமும் வந்தது. விஷயங்கள் அனைத்தையும் விளக்கமாகத் தெரிந்துகொண்ட பின்னால் சாணக்கியன் என்ன முடிவு செய்யப்போகிறான் என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

 


Leave a comment


Comments


Related Post