இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 33 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 14-05-2024

Total Views: 18863

செந்தூரா 33



செந்தூரன் ஆத்திரத்தோடு தன் அன்னையை நெருங்கி தன் கைமுஷ்டியை இறுக்கினான், “என்ன சொல்லி என் தாராவோட மனச நோகடிச்சே? அவளா போயிருக்க வாய்ப்பே இல்லை. நிச்சயம் நீ எதாச்சும் சொல்லியிருப்பே, சொல்லு என்ன சொன்ன சொல்லு” என்றான் ஆவேசமாக அவரின் தலைமுடியை பிடித்து.

“டேய் ஏதோ உன் உயிருக்கு ஆபத்தோ என்ற பதட்டத்துல இரண்டு வார்த்தை பேசிபுட்டா அதுக்காக தாரா வீட்டை விட்டு போயிடுவானு யார் கண்டது. அதுக்காக பெத்த தாயோட முடியை பிடிப்பியா? உனக்கு என்ன வெறி புடிச்சு போச்சா?” என்றார் ரஞ்சிதம் ஆச்சி.


“ஏய் கிழவி, வாயை மூடு. வயசாயிடுச்சேனு பார்க்கிறேன்” என்று வாயில் தன் விரலை வைத்து எச்சரிக்கை செய்தான்.


“நீங்க எல்லாரும் சேர்ந்து தானே எங்க இரண்டு பேரோட மனசுல ஆசையை வளர்த்தது. இப்போ நீங்களே பிரிச்சு வைக்க பார்த்தால் நான் சும்மா இருக்கணுமா? மனுஷனா பொறந்தா எதாவது பிரச்சனையும் விபத்தும் ஏற்படறது சகஜம், அதுக்கு அவமேல பழிபோடுவியா நீ? எனக்கு எதும் ஆகியிருந்தா கூட அவளை நீங்க எதுவும் சொல்லியிருக்க கூடாது. அப்போ எனக்கு எதாவது ஆகியிருந்தால் இந்த வீட்ல என் பொண்டாட்டியோட நிலைமை என்ன ஆகியிருக்கும்? 


நான் எந்த ஊரிலோ காரில் அடிப்பட்டு கிடந்தா என்னை இடிச்சுட்டு போன லாரிக்காரன் யாரு என்னனு விசாரிக்காம இங்கே வீட்டில் இருந்த என் பொண்டாட்டி மேல பழி சொல்லியிருக்க? நீ எல்லாம் ஒரு தாயா? முதல்ல நீ எல்லாம் ஒரு பொம்பளையா? ஏன் நீங்களே உங்க இனத்துக்கு எதிரியா இருக்கீங்க?” என்று கடுமையான வார்த்தைகளாக கடித்து துப்பினான்.


“ஒவ்வொரு முறையும் பிழைச்சு தானே வந்திருக்கேன்? சாகலையே? நான் பிழைச்சதுக்கு காரணம் என் தாரா தான்னு உங்க முட்டாள் மூளைக்கு தோணலையா? ஜாதகமோ விதியோ எதுவா இருந்தாலும் மதியாலும் நம்மோட நேர்மறையான எண்ணத்தினாலும் நம்பிக்கையாலும் வெல்ல முடியும். உங்களுக்கு போய் இதெல்லாம் சொல்றேன் பாரு? ஏற்கனவே சொல்லியும் ஏறாத மூளைக்கு இப்ப மட்டும் ஏறவா போகுது?” என்று வெறுப்புடன் மொழிந்தவன் எல்லாரையும் எச்சரிப்பது போல கைவிரல் நீட்டி,


“என் தாரா மட்டும் கிடைக்கலைனா உங்க எல்லாரையும் தலை முழுகிடுவேன். அவள் எதாவது செஞ்சுக்கிட்டால் உங்களையும் சும்மா விடமாட்டேன் நானும் உயிரோட இருக்கமாட்டேன். நான் வேற எதுவும் அதிகமா பேசறதுக்கு முன்னாடி எல்லாரும் இந்த வீட்டை விட்டு கிளம்புங்க” என்று கைவிரல்களை ஆவேசமாக சொடுக்கிட்டு கூறினான்.


அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவர்களை சந்திக்க விரும்பாமல் திரும்பிக் கொண்டு, “என் கண்முன்னாடி நிக்காதீங்க, எல்லாரும் வெளியே போயிடுங்க, எனக்கு என் தாராவை எப்படி கண்டுபிடிக்கணும்னு தெரியும். அதுவரைக்கும் உங்க முகத்தில் முழிக்க மாட்டேன்” என்றான் வெறுப்புடன்.


முத்துப்பாண்டி அனைவரையும் பார்த்து “கிளம்புங்க, நம்மை பார்க்க பார்க்க அவனுக்கு இன்னும் தான் கோபம் அதிகமாகும்” என்றவர் கவினிடம் திரும்பி, “தம்பி, என் பேரனோட இருந்து எப்படியாவது தாராவை கண்டுபிடிச்சுடுப்பா? அவ கிடைச்சதும் எங்களுக்கு தகவல் சொல்லு. நாங்களும் எங்களால முடிஞ்சவரைக்கும் அவளை தேடறோம்” என்று சொன்னார்.


செந்தூரன் உள்ளே சென்று உடை மாற்றிக் கொண்டு காலை தாங்கியபடி நடந்து வந்தான். கட்டு போட்ட இடத்திலிருந்து இரத்தம் வழிந்தது, அதை பொருட்படுத்தாமல் வெளியே வந்தவன், “கவின் காரை எடு போகலாம்” என்றான்.


“எங்கேடா?” என்ற கவினை முறைத்து, “எங்கேனு எல்லாம் தெரியாது, தாராவை தேடி போகணும் அவள் கிடைக்கிற வரைக்கும் தேடணும்” என்று அழுத்தமாக சொல்லி விட்டு நடந்தான். அவன் நடந்த பாதையில் இரத்தம் சொட்டி தரையெல்லாம் ரத்தக் கறையானது.


“மித்ரா, நீ ஸ்ட்ரெயின் பண்ணிக்காதடா, ரெஸ்ட் எடு, கால்ல பார் ரத்தம் வருது. நான் போய் தங்கச்சியை தேடுறேன்” என்றான் கவின். அவனை பார்த்து முறைத்து, “நான் சொல்றதை மட்டும் செய், எனக்கு நீ ஆர்டர் போடாத” என்று அழுத்தமாக சொல்லி விட்டு காரை நோக்கிச் சென்றான்.


வேறு வழியில்லாமல் கவினும் அவனுடன் சென்றான். ஆராத்யா கவலையுடன் சங்கரபாண்டியனை பார்த்தாள். அவர் இமைத்தட்டி அமைதியாக இருக்கும்படி கூறினார். 


சிறிது நேரத்தில் சாரதாவும் தன் தாய் வீட்டாருடன் பொள்ளாச்சிக்கு கிளம்பினார், சுபாஷிற்கு போன் செய்தால் அவர் எடுக்கவே இல்லை. எனக்கும் தானே என் மகள் காணாமல் போனது வருத்தம். என்னிடம் கோவிச்சுக்கிட்டால் நான் என்ன செய்வேன்? என்று மனதிற்குள் புலம்பியபடி பெற்றோருடன் சென்றார் சாரதா.


ஆராத்யா தன் தந்தையிடம் புலம்பிக் கொண்டு இருந்தாள். “என்ன டாடி, இவன் ஓவரா ரியாக்ட் பண்றான். தேடிப் போய் கூட்டிட்டு வந்துடுவானோ? என்றாள் கவலையாக.


“நீ பதட்டப்படாதே ஆரா. என்னை பொறுத்தவரை அந்த பொண்ணு கிடைக்கமாட்டா. அவன் எந்தெந்த இடத்தில் தேடுவான் என்று அவளுக்கும் தெரியும் தானே, அதனால் அவன் கெஸ் பண்ணாத இடத்துக்கு தான் அவள் போயிருப்பாள்னு என் அனுமானம்.


பொண்டாட்டி காணாமல் போன பதட்டத்துல கொஞ்சநாள் அப்படி தான் இருப்பான். அதுக்கப்புறம் நிஜத்தை புரிந்துக் கொண்டு வாழ ஆரம்பிப்பான். அந்த நேரத்தில் நீ அவனுக்கு பக்கபலமா இருந்தால் போதும். ஈசியா உன்னை விரும்ப ஆரம்பிச்சிடுவான்” என்றார் சங்கர பாண்டியன்.


“ஓகே டாடி, நான் அது வரைக்கும் வெயிட் பண்றேன்” என்றாள் ஆராத்யா.


செந்தூரனும் கவினும் ஊர் ஊராக தாரிகாவை தேடி அலைந்தனர்.  சென்னை சென்று சுபாஷை சந்தித்தவன் அவளின் தோழிகள் அனைவரின் விலாசத்தையும் வாங்கினான். செந்தூரன் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் மனைவியை தேடி வந்ததை பார்த்த சுபாஷ் உள்ளுக்குள் பெருமைபட்டார். தானும் அவர்பங்குக்கு தேடுவதாய் சொல்லி அவன் கேட்ட விவரங்களை கொடுத்து அனுப்பினார்.


அவர்கள் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. கவின் தயங்கி கொண்டே “நியூஸ் பேப்பரில் செய்தி கொடுக்கலாமா மச்சான்?” என்று கேட்டான். நெற்றியை தடவி யோசித்தவன், “தாராவோட போட்டோவை போட வேண்டாம், என்னோட போட்டோ போட்டு என் தாராக்காக இந்த செந்தூரன் தேடி அலைஞ்சிட்டு இருக்கேன், சீக்கிரம் வந்து சேர்ந்திடுனு மட்டும் ஒரு நியூஸ் போடு, அவளாக பார்த்திட்டு வரட்டும். யாரும் அவளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது” என்றான்


சரி என்று செந்தூரனை கோவளம் கடற்கரையில் அமரச் சொல்லிவிட்டு கவின் செய்தித்தாள் ஆபிசை நோக்கிச் சென்றான். கதிரவன் தன் பணியை செவ்வனே முடித்து விடைப்பெற்றுக் கொண்டிருந்த மாலை பொழுது அது. வானம் முழுக்க செந்தூரத்தை பூசிக் கொண்டு இருந்தது. கடற்கரை மணலில் கையை ஊன்றி அமர்ந்தபடி செவ்வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் செந்தூரன்.


“தாரா என்னை விட்டு எங்கேடி போயிட்டே? நான் உன்னை விட்டு இருக்கமாட்டேன்னு உனக்கு தெரியாதா? இதுல எவளையோ கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி தியாகி மாதிரி லட்டர் எழுதி வச்சிட்டு போயிருக்கியேடி முட்டாள், நீ மட்டும் என் கையில கிடைச்சா உன்னை கடிச்சே தின்னுடுவேன்டி” என்று மனதிற்குள் அவளை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான் அவள் கணவன்.


இருள்கவியத் தொடங்கும் சமயம் கவின் வந்தான். “மித்ரன் கிளம்புடா, நியூஸ் பார்த்து தங்கச்சி வந்துடுவாங்க. எல்லா இடமும் தேடியாச்சு. தங்கச்சி ஒரு வேளை கோயம்பத்தூர் வீட்டுக்கு வந்தால் நமக்கு எப்படி தெரியும்?” என்றதும் எழுந்து நடந்தான் செந்தூரன்.


கவின் காரை ஓட்டிக் கொண்டு இருக்க வெறுமையான மனத்துடன் அமர்ந்தபடி இருந்தவனின் கண்களில் கண்ணீர். வழியில் பாரை பார்த்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னான். கவின் அவனை அதிர்ந்து பார்த்தான். நண்பனை சட்டை செய்யாமல் பாருக்குள் சென்றவன் கண்மண் தெரியாமல் குடிக்க ஆரம்பித்தான். கவின் எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை.


“என்னால என் தாராவை மறக்க முடியாது, அதுக்கு நான் என்னையே மறக்கணும்” என்று குழறியபடி குடிக்க ஆரம்பித்தான். கவலையுடன் நண்பனை பார்த்தான் கவின். சிறிது நேரத்தில் அங்கிருந்த மேஜை மேல் செந்தூரன் சாய்ந்து விழவும், அவனை தாங்கி பிடித்து காரில் அமரவைத்தான் கவின். வேதனையோடு நண்பனை பார்த்து, எத்தனை கட்டுப்பாட்டோடு இருந்தவன்? இப்படி குடிக்க ஆரம்பிச்சுட்டானே? என்றபடி காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.


தள்ளாடிக்கொண்டு நடந்து வந்த செந்தூரனை கவின் அழைத்துவந்து அவன் அறையில் படுக்க வைத்தான். “என்னாச்சு கவின்?” என்று ஆராத்யா கேட்க, பெருமூச்சுடன், “ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கான், கொஞ்சம் கிட்ட இருந்து பார்த்துக்கோ ஆராத்யா. நாள் முழுவதும் கார் ஓட்டினது டயர்டா இருக்கு நான் கொஞ்சம் தூங்கறேன்” என்று எதிரில் இருந்த சோபாவில் கவின் படுத்துக் கொண்டான்.


ஆராத்யா செந்தூரன் இருந்த அறைக்கு சென்றான். அவளோ அவன் முகத்தருகே சென்று மித்ரன் எதாவது சாப்பிட்டிங்களா? என்றாள். அப்படியே சட்டென எழுந்து அமர்ந்தவன் அவள் கன்னத்தை தன் இருகைகளால் அழுத்தமாக பற்றி, “தாரா என்னை விட்டுட்டு எங்கேடி போயிருந்த இத்தனை நாளா?” என்றான் குழறியபடி.


முதன்முறையாக தன் கன்னத்தை அழுத்தமாக அவன் பற்றியிருந்ததில் உடலெங்கும் பரவசமாக உணர்ந்தாள். மூச்சை அடக்கி அவன் மேலும் முன்னேற காத்திருந்தாள். “சொல்லுடி எங்கே போனே?” என்றான் குழறலாய்.

பதில் இல்லாமல் போகவும் கண்களை சுருக்கி எதிரே இருந்த பிம்பத்தை உற்று நோக்கினான். மங்கலாக தெரிந்த வெளிச்சத்தினாலும் உள்ளே இருந்த போதையினாலும் அவளின் வரிவடிவம் மட்டுமே தெரிந்தது. மெல்ல அவள் கன்னத்தை பற்றி அவளை தன் உதட்டருகே இழுத்தான், கண்கள் மூடி அவனின் முதல் முத்தத்திற்காக காத்திருந்தாள். அதே நேரம், மழை வருவதற்கு அறிகுறியாக மின்னல் தோன்றியது, அந்த வெளிச்சம் ஜன்னலின் ஊடே அறைக்குள் ஒளிர, ஆராத்யாவின் முகம் தெளிவாக அவன் கண்களுக்கு தெரிந்தது.


அந்த கணம் அவளை பிடித்து அப்படியே தள்ளியிருந்தான். எதிர்பாராமல் அவன் தள்ளிவிட்டதில் தாறுமாறாக தரையில் போய் விழுந்தாள். “ஏய், என் ரூமுக்குள்ள உனக்கென்ன வேலை? வெளியே போ” என்று கர்ஜித்தான்.


“அடச்சே இந்த பாழாய் போன போதையால் என்னவெல்லாம் நடந்திருக்கும்” என்று தலையில் கைவத்துக் கொண்டவனின் போதை மொத்தமாக இறங்கி இருந்தது. 


சமாளித்து எழுந்தவள், “சாரி மித்ரன் உங்களை சாப்பிட சொல்லி கூப்பிடத்தான் வந்தேன். நீங்க தான்…” என்றவளை உறுத்து விழித்தான்.


“என்னை சாப்பிட சொல்றதுக்கு அறையோட வாசலில் இருந்து சத்தமா கூப்பிடறது தானே? அப்படியே நான் சாப்பிடலைனா உனக்கென்ன போச்சு? என் கட்டில் வரைக்கும் வந்து அவ்வளவு நெருக்கமாவா வந்து கூப்பிடுவ? இன்னொருமுறை என் பக்கத்தில் வந்து நின்ன மனுஷனா இருக்க மாட்டேன், அவுட்” என்று சொடுக்கிட்டு அறை வாசலை காண்பித்தான்.


ஆராத்யாவிற்கு அவமானமாக போய் விட்டது. இவனை அத்தனை எளிதாக வளைக்க முடியாது போலயே? அநியாயத்துக்கு பொண்டாட்டி தாசனா இருக்கான்? என்கிட்ட இல்லாதது அப்படி என்ன அவகிட்ட இருக்கு. அவள் எப்படியும் வரப்போறது இல்லை. உன்னை எப்படி வழிக்கு கொண்டுவரணும்னு எனக்கும் தெரியும் என்று மனதிற்குள் கறுவிக் கொண்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.


செந்தூரன் அதே கோபத்தோடு குளியலைறக்குள் சென்று தன் கோபமும் ஆற்றாமையும் ஆதங்கமும் அடங்கும் வரை அப்படியே ஷவரில் நின்றான். நேரம் சென்றதே தவிர உள்ளக் கொதிப்பும் தாராவைப் பற்றிய நினைப்பும் அவனை விட்டு அகலவே இல்லை. 


மறுநாள் கவின் வந்து செந்தூரனை எழுப்பினான். “மித்ரா கம்பெனி ஆரம்பிச்சு பத்துநாளா அந்தபக்கம் நாம யாருமே போகலைனால் எப்படிடா, கொஞ்சம் நேரம் ஆபிஸ் வந்து போடா” என்று எழுப்பினான்.


செந்தூரனுக்கு நண்பனின் பேச்சில் உண்மை உறைத்தது. அவனின் சொந்த விஷயத்துக்காக வேலையில் சேர்ந்தவர்களின் சம்பாத்தியம் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்தவனாக எழுந்து தயாராகி ஆபிசுக்கு கிளம்பினான்.


ஆராத்யாவும் அவனுடன் கிளம்பி வர, அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு, “சாரி ஆராத்யா, தப்பு என்மேலயும் இருக்கு, யாருனு பார்க்காமல் நானும்…” என்று இழுத்தவன் “ஆனால் என் அறைக்குள் என் அனுமதியின்றி இனி ஒரு போதும் வராதே, புரிஞ்சதா?” என்றான்


“ஓகே மித்ரன், கவின் உங்களை கிட்ட இருந்து பார்க்க சொன்னதால தான் நான் உங்க அறைக்கே வந்தேன். இனி கவனமா இருக்கேன். நீங்களும் என்னை தப்பா எடுத்துக்காதீங்க” என்று சிநேகமாய் சிரித்தாள்.


“தேங்க்ஸ் பார் யுவர் அன்டர்ஸ்டான்டிங்” என்று செந்தூரனும் உதட்டை எட்டாத சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு அவளுடன் பேசிக் கொண்டே நடந்தான். சங்கர பாண்டியன் மாடியிலிருந்து மகளுக்கு ஆல் தி பெஸ்ட் என்று கட்டை விரலை நீட்டிக் காட்டினார், ஆராத்யா தந்தையை அர்த்தத்துடன் பார்த்து சிரித்துவிட்டு கிளம்பினாள்.


ஆபிஸ் சென்றதும் செந்தூரன் விட்டு சென்ற வேலைகள் அவனை அதில் மூழ்கியிருக்க செய்தன. சற்று நேரம் தன் சொந்த விஷயம் மறந்து வேலையில் கவனம் செலுத்தினான். கவினுக்கும் ஆராத்யாவிற்கும் பொறுப்புகளை பிரித்துக் கொடுத்தான்.


இப்படி நாட்கள் உருண்டோடின. வேலைநேரத்தில் ஆபிஸ் செல்வதும் மாலை நேரம் முழுவதும் மனைவியை தேடிக் கொண்டு காரில் பயணம் செய்வதுமாக நாட்கள் உருண்டோடிக் கொண்டு இருந்தது.


அப்படி இரவில் இலக்கின்றி கார் ஓட்டிச் சென்று கொண்டிருந்தவன் ஓரிடத்தில் ஓரமாய் நிற்க வைத்துவிட்டு கண்மூடி தாராவின் நினைவுகளில் மூழ்கினான். அவன் வீட்டினர் யார் போன் செய்தாலும் எடுப்பதே இல்லை.


சாரதா போன் செய்தால் மட்டும் ஓரிரு வார்த்தை பேசுவான். சாரதா அவனுக்கு வீடியோ கால் செய்திருந்தார். அதை ஏற்றவன் கண்களில் உயிர்ப்பே இல்லாமல் தன் அத்தையை பார்த்தான். 


இரண்டு மாதங்களில் முகம் முழுக்க தாடியுடன் கண்களில் உயிர்ப்பற்று பத்து வயது அதிக மூப்புடன் தென்பட்ட செந்தூரனை பார்த்து சாரதா அதிர்ந்து விட்டார். “செந்தூரா ஏன்டா இப்படி இருக்க? என் பொண்ணு கோழையில்லைடா, கட்டாயம் எங்கேயாவது பத்திரமா இருப்பா. அவளாலயும் உன்னை விட்டு இருக்க முடியாது. அவளே உன்னை தேடி வருவா பாரு. அவ வரும் போது இந்த கிழவன் யாருனு என்னை பார்த்து கேட்டால் நான் என்னடா செய்யட்டும்?” என்றார் சாரதா


மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தவன், “நான் கிழவன் இல்லனு என்னால அவளுக்கு ப்ருவ் பண்ண முடியும், அதைப்பத்தி நீ கவலைப்படாதே. எப்படி வளர்த்து வச்சிக்கிறே பாரு உன் பொண்ணை! என்னை அம்போனு தவிக்கவிட்டு தலைமறைவாக வாழ்ந்துட்டு இருக்காள். உன் அண்ணி பேசினதுக்கு தண்டனை எனக்கா? அவள் இல்லாமல் நான் நடை பொணமா இருக்கேன்” என்றான் வலிமிகுந்த குரலில். அதற்கு மேல் பேச முடியாமல் போனை அணைத்து விட்டிருந்தான்.


இலக்கில்லாமல் கார்கண்ணாடியின் ஊடே வெளியே வெறித்தவனின் பார்வை கூர்மையுற கண்கள் அங்கேயே தெறித்துவிடுவது போல அதிர்ந்து போயின.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post