இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...38 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 14-05-2024

Total Views: 25732

இருவருக்கும் முழு பரிசோதனையும் முடிந்து ரிப்போர்ட் அடங்கிய ஃபைலை மருத்துவர் ஆராய்ந்து கொண்டிருக்க தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் மாணவனாய் தவித்து அமர்ந்திருந்தது என்னவோ தரணிதான். மென்புன்னகையை இதழில் தேக்கியபடி இருவரையும் ஏறிட்டார் மருத்துவர்.


“You both are perfectly alright… குழந்தை பெத்துக்க 100 சதவிகிதம் தகுதி உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு… ட்ரீட்மெண்ட் எல்லாம் அவசியமே இல்ல…” அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை மயிலிறகாய் வருடிச் சென்றன.


“கல்யாணம் முடிஞ்சு எத்தனை வருஷம் ஆச்சு…?’’


“ஒ..ஒரு வருஷம் ஆகப்போகுது…” ஒருவித சங்கடத்துடன் பதில் அளித்தான் தரணி.


ஒரு சில நொடிகள் அவனை ஆழ்ந்து பார்த்தவர் “என்ன சார்… கல்யாணம் பண்ணின உடனே குழந்தை பெத்துக்கணும்னு பழைய ஜெனரேஷன் மாதிரி நீங்களும் யோசிக்கிறீங்க…” சட்டென கேட்க ‘இதைத்தானே நானும் சொன்னேன்’ என்பதுபோல் அவனை திரும்பிப் பார்த்தாள் பூச்செண்டு.


“அ..அதுக்கு இல்ல டாக்டர்… இப்பவெல்லாம் infertility அதிகமாயிடுச்சு… சப்போஸ் ஏதாவது பிராப்ளம் இருந்தா இப்பவே சரி பண்ணிக்கலாம்ணுதான் வந்தோம்… மத்தபடி ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ற ஐடியா எல்லாம் இல்ல…” அவசரமாய் மறுத்தான். உண்மையும் அதுதான்… குழந்தை வேண்டும் என்று ஆசை இருக்கிறதுதான். குறைபாடு ஏதேனும் உண்டா என்று தெரிந்து கொள்ளவே இந்த பரிசோதனை.


“நீங்க சொல்றதும் சரிதான்… உணவு முறை மாற்றம்… நகராமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்ற மாதிரியான துறைகள்… இதெல்லாம்தான் இன்ஃபேர்டிலிட்டிக்கு காரணம்… பட் நீங்க ரெண்டு பேருமே ரொம்பவே நார்மலா இருக்கீங்க… சோ சீக்கிரமே குழந்தை கிடைக்கும்…”


“ அப்போ இப்படி தாமதமாறதுக்கு என்ன காரணமா இருக்கும்…?” ஒற்றை விரலால் புருவத்தை நீவியபடியே அவன் கேட்க பூச்செண்டிடம் திரும்பியவர் “மந்த்லி பீரியட்ஸ் ரெகுலரா இருக்காம்மா…?” என்று கேள்வியை அவளிடம் கேட்கத் தொடங்கினார்.


“அதெல்லாம் 28 நாள்தான் டாக்டர்… எப்பவும் ரெகுலர்தான்…”


“ம்… சரி… நீங்க கொஞ்சம் வெளியில வெயிட் பண்ணுங்க சார்… நான் இவங்ககிட்ட தனியா சில விஷயங்கள் சொல்லணும்…” மருத்துவரின் வார்த்தைகளை ஏற்று அறையிலிருந்து வெளியேறியிருந்தான் தரணி. சில நிமிடங்களில் தானும் வெளியே வந்தாள் பூச்செண்டு.


“மெடிசின்ஸ் எதுவும் தேவை இல்லைன்னு சொல்லிட்டாங்க மாமு…” உணர்ச்சிகளற்று பேசியபடியே அவள் முன்னே நடக்க அவளை ஆராய்ந்தபடியே பின் தொடர்ந்தான் தரணி.


“தனியா என்ன சொன்னாங்க…?”


“எப்பவெல்லாம் சேர்ந்தா குழந்தை கிடைக்க வாய்ப்பிருக்குன்னு சொன்னாங்க…” உணர்ச்சி துடைத்த பதில்.


“எப்பவெல்லாம் சேரணுமாம்…?” ஆர்வமாய் அடுத்த கேள்வியை கேட்க நடந்து கொண்டிருந்தவள் நின்று திரும்பிப் பார்த்து அவனை முறைத்தாள்.


“இப்பவே எல்லாத்தையும் விளக்கமா சொல்லி ஆகணுமா…? ஏன் இப்படி அவசரம் புடிச்சு அலையறீங்க…?” கோபத்தில் பட்டென பொங்கியவள் பின் தன் கண்களை அழுந்த மூடித் திறந்து “இந்த செக்கப்புக்கு என்னை கூட்டிட்டு வந்ததுல எனக்கு கொஞ்சம்கூட உடன்பாடு கிடையாது… நான் குறையுள்ளவளா இருப்பேன்னு உங்களுக்கு டவுட் வந்துடுச்சா மாமு…” குரல் தழுதழுக்க தனது கோபத்தை ஆதங்கமாய் மாற்றி இருந்தாள்.


“சீச்சீ… என்ன பேச்சுடி பேசற…? நான்தான் டாக்டர்கிட்ட தெளிவா சொன்னேனே… பிராக்டிக்கலா சில விஷயங்களை யோசிச்சேன்… அவ்வளவுதான்… நான் பண்ணினது உன் மனசை கஷ்டப்படுத்தி இருந்தா என்னை மன்னிச்சுருடி… சாரி பேபி…” ஆள் அரவமற்ற ஒதுக்குப்புறமான அந்த மரத்தடி நிழலில் அவளை இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.


“இனி இதைப்பத்தி நான் பேசவே மாட்டேன்… சரியா… கடவுள் நமக்கு எப்போ கொடுக்கணும்னு நினைக்கிறாரோ அப்போ கிடைக்கும்… நமக்குதான் எந்த குறையும் இல்லையே… லெட் அஸ் வெய்ட்…” அவள் தோளோடு அணைத்து அழுத்தம் கொடுத்து ‘சாரிடி பட்டு… முகத்தை இப்படி வச்சுக்காதடி… வீட்டுக்கு போய் கோபம் தீர என்னை அடிக்கிறதுன்னாலும் அடிச்சிடு… இப்படி வாட்டமா இருக்காதே… ரொம்ப நொந்து போயிடுவேன்…” அவள் தாடையை பற்றி நிமிர்த்தி கண்களை அழுத்தமாய் பார்த்தபடி அன்பான வார்த்தைகளால் மென்குரலில் பேச அவளும் மெல்லிய புன்னகை கீற்றை இதழ்களில் வரைந்தாள்.


“தட்ஸ் மை பொக்கே…” செல்லமாய் அவள் நெற்றியில் முட்டி அவளோடு கிளம்பி இருந்தான்.


நெருக்கம் குறையாமல்தான் அவர்களது நாட்களும் நகர்ந்து கொண்டிருந்தன. இடையில் முக்கியமான அலுவல் சம்பந்தமாக இரண்டு மூன்று முறை பெங்களூரு வந்து நேரடியாக நிறுவனத்திற்கு சென்று சில வேலைகளை முடித்துக் கொடுத்து மீண்டும் ஊருக்கு சென்றிருந்தான் முகிலன். அதிகபட்சமாக மூன்று நாட்கள் தங்கி தனது வேலையை முடித்து மீண்டும் ஊருக்கு கிளம்பி ஓடி விடுவான். முழு நேர குடும்பஸ்தனாக மாறி இருந்தான் முகிலன். 


ஆயிற்று… இன்னும் இரண்டு தினங்களில் தரணி பூச்செண்டின் முதலாவது திருமண நாள். தவசிபுரம் வரும்படி அவளது பெற்றோரும் பாண்டிச்சேரி வரும்படி அவனது பெற்றோரும் அழைப்பு விடுத்தனர். அவனுக்கு அலுவலக பணியும் அவளுக்கு அழகு நிலையப் பணியும் நெருக்கி நெட்டி தள்ளியதால் தொடர்ந்து விடுமுறை எடுக்க முடியாது என்று தங்களது பெற்றோரை பெங்களூர் வரும்படி அழைத்தனர். அனைவருக்கும் அதுவே சரி என்று பட முகிலனின் மகன் ரிதன் யாதவிற்கு இன்னும் இரண்டு மாதங்கள் நிறைவடைந்த பின்பு பெங்களூர் செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்ததால் நீண்ட தூர பயணம் குழந்தைக்கு தற்போது வேண்டாம் என்று அவர்கள் மட்டும் பாட்டி துணையுடன் ஊரிலேயே இருந்து கொள்வது என்ற முடிவுடன் மற்ற அனைவரும் பெங்களூர் கிளம்பினர்.


“அம்மு… கோவிச்சுக்காதடி… போன வாரம் பையனுக்கு டிசென்ட்ரி பிரச்சனை ஆயிடுச்சு… கொஞ்சநாள் இடம் மாறாம குழந்தையை வச்சிருங்கன்னு டாக்டர் சொல்லிட்டாங்க… அதனாலதான்டி… நியாயமா இந்த நேரத்துல நாங்க உங்க கூடதான் இருந்திருக்கணும்… சூழ்நிலை அப்படி… மாமா மேல கோபம் இல்லையே…” வீடியோ காலில் பூச்செண்டிடம் வருத்தமாய் கேட்டுக் கொண்டிருந்தான் முகிலன்.


“எனக்கு உன்னை பத்தி தெரியாதா மாமா… நாங்க என்ன ஊரையே அழைச்சா விசேஷம் பண்றோம்… ஒரு சின்ன கெட் டுகெதர்… எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா இருக்கணும்னு ஒரு ஆசை… விடு… வீடியோ கால் ஆன்லதான் இருக்கும்… நீயும் அக்காவும் எங்க கூடவே இருக்கிற ஃபீல் வரும்…” அவனிடம் சமாதானம் கூறிக் கொண்டிருந்தாள் பூச்செண்டு.


குழந்தை பற்றிய பேச்சையே எடுக்கக் கூடாது என்று அனைவரிடமும் முன்கூட்டியே எச்சரித்து இருந்தான் தரணி. அன்று மருத்துவமனையில் அவள் முகம் கூம்பி கண்கள் கலங்கி நான் குறையுள்ளவளாக தெரிந்தேனா என்று கேட்டது இப்பொழுதும் அவன் மனதை பிழிகிறது. என்னவளுக்கு என்ன குறை…? எங்களுக்கான நாள் வரும் என்று அதன்பின் குழந்தை பற்றிய எண்ணத்திலிருந்து முழுமையாக வெளியே வந்திருந்தான் தரணி. முதல்நாளே சொந்தங்கள் அனைவரும் வீடு முழுக்க குழுமி இருந்தனர்.


“நேத்துதான் உன் கழுத்துல தாலி கட்டின மாதிரி இருக்கு… ஒரு வருஷம் ஓடிருச்சாடி… நாள் எவ்வளவு வேகமா ஓடுது பாரு… இந்த ஒரு வருஷத்துல நான் உனக்கு நல்ல புருஷனா நடந்துக்கிட்டேனா பொக்கே…” இரவு நேரத் தனிமையில் தன்னவளின் மடியில் படுத்து அவள் கன்னம் வருடியபடியே கேட்டான் தரணி.


“அதுல என்ன மாமு சந்தேகம்…? ஆரம்பத்துல இருந்த கோபம்தானே ஆழமான காதலா மாறுச்சு… இப்போ வரைக்கும் என்னை புரிஞ்சு நடந்துக்கிறீங்க… என் திறமைக்கு சரியான அங்கீகாரம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கீங்க… எல்லா நேரத்திலும் என் கூடவே நிக்கிறீங்க… எல்லாத்துக்கும் மேல என்னை காதலிச்சே கொல்றீங்க… இதைவிட என்ன சந்தோஷம் எனக்கு வேணும்…?” நெகழ்ச்சியுடன் கூறியவள் குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.


“நாளைக்கு நம்ம கல்யாண நாள்… முழுநாளும் உன் கூடவே இருக்கணும்னு நினைச்சேன்… ஆபீஸ்ல சின்னதா ஒரு வேலை… ஒரு மணி நேரத்துல முடிஞ்சிடும்… அப்படியே லீவ் போட்டுட்டு ஓடி வந்துடுறேன்… சரியா…”


“எனக்கும் கூட ஒரு நிச்சயதார்த்த மேக்கப் இருக்கு மாமு… காலையில கொஞ்சம் முன்னாடியே கிளம்பிடுவேன்… அதிகபட்சம் 10 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவேன்… அப்புறம் ஃபுல்லா நமக்கான நேரம்…”


“நாளைக்கு நைட் சாதனா ஹோட்டல்ல ஹனிமூன் சூட் ஏற்பாடு பண்ணி இருக்கேன்… முதலாம் ஆண்டு முதலிரவு கொண்டாட்டம் அங்கேதான்…” கண்கள் சிமிட்டி சிரித்தான்.


“எதுக்கு மாமு இதெல்லாம்…?”


“ஏன்டி… கிளுகிளுப்பான ஒரு சூழ்நிலையில எல்லாம் நடக்கணும்டி… வாழ்க்கையில அதுவும் ஒரு முக்கியமான ஞாபகச் சின்னம்தான்… இயல்பா நமக்குள்ள எல்லாமே நடந்திருந்தாலும் இந்த மாதிரி எக்ஸைட்டிங் மொமெண்ட்டும் வேணும்… அதான் ஏற்கனவே புக் பண்ணிட்டேன்… உனக்கு ஓகேதானே…” ஆழ்ந்த குரலில் கேட்டவனிடம் வெட்கமாய் தலையசைத்து சிரித்தாள்.


“அப்போ இன்னைக்கு முன்னோட்டம் பார்த்துடலாமா…” நாக்கை உள் கன்னத்தில் வைத்து அழுத்தி ஒரு மார்க்கமாய் பார்த்து சிரிக்க “மாமு…” அவள் செல்லமாய் சிணுங்க மோக முடிச்சுகள் விடுபட அவள் இதழில் மையம் கொண்ட புயல் நடு இரவை தாண்டிதான் கரையை கடந்தது. மறுநாள் காலை பெரியவர்கள் ஆளாளுக்கு அவர்களுக்கு புது உடைகளை பரிசளிக்க அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிபெற்று வாங்கிக் கொண்டனர்.


“அடுத்த கல்யாண நாளுக்கு மூணு பேரா ஆசிர்வாதம் வாங்கிடுங்க…” உள்ளக் கிடக்கையை நாசூக்காய் வெளிப்படுத்தினார் அனுசுயா.


உணவு தயாரிப்பில் பெரியவர்கள் இறங்கிவிட தரணியும் பூச்செண்டும் அவர்களிடம் முன்பே கூறியிருந்தபடி தங்கள் பணிகளை பார்க்க கிளம்பி இருந்தனர். பூச்செண்டு தன் வேலையை முடித்துக் கொண்டு பத்து மணிக்கே வீட்டிற்கு வந்திருந்தாள். ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்து வருவதாக கூறிய தரணி மதிய உணவுவேளை நெருங்கியும் வந்திருக்கவில்லை. மதிய உணவிற்கு முன்பே அனைவரும் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து கிளம்பி தயாராகி இருந்தனர். நேரம் சென்று கொண்டே இருந்தது… தரணி வரவும் இல்லை… பூச்செண்டின் தொடர்ந்து அழைப்புகளை ஏற்கவும் இல்லை.


அவள் மனதிற்குள் பலத்த குழப்பம்… உடன் பயம்… ஏற்கனவே ஒருமுறை இதே போன்ற சூழலை எதிர்கொண்டு இருக்கிறாளே… அடுத்து என்ன செய்யலாம்…? என்று யோசனையுடன் இருந்தவள் கடைசி முயற்சியாக மீண்டும் அவனுக்கு அழைத்தும் தோல்வியே. ‘எதையாவது சொன்னா எல்லாரும் பயப்படுவாங்களே… என்ன செய்யலாம்…? பேசாம அவரோட ஆபீஸ்க்கே கிளம்பி போக வேண்டியதுதான்…’ ஒரு முடிவுடன் அறையில் இருந்து வெளியே வர அனுசுயா எதிரில் வந்து நின்றார்.


“தரணிக்கு கூப்பிட்டேன்மா… வேலை முடிஞ்சிடும்னு நினைச்சானாம்… ஆனா முடியலையாம்… நம்மளை எல்லாம் கிளம்பி போகச் சொல்லிட்டான்…”


‘இப்போதானே கூப்பிட்டேன்… என் போனை எடுக்கலையே…’


“எ..எப்போ பேசினார் அத்தை…?” விளங்காத குழப்பத்துடன் வினவ “இதோ போனை வச்ச உடனே உன்கிட்ட வரேன்…” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே “ஹான்… சரிப்பா… நீ முடிச்சிட்டே வா… பாத்துக்கலாம்…” காதில் போனை வைத்து சத்தமாய் பேசியபடியே அவர்களை நெருங்கினார் முத்துராமன்.


“தரணிக்குதான் கூப்பிட்டேன்… அவனுக்கு ஏதோ முக்கிய…” 


“ஆமாமா… என்கிட்டயும் சொன்னான்… நாம கிளம்பலாம்…” வேகமாய் இடமளித்தார் அனுசுயா.


‘ஆக அவரது அம்மா அப்பா இருவரிடமும் பேசியிருக்கிறார்… நான் அழைத்தபோது ஏன் எடுக்கவில்லை…?’ குழப்ப முடிச்சுகளுடன் சோர்ந்து நின்றவளை ஏறிட்டார் அனுசுயா.


“இந்த நாள்ல புருஷன் பொண்டாட்டி சேர்ந்து கோவிலுக்கு போனாதான் மனசுக்கு சந்தோஷமா இருக்கும்… எங்களுக்கும் புரியுது… நாங்கல்லாம் வேணா போய் உங்க பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டு வர்றோம்… ஈவினிங் தரணி வந்த உடனே நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வரீங்களா…” அவளது முக வாட்டத்தை புரிந்து கூறினார் அனுசுயா.


அதுதான் அவளது எண்ணமும்… அவன் வராது தனியே செல்ல மனமில்லை… அத்துடன் தனது அழைப்பை ஏற்காததும் மனதை குடைந்தது… அனைவரும் கிளம்பி இருக்க மீண்டும் தன்னவனுக்கு அழைத்தாள்… முழுதாக ரிங் போய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.


“ஏன் போனை எடுக்க மாட்டேங்கறீங்க…?” வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பினாள். முதலில் பார்க்கப்படாமல் இருந்து பின் சிறிது நேரத்திலே அவன் பார்த்ததற்கான ப்ளூ டிக் காட்டியது.


“என்னாச்சு மாமு…?” 


“வீட்டுக்கு வாங்க…” 


“மெசேஜாவது பண்ணுங்க…” 


“அப்படி என்ன கோபம்…?”


“எனக்கு ஒண்ணுமே புரியல…” 


வரிசையாக குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டே இருக்க அவன் பார்த்தும் பதில் இல்லை.


அய்யோ… என்னாச்சு இவருக்கு…? தலையை பிடித்துக் கொண்டாள். வெறி பிடித்து மீண்டும் அழைக்கத் தொடங்க முதல் ரிங் போகும்போதே இணைப்பு துண்டிக்கப்பட்டது… வேணுன்னே பண்றார்… என்ன ஆச்சுன்னு தெரியலையே…


கோவிலுக்கு சென்றவர்களும் வீடு திரும்பி இருக்க அவர்களின் முன்னிலையில் இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டாள் பூச்செண்டு. ஹனிமூன் சூட் என்ஜாய்மென்ட் எக்சைட்மென்ட் என்று முதல் நாள் ஏதேதோ கூறிக் கொஞ்சித் தீர்த்தவன் இரவு 9 மணிக்கு மேல்தான் வீட்டிற்குள் நுழைந்தான். இறுக்கமான வேலையின் போதுகூட அத்தனை தாமதமாக வந்ததில்லை. முகம் மிகவும் சோர்ந்து இறுகி இருந்தது. பெரியவர்களும் ஒருவித ஏமாற்றத்துடன் அதே நேரம் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாது இரவு உணவை முடித்து பெயருக்கு டிவியை ஓடவிட்டு அமர்ந்திருந்தனர்.


“என்ன தரணி… கல்யாண நாளும் அதுவுமா இப்…”


“அம்மாஆஆஆ…”


உள்ளே நுழைந்த மகனிடம் கரிசனமாக பேசத் தொடங்கிய அனுசுயாவை சத்தமாக அதிர்ந்து எழுந்த அவனது ஒற்றைக் குரல் திடுக்கிடச் செய்தது. இப்படி எல்லாம் சத்தமிட்டு அவரை அவன் அழைத்ததே இல்லை. கோபத்தில் முகம் கனன்று கொண்டிருந்தது. அனுசுயா மட்டுமல்ல… அனைவருமே அவனது கோப முகத்தை அதிர்ச்சியுடன்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.


ஒரு நொடி தன் கண்களை மூடித் திறந்து தன்னை சமநிலை செய்தவன் “வேலை ஜாஸ்தி… ரொம்ப டயர்டா இருக்கு… நான் தூங்கணும்… எதுவாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம்…” முடிந்தளவு குரலை தளர்த்திக் கூறியவன் விறுவிறுவென அறைக்குள் நுழைந்து கொண்டான்.


“ஆபீஸ்ல ஏதோ டென்ஷனான வேலை போல.. அதான் இப்படி சத்தமா கத்திட்டான்… நீ ஒன்னும் நெனச்சுக்காதே…” மனைவியை சமாதானப்படுத்தி படுக்க அழைத்துச் சென்றார் முத்துராமன்.


அறைக்குள் நுழைந்தவன் உடையைக் கூட மாற்றாது அப்படியே படுக்கையில் விழுந்திருக்க கதவை தாழிட்டு அருகில் வந்து அமர்ந்தாள் பூச்செண்டு. அவனிடம் ஏதோ சரியில்லை என்பது நன்றாக புரிந்தாலும் என்னவென்று தெரியவில்லை… கோபத்தில் சிவந்திருந்த அவனது முகம் ஏதேனும் கேட்கலாம் என்ற அவளது எண்ணத்திற்கும் தடை விதித்திருந்தது.


“மாமு…” மெல்லிய குரலில் அழைத்தாள். திரும்பவில்லை. 


“மாமுஉஉ…” அழுத்தமாய் அழைத்தும் பதில் இல்லை.


“சாப்பிடாமலே படுத்துட்டீங்களே… எந்திரிங்க… நான் வேணா டிபனை இங்கேயே எடுத்துட்டு வரேன்… சாப்பிட்டு படுங்க…” மென்மையாய் சொன்னபடியே எழுந்தவள் இரண்டு அடிகள் வைத்திருக்க “அப்படியே கொஞ்சம் விஷமும் கலந்து எடுத்துட்டு வந்துடு… இந்த வாழ்க்கை வாழறதுக்கு செத்துப் போயிடுறேன்…” முதுகில் ஈட்டியாய் அறைந்த வார்த்தைகளில் விலுக்கென திரும்பி அவன் முகம் பார்க்க அவனோ சிவந்து நின்ற ஈர விழிகளுடன் அவளைத்தான் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.






Leave a comment


Comments


Related Post