இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 34 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 14-05-2024

Total Views: 19589

செந்தூரா 34


செந்தூரன் அதிர்ச்சியோடு தனக்கு எதிர் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை பார்த்தான். அந்த லாரியும் அதிலிருந்த எண்ணும் பரிச்சியமானது போல தோன்றவும் பலமாக யோசித்தான்.


அன்றைய விபத்தின் போது இவனுடைய காருக்கு எதிரில் வந்த அதே லாரி. அவன் நிற்க சொல்லி சைகை செய்தும் வேண்டுமென்றே இடித்தது போலத்தான் இருந்தது. எதிர்பாராமல் நடந்த விபத்து போலவே இல்லையே என்ற யோசனையுடன் அவசரமாக காரை எதிர்ச் சாலையை நோக்கி திருப்பினான். அப்படியே அந்த லாரியை இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்.


சிறிது நேரத்தில் அந்த லாரி வழியில் இருந்த டீக்கடை முன்னே நின்றது. அதிலிருந்து கீழே இறங்கிய டிரைவரை பார்த்தான். சந்தேகமே இல்லை அவனை இடித்த அதே டிரைவர் தான். காரை விட்டு கீழே இறங்கி அந்த லாரியின் பக்கவாட்டில் தன்னை மறைத்தபடி நின்றான். இரவு பதினொன்றைக் கடந்திருக்க அந்த சாலையே வெறிச்சோடிக் கிடந்தது.


டீக்கடைக்காரர் தன் கடையை மூடிக் கொண்டு இருந்தார். அவரிடம் மல்லுக்கு நின்று டீயை போடச் சொல்லி அதை வாங்கி பருகினான் அந்த டிரைவர். அவரும் கடையை மூடிவிட்டு செல்ல, அந்த டிரைவர் அங்கேயே அமர்ந்தபடி புகைவிட்டுக் கொண்டிருந்தான். யாருமில்லாததை உறுதிச் செய்துக் கொண்டு செந்தூரன் கடையின் பின்பக்கமாக சென்று அந்த டிரைவரின் கழுத்தை பின்னாலிருந்து இறுக்கி பிடித்தான்.


சரமாரியாக அவனை போட்டு அடித்தான். இவன் அன்று காரை இடித்ததால் தானே தன் மனைவியை பிரிந்து இத்தனை வலியையும் வேதனையும் அனுபவிக்கிறேன் என்ற எண்ணத்தில் பலமாக தாக்க தொடங்க, பதறிவிட்டான் அந்த டிரைவர். “சார் யார் சார் நீங்க? எதுக்கு என்னை அடிக்கிறீங்கனாவது சொல்லிட்டு அடிங்க, காரணம் தெரியாமலே செத்துட போறேன்” என்று கதறினான்.


“என்னை யாருனே தெரியாதுனு சொல்றே? அப்புறம் ஏன்டா என் மேல காரை இடிச்சே? ஒற்றையடி பாதைனு தெரியும் தானே, நான் ரிவர்ஸ் எடுக்கிறவரைக்கும் இருனு சொல்லியும் ஏன் வேகமா வந்து என்னை இடிச்ச? யாராவது என்னை கொல்ல சொல்லி உனக்கு பணம் கொடுத்தாங்களா?” என்று டிரைவரின் கழுத்தை பிடித்தான் செந்தூரன்.


இப்போதுதான் அந்த டிரைவர் செந்தூரனை நன்றாக பார்த்தான், “சார் உங்களை கொல்ல எல்லாம் யாரும் சொல்லல, ஆனால் லேசா விபத்து ஏற்பட்டு உங்களுக்கு அடிபட வைக்க சொன்னாங்க. நானும் லேசா தானே சார் இடிச்சுட்டு போனேன்?” என்றான்.

 

புருவம் சுருக்கினான் செந்தூரன், “எனக்கு லேசா அடிபடறதுல அவங்களுக்கு என்ன லாபம்? யார் அவங்க?” என்றான்.


“அது எனக்கு தெரியாது சார். பத்துமுறைக்கு மேல சொன்னாரு அந்த ஆளு. உயிருக்கு ஆபத்து வரக்கூடாது. ஆனால் விபத்தால் அடிபடணும்னு. அவர் ஆள் யாருன்னு எனக்கு தெரியாது. ஏதோ வெளியூர்காரர் போல. நான் இதே மாதிரி ஒரு டீக்கடையில் இருக்கும் போது எனக்கு கடங்காரனுங்க போன் செய்து திட்டிட்டு இருந்தாங்க. ஒரு பெரிய மனுஷன் அங்கே இருந்தாரு. அவரு தான் வந்து உனக்கு பணம் நிறைய தரேன் உன் கடனையெல்லாம் அடைக்கலாம். அதுக்கு பதிலா என்னை இப்படி செய்ய சொன்னாரு. நானும் உயிருக்கு ஆபத்தில்லாமல் செய்யறது தானே, பணமும் கிடைக்குதேனு ஒத்துக்கிட்டேன். அதனால இரண்டு நாளா நீங்க போற இடம் எல்லாம் பாலோ செய்துட்டு வந்தேன்.

சரியா ஒத்தையடி பாதையில நீங்க சிக்கவும் இடிச்சுட்டு போயிட்டேன்” என்றான் டிரைவர்.


“அந்த ஆளோட போன் நம்பரோ, போட்டோவோ எதுவோ இருக்கா?” என்று கேட்டான் செந்தூரன். “அவர் அன்னைக்கு பேசி காசு கொடுத்துட்டு போனதோட சரி. அவரோட நம்பர் எல்லாம் என்கிட்ட இல்லை சார். அதுக்கு பிறகு அவர் என்னை பார்க்கவோ பேசவோ இல்லை, என் நம்பர் கூட அவர்கிட்ட இல்லை” என்றான் டிரைவர். 


சலிப்பாக பார்த்த செந்தூரனிடம், “ஹாங் எதுக்கும் இருக்கட்டும்னு அவர் போகும் போது அவருக்கு தெரியாமல் பக்கவாட்டாக என் போன்ல ஒரு போட்டோ எடுத்தேன். உங்களுக்கு யாருனு தெரியுதானு பாருங்க” என்றபடி தன் போனில் இருந்த போட்டோவை தேடி எடுத்து அவனிடம் நீட்டினான். குழப்பத்தோடு அதை வாங்கி பார்த்த செந்தூரனின் விழிகள் விரிந்தன. 


பார்ப்பதற்கு சங்கரப்பாண்டியன் போலத் தான் இருந்தது. ஆனால் எனக்கு அடிப்பட்டால் அதில் அவருக்கு என்ன லாபம் என்று குழப்பமாக இருந்தது. மேலும் அவர் வேலம்மா பாட்டியின் மூத்தமகன் என்று சொன்னதும் நினைவு வர, அதையும் தெரிந்துக் கொள்வோம் என்று காரை எடுத்துக் கொண்டு தன் அன்னையை பெற்ற கண்ணம்மா பாட்டியை தேடிச் சென்றான்.


பேரன் தன்னை தேடிவந்ததில் அகமகிழ்ந்து போனார் கண்ணம்மா. “ஆச்சி, எனக்கு ஒரு விஷயம் தெரியணும் உங்க அக்கா வேலம்மா பாட்டி இறந்துட்டாங்களே, அவங்களுக்கு எத்தனை பசங்க?” என்று கேட்டான்.


“ஏன் கண்ணு கேட்கிற, இரண்டு ஆம்பளை பசங்க, ஒரு பொட்டை புள்ளை. மூத்தவன் தான் வெளிநாட்டுக்கு போய் வெள்ளைக்காரியை கட்டிக்கிட்டான். சின்னவன் பக்கத்து ஊரில் விவசாயம் பார்த்து கஷ்டபடறான்” என்றார் அலுத்துக் கொண்டே. அவரிடம் சின்னவரின் விலாசத்தை வாங்கிக் கொண்டு அவர் வீட்டை சென்றடைந்தான்.


தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு நேரிடையாக விஷயத்திற்கு வந்தான். “நான் உங்க அண்ணன் போட்டோவை பார்க்கலாமா?” என்றான்.


“அவர் வெளிநாட்டில் போய் செட்டில் ஆனதிலிருந்து எங்களுக்குள்ள போக்குவரத்தே இல்லையே தம்பி. அவர் எங்களோட போன்ல கூட பேசறது இல்லையே, அவர் போட்டோவை பார்த்து என்ன செய்ய போறீங்க?” என்றார் அவர் தயங்கியபடி. “உங்க அண்ணன் எனக்கு தெரிஞ்சவரானு பார்க்கத் தான் கேட்கிறேன். ப்ளீஸ், அவரோட போட்டோ எதாவது இருக்கானு தேடிப் பாருங்க” என்றான் பரப்பரப்புடன்


அவரும் வீட்டிற்குள் சென்று போட்டோவை கொண்டு வந்து கொடுத்தார். அவருக்கும் சங்கரபாண்டியன் உருவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வயதாகி விட்டதால் கண்ணம்மா பாட்டியால் அவரை சரியாக இனம் கண்டுக் கொள்ள முடியவில்லை போலும். எதற்காக அவர் தன்னை வேலம்மாவின் மூத்தமகன் என்று பொய் சொல்லி சொந்தம் கொண்டாடினார்?


சொத்துக்காக என்றும் எண்ணிவிட முடியாது, ஏனென்றால் அவருக்கு இருக்கும் சொத்தே பல மில்லியன் டாலர்களை தாண்டும். அப்படி இருக்க, எதற்காக தன் அன்னையை தங்கை என்று சொந்தம் கொண்டாடினார். குழப்பமாக இருந்தது. செந்தூரனால் எந்த முடிவிற்கும் வர முடியவில்லை. இப்போது காரை வேகமாக வீட்டை நோக்கி செலுத்தினான்.


காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு நேரடியாகவே கேட்டு விடுவது என்று எண்ணி மாடிப்படிகளில் அவர்கள் இருந்த அறையை நோக்கிச் சென்றான். அப்போது சங்கரபாண்டியனும் ஆராத்யாவும் பேசிக் கொண்டிருப்பது காதில் விழ அப்படியே தன் நடையை நிறுத்தினான்.


“என்ன ஆராத்யா? என்ன சொல்றான் மித்ரன்? உன் வழிக்கு வந்தானா? இல்லையா?” என்றார் சங்கர பாண்டியன்.


“எங்கப்பா?” என்று அலுத்துக் கொண்டவள், “பொண்டாட்டி இருக்கும் போதே நான் அவனோட ஆபிஸ் வேலையா போவேன். அப்பவும் பிரண்ட்லியா கூட சிரிச்சு பேச மாட்டான் முசுடு. இப்போ சுத்தம். என்னவோ கப்பல் கவிழ்ந்த மாதிரி ஒரே சோக கீதம் தான். ஆபிஸ் வந்து வேலை மட்டும் பார்ப்பான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் போது அவன் பக்கத்தில் நான் எங்கே நெருங்கிறது?


அன்னைக்கு அவன் அறையில் தாரானு நினைச்சு கிஸ் பண்ண வந்தான். அதுக்குள்ள என்னை ரியலைஸ் பண்ணிட்டு தள்ளிவிட்டுட்டான். ஓபனா மிரட்டவும் செஞ்சான், அதுக்கு பிறகு என்னால அவன் கிட்ட நெருங்க முடியல” என்றாள் ஆராத்யா பெருமூச்சுடன்.


“என்ன சொல்ற ஆரா? இதெப்போ நடந்தது? உன்னை தள்ளிவிட்டானா? உன் அருமை தெரியாத அவனுக்காக நீ ஏங்கி கிடக்க போறீயா? உனக்கு இதெல்லாம் தேவையா ஆரா? உன் காலடியில் விழுந்து கிடக்க எத்தனையோ மல்டி மில்லியனர்ஸ் இருக்கும் போது இவன் தான் உனக்கு வேணுமா? ஏன் உன்னை நீயே தரம் தாழ்த்திக்கிறே?


ஏதோ சின்னதா ஒரு ஆக்சிடென்ட் ஏற்பாடு செய்ததால அந்த ஜானகி பேசிப்பேசியே தாராவை வீட்டை விட்டு அனுப்பிட்டா., நம்ம மேலயும் சந்தேகம் வராமல் வேலை சுலபமா முடிஞ்சதுனு பார்த்தால் இவன் விடாக் கொண்டானாக இருப்பான் போலயே? நம்ம பிசினஸ் அங்கே இருக்கும் போது, இங்கே நீ அவனுக்காகவும் நான் உனக்காகவும் தேவையில்லாமல் இருக்கிறதா தோணுது. கொஞ்சம் டாடிக்காக யோசிடா?” என்றார் சங்கரபாண்டியன்.


“எத்தனையோ பேர் என் பின்னாடி நாயா அலையும் போது இவன் மட்டும் என்னை கண்டுக்கவே இல்லை டாடி. எப்படியோ இவனை இம்பரஸ் செய்து என் பக்கம் இழுக்கணும்னு பார்த்தால் முடியலை. இங்கே வந்து அவன் கூடவே இருக்கும் போது அவன் எனக்கு வேணும்னு தோணுச்சு. ஆனால் அன்னிக்கு விழாவுல எல்லார்கிட்டயும் மித்ரன் என்னோட உட்பினு சொன்னதுக்காக அந்த தாரிகா என்னை கைநீட்டி அடிச்சிருக்க கூடாது டாடி.


அவள் என்னை அடிச்சதுக்கு தான் இப்போ வனவாசம் போயிருக்கா. எப்படியும் ஒரு நாள் அவள் மனசுமாறி மித்ரனை தேடி வருவாள். அதுக்குள்ள நான் அவனை அடைஞ்சே ஆகணும். அந்த நேரத்துக்காக தான் காத்திருக்கேன்” என்றாள் ஆராத்யா.


“சபாஷ்” என்று சத்தமாக சொல்லி பலமாக தன் இருகைகளையும் தட்டினான் செந்தூர மித்ரன்.


விலுக்கென்று திரும்பி பார்த்த தந்தையும் மகளும் பேச்சிழந்து அதிர்ச்சியுடன் உறைந்து போயினர்.


“என்னா பிளானு? சபாஷ்” என்று கைத்தட்டியபடி ஆராத்யாவின் அருகில் வந்தவன் அவள் தலைமுடியை பற்றி இழுத்து பளாரென்று கன்னத்தில் அறைந்தான். சங்கரபாண்டியன் துள்ளிக் கொண்டு எழ அங்கிருந்த காபி கப்பை எடுத்து அவர் மண்டையை நோக்கி ஓங்கி வீசினான். அது நெற்றியில் பட்டு சிறு கீறலை ஏற்படுத்தியது.


செந்தூரனின் முகம் செங்கொழுந்தாய் சிவந்திருந்தது, கண்களில் ரெளத்திரம் தாண்டவமாட “அடுத்தவ புருஷனுக்கு உன் பொண்ணு ஆசைப்பட்டால், அவளுக்கு புத்தி சொல்லாமல் ஸ்கெட்ச் போட்டு கொடுத்து மாமா வேலை பார்க்கறீயே? உனக்கெல்லாம் வெக்கமா இல்ல? இரண்டு பேரும் அப்பா மகள் மாதிரியா பேசிட்டு இருக்கீங்க? ச்சீ” என்றான் வெறுப்புடன்.


“மித்ரன் வார்த்தையை அளந்து பேசு, நான் உன்னோட பார்ட்னர்” என்றார் சங்கரபாண்டியன்.


“என்னடா ம… பார்டனர், இந்த நிமிஷத்தில் இருந்து நீங்க யாரும் என்னோட பிசினஸில் இல்லை. இப்பவே உங்க பார்ட்னர்ஷிப்பை ரத்து செய்யறேன். இதுவரைக்கும் இன்னும் எந்த முதலீடும் உங்க கிட்ட நான் வாங்கலை. அதனால் என்னை எதுவும் செய்ய முடியாது. என் மனைவியை தவிர எந்த பெண்ணையும் தொடக்கூடாது என்ற கொள்கை உடையவன் நான். என்னையும் மீறி ஒருமுறை அவளை அடிச்சிட்டேன். இன்னும் அவள் இங்கே இருந்தால் என் கையால அவளை கொன்னுட போறேன். மரியாதையா உன் பொண்ணை அழைச்சிட்டு இங்கிருந்து கிளம்பு. உனக்கு பத்து நிமிஷம் தான் டைம்” என்றவன் அங்கே இருந்த நாற்காலியில் கால்மேல் கால்போட்டபடி அமர்ந்தான்.


சங்கரபாண்டியனுக்கு அவமானத்தில் உடல் கூனி குறுகி போனது. மகள் மேல் வைத்த பாசம் அவர் கண்ணை மறைத்து விட்டது. அதற்கான பலன் கைமேல் கிடைத்து விட்டதால் வெறுப்புடன் மகளை பார்த்தார். அவள் கன்னத்தை பிடித்தபடி, “டாடி” என்றாள் அழுகையுடன்.


“பேசாதே! இனி வார்த்தை பேசினே நானே உன்னை கொன்னுடுவேன், இனிமேலாவது நான் சொல்றதை கேட்டுத் தொலை. கிளம்பு” என்று கத்தினார். அவர்கள் தங்கள் உடைமைகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர். இரவு பன்னிரண்டை கடந்து இருந்தது.


கவினுக்கு அழைத்தான் செந்துரன். “என்னடா இந்த நேரத்துல” என்ற கவினிடம், “இன்னும் பத்து நிமிஷத்தில நம்ம பிசினஸ்க்கான கான்டிராக்ட் பேப்பர்ஸ் எல்லாம் எடுத்துகிட்டு என் வீட்டுக்கு வா” என்று சொல்லி போனை வைத்தான்.


என்னவாயிருக்கும் என்ற குழப்பத்துடன் நண்பன் சொன்னபடி அனைத்து டாக்குமென்ட்களையும் எடுத்துக் கொண்டு செந்தூரனின் வீடு வந்து சேர்ந்திருந்தான் கவின். அவனிடம் அதை வாங்கி அந்த பார்ட்னர்ஷிப் ரத்து செய்யப்பட்டதாக எழுதி அதற்கு சங்கரபாண்டியனும் ஆராத்யாவும் சம்மதிப்பதாக சொல்லி கையெழுத்து இட சொன்னான். அவர்களும் மறுப்பேச்சின்றி கையெழுத்து போடவும் கவினுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஆனால் ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்று ஊகிக்க முடிந்தது.


அவர்கள் பெட்டி படுக்கையுடன் கிளம்ப தயாரானதும், “கவின் இவங்களை ஏர்போர்ட்ல விட்டுட்டு வா, சார் தான் மல்டி மில்லினியராச்சே தனி விமானம் வரவழைச்சு போயிக்குவார்” என்று நக்கலாக சொல்லிவிட்டு ஹாலில் இருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.


நடுராத்திரியில் வயது பெண்ணுடன் அவரை வெளியே துரத்துகிறானே என்று உள்ளூர வருந்திக் கொண்டு இருந்த சங்கரபாண்டியனுக்கு செந்தூரனின் பேச்சில் அவன் மேல் மரியாதை கூடியது. “மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க முடியாத தப்பு தான் தெரியும் ஆனால் மன்னிப்புக் கேட்கிறதை தவிர வேற வழியில்லை மித்ரன். மன்னிச்சுடு” என்று சொல்லி விட்டு விறுவிறுவென்று காரை நோக்கி நடந்தார். ஆராத்யாவும் தலை குனிந்தபடி அங்கிருந்து சென்றதும், “என்னடா நடக்குது இங்கே?” என்றான் கவின் அதிர்ச்சி தாங்கமுடியாமல்.


செந்தூரன் நடந்ததை சுருக்கமாக சொல்லி முடித்தான். “அப்போ தங்கச்சிம்மா வீட்டை விட்டு போறதுக்கு இவங்க தான் காரணமா?” என்றான் கவின்.


இல்லை என்று தலையசைத்து “இவங்களும் ஒரு காரணம்” என்றான் செந்தூரன். “புரியலை மச்சான்” என்றான் கவின்.


“விபத்தை ஏற்படுத்துனது இவங்களா இருந்தாலும் வார்த்தையால விஷத்தை கக்கியது எங்க அம்மா. அதை பார்த்துட்டு சும்மா இருந்த என் குடும்பம், இவங்க எல்லாம் தான் என் தாரா என்னை விட்டு பிரிஞ்சு போறதுக்கு காரணம். நான் உயிரோட இருக்கணும்னு தன் காதலையே தியாகம் செய்துட்டு போக துணிஞ்ச என் தாராவுக்காக என் உயிரையே கொடுக்க நான் தயாரா இருக்கேன்டா. அவள் எங்கனு மட்டும் தெரிஞ்சா போதும்டா, போய் அவளை தூக்கிட்டு வந்திடுவேன்.” என்றான் கண்கலங்க.


நண்பனின் தோளைத் தட்டி, “உங்க இரண்டு பேரோட காதல் மெய்சிலிர்க்க வைக்குது டா. உண்மையான காதல் என்றைக்கும் தோற்காது. உன்னால எப்படி தங்கச்சியை விட்டு இருக்க முடியாதோ? அப்படிதானே அவளுக்கும். கண்டிப்பா உன்னை தேடி அவளே வருவா பாரு” என்றான் கவின் நம்பிக்கையுடன்.


“அந்த நம்பிக்கையில் தான்டா உயிரோடவே இருக்கேன்” என்றான் செந்தூரன் பெருமூச்சுடன்


கவின் மீண்டும் நண்பனின் தோளை ஆதரவாய் தட்டிக் கொடுத்துவிட்டு காரை நோக்கி சென்றான். அவர்களை பார்க்கவே பிடிக்காமல் காரில் ஏறியவன் நேராக விமான நிலையத்தை நோக்கி காரை செலுத்தினான்.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post