இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 29 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 14-05-2024

Total Views: 15071

அத்தியாயம் 29

காயவைத்திருந்த துணியை எடுத்து கொண்டு திரும்பியவள் திண்ணென்ற அவன் மார்பின் மீது மோத அவளின் நெற்றி சற்று வலியை கண்டது.

ஒரு கையால் நெற்றியை தேய்த்துவிட்டு அவள் நிமிர்ந்து பார்க்க அங்கு அவளையே முறைத்தபடி நின்றிருந்தான் சுரேன்.

"என்ன வேணும்...?' என அவள் கேட்க.

"என்ன கேட்டாலும் தருவியா....? என அவன் பதிலுரைக்க.

"ம்ம்ப்ப்ச்... இப்ப என்ன வேணும் உனக்கு... எனக்கு கீழ நிறைய வேலை இருக்கு..." என்க.

"ஆமா... இந்த அம்மணி போய்தான் இங்க இருக்க மலைய புரட்டி அந்த பக்கமா வைக்க போறாங்க..." என்றான் அவன்.

"உனக்கு என்னதான் பிரச்சனை.... என்ன பிடிக்கலன்னு சொல்ற... ஆனா என்னை ஏதாச்சும்...."என அவள் முடிக்கும் முன் "ம்ம்ம்ம்... சொல்லு... உன்ன ஏதாச்சும்..." என அவனும் கேள்வியோடு நிறுத்த அவன் கண்களை காணமுடியாமல் தலை கவிழ்ந்தவள் கீழ் உதட்டை அழுந்த கடிக்க அவளின் செயலில் லயித்தவன் தன் இருவிரல் கொண்டு அவள் கீழ் உதட்டை அவள் வெண்ணிற பற்களில் இருந்து  விடுவித்தான்.

அவனின் செயலில் அதிர்ந்தவள் அவனை விழி விரிய பார்க்க "இங்கப்பாரு இனி எல்லாமே எனக்கு சொந்தம்....,எனக்கு சொந்தமானத  நீ காயப்படுத்தலாம்னு நினைச்சா.... விளைவுகள் மோசமானதா இருக்கும்...." என்றான் அவள் மேனியில் கீழ் இருந்து மேல்வரை பார்வையை பதித்தபடி கூற அவனின் வார்த்தைகள் முதலில் புரியவில்லை அவளுக்கு புரிந்த பிறகோ அவளது உடல் செஞ்சாந்து பூசிக்கொண்டது.

உடல் அதிர அவனை பார்க்க அவளை இழுத்துக் கொண்டு சென்றவன் அங்கு இருந்த கைப்பிடி சுவற்றில் சாய்த்து நிறுத்தினான்.


அவள் சுற்றிலும் பார்வையை சுழலவிட நல்லவேளை அங்கு யாரும் இல்லை.

"என்ன பன்ற இந்தர்... நீ எங்கயோ கிளம்பற போல... ஆனா இங்க வந்து என்ன பண்ணிட்டு இருக்க...?" என கேட்க.

"ஆமா ஒரு முக்கியமான வேலை... வர லேட்டாகும்...." என்க.

"எங்க போனாலும் இருட்டறதுக்கு முன்னாடி வீடு வந்து சேரு...." என்றாள் அவள்.

"ஐயோ ரொம்பத்தான் அக்கறை... இத்தன வருஷமா எங்க போனுச்சு இந்த அக்கறைலாம்...." என கேட்க.

"நீயும்தான் இத்தனை வருஷமா நான் இருக்கேனா இல்லையானு கூட பாக்கல..." என்றாள் அவள்.

"ஆமா... நீ பாத்த...?" என அவன் கேட்க.

"உன்னப்பாத்தா எனக்கு சந்தேகமா இருக்கு..." என்றாள் அவள்.

அவள் உடலோடு ஒட்டி நின்றவன் "என்னடி சந்தேகம்....?" என கேட்க.

"என்னை பழிவாங்க கட்டிக்கிட்ட மாதிரியே இல்ல... உன் நடவடிக்கைலாம் பார்த்தா...." என்க.

"அப்படியா....?" என்றபடி அவளை மேலும் நெருங்கி நிற்க அவள் இரண்டு அடி பின்னேற சுந்தரின் குரல் அவன் அவளிடம்  முன்னேறுவதை தடுத்தது.

"டைம் ஆச்சு.... நான் வந்து பேசிக்கிறேன்...." என்றவன் அவளை திரும்பி ஓர் அழுத்த பார்வையை பதித்துவிட்டே சென்றான்.

அவன் கண்களில் உள்ளது என்னவென அவளால் அறிய முடியவில்லை.

சற்றுநேரம் அவன் பேசிய வார்த்தைகளை அசைபோட்டபடி நின்றிருந்தவள் அருணாவின் குரல் கேட்டு வேகமாக வெளியேறினாள்.

கீழே இறங்கியவன் சக்கரவர்த்தியை பார்த்து கொண்டே வாசுவின் பைக்கில் ஏறி அமர அவரும் சளைக்காமல் அவனின் பார்வையை எதிர்கொண்டார்.

"டேய் எங்கடா போன... எவ்ளோ நேரம்... போய்ட்டு நேரமா வீட்டுக்கு வரவேணாமா... எனக்கு என்னமோ உன் மேல ஒரு டவுட்டா இருக்கு...." என்றான் சுந்தர்.

"உனக்கும் டவுட்டா....?" என கேட்டான் சுரேன்.

"எனக்கும்மா... அப்படின்னா வேற யாருக்கு உம்மேல சந்தேகம்....?" என சுந்தர் கேட்க.

"அது எதுக்கு உனக்கு... ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணியா...?" என கேட்க.

"ஏன் பேச்ச மாத்தற... ஆமா எதுக்கு இப்போ நீ அவன பாக்கனும்....?" என வாசு கேட்டான்.

"சொல்றேன்... நீ முதல்ல வேகமா போ... வீட்டுக்கு நேரமா வரனும்...." என்றான் சுரேந்தர் காதில் அருவி கூறிய இருட்டறதுக்கு முன்னாடி நேரமா வரனும் என்ற வார்த்தைகள் காதில்  விழுந்த வண்ணம் இருந்தது.

இதழோரம் சிறு புன்னகை முகிழ்க்க சுந்தரின் கழுகு கண்கள் அதை கண்டு கொண்டது.

"என்னடா தனியா சிரிக்கிற...?" என கேட்க.

"நான் எப்ப சிரிச்சேன்...?" என்றான் அவன்.

"ஆமா... நீ சிரிச்சாலும் சிரிக்கலன்னுதான சொல்லுவ..." என அவன் கூற.

"அமைதியா வாடா... ஆமா வாசு அவன இப்ப எங்க பாக்கலாம்...?"என சுரேந்தர் கேட்க.

"ம்ம்ம்ம்.... கழுதை கெட்டா குட்டிச்சுவரு எங்கேயாச்சும் ஒரு ஒயின் ஷாப்ல விழுந்து கிடப்பான்...." என்றான் அவன்.

"ம்ம்ம்ம்.... சரி சீக்கிரம் போ..." என்க.

"போய்ட்டுதான்டா இருக்கேன்...." என்றான் அவன்.

இங்கு வீட்டிலோ, அறைக்குள் நுழைந்த மகிழாவின் போன் அடித்துக் கொண்டே இருக்க அவளோ முதலில் எடுக்காமல் விட்டாள் பின் மீண்டும் அடித்தது.

இப்போது வீடியோ கால் வந்தது.

பதட்டத்தில் போனை கீழே போட்டாள் அவள்.

விடாமல் அடிக்க கைகளில் ஒரு நடுக்கத்துடன்தான் எடுத்தாள் அவள்.

போனை  அட்டென்ட் செய்து காதில் வைக்க "என்னடி... பயம் விட்டு போச்சா...இல்ல உன் அண்ணனும் அம்மாவும் என் கஸ்டடியில இருக்கறது மறந்து போச்சா....?" என கேட்க.

"உனக்கு என்ன வேணும்... வீட்டுல எல்லோருமே இருக்காங்க... இப்ப எதுக்கு போன் பன்ற....?" என கேட்க.

"உன்ன எதுக்குடி அந்த வீட்டுக்கு அனுப்பி வச்சது...?" என எதிர்முனை கேட்க.

இவளோ அமைதியாக இருந்தாள்.

"இங்கபாருடி... நான் சொன்னது மட்டும் நடக்கலன்னா... உன் அண்ணனும் அம்மாவும் உனக்கு உயிரோட கிடைக்க மாட்டாங்க..." என்றான் திகம்பரன்.

"அதான் நீ சொன்ன மாதிரிதான மைனர ஏமாத்தி கட்டிக்கிட்டேன் இல்ல... அப்பறம் என்ன...?" என அவள் கேட்க.

"உன் ஆசை என்ன அந்த வாசுவ கட்டிக்கனும் அதான... உன் ஆசை நிறைவேறுடிச்சு ஆனா... என் ஆசை....?" என அவன் நிறுத்த.

"அருவிய பத்தி யோசிக்காத... அவ புருஷன் உன்ன உறிச்சிடுவாரு...." என்க.

"நான் என்ன நாராடி... என்ன உறிச்சு தொங்கவிட... நான் திகம்பரன்டி... ஒரு ஆணியும் புடுங்க முடியாது... எனக்கு தேவை நாளைக்கு அந்த வீட்டுல விருந்து நடக்க கூடாது... நாளைக்கு அந்த குடும்பத்துல இருந்து ஒரு உயிர் போயே ஆகனும்... அப்படி மட்டும் நடக்கல முதல்ல உன் அம்மா கை தனியா வரும்... அப்பறம் கால்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்னா வரும்...." என்க.

அவளோ உள்ளுக்குள் அதிர்ந்து "அப்படிலாம் சொல்லாத... உன் பேச்ச கேட்டுத்தான் சுசிலாவ மைனரு விரும்பறாருன்னு தெரிஞ்சும் பொய் சொல்லி ஏமாத்தி அவங்கள அவமானப்படுத்தி இந்த கல்யாணத்த பண்ணிக்கிட்டேன்... தயவுசெஞ்சு என் குடும்பத்த விட்டுரு...." என்க.

"மனசுல அந்த பயம் இருக்கட்டும்... நாளைக்கு அந்த வீட்டுல எந்த விஷேஷமும் நடக்கக் கூடாது....  அதேமாதிரி அந்த சக்கரவர்த்தி குடும்பமும் சென்னைக்கு போகக்கூடாது...." என்க.

"அவங்கள எப்படி நான் தடுக்க முடியும்... அருவி பாவம் சின்ன வயசுல இருந்து ரொம்ப கஷ்டபட்டா... அவள விட்டுடு இனியாவது அவ சந்தோஷமா இருக்கட்டும்...." என்க.

"அவ சந்தோஷமா இருக்கட்டும்... ஆனா அது எங்கூடதான்... வேற யாராச்சும் அவமேல உரிம கொண்டாடினா... அவங்கதான் எனக்கு முதல் எதிரி... இப்ப அந்த சுரேந்தர்தான் எனக்கு முதல் எதிரி... ஒழுங்கா நான் சொன்னத முடிச்சிட்டு... நீ உன் புருஷன்கூட சந்தோஷமா இரு..." என்க.

"சந்தோஷமா... இனி அது என் வாழ்க்கைல எங்க இருக்க போகுது...?" என்றாள் அவள்.

"அது உன் பிரச்சனை... எனக்கு நான் சொன்னது நாளைக்கு நடக்கனும்... அந்த சுரேந்தர் செத்தா இன்னும் சந்தோஷம்... அவன மட்டும் இல்ல அந்த வீட்டுல இருக்க ஒவ்வொருத்தரையும் நான் சாகடிப்பேன்..." என்றான் அவன்.

"உனக்கு எமன நீயே தேடிக்கிற...." என அவள் கூற.

"ஏய் வாயமூடுடி... முதல்ல நான் சொன்னத செய்..."என அவன் பேசிக்கொண்டு இருக்கும்போதே மகிழாவின் அறைக்கதவு தட்டப்பட்டது.

இங்கு சுரேந்தரோ அருவியின் மேல் கைவைத்தவனை அடித்து துவைத்து கொண்டு இருக்க வாசுவும் சுந்தரும் அவனை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு இருந்தனர்....



Leave a comment


Comments


Related Post