இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 35 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 15-05-2024

Total Views: 19396

செந்தூரா 35


விபத்து ஏற்பட்டதற்கான காரணம் ஆராத்யாவும் சங்கரபாண்டியனும் என்ற செய்தி கவின் மூலமாக செந்தூரனின் குடும்பத்திற்கு சென்றது.


ரஞ்சிதம் ஆச்சி புலம்பி கொண்டிருந்தார், “பாதகத்தி எங்கிருந்து வந்தாளோ என் பேத்தி வாழ்க்கையை சீரழிக்க? அவ மினுக்கிட்டு திரியும் போதே எனக்கு தெரியும்” என்றார்.


“என்னென்னவோ நடந்து போச்சு, இப்போ தாரா எந்த திசையில் இருக்காள்னு தெரிஞ்சுக்க வேணாமா? நாம வேணும்னா ஏன் நம்ம ஜோசியரை பார்க்க கூடாது?” என்ற ஜானகியை அடிக்கவே வந்துவிட்டார் கதிரேசன். “இன்னும் உன் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கலயா?” என்றார் வெறுப்புடன்.


அப்போது அந்த ஜோசியரின் அண்ணன் அவர்கள் வீடு தேடி வந்திருந்தார். எல்லாரும் குழப்பத்துடன் அவரைப் பார்க்க, “என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன், அதான் பத்திரிக்கை கொடுத்திட்டு போகலாம்னு வந்தேன்” என்றார் புன்னகையுடன்.


சாரதா அவரை அமரச்சொல்லி குடிக்க மோர் கொடுத்தார். “நீங்க ஏதும் தப்பா எடுத்துகலைனா உங்க செந்தூரனோட ஜாதகத்தையும் தாரிகாவோட ஜாதகத்தையும் கொடுக்க முடியுமா?” என்றார்.


“எதுக்கு?” என்றார் முத்துப்பாண்டி பற்களை கடித்துக் கொண்டு. “என் மகனும் உங்க செந்தூரனும் ஓரே நாளில் ஒரே ஆஸ்பத்திரியில் தான் பிறந்தாங்க. தேதி சரியா நினைவில் இல்லை. கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணனும்மாம் பிறந்த நாள் சான்று வாங்கனும் அதான்” என்று இழுத்தார்.


“உங்க மகனோட பிறந்த தேதி பார்க்காமல் ஜாதகம் பார்க்காமல் கல்யாணம் முடிவு செய்துட்டீங்களா?” என்று கேட்டார் ஜானகி.


“தேதி இல்லைனா என்னமா? பெயர் பொருத்தம் பார்த்து முடிச்சிட்டோம். பஞ்சாங்க முறைப்படி ஒண்ணு வரும், எண்கணிதம் முறைப்படி வேறொண்ணு வரும், எதுக்கு குழப்பிட்டு, அதான் பெயர் பொருத்தம் பார்த்து சம்மந்தம் முடிச்சிட்டேன். ஏதோ ஒரு வகையில நமக்கு ஜாதகம் பொருந்தி வந்தா போதாதா? நம்ம திருப்திக்கு தானே எல்லாம். கடவுள் விதிச்சதை நம்மால மாத்தவா முடியும்?” என்று சித்தாந்தம் பேசினார்.


கதிரேசன் செந்தூரனின் ஜாதகம் கொண்டு வந்து கொடுத்ததும் அதை வாங்கி பார்த்தவர் முகம் சுருக்கினார், “என்னம்மா இது உங்க மகன் மதியம் உச்சிவெயில் பன்னிரண்டு மணிக்கு பிறந்ததால தானே சிவப்பு சூரியன்னு அர்த்தம் வர்றமாதிரி செந்தூர மித்ரன்னு பேர் வச்சதாக பேசிகிட்டிங்க. பேரு வித்தியாசமா இருக்கவும் எனக்கு நீங்க சொன்னது நல்லா நினைவில் இருக்கு” என்றார்.


“ஆமா அதுக்கென்ன இப்போ?” என்றார் ரஞ்சிதம் ஆச்சி.


“12 மணி பி.ப என்பதற்கு பதிலா 12 மணி மு.ப என்று எழுதி இருக்காங்களே, அப்போ ஜாதகமே தப்பா எழுதி இருப்பாங்களே” என்றார் அவர் பதறியபடி.


“சரியா போச்சு” என்று தலையில் கைவைத்துக் கொண்டார் முத்துப்பாண்டி. “எதுக்கும் உங்க மருமக தாரிகா ஜாதகத்தையும் கொண்டு வாங்க, ஒரு முறை நேரம் எப்படி இருக்குனு பார்த்திடுறேன்” என்றார்.


அவர்கள் வேண்டாம் என்று சொல்வதற்குள் ஜானகி கொண்டு வந்து கொடுத்திருந்தார். இரண்டையும் பார்த்தவர், “இரண்டு பேரோட ஜாதகமும் நல்ல அம்சமான ஜாதகம், ஒருத்தரை விட்டு ஒருத்தரால பிரிஞ்சு இருக்கவே முடியாது. இந்நேரம் உங்க வீட்டு வம்சோத்தோட கரு உண்டாயிருக்கணுமே? என்ன நான் சொல்றது சரியா?” என்றார் சிரித்துக் கொண்டே.


“தாரிகா காணாமல் போய் ஜந்தாறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒருத்தரை விட்டு ஒருத்தரால பிரிஞ்சு இருக்க முடியாது” என்று சொல்கிறாரே என்று ஆத்திரமாக வந்தது ஜானகிக்கு. கையெடுத்து கும்பிட்டு “அய்யா சாமி உங்க சங்காத்தமே வேணாம். குழப்பி விட்டு எங்க வாழ்க்கையில் கும்மி அடிச்சவரைக்கும் போதும். கிளம்புங்க” என்றார்.


“என்னம்மா வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படி பேசறீங்க” என்று விருட்டென்று எழுந்து கோபமாக போனவரின் பின்னால் சென்றார் கதிரேசன். “தப்பா எடுத்துக்காதீங்க, எங்களோட மனநிலைமை இப்போ சரியில்லை” என்றவர் நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தார்.


பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர், “டாக்டர் கிட்ட போகும் போது நாம செகண்ட் ஒப்பீனியன் எடுத்துக்கிறது இல்லையா? ஒருத்தர்கிட்ட உடம்பு சரியாகும், ஒருத்தர்கிட்ட உடம்பு குணமாகாது, அதுக்காக அவர் நல்ல டாக்டர் இல்லைனு சொல்லிட முடியுமா? அதுபோல தான் ஜாதகமும் ஜோசியமும், நிறைய பேர் ஜாதகம் பார்க்க இருக்காங்க, சின்ன தவறு நடந்தாலும் அவங்க கணிப்பு தப்பா போயிரும். உங்க மகனோட ஜாதகத்தில் பிறந்த நேரம் தவறாக இருக்கு, அதை பார்த்து தான் அவன் கணிச்சிருக்கான், அவனை தப்பா எடுத்துக்காதீங்க” என்றார் அவர்.


“அவர்மேல தப்பில்லைங்க, அவர் சொன்னது அப்படியே நடக்கும்னு நம்புன எங்க மேல தான் தப்பு. என் மகன் சொன்ன மாதிரி கடவுளை மட்டும் நம்பியிருக்கணும்” என்றார் பெருமூச்சுடன்.


தன் மகள் ஜாதகத்தினால் மருமகனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கேட்டதும் சாரதா அகமகிழ்ந்து போனார். அண்ணியின் பேச்சு நெருஞ்சி முள்ளாய் அவரை குத்திக் கொண்டுதான் இருந்தது. ஆசையாய் தான் வளர்த்த தன் அண்ணன் மகனுக்கு தன் மகளே எப்படி எமனாக மாறுவாள் என்று மன உளைச்சலில் இருந்தவருக்கு இப்போது தான் மனது லேசானது.


ஆர்வத்துடன் செந்தூரனுக்கு அழைத்து ஸ்பிக்கரில் போட்டு பேச தொடங்கினார். அவர் சொல்வதை இடையூறு செய்யாமல் கேட்டு முடித்தவன், “சரி போனை வைக்கவா” என்றான். “என்னடா நான் இவ்வளவு சந்தோஷமாக விஷயத்தை சொல்றேன், போனை வைக்கவானு சொல்றே” என்றார் சாரதா மனத்தாங்கலுடன்.


“இதையும் ஒரு ஜோசியக்காரன் வந்து சொன்னால் தானே நம்பறீங்க. நான் சொன்னதுக்கு நம்பனீங்களா? முட்டாள் குடும்பத்துல வந்து பிறக்க நானும் என் தாராவும் என்ன பாவம் செஞ்சமோ? போனை வை முதல்ல, அத்தைனு கூட பார்க்காமல் திட்டிட போறேன்” என்று சுள்ளென்று சீறி விட்டு போனை தூக்கி போட்டான்.


அங்கிருந்த அனைவரையும் பளாரென்று அறைந்தது போல இருந்தது அவன் சொன்ன வார்த்தைகள்.


நாட்கள் கடந்தது, தாரிகாவை தேடி தேடி சோர்ந்திருந்தான் செந்தூரன்,  உயிர்ப்பே இல்லாமல் நடமாடிக் கொண்டிருந்தான். பார்ட்னர்ஷிப்பை ரத்து செய்து விட்டதால் கொஞ்சம் தொழில்கடன் வாங்கியும் உள்ளூரில் சில பங்குதாரர்களை பிடித்து எப்படியோ தொழிலை நிலைநிறுத்திவிட்டு இருந்தான்.


தாரிகா சென்று ஆறு மாதம் முடிவடைந்திருந்தது. அவளை பிரிந்து அரைவருடம் அவனால் எப்படி இருக்க முடிந்தது? என்னை தேடி வருவாளா? விரக்தியுடன் அவனும் தாரிகாவும் ஒன்றாக இருக்கும்படி அவன் அமைத்திருந்த புகைப்படத்தை பார்த்தபடி படுக்கையில் படுத்திருந்தான்.


அலைபேசி அலறிக் கொண்டே இருந்தது. அதை எடுக்க மனம் இல்லாமல் சுவற்றில் இருந்த தன் மனைவியுடன் ஊடல் கொண்டு இருந்தான். “என்னை விட்டு எப்படி ஹனி உன்னால இருக்க முடியுது? என்னால முடியலேயேடி” என்று அவன் பேசிக் கொண்டிருக்க அலைபேசி விடாமல் அடித்தது. “ச்சே கற்பனையில் உன்கூட இருக்கிறதுகூட யாருக்கும் பிடிக்கலை போல இருக்குடி” என்று சலித்தபடி அசுவாசரசியமாய் போனை ஆன் செய்து “ஹலோ” என்றான்.


“மாமா” என்ற தாரிகாவின் ஒற்றைச்சொல்லில் உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கியது. “ஹனி” என்று கூச்சலிட்டான்.


“எங்கேடி இருக்க? ஏன்டி என்னை விட்டு போனே?” என்று மேலும் ஏதேதோ பேசப் போனவன் அவளின் “அம்மா” என்ற அலறல் சத்தம் தடுத்து நிறுத்தியது.


“தாரா என்னாச்சு? ஏன்டி கத்தறே?” என்று பதறினான்.


“மாமா என்னை எதுவும் கேக்காதே, உடனே பாண்டிச்சேரிக்கு கிளம்பி வா” என்றாள் முனகலுடன். “என்னாச்சு ஹனி உடம்புக்கு முடியலையா?” என்ன பிரச்சனை?” என்றான் பதட்டமாக.


“நலமுடன் என்ற மருத்துவமனைக்கு சீக்கிரம் வந்துடு மாமா, நேரில் சொல்றேன்” என்று விட்டு போனை வைத்து விட்டாள்.


என்னவோ ஏதோ என்று பயந்தவன் உடனடியாக தன் வீட்டாருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான். “நான் இப்பவே கவினை அழைச்சிட்டு கிளம்பறேன். நீங்க எல்லாம் வந்துடுங்க. அவள் உடம்புக்கு என்ன பிரச்சனைனு தெரியலை. அவளுக்கு எதாச்சும் ஆச்சு உங்களை எல்லாம் சும்மா விட மாட்டேன்” என்று திட்டிவிட்டு போனை கட் செய்துவிட்டு மீண்டும் கவினுக்கு அழைத்தான்.


அடுத்த பத்து நிமிடத்தில் கோயம்பத்தூர் விமான நிலையத்தை அடைந்து பாண்டிச்சேரிக்கு செல்ல ஆயத்தனமாயினர். செந்தூரன் மனதில் நீர் வற்றி போயிருந்தது. இத்தனை நாளாக போன் செய்யாதவள் இன்று போன் செய்து மருத்துவமனைக்கு வா என்று சொல்கிறாள் என்றால் அவளின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று தானே அர்த்தம். ஒருவேளை கடைசியாக பார்க்கவேண்டும் என்று நினைத்து கூப்பிடுகிறாளா? கனத்த மனதுடன் அமர்ந்திருந்தவனை கவின் சமாதானம் செய்தான்.


“எதுவும் இருக்காதுடா, தங்கச்சி கிடைச்சிட்டாளேனு சந்தோஷப்படாமல் மூஞ்சியை இப்படி வச்சிருக்காதே” என்றான் கவின். எப்படியோ தேடிப்பிடித்து நலமுடன் மருத்துவமனையை அடைந்திருந்தனர்.


பரிதவிப்புடன் உள்ளே நுழைந்தவன் ரிஷப்சனில் தாரிகாவைப் பற்றி விசாரிக்க, “டாக்டர் எதுக்கும் ரிலாக்சா கொஞ்சம் நேரம் அவங்களை நடக்க சொல்லி இருக்காங்க. அரைமணி நேரத்திற்கு பிறகு ஆப்ரேஷன் செய்யலாமா வேண்டாமானு முடிவு செய்யலாம்னு சொல்லியிருக்கார். அங்கே பார்க் மாதிரி இருக்கில்ல, அங்கே தான் தாரிகா வாக் போயிட்டு இருக்காங்க” என்றாள்


“என்னடா கவின் ஆபரேஷன்னு சொல்றாங்க, பயமா இருக்குடா” என்றான் செந்தூரன்.


“உனக்கு அதுமட்டும் தான் கேட்டுச்சா, நடந்துட்டு இருக்காள்னு சொன்னாங்க தானே? எதுவும் பிரச்சனை இருக்காது. வா போய் பார்த்திடலாம்” என்றான் கவின்.


தாரிகா அங்கே விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளை பார்த்தபடி நின்றிருந்தாள். “ஹனி” என்று பின்னாலிருந்து கேட்ட கணவனின் குரலில் ஆனந்தமாக திரும்பி பார்த்தாள். “மாமா” என்று அவனை கட்டிக் கொண்டாள்.


அவளை தன்னோடு இறுக்கி அணைக்க முற்பட்டவனுக்கு தடங்கலாய் இருவருக்கும் இடையில் ஏதோ இடிக்கவும், குனிந்து பார்த்து அதிர்ந்தான். “தாரா… ஏன்டி வயிறு இவ்வளவு பெருசா வீங்கிட்டு இருக்கு? அதுக்கு தான் டாக்டர் ஆப்ரேஷன் பண்ணணும்னு சொன்னாங்களா?” என்று பதறினான்.


அவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்தாள், “இப்போ சொல்லு என் வயிறு வீங்கி போய் இருக்கா?” என்று கணவனை திருப்பி கேட்டாள்.


உள்ளே அவன் வாரிசு தன் இருப்பை கால்களால் உதைத்து காட்டியது.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post