இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 15) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 15-05-2024

Total Views: 17455

உனக்கென்றே உயிர் கொண்டேன் 15

சண்முகம் இரு ஆண்களையும் கூட்டிக்கொண்டு வீட்டை சுற்றிக் காண்பிக்க நகர்ந்திட,

"பையன் தங்கச்சி மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கிறது நம்ம பூர்விக்குதான் ஆபத்து தனம். எதுக்கும் ஒருவாட்டி இந்த சம்மந்தன் வேணுமா யோசிச்சிக்க!" என்று தெய்வானை கூறினார்.

"தங்கச்சியை தகப்பனா தாங்குற பையன் நிச்சயம் கட்டிக்கிற பொண்ணை தன் அம்மாவா நடத்துவான் அண்ணி" என்று பொறுமையாக சொல்ல முயன்ற தனத்தின் குரல் சற்று கடினமாகத்தான் வெளிவந்திருந்தது. சத்தமின்றி.

"என்ன தனம் குரலுலாம் ஒரு மாதிரி வருது?"

"உங்க பொண்ணு விஷயத்தில் நான் தலையிட்டால் சும்மா இருப்பீங்களா அண்ணி? " இம்முறை தனத்தின் குரல் சதரணமாகத்தான் ஒலித்தது. தெய்வானையின் சீற்றம் வழமைப்போல் தனத்தை அடக்கியிருந்தது.

"என்கிட்டவே வாயாடுறியா நீ?" என்று தனத்திடம் கேட்ட தெய்வானை, "பார்த்தீங்களாம்மா? நேத்து இவ பையன் என்ன பேசினதும் இவளுக்கு கொடுக்கு முளைக்குது" என்றார். அகிலாண்டத்திடம்.

ஏனோ அகிலாண்டத்திற்கு தமிழ் தன்னை சாடிய பேச்சிற்கு பின் கண்ணை மூடிக்கொண்டு தெய்வானைக்கு துணை நிற்க முடியவில்லை.

"வந்த இடத்தில் எதுக்கு இந்தப்பேச்சு தெய்வா. என்னயிருந்தாலும் பூர்வியும் என் பேத்தி. அவள் விஷியத்தில் வர்ஷினிக்கு கொடுக்கும் சப்போர்ட்டைதான் கொடுப்பேன்" என்றார்.

முதல்முறை தனக்கான மறுப்பை தெய்வானை அகிலாண்டத்திடம் காண்கிறார். தெய்வானை சொல்ல முடியாத ஏதோவொன்று கழுத்தை கவ்வி பிடிப்பதுப்போல் உணர்ந்தார்.

தனம் அகிலாண்டத்தின் பேச்சினை நம்ப முடியாது பார்த்தார். தனத்திற்கு அக்கணம் புரியாத ஒன்று, அகிலாண்டம் அவருக்காக பேசவில்லை. அவரின் பேத்திக்காக மட்டுமே பேசினார். மகள் என்று வரும்போது அவரிடம் எப்படி மருமகள் இரண்டாம் பட்சம் ஆகிப்போனாளோ, அதே மாதிரி... பேத்தி எனும்போது மகள் இரண்டாம்பட்சம் ஆகினாள். ஏனோ இந்த தெளிவு அகிலாண்டத்திற்கு தெய்வானை பூர்வியை பேசிடும் போது இல்லாமல் போனது. அதற்கு காரணம் அந்தக்கால மனிதரான அவருக்கு பெண்பார்த்துச் சென்று இரு நாட்களே ஆன நிலையில் பூர்வி அஸ்வினுடன் பேசியது தவறாகவேப்பட்டது. தனக்கு சரியென்றிருந்தால் நேற்றும் பூர்வி பக்கம் அவர் நின்றிருக்க வாய்ப்பிருந்திருக்கு.

தெய்வானை அகிலாண்டத்தையே உணர்வற்று பார்த்திருக்க, அவரோ மகளின் பார்வையை கண்டுகொள்ளாது வீட்டை பார்வையால் வட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

"பெரிய ஐயா உங்களுக்கு இடத்தை சுற்றிக்காட்ட சொன்னாங்கம்மா. வறீங்களா?" செவ்வந்தி வந்து கேட்டிட, தனமும், அகிலாண்டமும் உடன் சென்றனர். தெய்வானை ரொம்ப நேரம் நடந்தால் கால் நோகுமென காரணம் காட்டி இருந்துகொண்டார்.

பண்ணையை சுற்றி பார்ப்பதாக வெளியில் சென்ற அஸ்வின் மற்றும் தமிழ் அவ்விடத்தை சுற்றி கிணற்றிலிருந்து ஓடும் வாய்க்கால் அருகே மெல்ல பேசியபடி நடந்து கொண்டிருந்தனர்.

"நீங்க பூர்வியை பற்றி ஒண்ணுமே கேட்கல?"

கிட்டத்தட்ட அரை மணி நேரமாக ஒன்றாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அஸ்வின் பூர்வியைப்பற்றி ஒன்றுமே கேட்காது தன்னைப்பற்றி கூறினான், தமிழைப்பற்றி கேட்டு அறிந்து கொண்டிருக்கிறான். அதனாலே தமிழ் கேட்டிருந்தான்.

அஸ்வின் ஏன் எனும் விதமாக ஏறிட,

"ஜெனரலா இப்போ நீங்க அதைத்தானே செய்யணும்?" என்றான் தமிழ்.

மெல்ல சிரித்த அஸ்வின்,

"உன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டால் பூர்விகிட்ட நானென்ன பேசுறது?" என்றான்.

"ம்ம்ம்... ம்ம்ம்..." மெல்ல தலையசைத்த தமிழிடம் குறுஞ்சிரிப்பு.

"நீ ஏதும் கற்பனை பண்ணிக்காத தமிழ்..."

தமிழின் பார்வையும் சிரிப்பும் வேறு கதை கூற, அஸ்வின் வெட்கப்பட்டவனாக எச்சரித்தான்.

"நான் எதுவும் கற்பனை பண்ணலையே மாமா" என்ற தமிழ் "எல்லாமே பூர்வியிடம் தான் பேசுவீங்களா?" என்று ஒரு மாதிரி இழுக்க...

"அடேய்..." என்று அஸ்வின் விளையாட்டாக அடிக்க வர, தமிழ் அவனின் கையில் சிக்காது அவ்விடத்தை சுற்றி ஓடினான்.

"தமிழ்... நில்லு. ஓடாதே!"

"முடியாது... நியாயமா பூர்வியை இப்படி துரத்தணும் நீங்க" என்ற தமிழ், "மச்சானோட ஓடிப்பிடிச்சு விளையாடுறீங்க" என்றவனாக நின்றிருந்தான்.

"தமிழ் நீயென்ன கிண்டல் பன்ற!"

"புரிஞ்சிடுச்சா?"

அஸ்வின் தமிழை முறைக்க... தமிழும் சளைக்காது பார்த்தான். சில நொடிகளில் இருவரும் ஒரே நேரத்தில் பக்கென்று சிரித்துவிட்டனர்.

அஸ்வின் தமிழின் தோளைச்சுற்றி வளைத்து பிடித்து அழுத்திட...

இருவரிடமும் அப்படியொரு சிரிப்பு.

தங்கைக்கு அனைத்தும் தான் தான் என்ற நிலையில், நண்பர்கள் எண்ணிக்கையை அஸ்வின் வெகுவாகக் குறைத்துக் கொண்டான். படிக்கும் காலங்களிலே, தங்கையை பார்த்துக்கொள்ள வேண்டுமென்கிற பொறுப்பு அவனை இளம் வயதிலேயே முதிர்ச்சியாக நடக்க வைத்தது. தமிழுடன் இப்படி இலகுவாக விளையாடி சிரிப்பதைப்போல் அஸ்வின் யாருடனும் இருந்ததில்லை. விக்கியுடன் கூட அவனது பேச்சுக்கள் சம வயது தோழன் என்பதால் படிப்பு, தொழில், அடுத்து என்ன என்பதைப்பற்றிதான் இருக்கும். இப்போது தமிழ் அஸ்வினுடன் இயல்பாக பழகுவது அவனுக்கு திரும்ப தன்னுடைய சிறு வயது மகிழ்வை அனுபவிப்பதுபோல் இருந்து.

தமிழுக்கும் அக்கா இருந்ததால் சிறு வயதிலேயே பக்குவம் ஏற்பட்டிருந்தது. படிப்பில் கெட்டி என்பதால் பள்ளி கல்லூரியில் மற்ற மாணவர்கள் அவனை தலைமை போல் நடத்தியதில்,  மகேஷ் மற்றும் பூபேஷுடன் மட்டும் அதீத ஒட்டுதல். வீட்டிலும் ஆண் பிள்ளை என்பதால், ஒரு வயதிற்கு அப்புறம் மதிப்பும் மரியாதையும் கொடுத்திட, இதுபோன்று வயதிற்கு ஏற்று விளையாடி மகிழ்ந்தது இல்லை. பெரியவனாகவே உருவகிப்படுத்தியவர்கள் முன்னிலையில் தன்னை சிறுவனாக நினைத்து சிரித்து பேசும் அஸ்வினை தன்னவளின் அண்ணன் என்பதை தாண்டி நல்ல நண்பனாக பிடித்துப்போனது.

ஆதலால் இருவரும் உறவுகளாகப்போகிறோம் என்பதை தாண்டி தங்களுக்குள் பிணைந்தனர்.

"சரி வா போகலாம். வந்து ரொம்ப நேரமாச்சு" என்ற அஸ்வின் அவ்விடத்தில் இருக்கும் ஒவ்வொவ்வொன்றை பற்றியும் சொல்லியபடி அழைத்து வந்தான்.

ஓரிடத்தில் தர்பூசணி கொடிகள் படர்ந்திருக்க...

தமிழ் இது யாருக்காக இருக்குமென்று நினைத்து தன்னைப்போல் புன்னகைத்துக் கொண்டான்.

"என்னன்னு சொன்னால் நானும் சிரிப்பேன்" என்று அஸ்வின் கேட்டிட...

"இந்த கொடியை பார்த்ததும்" என்று நிறுத்திய தமிழ், 'அஸ்வினிடம் இதனை மறைத்திட என்ன இருக்கிறது? எப்படியும் தெரியக்கூடிய விஷயம் தான். வெண்பாவுக்கு ஆச்சரியம் அளிக்க நினைத்து அவளிடம் சொல்லாமல் இருக்கிறோம். இப்போ இவரிடம் சொல்வதில் என்ன? மொழியை காதலிக்கிறேன் என்பதையா சொல்லப்போகிறோம்?' என உள்ளுக்குள்ளே கேட்டுக்கொண்டவனாக...

"மொழியோட நியாபகம் வந்திடுச்சு" என்றான். அஸ்வினை கூர்ந்து நோக்கியவனாக.

"மொழி?" 

தமிழ்... மொழி என்றதும், வெண்பா தமிழைப்பற்றி அடிக்கடி சொல்லியிருப்பதால் அவனுள் ஓர் அனுமானம் உண்டாகிட கேள்வியாக நோக்கினான்.

"நீங்க கெஸ் பண்ணிட்டிங்க" என்ற தமிழ், "மொழி வெண்பா... என்னோட ஜூனியர்" என்றான்.

அஸ்வின் முகத்தில் ஆச்சரியம். கூடுதல் சந்தோஷம்.

"உங்க முகமே சொல்லுது. மொழி என்னைப்பற்றி நிறைய சொல்லியிருக்காள் போல" என்றான் தமிழ்.

அஸ்வின் மேலும் கீழும் தலையசைத்தான்.

"அப்போ பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு நான் யாருன்னு தெரிஞ்சிருக்கு?"

"ம்ம்ம்... போட்டோ பார்த்ததுமே!" கண்சிமிட்டினான் தமிழ்.

"அப்போ என்னை அன்னைக்கு ஃபிரியா பீல் பண்ண வைத்து நார்மலா பழகியது உங்க பிரண்டோட அண்ணாங்கிறதாலதானா?" என்று போலி கோபத்தோடு வினவினான் அஸ்வின்.

"அப்கோர்ஸ்" என்ற தமிழ், "ஆனால் அப்போவே உங்களுக்காகவே உங்களை ரொம்ப பிடித்தது மாமா" என்றதோடு, "உங்களுக்கு கோபமா நடிக்கக்கூடத் தெரியல" என்றான்.

"அடிங்க... என்னை ஏமாத்திட்டு கிண்டலா பன்ற நீ?" அஸ்வின் வயிற்றில் வலிக்காது குத்தினான்.

அட்டகாசமாக சிரித்த தமிழ்,

"நான் ஏமாத்துல மாமா. மொழிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் நினைத்து மறைத்தேன். நீங்களும் சொல்லக்கூடாது" என்றான்.

"உங்க ஃபிரண்ட்ஷிப் நடுவில் நான் வரமாட்டேன்" என்ற அஸ்வினுக்கு தமிழைப்பற்றி, அவனது குணம் பற்றி அனைத்தும் தெரியும். வெண்பாவுக்கு தமிழ் யாரென்றும் தெரியும். வெண்பா தமிழைப்பற்றி எதையும் அஸ்வினிடம் மறைத்தது இல்லை. இங்கிருக்கும் கல்லூரிகள் விட்டு சென்னையில் படிக்க என்ன காரணம் வரை எல்லாம் சொல்லியிருக்கிறாள்.

அஸ்வினுக்கு தங்கையின் காதல் தெரியும். அந்த வயதில் "எனக்கு பிடித்திருக்கிறது. இவங்களுக்காகத்தான் அங்கு படிக்க நினைக்கிறேன்" என்ற வெண்பாவிடம் அஸ்வின் கத்தவில்லை, கடிந்து கொள்ளவில்லை. மாறாக பொறுமையாக எடுத்துக் கூறினான்.

"இந்த வயதில் இதைப்போன்று பல ஈர்ப்புகள் வரும். இது சரியானது இல்லை" என்று பலவற்றை எடுத்துரைத்தான்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட வெண்பா,

"எனக்கு இப்போ அவங்களை பார்த்திட்டே இருக்கணும் போல தோணுதுண்ணா. இது ஈர்ப்பு அப்படின்னா காலப்போக்கில் மறைஞ்சிடும் தானே! நான் அவங்ககிட்ட தள்ளியே இருந்துக்கிறேன். இது காதல் தானான்னு நானும் புரிஞ்சிக்கணுமே! ப்ளீஸ் அங்கேயே படிக்கிறேன்" என்று தெளிவாக பேசிய வெண்பாவிடம் மறுக்க முடியாதுதான் தமிழ் படிக்கும் கல்லூரியில் சேர்த்துவிட்டான்.

சேர்ந்த முதல் நாள் முதல் வெண்பா அஸ்வினிடம் நிறைய பேசுவது தமிழைப்பற்றித்தான்.

முதல் வருடத்தில் திடீரென இங்கு படிக்க வேண்டாமென வெண்பா சொல்லி அழுதிட காரணம் தெரியாதபோதும், எடுத்து சொல்லி அங்கேயே இருக்க வைத்தான்.

சக மாணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை தமிழால் முடிவுக்கு வந்த பின்பு தான் வெண்பா அதனை அஸ்வினிடம் கூறினாள். அஸ்வின் மிகுந்த கோபம் கொள்ள, "அவுங்க சரிபண்ணிட்டாங்க அண்ணா" என்று அவள் நடந்ததை சொன்னாள்.

எங்கும் வெண்பாவின் பெயர் வெளியில் தெரியாது சுமுகமாக முடித்ததோடு, இனி இதுமாதிரி தொல்லைகள் வரக்கூடாதென தன்னுடைய உறவினள் என்று தமிழ் சொன்னது வரை அறிந்த அஸ்வினுக்கு தமிழின் முகம் பார்க்காமலே அவன் மீது நல்ல மதிப்பு வந்திருந்தது.

இப்போது அந்த மதிப்பு நேரில் அவனை பார்த்து பழகியதில் மேலும் உயர்ந்தது.

இத்தனை இளம் வயதில் தொழிலில் தனக்கென்று ஒரு உயரத்தை எட்டியிருக்கும் அஸ்வினை மற்றவர்கள் வியந்து பார்த்திட, அஸ்வின் தமிழை வியந்தான். குணத்திலும், பண்பிலும்.

"மாம்ஸ்... என்ன அங்கேயே நின்னுட்டிங்க? தாத்தா கூப்பிடுறார் வாங்க." சில அடிகள் முன் சென்றிருந்த தமிழை ஓடிச்சென்று அணைத்திருந்தான் அஸ்வின்.

வெண்பாவிற்கு கல்லூரி நாட்களில் அவன் எத்தனை துணையாகவும், பலமாகவும் இருந்தானென்று அறிந்திருந்த அஸ்வினுக்கு, தமிழ் வெண்பாவுக்கு நல்ல துணையாகவும் இருப்பானென்று தோன்றியது. தன் தங்கையின் காதல் நிறைவேற வேண்டுமென்ற ஆசையும் அக்கணம் எழுந்தது.

"அவங்க என்னை ஃபிரண்டா மட்டும் தான் பார்க்கிறாங்க அண்ணா. இப்போ போய் நான் காதலிக்கிறேன் சொன்னால் படிக்கிற வயதில் இதென்ன வேண்டாத வேலைன்னு அட்வைஸ் பண்ணலாம் பண்ணுவாங்க. படிப்பு முடியட்டும்" என்று வெண்பாவே சொல்லியிருக்க, அவளாக சொல்வதற்கு முன்பு நாம் சொல்வதும் சரியிருக்காதென வெண்பா காதலை தமிழிடம் அஸ்வின் சொல்லவில்லை.

"இப்போக்கூட பூர்வின்னு நினைத்து என்னை பிடிக்கிறீங்க!" என்று தமிழ் கேலி செய்திட...

"உன்னைப்பற்றி வெண்பா நிறைய சொல்லியிருக்காள். அவள் சொல்லும்போது நீ இவ்ளோ சேட்டைங்கிற மாதிரியே தெரியல" என்றான் அஸ்வின்.

"ம்க்கும்... காலேஜ்ல படிப்ஸ். பைனல் இயர்ல பிரசிடன்ட். அந்த கெத்த மெயின்டெயின் பண்ணவே விறைப்பா சுத்த வேண்டியதாப்போச்சு" என்று தமிழ் சொல்லிய பாவனையில் அஸ்வினுக்கு பீறிட்டு கிளம்பியது சிரிப்பு.

இன்றைய நாள் இருவருக்குமிடையே புரிதலை ஆழப்படுத்தியது.

அதன் பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு, கல்யாண வேலைகள் பற்றி குறிப்புகள் எடுத்து என கிட்டத்தட்ட அந்த நாளை அஸ்வின் வீட்டிலேயே கழித்து தான் மேட்டுப்பாளையம் திரும்பினர்.

கிளம்பும் முன் அஸ்வினிடம்,

"மொழிகிட்ட சொல்லிடாதீங்க மாம்ஸ். எப்படியும் இந்த வீக்கெண்ட் பூர்வியை பார்க்க வருவாளே! அப்போ தெரிஞ்சிக்கட்டுமே" எனக்கூறி கண்ணடித்தான்.

அஸ்வினும் சரியென்றான்.

"மச்சான்கிட்ட ரொம்பவே ஒட்டியாச்சுப்போல?" சண்முகம் கேலியாக வினவ,

"ஏதோ பந்தம் போல உணர்வு தாத்தா" என்றான் அஸ்வின்.

"ம்ம்ம் பார்க்கும்போதே தெரியுது. இந்த வயதிலே எவ்வளவு பொறுப்பு. உன்னை மாதிரியே!" என்ற சண்முகம், "மணி அவ்வளவு பெருமையா தமிழைப்பற்றி சொன்னார்" என்றார்.

"அம்முக்கு இப்படியொரு பையனா பார்க்கணும். உன் கல்யாணம் முடிந்து, ஒரு வருடம் போகட்டும்" என்றவர் சென்றிட...

'இப்படியொரு பையன் எதுக்கு தாத்தா. இவனையே பேசிடுவோம்' என மனதில் சொல்லிக்கொண்டான் அஸ்வின்.

அஸ்வினுக்கும் ஒரு யூகம்...

தமிழும் வெண்பாவை விரும்புகிறான் என்று.

தர்பூசணி கொடியை பார்த்ததும் தமிழுக்கு வெண்பாவின் நினைவு வருகிறதென்றால்... அவளின் பிடித்தம் எல்லாம் அவன் அறிந்து வைத்திருக்கிறான் என்று தானே அர்த்தம். சாதாரணமாக ஒருவரின் பிடித்தத்தை அறிந்து, மறக்காமல் மனதில் வைத்திருக்க முடிகிறது. சிறு பொருளிலும் அவர்களின் இருப்பை நினைவு கூர்வதெல்லாம் காதலை தவிர்த்து வேறென்னவாக இருந்திட முடியும்.

அத்தோடு வெண்பா அளித்த வாட்சினை நான்கு வருடங்கள் சென்றும், இன்றும் அணிந்திருக்கிறான் என்றால்? அதுவாகத்தானே இருந்திட முடியும்.

அவர்கள் புறப்படும் போது தமிழ் அஸ்வினின் கரம் பற்றி குலுக்கிய சமயம் தான் அஸ்வின் தமிழின் வாட்சினை கவனித்தான்.

வெண்பா கேட்டாளென்று எண்களுக்கு பதிலாக தமிழ் எழுத்துக்கள் வைத்து, ஆர்டர் செய்து வாங்கிக்கொடுத்தது அஸ்வின் தான்.

மற்றவர்களைப்போல் இடது கையில் வாட்சினை கட்டாது. வலது கையில் கட்டியிருந்தான். அதற்கும் ஒரு காரணம் உள்ளது. அதனை தமிழ் மட்டுமே அறிவான்.

வெண்பாவின் காதல் கைகூடினால் அதீத சந்தோஷம் கொள்வது அஸ்வினாகத்தான் இருப்பான்.

பூர்வியிடமிருந்து, "கிளம்பியாச்சா?" எனக்கேட்டு தகவல் வர, அஸ்வின் அவளோடு பேச்சில் மூழ்கிப்போனான். புதிதாக காதலிக்கத் தொடங்கியவர்களுக்கு பேசுவதற்கு நிறைய இருந்தன.

'தன் தங்கை தமிழின் ஃபிரண்ட் என்று பூர்விக்குத் தெரியுமா?' என நினைத்த அஸ்வின் பேச்சினூடு அதனை சொல்லி கேட்கவும் செய்திட...

"தமிழ் சொல்லிட்டானா?" எனக் கேட்ட பூர்வி, "உங்க போட்டோ காட்டியதும் சொன்னான். சொல்லிட்டு என் பிரண்டோட அண்ணா அப்படிங்கிறதுக்காக ஓகே சொல்லாத பூர்வி. உன்னோட விருப்பம் தான்னு சொல்லிட்டான்" என்றவள், பேச்சு மும்முரத்தில், "எனக்குத்தான் உங்ககளை பார்த்ததும் பிடித்துப்போச்சே. எப்படி நோ சொல்வேணாம்?" என்றாள்.

"நிஜமாவா பூர்வி?"

அப்போதுதான் அஸ்வினின் குரல் மாறுபாட்டை அறிந்தவள், பேச்சுக்கு பஞ்சம் வந்தவளாக மௌனியாகினாள்.

"பூர்வி...!" கரகரத்து ஒலித்த அவனின் குரலில் மொத்தமாக கட்டுண்டாள்.

"ஹான்..."

"பதில் சொல்லு பூர்வி?"

"பார்த்த அன்னைக்கே சொல்லிட்டேன்." சிறு தினறலோடு மொழிந்தாள்.

"திரும்ப கேட்கணுமே!"

"உங்க வாய்ஸ் என்னவோ பண்ணுது. போங்க. நான் சொல்லமாட்டேன். வைக்கிறேன்." படபடவென கூறியவள் வைத்துவிட்டாள்.

இந்த காதல் உணர்வுகள் எல்லாம் அஸ்வினுக்கு புதிது. தன்னை நினைத்தே வெட்கத்தில் முகம் சிவந்தவனாக படுக்கையில் விழுந்தான்.

வீடு வரும் வரை தெய்வானை உம்மென்று தான் வந்தார். தான் ஏதும் கேட்டால் தெய்வானை இதுதான் சமயமென்று ஆரம்பித்துவிடுவாரென அகிலாண்டமும் அமையாகவே வந்தார்.

இருவரின் முகமும் தமிழுக்கு 'என்னவோ நடந்திருக்கு' என்று எண்ண வைத்தது.

மேட்டுப்பாளையத்தை நெருங்கியதும்,

"இங்கவே நிறுத்து தமிழ். நான் இறங்கிக்கிறேன். அங்க வந்துட்டு வர லேட் ஆகும். அம்மா மதியம் சாப்பிட்டங்களா தெரியல" என்று மணி இறங்கிக்கொண்டார். அங்கிருந்து அவரின் வீடு பக்கம் தான். இரண்டு நிமிட நடை.

"மண்டபம் கிடைக்குமாங்க... இப்போலாம் ஆறேழு மாசத்துக்கு முன்னவே முன்பதிவு செய்திடுறாங்க" என்று தனம், காருக்குள் நிலவிய அமைதியை கலைத்தார்.

"கோயம்புத்தூரில் அந்த தேதிக்கு மண்டம் கிடைக்குதா பாரு தமிழ்" என்று தேவராஜ் கூறினார்.

"எதுக்கு அங்க? இங்க நம்ம எஸ்டேட்டிலே ஏற்பாடு பண்ணிடலாம்" என்று அகிலாண்டம் மறுத்தார்.

"இன்னும் எதுக்கும் மறுப்பு வரலையே நினைச்சேன்" என்ற தமிழ் ஸ்டியரிங்கில் தாளமிட்டான்.

"நம்ம சொந்தமெல்லாம் அவ்வளவு தூரம் வரணுமேன்னு சொன்னேன்" என்றார் அகிலாண்டம்.

"அவங்களுக்கும் தோதுப்படணும்மா" என்ற தேவராஜ், "வீட்டில் போயி பேசிக்கலாம்" என்று கூறிவிட, அகிலாண்டம் வாய் திறக்கவில்லை.

'இது சவுண்டுலாம் நம்மகிட்ட தான்' என முனங்கிய தெய்வானை வெளிப்பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டார்.

கண்ணாடி வழியாக இருவரையும் தமிழ் கவனித்து பார்த்தான்.

வீட்டிற்கு வந்ததும் என்னவென்று தனத்திடம் விசாரிக்க, அவரும் நடந்ததை கூறினார்.

"அத்தை எனக்கு சப்போர்ட் பண்ணாங்க தமிழு." தனம் சந்தோஷமாக சொல்ல... தமிழ் மனதிற்குள் நொந்துகொண்டான்.

'அவங்க பேத்திக்காக பேசியிருக்காங்கம்மா.' தனத்தின் முகத்தில் தெரிந்த மகிழ்வு அவரிடம் எதுவும் சொல்லவிடவில்லை.

'தன் அன்னையால் உறவுகளையும், இந்த உறவு அரசியலையும் புரிந்துகொள்ள பல காலம் ஆனாலும் முடியாது' என விரக்தியாக நினைத்துக் கொண்டான்.




Leave a comment


Comments


Related Post