இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலாகி! காற்றாகி! அத்தியாயம் - 7 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK029 Published on 15-05-2024

Total Views: 15546

அபிராமியின் அம்மாவும் தாத்தாவும், அவளின் பரீட்சைக்காக வேண்டிக் கொள்ள கோயிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் மகளுக்கு பிடித்த நேந்திரம் நொருவலையும், மசாலா கடலையும் வாங்கிக் கொண்டு, அவளுக்கு மெல்லிய வடிவில் வெள்ளியில் கைகாப்பு ஒன்றையும் கலர் பேப்பரில் சுற்றி பரிசாக கொடுக்கவும் வாங்கி வந்தார்கள். 

"மாமா நம்ம அபு இந்த தடவை கண்டிப்பா பாஸ் பண்ணிடுவா. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. அவ வந்ததும் நாம வாங்கிட்டு போன பொருள் எல்லாம் பார்த்து சந்தோஷத்துல குதிக்கப் போறா பாருங்களேன்." என்றார் கோகிலா.

"ஆமா கோகி. அவளோட சந்தோஷம் தானே நமக்கும் சந்தோஷம்."

கோகிலாவும் அன்புநாதனும் அபிராமி பற்றி பேசிக் கொண்டே நகை கடையிலிருந்து வீட்டிற்கு புறப்பட்டார்கள். அப்போது அதே நகைக் கடையில் அவர்களை மிகவும் எதேச்சையாக கண்ட லீலாவதி, எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று தன் நினைவலைகளை தட்டி, அலசி கண்டுபிடிப்பதற்கு முன், இருவரும் கண்ணிலிருந்து மறைந்து விட்டிருக்க, 

லீலாவதி தவிப்புடன், "கவியரசன் குடும்பம் தானே அது... ஐயோ தவற விட்டுட்டேன்... பிடிங்க... அவங்களை பிடிங்க" என்று லீலாவதி பதற, விற்பனையாளர் மற்றும் அருகில் இருந்தவர்கள், அவரின் உடைமையை யாரோ களவாடி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு, "பாட்டிம்மா என்ன ஆச்சு? ...
எது காணாம போச்சு? ...
அவங்க யாரையோ பார்த்து தான் சொன்னாங்க. அனேகமா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வெளியே போனவங்க தான் மேடம் பொருளை திருடிட்டு போயிருக்கணும்... 
ஓடிப் போய் பிடிங்க...
யாராவது போலீஸை கூப்பிடுங்க" 
சுற்றி பல பேச்சுக்கள் எழுந்தது. 

எங்கே இருக்கிறோம், என்ன வைத்திருக்கிறோம் என்கிற நினைவு மறந்து லீலாவதி வெளியே சென்றுப் பார்வையை சுழல விட்டார். கையில் வேறு அவர் வாங்க நினைத்த ஒரு ஜோடி தங்க வளையல் இருக்கவும், கடையின் விற்பனையாளர், கண்காணிப்பாளர், மேலாளர் என லீலாவதியை சூழ்ந்து கொண்டு, நகையை கொடுத்துவிட்டு உட்காரும் படி கூறினார்கள். "என்ன பாட்டிம்மா நகையை அபேஸ் பண்ண தான் இப்படியொரு நாடகமா?"

"உங்களை தான் போலீசில் பிடிச்சுக் கொடுக்கணும் போல?!"

"ஏய் தம்பி... என்னை யாருன்னு நினைச்சு பேசற? நான் எதுக்கு உன் கடை பொருளை திருடனும்? மரியாதையா பேசு! இந்தா உன் நகை... மொதல்ல என்னை போக விடு" என்றார் லீலாவதி.

"எங்க கடையை நகையை எடுத்து வெச்சுகிட்டு, எங்களையே மிரட்டரீங்களா?. போலீஸை கூப்பிடட்டுமா?" என்று விற்பனையாளர் லீலாவதி முன் விரல் நீட்டி மிரட்ட,

"இந்தாப்பா உன் நகை!. நீயே வெச்சுக்க. இப்ப என்னை போக விடு" என்று கூறிவிட்டு நகர, மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது உள்ளே வந்த அவரது ஓட்டுநர், "விடுங்க. அம்மாவை விடுங்க என்ன பிரச்னை பண்றீங்க?"

"சரவணா நீ போய் விசுக்கு கால் பண்ணு" என்று கட்டளையிட்டார்.

லீலாவதியின் டிரைவர் உள்ளே நடக்கும் கூச்சலைக் கண்டு, அடுத்த நொடி தன் முதலாளிக்கு அழைத்து அவரது காதில் விஷயத்தை போட்டுவிட்டான்.

நகை கடையில் என்ன நடந்தது என்று ஓட்டுனருக்கு விவரம் தெரியவில்லை ஆனால் தன் முதலாளியின் அம்மாவை பிடித்து உட்கார வைத்திருக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டு விஷ்வேஸ்வரனுக்கு அழைத்தான்.

சீக்கிரம் நகை கடைக்கு வருமாறும் கூறினான். தன் அம்மாவுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பயந்து பதட்டத்துடன் அவசரமாக மகிழுந்தை எடுத்துக் கொண்டுப் புறப்பட்டார் விஷ்வேஸ்வரன். அவரின் தவிப்பைக் கண்டு தானும் கூடவே புறப்பட்டார் மாயா.

அடித்துப் பிடித்து லீலாவதி இருக்கும் கடைக்கு முன்னால் காரை கிரீச்சிட்டு நிறுத்திவிட்டு குதித்து ஓடி உள்ளே சென்றார்.

அங்கே "விசு... விசு நான் கவியரசன் குடும்பத்தைப் பார்த்தேன். அவங்க பின்னாடியே போய் பிடிக்கிறது முன்ன, இவங்க என்னை தடுத்து நிறுத்திட்டாங்க. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலங்கிற கணக்கா கண்ணுல பார்த்தவங்களை கையோடு வீட்டுக்கு கூட்டிட்டு வர முடியாம போயிடுச்சு. விசு. ஒருவேளை அவங்க இதே ஏரியால இருக்கவும் வாய்ப்பு இருக்கு. வா நாம போய் தேடலாம்" என்று லீலாவதி பரிதவிப்போடு பேசவும், சுற்றி இருந்தவர்கள் வித்தியாசமாக ஏறிட்டுப் பார்த்தார்கள்.

விஷ்வேஸ்வரனும் மாயாவும் லீலாவதியை சமாதானம் செய்து, அதே நேரம் நகைக் கடையிலும் இதமாக பதமாகப் பேசி முடித்து மூவரும் வெளியே வந்தார்கள்.

வீட்டுக்கு வந்ததும், மாயா, "அத்தை... நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க; அந்த குடும்பத்தை பார்த்தேன், தேடப் போறேன்னு நீங்க உங்களையும், கூடவே சுற்றி இருக்கும் எங்களையும் சேர்த்துக் கஷ்டப்படுத்தரீங்க. அநாவசிய மன அழுத்தமும் உங்களுக்கு நீங்களே வர வெச்சுக்கரீங்க. இதனால உங்க உடம்பை தான் அது பாதிக்கும். இதுல நிரஞ்சன் வாழ்க்கையையும் சேர்த்து முடிச்சுப் போடறது நல்லா இல்ல. அந்த குடும்பத்தை கண்டுப்பிடிச்சா நல்லது தான். எனக்கும் சந்தோஷம் தான். ஆனா இருக்கும் சூழ்நிலையை மறந்துடக் கூடாதுல்ல அத்தை. அந்த குடும்பம் நகைக் கடைக்கு வந்ததாலேயே அவங்க அந்த சுற்று வட்டாரத்தில் தான் இருப்பாங்கன்னு நினைக்கிறதும்; இப்படி சொல்ல என்னை மன்னிச்சிடுங்க. ஆனா அது முட்டாள்தனம்." என்றார்.

சற்று நேரம் மௌனம் சாதித்த லீலாவதி, மாயா மற்றும் விஷ்வேஸ்வரனை மாறி மாறி பார்த்தவர், சட்டென எழுந்து தன் அறைக்குள் விறுவிறுவென பிரவேசித்து, கதவையும் படாரென அறைந்து சாத்தினார். 

ஒரு திரவம் தளும்பினால் எப்படி ஆட்டம் காணுமோ அது போன்ற உணர்ச்சியை வெளிப்படுத்திய மாயா, தன் கணவரை பரிதாபமாக ஏறிட்டு நோக்கினார்.

விஷ்வேஸ்வரன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, கையமர்த்தி 'பொறு பொறு' என்று சைகை செய்தது மட்டுமில்லாமல், போய் அன்னையின் அறை கதவைத் தட்டினார்.

"அம்மா... பிளீஸ் கதவை திறங்க. மாயா சொன்னது..." விஷ்வேஸ்வரன் காரண காரியங்களை விளக்க முற்படுவதற்கு முன், கதவை திறந்த லீலாவதி, "நான் மாயா சொன்னதை தப்பு சொல்ல வரல. ஆனா என்னோட பிறந்தநாள் வரைக்கும் எனக்கு டைம் கொடுங்க. அதுக்குள்ள அந்த குடும்பத்தை கண்டுபிடிக்க முடியலன்னா, நான் அப்படியே விட்டுடறேன். உங்க யாரையும் அதுக்கு அப்புறம் நான் அந்த குடும்பத்தை பத்தி பேசி தொந்தரவு பண்ண மாட்டேன். என் பிறந்த நாளுக்கு இன்னும் மூன்று வாரம் இருக்கு. அதுவரைக்கும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்து அந்த குடும்பத்தை தேட உதவ முடியுமா இல்ல அதுவும் முடியாதா?!" என்று கேட்டு இருவரையும் கூர்ந்து நோக்கினார்.

மாயா சின்னதாக இதழ்களை வளைத்து, "அத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் அத்தை" என்கவும், விஷ்வேஸ்வரனும் ஆமோதிப்பாகத் தலையசைத்தார்.

நிரஞ்சன் அபிராமி கூறிய தேர்வு மையத்திற்கு வெளியே நின்று அவளின் தேர்வுக்கான நுழைவு சீட்டோடு வெகு நேரம் காத்திருந்தான். அவளின் அலைபேசி எண்ணிற்கு பலமுறை முயற்சித்தும் அவள் ஃபோன் எடுக்கவில்லை என்றதும், உள்ளே செல்லலாம் என்று எண்ணினான்.

உள்ளே செல்ல முயன்றவனை, எவ்வளவு காரணம் சொல்லியும், கூடவே ஹால் டிக்கெட்டை காண்பித்தும், அவனை பாதி நேரத்தில் அனுமதிக்க இயலாது என்றும் கூறி வெளியேவே நிறுத்தி வைக்கப்பட்டான் நிரஞ்சன்.

அதற்கு மேல் அவனுக்கு அங்கேயே நிற்க மனமில்லை. ஆகையால் காரை எடுத்துக் கொண்டுப் புறப்பட்டுவிட்டான்.

அபிராமி சோகமான உணர்வுகள் மனதில் மட்டுமல்லாமல் முகத்திலும் தென்படும்படியான கோலத்தில், பூமிக்கு வலிக்குமா, காலுக்கு வலிக்குமா என்று சந்தேகம் கொள்ளும் விதத்தில் அடிப் பிரதட்சணம் விடவும் மெதுவாக கால்களை மெல்ல மெல்ல வைத்து நடந்தாள். வீட்டை சீக்கிரம் நெருங்கி விடக் கூடாது என்று எண்ணிவிட்டாளோ!? ஆனால் சரியாக வீடு வந்து சேர்ந்துவிட்டாள் அபிராமி.

வீட்டு வாசற்படியில் குத்துக் காலிட்டு அமர்ந்து தன் இருகைகளையும் முட்டியோடு அணைத்துக் கொண்டு தன் கன்னத்தையும் பதித்து அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு பரிசு பொருளோடு வேறு சில பொருட்களையும் வாங்கியவர்கள், "எனக்கு இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா. இந்த தடவை நிச்சயம் பாஸ் பண்ணிடுவா. அவ போட்ட உழைப்புக்கு சீக்கிரம் நல்ல பலன் கிடைக்கும்" என்றார் கோகிலா.

"ஆமா கோகி. என் பேத்திக்கு வாங்கின பரிசும் அவளுக்கு கண்டிப்பா பிடிக்கும். இதை கண்ணு முன்னாடி கொடுக்கும் போது அவ மூஞ்சில வர சந்தோஷத்தை நினைச்சாலே மனசுக்கு இதமா இருக்கு."

"ஆனாலும் மாமா. எனக்கு மனசுக்குள்ள ஒரு ஓரமா திக்கு திக்குன்னு தான் இருக்கு" என்றார் கவலையுடன்.

"வீணா கவலைப்படக் கூடாது. பரிட்சை எழுதும் அபுக்குட்டி கூட இவ்வளவு பயப்பட மாட்டா. நீ எக்சாம் எழுதப் போனியா இல்ல அவளா?!" என்று சிரித்தார் அன்புநாதன்.

அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் கிண்டலும் நையாண்டியுமாக மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டே வீட்டை வந்தடைந்தார்கள்.

வீட்டின் வெளி கேட்டை திறந்து உள்ளே வரும் போதே, கைப்பையில் தலையை தாழ்த்தி சாவியை தேடிக் கொண்டிருந்த மருமகளை, தோளில் தட்டி, தாடையால் சைகை செய்தார் அன்புநாதன்.

நிமிர்ந்து பார்த்த கோகிலா, "அடடே அதுக்குள்ள தேர்வு முடிஞ்சு வந்துட்டியா என்ன! பரிட்சை எப்படிடா எழுதின?" அவள் கன்னத்தை வாஞ்சையுடன் வருடி கேட்ட அன்னையை எப்போது வேண்டுமானாலும் மடை திறந்து காட்டாற்று வெள்ளம் போல பாய காத்திருந்த கண்ணீர் நிரம்பிய விழிகளால் நோக்கினாள்.

அவளின் முகபாவனையை நன்றாகவே புரிந்து உணர்ந்த பெரியவர்கள், அமைதியாக கையில் அகப்பட்ட திறவுகோலால் கதவை திறந்து உள்ளே சென்றார்கள்.

திருகி விட்ட பொம்மை போலவே அபிராமியும் உள்ளே சென்றாள். ஆளுக்கு ஒரு மூலையில் நின்ற பெரியவர்கள் மாறி மாறி ஜாடையாக 'நீ பேசு; நீங்க பேசுங்க' என தங்களுக்குள் வீட்டின் மகாராணியின் மனநிலையை மாற்ற யார் முன்னே செல்வது என்று முடிவு செய்ய போராடினார்கள்.

"ஆ... ஆ" என்று ஆக்ரோஷமாக கால்களை பரப்பி தரையில் தப்தப் என தட்டி அபிராமி கத்த, மற்ற இருவரும் காதை அழுந்த மூடி கப்சிப் ஆனார்கள்.

பிறகு, கையில் அகப்பட்ட நாளிதழ்களை ஓவ்வொரு பக்கமாக கிழித்து கசக்கி தூக்கி எறிந்தாள். அது போதாது என்று பக்கத்தில் வைத்திருந்த கரிக்கோல் ஒன்றை எடுத்து மேஜையில் ஓங்கி குத்தினாள். கரிக்கோல் முனை பரிதாபமாக உடைந்தது; மீண்டும் கூர்மை துருவியை தேடி கரிக்கோலை சுழற்றி கூர்மையாக்கினாள்; மீண்டும் உடைத்தாள்; கூர்மையாக்கினாள்; உடைத்தாள்; திரும்பவும் பலமுறை துருவி துருவி, அந்த கரிக்கோல் கரைந்தே போனது. அவளை சுற்றி, துருவிய குப்பைகள், கிழித்த அச்சடிக்கப்பட்ட நாளிதழ்கள் வீசப்பட்டு இருக்க, அபிராமி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கினாள்.
கசக்கி எறிந்த தாள்களை மீண்டும் பொறுக்கி, "வாக்கு கொடுத்தா காப்பாத்த தெரியணும். அது தெரியாட்டி எதுக்கு வரேன்னு ஒத்துக்கனும். எல்லாம் அவனால தான். சரியான நேரத்தில் என் காலை வாரிவிட்டுட்டான்; பழி வாங்கிட்டான்; என் தேர்வு போச்சு, அவன் மட்டும் என் கையில கிடைச்சா, அவனை நார் நாரா கிழிச்சு இந்த குப்பைக்கு நடுவில் உட்கார வைப்பேன்." என்று கத்தியவள், கூடவே தாள்களை நாளாக மடித்து கசக்கி சுருக்கினாள். அவளின் ஒவ்வொரு கோபமான வார்த்தைக்கும் அவள் கையில் வைத்திருந்த துண்டு காகிதங்கள் வாயிருந்தால், காப்பாற்றுமாறு கதறி இருக்கும்.

"அது யாரு மாமா அவன்.? இவ எக்சாம் எழுதவே போகலையா? இல்ல பாதி எழுதிட்டு இருக்கும் போதே பேப்பரை பிடுங்கிட்டாங்களா? அதான் இவ்வளவு கோபமா இருக்காளோ?"

"ஹுகும் அதுக்கு வாய்ப்பு கம்மி தான். வாக்கு கீக்குன்னு சொல்றாளே; அப்படின்னா இது வேறெதோ ஏழரைன்னு நினைக்கிறேன். எதுக்கும் கொஞ்சம் காத்திருப்போம். அவ வாயிலிருந்து இன்னும் ஏதாவது விவரம் வருதான்னு பார்ப்போம்.

மாமனாரும் மருமகளும் கலந்தாய்வு செய்துக் கொண்டிருக்க, "எனக்கு இன்னும் ஆத்திரம் அடங்கலை. அடேய் என்னோட ஒரு வருஷம் வீணா போக நீயும் ஒரு காரணம். உன்னை நான் சும்மா விடமாட்டேன். உனக்கு இருக்கு டா ஆப்பு" என்றவள் முன், கத்தையாக சில நாளிதழ்களை வைத்தார் தாத்தா.

நிமிர்ந்து பார்த்தவளிடம், "ஹ்ம்ம் ஆரம்பி." என்றார்.

"தாத்தா...  உங்களை" என்று அவரின் அபுக்குட்டி கைகளை மேஜையில் தட்ட,

"கோகி துடைப்பமும் கையுமா தயாராக இரு. சொல்லிட்டேன்" என்றார் தாத்தா.

"எல்லாம் உங்களால தான் மாமா. அவளுக்கு செல்லம் கொடுத்து, கெடுத்து வெச்சிருக்கீங்க. இப்ப அவ நம்மள ஆடுறா ராமா ஆடுறா ராமாங்கிற குரங்கு கணக்கா மாத்தி வெச்சிருக்கா" 

"கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கீங்களா?! நானே கடுப்புல இருக்கேன்."

"சரி சரி இந்தா உனக்கு பிடிச்ச பலகாரம்" என்று கோகிலா வைக்கவும், அவரையும் கணல் கக்கும் விழிகளால் விழித்தாள்.

அம்மாவும், தாத்தாவும் நகர்ந்து செல்ல, அவள் தனித்து விடப்பட்டாள். சில நொடிகள் கழித்து "இந்தா இதுவும் உனக்குத்தான்" என்று அவளுக்கு முன்னால் பிரத்யேகமாக வாங்கப்பட்ட வெள்ளி பரிசும் வைத்துவிட்டு உள்ளே ஓடினார் கோகிலா.

சிறிது நேரம் கணக்கு வழக்குகளை பார்த்த நிரஞ்சன் மனம் அதில் ஒப்பாமல், வளாகத்தை சுற்றி சுற்றி வந்தான். பின்பு குழந்தைகள் விளையாட்டு பகுதியில் நேரத்தை செலவிட்டான். ஆனால் எதிலும் மனம் லயிக்காமல் மறுபடியும் அவனது அலுவலகம் வந்தான் நிரஞ்சன்.

அவனுக்கு எதிரே அபிராமியின் தேர்வு நுழைவு சீட்டை பார்வையால் அளந்தான். முன்னும் பின்னும் பார்த்தவன், அவனுள் சிறு குற்றவுணர்ச்சி எழுந்தது. என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி, 'ச்சே... இந்த ஹால் டிக்கெட்டை நாம கையில எடுத்திருக்கக் கூடாது. அவளுக்கு அக்கறை இல்லாமல் கவனமா பையை மூடாம போனால் அது அலட்சியம்னு தானே எடுத்துக்க முடியும். சரி நமக்கு தெரிஞ்ச இம்சையரசி ஆச்சேன்னு உதவி பண்ண போய், தேவையில்லாமல் நாமளே தப்பு செஞ்ச மாதிரி யோசிச்சிட்டு இருக்கேன்.' மனசுக்குள் அவனுக்கு அவனே பேசிக் கொண்டான்.

பிறகு வீட்டிற்கு புறப்பட்டு போனவன், கையோடு அபிராமியின் ஹால் டிக்கட்டையும் எடுத்துக் கொண்டான்.

அவனது வீட்டில், விஷ்வேஸ்வரன் லீலாவதியின் கையில் முதன்முதலாக ஒரு கைபேசியை திணித்தார். 
"அம்மா இந்தாங்க உங்களுக்கு இந்த அலைபேசி. இது எப்பவுமே உங்க கையிலேயே இருக்கட்டும்"

"இதை வெச்சிட்டு நான் என்ன செய்யறது?! எனக்கு இதெல்லாம் வேணாம். நீயே வெச்சுக்கோ"

"அப்புறம் எப்படி கவியரசன் ஃபோன் பண்ணி உங்களோட பேச முடியும்?"

"என்னடா சொல்ற?"

"நாளைக்கு வர எல்லா செய்தித்தாள்களில் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கேன். இந்த ஃபோன்ல இருக்கும் அலைபேசி எண்ணை கொடுத்து, கவியரசன் குடும்ப விவரம் மேலோட்டமாக அச்சடிச்சு எங்க இருந்தாலும் கால் பண்ணுங்க. அப்படின்னு செய்தி கொடுத்திருக்கேன். கூடவே நகரம் முழுக்க துண்டு பிரசுரம் கொடுக்கவும் ஏற்பாடு பண்ணியிருக்கேன். சமூக வலைதளம் எல்லாத்துலயும் கவியரசன் பேர் கொண்ட சமூக கணக்குகளை ஆட்கள் மூலமா ஆராய சொல்லிட்டு வந்திருக்கேன். எப்படியும் கண்டுப்பிடிசிடலாம்." என்றார்.

"அப்பா கவியரசன் பேர்ல எத்தனை கோடி பேர் இருப்பாங்களோ! ஒவ்வொருத்தர் பற்றியும் ஆராய்ஞ்சு கண்டுபிடிக்க மாசகணக்கு ஆகுமே. இதுல இன்னொரு சிக்கலும் இருக்கு. அந்த ஆள் முதல்ல சமூக வலைதளத்தில் அக்கவுண்ட் வெச்சிருக்கணுமே. என்னப்பா நீங்க பாட்டியை ஏமாத்த தானே பார்க்கறீங்க" என்று இளைய மகன் நிஜந்தன் ஆட்காட்டி விரலை நீட்டி சிரிப்புடன் கேட்க, 

"ஹான்... அப்படியா விசு"

"ஐயோ இல்லம்மா... டேய் சும்மா இருக்க முடியாதா டா உன்னால. கவியரசன் சமூக கணக்கு வெச்சுக்காம இருக்கலாம்; அவரோட பொண்ணுக்கு கணக்கு இருக்க நிறைய வாய்ப்பு இருக்கே. இந்த காலத்துல பொண்ணுங்க புருஷன் பேரை தன் பேரோட இணைச்சுக்காம இருப்பாங்க ஆனா அப்பா பேரை இணைக்காம இருக்கவே மாட்டாங்க. சோ இதே ஊருன்னு தெரிஞ்சு போச்சு, கண்டுபிடிக்க பெரிய கஷ்டம் இருக்காது" 


Leave a comment


Comments


Related Post